Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உங்களின் “கல்பு” உள்ளம் ஒளிர வேண்டுமா? உங்களின் மூக்கணாங் கயிறை என் கரம் தருவீர்.

உங்களின் “கல்பு” உள்ளம் ஒளிர வேண்டுமா? உங்களின் மூக்கணாங் கயிறை என் கரம் தருவீர்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஹிஜ்ரீ 905ம் ஆண்டு – இற்றைக்கு 539 ஆண்டுகளுக்கு முன் “மிஸ்ர்” நாட்டின் தலை நகர் கெய்ரோவிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற “அல்ஜாமிஉல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தில் ஒரு விவாத மாநாடு நடைபெற்றது. இவ் விவாதத்தின் தலைப்பு “அல்லாஹ் தனது “தாத்” உள்ளமை கொண்டு படைப்புக்களாக வெளியானானா? அல்லது தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டு மட்டும் வெளியானானா? என்பதாகும்.
அஷ்ஷெய்கு இப்றாஹீம் அல்மவாஹிபீ அஷ்ஷாதுலீ என்பவர் அல்லாஹ் தனது “தாத்” உள்ளமை கொண்டும், தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டுமே படைப்புக்களாக வெளியானான் என்று வாதிட்டார்.

அஷ்ஷெய்கு பத்றுத்தீன் அல் அலாயீ அல் ஹனபீ, அஷ்ஷெய்கு சகரிய்யா, அஷ்ஷெய்கு புர்ஹானுத்தீன், மற்றும் சிலரும் அல்லாஹ் தனது உள்ளமை கொண்டு வெளியாகாமல் தனது தன்மைகள் கொண்டு மட்டுமே வெளியானான் என்று வாதிட்டனர்.
 
இவ்விவாதத்தின் போது வாதி, பிரதிவாதிகளின் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களும், ஏனைய விபரங்களும் மூன்று நாட்களில் நான் பதிவிடவுள்ள கட்டுரையில் கூறப்படவுள்ளன. அதை வாசித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
இரு தரப்பினருக்குமிடையில் விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அங்கு எதிர்பாராமல் சமுகம் தந்த இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஞானாசிரியர் அஷ்ஷெய்கு அல்ஆரிப் பில்லாஹ் அஸ்ஸெய்யித் முஹம்மத் அல் மக்ரிபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இரு தரப்பினருக்கும் ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அவ்விளக்கமும் நான் பதிவிடவுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. அதையும் வாசித்துக் கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
 
இரு தரப்பினருக்கும் விளக்கம் கொடுத்து விவாதத்தை முடித்து வைத்த மகான் அவர்கள் அங்கு கூடியிருந்தவர்களுக்கு இறுதியாக ஓர் உரை நிகழ்த்தினார்கள். அவ் உரையை மட்டும் இக்கட்டுரையில் எழுதுகிறேன்.
 
إن أراد أحدٌ أن يعرف هذه المسئلة ذوقًا فليسلِّم قياده لي، أخرجْهُ عن وظائفه وثِيابِه وما له وأولاده، وادخِلْهُ الخلوة وأمنعه النوم وأكل الشّهوات، وأنا أضمن له وُصولَه إلى علم هذه المسئلة ذوقا وكشفا،
قال الشّيخ إبراهيم فما تجرَّأَ أحدٌ أن يدخل معه فى ذلك العهد، ثمّ قامَ الشّيخ زكريا والشّيخ برهان الدّين والجماعة، فقبّلو يده وانصرفوا،
மேற்கண்ட வசனங்கள் யாவும் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஆன்மிக குரு அஸ்ஸெய்யித் முஹம்மத் அல்மக்ரிபீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரியவையாகும். எனது வசனங்களல்ல.
 
பொருள்:
உங்களில் யாராவது இவ்விடயத்தை – அதாவது அல்லாஹ் தனது “தாத்” உள்ளமை கொண்டு வெளியாகியுள்ளானா? அல்லது “ஸிபாத்” எனும் தன்மைகள் கொண்டு வெளியாகியுள்ளானா? என்பதை அறிவால் மட்டுமன்றி “தவ்க்” அனுபவித்தறிய விரும்பினால் அவர் தனது மூக்கணாங்கயிறை என் கையில் தர வேண்டும். அதாவது அவர் தன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
அவர் அவ்வாறு ஒப்படைத்தால் அவர் வழமையாகச் செய்து வந்தவற்றிலிருந்து அவரை நான் வெளியேற்றிவிடுவேன். அதாவது அவர் தனது விருப்பத்தின் படி செயல்பட விடமாட்டேன். உதாரணமாக அவர் காலையில் உறக்கத்திலிருந்து விழிப்பது ஏழு மணியாயின் அதற்கு அவரை விடாமல் “ஸுப்ஹ்” தொழுகைக்கு முன் எழுந்து “தஹஜ்ஜுத்” வணக்கத்தையும், “ஸுப்ஹ்” தொழுகையையும் நிறைவேற்ற வைப்பேன். அதோடு அவரின் வழமையான உடைகளைக் களையச் செய்து நான் கொடுக்கும் உடைகளை உடுக்குமாறு பணிப்பேன். அதாவது அவர் தனது “நப்ஸ்” என்ற மனவாசைக்கு ஏற்றவாறு, அதற்கு வழிப்பட்டு உடுத்து வந்த உடைகளை நிறுத்தி நான் கொடுக்கும் உடைகளை உடுக்கச் செய்வேன். அவர் வழமையாக தன்னிடம் பணம் வைத்துச் செலவிட்டுப் பழகியவராயின் அதை நிறுத்தி அவரின் அவசியத் தேவைகளுக்கு நான் கொடுப்பேன். அவர் தனது விருப்பத்தின் படி செயல்பட நான் விடமாட்டேன். அவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் நெருங்கிப் பழக விடமாட்டேன்.
 
இவ்வாறு நான் செய்வதோடு அவரை “கல்வத்” தனிமையில் வைப்பேன். மனிதர்களுடன் கலந்து வாழாமல் அவரைத் தடுப்பேன். அவரின் உறக்கத்தில் கட்டுப்பாடு செய்வேன். வரையறை வைப்பேன். அவர் தான் விரும்பியதை, தனது மனவாசைக்கு ஏற்றமாதிரி உணவுகள் உட்கொள்ளாமல் தடுப்பேன். இவ்வாறு மேற்கண்டவாறெல்லாம் அவரைப் பக்குவப்படுத்தி, அவரைத் தயார் செய்து அல்லாஹ் தனது உள்ளமை கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்பதை அவரின் அனுபவ ரீதியிலும், “கஷ்பு” எனும் எதார்த்த ரீதியிலும் உணரச் செய்வேன் என்று அங்கு கூடியிருந்த அனைவருக்கும் “வஸிய்யத்” செய்தார்கள். ஆயினும் அவர்கள் கூறிய நிபந்தனைகளுக்கு அங்கு வந்தவர்களில் எவரும் உடன்படவில்லை.
அவர்கள் உடன்படாமல் விட்டதற்கான காரணம் அந்த மகான் கூறிய நிபந்தனைகளின் படி வாழ்வதானது எல்லோராலும் முடிந்த காரியமில்லை என்பதினாலாகும்.
 
சுமார் 539 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களே மகானின் கட்டுப்பாட்டிற்கு உடன்படவில்லையென்றால் மனிதன் “நப்ஸ்” எனும் தனது மனவாசைக்கு நூறு வீதம் வழிப்பட்டு நடக்கின்ற இக்காலத்தில் எவர்தான் இத்தகைய விதிகளுக்கு கட்டுப்படப் போகிறார்?
இங்கு குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு மாணவனின் வரலாறை எழுத வேணும் போல் எனக்குத் தோணுகிறது.
 
குத்பு நாயகம் அவர்களின் காலத்தில் இற்றைக்கு சுமார் 883 ஆண்டுகளுக்கு முன் இறை பக்தியும், இறைஞானத் தாகமும் உள்ள ஒரு மாது தனது ஏழு வயது மகனை அவர்களிடம் அழைத்து வந்து, இக்காலத்தின் குத்பே! முஹ்யித்தீனே! நீங்கள் அடைந்துள்ள “குத்பிய்யத்” எனும் இடத்தை எனது மகனும் அடைய வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளையெல்லாம் அல்லாஹ்வாகப் பார்க்கிறீர்கள். அதேபோல் எனது மகனும் பார்க்க வேண்டும். இவனை நீங்களே பொறுப்பேற்று உங்கள் போன்ற ஒரு குத்பாக ஆக்கித் தாருங்கள் என்று அவர்களிடம் கண்ணீர் மல்கி கெஞ்சிக் கேட்டாள். அப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட “குத்பு” நாயகம் சிறுவனைப் பொறுப்பேற்று தங்களின் பாசறையில் வைத்துக் கொண்டு சிறுவனின் வயதிற்கேற்றவாறும், அறிவுக்கேற்றவாறும் பயிற்சி கொடுத்து வந்தார்கள்.
 
பல மாதங்கள் கடந்து போயிற்று. மகனைப் பார்த்து வர வேண்டுமென்று விரும்பிய தாய், குத்பு நாயகம் அவர்களிடம் வந்து மகனைப் பார்க்க வேண்டும் என்றார். அதோ தெரிகின்ற ஓலைக் குடிசையில் உள்ளார் என்றார்கள் குத்பு நாயகம் அவர்கள். அவ்வேளை குத்பு நாயகம் அவர்கள் கோழி – சேவல் புரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கழிந்த கோழி முட்கள் அவர்களுக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்தன.
 
மகனைச் சந்திக்க ஓலைக் குடிசைக்குள் நுழைந்தார் தாய். தான் பெற்றெடுத்த தனது அன்பு மகன் கிழிந்த உடையோடும், தலைவிரிக் கோலத்தோடும் தரையில் அமர்ந்து காய்ந்த ரொட்டியை தண்ணீரில் தொட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது கண்டு மயக்கமுற்று நிலை குலைந்து போனாள்.
 
குத்பு நாயகம் அவர்களிடம் கண்ணீரும், கம்பலையோடும் ஓடி வந்து குத்பு நாயகமே! தாங்கள் கோழி புரியாணி சாப்பிடுகிறீர்கள். என் மகனோ காய்ந்த ரொட்டியை தண்ணீரில் தொட்டுச் சாப்பிடுகிறானே! என்று அழுது நின்றாள்.
 
குத்பு நாயகம் வாய் திறந்து ஒரு பதிலும் கூறாமல் தாங்கள் சாப்பிட்டுக் கழிந்த கோழி முட்களை தங்களின் “அஸா” கைக்கோலால் ஒன்று சேர்த்து قُمْ “கும்” என்று சொன்ன அக்கணமே சேவல் உயிர் பெற்று எழுந்து நின்று கூவியது.
 
குத்பு நாயகம் அச்சிறுவனின் தாயை நோக்கி தாயே! சகோதரியே! உங்கள் மகன் நான் அடைந்துள்ள இந்த “மர்தபா” – “குத்பிய்யத்”தை அடையும் வரை எல்லா விடயத்திலும் கட்டுப்பாட்டுடன்தான் இருக்க வேண்டும். நானும் அவ்வாறிருந்துதான் இந்நிலையடைந்தேன். இந்நிலை அவர் அடைந்த பின் அவர் கோழியும் சாப்பிடலாம், குதிரையும் சாப்பிடலாம் என்று அத் தாய்க்கு ஆறுதல் கூறினார்கள்.
 
ஒருவன் ஆன்மிகப் படித்தரங்களில் எதை அடைவதாயினும் அவர் ஒரு “காமில்” பூரணத்துவம் பெற்ற ஒரு “ஷெய்கு” ஞான குருவின் பராமரிப்பில் இருந்து சில பயிற்சிகள் எடுக்க வேண்டும். “நப்ஸ்” எனும் மனவாசையுடன் – மனவெழுச்சியுடன் போராடி அதை வெல்ல வேண்டும். குறைந்தபட்சம் அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா முதலான மூன்று “நப்ஸ்”களையும் கடக்க வேண்டும். அதன் பிறகு முத்மயின்னா, றாழியா, மர்ழியா, காமிலா முதலான நான்கு படிகளையும் கடந்து “றூஹ்” உடைய இடத்தை அடைய வேண்டும்.
 
இவ்வாறு படிப்படியாக ஒவ்வொரு படிகளையும் கடந்து சென்று ஞானத்தின் சிகரத்தை அடைந்தால்தான் “கல்கு” எனும் படைப்பில் “ஹக்கு” எனும் இறைவனை “தவ்க்” – ذَوْقْ அனுபவரீதியாக காண முடியும்.
 
ஸூபிஸ தத்துவம் பேசுகின்ற நாங்கள் படைப்பாக வெளியானவன் அல்லாஹ்தான் என்பதை அறிவின் அடிப்படையில் – அறிவு ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். சீனி என்பது இனிக்கும், உப்பு என்பது உவர்க்கும், மிளகாய் என்பது உறைக்கும், வேப்பங்காய் என்பது கசக்கும் என்ற அறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமேயன்றி இனிப்பு என்றால் இவ்வாறுதான், உவர்ப்பு என்றால் இவ்வாறுதான், கசப்பு என்றால் இவ்வாறுதான், உறைப்பு என்றால் இவ்வாறுதான் இருக்கும் என்று சொல்லிக் கொடுக்கவில்லை. அதை இவ்வாறுதான் இருக்குமென்று எவராலும் சொல்லிக் கொடுக்கவும் முடியாது. அது அறபியில் ذَوْقِيْ – “தவ்கீ” அனுபவித்தறிதல் என்று சொல்லப்படும்.

இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் மாணவர்களில் ஒருவர் அவர்களிடம் சிற்றின்பம் என்பது எப்படியிருக்கும்? பேரின்பம் என்பது எப்படியிருக்கும்? என்று கேட்டபோது, நீ திருமணம் செய்து மனைவியுடன் உடலுறவு கொண்டு பார். சிற்றின்பம் எப்படியென்பதை அனுபவித்துக் கொள்வாய். நல்லமல்கள் செய்து “விலாயத்” எனும் ஒலித்தனம் பெறு. பேரின்பம் எப்படியென்பதை அனுபவித்துக் கொள்வாய் என்று சொன்னார்களாம்.
 
ஸூபிஸம் பேசும் நாங்கள் பேரின்பம் பெறுவதற்கான வழிகளைக் கூறி வருகின்றோம், இறைவனுக்கும், அவனின் படைப்புகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளைக் கூறுகின்றோம், அல்லாஹ் அல்லாத ஒன்றுமே இல்லை என்ற தத்துவத்தைச் சொல்கின்றோம், எல்லாமாயும் அல்லாஹ்தான் உள்ளான் எனும் எதார்த்தத்தை விளக்கி வருகிறோம்.
 
இதுவரை பொது மக்களின் வாயில் சீனியை வைத்து இனிப்பை அனுபவிக்கச் செய்யவில்லை. அவர்களின் வாயில் உப்பை வைத்து உவர்ப்பை அனுபவிக்கச் செய்யவில்லை. அவர்களின் வாயில் மிளகாயை வைத்து உறைப்பை அனுபவிக்கச் செய்யவில்லை.
 
இதனால்தான் இவற்றை அவர்கள் அனுபவித்தறிய வேண்டுமென்பதை கருத்திற் கொண்டு மேற்கண்டவாறு தலைப்பிட்டுள்ளேன்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments