Friday, May 17, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஜனநாயக நாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அட்டூழியம்! தலைப்பே புரியாமல் “பத்வா” வழங்கிய தலையில்லா...

ஜனநாயக நாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அட்டூழியம்! தலைப்பே புரியாமல் “பத்வா” வழங்கிய தலையில்லா முப்தீகள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
நான் பேசிய கருத்துக்கள் யாவும் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களாகும்.
 
தலைப்பை “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையென்று தவறாக விளங்கிய முல்லாக்கள் புலி வாலைப் பிடித்தவன் போல் தப்பித்துக் கொள்ள வழியின்றி தடுமாறி நிற்கிறார்கள். தாம் செய்தது தவறென்று புரிந்த பின்னும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று குரங்குப் பிடி பிடித்து நிற்கிறார்கள். தவறைத் தவறென்று ஏற்றுக் கொள்வதே ஓர் அறிஞனின் பண்பும், பெருந்தன்மையுமாகும். இவர்களோ தமது தவறை அறிந்த பின்னும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல் உடும்புப் பிடியில் நிற்பது இவர்களின் மன முரண்டேயாகும். மன முரண்டுள்ளவன் மார்க்கவாதியாக இருக்கமாட்டான். அவனுக்கு மருந்தும் கிடையாது.

தம்பி ரிஸ்வி அவர்கள் மனமுரண்டுள்ளவர் என்பதற்கு எவராலும் மறுக்க முடியாத ஆதாரம் என்னவெனில் அவர் காத்தான்குடிக்கு வந்து அவரின் நண்பர்களான வஹ்ஹாபீகளுடன் கலந்துரையாடி விட்டு வெளியேறிச் செல்கையில் “உலமா சபை வழங்கிய “பத்வா”க்களில் ஒன்றைக் கூட அது வாபஸ் பெற்றதற்கு வரலாறே கிடையாது” என்று அவர் தன் நெஞ்சில் கையால் அடித்துக் கூறியதாகும். இச்செயல் அவரின் ஆணவத்தையும், அதிகார வெறியையும் காட்டுவது அறிவுள்ளவர்களுக்கு மறையாது.
 
அல்லாஹ் திருக்குர்ஆனில்,
مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால், அல்லது அதை நாம் மறக்கச் செய்து விட்டால் அதை விடச் சிறந்ததை அல்லது அது போன்றதை நாம் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு வஸ்தின் மீதும் மிக்க ஆற்றலுடையோன் என்பதை நீங்கள் அறியவில்லையா? (திருக்குர்ஆன் 02-106)
 
மேற்கண்ட வசனத்தின் சுருக்கம் என்னவெனில், அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு விடயத்தைச் செய்யுமாறு கட்டளையிட்ட பின் அவர்கள் மீது கொண்ட கருணையின் காரணத்தால் முதலில் சொன்னதை – கட்டளையிட்டதை மாற்றி – அதை வாபஸ் பெற்று அதை விட இலகுவான அல்லது அதை விட நன்மை தரக் கூடிய வேறொன்றைச் சொல்வான். இது அல்லாஹ்வின் பெருந்தன்மையாகும்.
ஆயினும் தம்பி ரிஸ்வி அவர்களோ “பனா” நிலை கடந்து அதற்கப்பாலும் சென்று விட்டாரோ என்னவோ தெரியவில்லை. உலமா சபை கொடுத்த “பத்வா”வை அது வாபஸ் பெற்றதற்கு வரலாறே கிடையாது என்று நெஞ்சில் கையாலடித்துக் கூறியுள்ளார்.
 
இதன் மூலம் இவர் அல்லாஹ்வை மிஞ்சிய, அவனை வென்ற அறிவு மலையாகிவிட்டார் போலும். அல்லாஹு அக்பர். இவ்வாறு சொல்பவர் ஓர் அறிஞனாக இருப்பாரா? என்று எண்ணத் தோணுகிறது. ஓர் அறிஞனாக இருப்பதற்கே தகுதியற்ற ஒருவர் ஒரு நாட்டின் “முப்தீ”யாக இருப்பது எவ்வாறு? என்ற கேள்வியும் பிறக்கிறது.
சட்ட மேதை இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் உள்ளிட்ட இமாம்களிற் பலர் முதலில் தமக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தைச் சொல்வார்கள். பின்னர் அதற்கு மாற்றமான வேறு ஆதாரங்கள் கிடைத்தால் முதலில் சொன்னதற்கு மாறாக வேறொரு சட்டம் சொல்வார்கள்.
அவர்கள் முன்னர் சொன்னது قول قديم – பழைய சொல் என்றும், பின்னர் சொன்னது قول جديد – புதிய சொல் என்றும் சட்ட மேதைகள் கூறுவர். இவ்விபரம் “பிக்ஹ்” எனும் சட்டக் கலையில் கூறப்பட்டுள்ளது.
 
இவ்விபரம் கூடத் தெரியாத ஒருவர் இலங்கையின் உலமா சபையின் தேசிய தலைவராக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவர்தான் தனது நெஞ்சில் அடித்து மேற்கண்டவாறு சொன்னவர் என்பதை பொது மக்கள் அறிந்து இவர் யாரென்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த தலைப்பை பதிவு செய்கிறேன்.
 
فِقْهْ
பிக்ஹ்” எனும் சட்டக்கலை அறிவற்ற மூடர்கள்.
سُئل الإمام محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أُوّل فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ اهـ،
(اليواقيت والجواهر، ج 1، ص 😎
இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
(அவர்கள் வாழ்ந்து மறைந்த ஒரு சமூகம். எங்களின் கடமை என்னவெனில், அதாவது “அக்ல்” புத்தியுள்ள ஒவ்வொருவனும் அல்லாஹ்வின் அவ்லியாஉகளில் எவர் மீதும் கெட்டெண்ணம் கொள்வது “ஹறாம்” விலக்கப்பட்டதாகும். இன்னும் யாராவதொருவன் அந்த மகான்களின் ஆன்மிகப் படித்தரத்தை அடையாதிருக்கும் வரை அவர்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை வைத்துப் பொருள் கொள்ளுதல் அவனின் கடமையாகும். இவ்வாறு அவர்களின் பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை வைத்து நோக்கும் நற்பாக்கியம் அல்லாஹ்வின் நல்லணுகூலம் உள்ளவனுக்கு மட்டுமே கிடைக்கும். மற்றவர்களுக்கு இப்படியொரு நல்லெண்ணம் ஏற்படமாட்டாது.
 
இமாம் நவவீ மேலும் “ஷர்ஹுல் முஹத்தப்” எனும் நூலில், அவர்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் யாராவது “தஃவீல்” வலிந்துரை வைப்பதாயினும் 70 வகையிலேனும் வலிந்துரை வைக்க வேண்டுமேயன்றி ஒரேயொரு வலிந்துரையோடு மட்டும் நின்று விடுதல் கூடாது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவ்வாறு சொல்வது மன முரண்டேயாகும்)
ஆதாரம்: அல்யவாகீத் வல் ஜவாஹிர்,
முதலாம் பாகம், பக்கம்: 08,
ஆசிரியர்: இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ
 
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சட்ட மேதைகளில் ஒருவர் மட்டுமன்றி அவர்களில் முதன்மையானவர்களுமாவார்கள்.
 
இவர்கள் ஹிஜ்ரீ 631 முஹர்ரம் மாதம் நடுப்பத்தில் “நவா” எனும் ஊரில் பிறந்தார்கள். இவ் ஊர் சிரியாவின் தலை நகர் “டமஸ்கஸ்” இல் இருந்து சுமார் 83 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஓர் ஊராகும். ஹிஜ்ரீ 676 றஜப் மாதம் பிறை 24 புதன் கிழமை “வபாத்” மறைந்தார்கள். றஹிமஹுல்லாஹ்!
இவர்கள் “ஷாபிஈ மத்ஹப்” சட்டக் கலை மேதைகளில் முன்னுரிமை வழங்கப்பட்டவராவார்கள். எந்த ஒரு விடயத்திலாவது இவர்கள் ஒரு கருத்தும், ஏனையோர் இன்னொரு கருத்தும் சொல்வார்களாயின் இவரின் சொல்லுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
 
இந்த மகான் கூறும் கருத்து என்னவெனில் ஒருவன் புத்தியுள்ளவனாயின் அல்லாஹ்வின் வலீமார் மீது கெட்டெண்ணம் கொள்வது “ஹறாம்” ஆகும் என்பதாகும். இமாம் அவர்கள் “ஹறாம்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது எவரின் சிந்தனையைத் தூண்டாவிட்டாலும் குறிப்பாக “முப்தீ” “பத்வா” வழங்குபவர்களின் சிந்தனையைத் தூண்ட வேண்டும். அவர்களின் சொற்களிலோ, செயல்களிலோ தவறான எண்ணம் கொள்ளக் கூடாது.
 
உதாரணமாக ஒருவர் மக்கள் மத்தியில் “வலீ” என்று பிரசித்தி பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காலையும், மாலையும், இரவும், பகலும் மக்கள் அவரைக் கொண்டு அருள் பெற்று வருகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இத்தகைய ஒருவர் ஏதோ ஒரு பாவச் செயல் செய்ததாக கேள்விப் பட்டால் கேள்விப்பட்ட செய்தியை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவர் மீது தப்பெண்ணம் கொள்ளக் கூடாது.
 
ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم،
இதற்கு மாறாக அவர்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை வைத்து அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வது கடமையாகும். இது அவர்களின் ஆன்மிப் படித்தரங்களை அடையாதவர்களுக்குரிய சட்டமாகும். அவர்களின் ஆன்மிகப் படித்தரத்தை அடைந்தவன் வலிந்துரை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவனுக்கு எல்லாம் தெரியும். உள்ரங்கமும் தெரியும், வெளிரங்கமும் தெரியும்.
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வலீமாரின் சொற், செயல்களுக்கு வலிந்துரை கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டுமேயன்றி உலமாஉகள் செய்தது போல் அவர்களைக் குற்றவாளியாக்கி இழிவு படுத்திவிட நினைக்கவும் கூடாது.
 
அவர்களின் சொற், செயல்களுக்கு வலிந்துரை வைப்பதாயினும் அவர்களை தவறிலிருந்து காப்பாற்றுவதற்காக 70 வலிந்துரைகளேனும் வைத்து காப்பாற்ற வேண்டும்.
 
இமாம் மன்சூர் ஹல்லாஜ் அவர்கள் أَنَا الْحَقُّ “நானே மெய்ப் பொருள்” என்று, அதாவது நானே அல்லாஹ் என்று சொன்னதற்காக அவரின் குறித்த பேச்சுக்கு வலிந்துரை கொண்டு அவர்களைக் காப்பாற்ற நினைக்காமல் அவருக்கு “குப்ர்”, “முர்தத் பத்வா” கொடுத்து தீர்ப்பளித்தார்கள் அக்கால உலமாஉகள். அவர்கள் ஹல்லாஜ் அவர்களின் “அனல் ஹக்” என்ற வசனத்துக்கு வலிந்துரை வைத்திருந்தார்களாயின் இறைஞானி ஹல்லாஜ் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். வலிந்துரை கொடுக்காமல் “பத்வா”வில் இருட்டடிப்புச் செய்ததால் “குத்புஸ்ஸமான்” காலத்தின் “குத்பு” ஆகிய ஒருவரைக் கொன்ற பாவிகளாகிவிட்டனர். இது பொறாமை கொண்ட உலமாஉகளின் சதியேயாகும்.
 
இது தொடர்பாக இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
قد اضطرب الناسُ فى أمر قتل الإمام منصور الحلّاج اضطرابا كبيرا مُتَبائِنا، فمنهم مَن يُعظّمُه، ومنهم مَن يكفِّرُه، وقد ذكر الإمام قطبُ الوجود حُجّة الإسلام فى كتاب ‘مشكاة الأنوار ‘ فصلا مطوّلا فى أمره واعتَذر عن إطلاقاته كقوله أنا الحقّ وما فى الجبّة إلا الله وحَمَلَها على مَحامِلَ حسنةٍ، وقال هذا مِن فَرَطِ المحبّة وشِدّةِ الوجد، وهو مثل قول القائل،
أنا من أهوى ومن أهوى أنا – فإذا أبصرتَه أَبْصَرْتَنَا
وحسبُك هذا مِدحةً وتزكيةً، وكان ابنُ شُريحٍ إذا سُئل عنه يقول ‘هذا رجلٌ قد خفِيَ عليَّ حالُه وما أقولُ فيه، وهذا شبيهٌ بقول عُمَرَ بنِ عبد العزيز رحمه الله تعالى وقد سُئل عن عليّ ومعاوية رضي الله عنهما فقال: دماءٌ طهّر اللهُ منها سُيوفَنا، أفلا نُطهِّرُ من الخوض فيهم ألسنَتَنَا، وهكذا ينبغي لِمن يخافُ اللهَ أن لا يُكفِّرَ أحدا مِن أهل القبلة بكلامٍ يصدر عنه يَحتَمِل التأويلَ على الحقّ والباطل، فإنّ الإخراجَ من الإسلام عظيمٌ، ولا يُسارع به إلّا جاهلٌ،
ويُحكى عن شيخ العارفين قطب الزّمان عبد القادر الكيلاني قدّس الله سرّه أنّه قال عثُر الحلّاج، ولم يكن له من يأخذ بيده، ولو أدركتُ زمانَه لأخذتُ بيدِه، وهذا وما سَبَقَ عن الإمام الغزّالي فى أمره كافٍ لِمَن له أدنى فهمٍ وبصيرةٍ،
(حياة الحيوان، ج 1، ص – 246، للإمام الشّيخ كمال الدين الدميري)
இமாம் மன்சூர் ஹல்லாஜ் அவர்களின் கொலை தொடர்பாக பொது மக்கள் பல்வேறு கருத்துக்கள் உள்ளவர்களாக உள்ளனர். சிலர் அவர்களை கண்ணியம் செய்கிறார்கள். இன்னும் சிலர் “காபிர்” என்று சொல்கிறார்கள்.
 
அல் இமாம் குத்புல் வுஜூத், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “மிஷ்காதுல் அன்வார்” எனும் நூலில் இது தொடர்பாக விரிவான விளக்கம் எழுதியுள்ளார்கள். மேலும் இமாம் ஹல்லாஜ் அவர்களின் “நானே மெய்ப் பொருள்” – “நானே அல்லாஹ்”, “ஜுப்பா” சட்டையில் அல்லாஹ்தான் உள்ளான் என்பன போன்ற அவர்களின் பேச்சுகளுக்காக மன்னிப்புக் கேட்டதுடன் அவர்களின் பேச்சுகளுக்கு விளக்கம் கூறி இவ்வாறான பேச்சு இறை காதலின் உச்சக் கட்டத்தில் வெளியாகும் பேச்சுக்கள் என்றும் சொல்லியுள்ளார்கள்.
இதற்கு சான்றாக பொருள் பொருந்தாத அவர்களின் பாடல் ஒன்றையும் எழுதிக் காட்டியுள்ளார்கள்.
 
இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் மேற் கூறிய வசனம் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்பதையும், அவர்களின் புகழையுமே எடுத்துக் காட்டுகிறது.
 
அறிஞர் அல்லாமா ஷுறைஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் யாராவது இமாம் ஹல்லாஜ் அவர்கள் பற்றிக் கேட்டால் அவர்களின் நிலை எனக்குப் புரியாது. ஆகையால் அவர்கள் தொடர்பாக நான் எதுவும் சொல்லமாட்டேன் என்று சொல்வார்கள்.
 
இவர்கள் இவ்வாறு சொல்வது, உமர் இப்னு அப்தில் அஸீஸ் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அலீ றழியல்லாஹு அன்ஹு, முஆவியா றழியல்லாஹு அன்ஹு ஆகியோர் பற்றிக் கேட்கப்பட்டால் அவர்கள் கூறும் பதில் போல அமைந்துள்ளது. அவர்கள் பின்வருமாறு சொல்வார்கள்.
 
دماءٌ طهّر اللهُ منها سُيوفَنا، أفلا نُطهِّرُ من الخوض فيهم ألسنَتَنَا،
அலீ, முஆவியா ஆகியோரின் குருதிகளை எங்களின் வாள்களிலிருந்து அல்லாஹ் சுத்தமாக்கிவிட்டான். நாங்கள் அவர்களை தவறாகப் பேசுவதிலிருந்து நமது நாவுகளை நாம் சுத்தமாக்க வேண்டாமா? என்று சொல்வார்கள்.
 
இவ்வசனத்தின் சுருக்கம் என்னவெனில் அலீ றழியல்லாஹு அன்ஹு, முஆவியா றழியல்லாஹு அன்ஹு ஆகியோரை நாம் கொலை செய்து விடாமல் அல்லாஹ் நமது வாள்களைச் சுத்தமாக்கியது போல் நாம் அவர்களைத் தவறாகப் பேசாமல் நமது நாவுகளைச் சுத்தமாக்க வேண்டும் என்பதாகும். அதாவது அவர்களை எக்காரணம் கொண்டும் நாம் காபிர்கள், முர்தத்துகள் என்று சொல்லிவிடக் கூடாது என்பதாகும்.
 
وهكذا ينبغي لِمن يخافُ اللهَ أن لا يُكفِّرَ أحدا مِن أهل القبلة بكلامٍ يصدر عنه يَحتَمِل التأويلَ على الحقّ والباطل، فإنّ الإخراجَ من الإسلام عظيمٌ، ولا يُسارع به إلّا جاهلٌ
இவ்வாறே அல்லாஹ்வை அஞ்சுகின்ற ஒவ்வொருவரும் முஸ்லிம்களில் எவரையும் அவர்களால் ஏற்படுகின்ற சத்தியம், அசத்தியம் இரண்டுக்கும் சாத்தியமான பேச்சுக்கள் கொண்டு “காபிர் – முர்தத்” என்று சொல்லாமல் – “பத்வா” வழங்காமல் இருப்பது அவசியமாகும். ஏனெனில் ஒருவனுக்கு “காபிர்” அல்லது “முர்தத்” என்று “பத்வா” வழங்கி அவனை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியாக்குவது பெரும் பாவமாகும். அவசரப்பட்டு ஒருவன் இவ்வாறு செய்தானாயின் அவன் “ஜாஹில்” மார்க்கம் தெரியாத மடையனேயாவான்.
 
ஆதாரம்: ஹயாதுல் ஹயவான், பாகம் 01, பக்கம்: 246
ஆசிரியர்: அஷ்ஷெய்கு கமாலுத்தீன் தமீரீ
இது தொடர்பாக இமாம் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய கருத்துக்கள் நிறைவு பெற்றன.
 
ويُحكى عن شيخ العارفين قطب الزّمان عبد القادر الكيلاني قدّس الله سرّه….
இறை ஞானிகளின் தலைவர் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
(இமாம் மன்சூர் ஹல்லாஜ் பாதம் சறுகிவிட்டார்கள். அவர்களின் கரம் பற்றிக் காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. நான் அவர்களின் காலத்தில் இருந்திருந்தால் அவரின் கைப் பிடித்து காப்பாற்றியிருப்பேன்)
குத்பு நாயகம் அவர்கள் கூறிய மேற்கண்ட இவ் வசனமும், இதற்கு முன் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் கூறிய வசனங்களும் குறைந்த புத்தி உள்ளவனுக்குக் கூட போதுமானதாகும்.
 
இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களே!
புத்தி ஜீவிகளே! எழுத்தாளர்களே! ஆய்வாளர்களே! அறிஞர்களே!
அரசியல்வாதிகளே! உலமா சபையின் உறுப்பினர்களே! தரீகாக்களின் ஷெய்குமார்களே!
 
நீங்கள் 43 ஆண்டுகளாக இது தொடர்பாக வாய் திறக்கமாலிருப்பதேன்? நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல், “தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் பேசிய என்னையும், நான் கூறிய கருத்துக்களைச் சரி கண்டு ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பல்லாயிரம் மக்களையும் மதம் மாற்றி “பத்வா” வழங்கியிருப்பது போதாதென்று எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் பகிரங்கமாக, எழுத்து மூலம் “பத்வா” வழங்கிய மூடர்களான முல்லாக்களுக்கு அஞ்சிக் கொண்டிருப்பதின் இரகசியம்தான் என்ன? நீங்கள் மரணிக்கமாட்டீர்கள், அல்லாஹ்வின் சமூகம் செல்லமாட்டீர்கள் என்றா எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ளுமாறு உங்களை எச்சரிக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன். அவனே நீதியாளன்!
 
ஜனநாயக நாடான இந் நாட்டில் எமக்கு நீதி கிடைக்கவில்லையானால் ஸூபிஸ சமூகம் தெருவுக்கு வந்து பகிரங்கமாக நீதி கேட்கும்!
 
குறிப்பு: இக்கட்டுரை ஆங்கிலம், சிங்களம் இரு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு அதி மேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளுக்கும், குறிப்பாக பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments