தொடர் 03:
لا إله إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،
“லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திற்கு அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எதுவும் இல்லை என்று பொருள் வரும் இதுவே சூபி மகான்கள் சொல்கின்ற சரியான பொருள்.
“அல்மஃபூது பிகுல்லி மகான்” என்ற வசனத்திற்கு எல்லா இடங்களிலும் வணங்கப்பட்டவன் என்று பொருள் வரும்.
ஒரு முஸ்லிம் பள்ளிவாயலில் உள்ள தூணையோ, சுவரையோ முன்னோக்கி தொழுவதால் அவன் தூணை வணங்குகிறான் என்றோ, சுவரை வணங்குகிறான் என்றோ முடிவு செய்தல் பிழையாகும், அறிவின்மையாகும்.
ஒரு மகானின் அடக்க விடத்திற்குச் சென்று அவரின் “கப்ர்” அடக்கவிடத்தை முன்னோக்கி அவருக்கு ஸலாம் சொல்வது “கப்ர் வணக்கம்” என்றும், அவ்வாறு செய்பவன் “கப்று வணங்கி” என்றும் நையாண்டி பண்ணும் நவீன அறிவாளிகள் பள்ளிவாயலில் தூணை முன்னோக்கி தொழுபவனை தூண் வணங்கி என்றும், சுவரை முன்னோக்கி தொழுபவனை சுவர் வணங்கி என்றும், “மிஹ்ராப்” உள்ளே நின்று தொழுபவனை – தொழுகை நடத்தும் இமாமை “மிஹ்ராப்” வணங்கி என்றும் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் சொல்வதில்லை. வலீமாரின் கப்ரை முன்னோக்கினால் மட்டுமே அவ்வாறு சொல்வார்கள். இதன் மூலம் அவர்கள் வலீமார் மீதுள்ள வஞ்சகத்தினால் தான் அவ்வாறு சொல்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
எந்த மதத்தவர்களாயினும் அவர்கள் வணங்குவது எதார்த்தத்தில் அல்லாஹ் வைத்தான்
وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வுக்கே சுஜூத் செய்கின்றனர் – சிரம் தாழ்த்துகின்றனர். அல்லாஹ்வையே வணங்குகின்றனர். (15-13)
இத்திரு வசனத்தின் மூலம் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும், கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்லாஹ்வை வணங்குகிறார்கள் என்பதும், சிலைகளையோ, விக்கிரகங்களையோ வணங்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
இத்திரு வசனத்தின் மூலம் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும், மற்றும் உள்ள அனைத்து சிருஷ்டிகளும் அல்லாஹ்வை துதிக்கின்றன என்ற உண்மையும் விளங்குகின்றது.
அல்லாஹ்வின் மேற்கண்ட திருமறை வசனங்கள் மூலம் யார் எங்கு வணங்கினாலும் -பௌத்தர்கள் விகாரையில் வணங்கினாலும், இந்துக்கள் கோவில்களில் வணங்கினாலும், கிறித்துவர்கள் “சர்ச்” தேவாலயங்களில் வணங்கினாலும் அல்லாஹ்வையே வணங்குகின்றனர் – துதிக்கின்றனர். துதிக்குரியவன் அல்லாஹ்வேயன்றி சிலைகளும் அல்ல, விக்கிரகங்களும் அல்ல.
ஒரு முஸ்லிம் எதை முன் வைத்து வணங்காது போனாலும் கூட அவன் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற நம்பிக்கையோடு ஆயிரம் வருடங்கள் வணங்கினாலும் அவனின் வணக்கமும், முஸ்லிமல்லாதவர்கள் எண்ணற்ற உருவங்களில் சிலைகளையும், விக்கிரகங்களையும் முன்வைத்து வணங்கினாலும் கூட அவர்களும் அல்லாஹ் வேறு, அவை வேறு என்று நம்பிக்கையோடு ஆயிரம் வருடங்கள் வணங்கினாலும் இவர்கள் அனைவரும் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற நம்பிக்கையோடு வணங்கினால் அவர்கள் “முஃமின்” விசுவாசியாக முடியாது.
அதே நேரம் ஒரு முஸ்லிம் சிலையையோ, விக்கிரகத்தையோ, வேறு எதையோ முன்வைத்து வணங்காது போனாலும் அவன் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற “ஈமான்” நம்பிக்கையோடும், உணர்வோடும் ஆயிரம் வருடங்கள் வணங்கினாலும் அவனின் வணக்கமும், முஸ்லிம் அல்லாதவர்கள் எண்ணற்ற உருவங்களில் சிலைகளையும், விக்கிரகங்களையும் முன்வைத்து வணங்கிய நிலையில் (مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى) நாங்கள் அவற்றை வணங்கவில்லை. அவை எங்களை அல்லாஹ் அளவில் நெருக்கமாக்கி வைப்பதற்காகவேயன்றி என்று கூறினாலும் இவர்கள் அனைவரும் “ஙெய்ரிய்யத்” படைப்பு வேறு, படைத்தவன் வேறு என்ற நம்பிக்கையோடும், உணர்வோடும் இருக்கும் வரை இவர்கள் விசுவாசிகளாகவும் முடியாது, இவர்களின் வணக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. இவர்கள் அனைவரும் வணங்குவது அல்லாஹ்வையேயானாலும் அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல. காரணம் இவர்களின் நம்பிக்கை – “ஷிர்க்” எனும் இணை வைத்தலை ஏற்படுத்தும் “இஃதிகாத்” நம்பிக்கையாகும்.
இதுவே சூபிகளின் தத்துவமும் இதுவே அவர்கள் கூறும் எதார்த்தமும் ஆகும்.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் 100% ஆனவர்களும் சிலைகளையோ, விக்கிரகங்களையோ தமக்கு முன்னால் வைத்து வணங்கி வழிபாடு செய்யாது போனாலும் கூட அவர்கள் “ஹக்” வேறு, “கல்க்” வேறு – அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற நம்பிக்கையோடு இருப்பார்களாயின் இந் நம்பிக்கை மட்டுமே விக்கிரகம், சிலைகளை முன்வைத்து வணங்குவதை விட கொடிய “ஷிர்க்” ஆகும் என்பது சூபிகளின் கொள்கையாகும். இதை இன்னோர் தெரிந்து செயல்பட வேண்டும்.
விக்கிரகம், சிலையை வணங்குபவர்களிடம் நீங்கள் சிலையையும் விக்கிரகங்களையும் ஏன் வணங்குகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் பின்வருமாறு பதில் சொல்பவர்களாக இருந்தார்கள்
مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى
நாங்கள் அவற்றை சிலைகளை, விக்கிரகங்களை வணங்க மாட்டோம், வணங்குவதில்லை . அவை எங்களை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைப்பதற்காகவேயன்றி என்று பதில் சொல்வார்கள். இவர்களின் இந்த பதில் சிலையையும், விக்கிரகங்களையும் அல்லாஹ்வுக்கு வேறானவையாக அவர்கள் நம்புகிறார்கள் என்று கூறுகிறது. இது இஸ்லாம் கூறும் கொள்கை அல்ல.
முஸ்லிம்கள் தொழுகையின் போது அல்லது வணக்க வழிபாட்டின் போது தூண், சுவர் போன்ற ஒன்றை முன்னோக்குவதற்கும், முஸ்லிம் அல்லாதவர்கள் தமது வணக்க வழிபாட்டின் போது சிலைகள் விக்கிரகங்களை முன்னோக்குவதற்கும் மத்தியில் “நிய்யத்” எண்ணத்தில் வித்தியாசம் உண்டு. முஸ்லிம்களின் எண்ணம் வேறு, மற்றவர்களின் எண்ணம் வேறு.
முஸ்லிம்கள் தொழுகையின் போது அல்லது வணக்கத்தின் போது எந்த ஒரு பொருளையும் முன்னோக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. தொழுகையின் போது அவர்கள் எங்கிருந்தாலும் திரு மக்கா நகரில் உள்ள திரு க ஃபாவையே முன்னோக்க வேண்டும். இது தவிர வேறு எதையும் முன்னோக்க வேண்டும் என்பது விதி அல்ல. அதை முன்னோக்கும் போது கூட இந்த கஃபாவும் அவனின் வெளிப்பாடுகளில் ஒன்று தான் என்றும், அது அவன் அல்லாத, அவனுக்கு வேறான ஒன்றல்ல என்றும் நம்பினவனாய் இருத்தல் வேண்டும். இவ்வாறு நம்பாதவரும் பிழை செய்தவராகி விடுவார். முஸ்லிம் அல்லாதவர்களோ தாம் முன் வைத்து வணங்கும் சிலைகள், விக்கிரகங்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு வேறானவை என்றும், அவை அவர்களை அல்லாஹ்வின்பால் நெருக்கமாகி வைக்கின்றன என்றும் நம்பினவர்களாகவே முன்னோக்குகின்றனர். அவர்களின் அந்த நம்பிக்கை சிலைகளும், விக்கிரகங்களும் வேறு, அல்லாஹ் வேறு என்று அவர்கள் நம்பியிருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாகும்.
இதன் மூலம் முஸ்லிம்களின் “நிய்யத்” எண்ணம் எவ்வாறானது என்றும், மற்றவர்களின் எண்ணம் எவ்வாறானது என்றும் விளங்க முடிகிறது.
தூணையோ, சுவரையோ முன்னிலைப்படுத்தி தொழுபவர்களில் எவரும் சிலைகளையும், விக்கிரகங்களையும் முன்னோக்கி வணங்குபவர்கள் சொல்கின்ற காரணம் போன்று சொல்வதில்லை. இவர்கள் தூணையும், சுவரையும் அல்லாஹ்வின் வேறுபடாத வெளிப்பாடு என்று மட்டுமே நம்புகிறார்கள். இவ்வாறு நம்பாமல் காபிர்கள் போல் தூணும், சுவரும் அல்லாஹ்வின் பால் தம்மை நெருக்கமாக்குகின்றன என்று நம்பினால் இவர்களும் காபிர்கள் பட்டியலில்தான் சேர வேண்டும்.
இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் புகாரி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புகாரீ எனும் நூலில் ஒரு விடயத்திற்கு தலைப்பு எழுதுகையில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
بَابُ مَنْ صَلَّى وَقُدَّامَهُ تَنُّورٌ أَوْ نَارٌ، أَوْ شَيْءٌ مِمَّا يُعْبَدُ، فَأَرَادَ بِهِ اللَّهَ
தலைப்பின் பொருள்:
தொழுகின்ற ஒருவனுக்கு முன்னால் ஓர் அடுப்பு, அல்லது நெருப்பு, அல்லது வணங்கப்படுகின்ற ஏதோ ஒன்று இருக்கும் நிலையில் அதை அவன் அல்லாஹ் என்று நினைப்பானாயின் – நாடுவானாயின் என்பதாகும்.
இதன் கருத்து என்னவெனில் மேலே கூறப்பட்ட அடுப்பு, நெருப்பு அல்லது வணங்கப்படுகின்ற ஏதோ ஒன்று தொழுபவனுக்கு முன்னால் இருந்து, அதை அல்லாஹ் என்று தொழுபவன் நினைத்தானாயின் அதாவது அது அல்லாஹ்வுக்கு வேறானதல்ல என்று நினைத்தானாயின் அவன் காபிர் ஆகவுமாட்டான், அவனின் தொழுகை பிழையாகி விடவுமாட்டாது என்பதாகும்.
இவ்வாறுதான் தூணுக்கு முன்னால் நின்று தொழுபவனும், சுவருக்கு முன்னால் நின்று தொழுபவனும் ஆவான். அவ்விரண்டு கொண்டும் அல்லாஹ்வை நாடினால் மட்டும் அவன் தொழுகை பிழையாகி விடாது. அவன் அவ்விரண்டு கொண்டும் அல்லாஹ்வை நாடாமல், அவை அல்லாஹ்வுக்கு வேறானவை என்று நாடினால் – கருதினால் அல்லது காபிர்கள் சொன்னது போல் அவ்விரண்டும் எங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கின்றன என்று கருதுவானாயின் – நம்புவானாயின் அவனின் தொழுகையும் வீணாகிவிடும். அவன் அல்லாஹ்வையும் படைப்பையும் வேறாக்கிய “முஷ்ரிக்” ஆகியும் விடுவான்.
இதுவரை இத்தொடரில் எழுதிய விளக்கத்திலிருந்தும், இதற்கு முந்தின தொடர்களில் எழுதிய விளக்கத்திலிருந்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் எந்த மதத்தைச் சேர்ந்தவனாயினும் அவன் எந்த இடத்தில் வணங்கினாலும் எதார்த்தத்தில் வழங்கப்படுபவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாரும் இல்லை, வேறு எதுவும் இல்லை என்று புரிந்து நம்ப வேண்டும். ஆயினும் அவ்வணக்கம் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, அல்லது மறுக்கப் பட்டதாக ஆவது வணங்குபவனின் “இஃதிகாத்” நம்பிக்கையைப் பொறுத்தாகும். அதாவது “ஙெய்ரிய்யத்” என்ற வேற்றுமை உணர்வுடன் வணங்கினால் அது காபிர்களின் வணக்கம் போன்று மறுக்கப்பட்டதாகும். மாறாக “ஐனிய்யத்” என்ற அத்வைத நம்பிக்கையுடன் வணங்கினால் மட்டுமே அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை மறுப்பவர்கள் இக்கருத்தை மறுப்பார்கள். மறுப்பவர்கள் காபிர்கள் சிலைகளை, விக்கிரகங்களை முன்னோக்கி வணங்குவதற்கும், வேற்றுமை உணர்வுடன் தூணையோ, சுவரையோ, அல்லது வேறு எந்த படைப்பையோ முன்னோக்கி வணங்கும் துவிதம் பேசும் – துவிதத்தை நம்பும் லேபல் முஸ்லிம்களின் வணக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவு படுத்த வேண்டும்.
மேலே நான் எழுதியுள்ள தத்துவங்கள் படித்தவர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஒன்று கூடி ஆய்வு செய்து அறிய வேண்டிய ஒரு தத்துவமாகும். இந்தத் தத்துவம் இமாம் மன்சூர் ஹல்லாஜ், சூபீகளின் தலைவர் இமாம் ஜுனைத் பக்தாதி, மற்றும் தரீகாவின் தாபகர்களான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை, மற்றும் அவர்கள் போன்ற மகான்கள், இறைஞான மேதைகள் பேசி வந்த தத்துவமேயாகும். திருக்குர்ஆனில் தெளிவாக சொல்லப்பட்ட தத்துவமும், நபி மொழிகளில் சொல்லப்பட்ட தத்துவமுமாகும்.
இத்தத்துவம் கடல் கடந்தும், மலைகள், காடுகள் கடந்தும், பெருந்தொகைப் பணம் செலவிட்டும் பெற வேண்டிய உயிரினும் மேலான பெருந் தத்துவமாகும். இத்தத்துவம் அறிந்தவர்கள் காலப்போக்கில் மறைந்து போனதினால் இன்று இதை கூறும்போது கேட்போருக்கு இது புதியதாயும், ஹதீதுகளுக்கு முரணானது போலும் விளங்குகிறது. இதனால் பலர் இதை எதிர்க்கின்றனர்.
யார் எதிர்த்தாலும், யார் “பத்வா” கொடுத்தாலும், யார் எவ்வாறுதான் துன்புறுத்தினாலும், இன்னலை தந்தாலும் உடல் ஆரோக்கியம் உள்ளவரை என் பணியை தீனுக்காக தொடர்வேன் என்பதை பொது மக்களின் கவனத்திற்கு தந்து அவர்களைப் பொறுமையோடும், நிதானத்தோடும் இவ்விடயத்தில் நடந்து கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். உலமாஉகளுக்கோ, பொது மக்களுக்கோ இத் தத்துவத்தை அறியும் நோக்கம் இருந்தால் மட்டும் தூய மனதோடு என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
தொடரும்….