Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அவ்லியாஉகளும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும்!

அவ்லியாஉகளும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும்!

மார்க்கத்தை மையப்படுத்தி முஸ்லிம்களைப் பிளவு படுத்தும் உலமா சபை!
 
அவ்லியாஉகளில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர் யார்? என்று கேட்பதை விட பேசாதவர் யார்? என்று கேட்பதே பொருத்தமான கேள்வியாகும்.
 
நான் கற்ற கல்வியை பிறருக்குச் சொல்வது எனது கடமை.
 
பிறர் அதை ஏற்பதும், மறுப்பதும் அவர் உரிமை!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஸூபிஸ ஞானத்தின் உச்சக்கட்ட முடிவுதான் هُوَ الْكُلُّ “எல்லாம் அவனே” என்ற தத்துவமாகும். இந்த தத்துவத்தின் கரு அல்லாஹ்தான். அவன்தான் முதல் மனிதனான நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுத்தான்.
 
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து முடிந்தவுடன் அவர்களின் கண்களுக்கு “அர்ஷ்” என்ற இடத்தின் பிரதான வாசலில் لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ என்ற திருக்கலிமா எழுதப்பட்டிருந்தது தெரிந்தது. இதைக் கண்ட நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தின் சரியான பொருளை சொல்லிக் கொடுக்காமலேயே புரிந்து கொண்டார்கள். இதனால்தான் அது பற்றி அல்லாஹ்விடம் ஒரு கேள்வியும் கேட்காமல் محمد رسول الله என்ற வசனம் பற்றி
من هذا الّذي قرنت اسمه باسمك؟
இறைவா! உனது பெயருடன் இன்னொருவரின் பெயரையும் சேர்த்துள்ளாயே அவர் யார்? என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்
هَذَا مِنْ وُلْدِكَ، أَبْعَثُهُ آخِرَ الزَّمَانِ،
இவர் உங்களின் பிள்ளைகளில் ஒருவர். இறுதிக் கால கட்டத்தில் நான் அவரை அனுப்புவேன் என்றும்,
لَوْلَاهُ مَا خَلَقْتُكُ
அவர்கள் இல்லையெனில் உங்களையும் நான் படைத்திருக்கமாட்டேன் என்று கூறினான்.
 
இது ஒரு வரலாறு. இதன் மூலம் நாம் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு குறிப்பிடுகிறேன்.
மனு குலத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை முதலில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எழுத்து மூலம் கற்றுக் கொடுத்தவன் அல்லாஹ்தான். மனு குலத்தில் முதன் முதலாக மேற்கண்ட திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதை மொழிந்தவர்களும் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களேயாவர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
 
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேற்கண்ட திரு வசனம் அர்ஷின் வாசலில் எழுதப்பட்டிருந்ததைக் கண்ட போது அத்திரு வசனத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் தொடர்பாக அல்லாஹ்விடம் எந்தவொரு கேள்வியும், எந்தவொரு விளக்கமும் கேட்கவில்லை. “முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” பற்றியே கேட்டார்கள்.
 
இதற்கான காரணம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் கண்ட போது அதன் சரியான பொருளை விளங்கிக் கொண்டார்கள். அதாவது அல்லாஹ் அல்லாத எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். இதன் மூலம் முதலில் திருக்கலிமாவின் சரியான பொருளை அறிந்தவர்கள் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் என்பது தெளிவாகிறது.
 
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இத்திரு வசனத்திற்கு அல்லாஹ்வுக்கு வேறான, அல்லது அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” தெய்வமுமில்லை என்று பொருள் விளங்கினார்களா? அல்லது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று பொருள் விளங்கினார்களா? என்று ஆய்வு செய்தால் அல்லாஹ் அல்லாத அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லையென்று பொருள் விளங்கினார்கள் என்பதற்கே அதிக ஆதாரங்கள் உள்ளன.
 
அவற்றில் ஒன்று. குறித்த திரு வசனத்தில் “வணக்கத்திற்குரிய” என்ற பொருளைத் தருகின்ற எந்த ஒரு சொல்லும் இல்லை. ஒரு சொல் இல்லாமல் அதன் பொருள் வர முடியாது. “வணக்கத்திற்குரிய” என்ற பொருள் சொல்வதற்கு அவ்வசனத்தில் اَلْمُسْتَحِقُّ لِلْعِبَادَةِ என்ற வசனம் வராமலிருக்கும் நிலையில் அவ்வாறு பொருள் கொள்வதற்கு என்ன ஆதாரம் என்று அவ்வாறு பொருள் கூறும் மகான்களிடம் நான் கேட்கிறேன். அதேபோல் அவ்வாறுதான் பொருள் சொல்ல வேண்டும் என்பதற்கு என்ன அவசியமுள்ளது? என்றும் அவர்களிடம் நான் கேட்கிறேன். என்னை மடக்குவதற்காக பதில் தராமல் கலப்பற்ற எண்ணத்தோடு பதில் தருமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ
“கடைக்குச் சென்றேன்” என்று ஓர் அறபு வசனம் வந்திருந்தால் இதற்குக் கடைக்குச் சென்றேன் என்று மட்டும்தான் மொழியாக்கம் செய்ய வேண்டும். இதற்கு மாறாக வசனத்தில் இல்லாத ஒரு சொல்லை கற்பனை செய்து அதற்கு தமிழாக்கம் செய்தல், உதாரணமாக ذهبت إلى الدكان என்ற வசனத்திற்கு வாழைப்பழம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன் என்று சொல்வது தவறு. முற்றிலும் பிழை.
 
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதன் முதலாகச் சொன்ன போது என்ன பொருளைக் கருத்திற் கொண்டு சொன்னார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனினும் அவர்கள் “வணக்கத்திற்குரிய” என்ற பொருளைக் கருத்திற் கொண்டு சொல்வில்லை என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் அவர்கள் அவ்வசனத்தைச் சொன்ன போது உலகில் அவர்களைத் தவிர வேறெந்த ஒரு மனிதனும் இருந்ததில்லை. வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாராவது உண்டு என்று சொல்வதற்கு கூட ஒரு மனிதனும் இருக்கவில்லை. இதன் மூலம் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர யாருமில்லை என்ற கருத்தில் திருக்கலிமாவைச் சொல்லவில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.
 
“வஹ்ததுல் வுஜூத்” “வுஜூத்” உள்ளமை ஒன்றுதானேயன்றி அது இரண்டுமல்ல, பலதுமல்ல என்பதற்கும், அந்த உள்ளமையின் வேறுபடாத, அதை விட்டும் பிரியாத அதன் வெளிப்பாடுகள்தான் படைப்புகள் என்பதற்கும், சுருக்கமாகச் சொல்வதாயின் எல்லாம் அவனே என்பதற்கும் மறுக்க முடியாத ஆதாரம் “விலாயத்” ஒலித்தனம் பெற்ற எந்த ஒரு வலீயும், “குத்பிய்யத்” பெற்ற எந்த ஒரு குத்பும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானதென்று இதுவரை சொல்லாமலிருப்பதேயாகும். அதோடு தமது நூல்களில் “வஹ்ததுல் வுஜூத்” கருத்தை சொல்லியிருப்பதுமேயாகும்.
 
நான் தற்போது 79 வயதைக் கடந்து 80ல் கால் வைத்துள்ளேன். இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலீமாரின் வரலாறுகளை அறபு நூல்களின் மூலமும், தமிழ் மொழியிலுள்ள நூல்களின் மூலமும் வாசித்திருக்கிறேன். எந்த ஒரு நூலிலும் “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று எழுதியிருந்ததை நான் காணவில்லை.
பல நூல்கள் எழுதிய, பிரசித்தி பெற்ற ஓர் இமாம் தான் எழுதிய எந்த ஒரு நூலிலும் “வஹ்ததுல் வுஜூத்” கருத்தை எழுதவில்லை என்பதால் அவர் அதற்கு எதிரானவர் என்று முடிவெடுத்தல் முற்றிலும் பிழையாகும்.
 
உதாரணமாக “ஸிஹாஹ் ஸித்தா” என்று சொல்லப்படும் ஆதாரபூர்வமான ஆறு ஹதீதுக் கிரந்தங்களை எழுதிய ஆறு இமாம்களில் எவரும் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக எந்த ஒரு நூலும் எழுதவில்லை என்பதால் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தெரியாதவர்கள் என்றோ, அல்லது அவர்கள் அதைப் பிழை கண்டவர்கள் என்றோ முடிவு செய்தல் கூடாது.
 
எனினும் ஸூபீகளிற் சிலர் எதிரிகளின் இன்னல்கள் பொறுக்க முடியாமல் பகிரங்கமாகப் பேசுவதை நிறுத்தி இரகசியமாகப் பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன.
وقد كان الحسن البصـري وكذلك الجنيد والشبلي وغيرُهم لا يُقَرِّرُوْنَ علم التوحيد إلّا فى قُعور بُيوتِهم بعد غَلق أبوابهم وجَعْلِ مفاتِحِها تحت وَرِكِهِمْ، ويقولون أَتُحِبُّوْنَ أن تُرْمَى الصَّحَابَةُ والتابعون الّذين أخذنا عنهم هذا العلم بالزَّنْدَقَةِ بهتانا وظلما، (اليواقيت، ج1، ص17)
இறைஞானி ஹஸனுல் பஸரீ, ஜுனைதுல் பக்தாதீ, அபூ பக்ர் ஷிப்லீ ஆகியோர் “தவ்ஹீத்” தொடர்பான அறிவை பேசுவார்களாயின் தமது வீடுகளின் உட்பகுதிகளில் வெளிக்கதவுகளைப் பூட்டி திறப்புகளைத் தமது தொடையின் கீழ் வைத்த பின்புதான் பேசுவார்கள். யாராவது அவர்களிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டால் கேட்பவர்களிடம் நாங்கள் இந்த ஞானத்தை நபீ தோழர்கள், தாபியீன்கள் மூலமாகப் பெற்றோம். இதை நாங்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொன்னால் நபீ தோழர்களையும், தாபியீன்களையும் விடயம் தெரியாதவர்கள் “ஸிந்தீக்”குகள் என்றும், “காபிர்”கள் என்றும் சொல்வதை நீங்கள் விரும்புவீர்களா? என்று கேட்பார்கள்.
ஆதாரம்: அல் யவாகீத், பாகம் 01, பக்கம் 17,
ஆசிரியர்: ஷஃறானீ
 
ஸூபீ மகான்கள் தாம் அறிந்த இறைஞானத்தோடு தொடர்புள்ள விபரங்களை மக்களிடம் பேசும் போது ஞானத்தின் எதிரிகள் விடயம் புரியாமல் இந்த ஞான அறிவைச் சொன்ன இமாம்களையும், ஸூபீ மகான்களையும், பெருமானார் அவர்களின் தோழர்களையும் நையாண்டி பண்ணுவார்கள். கீழ்த்தரமாகப் பேசுவார்கள் என்பதற்காக ஸூபீ மகான்கள் பகிரங்கமாகச் சொல்வதை நிறுத்திக் கொண்டார்கள். இதனால் இந்த ஞானத்தை பகிரங்கமாகச் சொல்லக் கூடாதென்பது கருத்தல்ல. விளக்கம் தெரியாதவர்களுக்கு விளக்கம் சொல்லும் ஆற்றல் உள்ளவர்கள் பகிரங்கமாகப் பேசுவது குற்றமாகாது.
 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments