தொடர் 04 :
لا إله إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،لَا إله إِلَّا اللهُ الْمَوْجُوْدُ بِكُلِّ زَمَانٍ، لَا إله إِلَّا اللهُ الْمَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانٍ، لَا إله إِلَّا اللهُ الْمَذْكُوْرُ بِكُلِّ لِسَانٍ،لَا إله إِلَّا اللهُ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ، لا إله إلا الله اَلْأَمَانْ اَلْأَمَانْ، مِنْ زَوَالِ الْإِيْمَانْ، وَمِنْ شَرِّ الشَّيْطَانْ، وَمِنْ ظُلْمِ السُّلْطَانْ، اَللهم يَا قَدِيْمَ الْإِحْسَانْ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنْ،
இந்த “துஆ” தொடர்பாக மூன்று தொடர்கள் எழுதியுள்ளேன். கடந்த தொடர்களைப் பார்க்கத் தவறியவர்கள் அவற்றைத் தேடிப் பார்த்துக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா இடங்களிலும் வணங்கப்பட்டவன் அல்லாஹ்தான் என்ற வசனத்திற்கும், அதையடுத்த எல்லாக் காலங்களிலும் உள்ளவன் அல்லாஹ் மட்டும்தான் என்ற வசனத்திற்கும் விளக்கம் எழுதியிருந்தேன்.
இவ் ஓதலை ஐங்காலத் தொழுகைக்குப் பின்னும் ஓதி வந்தால் “ஈமான்” ஈடேற்றமாகும் என்று அவ்லியாஉகளிற் பலர் கூறியுள்ளார்கள். ஆகவே, அவர்கள் சென்ற வழியில் நாமும் செல்வோம்.
மூன்றாவது வசனத்திற்கான பொருளையும், விளக்கத்தையும் எழுதுகிறேன்.
لَا إله إِلَّا اللهُ الْمَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانٍ،
அனைத்து உதவி, உபகாரம் கொண்டும் அறியப்பட்டவன் அல்லாஹ்தான். எவராயினும், அரசனாயினும், ஆண்டியாயினும் எவருக்கும் உதவி உபகாரம் செய்பவன் அல்லாஹ் மட்டும்தான். வேறு எவருக்கும் உதவி உபகாரம் செய்யும் சக்தி கிடையாது. எவனுக்காவது சுயமாக உதவி செய்யும் சக்தி உண்டு என்று ஒருவன் நம்பினால் அவன் “ஈமான்” விசுவாசத்தை இழந்தவனாகிவிடுவான்.
சுயமாக உதவி உபகாரம் செய்யும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. எப்போதும், எங்கேயும், எவருக்கும் “அல்லாஹ்” என்று ஒருவன் வந்து உதவி உபகாரம் செய்வதுமில்லை. செய்ததற்கு வரலாறுமில்லை.
அல்லாஹ் ஒருவனுக்கு உதவி உபகாரம் செய்ய நாடினால் யாரோ ஒருவனின் உள்ளத்தில் அவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துவான். அதற்கான பொருளாதார வசதியையும் அவனுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான். அவன் யாருக்கு உதவி செய்ய வேண்டுமோ அவனிடம் சென்று அவனுக்கு உதவி செய்வான். உதவியைப் பெற்றவன் இன்னான் எனக்கு உதவி செய்தான் என்று சொல்வான். உதவி செய்தவனின் பெயர் முசம்மில் என்றிருந்தால் முசம்மில் உதவி செய்தான் என்று சொல்வான். உதவி செய்தவள் பெண்ணாயிருந்து அவளின் பெயர் ஆயிஷா என்றிருந்தால் ஆயிஷா உதவி செய்தாள் என்று சொல்வான். இன்னும் சிலர் அல்லாஹ் உதவி செய்துவிட்டான் என்று சொல்வர். இவ்வாறு அவர்கள் சொன்னாலும் எதார்த்தம் புரியாமல் சொல்வார்களேயன்றி எதார்த்தம் எவ்வாறு என்று புரிந்து சொல்லமாட்டார்கள். ஆயினும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை விளங்கிய ஒருவன் அவ்வாறு சொன்னால் அவன் எதார்த்தம் எதுவோ அதை உணர்ந்துதான் சொல்வான்.
இங்கு நடந்தது என்ன? அல்லாஹ் என்றொருவன் அர்ஷிலோ, அல்லது வேறெங்கேயோ இருந்து கொண்டு முசம்மிலுடைய மனதில் அல்லது ஆயிஷாவின் மனதில் இன்னானுக்கு உதவியுபகாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தான். அவர்கள் செய்தார்கள் என்றுதான் மனிதர்களில் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தெரியாதவர்கள் அனைவரும் நம்புகிறார்கள். வெளியில் மற்றவர்களிடம் சொல்லியும் வருகிறார்கள். இது “வஹ்ததுல் வுஜூத்” தெரியாதவர்களின் நம்பிக்கையாகும். இவ்வாறு நம்புதல் பிழை மட்டுமல்ல. இவ்வாறு நம்புதல் “ஷிர்க்” என்ற இணையை ஏற்படுத்திவிடவும் சாத்தியமுண்டு.
“முஃதீ” مُعْطِيْ என்ற திரு நாமம் அல்லாஹ்வுக்குரியதாகும். இதன் பொருள் கொடுப்பவன் என்பதாகும். مَانِعْ “மானிஉ” என்றும் அவனுக்கு ஒரு திரு நாமம் உண்டு. இதன் பொருள் தடுப்பவன் என்பதாகும். இதன்படி எதார்த்தத்தில் கொடுப்பவனும் அவனே, தடுப்பவனும் அவனேயாவான். அவன் தவிர வேறெவருக்கும் கொடுக்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது.
اَللهم لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا رَادَّ لِمَا قَضَيْتَ، وَلَا مُبَدِّلَ لِمَا حَكَمْتَ،
இது ஹதீதுகளில் இடம் பெற்ற வசனங்களாகும். இதன் பொருள்:
யா அல்லாஹ்! நீ கொடுப்பதைத் தடுக்க எவராலும் முடியாது. நீ தடுத்ததைக் கொடுக்கவும் எவராலும் முடியாது. நீ தீர்ப்புச் செய்ததை தட்டுவதற்கும் எவராலும் முடியாது. நீ தீர்ப்புச் செய்ததை மாற்றுவதற்கும் எவராலும் முடியாது.
எனவே, ஒரு முஸ்லிம் கொடுப்பவனும் அவனே, தடுப்பவனும் அவனே என்றும், அவன் தவிர வேறெவராலும் எதைக் கொடுக்கவும் முடியாது, எதைத் தடுக்கவும் முடியாது என்றும் நம்ப வேண்டும் .
அல்லாஹ் مُعْطِيْ கொடுப்பவன் என்று நாம் நம்புகிறோம். எப்போதாவது அல்லாஹ் என்றொருவன் நம்மிடம் வந்து ஏதாவது தந்தள்ளானா? அல்லது இன்னொருவர் தந்ததை தடுத்துள்ளானா?
அல்லாஹ்வுக்கு رَزَّاقْ உணவளிப்பவன் என்று ஒரு பெயர் உண்டு. இவ்வாறு நாம் நம்பியுமுள்ளோம். ஆனால் அல்லாஹ் என்றொருவன் எப்போதாவது எம்மிடம் வந்து நான்தான் அல்லாஹ் என்று சொல்லி “ரிஸ்க்” தந்துள்ளானா? இவ் உலக வரலாற்றில் இவ்வாறு நடந்ததுண்டா?
அல்லாஹ்வுக்கு حَافِظْ என்று ஒரு திரு நாமம் உண்டு. பாதுகாப்பவன் என்பது இதன் பொருள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் பல சமயங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறான். எப்போது எங்கே யார் பாதுகாத்தாலும் மனிதன்தான் பாதுகாக்கின்றானேயன்றி அல்லாஹ் என்று ஒருவன் வந்து எவரையும் பாதுகாப்பதில்லை. இவ்வாறு பாதுகாத்ததற்கு வரலாறுமில்லை.
ஒருவன் மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறான். அவ்வேளை யா அல்லாஹ்! என்று பாதுகாப்புத் தேடுகிறான். கீழே நால்வர் அவனைப் பிடித்துப் பாதுகாத்தார்கள். அவன் அவர்களிடம் நீங்கள் இல்லையெனில் நான் இன்று கப்றுக்குள் போக வேண்டியவன் தான் என்று சொல்கிறான். அதாவது நீங்கள் நால்வரும் என்னைப் பாதுகாத்து விட்டீர்கள் என்று சொல்கிறான். உண்மையிலும், எதார்த்தத்திலும் இவனைப் பாதுகாத்தவன் அல்லாஹ்தான். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. ஏனெனில் பாதுகாப்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை. அவன் இவ்வாறு சொன்னாலும் அவன் “மஜாஸ் அக்லீ” அடிப்படையிலேயே இவ்வாறு சொன்னான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற கோட்பாட்டின் படி எல்லாச் செயலும் அவனின் செயலாகவே இருக்க வேண்டும். இதுவே நியதி. எல்லாம் அவன் என்று ஏற்றுக் கொள்ளும் ஒருவன் எல்லாச் செயலும் அவனின் செயலென்று ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாம் அவன்தான். ஆனால் எல்லாச் செயல்களும் அவனின் செயல் என்று ஏற்றுக் கொள்ள முடியாதென்று ஒருவன் சொன்னால் அவன் புத்தியில்லாதவனாக, அல்லது புத்தி குறைந்தவனாகவே இருப்பான்.
“தவ்ஹீதுத் தாதி” تَوْحِيْدُ الذَّاتِ “தாத்” ஒன்றுதான் என்று ஒன்றாக்கி வைத்தல் போல் تَوْحِيْدُ الْأَفْعَالْ செயல்கள் எல்லாம் ஒன்றுதான் என்று செயல்கள் அனைத்தையும் ஒன்றாக்கி – அவனின் செயலாக்கி வைத்தல் வேண்டும்.
அல்லாஹ்வின் திரு நாமங்களில் “அல்லாஹ்” என்ற திரு நாமம் மட்டும்தான் “தாத்”தின் திரு நாமமாகும். ஏனைய திரு நாமங்கள் யாவும் “ஸிபாத்” தன்மைகளைக் காட்டும் திரு நாமங்களாகும். இவை 99 أَسْمَاءُ الْإِسْمِ இஸ்முடைய இஸ்ம்கள் – அதாவது பெயரின் பெயர்கள் என்று சொல்லப்படும். இதனால்தான் அல்லாஹ் என்ற திரு நாமம் جَامِعُ الْأَسْمَاءِ எல்லாத் திரு நாமங்களையும் ஒன்று சேர்த்த திரு நாமம் எனப்படும். அதாவது 99 திருநாமங்கள் அனைத்தும் அல்லாஹ் எனும் திரு நாமத்தின் வயிற்றினுள் உள்ளதாகும்.
அல்லாஹ்வுக்கு “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் எத்தனை திரு நாமங்கள் என்று எவராலும் சொல்ல முடியாது. எல்லாப் படைப்புக்களும் அவனுடைய “தாத்”தின் வெளிப்பாடு என்ற அடிப்படையில் அவனின் பெயருக்கு எல்லையுமில்லை, இத்தனை என்ற கணக்குமில்லை.
அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகள் அவனின் مَظَاهِرْ – மளாஹிர் கண்ணாடிகள் எனும் படைப்புக்கள் மூலமே வெளியாகும்.
எனவே, لَا إله إِلَّا اللهُ الْمَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانٍ அவன் அனைத்து உதவியுபகாரங்கள் கொண்டும் அறியப்பட்டவன் என்ற வசனத்தின் சுருக்கம் என்னவெனில் மனித உருவத்திலோ, அல்லது வேறு ஏதேனும் ஓர் உருவத்திலோ மனிதனுக்கு உதவி உபகாரம் செய்பவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை என்பதை திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்த வசனம் لَا إله إِلَّا اللهُ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ என்ற வசனம். இதன் பொருள்:
ஒவ்வொரு விநாடியிலும் அவன் ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்பதாகும்.
இத்திரு வசனத்தில் ஆராய வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று يَوْمْ – “யவ்ம்” என்ற சொல். இதற்கு ஒரு நாள் என்று பொருள் வரும். இங்கு இதற்கு இவ்வாறு பொருள் சொல்வது பொருத்தமற்றதென்று நான் கருதுகிறேன். இதற்கு ஒவ்வொரு நொடியிலும் என்று பொருள் கொள்வதே மிகப் பொருத்தமானது.
ஏனெனில் சாதாரண ஒரு மனிதனே ஒரு நாளில் பல வேலைகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் பதினான்கு உலகங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனுக்கு ஒரு நாளில் ஒரு வேலை என்று சொல்வது பொருத்தமற்றது. எனவே, يَوْمْ – “யவ்ம்” என்ற சொல்லுக்கு ஒரு நாள் என்று பொருள் கொள்ளாமல் ஒரு நொடி என்று பொருள் கொள்ள வேண்டும். “யவ்ம்” என்ற சொல்லுக்கு ஒரு நொடி என்ற பொருள் அகராதியில் உள்ளதா? என்று அகராதியைப் புரட்டத் தேவையில்லை. “யவ்ம்” என்ற சொல்லுக்கு ஒரு நாள் என்று பொருள் கொள்ளாமல் ஒரு நாளில் உள்ள ஒவ்வொரு நொடியையும் கருத்திற் கொள்ள வேண்டும். “யவ்ம்” என்ற சொல்லுக்கு ஒரு நொடியென்று எவ்வாறு பொருள் கொள்ள முடியும்? என்று ஒருவர் கேட்பாராயின் இந்தப் பொருள் எந்த ஒரு அகராதியிலும் கிடையாது. ஆயினும் திருக்குர்ஆனில் உள்ளது. إِطْلَاقُ الْكُلِّ وَإِرَادَةُ الْجُزْءِ “தொகுதியைச் சொல்லி பகுதியை நாடுதல்” என்று ஓர் அம்சம் உண்டு. அந்த அம்சமே இங்கு கையாளப்பட்டுள்ளதென்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக் கூறி அந்த நாளில் உள்ள ஒவ்வொரு நொடியையும் கருத்தில் கொள்தல். இதன்படி ஒரு நாள் 24 மணித்தியாலங்களில் எத்தனை நொடிகள் உள்ளனவோ அத்தனை நொடிகளும் அவன் வேலையில் உள்ளான் என்று பொருள் வரும். ஒரு நாளைக்கு ஒரு வேலையில் மட்டுமல்ல என்று விளங்க வேண்டும்.
“ஷஃன்” شَأْنْ என்ற சொல்லுக்கு ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்று பொருள் கொண்டாலும் அதன் கருத்து ஒவ்வொரு “தஜல்லீ” வெளியாதலிலும் உள்ளான் என்று விளங்கிக் கொள்தல் வேண்டும்.
اَلشُّؤُوْنُ الذَّاتِيَّةْ
என்றும், اَلشُّؤُوْنُ الْخَارِجِيَّةْ என்றும் இரண்டு அம்சங்கள் உள்ளன. அவன் நாடும் பொருட்கள், படைப்புக்கள் அவனின் “தாத்”தில் இருக்கும் வரை அவை முதலில் சொல்லப்பட்ட பெயர் கொண்டும், “தாத்”திலிருந்து அவை வெளியானபின் அவை இரண்டாவதாகச் சொல்லப்பட்ட பெயர் கொண்டும் அழைக்கப்படும்.
மேற்கண்ட இவ் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின் ஓதி வந்தால் “ஈமான்” ஈடேற்றம் பெறும்.
முற்றும்.