தொடர் 03:
கடந்த தொடர் 02ல் உருவமில்லாத பல வஸ்துக்களை கனவுலகில் உருவத்தில் காணலாம் என்பதற்கு ஈமான், குப்ர், சிறப்பு, திருக்குர்ஆன் – அல்லாஹ்வின் பேச்சு, நேர்வழி, வழிகேடு, இவ்வுலக வாழ்வு முதலான உதாரணங்கள் கூறி கனவுலகில் உருவமில்லாதவற்றை பல பொருத்தமான உதாரணங்கள் மூலம் காணலாம் என்று நான் கூறியிருந்தேன். இதுபோல் உருவமில்லாத அல்லாஹ்வை கனவுலகில் உருவத்தில் காணலாம் என்றும் எழுதியிருந்தேன்.
இவ் உதாரணங்கள் மூலம் அல்லாஹ்வை உருவத்தில் காண முடியும் என்பது எனது கருத்தல்ல. ஸூபீ மகான்கள் அனைவரினதும் கருத்தும் இதுதான். இவ்வாறான கருத்துக்களை ஸூபீ மகான்களின் நூல்களில் மட்டுமே காண முடியும்.
விஷயம் தெரியாத உலமாஉகளிற் சிலர் இப்படியான விஷயங்களை “பிக்ஹ்” சட்ட நூல், “நஹ்வு” மொழியிலக்கண நூல், “தாரீக்” வரலாறு நூற்களில் தேடுவார்கள். இரவு, பகல் முழுவதும் தேடினாலும் இந்த அறிவை குறித்த நூல்களில் பெற முடியாது. வைத்திய நூல்களில்தான் மருந்து தொடர்பான விபரங்களைக் காணலாம். விஞ்ஞான நூல்களில்தான் விஞ்ஞானக் கருத்துக்களைக் காணலாம். இது قَالَ الْجُمْهُوْرُ என்ற வசனத்திற்கு ஜும்ஹூர் இமாம் சொன்னார்கள் என்ற கதையாகிவிடும். அல்லது கி.பி இத்தனையில் பெருமானார் பிறந்தார்கள் என்பதற்கு “கிப்லாவுக்குப் பின்னால் பிறந்தார்கள்” என்று ஓர் ஆலிம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த கதையாகிவிடும். அல்லது كُتُبُ الْأَكْتَابِ இன் கதையாகிவிடும். கடல் மீனை கடலில்தான் பிடிக்க வேண்டும். ஆற்று மீனை ஆற்றில்தான் பிடிக்க வேண்டும்.
உருவமில்லாத அல்லாஹ்வை கனவுலகில் உருவத்தில் காட்டப்படுகின்றபோது தோற்றுகின்ற அந்த உருவங்கள் அவனுக்கு உதாரணங்களாகுமா? நிகர்களாகுமா? என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அவை உதாரணங்கள் என்றுதான் நம்ப வேண்டுமேயன்றி அவற்றை நிகர்கள் என்று நம்புதல் கூடாது. அல்லாஹ்வுக்கு நிகரில்லை. ஆயினும் அவனுக்கு உதாரணங்கள் உள்ளன. அல்லாஹ் திருக்குர்ஆனில் لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ அவன் போல் எதுவுமில்லை என்று ஓர் இடத்திலும், وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ அவனுக்கு நிகராக யாருமில்லை என்று இன்னோர் இடத்திலும் கூறியிருப்பதால் கனவில் தோற்றுபவை உதாரணங்கள் என்று மட்டும்தான் நாம் நம்ப வேண்டுமேயன்றி நிகர்கள் என்று நம்பிவிடலாகாது.
நிகர் – உதாரணம் – “மித்ல்” – “மதல்”.
நிகர் என்பது வேறு. உதாரணம் என்பது வேறு. அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாம். நிகர்தான் கூற முடியாது. அல்லாஹ் திருக்குர்ஆனில் وَللهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்று கூறியுள்ளான்.
ஆகையால் நாம் அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டு என்றும், நிகர் இல்லை என்றுமே நம்ப வேண்டும்.
உலமாஉகளிற் சிலர் விஷயத்தை தவறாகப் புரிந்து கொண்டார்கள். مِثْلْ – مَثَلْ இவ்விரு சொற்களுக்குமிடையிலுள்ள வித்தியாசம் தெரியாமல் உளறுகிறார்கள். இதை இமாம் ஷஃறானீ அவர்கள் விளக்கிக் காட்டுகிறார்கள். கவனியுங்கள்.
“மித்லுன்” – مِثْلٌ என்றால் நிகர் என்று பொருள். مَثَلٌ “மதலுன்” என்றால் உதாரணம் என்று பொருள். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. இது பற்றி பின்வரும் வசனங்கள் மூலம் அல்யவாகீத் நூலாசிரியர் ஷஃறானீ அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
وموضِعُ الغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كالمِثْلِ بكسـر الميم وسُكون المُثَلَّثَةِ ،وذلك خطأ فاحشٌ، فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ، قال تعالى’إنّما مثل الحياة الدنيا كماء أنزلناه من السّماء ‘ والحياةُ لا صورةَ لها ولا شكلَ، والماء ذُو شكلٍ وصورةٍ، وقد مثَّلَ الله تعالى به الحياةَ، وكذلك قولُه تعالى ‘مثلُ نوره كمشكاةٍ فيها مصباحٌ ‘ وغيرُ ذلك،
நான் கீழே எழுதப் போகின்ற விடயம் மிக முக்கியமானது. உலமாஉகளும், மற்றவர்களும் தவறு செய்வது பின்வரும் விடயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமையினால்தான். பின்வரும் விடயத்தை யார் புரிந்து கொள்ளாது போனாலும் உலமாஉகளும், அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். பொது மக்கள் இதை விளங்கிக் கொள்வது கடினமாயிருந்தால் திறமையுள்ள ஒரு மௌலவீயின் உதவியோடு இதை மட்டும் வாசித்தறிந்து கொள்ள வேண்டும்.
இவ்விடயம் எல்லா கிதாபுகளிலும் உள்ள விடயமல்ல. எல்லா விடயங்களும் எல்லா கிதாபுகளிலும் இருப்பதில்லை. மௌலவீமார்களில் தம்மிடம் ஒரு கிதாபும் இல்லாதவர்களும் உள்ளனர் என்பதும், எல்லோராலும் எல்லா கிதாபுகளையும் பார்த்து விளங்க முடியாதென்பதும் நான் அறிந்த விடயம்தான்.
உலகிலுள்ள மொழிகளில் மிகச் சிறந்த மொழி அறபு மொழிதான். அறபு மொழியில் ஒரு “நுக்தா” புள்ளி வித்தியாசப்படுவதால் கருத்தில் பெரிய மாற்றத்தை – விபரீதத்தை தருகின்ற சொற்களும் உள்ளன. இச் சொற்களின் தாற்பரியம் புரியாமல் மாட்டிக் கொண்ட பல மௌலவீமாரின் வரலாறுகளும் உள்ளன. அவற்றை எழுதி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
மேலே நான் எழுதியுள்ள مِثْلٌ – “மித்லுன்”, مَثَلٌ – “மதலுன்” என்ற சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம். தெளிந்து கொள்வோம்.
இவ்விரு சொற்களும் ஒரு பொருளைக் கொண்டதுதான் என்று ஒருவன் சொன்னால் அவன் தவறு செய்துவிட்டான். இவ்விரு சொற்களுக்கும் பொருளில் பெரிய வித்தியாசம் உண்டு.
مِثْلٌ
என்றால் நிகர் என்று பொருள். இதே பொருளில் திருக்குர்ஆனில் ஒரு வசனம் உண்டு. لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ அவனுக்கு – அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை என்பது போன்று. இவ்வசனத்தில் مِثلٌ என்ற சொல் நிகர் என்ற பொருளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இச் சொல்லுக்கு உதாரணம் என்று பொருள் கூற முடியாது. நிகர் என்று மட்டும்தான் பொருள் சொல்ல வேண்டும்.
நிகர் என்ற பொருளுக்கு இச் சொல் இருப்பது போல் இதே பொருளுக்கு كُفُوٌ – “குபுவுன்” என்றும் ஒரு சொல் உண்டு. இச் சொல் அதே பொருளுக்கு திருக்குர்ஆனில் வந்துள்ளது. உதாரணமாக وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَد அவனுக்கு – அல்லாஹ்வுக்கு நிகராக யாருமில்லை என்பது போன்று.
ஒன்று இன்னொன்றுக்கு நிகரானது, சமமானது என்று சொல்வதாயின் அனைத்து அம்சங்களிலும் இரண்டும் ஒன்று போல் இருக்க வேண்டும். மேலே எழுதியுள்ள அறபு வசனத்தில் இந்த விபரம் உண்டு. அறபுக் கல்லூரி மாணவர்களினதும், அறபு மொழியில் திறமையில்லாத மௌலவீமாரினதும் நன்மை கருதி அவ்வசனத்தை மட்டும் இங்கு மீண்டும் எழுதுகிறேன்.
المِثْلُ يستدعي المساواةَ فى جميع الصّفات،
ஒன்று இன்னொன்றுக்கு நிகரானதென்று சொல்வதாயின் எல்லா அம்சங்களிலும் அவ்விரண்டும் ஒன்றுபோல் இருக்க வேண்டும்.
இதை இலகுவாக விளங்குவதற்காக சாதாரண உதாரணம் தருகிறேன். இரண்டு அமெரிக்க டொலர் தாள்கள் போன்று. அல்லது இலங்கை 1000 ரூபாய் “நோட்” தாள்கள் போன்று. இவ்விரண்டில் ஒன்றை மற்றதற்கு நிகராகக் கூறலாம். ஏனெனில் இரண்டும் எல்லா அம்சங்களிலும் ஒன்று போலவே இருக்கும். இது ஓர் உதாரணம்.
ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு தங்க நகை போன்று. இவ்விரண்டில் ஒன்றை மற்றதற்கு நிகராகக் கூறலாம். ஏனெனில் இரண்டும் எல்லா அம்சங்களிலும் ஒன்று போலவே இருக்கும்.
இரண்டு பொருட்கள் எல்லா அம்சங்களிலும் ஒன்றுபோல் இருந்தால் மட்டும்தான் அது இதற்கு நிகரானதென்று நிகர் கூற முடியும்.
اَلْمَثَلُ لَا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ،
مَثَلٌ
– “மதல்” உதாரணம் என்பது நிகர் போன்றதல்ல. ஒன்றுக்கு இன்னொன்றை உதாரணம் சொல்வதாயின் எல்லா அம்சங்களிலும் ஒன்றுபோல் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆயினும் ஏதோ ஓர் அம்சத்திலாவது மற்றது போன்றிருந்தால் உதாரணம் சொல்ல முடியும். உதாரணமாக مَاجَرِيْنْ كَثَعْلَبٍ மாஜரீன் என்பவன் நரி போன்றவன் என்பது போன்றும், سِرَاجٌ كَذِئْبٍ ஸிறாஜ் என்பவன் ஓநாய் போன்றவன் என்பது போன்றுமாகும்.
மாஜரீன் என்பவன் நரி போன்றவன் என்பது உதாரணமேயன்றி நிகரல்ல. அதாவது அவனிடம் நரியின் பண்புகளில் தந்திரம் மட்டும் இருந்தால் போதும். நரிக்கு உதாரணமாகக் கூறலாம். நரியிடமுள்ள முழு அம்சங்களும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறுதான் ஸிறாஜ் என்பவன் ஓநாய் போன்றவன் என்று உதாரணம் சொல்வதுமாகும். அவனில் ஓநாயின் எல்லாத் தன்மைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலுள்ள ஏதோ ஒரு தன்மை – உதாரணமாக உயிரினங்களைக் கொன்று உண்ணும் தன்மை அவனிடம் இருந்தால் மட்டும் போதும். இவனை ஓநாய்க்கு உதாரணமாகக் கொள்ள முடியும்.
நான் மேலே எழுதிய விளக்கத்திலிருந்து நிகர் என்றால் என்ன? உதாரணம் என்றால் என்ன? என்பது தெளிவாகியிருக்கும்.
நமது நாட்டின் பேச்சு நடைமுறையில் “ஈயா பிசின்” என்று சொல்வார்கள். அதாவது பிசின் என்பது ஒரு வகைப் பசை போன்றது. அது எந்த இடத்தில் பட்டதோ அவ்விடத்தில் ஒட்டிக் கொள்ளும். இலகுவில் களராது. ஒருவன் உலோபியாக இருந்தால் அவனை ஈயாப் பிசின் என்று சொல்வார்கள். இதேபோல் எருமை மாடு என்றும் சொல்வார்கள். சரியாகப் புத்தியைப் பயன்படுத்தாமல் வேலை செய்பவனுக்கு எருமை மாட்டை உதாரணம் சொல்வதுண்டு. புத்தியைப் பயன்படுத்தாமல் வேலை செய்வோரை இவ்வாறு சொல்வதுண்டு.
மேலே நான் எழுதிக் காட்டிய அறபு வசனங்களில் திருக்குர்ஆன் வசனம் ஒன்றையும் உதாரணமாக எழுதியிருந்தேன்.
إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ
“உலக வாழ்க்கை வானத்திலிருந்து நாம் இறக்கி வைக்கும் நீர் போன்றது”
இவ்வசனத்தில் உருவமில்லாத உலக வாழ்க்கை உருவமுள்ள நீருக்கு உதாரணமாக கூறப்பட்டுள்ளது. இதிலும் மேற்கூறப்பட்ட விடயத்திற்கு ஆதாரம் உண்டு. சிந்தித்தால் தெளிவாகும்.
فَعُلِمَ أَنَّهُ لَا مِثْلَ للهِ تَعَالَى، وَلَكِنْ لَهُ الْمَثَلُ الْأَعْلَى فِى السَّمَوَاتِ وَالْأَرْضِ، قَالَ: وَمِنْ هُنَا جَوَّزَ الْأَكْثَرُوْنَ مِنَ السَّلَفِ الصَّالِحِ جَوَازَ تَجَلِّيْهِ تَعَالَى لِعَبْدِهِ فِى الْمَنَامِ،
மேற்கண்ட விபரங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் அல்லாஹ்வுக்கு நிகர் இல்லை என்றும், ஆயினும் அவனுக்கு உதாரணம் உண்டு என்றும், நாம் கனவில் காணும் உருவங்கள் அவனுக்கு உதாரணங்களேயன்றி நிகர் இல்லை என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
هذا ما رأيتُه فى كُتُبِ المُتَكَلِّمين،
“முதகல்லிமீன்”களின் நூல்களில் நான் கண்ட விளக்கத்தையே எழுதியுள்ளேன் என்று கூறுகின்றார்கள். இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள்.
ஆதாரம்: அல்யவாகீத்,
பாகம்: 01, பக்கம்: 108
وأما ما رأيته فى كتب الصوفية، فَمِنْ أَفْصَحِهِمْ عبارةً فيه الشّيخ محي الدين رضي الله تعالى عنه، فقال فى الباب الرابع والستين من الفتوحات،
(ஸூபீ மகான்களின் நூல்களில் நான் நோட்டமிட்ட வகையில் இவ்விடயம் தொடர்பாக தெளிவான விளக்கம் கூறியவர்கள் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களேயாவர். இவர்கள் தங்களின் “அல் புதூஹாத்” எனும் நூல் 64ம் பாடத்தில் இது தொடர்பாக எழுதியுள்ள விபரங்களை பின்னால் எழுதுகிறேன்) என்று இமாம் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அல்யவாகீத் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத்,
பாகம் 01, பக்கம் 108.
தொடரும்…