தொடர் 02:
والّذي عليه جُمهورُ مشائخ السّلف رضي الله تعالى عنهم أنّه يجوز رؤيةُ الله تعالى فى صورةٍ فى المنام، وبه جائت الأحاديث، نحو قوله صلّى الله عليه وسلّم ‘ خيرُ الرُّؤيا أن يرى العبدُ ربّه فى منامِه أو يرى نبيَّهُ أو يرى أبويه إن كانا مُسلِمَين، وقولِه صلّى الله عليه وسلّم ‘ رأيتُ ربّي فى أحسن صورةٍ ‘ الحديث، وقال محمد بن سيرين ‘ من رأى ربّه فى المنام دخل الجنّة ‘
(اليواقيت والجواهر، ج 1، ص 107، للشعراني)
முன்னோர்களான ஆன்மிகவாதிகளில் அதிகமானோர் அல்லாஹ்வை ஏதேனுமோர் உருவத்தில் கனவில் காணமுடியுமென்றே கூறியுள்ளார்கள். நபீ மொழிகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன. ஆகையால் இம்முடிவில் யாரும் சந்தேகப்பட்டு காலத்தை வீணாக்கத் தேவையில்லை.
கனவுகளில் சிறந்தது ஓர் அடியான் தனது “றப்பு” இரட்சகனை கனவில் காண்பதாகும். அல்லது அவனின் நபீ அவர்களைக் காண்பதாகும். அல்லது அவனின் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களைக் காண்பதாகும்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இன்னும் அடுத்த நபீ மொழியில் “எனது இரட்சகனை அழகிய உருவத்தில் நான் கண்டேன்” என்றும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
முஹம்மத் இப்னு ஸீரீன் என்ற இறைஞான மேதை “அல்லாஹ்வைக் கனவில் கண்டவன் சுவர்க்கம் சென்றுவிட்டான்” என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வைக் கனவில் காணலாமா? இல்லையா? என்று ஆராய்வதில் முழுக்கவனமும் செலுத்தாமல் காண்பதாயின் உருவமில்லாத அல்லாஹ்வை எவ்வாறு காண முடியும்? என்பது தொடர்பாக மட்டும் நாம் ஆய்வு செய்வோம்.
மேற்கண்ட நபீ மொழிகள் மூலம் இவ் உலகில் கனவில் அல்லாஹ்வைக் காண முடியும் என்பது தெளிவாகிறது.
இங்கு சிந்திக்க வேண்டியதும், ஆய்வு செய்ய வேண்டியதுமான விடயம் என்னவெனில் உருவம் இல்லாத அல்லாஹ்வை கனவில் காணும் போது ஏதாவது ஓர் உருவத்திலேதான் காண வேண்டும். அவ்வாறு காணும் போது அவன் உருவமுள்ளவனாக ஆகிவிடுகின்றானே! இதற்கான விளக்கம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பொருளை விழிப்பில் பார்ப்பதாயினும், கனவில் பார்ப்பதாயினும் அதற்கு உருவம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.
பார்த்தல் என்பதற்கு மூன்று அம்சங்கள் அவசியம். மூன்றும் இருந்தால் மட்டும்தான் பார்த்தல் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும். ஒன்று “றாயீ” பார்ப்பவன். இரண்டு “மர்யீ” பார்க்கப்படும் பொருள். மூன்று “றுஃயத்” பார்வை. இம் மூன்றும் இருந்தால் மட்டும்தான் பார்வை உண்டாகும். பார்க்கின்றவன் இருக்கின்றான் – ஆள் இருக்கின்றான். ஆயினும் பார்க்கப்படும் பொருள் இல்லையெனில் பார்வை என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போய்விடும். இதேபோல் பார்க்கப்படும் பொருள் உண்டு. பார்ப்பவன் இல்லையெனில் பார்வை என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போய்விடும். இதேபோல் பார்ப்பவனும் உள்ளான், பார்க்கப்படும் பொருளும் உள்ளது. ஆனால் பார்ப்பவனுக்கு பார்வை இல்லையானால் இவ்விடத்திலும் பார்த்தல் என்பதற்கு இடமில்லாமற் போய்விடும். இதேபோல் பார்ப்பவனும் உள்ளான், அவனுக்குப் பார்வையும் உண்டு. பார்க்கப்படும் பொருளும் உண்டு. ஆனால் அதற்கு உருவம் இல்லையென்றால் பார்த்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போய்விடும். அல்லாஹ்வைப் பார்த்தல் போன்று.
இவ்விடம் – இக்கட்டம் மட்டும்தான் நுட்பமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இது தொடர்பான விளக்கம் பின்னால் எழுதப்படும்.
முஸ்லிம்களில் எவரை எடுத்துக் கொண்டாலும் அவர் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்றுதான் சொல்வார். ஓர் “ஆலிம்” மார்க்க அறிஞரும் அவ்வாறுதான் சொல்வார். முப்தியும் அவ்வாறுதான் சொல்வார். இவ்வாறு சொல்பவர்களிடம் அல்லாஹ்வைக் கனவில் காணலாமா? மறுமையில் காணலாமா? என்று கேட்டால் விஷயம் தெரிந்தவராயின் ஆம் என்றுதான் சொல்வார். அவரிடம் உருவமில்லாத அல்லாஹ்வை எவ்வாறு காண்பது என்று கேட்டால் அது எவ்வாறென்று தெரியாதென்று பதில் சொல்பவர்களே அதிகமாக உள்ளனர். வெளிநாட்டவர்களை விடுவோம். நமது நாட்டு உலமாஉகளில் எவரும் இக் கேள்விக்கு திருப்தியான பதில் தருபவர்களாக இல்லை. யாராவதொருவர் இலைமறை காய் போல் இருந்தாலும் கூட அவர் சரியான பதில் சொல்வதற்கு அஞ்சுவார். ஏன்? உலமாஉகளின் “பத்வா” என்ற துப்பாக்கி இத்தகையோரைக் குறி வைத்த நிலையிலேயே உள்ளது. இதனால்தான்.
ஆயினும் முல்லாக்களின் “பத்வா” எனும் வாளால் கொல்லப்பட்ட நான் இதற்கு முன்னோர் தந்துள்ள விளக்கத்தை இங்கு சுருக்கமாகத் தருகின்றேன்.
قال الشيخ أبو طاهر رحمه الله فعُلِمَ أنّه لا يلزم من كون الشيئ لا صورة له أن لا يُرى في صورة على ما قرّرناه ، ألا ترى أنّ كثيرا من الأشياء التي لا أشخاص لها ولا صورة تُرى في المنام بأمثلة تناسبها بأدنى معنى ولا يوجب التشبيه ولا التمثيل، وذلك كالمعاني المجرّدة مثل الإيمان والكفر والشـرف والقرآن والهدي والضّلالة والحياة الدنيا ونحو ذلك،
அஷ்ஷெய்கு அபூ தாஹிர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
உருவமில்லாத ஒரு வஸ்தை கண்ணால் – தலைக்கண்ணால் காண்பது அசாத்தியமான ஒன்று. ஏனெனில் பார்க்கப்படுகின்ற வஸ்து எதுவாயினும் அது உருவமுள்ளதாகவே இருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும்.
எனவே, பார்க்கப்படுகின்ற ஒரு பொருளுக்கு உருவம் இருப்பது அவசியம் என்பது இவ் உலகில் தலைக் கண்ணால் காண்பதற்குத்தான் நிபந்தனையேயன்றி வேறு உலகில் இந்த நிபந்தனை அவசியமற்றதாகும். நாம் வாழ்கின்ற “துன்யா” இவ்வுலகம் “ஆலமுல் அஸ்பாப்” காரண உலகம் என்று ஸூபீ மகான்கள் சொல்கிறார்கள். திருக்குர்ஆனின் முடிவும், நபீ மொழியின் முடிவுகளும் இதுவேதான்.
இதுபோல் பல உலகங்கள் உள்ளன. 14 உலகம் என்றும், 18 ஆயிரம் உலகங்கள் என்றும் சொல்லப்படுகிறது. எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் “பல உலகங்கள்” என்பதில் கருத்து வெறுபாடு இல்லை.
இவ்வடிப்படையில் உருவமில்லாத சில வஸ்துக்கள் கனவுலகில் உருவமுள்ளதாகத் தோற்றும் என்பது தத்துவம். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கனவில் காணப்படுகின்ற விடயங்கள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.
இதை இன்னும் சற்று விபரமாக எழுதுகிறேன்.
உருவமற்றவை கனவுலகில் உருவத்தில் தோற்றும்.
உதாரணமாக “ஈமான்” நம்பிக்கை என்பதை எடுத்துக் கொள்வோம். இதற்கு உருவம் உண்டா? இல்லை. ஆயினும் இது கனவுலகில் ஓர் உருவத்தில் தோற்றும். இதற்கு நபீ மொழி ஆதாரமாக உள்ளது.
(நான் கனவில் மனிதர்களைக் கண்டேன். அவர்களிற் சிலர் கரண்டை வரை நீளமான “கமீஸ்” ஷேட் அணிந்திருந்தார்கள். அவர்களில் இன்னும் சிலர் கணுக்கால் வரை அணிந்திருந்தார்கள். (கரண்டைக் காலுக்கும், முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதி) அவர்களில் உமர் இப்னுல் கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் (இரண்டாவது கலீபா) ஷேட் மட்டும் தரையில் இழுபட்டுக் கிடந்தது. (மிக நீளமாக இருந்தது).
இவ்வாறு கனவு கண்டேன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். செவியேற்றுக் கொண்டிருந்த நபீ தோழர்கள், مَا أَوَّلْتَ ذَلِكَ அக்கனவின் கருத்து என்ன? என்று அவர்களிடம் கேட்ட போது “ஈமான்” நம்பிக்கை என்று சொன்னார்கள். இதன் மூலம் உருவமில்லாத நம்பிக்கை என்பது கனவுலகில் நபீ பெருமானார் அவர்களுக்கு “கமீஸ்” ஷேட் உருவத்தில் காட்டப்பட்டுள்ளது. கனவுக்கு இவ்வாறு விளக்கம் சொன்னவர்கள் நபீ பெருமானாரேயன்றி வேறு எந்த இமாமுமில்லை. ஆகையால் இந்த விளக்கத்தில் இரண்டாம் கருத்துக்கு இடமேயில்லை என்பது முடிவாகும்.
இவ்வாறுதான் “குப்ர்” எனும் நிராகரிப்புமாகும். இதற்கும் உருவமில்லை.
كَذَلِكَ الْكُفْرُ يُمَثَّلُ فِى الْمَنَامِ بِالظُّلْمَةِ،
எனினும் கனவுலகில் “குப்ர்” நிராகரிப்பு என்பது இருள் உருவில் உதாரணமாகக் காட்டப்படும்.
இவ்வாறுதான் கௌரவம், கண்ணியம் என்பவையுமாகும். இவற்றுக்கும் உருவமில்லை.
وَكَذَلِكَ الشَّرَفُ وَالْعِزُّ يُرَى بِوَاسِطَةِ صُوْرَةِ الْفَرَسِ،
எனினும் கனவுலகில் குதிரையின் உருவத்தில் உதாரணமாகக் காட்டப்படும்.
இவ்வாறுதான் திருக்குர்ஆன் என்பதுமாகும். இதற்கும் உருவமில்லை. (திருக்குர்ஆன் என்று நான் குறிப்பிடுவது அல்லாஹ்வின் பேச்சைக் குறிக்குமேயன்றி தாளில் அச்சிடப்பட்ட “முஸ்ஹப்” திருக்குர்ஆன் பிரதியைக் குறிக்காது. இதற்கு உருவமுண்டு. அல்லாஹ்வின் பேச்சுக்கு உருவமில்லை)
وَكَذَلِكَ يُمَثَّلُ الْقُرْآنُ بِاللُّؤْلُؤِ
எனினும் திருக்குர்ஆன் கனவுலகில் முத்தின் உருவத்தில் காட்டப்படும்.
இவ்வாறுதான் “ஹிதாயத்” எனும் நேர்வழியுமாகும். இதற்கும் உருவமில்லை.
وَكَذَلِكَ يُمَثَّلُ الْهُدَى بِالنُّوْرِ
எனினும் இது கனவுலகில் ஒளி உருவத்தில் காட்டப்படும்.
இவ்வாறுதான் “ழலாலத்” எனும் வழிகேடுமாகும். இதற்கும் உருவமில்லை.
وَكَذَلِكَ يُمثَّلُ الضَّلَالَةُ بِالْعَمَى
எனினும் இது கனவுலகில் குருடு உருவத்தில் கனவுலகில் காட்டப்படும்.
மேலே நான் கூறிய “ஈமான்” விசுவாசம், “குப்ர்” நிராகரிப்பு, கௌரவம், சிறப்பு, திருக்குர்ஆன், நேர்வழி, வழிகேடு, உலக வாழ்க்கை என்பன உருவமில்லாதவைதான். ஆயினும் இவை மேலே நான் கூறியது போல் ஏதோ ஒரு வகையில் பொருத்தமான ஓர் உதாரணத்தில் உருவமாகக் காட்டப்படும்.
இவ்வாறுதான் உருவமில்லாத அல்லாஹ்வை கனவுலகில் ஏதேனும் பொருத்தமான உருவத்தில் காண முடியும்.
இதனால்தான் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை அழகிய உருவத்தில் கனவில் கண்டதுமாகும்.
மேற்கண்ட இவ்விபரம் எனது கற்பனையல்ல. எனினும் இவ்விபரம் இமாம் ஞான மேதை அப்துல் வஹ்ஹாப் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்யவாகீத்” எனும் நூலில் இருந்து பெற்ற தகவல்களாகும்.
ஆதாரம்: அல் யவாகீத்,
பாகம் 01, பக்கம் 107-108.
உருவமில்லாத அல்லாஹ்வை கனவுலகில் பொருத்தமான உருவங்களில் உதாரணங்களாகக் காண்பதால் அல்லாஹ்வுக்கு முருகன், காளி போல் முஸ்லிம் அல்லாதவர்கள் வணங்குகின்ற விக்கிரகங்கள், சிலைகள் போன்ற உருவங்கள் உள்ளன என்றும், அவற்றை முஸ்லிம்களாகிய நாமும் பள்ளிவாயல்களில் வைத்து வணங்கலாம் என்றும் விளங்கிக் கொள்ளக் கூடாது.
“எல்லாம் அவனே” என்ற வசனத்தில் உலகிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் உள்வாங்கப்படுவதால் அவன் படைத்த அனைத்து வஸ்துக்களின் உருவமும் அவனின் உருவமே என்றுதான் அறிவு ரீதியாக நம்ப வேண்டுமே தவிர ஏனைய மதத்தவர்கள் போல் அல்லாஹ்வைக் குறிப்பிட்ட சில உருவங்களில் கட்டுப்படுத்துவதும், அவற்றை முன் வைத்து வணங்குவதும் கூடாது.
இது தொடர்பான இன்னும் அநேக விபரங்கள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்து வரும் தொடர்களில் பதிவிடுவேன்.
رَأَيْتُ رَبِّيْ فِى صُوْرَةِ شَابٍّ أَمْرَدَ،
“எனது இரட்சகனை முகத்தில் முடி முளைக்காத வாலிபனின் உருவத்தில் கனவுலகில் கண்டேன்” என்ற பலமான நபீ மொழிக்கான விபரங்களும் பதிவிட உள்ளேன்.
வாசக நேயர்கள் ஒரு தொடரைக் கூட தவறவிடாமல் வாசித்து இஸ்லாமிய ஞான தத்துவங்களைப் புரிந்து கொள்ளுமாறும், தம்மால் புரிய முடியாமற் போனால் தரமான மூன்று மௌலவீமார்களுடன் ஒரு வாரம் என்னுடன் தங்கியிருந்து இந்த ஞானத்தைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடும், ஏற்பாட்டோடும் காத்தான்குடி வருமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.