(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
எச்செயலும் அவன் செயலென்று நம்பிய ஒருவன் அச்செயல் நீதியானதும், அர்த்தமுள்ளதும் என்றும் நம்ப வேண்டும்.
ஏனெனில் وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ “உங்கள் இரட்சகன் அடியார்களுக்கு அறவே அநீதி செய்யமாட்டான்” (41 – 46), وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا “உங்கள் இரட்சகன் எவருக்கும் அநீதி செய்யான் என்பதும்” (18 – 49) திருமறை மூலம் அவன் வழங்கிய ஆணைகளாகும்.
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ ஏகன் தான் வழங்கிய ஆணைக்கு மாறு செய்யான் என்பதும் (13 31, 3 – 9) அவன் வழங்கிய ஆணைதான்.
இவ் ஆணைப் படி இறைவன் அநீதி செய்துள்ளானா? நீதி செய்துள்ளானா? என்பதை ஆய்வு செய்தறிய விரும்பிய ஒருவன் பயணமொன்றைக் கால் நடையாக மேற்கொண்டான். சுரைக் கொடி – பட்டக்காய் செடியொன்றைக் கண்டான். தலையைச் சுழற்றிச் சுழற்றிச் சிந்திக்க தொடங்கினான். முடிவில் இவ்விடயத்தில் இறைவன் பிழை செய்து விட்டான் என்று முடிவு செய்தான். விரலுக்கேற்ற வீக்கம் கொடுப்பதே நியதி. கொடியோ விரலளவு சிறியது. காயோ பானையளவு பெரியது. இது நியாயமா என்று தன்னைத் தானே கேட்டவனாக நீண்ட தூரம் நடந்து சென்றான். கடும் வெயில். களைப்பு ஏற்பட்டது. பசியொரு பக்கம் வயிற்றை வருடியது. தாகம் மறு பக்கம் நடையை தளரச் செய்தது.
நிழல் மரமொன்றிருந்தால் சற்று ஓய்வு பெற்றுச் செல்லலாமென்று ஓர் ஆலை மர நிழலில் ஒதுங்கி தனது மூட்டை முடிச்சுக்களைத் தலையணையாக்கி மல்லாந்து படுத்திருந்தான். அவனுக்கு ஒரு பாடம் கற்பித்து தன் செயல் நியாயமானதென்று உணர்த்த விரும்பிய ஏகன் ஆலம் பழமொன்றை அவன் நெஞ்சில் விழச் செய்தான். பயந்தெழுந்த ஆய்வாளன் பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தனது மனச்சாட்சியுடன் உரையாடத் தொடங்கினான்.
விரலுக்கேற்ற வீக்கம் கொடுக்க வேண்டுமென்று நீ சொன்னாய். சுரைக் கொடி சிறியது பழமோ பெரியதென்று தத்துவம் பேசினாய். உனது நியாயப்படி மரத்திற்கேற்ற பழம் கொடுக்கப்பட்டிருந்தால் நீ இப்போது எங்கே இருந்திருப்பாய்? என்று தனது மனச்சாட்சியிடம் கேட்டான் ஆய்வாளன். “கப்று” – மண்ணறைக்குள் உயிரற்ற வெறும் சடலமாய் கிடப்பாய் என்றது அவனின் மனச்சாட்சி. சிந்திக்கலானான். அவன் சிந்தையில் சுரைக் கொடியின் கீழ் எவரும் நிழல் பெறுவதில்லை. அதனால் அதற்கு பெரிய காய். ஆல மரமோ மக்கள் நிழல் பெறும் மரம். அதனால் அதற்கு சிறிய பழம் என்று அவனின் சிந்தனை அவனுக்கு உணர்த்தியது. முதல் வகுப்பிலேயே சித்தி பெறவில்லை. எனக்கு ஏன் இந்த வேலையென்று தன்னைத் தானே கேட்டவனாய் மூட்டை முடிச்சுக்களுடன் வீடு திரும்பினான் ஆய்வாளன். அல்லாஹ்வின் நியாயம் எங்கே? அடியானின் நியாயம் எங்கே?
நாட்டையாளும் ஓர் அரசன். அவனின் அமைச்சரவையில் ஓர் அமைச்சர். எதற்கும் இறைவன் நல்லது செய்தான் என்பதே அவரின் வாயின் ஓயாத் திருமந்திரம். எதைச் சொன்னாலும் அல்லாஹ் நல்லது செய்தான், எது நடந்தாலும் அல்லாஹ் நல்லது செய்தான். அமைச்சரவையிலும் இதே மந்திரம்தான்.
ஒரு நாள் அரசன் அப்பிள் பழம் வெட்டிக் கொண்டிருந்த சமயம் அவரின் விரலொன்றை அல்லாஹ் துண்டாடிவிட்டான். இதைக் கண்ட அமைச்சர் வழமை போல் தனது மந்திரம் சொன்னார். தனது விரலையிழந்து வேதனையிலிருந்த அரசனின் கண்கள் நெருப்பாகின. தாடியில் மொய்த்துக் கொண்டிருந்த ஈ பறந்தது. காவற்காரனை அழைத்து இவனைக் கூட்டுக்குள் போடு என்றான். கூட்டுக்குள்ளான அமைச்சர் அப்போதும் கூட தனது வழமையான மந்திரத்தையே ஜெபித்தார். அமைச்சர் கூட்டுக்குள் நெடுங்கயிற்றில் விடப்பட்டுக் கிடக்கிறார்.
காட்டுக்குச் சென்று வேட்டையாடி வரும் வழக்கமுள்ள அரசன் ஒரு நாள் தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றான். அங்கு கூடி நின்ற சன்னியாசி மந்திரவாதிகள் கூட்டமொன்று பலி கொடுப்பதற்கு ஓர் அழகிய மனிதனை தேடி நின்றார்கள். அரசன் அதற்குப் பொருத்தமான பலிக்கடாயாக இருந்தான். அவனின் கழுத்தையே மந்திரவாதியின் வாள் குறிவைத்தது. சன்னியாசியின் காவற்காரன் வேண்டாம் தெய்வத்திற்கு பலி கொடுக்கும் பிராணி குறையற்றதாக இருக்க வேண்டுமென்று சொல்வீர்கள். அவரின் கைவிரல்களில் ஒன்று எங்கே? என்று கேட்டான். சன்னியாசியின் வாள் நழுவிக் கீழே விழுந்தது. அரசன் விடுதலையானான்.
வேட்டையும் வேண்டாம் கோட்டையும் வேண்டாமென்று புளகாங்கிதம் அடைந்த அரசன் நேராக கூட்டடி வந்து அமைச்சரே! நீதான் எனக்கு அமைச்சராக இருக்க வேண்டும். எனது விரல் துண்டாடப்பட்ட போது நீ ஜெபித்த மந்திரத்தின் அந்தரங்கம் புரியாமல் கோபம் கொப்பளித்ததால் உன்னைக் கூட்டில் அடைத்தேன். என்னை மன்னி. இறைவனின் எச்செயலும் தத்துவமுள்ளதென்ற தத்துவத்தை அறிந்தும், உணர்ந்தும் கொண்டேன் என்றான். அமைச்சர் விடுதலை பெற்றார்.
இவ்விரு கதைகள் போல் இன்னும் பல படிப்பினை தரும் கற்பனைக் கதைகள் உள்ளன. இவற்றை உதாரணங்களாகவும், எடுத்துக்காட்டுகளாகவும் கூறி இறைவன் மீது மக்களுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்துவது போன்ற வணக்கம் வேறெது?
எனவே எச்செயல் எவரால் நடந்தாலும் அச்செயல் நியாயமானதாயும், அர்த்தமுள்ளதாயும் இருக்குமென்ற இறை ஞானமறிந்து இன்புறுவோம்.