தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இதன் பொருள் “தாத்” உடைய விஷயங்கள் – கருமங்கள் என்பதாகும். “ஷுஊன்” என்ற சொல் பன்மைச் சொல். இதன் ஒருமை “ஷஃன்” என்று வரும். “அத்தாதிய்யா” என்ற சொல் “தாத்” என்ற சொல்லின் “நிஸ்பத்” ஆகும். இதன் பொருள் (“தாத்”துடன் சம்பந்தப்பட்ட) என்று வரும். இரு சொற்களையும் சேர்த்தால் (“தாத்”துடன் தொடர்பான விஷயங்கள் – கருமங்கள்) என்று பொருள் வரும்.
இவ்விடயம் இறைஞான வழி நடக்கின்ற ஒவ்வோர் ஆணும், பெண்ணும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயமாகும். “ஷரீஆ” வழியில் மட்டும் செல்பவனுக்கு இது அவசியமில்லாது போனாலும் (தரீகா, ஹகீகா, மஃரிபா, தஸவ்வுப் – ஸூபிஸ) வழி நடக்கின்றவர்களுக்கு இது அவசியமாகும். “ஷரீஆ” வழியில் நடப்பவர்களுக்கு இவ் அறிவு அவசியமில்லாது போனாலும் இதை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையானால் அவர்களின் நம்பிக்கை – “ஈமான்” உறுதியாகாது. தள்ளாடிக் கொண்டே இருக்கும்.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் நான்கு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் “ஷரீஆ, தரீகா” இரு வழிகளிலும் செல்பவர்களாவர். இன்னொரு பிரிவினர் “ஷரீஆ” வழியில் மட்டும் செல்பவர்களாவர். இன்னொரு பிரிவினர் “தரீகா” வழியில் மட்டும் செல்பவர்களாவர். இன்னொரு பிரிவினர் ஒரு வழியிலும் செல்லாமல் வாழ்பவர்களாவர்.
இந்நான்கு பிரிவினர்களில் “ஷரீஆ”வை மட்டும் பின்பற்றிச் செல்பவர்களே அதிகமானவர்களாவர். இவர்களை அடுத்து “ஷரீஆ, தரீகா” இரண்டையும் பின்பற்றிச் செல்பவர்களைக் குறிப்பிடலாம். இவர்களை அடுத்து “தரீகா”வை மட்டும் பின்பற்றிச் செல்பவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் மிகவும் குறைந்தவர்களாவர். இதையடுத்து ஒன்றையும் பின்பற்றாமல் தமது விருப்பத்தின் படி வாழ்பவர்களைக் குறிப்பிடலாம்.
இவர்களிற் சிறந்தவர்கள் இரு வழிகளையும் பின்பற்றிச் செல்பவர்களேயாவர். ஏனெனில் இவர்கள் மட்டும்தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள படி இரு வழிகளையும் பின்பற்றிச் செல்பவர்களாவர். அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.
لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا
“உங்களில் ஒவ்வொருவருக்கும் “ஷிர்அதன்” எனும் “ஷரீஆ”வையும், “மின்ஹாஜன்” எனும் “தரீகா”வையும் ஆக்கித் தந்துள்ளோம்” என்று கூறியுள்ளான். (05-48)
இத்திரு வசனத்தில் இரண்டு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று “ஷிர்அத்” என்ற சொல் “ஷரீஆ”வையும், “மின்ஹாஜன்” என்ற சொல் “தரீகா”வையும் குறிக்கும். இதன் படி ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கண்ட இரு வழிகளிலும் செல்ல வேண்டும் என்பது அவசியமாகிறது.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் இரு வழிகளையும் பின்பற்றிச் செல்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். ஒரே நேரத்தில் – சம காலத்தில் இரு வழிகளையும் இரு விழிகளாகக் கருதிச் செயல்பட வேண்டும்.
இவ் அடிப்படையில் பொதுவாக முஸ்லிம்கள் அனைவரும், குறிப்பாக இறைஞான வழி, தரீகா வழி, ஸூபிஸ வழி நடப்பவர் அனைவரும் அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டு என்று குறைந்த பட்சமேனும் நம்ப வேண்டும்.
இன்று உலகில் சுமார் 200 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் இவர்களில் அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டு என்று மட்டுமாவது நம்பினவர்கள் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என்று ஒரு கற்பனையில் நாம் கணக்கெடுத்தால் சுமார் 10 இலட்சம் பேர் இருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் இது பெரிய தொகைதான். இவர்கள் தவிரவுள்ள ஏனைய முஸ்லிம்கள் அனைவரும் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களாக இருப்பார்கள்.
இவ்வாறு நம்பினவர்களே இந்த அளவுதான் இருப்பார்கள் என்றால் அல்லாஹ்வின் “தாத்” பற்றி விளக்கமாகவும், விரிவாகவும் அறிந்தவர்கள் ஓர் இலட்சம் பேர்களில் நூறு பேர்கள் இருப்பார்கள் என்றே கணக்கெடுக்க வேண்டும். இந்த வகையில் இக்காலத்தைப் பொறுத்த வரை குறித்த 10 இலட்சம் பேர்களில் 1000 – ஆயிரம் பேர்கள் மட்டுமே உண்மை விசுவாசிகளாயிருப்பார்கள் என்பதே எனது கணிப்பு.
அல்லாஹ்வின் “தாத்” படைப்புக்களின் “தாத்”துகளுக்கு முற்றிலும் மாறானது. இக்கருத்தையே لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ அவன் போல் எந்த ஒரு வஸ்தும் இல்லை. அவனே கேட்பவனும், பார்ப்பவனுமாவான். (42-11) என்ற திரு வசனம் வலியுறுத்துகிறது. இதேபோல் وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ அவனுக்கு நிகராக எதுவுமில்லை. (112-04) என்ற வசனமும் வலியுறுத்துகிறது.
இவ் அடிப்படையில் அவனுக்கு நிகராக – அவன் “தாத்”திற்கு நிகராக – “வுஜூத்” உள்ளமைக்கு நிகராக ஒன்றுமேயில்லை, யாருமே இல்லை என்று நம்புதல் அவசியமாகும்.
அல்லாஹ் என்ற பெயர் மட்டுமே அந்த “தாத்”தின் பெயராகும். அவனின் 99 திரு நாமங்களும் அவனின் “ஸிபாத்” தன்மைகளைக் குறிக்கும் திரு நாமங்களேயன்றி அவற்றில் ஒன்று கூட அவனின் “தாத்”தைக் குறிக்கும் திரு நாமம் அல்ல. அவையாவும் அல்லாஹ் எனும் திரு நாமத்தின் திரு நாமங்களாகும். இதனால்தான் அல்லாஹ் எனும் திரு நாமம் جَامِعُ الْأَسْمَاءِ ஏனைய எல்லாத் திரு நாமங்களையும் உள்வாங்கிய திரு நாமம் என்று ஸூபீ மகான்கள் சொல்வர். இதுவே “இஸ்முல் அஃளம்” என்றும் அவர்கள் சொல்வர். இதில் கருத்து வேறுபாடு உண்டு. விபரமாக எழுத இக்கட்டுரை இடம் தராது.
அல்லாஹ் படைப்புகள் அனைத்தையும் படைக்குமுன் அவை யாவும் அவனின் “தாத்”திலேயே இருந்தன. கடல்களும், மலைகளும், வாவிகளும், குளங்களும் அந்த “தாத்”தில்தான் இருந்தன. மனிதர்களும், ஜின்களும், மற்றுமுள்ள மரம், செடி, கொடிகள் என்பனவும் அவனின் “தாத்”திலேயே இருந்தன.
இதற்கு உதாரணம் கூறி விளக்கி வைத்தால் மந்த புத்தியுள்ள மனிதர்களும், ஆய்வுத் திறமையற்ற ஆலிம்களும், கல்வியோடு தொடர்பில்லாதவர்களும் பயன் பெறுவர் என்று நம்புகிறேன்.
ஒரு மைக் கூட்டில் மை உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அந்த மை மூலம் – அது கொண்டு எதெல்லாம் எழுத முடியுமோ அதெல்லாம் எழுதவும் முடியும், படங்கள் வரையவும் முடியும் என்றும் வைத்துக் கொள்வோம். அவை அனைத்தையும் அந்த மை தன்னுள் வைத்திருப்பது மறுக்க முடியாத உண்மை என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.
இப்போது அந்த மையில் அடங்கியுள்ள எழுத்துக்களும், படங்களும் அந்த மை தானானவையா? அல்லது அதற்கு வேறானவையா? என்று ஆய்வு செய்ய வேண்டும். இதை ஆழமாக ஆய்வு செய்தால் அவையாவும் அந்த மை தானானவை என்ற தீர்வு கிடைக்கும். மனத் தூய்மையோடு ஆய்வு செய்ய வேண்டும். பார பட்ச உணர்வின்றி சிந்திக்க வேண்டும்.
எழுத்து என்பது மை தானானதென்று சொல்வது போன்றதே அல்லாஹ்வின் “தாத்”தில் உள்ள “ஷுஊன்” கருமங்கள் – அவனின் “தாத்”திலிருந்து அவன் நாடிய வஸ்தாக வெளியானதென்று சொல்வதுமாகும். இவ்வாறு வெளியாவதை ஸூபீ மகான்களும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுவோரும் “தஜல்லீ” என்றும், “ளுஹூர்” என்றும் தமது கலைச் சொற்களில் பயன்படுத்துவார்கள்.
அல்லாஹ்வின் “தாத்” படைப்பாக வெளியாவதால் அந்த “தாத்”திற்கு எந்த ஓர் அழிவோ, குறைவோ, மாற்றமோ ஏற்படமாட்டா. அது எவ்வாறு எத்தனை கோடிப் படைப்புக்களாக வெளியானாலும் அந்தப் பரிசுத்த “தாத்” இருந்தவாறே இருக்கும். தற்கால ஞானி ஒருவர் சொல்வதுபோலும், எழுதுவதுபோலும் அந்த வெளிப்பாடு அந்த “தாத்”தின் “ஜுஸ்உ” பாகமல்ல. இது உச்சக்கட்ட அறியாமையாகும். இவ்வாறு சொல்பவர் ஆலிமாகவோ, மௌலானாவாகவோ இருந்தாலும் சரியே!
அல்லாஹ்வின் “தாத்” படைப்பாக வெளியாகி, வெளியாகி இறுதியில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் அல்லாஹ்வின் “தாத்”தும் அவ்வாறே ஆகிவிடுமென்று சிலர் நினைப்பது “அகீதா” கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும்.
هُوَ الْآنَ كَمَا كَانَ
அவன் படைப்புகளாக வெளியாகுமுன் எவ்வாறிருந்தானோ படைப்புக்களாக வெளியான பின்னும் அவ்வாறே உள்ளான். இது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பலமான அருள் மொழியின் வசனமேயன்றி நான் கையாலோ, மடியாலோ பொக்கட்டாலோ போட்ட வசனமல்ல.
நான் ஏன் இவ்வாறு எழுதினேன் என்றால் நமது நாட்டில் முத்திப்பழுத்த, வயது முதிர்ந்த, அனுபவமிக்க உலமாஉகள் மௌனிகளாக உயிருடன் இருக்கும் நிலையில் மொழியிலக்கணத் திறமையும், விளங்கும் ஆற்றலுமில்லாத சில மௌலவீ பொடியன்மார் நான் கூறி வரும் ஞானத்தை எதிர்ப்பதேயாகும்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கும் ஒருவர் பேசுகையில் “சிலர் அல்லாஹ்தான் முஹம்மதாக வந்தான்” என்று சொல்கிறார்கள். இது திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணான பேச்சாகும் என்று சொல்லிவிட்டு “ஸுப்ஹானல்லாஹ்! அஸ்தக்பிறுல்லாஹ்” என்றும் சொல்கிறார். இவரின் பேச்சைக் கேட்ட நான்
اللهم اهْدِهِ إِلَى الصِّرَاطِ الْمُسْتَقِيْمِ، وَعَلِّمْهُ سَبِيْلَ الْإِسْتِقَامَةِ الَّذِيْ أَشَرْتَ إِلَيْهِ بِقَوْلِكَ فَاسْتَقِمْ كَمَا اُمِرْتَ،
என்று இவருக்காக “துஆ” கேட்டேன்.
அல்லாஹ்தான் “முஹம்மத்” ஆக வந்தான், வெளியானான் என்பதற்கு பலமான ஐந்து நபீ மொழிகளை ஆதாரங்களாகக் கூறி ஒரு புத்தகமே வெளியிட்டேன். முகநூல், மற்றும் வட்அப் செயலியிலும் எழுதினேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முப்தீகளிடம் விளக்கமும் கேட்டேன். 14 நாட்கள் கால அவகாசமும் கொடுத்திருந்தேன். அரை வருடம் கடந்தும் கூட அவர்களுக்கு பதில் தரவோ, விளக்கம் தரவோ முடியாமற் போய் விட்டது. கால அவகாசம் போதாதென்று நினைக்கிறேன். இன்னும் அரையாண்டு அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் அவர்கள் விளக்கம் தர வேண்டுமென்றும் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இனி விடயத்திற்கு வருவோம். சகல படைப்புக்களும் அல்லாஹ்வின் “தாத்”தில் மறைந்திருந்த போது அது اَلشُّؤُوْنُ الذَّاتِيَّةْ – اَلْأَعْيَانُ الثَّابِتَةْ “தாத்”துடன் தொடர்புடைய விடயங்கள், கருமங்கள் என்று அழைக்கப்பட்டது. அந்த “தாத்”திலிருந்து வெளியான பின் அவை அனைத்தும் اَلشُّؤُوْنُ الْخَارِجِيَّةْ வெளியான கருமங்கள் என்று அழைக்கப்படும். அல்லது اَلْأَعْيَانُ الْخَارِجِيَّةْ என்று அழைக்கப்படும். படைப்புக்கள் அவனின் “தாத்”தில் இருந்த போதும் அவை அவனுக்கு வேறானவையாக இருக்கவுமில்லை, வெளியான பின் அவ்வாறு இருக்கவுமில்லை. எல்லா நிலைகளிலும் படைப்புக்கு அவன் வேறானவனுமில்லை. அவன் படைப்பு தானாகவே உள்ளான் என்பது أَزَلِيَّةْ பூர்வீகமானதேயாகும். اَلْمَعِيَّةُ أَزَلِيَّةٌ என்றும், وَالْمَعِيَّةُ ذَاتِيَّةٌ என்றுமே ஸூபீகள் நம்புகிறார்கள். இது குறித்து ஸூபீ மகான் மஸ்தான் அவர்கள் கூறுகையில்,
கொப்பு வித்தினுள்ளே குடியிருந்த
கொள்கையென
எப் பொருட்கும் சித்தாய் இருந்தாய்
மணோன்மணியே!
என்று பாடியுள்ளார்கள்.
உதாரணமாக ஒரு மா விதையை எடுத்துக் கொள்வோம். அதில் மா இலைகள், பூக்கள், காய், கனிகள் என்பவை அடங்கியுள்ளன. இவையாவும் மா விதைக்கு வோறனவையல்ல. மா விதை தானானவைதான். இந்நிலையில் அதில் அடங்கியுள்ள மேலே கூறிய இலைகள், பூக்கள், மற்றும் காய்கள், கனிகள் என்பன அவ் விதையிலிருந்து வெளியாகும் வரை அவையாவும் اَلشُّؤُوْنُ الذَّاتِيَّةُ “தாத்”தின் கருமங்கள் என்ற பெயராலும், اَلْأَعْيَانُ الثَّابِتَةُ என்ற பெயராலும் அழைக்கப்படும். அவ்விதை பூமியில் நட்டப்பட்டு அதிலிருந்து கூறப்பட்டவை வெளியானால் அவை الشؤون الخارجية – الأعيان الخارجية எனும் பெயர்களால் அழைக்கப்படும்.
இதுவரை அவன் படைத்த படைப்புக்களும், இதன் பிறகு அவன் படைக்கப்போகின்ற படைப்புக்களும் அவனின் “தாத்”திலேயே இருந்தன. இருக்கின்றன. இவ்வாறு சொல்வதால் ஒரு பெட்டிக்குள் பொருட்கள் இருந்தது போல் அவை இருந்தன என்று விளங்கிக் கொள்ளாமல் அவையாவும் அவன் தானாகவே இருந்தன, வெளியான பின்னும் அவன் தானாகவே இருக்கின்றன என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
اَلذَّاتُ الْمُنَزَّهَةُ وَشُؤُوْنَاتُهَا الْمُطَهَّرَةُ،
اعلم أنّ مطلق الذات هو الأمر الّذي تستنِدُ إليه الأسماءُ والصّفاتُ فى عينِها لا فى وجودها، فكلُّ اسمٍ أو صفةٍ استندَ إلى شيءٍ فذلك الشيئُ هو الذّات، سواءٌ كان معدوما كالعنقاءِ فافهم، أو موجودا، والموجود نوعان، نوعٌ موجودٌ محضٌ، وهو ذات الباري سبحانه وتعالى، ونوعٌ موجود مُلحَقٌ بالعَدَم، وهو ذات المخلوقات، (الإنسان الكامل، ج أوّل، ص 37، الباب الأوّل)
தொடரும்…