Saturday, May 11, 2024
Homeஎழுத்தாக்கங்கள்40 ஆண்களின் வீரியம் வழங்கப்பட்ட எம் பெருமானார்! சிற்றின்ப மோகத்தில் பெண்கள் முதலிடத்தில்!

40 ஆண்களின் வீரியம் வழங்கப்பட்ட எம் பெருமானார்! சிற்றின்ப மோகத்தில் பெண்கள் முதலிடத்தில்!

தொடர் 01
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
567 – وَعَنِ الْمُغِيرَةِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُعْطِيتُ قُوَّةَ أَرْبَعِينَ فِي الْبَطْشِ وَالنِّكَاحِ، وَمَا مِنْ مُؤْمِنٍ إِلَّا أُعْطِيَ قُوَّةَ عَشَرَةٍ، وَجُعِلَتِ الشَّهْوَةُ عَلَى عَشَرَةِ أَجْزَاءٍ، وَجُعِلَتْ تِسْعَةُ أَجْزَاءٍ مِنْهَا فِي النِّسَاءِ، وَوَاحِدَةٌ فِي الرِّجَالِ، وَلَوْلَا مَا أُلْقِيَ عَلَيْهِنَّ مِنَ الْحَيَاءِ مَعَ شَهَوَاتِهِنَّ، لَكَانَ لِكُلِّ رَجُلٍ تِسْعُ نِسْوَةٍ مُغْتَلَمَاتٍ»

நான் திருமணத்திலும், ஆட்சியதிகாரத்திலும் நாற்பது பேர்களின் வல்லமை – சக்தி வழங்கப்பட்டுள்ளேன். எந்த ஒரு விசுவாசியாயினும் அவன் பத்துப் பேர்களின் வல்லமை – சக்தி வழங்கப்பட்டவனாகவே இருப்பான். காம இச்சை என்பது பத்துப் பங்குகளாக ஆக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்பது பாகங்கள் பெண்களிலும், ஒரு பாகம் ஆண்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு வெட்கம் – நாணம் மட்டும் கொடுக்கப்படவில்லையானால் ஒவ்வொரு ஆண்களையும் காம உணர்வுள்ள ஒன்பது பெண்கள் வட்டமிடுவார்கள்.
நபீ மொழி – 567, ஆதாரம்: அல்முஃஜமுல் அவ்ஸத்
அறிவிப்பு: முஙீறா, ஆசிரியர்: தபறானீ
 
இந்நூலை எழுதிய ஆசிரியர் ஸுலைமான் அபுல் காஸிம் அத்தபறானீ. மரணம் – ஹிஜ்ரீ 360, ஷாம் – சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். வெளியீடு – தாறுல் ஹறமைன், கெய்ரோ. இந்நூலை சரி பார்த்தவர் – தாரிக் இப்னு இவழ், இந்நூல் 10 பாகங்கள் கொண்டது. இவர் சுமார் 1084 வருடங்களுக்கு முந்தியவர்.
 
மேற்கண்ட நபீ மொழி மூலம் பல விடயங்கள் தெளிவாகின்றன.
 
01. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஆளுமையிலும், நிர்வாக அதிகாரத் திறமையிலும், நிகாஹ் – திருமணத்திலும் (உடலுறவு கொள்வதிலும்), 40 பேர்களின் சக்தி – வல்லமை வழங்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர்கள்தான் சொன்னார்களேயன்றி அவர்கள் பற்றி இவ்வாறு வேறொருவர் சொன்னதல்ல. இதற்கு ஆதாரம் أُعْطِيْتُ நான் வழங்கப்பட்டுள்ளேன் என்ற வசனமேயாகும்.
 
02. எந்த ஒரு “முஃமின்” விசுவாசியாயினும் அவர் 10 பேர்களின் சக்தி – வல்லமை வழங்கப்பட்டுள்ளார்.
 
03. காம ஆசை 10 பாகங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பாகங்கள் பெண்களுக்கும், ஒரு பாகம் மட்டும் ஆண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 
04. பெண்களுக்கு இவ்வாறு காம இச்சை வழங்கப்பட்டிருந்தாலும் வெட்கம் – நாணம் அவர்களுக்கு வழங்கப்படவில்லையானால் காம உணர்வுக்கு அடிமையான ஒன்பது பெண்கள் ஓர் ஆணை வட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.
 
விளக்கம்:
பெருமானார் அவர்களுக்கு 40 பேர்களின் வீரியம் – உடலுறவு கொள்ளும் சக்தி வழங்கப்பட்டிருந்ததினால்தான் நான்கிற்கு மேற்பட்ட திருமணம் செய்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
நபீயல்லாத சாதாரண ஒரு மனிதன் – ஓர் ஆண் நான்கு திருமணங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதன் படி 40 பேர்களின் சக்தி வழங்கப்பட்ட எம் பெருமானார் அவர்களுக்கு சுமார் 16 க்கும் குறையாத திருமணங்கள் செய்வதற்கு அனுமதி வழங்குவதே முறையாகும். அல்லாஹ் அவர்களுக்கு நான்கிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு அனுமதி வழங்கினான் என்பது உண்மை. ஆயினும் எத்தனை திருமணங்கள் வரை செய்யலாமென்று ஒரு கட்டுப்பாடு இருந்ததற்கு நான் எந்த ஓர் ஆதாரமும் காணவில்லை. எனினும் அவர்கள் “வபாத்” உலகை விட்டும் பிரிந்த நேரம் 09 மனைவியர் உயிருடன் இருந்ததற்கு ஆதாரம் உண்டு. عَنْ تِسْعِ نِسْوَةٍ وَفَاةُ الْمُصْطَفَى இதுவே ஆதாரம்.
 
இது தொடர்பான விபரம் தெரிந்தவர்கள் எனக்கு அறிவித்தால் நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். எமது தாகம் அறிவொன்று மட்டுமே! வஹ்ஹாபீ மூலம் அது கிடைத்தாலும் சரியே!
 
40 நபர்களின் வீரியம் – சக்தி வழங்கப்பட்ட நபீகள் கோமான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெண்ணின் விடயத்தில் சிறிதளவும் வழி தவறியதற்கு வரலாறே இல்லை.
அவர்கள் 40 நபர்களின் வீரியம் – சக்தி வழங்கப்பட்டிருந்தும் கூட 25 வயது இளைஞனாயிருந்த வேளை 40 வயது கதீஜாவை – விதவையை திருமணம் செய்ததும், அவர் மூலமே அதிக குழந்தைகளுக்கு (அப்துல்லாஹ், காஸிம், பாதிமா, ஸைனப், றுகையா, உம்மு குல்தூம் – ஆறு குழந்தைகள்) தந்தையானதும் அவர்கள் சிற்றின்பத்திற்கு அடிமையானவர்கள் அல்ல என்பதற்கு எவராலும் மறுக்க முடியாத ஓர் ஆதாரமாகும். “இப்றாஹீம்” என்ற மகன் மட்டுமே “மாரியதுல் கிப்திய்யா” என்ற மனைவிக்கு பிறந்தவராவார். ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு வயதிலேயே மரணித்து விட்டனர். “ஆயிஷா” என்ற மனைவி பேரரசியாயிருந்தும் அவர்கள் ஒரு குழந்தையும் பெறவில்லை.
அவர்களின் அருமை மகன் இப்றாஹீம் தவிர ஏனைய ஆறு குழந்தைகளும் கதீஜா மூலம் கிடைத்தவர்களேயாவர். இதன் மூலம் அதிக குழந்தைகள் விதவையின் மூலமே கிடைத்துள்ளன. இது அவர்கள் காம உணர்வுக்கு அடிமையானவர்கள் அல்ல என்பதற்கும், காம உணர்வுதான் அவர்களுக்கு அடிமையானதென்பதற்கும் “அக்லீ” யுக்தி சம்பந்தப்பட்ட ஓர் ஆதாரமாகும்.
 
எந்த ஒரு குழந்தையாயினும் அது பிறக்கும் போது அதோடு “ஷெய்தான்” ஷாத்தானும் தொடர்பாகிறான். அக்குழந்தையை ஆட்கொள்கிறான். இதனால்தான் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. இதற்கு மருத்துவ விஞ்ஞானம் வேறு காரணம் கூறினாலும் கூட இஸ்லாம் கூறும் காரணம் மேற்கண்ட காரணமேயாகும். விஞ்ஞானம் இன்னும் விரிவடைந்தால் விஞ்ஞான மருத்துவம் இதைச் சரி காணும். இதற்குரிய காலம் வெகு தொலைவில் இல்லை.
 
இவ் அடிப்படையில் எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பிறந்த வேளையில் அவர்களையும் ஷெய்தான் தொட்டுப் பார்த்தானாயினும் அவனால் அவர்களை ஆட்கொள்ள முடியாமற் போயிற்று. அவர்களின் தெய்வீக சக்திக்கு முன்னால் அவனால் நிற்கவே முடியாமற் போயிற்று. இதனால் அவன் அவர்களுடன் உங்களை என்னால் ஆட்கொள்ள முடியாதென்று சத்தியம் செய்து விட்டான்.
 
என்னுடைய 80 வருட அனுபவத்தில் நான் ஆய்வு செய்தறிந்த உண்மை என்னவெனில் ஆன்மிகப் படித்தரங்களில் உச்சியைத் தொட்ட பல மகான்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் விடயத்தில் மிக வேகமாக இருந்துள்ளார்கள் என்பதேயாகும்.
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் நான்கு மனைவியர் மூலம் 49 குழந்தைகளைப் பெற்றார்கள் என்பது இங்கு சிந்தனையிற் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பேணுதலின் உச்சியில் நின்று மரணித்த என் தந்தை ஒரே மனைவி மூலம் 11 குழந்தைகள் பெற்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடற்குரியதாகும்.
 
எனவே, நபீமாரோ, வலீமாரோ, ஆன்மிக உச்சியை அடைந்த மகான்களோ அதிக திருமணம் செய்ததும், அதிக குழந்தைகள் பெற்றதும் ஆன்மிகத்துடன் தொடர்புள்ள விடயமென்றும், காம இச்சை, சிற்றின்ப மோகத்தினால் அல்லவென்றும் அறிந்த கொள்ள வேண்டும். மேற்கண்ட மகான்கள் அதிக திருமணங்கள் செய்ததும், அதிக குழந்தைகள் பெற்றதும் அவர்களின் ஆன்மிக பேரின்பத்திற்காகவென்றும், சாதாரண மனிதர்கள் போல் காம மலத்தைக் கழிக்கும் மல கூடமாகப் பெண்களைக் கருதி திருமணம் முடிக்கவுமில்லை என்றும் திட்டமாக விளங்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் முதல் அம்சம் முடிந்தது.
 
இரண்டாவது அம்சம் எந்த ஒரு விசுவாசியாயினும் அவர் பத்து நபர்களின் உடலுறவு வீரியம் கொடுக்கப்படுகிறார் என்பதாகும். மேற்கண்ட நபீ மொழியில் وَمَا مِنْ مُؤْمِنٍ إِلَّا أُعْطِيَ قُوَّةَ عَشَرَةٍ என்று வசனம் வந்துள்ளது. இவ்வசனத்தில் எந்த ஒரு “முஃமின்” என்று வசனம் வந்துள்ளதால் எவர் ஸூபிஸ அடிப்படையில் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவருக்கு மாத்திரமே சாதாரண 10 பேர்களின் வீரியம் வழங்கப்படுமேயன்றி முஃமின், முஸ்லிம் என்ற பெயரிலுள்ள அனைவருக்கும் வழங்கப்படுமென்பது கருத்தல்ல. ஏனெனில் பெயரளவில் “முஃமின்” விசுவாசியாக இருப்பவர்களில் எத்தனையோ பேர்கள் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கு வீரியமின்றி ஒவ்வொரு மாதமும் மருத்துவமனை செல்வதை நாம் பார்க்கிறோம்.
 
ஒருவன் உண்மையிலேயே ஸூபீகளின் கொள்கைப்படி விசுவாசியாயிருப்பானாயின் அவன் பத்துப் பேர்களின் வீரியம் உள்ளவனாகவே இருப்பான். உடலுறவின் மூலம் கிடைக்கின்ற சிற்றின்பத்திற்கும், இறை நெருக்கத்தால் கிடைக்கின்ற பேரின்பத்திற்கும் தொடர்பு உண்டு. ஒருவன் முயற்சித்தால் சிற்றின்பத்தை பேரின்பமாக்க வழியும் உண்டு.
 
خَاتِمَةُ الْوِلَايَةْ
“கடைசி விலாயத்” என்று ஆன்மிக ஞானிகளால் போற்றிப் புகழப்பட்ட ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மனைவியுடனான உடலுறவின் மூலம் أَكْمَلُ الشُّهُوْدْ இறைகாட்சியின் உச்சியில் உருண்டு புரளலாம் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புஸூஸுல் ஹிகம், பக்கம்: 217)
 
மூன்றாவது அம்சம் காம ஆசை என்பது பத்துப் பங்குகளாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பங்குகள் பெண்களுக்கும், ஒரேயொரு பங்கு ஆண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு சொன்னவர்கள் டொக்டர்களுமல்ல, சாத்திர காரர்களுமல்ல. எம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான்.
நான் சுமார் 25 வயது வாலிபனாக இருந்த காலத்தில் – 55 வருடங்களுக்கு முன்னர் மேற்கண்ட நபீ மொழியில் கூறப்பட்ட காம ஆசை பெண்களுக்கு ஒன்பது வீதமும், ஆண்களுக்கு ஒரு வீதமும் வழங்கப்பட்டுள்ளதென்று முதியவர்கள் பேசிக் கொண்டதை நான் செவியேற்றிருக்கிறேன். இப்போது அந்தச் செய்தியை ஹதீதுகளில் காணும் போது எனக்கு வியப்பாக உள்ளது.
 
பெண்களுக்கு ஒன்பது வீதமும், ஆண்களுக்கு ஒரு வீதமும் காம உணர்வு வழங்கப்பட்டதற்கான காரணம் பற்றி அல்லாஹ் மிக அறிந்தவன். ஆயினும் மருத்துவ விஞ்ஞான ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்களாயின் இதிலுள்ள அல்லாஹ்வின் “ஹிக்மத்” தத்துவத்தை அறிந்து கொள்வார்கள். ஆயினும் இது பற்றிய ஞானம் நபீமாருக்கும், வலீமாருக்கும் மறைவானதாயிருக்காது.
உலகில் விபச்சாரத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் பெண்களா? ஆண்களா? என்று அகில உலக மட்டத்தில் ஓர் ஆய்வு நடத்தினால் பெண்களே முதலிடத்தில் உள்ளார்கள் என்பது தெளிவாகும்.
 
நான் இவ்வாறு திட்டமாகச் சொல்வதற்கான காரணம் என்னவெனில் அல்லாஹ் திருக்குர்ஆனில் விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கும், ஆணுக்குமுரிய சட்டம் கூறும் போது முதலில் விபச்சாரம் செய்யும் பெண்கள் என்றே திரு வசனத்தை தொடங்கியிருப்பதாகும்.
 
அல்லாஹ் திருக்குர்ஆனில் விபச்சாரம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்குமுரிய சட்டங்கள் பற்றி கூறுகையில்
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ
திருமணமாகாத விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி தூதரையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விதிக்கப்பட்ட சட்டத்தை அமுல் செய்வதில் அவ்விருவருக்காக உங்களை இரக்கம் பிடித்து விட வேண்டாம். இன்னும் அவ்விருவரின் வேதனையை விசுவாசிகளில் ஒரு சாரார் நேரில் பிரசன்னமாகிப் பார்க்கவும் என்று கூறியுள்ளான்.
திருக்குர்ஆன்: அந்நூர் 02
மேற்கண்ட திரு வசனத்தில் விபச்சாரகனை விட விபச்சாரி முதலில் கூறப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
 
இதேபோல் திருடும் ஆண்களுக்கும், திருடும் பெண்களுக்குமுரிய சட்டம் பற்றி திருக்குர்ஆனில் கூறுகையில்
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
திருடனும், திருடியும் அவ்விருவரும் சம்பாதித்ததற்கு கூலியாக அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் கைகளைத் துண்டித்து விடுங்கள். மேலும் அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன். தீர்க்கமான அறிவுடையவன் என்று கூறியுள்ளான்.
திருக்குர்ஆன்: 05-38
மேற்கண்ட இத்திரு வசனத்தில் திருடியை விட திருடனை முதலில் கூறப்பட்டிருப்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். சர்வதேச மட்டத்தில் ஆய்வு செய்தால் திருட்டுத் தொழிலில் முதலிடத்தில் ஆண்களே உள்ளார்கள் என்பது தெரிய வரும்.
முந்தின வசனம் உலகில் விபச்சாரகனை விட விபச்சாரிகள் அதிகம் என்பதையும், இரண்டாம் வசனம் உலகில் கள்ளியை விட கள்ளன்தான் அதிகம் என்பதையும் காட்டுகிறது.
கண்களே பெண்களை நம்பாதே!
தொடரும்…
 
தலைப்பிலுள்ள مُغْتَلِمَاتٍ என்ற சொல் غَلَمَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். غَلَمَ என்றால் كَانَ مُنْقَادًا لِلشَّهْوَةِ காம இச்சைக்கு வழிப்பட்டான் என்று பொருள்.

40 ஆண்களின் வீரியம் வழங்கப்பட்ட எம் பெருமானார்!
சிற்றின்ப மோகத்தில் பெண்கள் முதலிடத்தில்!

சூழ்ச்சி செய்வதில் “ஷெய்தான்” ஷாத்தானை வென்ற பெண்கள்!
சூழ்ச்சிப் போட்டியில் பெண்களிடம் தோல்வி கண்ட ஷெய்தான்!

தொடர் 02
 
சூழ்ச்சிக்கு அறபு மொழியில் مَكْرْ “மக்ர்” என்று சொல்லப்படும். சூழ்ச்சி என்றால் என்ன? தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம்.
உதாரணமாக ஸூபிஸ சமூகத்தைப் பிரிக்க எதிர்த் தரப்பு என்ன சூழ்ச்சி செய்தாலும் அது பலிக்காது என்று சொல்வது போன்று.
 
சூழ்ச்சிக்கு “மக்ர்” என்று சொல்வது போல் كَيْدْ – “கைத்” என்றும் சொல்லப்படும். திருக்குர்ஆனில் சூழ்ச்சி என்ற பொருளுக்கு மேற்கண்ட இரண்டு சொற்களும் இடம் பெற்றுள்ளன.
وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன். (03-54, 08-30)
قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ (26) وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ (27) فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ (28)
 
மேலே எழுதிய وَاللهُ خَيْرُ الْمَاكِرِيْنْ என்ற வசனத்திற்கு அல்லாஹ் “மக்ர்” சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் என்றுதான் உலமாஉகளில் அதிகமானோர் பொருள் கூறுகின்றார்கள். அவ்வாறு மொழியாக்கம் செய்தாலும் மனிதர்கள் சூழ்ச்சி செய்வது போல் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் யாருக்கும் சதி செய்வதுமில்லை. சூழ்ச்சி செய்வதுமில்லை, அநீதி செய்வதுமில்லை. அவை அவனுக்குத் தேவையுமில்லை. ஆகையால் குறித்த வசனத்திற்கு சூழ்ச்சி செய்பவர்களுக்கு கூலி கொடுப்பவன் என்றும், தண்டனை வழங்குபவன் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
வரலாற்றுச் சுருக்கம்:
 
நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 11 மகன்கள் இருந்தனர். அவர்களில் அழகில் சிறந்தவர் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். தந்தைக்கு மற்றவர்களை விட அன்பிற்குரியவரும் அவர்தான். தந்தை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவருடன் மட்டும் கடும் அன்பாக இருந்தது ஏனைய சகோதரர்களுக்கு திருப்தியில்லாமற் போனதால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சகோதரர் யூஸுப் அவர்களுக்கு كَيْدْ – சூழ்ச்சி செய்யத் திட்டமிட்டு அவரைத் தம்மோடு விளையாடுவதற்கு அழைத்துச் செல்ல தந்தையிடம் அனுமதி கேட்டார்கள். தந்தை அவர்களிடம், அவர் சிறியவர், நீங்கள் அவரில் கவனமின்றி விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை ஓநாய் தூக்கிச் சென்று விடலாமல்லவா? என்று கூறி மறுத்தார்கள். எனினும் அவர்கள் தந்தையை விடாப் பிடியாகப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதி பெற்றுக் கொண்டு அழைத்துச் சென்றார்கள்.
 
அங்கு பாழடைந்த கிணறொன்று இருந்தது. அதில் அவர்களைத் தூக்கியெறிந்து விட்டு உடைகளில் இரத்தம் பூசிக் கொண்டு அழுது கண்ணீர் வடித்தவர்களாக இரவு நேரம் தந்தையிடம் வந்து ஓநாய் தூக்கிச் சென்று விட்டதாக முறையிட்டார்கள். தந்தை அழுது கண்ணீர் வடித்து பொறுமை செய்தார்கள்.
சில நாட்களின் பின் அவ்வழியால் சென்ற பயணிகள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றில் வாளியை விட்ட போது அங்கு ஒரு சிறுவன் இருந்ததைக் கண்டு பயணிகள் அனைவரும் முயற்சி செய்து அவரை மீட்டார்கள். இறுதியில் அவர்கள் “மிஸ்ர்” வாசிகளுக்கு விற்கப்பட்டார்கள்.
 
“மிஸ்ர்” நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் அஸீஸ் என்பவரிடம் அவர்கள் வந்து சேர்ந்து அவரிடமே வளர்ந்து வந்தார்கள்.
மன்னர் அஸீஸ் அவர்களின் வீட்டில் வளர்ந்து வந்த யூஸுப் அவர்கள் வாலிப வயதை அடைந்த போது அவரின் அழகில் மயங்கிய மன்னரின் மனைவி ஸலீகா அவரை விரும்பி காதல் செய்யத் தொடங்கினார். ஆனால் யூஸுப் அவர்களோ காதலுக்கு இடம் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார். ஆயினும் மன்னரின் மனைவி அவரை விட்ட பாடில்லை. ஒரே மாளிகையில் இருவரும் வசித்ததால் ஸலீகாவின் பிடியிலிருந்து தப்பிக் கொள்வது யூஸுப் அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது.
 
மன்னனின் மனைவி ஸலீகா யூஸுப் அவர்களைக் காதலிக்கிறார்கள் என்ற செய்தி எப்படியோ ஊர் மக்களுக்குத் தெரிய வந்துவிட்டது. ஊரிலுள்ள மக்கள் குறிப்பாக பெண்கள் மன்னனின் மனைவியை இழிவாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள். மன்னனின் மனைவி ஸலீகா தனது வீட்டில் வளர்ந்து வந்த யூஸுப் என்ற அநாதையை காதலிக்கிறார் என்ற செய்தி ஊரில் பரவலானதால் மன்னருக்கு இது பெரும் அவமானமாயிருந்தது. மன்னர் அஸீஸ் மனைவியிடம் பல தடவை கேட்டும் அவர் உண்மையை சொல்ல மறுத்து விட்டார்.
ஊரிலுள்ள பெண்களில் சிலர் மன்னனின் மனைவி தமது வீட்டில் வளர்ந்த ஓர் அநாதையைக் காதலிக்கிறார் என்ற செய்தியைப் பரப்பிய போது அவ்வாறு செய்தி பரப்பிய பெண்களை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட ஸலீகா அந்தப் பெண்களை தனது மாளிகைக்கு அழைத்து விஷேட விருந்தொன்று வழங்கினார். விருந்தின் இறுதியில் வந்திருந்த பெண்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அப்பிள் பழமும், ஒரு கத்தியும் கொடுத்து அவ்வேளை யூஸுபை வெறு மேனியுடன் அப் பெண்களுக்கு முன்னால் சற்று நேரம் சென்று வருமாறு பணித்தார் ஸலீகா. யூஸுப் அவர்களுக்கு முன்னால் ஒரு “றவ்ன்ட்” வந்து போனார். அவ்வளவுதான். அவரின் அழகிய தோற்றம் கண்டு மயங்கித் தம்மை மறந்த யாவரும் தாம் அறியாமலேயே தமது கைகளை வெட்டிக் கொண்டனர். பெண்களிற் சிலர் கைகளில் மணிக்கட்டு வரையும், இன்னும் சிலர் தமது கைகளில் முழங்கை வரையும் வெட்டிக் கொண்டனர். மன்னனின் மனைவி யூஸுபின் அழகில் மயங்கி விட்டார் என்று கூறிய பெண்களிடம் நீங்கள் ஏன் கைகளை வெட்டிக் கொண்டீர்கள்? என்று கேட்ட போது அவர்கள் விடை கொடுக்க முடியாமல் தலை குனிந்து நின்றனர். தானும் உங்கள் போன்ற ஒரு பெண்தான் என்பதை நிறுவிக் காட்டினார் ஸலீகா. விருந்துக்கு வந்து கையை வெட்டிக் கொண்ட பெண்கள் அனைவரும் ஸலீகாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
 
ஸலீகாவின் கணவர் மன்னன் அஸீஸ் ஸலீகாவை விடவில்லை. உண்மையை அறிந்து கொள்வதற்காக தினமும் ஸலீகாவிடம் துருவித் துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். இறுதியில் ஸலீகாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
தீச் செயலுக்கு ஸலீகாதான் என்னை அழைத்தார் என்று யூஸுப் சொல்லிக் கொண்டிருந்தார். யூஸுப்தான் என்னை அழைத்தார் என்று ஸலீகா சொல்லிக் கொண்டிருந்தார்.
அவ்வேளையில்தான் அந்த நடுவர் மேலே அறபியில் எழுதியுள்ள
قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا
என்ற வசனத்தைக் கூறித் தீர்ப்புச் செய்தார்.
அவர் கூறிய வசனத்தின் மொழியாக்கம்: யூஸுப் அதனை மறுத்து தன் விருப்பத்திற்கிணங்குமாறு என்னை அழைத்தார் என்று கூறினார். அது சமயம் அவளுடைய குடும்பத்திலிருந்த சாட்சியாளர் ஒருவர் பின்வருமாறு சாட்சி கூறினார். அவருடைய சட்டை முன்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை சொல்கிறாள். அவரோ பொய்யாளர்களில் உள் படுவார். (26)
 
அன்றியும் அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் சொல்கிறாள். அவர் உண்மையாளர்களில் உள்ளவராவார் என்றார். (27)
 
ஆகவே யூஸுப் ஆகிய அவருடைய சட்டையை – அது பின் புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்த போது தன் மனைவியிடம் நிச்சயமாக இது பெண்களாகிய உங்களுடைய சதியிலுள்ளதே. நிச்சயமாக உங்களின் சதி மகத்தானது என்று கூறினார். (28)
 
மொழியாக்கத்தின் சுருக்கம்:
 
நீதி சொன்ன நடுவர் சட்டை முன் பக்கம் கிழிந்திருந்தால் சலீகா உண்மை சொல்கிறார். யூஸுப் பொய் சொல்கிறார். (26)
 
அவரின் சட்டை பின் பக்கம் கிழிந்திருந்தால் யூஸுப் உண்மை சொல்கிறார். ஸலீகா பொய் சொல்கிறாள். (27)
 
யூஸுபின் சட்டையின் பின் பக்கம் கிழிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்ட போது இது பெண்களின் சூட்சியாகும். அவர்களின் சூட்சி மகத்தானது, திறமையானது என்று சொன்னார். (28)
 
இதன் மூலம் பெண்கள் சூழ்ச்சி செய்வதில் மிகத் திறமையானவர்கள் என்பது தெளிவாகிறது.
 
தொடர் ஒன்றில் ஆண்களை விட விபச்சாரத்தில் பெண்களே முதலிடத்தில் உள்ளார்கள் என்றும், இரண்டாவது தொடரில் ஷெய்தானின் சூழ்ச்சியை விட பெண்களின் சூழ்ச்சியே மிகக் கடுமையானது என்றும் எழுதியுள்ளேன். திருக்குர்ஆனை நான் ஆய்வு செய்த வகையில் நான் அறிந்த விளக்கத்தை எழுதியுள்ளேனேயன்றி பெண்களை மோஷமாக விமர்சிக்க வேண்டுமென்பதற்காக எழுதவில்லை.
 
விபச்சாரம், சூழ்ச்சி என்பவற்றில் மட்டும் பெண்கள் முன்னணியில் உள்ளார்கள் என்று சொல்ல முடியாது. புறம் பேசுதல், கோள் சொல்லுதலிலும் பெண்கள் மிகத் தீவிரமானவர்களாயிருப்பதை நாம் காண்கிறோம். நன்றாகப் படித்த, கௌரவமான குடும்பத்திலுள்ள பெண்களிடம் இவ்வாறான பழக்க வழக்கம் இருப்பதை காண்பது அரிதாகவே உள்ளது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments