தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தன்மைகள் இருபது. இதன் விளக்கம் அவனில் அவசியம் இருக்க வேண்டிய தன்மைகள் இருபது என்பதாகும்.
அவற்றில் மிகப் பிரதானமானதும், “அகீதா” கொள்கை நூல்களில் முதலாவதாக சொல்லப்பட்டதும் “வுஜூத்” உள்ளமை என்பதாகும்.
உள்ளமை என்றால் உள்ளதாயிருத்தல், உளதாயிருத்தல் என்று பொருள்.
“வுஜூத்” என்ற சொல்லுக்கு “உள்ளமை” என்று பொருள் சொல்வதால் உள்ளமை என்பது “உண்மை” என்று விளங்குதல் பிழையாகும். உள்ளமை என்பது வேறு, உண்மை என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.
கொள்கை விளக்கத்தில் சொல்லப்படுகின்ற “வுஜூத்” “உள்ளமை” என்பது அல்லாஹ் உள்ளவனாக இருப்பதைக் குறிக்கும்.
“உண்மை” என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் “பொய்” என்று வரும். “உள்ளமை” என்ற சொல்லின் எதிர்ச் சொல் “அதம்” இல்லாமை என்று வரும். பொய் என்று வராது.
“ஸித்க்” என்றால் உண்மை. இதன் எதிர்ச் சொல் كَذِبٌ பொய்யென்று சொல்லப்படும்.
கொள்கை விளக்கத்தில் நாம் பேசுகின்ற “உள்ளமை” என்பது كذب பொய் என்பதற்கு எதிர்ச் சொல் அல்ல என்று விளங்கிக் கொள்ள வேண்டும். கொள்கை விளக்கத்தில் நாம் பேசுகின்ற “உள்ளமை” என்பது உண்மை என்ற கருத்துக்குரிய சொல் அல்ல.
அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய தன்மை “வுஜூத்” உள்ளமை என்றே சொல்லப்பட வேண்டும். صِدْقٌ உண்மை என்று சொல்லக் கூடாது.
சில ஊர்களில் “உள்ளமை” என்ற சொல்லை உண்மை உன்ற பொருளுக்குப் பயன்படுத்தப்படும். உதாரணமாக பெற்றோர் பிள்ளைகளிடம் உண்மை பேச வேண்டும் என்பதற்குப் பதிலாக உள்ளமை பேச வேண்டும் என்று சொல்வதுண்டு.
அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறானா? இல்லையா? என்று ஒருவர் கேட்டால் இருக்கிறான் என்று நாம் சொல்கின்றோமே “அந்த இருக்கிறான்” என்பதுதான் “வுஜூத்” உள்ளமையின் பொருளாகும்.
“வுஜூத்” உள்ளமை தொடர்பாக நான் எழுதியுள்ள விளக்கம் அறிவுள்ளவர்களுக்கு போதுமென்று கருதுகிறேன். இது விளங்காதவர்கள் விளக்கமுள்ளவர்களிடம் தெரிந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறேன்.
இனி உங்களின் சிந்தனையை சற்று விரித்துப் பாருங்கள். “உள்ளமை” என்பது அல்லாஹ்வில் மட்டும் அவசியம் இருக்க வேண்டிய அம்சம் என்றால் அவ் அம்சம் படைப்பில் அறவே இருக்க முடியாதென்பது சொல்லாமலேயே விளங்க வேண்டிய ஒன்றாகும்.
அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை அவசியமென்றால் அந்த “வுஜூத்” படைப்பில் இருக்க முடியதென்பதே எதார்த்தமாகும். இதற்கு மாறாக படைப்பில் அந்த அம்சம் இருப்பதாக ஒருவன் நம்பினால் அவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிடுவான். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான ஒன்று படைப்பில் இருப்பதாக நம்புதல் “ஷிர்க்” எனும் இணையேதான். இதன்படி படைப்புக்கு “வுஜூத்” உள்ளமை இருக்க முடியாதென்பது தெளிவாகிறது.
இதனால்தான் “அகீதா” கொள்கையுடையோர் “வுஜூத்” உள்ளமை என்பதை மூன்று வகைகளாகப் பிரித்து “வாஜிபுல் வுஜூத்” அவசிய உள்ளமை என்றும், “மும்கினுல் வுஜூத்” சாத்தியமான உள்ளமை என்றும், “மும்தனிஉல் வுஜூத்” சாத்தியமற்ற “வுஜூத்” என்றும் மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். இவ்வாறு பிரித்தவர்கள் “முதகல்லிமீன்” என்று அழைக்கப்படுகின்றார்கள். ஆயினும் ஸூபீ மகான்களோ “வுஜூத்” என்பது “வாஜிபுல் வுஜூத்” மட்டும்தான் என்று திட்டமாகச் சொல்கிறார்கள். அதாவது அல்லாஹ் தவிர வேறு எதற்கும் “வுஜூத்” கிடையாதென்றே சொல்கிறார்கள். படைப்புக்கு “மும்கினுல் வுஜூத்” என்று “முதகல்லிமீன்” என்போர் சொல்லியிருப்பது பொது மக்களுக்கு விளக்கி வைப்பதற்காகவேயன்றி எதார்த்தத்தில் “மும்கினுல் வுஜூத்” என்று ஒன்றில்லை என்றே ஸூபீகள் சொல்கின்றார்கள். இதனால்தான் படைப்புக்கு “மும்கினுல் வுஜூத்” என்று பெயர் சொல்லப்பட்டுள்ளது. “மும்கினுல் வுஜூத்” என்ற வசனத்தின் பொருள் “உள்ளமைக்கு சாத்தியமானது” என்பதேயாகும். அதற்கு இவ்வாறு ஏன் பெயர் வைக்கப்பட்டதென்று ஆய்வு செய்தால் இவ் உண்மை தெளிவாகும்.
படைப்புக்கு “வுஜூத்” உள்ளமை இல்லையென்றால் அதன் பொருள் அது இல்லையென்பதேயாகும். அதாவது அதற்கு عَدَمٌ – இல்லாமை அவசியம் என்பதாகும். படைப்புக்கு “அதம்” இல்லாமை அவசியம் என்றால் அதன் கருத்து படைப்பு இல்லை என்பதற்கு இதை விட ஆதாரம் தேவையா?
“கல்க்” படைப்பு என்றால் என்ன?
“கல்க்” என்ற சொல்லுக்கு படைப்பு என்று பொருள் சொல்லிக் கொண்டாலும் கூட அதற்கு “பொய்” என்ற பொருளும் உண்டு என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இப் பொருளின் அகராதி திருக்குர்ஆன் வசனமேயாகும்.
وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ ، أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ ، وَانْطَلَقَ الْمَلَأُ مِنْهُمْ أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَى آلِهَتِكُمْ إِنَّ هَذَا لَشَيْءٌ يُرَادُ ، مَا سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ،
மேலும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவர் அவர்களிலிருந்தே அவர்களிடம் வந்தது பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இவர் பெரும் பொய்யரான சூனியக் காரர் என்றும் நிராகரிப்போர் கூறினர். இவர் எல்லாத் தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஒரு பொய்யேயாகும்.
(திருக்குர்ஆன் 38-4, 5, 6, 7)
இத்திரு வசனம் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சரியென்று நிறுவுவதற்குப் பொருத்தமான வசனமாகும். ஆயினும் இது பற்றி இங்கு நான் விபரிக்கவில்லை. “கல்க்” என்ற சொல்லுக்கு “பொய்” என்ற பொருள் உண்டு என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
இவ்வசனத்தின் இறுதியில் வந்துள்ள اِخْتِلَاقْ என்ற சொல் இங்கு ஆய்வுக்குரியதாகும். இச் சொல் خَلَقَ படைத்தான் என்ற அடிப்படைச் சொல்லின் ஆரம்பத்தில் ஓர் “அலிப்” உம், முதலெழுத்தை அடுத்து “தே” என்ற ஒரு எழுத்தையும் சேர்த்து اِخْتَلَقَ என்று அமைந்துள்ளது. خَلَقَ என்ற சொல்லுக்கு أَوْجَدَهُ وَأَبْدَعَهُ مِنَ الْعَدَمِ இல்லாதிருந்து உண்டாக்கினான் – படைத்தான் என்ற பொருள் இருப்பது போல் اَلْكَذِبَ اِخْتَرَعَهُ பொய்யை இட்டுக் கட்டிச் சொன்னான் என்ற அர்த்தமும் உண்டு. இதைக் கருவாக வைத்து ஆய்வு செய்தால் படைப்பு என்பது பொய் என்ற பொருளுக்கும் பாவிக்கப்படும் என்பது விளங்கப்படுகிறது. “பொய்” என்றால் இல்லாத ஒன்று என்று விளக்கம் வரும். اَلْخَلْقُ عَدَمٌ مَحْضٌ படைப்பு என்பது இல்லை. அதற்கு وُجُوْدٌ உள்ளமை இல்லை என்று விளக்கம் வரும்.
“முதகல்லிமீன்” என்பவர்களை விட ஸூபீகள் சற்று ஆழமானவர்கள் என்பதை கொள்கையுடையோர் அறிந்திருக்க வேண்டும். ஒரு பக்க சார்பின்றி நடு நிலையிலிருந்து சிந்திப்போருக்கு இவ் உண்மை தெளிவாகும்.
இங்கு ஒரு நுட்பத்தை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். இதன் மூலம் ஸூபீகள் “முதகல்லிமீன்” களைவிட சற்று ஆழமானவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
هَلْ تَتَعَلَّقُ قُدْرَةُ اللهِ بِالْمُحَالِ
அல்லாஹ்வின் சக்தி அசாத்தியமானதைக் கொண்டு கொளுகுமா? அதாவது அசாதத்தியமானதைச் செய்யுமா? என்ற விடயத்தில் ஸூபீகளுக்கும், “முதகல்லிமீன்” என்பவர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
“முதகல்லிமீன்” என்போர் அல்லாஹ்வின் சக்தி அசாத்தியமானதைக் கொண்டு கொளுகாது என்று சொல்வார்கள். இதுவே அவர்களின் முடிவு. ஆனால் ஸூபீகளோ அல்லாஹ்வின் சக்தி அசாத்தியமானதைக் கொண்டும் கொளுகும் என்று சொல்வார்கள்.
ஒரு தையல் ஊசியின் ஓட்டை வழியாக ஓர் ஒட்டகத்தை செலுத்துதல் என்ற விடயத்தில் அல்லாஹ்வின் சக்தி கொளுகுமா? என்ற கேள்விக்கு “முதகல்லிமீன்” என்போர் கொளுகாது என்று சொல்வார்கள். அதாவது ஒட்டகம் ஒட்டகமாகவே இருக்கும் நிலையில் ஒட்டகத்தை அதன் வழியாக அல்லாஹ் செலுத்தமாட்டான் என்று “முதகல்லிமீன்” என்போர் சொல்வார்கள். அவ்வாறு அவன் செலுத்துவதாயின் ஒன்றோ ஊசியின் ஓட்டையை ஒட்டகத்தை விடப் பெரிதாக்க வேண்டும். அல்லது ஒட்டகத்தை ஊசியின் ஓட்டையை விட சிறிதாக்க வேண்டும். இரண்டு வழிகளில் ஒன்றைச் செய்தால் மட்டும்தான் ஒட்டகத்தை ஊசியின் ஓட்டையால் செலுத்த முடியும். இல்லையெனில் செலுத்த முடியாது. அது அசாத்தியம். இவ்வாறு அசாத்தியமான ஒன்றை இறைவன் செய்வதில்லை என்று கூறுவார்கள். ஆனால் ஸூபீகளோ ஒட்டகம் ஒட்டகமாகவே இருக்க, ஊசியின் ஓட்டையும் அவ்வாறே இருக்க அவ் ஓட்டை வழியாக ஒட்டகத்தைச் செலுத்தும் விடயத்தில் அல்லாஹ்வின் சக்தி கொளுகும். அல்லாஹ்வுக்கு அசாத்தியம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வார்கள்.
இவ்வாறு “முதகல்லிமீன்”களுக்கும், ஸூபீ மகான்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு. என்னைப் பொறுத்த வரை “முதகல்லிமீன்”களின் கருத்தை இவ்விடயத்தில் ஏற்றுக் கொள்ளாமல் ஸூபீ மகான்களின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொது மக்கள், புத்திஜீவிகள் யாரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை பொது மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
ஒட்டகத்தை ஊசியின் ஓட்டையை விட சிறியதாக்கியோ, அல்லது ஊசியின் ஓட்டையை ஒட்டகத்தைவிடப் பெரிதாக்கியோ அதைச் செலுத்துவதென்பது அல்லாஹ்வால் மட்டும் முடியுமானதல்ல. இது மனிதனாலேயே முடிந்த விஷயம்தான்.
இவ்வாறு “முதகல்லிமீன்” என்பவர்களுக்கும், “ஸூபீ”கள் என்பவர்களுக்கும் சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் ஸூபிஸ வழி செல்வோர் ஸூபீகளின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். நாங்களும் ஸூபீகளாயிருப்பதால் அவர்களின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுப்போம். எனினும் மொத்தமாக “முதகல்லிமீன்”களின் கருத்தை மறுக்கமாட்டோம். ஒதுக்கவும் மாட்டோம். இவ்வாறுதான் உலமாஉகளும் இருக்க வேண்டும்.
ஸூபீகளின் கருத்துகளுக்கு ஸூபீகளின் நூல்களிலிருந்தே ஆதாரங்கள் எடுக்க வேண்டும். அவர்களின் கருத்துகளுக்கு அவர்களல்லாதவர்களின் நூல்களிலிருந்து ஆதாரம் எடுக்க முயற்சித்தல் பொருத்தமற்றதாகும்.
“எல்லாம் அவனே” என்ற தத்துவம் பேசுபவர்களும், திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் ஆதாரங்களாகக் கொண்டு “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கு வித்திட்டவர்களும் ஸூபீ மகான்களேயாவர். ஆகையால் அவர்கள் கூறும் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்திற்கு ஆதாரம் தேவையாயின் அவர்களின் நூல்களிலிருந்தே ஆதாரம் தேட வேண்டும் என்பதை உலமாஉகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஆற்றில் எறிந்த பொருளைத் தேடுவதாயின் ஆற்றில்தான் தேட வேண்டுமேயன்றி கடலில் தேடுவது அறிவுடைமையல்ல. இதையும் உலமாஉகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கொள்கை தொடர்பாகப் பேச நாங்கள் தயார் என்று கூறிய தலைவர் அவர்கள் சற்று ஆழமாகச் சிந்தித்திருந்தாராயின் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார். அவர் ஜனநாயக நாட்டிலிருந்து அவ்வாறு சொல்வது அர்த்தமற்ற ஒன்றாகும். ஏனெனில் ஜனநாயக இந்நாட்டில் எவர் என்ன கொள்கையை சரி காண்கிறாரோ அக் கொள்கையில் இருப்பதற்கு அவருக்கு உரிமையுண்டு. உலமாஉகள் சரி கண்ட கொள்கையில்தான் நாட்டு மக்கள் இருக்க வேண்டுமென்பது விதியல்ல. எவராயினும் எக் கொள்கையிலும் இருக்கலாம் என்பதே ஜனநாயகமாக இருக்கும் நிலையில் உலமா சபை சரி கண்ட கொள்கையில் மட்டும்தான் நாட்டு மக்கள் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. இது அவசியமென்றிருந்தால் இந்நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது.
எனவே, ஸூபிஸ சமூகத்தை “முர்தத்” மதம் மாற்றி தீர்ப்பு வழங்கியது கூட ஜனநாயக நாடு அனுமதிக்காத ஒன்றேயாகும். நாங்கள் மதம் மாறவில்லை. நாங்கள் இஸ்லாம் மார்க்கத்திலேயே இருக்கின்றோம். எங்களை “முர்தத்” மதம் மாற்றியவர்கள் உலமாஉகளேயாவர். இவர்கள் இவ்வாறு செய்த செயலே அராஜகம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் இச் செயல் வரம்பு மீறிய சர்வாதிகாரம் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“அகீதா” கொள்கையில் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்களின் வழி செல்பவர்கள் என்று கூறும் உலமாஉகள் அவர்கள் கூறிய வழியிலேயே செல்ல வேண்டும். அவர்கள் கூறிய வழி பின்வருமாறு.
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص 21(
பின்வரும் செய்தியை அஷ்ஷெய்கு அபூ தாஹிர் கஸ்வீனீ அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களின் மிக நெருங்கிய தோழர் அஹ்மத் பின் சாஹிர் சொன்னதாக கூறுகிறார்கள்.
(பக்தாத் நகரிலுள்ள எனது வீட்டுக்கு கொள்கையின் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்கள் வந்த போது அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் எனது தோழர்களை இங்கு ஒன்று கூட்டித் தாருங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் ஒன்று கூட்டிக் கொடுத்தேன். அப்போது அவர்கள் வந்தவர்களிடம் நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நான் முஸ்லிம்களில் எவரையும் “காபிர்” என்று சொல்லவில்லை. நான் அவர்கள் அனைவரையும் ஒரே இறைவனை நம்பியவர்களாகவே காண்கிறேன். இஸ்லாம் என்ற சொல் அவர்கள் அனைவரையும் உள்வாங்கிய சொல்லாகும்) என்று சொன்னார்கள்.
நானும், நீங்களும், உலமா சபைத் தலைவரும், பத்வா வழங்கிய முல்லாக்களும் கொள்கையில் பின்பற்றுகின்ற இமாம் அவர்களே நான் முஸ்லிம்களில் எவரையும் “காபிர்” என்று சொன்னதில்லை என்று கூறியிருக்கும் நிலையில் உலமா சபை பல்லாயிரம் முஸ்லிம்களை “காபிர்”கள் என்று சொல்லியிருப்பது வியப்பானதாயும், வேதனையானதாயும் உள்ளதா? இல்லையா?