ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த அன்புக்குரிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
ஏகனாம் அல்லாஹ் தனது ஹபீப் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொருட்டாலும், இறை நேசர்களாம் அவ்லியாஉகளின் பொருட்டாலும் நம்மனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.
நமது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த சிலர், கொள்கையில் நமக்கு எதிரான உலமாஉகள், அரசியல்வாதிகளிற் சிலரின் மனங்கள் வேதனைப்படும் வகையில் சமுக ஊடகங்கள் மூலம் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருவதாக எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
நாம் முஸ்லிம்களில் ஸூபிஸ வழி நடக்கும் உன்னதமானவர்களாதலால் எதையும் தாங்கும் இதயங்களுடையவர்களாகவும், பிறர் நமக்குச் செய்யும் குற்றங்களை மன்னிப்பவர்களாகவும், பழிவாங்கல், கிண்டல் செய்தல், இழித்துரைத்தல் போன்ற தீச் செயல்கள் எதையும் செய்யாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். ஸூபீகளான நம் வாழ்வு மற்றவர்களின் வாழ்வுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். வண்டில் பாரம் பூமிக்கு என்று முன்னோர்கள் சொன்னது போல் ஸூபிஸ சமூகத்தவர்களில் தீவிரப் போக்குடையவர்களால் ஏற்படுகின்ற பொருத்தமற்ற எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் தலைமைக்கு தலைவலி ஏற்படுவதால் இன்றிலிருந்து எவரும், எவரையும் எழுத்தாலோ, பேச்சாலோ வேதனைப்படுத்த வேண்டாமென்று அனைவரையும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸூபீ மகான் அபூபக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு வழியால் சென்றபோது பழம் நிறைந்த மரம் ஒன்று அவர்களை நோக்கி
يا شبلي كن مثلي، الناس يرمونني بالأحجار وأنا أرميهم بالأثمار
ஷிப்லீ மகானே! நீங்கள் என்போன்று இருந்து கொள்ளுங்கள். மனிதர்கள் எனக்கு கற்களால் எறிகிறார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு பழங்களால் எறிந்து கொண்டிருக்கிறேன் என்று அறிவுரை வழங்கிய வரலாறையும், ஸூபிஸ ஞானி ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் சிஷ்யர்களோடு ஒரு வழியால் சென்ற நேரம் ஓர் எதிரி அவர்களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் சாடினான். பின்னால் சென்ற சிஷ்யர்கள் நாயகமே! இவன் தங்களை ஏசுகிறான் என்று கூறினார்கள். இப்னு அறபீ நாயகம் அவர்களிடம் அவன் தன்னைத் தான் ஏசுகின்றான் என்னை ஏசவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள் என்ற வரலாறையும் சிந்தனையிற் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்.
அவ்லியாஉகள் செய்த பொறுமை உங்களுக்குப் பாடம் புகட்டாது போனாலும் இதுகாலவரை இந்தப் பாவி செய்த பொறுமையும், தற்போது செய்து வருகின்ற பொறுமையும் உங்களுக்கு ஒரு பாடத்தை புகட்டும். ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும்.
1980களில் எனது நண்பர்கள் பலருடன் காத்தான்குடி ஊர் வீதியால் சென்று கொண்டிருந்தேன். ஹிழ்ரிய்யா பள்ளிவாயலுக்கு முன்னால் எனது நீண்டகால நண்பர் ஒருவர் நின்றிருந்தார். அவருக்கு ஸலாம் சொன்னேன். அவர் வெட்டும் பன்றி போல் என்னைப் பார்த்து பற்களைக் கடித்துக் கொண்டு வணக்கம் என்றார். எனக்குப் பின்னால் என்னைத் தொடர்ந்து வந்த எனது நண்பர்களுக்கு அவர் சொன்ன பதில் கேட்கவில்லை. நானும் அவர்களிடம் சொல்லவுமில்லை. சொல்லியிருந்தால்……
பொறுமை போல் ஆலோசனை கூறுபவர்கள் யாருமில்லை. (மௌலானா ரூமீ)
பொறுத்திருப்போம் வெற்றி நிச்சயம்.