தொடர் 02:
لا إله إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،
“லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திற்கு அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எதுவும் இல்லை என்று பொருள் வரும் இதுவே சூபி மகான்கள் சொல்கின்ற சரியான பொருள்.
“அல்மஃபூது பிகுல்லி மகான்” என்ற வசனத்திற்கு எல்லா இடங்களிலும் வணங்கப்பட்டவன் என்று பொருள் வரும்.
இதற்கான விளக்கம் கடந்த தொடரில் எழுதப்பட்டுள்ளது. அதாவது யார் எவ்விடத்தில் வணங்கினாலும் (பள்ளிவாயில்கள், பன்சலைகள், கோவில்கள், “சர்ச்” தேவாலயங்கள்) எதார்த்தத்தில் அவர் அல்லாஹ்வையே வணங்குகிறார். விக்கிரகங்களையோ, சிலைகளையோ, படைப்புகளையோ வணங்கவில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே. இதற்கு ஆதாரமாக கடந்த தொடரில் திருக்குர்ஆன் வசனம் ஒன்றை கூறியிருந்தேன்.
மேற்கண்டவாறு நான் எழுதியதாலும், கீழ்காணும்வாறு நான் எழுதுவதாலும் விக்கிரக வணக்கத்தையோ, சிலை வணக்கத்தையோ, சிருட்டி வணக்கத்தையோ நான் ஆதரிக்கிறேன் என்று எவரும் என்னை தப்பாக எடை போட்டு விட வேண்டாம் என்று அன்பாய் கேட்டுக் கொள்வதுடன், சிலை வணக்கத்தையோ விக்கிரக வணக்கத்தையோ நான் ஆதரிப்பவன் அல்ல என்பதை திட்டமாகவும், ஆணித்தரமாகவும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.
இவ்வாறு நான் ஆணையிட்டு சொல்வதற்கான காரணம் என்னவெனில், நான் பேசியும், எழுதியும் வருகின்ற “எல்லாம் அவனே” என்ற தத்துவம் புரியாத அரைவேக்காடுகள் எனது பேச்சுள்ள இறுவெட்டுக்களில் இருட்டடிப்புச் செய்தும், கூட்டியும் குறைத்தும் வெளியிட்டு முஸ்லிம் மக்களுக்கு என் மீது தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி வருவதாகும். இவ்வாறு சூழ்ச்சி செய்யும் ஒரு கூட்டம் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் இன்று வரை இருந்தே வருகிறது. அத்தகையோரிற் சிலர் நமது இலங்கை திருநாட்டிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் சதி வலையில் பொதுமக்கள் சிக்கி விடாமல் இருப்பதற்காகவே இவ்வாறு எழுதினேன். இத்தகைய சூழ்ச்சியாளர்கள் பொதுமக்களல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த தொடரில் குர்ஆன் வசனம் ஒன்றை எழுதியிருந்தேன் சிலரின் நன்மை கருதி அதை மீண்டும் எழுதுகிறேன்.
وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
“மனிதர்களில் அநீதி செய்யும் சிலரை வேறு சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் பாதிரிகளின் மடங்களும், கிறித்தவர்களின் வணக்கத்தலங்களும், யூதர்களின் வணக்கத்தலங்களும், முஸ்லிம்களின் “மஸ்ஜித்” பள்ளிவாயில்களும் இவற்றில் அல்லாஹ்வின் பெயர் அதிகமாக கூறப்படுபவை யாவும் இடிக்கப்பட்டு போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாவரையும் மிகைத்தவன். (40-22)
மேற்கண்ட திருவாசனத்தில் பாதிரிகளின் மடங்கள், கிறிஸ்தவர்களின் வணக்கத்தலங்கள், யூதர்களின் வணக்கத் தலங்கள், மற்றும் முஸ்லிம்களின் “மஸ்ஜித்” பள்ளிவாயில்கள் என்று நான்கு வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு, அவற்றில் அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுகின்றன என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
மேற்கண்ட நான்கு வழிபாட்டுத் தலங்களில் முதலில் கூறப்பட்ட மூன்று வழிபாட்டுத் தலங்களிலும் அல்லாஹ் என்ற பெயர் கூறப்படுவதில்லை. நாலாவதாக கூறப்பட்ட பள்ளிவாயில்களில் மட்டுமே அல்லாஹ்வின் பெயர் கூறப்படுகிறது.
மேற்கண்ட திருவசனத்தில் فيها “பீஹா” என்று ஒரு சொல் வந்துள்ளது. இச்சொல்லில் “ஹா” என்ற பிரதி பெயர் முன்னால் கூறப்பட்ட நான்கு வணக்கத் தலங்களையும் குறிக்கும். இதன்படி நான்கு இடங்களிலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுகிறது என்று கருத்து வரும். இக்கருத்து சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த கூடும். அதாவது பள்ளிவாயில்களில் மட்டும் தானே அல்லாஹ்வின் பெயர் கூறப்படுகிறது. ஏனைய மூன்று இடங்களில் அப்பெயர் சொல்லப்படாமல் இருக்கும் நிலையில் இத்திரு வசனத்தில் வந்துள்ள “ஹா” என்ற பிரதிப் பெயர் மேற்குறித்த மூன்று இடங்களையும் எவ்வாறு உள்வாங்கும்? என்ற கேள்விக்கு பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
நான்கு இடங்களில் முன்னால் வந்த மூன்று இடங்களிலும் அல்லாஹ் என்று அறபு மொழியில் தான் சொல்லப்படுவதில்லையேயன்றி அங்கெல்லாம் வழிபடுபவர்கள் தமக்குத் தெரிந்த மொழியில் இறைவனைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக அந்த மூன்று குழுக்களில் தமிழ் மொழி பேசுபவர் இருந்தால் இறைவன் என்றோ, கடவுள் என்றோ சொல்வார். அவர்களில் ஆங்கில மொழி பேசுபவர் இருந்தால் “கோட்” என்று சொல்வார். உர்து, ஹிந்தி மொழி பேசுபவர் இருந்தால் “குதா” என்று சொல்வார். யார் எந்த மொழியில் சொன்னாலும் அது எதார்த்தத்தில் இறைவனை – அல்லாஹ்வை குறிக்கும். இந்த வகையில் குறித்த நான்கு இடங்களிலும் அல்லாஹ்வின் பெயரே சொல்லப்படுகிறது என்பது உண்மையானதே.
மேற்கண்ட இந்த கருத்தின் படி முஸ்லிம்களின் பள்ளிவாயில்களிலும், முஸ்லிம் அல்லாதவர்களின் வணக்கத்தலங்களிலும் அல்லாஹ்வின் பெயரே சொல்லப்படுகிறது என்பதும், எதார்த்தத்தில் அவனே வணங்கப்படுகிறான் என்பதும் தெளிவாகும்.
உலமாஉகளில் நான் கூறிவரும் “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் மேற்கண்டவாறு நான் கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் “பீஹா” என்ற சொல்லில் உள்ள “ஹா” என்ற பிரதிப் பெயர் நான்கு இடங்களில் இறுதியாக சொல்லப்பட்ட “மஸாஜித்” பள்ளிவாயில்களை மட்டும் குறிக்குமேயன்றி, ஏனைய மூன்று இடங்களையும் குறிக்காது என்று கூறுவர். இதை நிறுவுவதற்கு அவர்கள் கூறும் ஆதாரம் பின்வருமாறு.
மொழியிலக்கணத்தில் اَلضَّمِيْرُ يَعُوْدُ إِلَى الْقَرِيْبْ – பிரதிப் பெயர் என்பது தனக்குப் பக்கத்தில் உள்ளதை குறிக்குமேயன்றி, தூரத்தில் உள்ளதை குறிக்காது என்று ஒரு விதி உண்டு. இதை நாமும் ஏற்றுக்கொள்வோம். இவர்களின் கூற்றின்படி கூறப்பட்ட நான்கு வணக்கத்தலங்களில் “பீஹா” என்ற பிரதிப் பெயருக்கு பக்கத்தில் இருப்பது “மஸாஜித்” என்ற முஸ்லிம்களின் வணக்கத்தலத்தை குறிக்கும் சொல்லேயாகும். ஆகையால் “ஹா” என்ற பிரதிப் பெயர் முஸ்லிம்களின் பள்ளிவாயில்களை மட்டும் குறிக்குமேயல்லாது அதற்கு முன்னால் கூறப்பட்ட நான்கையும் குறிக்காது என்று சொல்கிறார்கள். இதுவே அவர்களின் ஆதாரம்.
கடந்த தொடரில் இது பற்றி கூறிய நான் திருக்குர்ஆன் விரிவுரையாளர் இருவரின் திருக்குர்ஆன் விளக்க நூலில் – தப்ஸீரில் அந்த பிரதிப் பெயர் முன்னால் கூறப்பட்ட நான்கு வணக்கத்தலங்களையும் குறிக்கும் என்று கூறியிருப்பதை பதிவு செய்துள்ளேன். அந்த மகான்கள் இந்த அரைவேக்காடுகள் கூறுகின்ற الضمير يعود إلى الأقرب பிரதிப் பெயர் என்பது தனக்குப் பக்கத்திலுள்ளதைக் காட்டும் என்ற விதியை அறியாதவர்கள் அல்ல. சாதாரண இச்சட்டத்தை கூட அறியாதவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் எழுத முன்வர மாட்டார்கள் என்பதை இந்த அரை வேக்காடுகள் அறிந்து கொள்ள வேண்டும்.
சுருக்கம் என்னவெனில் பிரதிப் பெயர் என்பது தனக்குப் பக்கத்தில் உள்ளதைக் குறிக்கும் என்பது “இடம், பொருள், ஏவல்” என்ற பொதுவிதியை கவனித்திற் கொண்டு செயல்படுத்த வேண்டிய ஒன்றாகும். இந்த நடைமுறையை அரைவேக்காடுகள் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன கருத்தை குறித்த திரு வசனம் உணர்த்துகின்றதோ அந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்றவாறு பிரதிப் பெயரை பயன்படுத்த வேண்டும். திரு வசனம் முக்கியத்துவம் கொடுப்பது “வஹ்ததுல் வுஜூத்” – எல்லாம் அவனே என்ற கருத்திற்கேயாகும்.
முஸ்லிம்களின் பள்ளிவாயில்களில் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுவது அனைத்து முஸ்லிம்களும் அறிந்த விடயம்தான். இது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ஏனைய மூன்று இடங்களிலும் அல்லாஹ்வின் பெயர்தான் சொல்லப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமல்ல. எனவே எது சொல்ல வேண்டிய விடயமோ அதை அல்லாஹ் சொல்லியுள்ளான் என்று மனச்சாட்சியோடு புரிந்து கொள்ள வேண்டும்.
لا إله إلا الله المَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ، لا إله إلا الله المَوْجُوْدُ بِكُلِّ زَمَانٍ،
அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றுமில்லை. அனைத்து இடங்களிலும் வணங்கப்பட்டவன் அவன் தான் என்ற முதல் வசனத்திற்கும்,
அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றுமில்லை. எல்லா காலங்களிலும் உள்ளவன் அவன் தான் என்ற வசனத்திற்கும் கடந்த தொடர்களில் விளக்கம் எழுதியுள்ளேன்.
வாசிக்கத் தவறியவர்கள் கடந்த தொடரை வாசிக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது மூன்றாம் வசனத்திற்கு விளக்கம் எழுதுகிறேன்.
لا إله إلا الله المَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانٍ
அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றுமில்லை. எல்லா உபகாரங்கள் கொண்டும் அறியப்பட்டவன் அவன் தான்.
“இஹ்ஸான்” إحسان என்றால் உதவி, உபகாரம் என்று பொருள் வரும்.
“முஹ்ஸின்” مُحْسِنْ என்றால் உதவி செய்பவன், உபகாரம் செய்பவன் என்று பொருள் வரும்.
மனிதனுக்கு உதவி, உபகாரம் செய்பவன் அல்லாஹ் தான். அவனின் உதவி உபகாரம் மனிதர்கள் மூலம் நடக்கும். மனிதன் அல்லாத வேறு உயிரினங்கள் மூலமும் நடக்கும். யார் மூலம் நடந்தாலும் எதார்த்தத்தில் உதவி, உபகாரம் செய்பவன் அல்லாஹ்தான். வேறு யாருமில்லை, வேறு எதுவுமில்லை.
அவனின் உதவி, உபகாரம் அவனின் படைப்புகள் மூலமே வெளியாகும். நடக்கும். கிடைக்கும். இதுவே நியதி. அல்லாஹ் என்று ஒருவன் வந்து எவருக்கும் உதவி செய்வதில்லை.
அல்லாஹ்தான் உதவி, உபகாரம் செய்பவன் என்று நாம் நம்பி உள்ளோம். “ஈமான்” விசுவாசம் கொண்டுமுள்ளோம். ஆயினும் நம்மில் எவருடைய வாழ்விலும் அல்லாஹ் என்று ஒருவன் நம்மிடம் வந்து உதவி, உபகாரம் செய்ததற்கு நம்மில் எவராலும் ஓர் ஆதாரம் கூட காட்ட முடியாது.
எனவே அனைத்து உபகாரங்கள் கொண்டும் அறியப்பட்டவன் அல்லாஹ் தான் என்று நாம் சொல்லிக் கொண்டாலும், நம்பியிருந்தாலும் அவனின் உதவி உபகாரம் நம்மை வந்தடையும் வழியாக அவனின் படைப்புக்களே உள்ளன.
لا إله إلا الله المَذْكُوْرُ بِكُلِّ لِسَانٍ،
அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு வஸ்துமே இல்லை. அல்லாஹ் படைப்புக்கள் அனைத்தின் நாவு கொண்டும், அல்லது மொழி கொண்டும் கூறப்பட்டவனாக உள்ளான்.
தொடரும்….