Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களாக வெளியானவனும், முழுவுலகாய் வெளியானவனும் அல்லாஹ்தான். அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு...

முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களாக வெளியானவனும், முழுவுலகாய் வெளியானவனும் அல்லாஹ்தான். அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு வஸ்தும் இல்லை. இதுவே இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
திருக்குர்ஆன் கூறும் தத்துவமும், திரு நபீயின் அருள் மொழிகள் கூறும் தத்துவமும் இதுவேதான்.
 
முதலில் முழுவுலகாய் வெளியானவன் அல்லாஹ்தான் என்பதற்கான திருமறை ஆதாரங்களில் ஒன்றை மட்டும் இக்கட்டுரையில் எழுதுகிறேன்.

وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவையாகும். எனவே, நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான். (02-115)
 
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்று மேற்கண்ட வசனத்திற்கு மொழியாக்கம் செய்வதால் வடக்கும், தெற்கும் எவனுக்குச் சொந்தமானவை? என்ற கேள்விக்கு விடை இல்லாமற் போய்விடும்.
இதனாலோ என்னவோ அறிவுலக மேதை, அறிவின் ஆழ் கடல் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் திருக்குர்ஆன் விரிவுரை நூலான “தப்ஸீர் கபீர்” எனும் நூலில் இவ்வசனத்தின் விரிவுரையில் ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் என்று அனைத்தையும் உள்வாங்கியவர்களாக விளக்கம் எழுதியுள்ளார்கள் போலும்.
 
குறித்த திரு வசனத்தில் وَللهِ என்ற சொல்லில் வந்துள்ள “லாம்” என்ற எழுத்துக்குரிய சரியான பொருளை அறிந்து கொள்ளுங்கள். இதற்கான சரியான பொருளைத் தெரிந்து கொள்ளாததினால்தான் துறை தெரியாமல் தோணி தொடுக்கிறீர்கள். அப்சோஸ்! அப்சோஸ்! அறிவு எங்கோ உள்ளது. நீங்கள் எங்கோ உள்ளீர்கள். பிறை தெரியாது போனால் கண்ணாடி போட்டுப் பாருங்கள். أَنَانِيَّةْ நானென்ற கர்வத் திரையையும், أَنِّيَّةْ எனும் நான் என்ற உணர்வுத் திரையையும் நீக்கிவிட்டுப் பாருங்கள். பிறை தெரியும்.
 
திரு வசனத்தில் وَللهِ அல்லாஹ் என்ற சொல்லில் வந்துள்ள “கஸ்ர்” செய்யப்பட்ட “லாம்” என்ற எழுத்துக்கு பல் பொருள் உண்டு.
 
اللّام الداخلة على الاسم لها معانٍ كثيرة، منها الإختصاصُ، نحو الجنّةُ للمؤمن، والاستحقاقُ، نحو العزّةُ لله، والمُلكُ كما فى القرآن ‘ لله ما فى السموات ‘، ‘ ولله المشرق والمغرب ‘،
ஓர் “இஸ்ம்” பெயர்ச் சொல்லுடன் சேர்ந்து வருகின்ற “லாம்” – “லி” என்ற எழுத்துக்கு மேலே சொன்னது போல் பல பொருள் உண்டு. அவற்றில் ஒன்று مُلْكْ உரியது என்ற பொருளாகும். அதாவது சொந்தம் என்ற பொருளாகும்.
 
இந்த இலக்கண விதிப்படி மேற்கண்ட தலைப்பில் எழுதப்பட்டுள்ள وَللهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ என்ற திரு வசனத்தில் “அல்லாஹ்” என்ற பெயர்ச் சொல்லுடன் இணைந்து வந்துள்ள “லாம்” – “லி” என்ற எழுத்துக்கு உரிமை, சொந்தம் என்ற பொருள் உண்டு. இதன்படி ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்று பொருள் கொள்ள வேண்டும்.
 
இங்கு இன்னுமொரு நுட்பம் உண்டு. அதாவது இத்திரு வசனம் وَللهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ என்று வராமல் وَالْمَشْرِقُ وَالْمَغْرِبُ للهِ என்று “மஷ்ரிக், மக்ரிப்” என்ற சொற்கள் முந்தியும், “லில்லாஹி” என்ற சொல் பிந்தியும் வந்திருந்தால் இத்திரு வசனம் தருகின்ற கருத்து பலம் குன்றியதாகிவிடும். அதாவது ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்று மட்டும் பொருள் வரும். இத்திரு வசன அமைப்பு திருக்குர்ஆனிலுள்ள படி வந்ததால் இதன் பொருள் இரண்டு பிரதேசங்களும் அல்லாஹ்”வுக்கே” சொந்தம் என்ற பலம் கூடிய பொருளாக அமைகிறது. இதுவே இதிலுள்ள நுட்பமாகும்.
 
சொந்தம் என்பது இரு வகை:
 
ஒருவனுக்கு ஏதோ ஒன்று சொந்தம் என்பதில் இரு வகையுண்டு. ஒன்று – உரியவனை விட்டும் பிரியாத சொந்தம். இரண்டு – உரியவனை விட்டும் பிரிந்த சொந்தம்.
முந்தினதற்கு உதாரணம் ஒருவனின் தலை அவனுக்குச் சொந்தமாயிருத்தல் போன்றும், அவனின் கை, கால், உறுப்புக்கள் அவனுக்குச் சொந்தமாயிருப்பது போன்றுமாகும். இதற்கு தமிழ் மொழி இலக்கணத்தில் “தற்கிழமை” என்று சொல்வர்.
பிந்தினதற்கு உதாரணம் ஒருவனின் வாகனம் அவனுக்குச் சொந்தமாயிருப்பது போன்றும், அவனின் வீடு, தோட்டம், கடை, மற்றும் சொத்துக்கள் சொந்தமாயிருப்பது போன்றுமாகும். இதற்கு தமிழ் மொழியிலக்கணத்தில் “பிறிதின் கிழமை” என்று சொல்வர்.
 
கூறப்பட்ட இவ் இரு வகைச் சொந்தங்களில் அல்லாஹ்வுக்கு ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் சொந்தம் என்பதும், மற்றும் திருக்குர்ஆனின் வேறு சில வசனங்களின்படி வானங்களும், வானத்திலுள்ளவைகளும், பூமியும், பூமியிலுள்ளவைகளும் அவனுக்கு சொந்தமென்பதும் அவனை விட்டும் பிரியாத, தற்கிழமை அடிப்படையிலான சொந்தமேயாகும்.
மேற்கண்ட இந்த விபரத்தின் படி அல்லாஹ்வின் படைப்புக்கள் யாவும் அவனின் “தாத்” உள்ளமையை விட்டும் பிரியாத அவன் தானானவையேயாகும். தற்கிழமை அடிப்படையிலுள்ள அவனுக்குச் சொந்தமானவையுமேயாகும்.
 
இரு சொற்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு:
وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
என்ற திரு வசனம் ஒரேயொரு வசனமாயினும் இது இரண்டு அம்சங்கள் கொண்டது போல் அமைந்திருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல.
 
ஒன்று – ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பது. இரண்டு – நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு – அல்லாஹ் உள்ளான் என்பது.
 
முந்தின அம்சத்திற்கும், பிந்தின அம்சத்திற்குமுள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி சற்று அலசிப் பார்ப்போம். இதுவரை சொல்லப்பட்ட விபரங்கள் மூலம் முந்தின அம்சத்தின் சுருக்கம் எல்லாமாயுமிருப்பது அல்லாஹ்தான் என்பதாகும். மூடலான, சுருக்கமான இவ் அம்சத்தை திரை நீக்கம் செய்து நீங்கள் எதைப் பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வையே பார்க்கிறீர்கள் என்று வெளிச்சமாக்கிக் காட்டுகிறது இரண்டாவது அம்சம். இது எது போலுள்ளதென்றால் அப்துல்லாஹ் என்பவனுக்கு அவனின் கை, கால் உள்ளிட்ட அனைத்து உறுப்புக்களும் அவனுக்கு வேறாகாத, அவன் தானானவையாக இருப்பதால் நீங்கள் அவனின் உறுப்புக்களில் எந்த ஓர் உறுப்பைப் பார்த்தாலும் அவனையே பார்க்கின்றீர்கள் என்பது போலுள்ளது. இவ்வாறு விளங்கினால் மட்டுமே முந்தின அம்சத்திற்கும், பிந்தின அம்சத்திற்கும் பொருத்தமுண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
 
இதுவரை ولله المشـرق والمغرب ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதற்கான என்னால் முடிந்த, நான் அறிந்த விளக்கத்தை எழுதிவிட்டேன்.
குறித்த திரு வசனத்தில் இரண்டாவது அம்சமாகக் கூறப்பட்ட فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ “நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு” என்பதற்கான விளக்கம் எழுதுகிறேன்.
 
முதலில் திரு வசனத்திலுள்ள أَيْنَمَا என்ற சொல்லுக்கு மொழியிலக்கணம், அறபு மொழி நடை அடிப்படையிலான சில குறிப்புக்கள் தந்து விளக்கம் எழுதுகிறேன். இக்குறிப்புக்கள் அறபு மொழியிலக்கணம் விளங்கிக் கற்றவர்களுக்கும், தற்போது கற்றுக் கொண்டிருக்கின்றவர்களுக்கும் மட்டுமே விளங்கும். ஆகையால் கற்காதவர்கள் கற்றவர்களின் உதவியுடன் வாசித்தல் நல்லது.
 
أَيْنَ ظَرْفٌ، يُسئل به عن المكان، أَيْنَ يُوْسُف، ويَتَضَمَّنُ معنى الشّرط، فَيَجْزِمُ فِعْلَيْنِ، مُلحقًا بِمَا أو غير مُلْحَقٍ بها، أَيْنَ أو أينما تَجْلِسْ أَجْلِسْ،
இது ஓர் இடம் பற்றிக் கேட்கப்படுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு “ளர்ப்” ஆகும். உதாரணமாக யூஸுப் எங்கே? என்பது போன்று. அதேநேரம் أَيْنَ என்ற இச் சொல்லுக்கு “ஷர்த்” உடைய பொருளும் உண்டு. இப் பொருளில் அது வருமாயின் அதற்குப் பின்னால் வருகின்ற இரண்டு “பிஅல்”களுக்கு அது “ஜஸ்ம்” செய்யும். அச் சொல் அவ்வேளை “மா” என்ற சொல்லுடன் இணைந்தும் வரும். இணையாமலும் வரும். முந்தினதற்கு உதாரணம் أَيْنَمَا تَجْلِسْ أَجْلِسْ என்பது போன்றும். பிந்தினதற்கு உதாரணம் أَيْنَ تَجْلِسْ أَجْلِسْ என்பது போன்றுமாகும். இச் சொல்லுக்கு எங்கு, எவ்விடத்தில் என்று பொருள் வரும்.
 
تُوَلُّوْا
என்றால் நோக்கினால், பார்த்தால் என்று பொருள் வரும். இதன் படி நீங்கள் எங்கு பார்த்தாலும் – மண்ணைப் பார்த்தாலும், விண்ணைப் பார்த்தாலும், மலையைப் பார்த்தாலும், அலையைப் பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு.
 
فَثَمَّ
என்ற சொல்லில் “பேF”| என்று ஓர் எழுத்து வந்துள்ளது. இவ் எழுத்து أَيْنَمَا تُوَلُّوْا என்று முன்னால் வந்த வசனத்திற்குப் பதிலாக – விடையாக அமைந்துள்ளது. இதையடுத்து வந்துள்ள ثَمَّ என்ற சொல்
اسم يشار به إلى البعيد بمعنى هُناك، ثَمَّ وثَمَّةَ،
ثَمَّ
என்ற இச் சொல் தூர இடத்தைச் சுட்டிக் காட்டுகின்ற “இஸ்மு இஷாறா” எனப்படும். இதற்கு هُنَاكَ அங்கே என்ற பொருள் உண்டு. இச் சொல் ثَمَّ என்று வருவது போல் ثَمَّةَ என்றும் சொல்ல முடியும். எவ்வாறு சொன்னாலும் பொருள் ஒன்றுதான். (இத்துடன் மொழியாக்கத்தோடு தொடர்புள்ள விபரம் நிறைவு பெற்றது)
 
وَجْهُ اللهِ
இதற்கு அல்லாஹ்வின் முகம் என்று சொல்லர்த்தம் வரும். “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு சிறியவர், பெரியவர் அனைவரும் அறிந்த பொருள் “முகம்” என்பதேயாகும். இதற்கு வேறு பொருள்களும் உண்டு. அவை இங்கு தேவையற்றவை.
 
நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு என்று அல்லாஹ்வே சொல்லியுள்ளதால் இதை நம்புவது அவசியமாகிவிட்டது. “முகம்” என்பது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புக்களைக் குறிக்கும் ஒரு சொல். அல்லாஹ்வின் விடயத்தில் கண், மூக்கு, வாய் முதலானவற்றை உள்வாங்கிய ஒரு பகுதியென்று பொருள் கொள்வது கூடாது. “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு முகம் என்று தமிழில் பொருள் சொல்லிக் கொண்டாலும் கூட மேலே சொன்ன உறுப்புக்களை உள் வாங்கிய ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் விடயத்தில் விளங்கிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு விளங்குதல் “ஈமான்” விசுவாசத்திற்குப் பிழையாகும்.
 
வஹ்ஹாபிஸக் கொள்கையுடையோர் “அல்லாஹ்வின் முகம்” என்றுதான் பொருள் கொள்வார்கள். அந்த முகம் சடமுள்ளதா என்று அவர்களிடம் கேட்டால் ஆம், என்றுதான் சொல்வார்கள். அல்லாஹ்வுக்கு கை உள்ளதா? என்றும், கால் உள்ளதா? என்றும் கேட்டால் ஆம் என்றுதான் சொல்வார்கள்.
 
ஏனெனில் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ள அனைவரும் مُجَسِّمَةْ – “முஜஸ்ஸிமா”க்களேயாவர். அதாவது அல்லாஹ்வுக்கு சடமுண்டு என்று நம்பிய சட வாதிகளேயாவர். சடவாதிகள் யாவரும் அல்லாஹ்வை சடத்தில் கட்டுப்படுத்திய யாவரும், காபிர்கள், நரகவாதிகள் என்பதே “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளான இமாம்களின் முடிவாகும்.
 
உலகில் வாழும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகள் அனைவராலும் “அகீதாவின் இமாம்” கொள்கையின் இமாம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களின் கொள்கையும் “முஜஸ்ஸிமா”க்கள் அனைவரும் காபிர்கள் என்பதேயாகும்.
 
இந்த விபரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மகா தலைவர் தம்பி ரிஸ்வீ அவர்களுக்கும், அவரின் கட்டளைக்குத் தலை குனியும் “முப்தீ”களுக்கும் தெரிந்த விடயமாயிருக்கும் நிலையில் இவர்கள் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ளவர்களிற் பலரைத் தமது அமைப்பின் அங்கத்தவர்களாக வைத்துக் கொண்டிருப்பதும், இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களில் வஹ்ஹாபிஸ அமைப்புக்களையும், வஹ்ஹாபிகளுக்கு முட்டுக் கொடுக்கும் “தப்லீக்” அமைப்பையும், மற்றும் இதே கொள்கையுள்ள “ஜமாஅதே இஸ்லாமீ” அமைப்பையும் இஸ்லாமிய சரியான கொள்கையுள்ள அமைப்புக்கள் என்றும் அறிக்கை விட்டதும், இதுவரை அவர்களை அணைத்து மடி மீது வைத்துக் கொண்டிருப்பதும் எந்த வகையில் நியாயமானதாகும்?
 
கேள்வியும், பதிலும்:
அல்லாஹ் திருக்குர்ஆனில் وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ اللَّهُ “நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான்” என்று சொல்லியிருந்தால் விடயம் தெளிவாகியிருக்கும் நிலையில் فَثَمَّ وَجْهُ اللَّهِ “அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு” என்று ஏன் சொன்னான்?
 
பதில்:
திருக்குர்ஆன் அறபு மொழியின் உச்சக்கட்ட நாகரிக நடையில் அருளப்பட்டதாகும். “பஸாஹத்”, “பலாஙத்” நிறைந்த பொக்கிஷமாகும். அல்லாஹ் மிக நாகரிக மொழி நடையிலேயே இத்திரு வசனத்தை அருளியுள்ளான். فَثَمَّ اللهُ அங்கே அல்லாஹ் உள்ளான் என்று கூறுவதற்கும், فَثَمَّ وَجْهُ اللهِ அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்று கூறவதற்கும் நாகரிகத்தில் சிறந்த நடை “அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு” என்பதேயாகும்.
 
“பஸாஹா”, “பலாஙா” மொழி நாகரிகம் பற்றிப் பேசும் கலையில் இரண்டு அம்சங்கள் கூறப்படுகின்றன. ஒன்று إِطْلَاقُ الْجُزْءِ وَإِرَادَةُ الْكُلِّ என்றும், மற்றது إِطْلَاقُ الْكُلِّ وَإِرَادَةُ الْجُزْءِ என்றும் சொல்லப்படும்.
 
முந்தின அம்சம் என்னவெனில் ஒரு பகுதியைக் கூறி அதன் தொகுதியைக் கருத்திற் கொள்வதாகும். இது ஒரு பொது விதி போன்றது. இதை புத்திக்கேற்ற உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன்.
 
ஓர் ஊரில் முனாஸ் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அவன் தொழில் செய்வதில்லை. கடன் வாங்கியே காலத்தைக் கடத்தி வந்தான். கடன் காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் எவருக்கும் தெரியாமல் இரவோடிரவாக ஊரை விட்டும் ஓடிவிட்டான். காலையில் முனாஸைக் காணவில்லை என்ற செய்தி ஊரெல்லாம் பரவலாகியது. ஊர் மக்களிற் சிலர் முனாஸ் ஓடிவிட்டான் என்றார்கள். இன்னும் சிலர் “முனாஸ் தலைமறைவு” என்றார்கள். பத்தரிகையிலும் செய்தி வெளியாகியது.
இவ் உதாரணத்தை வாசிக்கின்ற வாசகர்களே! முனாஸ் ஓடிவிட்டான் என்று சொல்வதிலும், முனாஸ் தலைமறைவு என்று சொல்வதிலும் நாகரிகமானதும், கருத்தாழமுள்ளதும் எது என்று உங்களைக் கேட்கிறேன். நீங்கள் எவ்வாறு பதில் சொன்னாலும் எனது கருத்தும், அபிப்பிராயமும் “முனாஸ் தலை மறைவு” என்பதே பொருத்தமானதும், கருத்தாழமுள்ளதும், கவர்ச்சியானதும் என்பதாகும்.
“முனாஸ் தலை மறைவு” என்றால் அவன் ஆள் இல்லை என்பதே அதன் கருத்தேயன்றி அவனின் தலை மட்டும் மறைந்து விட்டது, அவனின் உடல் ஊரில் கிடக்கின்றது என்பது கருத்தல்ல. மாறாக அவனே இல்லை என்பதே இதன் கருத்தாகும்.
தலை என்பது பகுதி என்றும், முனாஸின் உடல் தொகுதியென்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். இதுவே பகுதியைக் கூறி தொகுதியை கருத்திற் கொள்ளல் என்று சொல்லப்படும்.
 
இந்த நாகரிக வசன அடிப்படையிலேயே மேற்கண்ட வசனத்தில் فَثَمَّ وَجْهُ اللهِ “அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு” என்று அல்லாஹ் சொல்லியுள்ளான்.
அதாவது “முகம்” என்பது அல்லாஹ்வின் “தாத்” – “வுஜூத்” உள்ளமையின் பகுதியாகும். அவனின் உள்ளமையை – தாத்தை தொகுதியாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கப்படுத்துவது விடயத்தை (திரு வசனத்தில் கூறப்பட்ட “வஜ்ஹ்” என்பது கொண்டு நாடப்பட்டது அவனேதான் என்பதைப்) புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேயன்றி அல்லாஹ்வுடைய “தாத்”தில் தொகுதி, பகுதி என்பது கிடையாது. இவ்வாறு நம்புதல் சடவாதிகளான வஹ்ஹாபீகளின் கொள்கையாகும்.
 
இவ் உதாரணம் போன்றதே காத்தான்குடியிலுள்ள முசம்மில் என்பவர் தனது பக்கத்து ஊரில் வசிக்கும் தனது நண்பனிடம் நீ காத்தான்குடிக்கு வந்தால் உன் முகத்தையாவது காட்டிச் செல் என்று சொல்வதுமாகும்.
எனவே, நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான், அவனின் “வுஜூத்” எனும் உள்ளமைதான் உள்ளது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
إِطْلَاقُ الْكُلِّ وَإِرَادَةُ الْجُزْءِ
என்பது மற்ற அம்சமாகும். அதாவது தொகுதியைக் கூறி பகுதியை கருத்திற் கொள்வதாகும். இதையும் ஓர் உதாரணம் மூலம் தெளிவு செய்கிறேன்.
றபீக் என்பவனுக்கு மூக்கில் சிறிய காயம். அவனைப் பற்றிப் பேசும் போது “றபீக் உடம்பு சரியில்லாமல் வீட்டிலேயே உள்ளான்” என்று சொல்வது போன்று. அல்லது றபீக் சுகவீனம் காரணமாக வெளியே வரவில்லை என்று சொல்வது போன்று.
மேற்கண்ட உதாரணத்தில் றபீக் என்பவனுக்கு மூக்கில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்தாலும் கூட அவன் பற்றிப் பேசும் போது “றபீக் உடம்பு சரியில்லாமல் உள்ளான்”, “றபீக் சுகவீனமாக உள்ளான்” என்றே பேசப்படுகிறது. இது நடைமுறையில் உள்ளதே!
 
“றபீக்” இன் மூக்கு என்பது அவனின் உடலின் ஒரு பகுதிதான். ஆயினும் “றபீக்” எனும் பெயர் அவனின் மூக்கு உள்ளிட்ட அவனின் ஏனைய உறுப்புக்களையும் உள்வாங்கிய முழு உடலுக்குமுள்ளதே. அவனின் முழு உடலும் தொகுதி என்றும், அவனின் மூக்கு அதன் ஒரு பகுதி என்றும் இருப்பதால் இத் தொகுதியைக் கூறி அதன் பகுதியைக் கருத்திற் கொள்வதென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவனின் பெயர் “ரிஸ்வான்”. இது அவனின் தலை உச்சியிலிருந்து காற் பாதம் வரையிலான முழு உடலுக்குமுரிய பெயரேயன்றி அவனின் உடலுறுப்புக்களில் குறிப்பான ஒன்றுக்கு மட்டுமுள்ள பெயரல்ல. ஒருவன் தனது விரலால் ரிஸ்வானின் உடலில் எந்த உறுப்பைத் தொட்டாலும் அவன் ரிஸ்வானைத் தொட்டவன்தான்.
இவ் உதாரணமும் முந்தின உதாரணம் போல தொகுதியைக் கூறி பகுதியை கருத்திற் கொள்ளப்பட்டதாகும்.
 
மேற்கண்ட இச் சிறிய விளக்கம் فَثَمَّ اللهُ அங்கே அல்லாஹ் உள்ளான் என்று அவன் சொல்லாமல் فَثَمَّ وَجْهُ اللهِ அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்று ஏன் சொன்னான் என்ற கேள்விக்கு பொருத்தமான விடையாகும்.
 
وَللهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللَّهِ
என்ற தலைப்பிற்குரிய இவ் வசனத்தின் விளக்கம் யாவும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலமும், நபீகளார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் இறையருள் மொழிகளின் மூலமும், மற்றும் குத்புமார், வலீமார், ஸூபீ மகான்கள் முதலானோரின் அறபு மொழி நூல்களின் மூலமும், மற்றும் நான் உயிருடன் நேரில் தரிசித்த மகான்களின் மூலமும் பெற்ற ஞானமும், நான் அறிந்து கொண்ட விளக்கமுமாகும்.
 
உலமாஉகளின் ‘முர்தத் பத்வா’ அவர்களின் முகங்களில் தூக்கியெறியப்பட வேண்டியதேயாகும்.
 
இதனால்தான் அவர்களின் “பத்வா”வை பிரேதம் வைக்கும் “ஸுன்தூக்” “சந்தூக்”கில் வைத்து பல்லாயிரம் மக்கள் புடை சூழ, “ஷஹாதத்” கலிமா முழக்கத்துடன் காத்தான்குடி நகரை வலம் வந்து “குட்வின்” சந்தி என்று சொல்லப்படுகின்ற “நாற் சந்தியில்” போட்டு மக்கள் எரித்துச் சாம்பலாக்கினர். இது 1980ம் ஆண்டளவில் பட்டப் பகலில் நடந்த சம்பவமாகும். இந் நிகழ்வை 1965ம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களுக்கு ஓரளவும், அதற்கு முன் பிறந்தவர்களுக்கு நன்றாகவும் தெரியும்.
இவ்வாறு நடந்து சுமார் 46 ஆண்டுகள் நடந்தும் கூட ரோஷம், சூடு, சொரணை இல்லாமல் இன்று வரை அந்த குருட்டு பத்வாவை உலமா சபை அமுல் செய்து கொண்டிருப்பது உலமாஉகளின் வஞ்சகத்தையும், கர்வத்தையுமே எடுத்துக் காட்டுகிறது.
 
ஜனநாயக நாடான இவ் இலங்கைத் திரு நாட்டில் மனித உரிமை மீறல்கள், மத உரிமைகள் மீறல்கள், எழுத்துரிமை, பேச்சுரிமை, மற்றும் உரிமைகள் மீறப்பட்டும், பறிக்கப்பட்டும் 43 ஆண்டுகள் கடந்தும் கூட உலமா சபையின் அநியாயமான தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் அமைச்சர்களிலோ, எம். பீக்களிலோ ஒருவர் கூட குரல் கொடுக்காமல் இருந்து வருவது வேதனைக்கும், அல்லாஹ்வின் சோதனைக்கும் உரியதாகும்.
 
உலமா சபைக்கு அத்திவாரமிட்ட அக்கால உலமாஉகளுக்கும், இன்று உலமா சபையை நடத்திக் கொண்டிருக்கின்ற உலமாஉகளுக்கும் வித்தியாசமுண்டு. அவர்களோ عِبَادُ الرَّحْمنِ “றஹ்மான்” ஆகிய அல்லாஹ்வின் அடிமைகளாக இருந்தார்கள். இவர்களோ عِبَادُ الشَّيْطَانْ ஷாத்தான்களின் அடிமைகளாயிருக்கின்றார்கள்.
உருவமற்ற பொறாமைக்கும், உருவமற்ற வஞ்சகத்திற்கும் இக்காலத்தில் உருவங்களாக இருப்பவர்கள் தம்பி ரிஸ்வியும், இவரின் ஆதரவாளர்களுமேயாவர்.
இவர்கள் உடனடியாக மனித உரிமை மீறல் அடிப்படையில் ஸூபிஸ சமூகத்தை மதம் மாற்றி “முர்தத்” என்று வழங்கிய குருட்டு பத்வாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இன்றேல் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட உலமாஉகளும், பல்லாயிரம் முஸ்லிம் பொது மக்களும் வீதியில் இறங்க வேண்டிய நிலை ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.
 
“பத்வா” தொடர்பான இருட்டடிப்பும், பொய் புரட்டுக்களும், முப்தி நாயகம் வட்டிலப்பம் எடுத்துச் சென்ற வரலாறும், பௌத மதச் சகோதரர்களின் “வெசக்” தினத்தின் போது கையில் “வெசக்” விளக்கேந்தி பக்திப் பரவசத்தோடு நின்ற இலங்கை நாட்டின் தலைமை முப்தியின் வண்டவாளங்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கிய தலைமை முப்தீயின் “எரிக்கப்பட்டவர்களின் சாம்பலையாவது தாருங்கள்” என்று அரசிடம் கேட்டதன் மூலம் ஜனாசா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய தலைமை நாயகம் தம்பி ரிஸ்வி அவர்களின் வண்டவாளங்களும் மிக விரைவில் சாலைகளில் பிரஸ்தாபிக்கப்படலாம். சாம்பல் தாருங்கள் என்ற தலைவரின் பேச்சு எரியுங்கள் என்பதற்கு அவர் வழங்கிய அனுமதியேயாகும். ஏனெனில் எரிக்காமல் சாம்பல் எடுக்க முடியாதல்லவா?
 
எமது அடுத்த தொடர், “உள்ளங்கையால் சூரியனை மறைக்க முடியாது. அவ்வாறு மறைக்கலாம் என்று நினைப்பவனும், அதற்காக நடவடிக்கை எடுப்பவனும் அங்கோடை செல்ல வேண்டியவர்களேயாவர்” என்ற தொடரேயாகும்.
நாம் வாழும் இப்பூமியை விட 109 மடங்கு பெரிதாயுள்ள, 1.39 மில்லியன் கிலோமீற்றர்கள் விட்டத்தைக் கொண்ட, பூமியை விட 330,000 மடங்கு அதிகமான நிறையுடைய சூரியனை உள்ளங்கையால் மறைக்க நினைப்பவன் போன்ற முழு மடையன்தான் ஸூபிஸ ஞானத்தை – எல்லாம் அவனே என்ற “வஹ்ததுல் வுஜூத்” இறை தத்துவத்தை மறுக்க முற்படுபவனாவான்.
அன்பான வேண்டுகோள்!
 
இக் கட்டுரையையும், இதன் பிறகு நான் எழுதும் கட்டுரைகளையும் விரும்பி வாசிக்கும் ஆதரவாளர்கள், மற்றும் நீதியாளர்கள் பிறரும் அறிந்து கொள்ளும் வகையில் “ஷெயார்” share செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முக்கிய குறிப்பு: “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஆதரித்து நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியாகும் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments