Saturday, May 11, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திருக்குர்ஆன் ஓதுமுன் கூலி பேசுவதற்கும், ஓதி முடிந்த பின் கூலி பெறுவதற்கும் பலமான ஆதாரம் உண்டு....

திருக்குர்ஆன் ஓதுமுன் கூலி பேசுவதற்கும், ஓதி முடிந்த பின் கூலி பெறுவதற்கும் பலமான ஆதாரம் உண்டு. இதில் “பாதிஹா” ஓதுவதும், “கத்ம்” – யாஸீன் ஓதுவதும் அடங்கும்.

தொடர் 01
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஒரு விடயம் சரியென்றோ, பிழையென்றோ நிறுவுவதற்கு திருக்குர்ஆனிலிருந்து அல்லது பலமான “ஹதீது” நபீ மொழியில் இருந்து ஓர் ஆதாரம் இருந்தாலே போதும். பல ஆதாரங்கள் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
 
நான் தலைப்பில் குறிப்பிட்டுள்ள விடயம் சரியென்று நிறுவுவதற்கு பலமான நபீ மொழிகள் ஆதாரங்களாக இருந்தாலும் பலமான ஒரு நபீ மொழியை மட்டும் இங்கு கூறுகிறேன்.

நபீ மொழியை அறபியிலும் எழுதி அதன் மொழியாக்கத்தை தமிழிலும் எழுதாமல் மொழியாக்கத்தை மட்டும் எழுதுகிறேன். ஆயினும் நபீ மொழியின் இலக்கத்தையும், ஹதீது இடம் பெற்ற நூலின் பெயரையும் குறிப்பிடுவேன். தேவையானோர் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலதிக விபரம் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
 
ஹதீதின் தமிழாக்கம்:
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோழர்களில் ஒரு குழு பயணமொன்றை ஒட்டகங்களில் மேற்கொண்டார்கள். அவர்கள் சென்ற வழியில் – ஈத்த மரத் தோப்பில் ஆடுகள் மேய்க்கும் காபிர்களான அறபீகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். நபீ தோழர்கள் அவர்களுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்தில் தங்கியிருந்தார்கள்.
 
நபீ தோழர்களிடம் சாப்பாட்டிற்கான ஏற்பாடு எதுவும் இல்லாதிருந்ததால் அந்தக் காபிர்களிடம் சாப்பாடு கேட்டார்கள். அவர்கள் கொடுக்காமல் மறுத்து விட்டார்கள். பட்டினி பசியோடு தோழர்கள் இருந்த அதே நேரம் அறபுக் காபிர்களின் தலைவனை விஷமுள்ள ஏதோ ஒன்று தீண்டிவிட்டது. (இது பாம்பாக அல்லது தேளாக இருக்கலாம்) அவர்கள் அவனுக்கு தம்மாலான மருந்துகள் செய்தும் விஷம் இறங்கவில்லை. நேரம் செல்லச் செல்ல அவன் வேதனையால் துடித்து துவண்டு போனான்.
 
அப்போது அவனின் ஆதரவாளர்களில் ஒருவர் இங்கு வந்து தங்கியுள்ள முஹம்மதுடைய தோழர்களிடம் விஷக்கடிக்கு மருந்து இருக்கலாம் அல்லது அதற்கு மந்திரிப்பவர் இருக்கலாம் என்று கூறினார். அவரின் கூற்றைச் சரி கண்ட சிலர் நபீ தோழர்களிடம் வந்து விபரத்தைக் கூறி உங்களிடம் ஏதாவது மருந்துண்டா? என்று கேட்டார்கள். தோழர்களில் ஒருவர், “ஆம் என்னால் மந்திரித்து விஷமிறக்க முடியும் என்றார். ஆனால் ஒன்று நாங்கள் உங்களிடம் சாப்பாடு தருமாறு கேட்ட போது நீங்கள் மறுத்து விட்டீர்கள். இப்போது உங்கள் தேவையை முடிப்பதற்காக எங்களிடம் வந்துள்ளீர்கள். ஆகையால் நாங்கள் மந்திரித்து விஷம் இறக்குவதாயின் நீங்கள் என்ன தருவீர்கள்?” என்று கேட்டார்.
 
ஒரு ஆட்டுப் பட்டி தருகிறோம் என்றார்கள். அந்த நபீ தோழர்களும் ஏற்றுக் கொண்டனர். மந்திரிப்பதாகச் சொன்ன நபீ தோழர் காபிர்களின் தலைவனிடம் சென்று “சூறதுல் பாதிஹா” அத்தியாயத்தை ஓதி அவன் மீது துப்பினார். உமிழ்ந்தார். தலைவன் தலை நிமிர்ந்து நின்றான். விஷமிறங்கி சுகம் பெற்றான். அவர்கள் சொன்னபடி ஆட்டுப்பட்டியொன்று கூலியாக அவருக்கு வழங்கினார்கள். அவர் தோழர்களிடம் வந்த போது அவர்களில் ஒருவர் மற்றவர்களை முந்திக் கொண்டு எமக்கிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்றார். மந்திரித்து ஆட்டுப் பட்டியை பெற்று வந்தவர் இல்லை, நாம் நபீ பெருமானிடம் சென்று விடயத்தைக் கூறி அவர்கள் சொல்வது போல் செயல்படுவோம் என்றார். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு நபீ பெருமானிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். நபீ பெருமான் அவர்கள் மந்திரித்த தோழரிடம் “பாதிஹா” அத்தியாயம் மந்திரமென்று உங்களுக்கு எவ்வாறு தெரியும்? என்று கேட்ட பின் நீங்கள் பங்கு வைத்துக் கொள்ளுங்கள், எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் என்று அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ – 5749
 
இந்த நபீ மொழி மூலம் நாமும் சில பாடங்கள் கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் கொள்கையில் வேறுபட்டவர்களான நமது சகோதர வஹ்ஹாபீகளும் பல பாடங்கள் கற்றுக் கொள்ள முடியும். அவற்றிற் சிலதை சுட்டிக் காட்டுகிறேன்.
01. முஸ்லிம்கள் காபிர்களிடம் அவர்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிடலாம். அவர்களிடம் கேட்டுப் பெற்றுச் சாப்பிடவும் முடியும். இவ் அடிப்படையில் முஸ்லிம்கள் தமது பயணங்களின் போது முஸ்லிம் அல்லாதவர்களின் சாப்பாட்டுக் கடைகளில் அவர்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட முடியும்.
 
சமையல் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. காபிர், முஷ்ரிக், யஹூதீ போன்றவர்கள் சமைத்த சாப்பாட்டைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடுவது தவறில்லை. எனினும் மார்க்கத்தில் அறுத்துச் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகள், பறவைகளாயின் அவற்றை முஸ்லிம்கள் அறுத்திருப்பது மட்டும் அவசியம். அறுக்காமல் அடித்துக் கொல்லப்பட்ட பிராணிகளைச் சாப்பிடுவதும், முஸ்லிம் அல்லாதவர்களால் அறுக்கப்பட்டவற்றைச் சாப்பிடுவதும் கூடாது. முஸ்லிம்கள் அடித்துக் கொன்றிருந்தாலும் சரியே.
 
பயணத்தின் போது முஸ்லிம் அல்லாதவர்களின் ஹோட்டல் மட்டுமே உள்ளது. ஆயினும் அதில் பன்றியின் மாமிசம் சமைக்கப்படுவதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அங்கு சென்று சாப்பிடுவது கூடாது. ஏனெனில் அங்கு பாவிக்கப்படுகின்ற பாத்திரங்கள் அசுத்தமானவையாகும். இஸ்லாம் கூறும் “ஷரீஆ”வின் முறைப்படி கழுவப்பட்டவையல்ல.
 
02. திருக்குர்ஆன் ஓதுவதற்கு கூலி பேசுவது ஆகும். நமது நாட்டு வழக்கத்தில் திருக்குர்ஆனைப் பலவிதமாக ஓதி வருகின்றார்கள். 30 பாகங்களையும் 40 தடவைகள் ஓதுகிறார்கள். இது “பெரிய கத்ம்” என்று சொல்லப்படும். அதாவது மொத்தம் 1200 பாகங்கள் ஓத வேண்டும்.
 
இன்னொரு விதம் 30 பாகங்களையும் ஒரு தரம் மட்டும் ஓதுதல். இது “சிறிய கத்ம்” எனப்படும். அதிகமானவர்கள் “யாஸீன்” ஓதி வருகின்றார்கள். இது பொதுவாக “கத்ம்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. “பாதிஹா” ஓதுதல் என்றால் “பாதிஹா” அத்தியாயம் ஒரு தரமும், “இக்லாஸ்” – அத்தியாயம் “குல்ஹுவல்லாஹு அஹத்” ஒரு தரமும், “குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும், “குல்அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதுதல் “பாதிஹா” என்று சொல்லப்படும்.
 
மேற்கண்டவற்றில் எதை ஓதுவதாயினும் அதற்காக ஓதுமுன்னே கூலி பேசிக் கொள்ளுதல் ஆகும். ஏனெனில் குறித்த நபீ தோழர் “பாதிஹா” அத்தியாயத்தை ஓதி விஷமிறக்குவதற்கே கூலி பேசியுள்ளார்.
நமது இலங்கை நாட்டு வழக்கத்தில் “பெரிய கத்ம்” ஓதுவதற்கு மட்டுமே உலமாஉகளிற் பலர் முன் கூட்டியே கூலி பேசிக் கொள்வார்கள். மற்றவை ஓதுவதற்கு கூலி பேசும் வழக்கம் இல்லை. ஓதும்படி சொல்பவர்கள் கொடுக்கும் பணத்தை உலமாஉகள் பெற்றுக் கொள்வார்கள். “பெரிய கத்ம்” ஓதுவதற்கு மட்டும் முன்கூட்டி கூலி பேசுவார்கள்.
 
இலங்கை நாட்டில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி எனும் ஊரிலுள்ள நாங்கள் “பெரிய கத்ம்” ஓதச் சொல்பவர்களிடம் முன்கூட்டியே கூலி பேசிக் கொள்வோம். இப்போதுள்ள சூழ் நிலையில் “பெரிய கத்ம்” ஓதுவதற்கு – 30 பாகங்களையும் 40 தடவைகள் ஓதுவதற்கு அதாவது 1200 பாகங்கள் ஓதுவதற்கு குறைந்தது மூன்று இலட்சம் ரூபாய் கூலி முன்கூட்டியே பேசிக் கொள்வோம்.
 
அல்லாஹ்வின் “கலாம்” ஆன திருக்குர்ஆனை ஓதுவதற்கு கூலி பேசலாமா? என்று உலமாஉகளை நையாண்டி செய்யும் ஒரு கூட்டமும், திருக்குர்ஆனை ஓதி கூலி வாங்குவதே பிழையென்று கூறும் ஒரு கூட்டமும் இந்நாட்டில் உள்ளார்கள். இவர்களை ஸுன்னத் வல் ஜமாஅத்தவர்கள் “வஹ்ஹாபீகள்” என்று அழைப்பார்கள்.
 
03. திருக்குர்ஆனை ஓதி வைத்தியம் செய்ய ஆகும் என்பதற்கும் தலைப்பில் எழுதியுள்ள நபீ மொழி ஆதாரமாக உள்ளது. நபீ மொழியில் கூறப்பட்ட நபீ தோழர் விஷக் கடிக்கு திருக்குர்ஆன் வசனங்களை ஓதி விஷமிறக்கியுள்ளதால் நாமும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி வைத்தியம் செய்யலாம் என்று தெளிவாகிறது. இது தொடர்பாக அநேக நபீ மொழிகள் உள்ளன. தேவையேற்பட்டால் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
 
قَطِيْعٌ مِنَ الْغَنَمِ
என்றால் ஆடுகள் சேர்ந்த ஒரு கூட்டம். இதற்கு “பட்டி” – “ஆட்டுப் பட்டி” என்று சொல்லப்படும்.
மந்திரிக்கச் சென்ற நபீ தோழரும், மற்ற காபிர்களும் கூலியாக முன் கூட்டி ஒப்பந்தம் செய்தது ஓர் ஆட்டுப் பட்டியாகும். “பட்டி” என்று சொல்வதாயின் குறைந்த பட்சம் 25 ஆடுகளாவது இருந்தால் மட்டுமே பட்டியென்று சொல்லப்படும். இத்தகவல் தந்தவர் ஆட்டுப்பட்டி வைத்திருக்கும் ஒருவர்தான்.
 
பெருமானார் அவர்களின் காலத்தில் ஒட்டக வளர்ப்பு, ஆடு வளர்ப்பு அதிகமானவர்களால் செய்யப்பட்டு வந்தது. இதனால்தான் சிறிய வேலைக்கு பெரிய அளவிலான கூலி கொடுக்கப்பட்டுள்ளது.
 
04. விஷமிறக்கச் சென்ற நபீ தோழர் “பாதிஹா” அத்தியாயத்தை ஓதி விஷத்தால் பாதிக்கப்பட்டவன் மீது துப்பியுள்ளார்கள். மேற்கண்ட நபீ மொழியில் تَفَلَ என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச் சொல்லுக்கு துப்பினான் – உமிழ்ந்தான் என்றுதான் பொருள் வருமேயன்றி “ஊதினான்” என்று பொருள் வராது. ஆகையால் திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் வைத்தியம் செய்பவர்கள் நோயாளியின் மீது ஊதாமல் ஓரளவு அவன் மீது உமிழ் நீர் படுமளவு துப்ப வேண்டும் என்பது விளங்கப்படுகிறது. இதற்காக வைத்தியம் செய்யும் மௌலவீமார் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். காறித்துப்பினால் எவரும் வைத்தியத்திற்கு வர மாட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
05. விஷமிறக்கிவிட்டு ஆட்டுப் பட்டியுடன் வந்ததைக் கண்ட மற்றுமொரு நபீ தோழர் اِقْسِمُوْا நமக்கிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்று கூறியது பொருத்தமற்றதாகும். குறித்த நபீ தோழர் அவ்வாறு சொல்லாமல் நபீ பெருமானார் அவர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வது போல் செய்து கொள்வோம் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். நபீ தோழர்கள் சிறப்புக்குரியவர்களாயினும், கண்ணியத்திற்குரியவர்களாயினும் அவர்களில் சமயோசித புத்தியும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு பேசத் தெரியாதவர்களும் இருந்துள்ளார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களைக் குறை காணக் கூடாது.
கண்ணூறு – கண் திஷ்டி என்பது உண்மை. இது உண்டு என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் اَلْعَيْنُ حَقٌّ கண்ணூறு என்பது உண்மை, அது உண்டு என்றும், اَلْعَيْنُ تُدْخِلُ الرَّجُلَ الْقَبْرَ கண் திஷ்டி என்பது ஒரு மனிதனை மண்ணறைக்குள் அனுப்பிவிடும் என்றும் கூறியுள்ளார்கள். இன்னுமிவை போன்ற நபீ மொழிகளும் உள்ளன.
 
அன்பிற்குரிய சகோதரிகளே!
 
உங்களின் குழந்தைகள் இரண்டு வயதைப் பூர்த்தி செய்யும் வரை கண் திஷ்டி ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்திலும், மக்ரிப் நேரத்திலும் உங்கள் குழந்தைகளை வெளியில் எடுத்துச் செல்லாதீர்கள். “மக்ரிப்” நேரத்தில் மட்டும் “ஆயதுல் குர்ஸீ”, “குல்அஊது பிறப்பில் பலக்”, “குல்அஊது பிறப்பின்னாஸ்” மூன்றையும் ஓதி உங்கள் குழந்தைகளின் முகத்தில் இரண்டு தரம் ஊதிவிட்டு மூன்றாம் தரம் உங்களின் உமிழ் நீர் குழந்தையின் முகத்தில் படுமளவு இலேசாக துப்பவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தீர்களாயின் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேய், ஷெய்தான், ஜின் போன்றவற்றின் தீமை ஏற்படமாட்டாது.
 
தொடரும்… (2ம் பக்கம் பார்க்க)
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments