முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் மதக் கலாச்சாரத்தோடு தொடர்பான விடயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றக் கூடாது. ஏனைய பொது விடயங்களில் அவர்களைப் பின்பற்றலாம்.
முஸ்லிம் அல்லாதவர்களின் நல்வாழ்வுக்காக “துஆ” செய்வது குற்றமாகாது. எனினும் அவர்களுக்கு “மக்பிறத்” எனும் பாவ மன்னிப்பு கொண்டு கேட்பது குற்றமாகும்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தலைப்பைக் கண்டு எவரும் சீறியெழாமல் சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நானும், உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா இருவரினதும் பிள்ளைகள் – ஒரே தாய்க்கும், ஒரே தந்தைக்கும் பிறந்தவர்கள் என்ற வகையில் உலகில் வாழும் அனைத்து இன, மத, மொழி மக்களும் ஒருவன் மற்றவனுக்கு எந்த வகையிலும் உறவினரேயாவான்.
இலங்கை நாட்டில் வாழும் நாம் பௌத மக்களை ஐயா, மல்லி என்றும், இந்து மக்களை அண்ணன், தம்பி என்றும், இன்னும் முஸ்லிம் அல்லாத பலரை பொதுவாக பிறதர் என்றும், அங்கிள் என்றும் அழைத்து வருகிறோம்.
“ஐயா” என்ற இச் சொல்லின் சுருக்கமான விளக்கம். ஆண்களில் வயதில் மூத்தவரையோ, உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும் போது பயன்படுத்தப்படும் ஒரு மரியாதைக்குரிய தமிழ்ச் சொல்.
சிங்கள் மொழி பேசுபவர்கள் இச் சொல்லை மூத்த சகோதரர்களுக்கு பயன்படுத்துவார்கள். முஸ்லிம்களும் சிங்கள மொழி பேசுபவர்களுடன் “ஐயா” என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இந்து மத சகோதரர்களை முஸ்லிம்களான நாம் ஐயா, தம்பி என்று பேசுகிறோம். அழைக்கிறோம். இதன் பொருள் அண்ணன், தம்பி என்பதேயாகும். இந்தியா தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம்களையே அண்ணன், தம்பி என்று பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அல்லாத கிறித்துவ சகோதரர்கள், மற்றும் வெள்ளைக் காரர்கள், மதம் இனம் தெரியாதவர்களை முஸ்லிம்களான நாம் பிறதர் என்றும், அங்கிள் என்றும் அழைக்கிறோம்.
முஸ்லிம்களான நாம் முஸ்லிம் அல்லாதவர்களில் எவரையும் தரக்குறைவான சொற்கள் மூலம் அழைப்பதில்லை. அழைத்ததுமில்லை.
எனினும் முஸ்லிம் அல்லாதவர்களிற் சிலர் முஸ்லிம்களை “மரக்களையா” என்றும், “சோனிக் காக்கா” என்றும் சொன்னதற்கு வரலாறுகள் உண்டு. ஆயினும் இவ்வாறு சொல்வது பல வருடங்களுக்கு முன் பரவலாக இருந்தாலும் தற்போது நாகரிகமும், படிப்பறிவும், உலகறிவும் எல்லா இன, மத மக்களிடையேயும் பரந்து காணப்படுவதால் அவ்வழக்கம் குறைந்தவிட்டது. அல்லது முற்றாக நின்று விட்டதென்றே சொல்லலாம்.
சுமார் 60 – 70 வருங்டகளுக்கு முன்னர் இலங்கையில் வாழும் இந்துக்களில் அநேகர் “வேட்டி” உடுப்பவர்களாக இருந்தார்கள். இது அவர்களின் வழக்கமேயன்றி மதக் கலாச்சாரமல்ல. “வேட்டி”என்றால் ஒரு காலத்தில் அது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதென்ற உணர்வு அதிகமான முஸ்லிம்களிடம் இருந்து வந்தது.
இதனால் முஸ்லிம்களில் யாராவது “வேட்டி” உடுத்தார்களாயின் அவர்களை மற்ற முஸ்லிம்கள் சற்று ஒதுக்கியும், தூரப்படுத்தியும் வைத்து வந்தார்கள். அவர்களுக்குப் பெண் கொடுப்பதற்கும், அவர்களிலிருந்து மாப்பிள்ளை எடுப்பதற்கும் யோசிப்பார்கள்.
நான் அறிந்தவரை காத்தான்குடியில் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் வேட்டி உடுப்பவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த ஆதம் அலீ என்பவர். மற்றவர் ஒல்லிக் குளத்தைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் என்பவர்.
இவ்விருவரும் வேட்டி உடுப்பவர்கள் என்ற காரணத்தால் சாறன் உடுக்கும் முஸ்லிம்கள் இவர்களை இரு கண்களாலும் பார்க்காமல் இடக் கண்களால் மட்டும் பார்ப்பவர்கள் போல் நடந்து கொள்வார்கள். இப்படியொரு கால கட்டம் காத்தான்குடியில் இருந்ததை நான் அறிவேன்.
“வேட்டி” என்றால் என்ன?
“வேட்டி” என்பது இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணான ஒன்றல்ல. சுருங்கச் சொல்வதாயின் கிப்ஸ், முட்டை மார்க் போன்ற சாறனை மூட்டாமல் உடுத்தால் அது வேட்டி எனப்படும். இதில் மார்க்கத்திற்கு முரணானது ஒன்றுமே இல்லை. ஆயினும் அக்காலத்தில் வேட்டிக்கு என்றே ஒரு வகைத் துணி வந்து கொண்டிருந்தது.
இன்று மலையாளம் – கேரளா மாநிலத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களில் அநேகர் வேட்டிதான் உடுப்பார்கள். சாதாரண மக்கள் மட்டுமன்றி ஹஸ்றத்மார், மௌலவீமார், தங்கள்மார்களும் வேட்டி உடுப்பார்கள். இவர்கள் தரக் குறைவானவர்களாக எவராலும் கருதப்படுவதில்லை.
எனவே, முஸ்லிம்கள் சாறனும் உடுக்கலாம். வேட்டியும் உடுக்கலாம். ஆங்கிலேயர் போல் றவ்ஸரும் உடுக்கலாம். அறபு மக்கள் போல் கரண்டை வரை நீளமான ஜுப்பாவும் உடுக்கலாம். முழங்காலுக்கு கீழ் கரண்டைக்கு மேல் இடைப்பட்ட பகுதி வரை மறைக்கும் அளவிலான எந்த பெயரிலான உடையும் உடுக்கலாம். “த்ரீ குவாட்டர்” முக்கால் சட்டையும் உடுக்கலாம்.
முஸ்லிம்கள் தொப்புள், முழங்கால் இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியை மறைப்பது அவசியம். இதைக் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும். ஆடை எவ்வாறிருந்தாலும் ஆகும்.
சட்டம் இவ்வாறிருந்தாலும் பள்ளிவாயல்களுக்கு வரும்போதும், மார்க்கம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போதும் ஒருவன் தனதூர் மக்கள் போன்று ஊரின் வழமையை பேணிக் கொள்ள வேண்டும். “த்ரீ குவாட்டர்” முக்கால் சட்டையாயினும், “ஜம்பர்” என்ற பெயரிலுள்ளதாயினும் தொப்புளுக்கும், முழங்காலுக்குமிடைப்பட்ட பகுதி மட்டும் மறைக்கப்பட வேண்டும் என்பதே கடமை.
சாறன் உடுத்தவர்களிற் பலர் “மோட்டார் சைக்கிள்” இல் போகும் போது முழங்கால் தெரியுமளவு அதை உயர்த்தி வைத்துக் கொண்டு செல்வது சட்டப்படி “ஹறாம்” ஆகும். முஸ்லிம்களில் கூலித் தொழில் செய்பவர்கள் தமது வசதியைக் கருத்திற் கொண்டு முழங்காலுக்கு மேற்பட்ட பகுதி தெரியுமளவு சாறனை மடித்துக் கட்டிக் கொண்டு வேலை செய்வதும் “ஹறாம்” ஆகும். சாறனை மடித்துக் கொண்டு உயரத்தில் நின்று வேலை செய்பவனின் முழங்காலுக்கு மேற்பட்ட பகுதியை கீழே உள்ளவன் பார்ப்பதும் “ஹறாம்”தான்.
மார்க்கக் கல்வியோ, உலகக் கல்வியோ கற்றுத் தந்த ஆசானிடம் செல்லும் ஒருவன் சட்டம் எவ்வாறிருந்தாலும் முழங்காலுக்கும், தொப்புளுக்குமிடைப்பட்ட பகுதியை மறைப்பதுடன் கௌரவமான உடையோடு செல்ல வேண்டும்.
முஸ்லிம் பெண்கள் எந்த “டிசைன்” அமைப்பில் உடை உடுத்தாலும் கூட உடல் முழுவதும் மறையும் வகையில் உடுப்பதும், உடலின் பருமனை ஆண்கள் பார்த்து “சைஸ்” அளவு கண்டு பிடிக்கும் வகையில் உடுப்பதும், “பிறஷ்யர்” மார்பு அங்கியின் அளவை ஆண்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடுப்பதும் கூடாது.
ஓர் கணவன் தனது மனைவியின் உடலின் எந்தப் பகுதியாயினும் அதை திரையின்றி கண்ணால் பார்ப்பது மட்டுமன்றி, கையால் தொட்டுப் பார்ப்பதும் ஆகும். இதேபோல் ஒரு மனைவி தனது கணவனின் உடலில் எந்தப் பகுதியைப் பார்க்க விரும்பினாலும் பார்ப்பதும் ஆகும். தொட்டுப் பார்ப்பதும் ஆகும். கணவன் தனது மனைவியின் இதழை அல்லது நாக்கை தனது வாயால் முத்தமிடுவதும், சுவைப்பதும் ஆகும்.
عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ، وَيَمُصُّ لِسَانَهَا»
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நோன்பாளியாக இருந்த நிலையில் அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களை முத்தமிட்டுள்ளார்கள் என்றும், அவர்களின் நாக்கை சுவைத்தார்கள் என்றும் ஹதீது வந்துள்ளது.
ஆதாரம்: அபூ தாவூத், அறிவிப்பு: ஆயிஷா நாயகி.
இந்த நபீ மொழி ஸஹீஹான ஆறு கிரந்தங்களில் ஒன்றான அபூ தாஊத் எனும் நூலில் வந்துள்ளதால் இது பலமான ஹதீது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உலகில் தோன்றிய ஹதீதுக் கலை மேதைகளாலும், ஏனைய சட்டக்கலை மேதைகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட “ஹதீது”க் கிரந்தங்கள் ஆறு உள்ளன. அவற்றில் ஒன்றுதான் “அபூ தாஊத்” என்ற கிரந்தமாகும்.
வஹ்ஹாபீகள் தமது கொள்கைக்கு முரணானவற்றை ஏற்றுக் கொள்பவர்கள் அல்ல. அவை எந்தக் கிதாபுகளில் வந்திருந்தாலும் சரியே. أَصَحُّ الْكُتُبِ بَعْدَ كِتَابِ اللهِ صَحِيْحُ الْبُخَارِيْ “அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனுக்குப் பிறகு நூல்களில் – கிதாபுகளில் சரியான நூல் “ஸஹீஹுல் புகாரீ” மட்டுமே என்று அகில உலக அறிஞர்கள் வழங்கிய “பத்வா”வை பொய்யாக்கிவிட்டு அவர்கள் தமக்கு ஆதரவான, வஹ்ஹாபிஸக் கொள்கையைச் சரி கண்ட அப்துல்லாஹ் இப்னு பாஸ், அல்பானீ போன்றவர்களின் பேச்சை நம்புகின்றவர்களாவர். ஆகையால் மேலே நான் எழுதியுள்ள நபீ மொழியையும் “ழயீப்” பலம் குறைந்ததென்று சொல்லக் கூடும். அவர்கள் அவ்வாறு சொல்வதால் ஸுன்னீகளான நாம் தயங்கத் தேவையில்லை.
அவர்கள் சொல்வது போல் இந்த நபீ மொழி பலம் குறைந்ததென்று வைத்துக் கொண்டாலும் கூட சட்டக்கலை மேதை இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பொதுவாக ஒரு கருத்துக் கூறியுள்ளார்கள். அதாவது பலம் குறைந்த நபீ மொழியை ஆதாரமாக எடுத்து அமல் செய்யலாமென்று கூறியுள்ளார்கள். இதன்படி மேற்கண்ட இந்த விடயத்திலும் பலம் குறைந்த நபீ மொழியின் படி செயல்பட முடியும் என்பது தெளிவாகிறது. மனைவியுடன் நடந்து கொள்ளும் விடயத்தில் நீங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்றும், ஆனால் பின் துவாரத்தைப் பயந்து கொள்ளுங்கள் என்றும் ஹதீது வந்துள்ளது.
எனவே, ஆயிஷா நாயகி அறிவித்துள்ள நபீ மொழியின் படி ஒரு கணவன் தனது மனைவியின் நாக்கையோ, ஒரு மனைவி கணவனின் நாக்கையோ சுவைக்கலாம் என்பது தெளிவாகிறது.
مَصَّ
என்ற அறபுச் சொல்லுக்கு சுவைத்தான், சூப்பினான் என்று பொருள் வரும். مَصُّ الْأَصَابِعِ بَعْدَ الطَّعَامِ சாப்பிட்ட பின் விரல்களை சுவைத்தல் அல்லது சூப்புதல் என்று பொருள்.
ஷரீஆ – மார்க்கத்தில் பொது மக்களுக்கு விலக்கப்பட்ட விடயம் பெருமானார் அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக அவர்கள் நான்கிற்கு மேற்பட்ட திருமணம் செய்யலாம் என்பது போன்றும், “விஸால்” நோன்பு பிடிக்கலாம் என்பது போன்றுமாகும். “விஸால்” நோன்பு என்றால் நோற்ற நோன்பை திறக்காமல் தொடர்ந்து நோன்பு நோற்பது போன்று. இது பெருமானார் அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சலுகையும், விஷேடமுமாகும்.
இது – நாக்கைச் சுவைப்பது அப்படி அவர்களுக்கு மட்டும் விஷேடமாக வழங்கப்பட்டதல்ல. அப்படி வழங்கப்பட்டிருந்தால் அதற்கு ஆதாரங்கள் நிறைய வந்திருக்கும். அவ்வாறு ஆதாரங்கள் ஒன்றும் வரவில்லை.
குறிப்பு: கணவன் மனைவியோடும், மனைவி கணவனோடும் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்பதை நான் விளக்கமாக எழுத விரும்பவில்லை. எனினும் اِصْنَعُوْا مَا شِئْتُمْ إِلَّا الدُّبُرَ நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். பின் துவாரத்தைத் தவிர என்ற நபீ மொழி ஒன்றை மட்டுமே தடை செய்கிறது.
தொடரும்…