தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தடுமாறவைக்கும் தலைப்பு இல்லை. தடுமாறும் நிலை வராமல் தடுக்கும் தலைப்பு. இத்தலைப்பிற்கான வசனம் எழுதியவன் நான்தான். ஆயினும் இத்தலைப்பிற்கான அறபு வசனம் தந்தவர்கள் மெய்ஞ்ஞானப் பேரரசர் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களே! அவர்களின் வசனம் பின்வருமாறு.
سُبْحَانَ مَنْ أَظْهَرَ الْأَشْيَاءَ وَهُوَ عَيْنُهَا
இதன் தமிழாக்கம்தான் தலைப்பு.
அவர்களின் இவ்வசனத்தை மனதிலுள்ள அனைத்து அசூசிகளையும் துடைத்தெறிந்து விட்டு தூய்மையான மனதோடு ஆய்வு செய்தால் هُوَ الْكُلّ எல்லாமவன் எனும் தத்துவம் குன்றின் மேல் தீபம் போல் தெளிவாக விளங்கும்.
ஆயினும் அவர்கள் யாரென்று விளங்காத ஒருவன் அவர்களின் தத்துவத்தை எழிதில் ஏற்றுக் கொள்ள மாட்டான். இது மனித சுவாபம். ஒருவனுக்கு இன்னொருவன் மீது நல்லெண்ணம் இருந்தால் மட்டுமே அவன் கூறும் கருத்தையும், தத்துவத்தையும் சரிகாண்பான். மாறாக ஒருவனுக்கு மற்றவன் மீது நல்லெண்ணம் இல்லையானால், அவனின் சிறப்பியல்புகளை இவன் தெரிந்து கொள்ளவில்லையானால் அவன் கூறிய கருத்துக்கு ஆயிரம் ஆதாரம் இருந்தாலும் கூட அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
ஆகையால் மேற்கண்ட எல்லாமவனே – هُوَ الْكُلّ எனும் தத்துவத்தை பகிரங்கமாகச் சொன்ன மகான் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் யாரென்று மிகச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டி அவர்களின் தத்துவம் தொடர்பாக நான் அறிந்த கருத்தைக் கூறுகிறேன்.
இவர்கள்
الوارث المحمدي وسلطان العارفين الشّيخ الأكبر محمد ابن علي الحاتمي المُكنّى بأبي عبد الله محي الدين ابن عربي قُدِّس سرّه، وُلد فى الأندلس عام 560 هـ، وتوفّي ليلة الجمعة 28 ربيع الآخر 638 هـ،
இவர்கள் அல்வாரிதுல் முஹம்மதிய்யு, ஸுல்தானுல் ஆரிபீன், அஷ் ஷெய்குல் அக்பர் முஹம்மத் இப்னு அலீ அல்ஹாதமீ முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு என்று அழைக்கப்படுகிறார்கள்.
“அல்வாரிதுல் முஹம்மதிய்யு” என்றால் நபீகள் நாயகம் முஹம்மத் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்களின் குலவழி வந்தவர்களாவர். “அஹ்லுல் பைத்” பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். அதுமட்டுமன்றி உலகின் அனைத்து நாடுகளையும் ஞானத்தால் திருப்பியவர்களுமாவார்கள்.
இவர்களின் அறிவு ஞானத்தைப் பாராட்டி இவர்களின் சம காலத்தில் வாழ்ந்த அறிஞர்களும், மேதைகளும், அவ்லியாஉகளும் இவர்களுக்குப் பல்வேறு சிறப்புப் பெயர்கள் சூட்டியுள்ளார்கள்.
அவை அஷ் ஷெய்குல் அக்பர், அல்கிப்ரீதுல் அஹ்மர், அல்மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் என்பனவாம். இத்தகைய சிறப்புப் பெயர்கள் கொண்டு வேறெந்த மார்க்க மேதைகளும், தத்துவ ஞானிகளும் பாராட்டப்பட்டதற்கு வரலாறைக் காணவில்லை.
இவர்கள் ஸ்பெய்ன் நாட்டில் ஹிஜ்ரீ 560ல் பிறந்தார்கள். ஹிஜ்ரீ 638ல் றபீஉனில் ஆகிர் மாதம் பிறை 28 வெள்ளிக்கிழமை இரவு “வபாத்” மறைந்தார்கள்.
مَوْتُ الْأَنْبِيَاءِ وَالْأَوْلِيَاءِ اِنْتِقَالُهُمْ مِنْ بَيْتٍ قَدِيْمٍ إِلَى بَيْتٍ جَدِيْدٍ
நபீமார், வலீமார் மரணித்தல் என்பது அவர்கள் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குப் போதல் போன்றதாகும்.
இது “ஷரீஆ”வில் மரணமாயினும் ஸூபீகளிடம் எதார்த்தமான மரணமல்ல. இவ்வுலகில் மரணித்தும் கூட உயிரோடுள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களை இனங்கண்டு கொள்வது கடினம். அவர்கள் அனைவரும் வலீமார்களேயாவர்.
مَعْرِفَةُ الْوَلِيِّ أَصْعَبُ مِنْ مَعْرِفَةِ اللهِ
அல்லாஹ்வை அறிந்து கொள்வதை விட ஒரு வலீயை அறிந்து கொள்வது கடினம் என்பது ஸூபீ மகான்களின் தத்துவமாகும். வலீமார்கள் எங்கு வாழ்ந்தாலும் தம்மைக் காட்டிக் கொள்ளமாட்டார்கள். இதற்கான பிரதான காரணம் மக்களின் அன்புத் தொல்லையிலிருந்து அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதேயாகும். அதோடு தம்மை வலீ என்று காட்டிக் கொள்வதை அவர்கள் அவமானமாகக் கருதுவார்கள். ஒரு சபையில் எதிர்பாராமல் அவர்களால் ஒரு “கறாமத்” நிகழ்ந்தால் பெரும் மக்கள் கூட்டமொன்றில் ஒரு பெண்ணுக்கு தீட்டு வெளியானது போல் அவமானமாயிருக்குமாம்.
அதிசயமென்னவெனில் அல்லாஹ்வினால் “கறாமத்” அற்புதம் கொடுக்கப்பட்டவர்கள் அதை மறைப்பதற்கு முயற்சிப்பார்கள். ஆனால் அது தமக்கு கிடைக்கப் பெறாதோர் தமக்கு “கறாமத்” இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சிப்பார்கள். விரும்புவார்கள்.
வஹ்ஹாபீகளுக்கு ஸூபீகளுடனும், வலீமார்களுடனும் எரிச்சல், பொறாமை இருப்பது (புறப்புவாசிபோல் ஆகிவிட்டது) இயற்கை போலாகிவிட்டது.
நான் ஆய்வு செய்து அறிந்த வகையிலும், ஞானமகான்களிடம் கேட்டறிந்த வகையிலும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்வழி செல்லாத எவருக்கும் “விலாயத்” கிடைத்ததுமில்லை, கிடைக்கப் போவதுமில்லை.
பெயர் வரக் காரணம்.
இப்னு அறபீ அவர்களின் இயற் பெயர் முஹம்மத். அவர்களின் தந்தையின் பெயர் அலீ. இவர்கள் முஹ்யித்தீன் இப்னு அறபீ என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் பற்றி அறிந்து கொள்வதற்கு பல நூல்களையும் நான் பார்த்தும் கிடைக்கவில்லை.
சுமார் 19 வருடங்களுக்கு முன் சென்னை அங்கப்ப நாயகன் தெருவிலுள்ள “மஸ்ஜிதுல் மஃமூர்” பள்ளிவாயலில் ஸுப்ஹ் தொழுதுவிட்டு பள்ளிவாயல் மூலை ஒன்றில் சாய்ந்து கொண்டிருந்தேன். எனக்கு அருகில் ஒருவர் ஓதும் சத்தம் கேட்டது. கண் திறந்து பார்த்தேன். மஸ்தான் உடையில் ஒரு வயோதிபர் ஓதிக் கொண்டிருந்தார். நான் உறங்குபவன் போல் அவரின் ஓதலை அவதானித்தேன். அது வழமையாக நான் தினமும் காலையில் ஓதுகின்ற اَلدُّرُّ الْأَعْلَى எனும் ஓதலாக இருந்தது. அது சற்று நீளமான ஓதல். இப்னு அறபீ நாயகம் அவர்களுக்குரியது. சுமார் 20 நிமிடங்கள் தேவைப்படும். அவர் அதை அழகாக மனனமாக ஓதிக்கொண்டிருந்தார். அவர் ஓதி முடித்த பின் அவரின் அருகில் சென்று ஸலாம் சொன்னேன். பதில் சொன்னார். கையை முத்தமிட முயற்சித்தேன். கிடைக்கவில்லை. இந்தியப் பணம் 500 ரூபாய் கொடுத்தேன். அதை எடுக்கவில்லை. பல முறை முயற்சித்தும் அவர் மறுத்துவிட்டார்.
அதோடு அவர் எழுந்து செல்ல முயற்சித்தார். நான் அவரை விடவில்லை. நீங்கள் இப்னு அறபீ நாயகம் அவர்களின் “அத்துர்றுல் அஃலா” ஓதினீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமென்று நினைக்கிறேன். நீண்டகாலமாக ஒரு விடயத்தை அறிவதற்கு முயற்சிக்கிறேன். முடியவில்லை. நீங்கள் எனக்கு சொல்லித் தரலாமா? என்று கேட்டேன். என்ன விஷயம் என்று கேட்டார். அவர்களின் பெயருடன் முஹ்யித்தீன் என்ற பெயரும் சேர்த்து வருகிறதே இதற்கான காரணம் என்னவென்று கேட்டேன்.
அவ்வளவுதான். அவருடைய நிறம் மாறியது. அவரின் முகத்தை என்னால் பார்க்க முடியாது போயிற்று. அவர் நீண்டதொரு வரலாறு சொன்னார். அவர் சொன்னது போல் என்னால் எழுத முடியவில்லை. எனினும் மிகவும் சுருக்கி எழுதுகிறேன்.
(இப்னு அறபீ நாயம் அவர்களின் பெற்றோர் பிள்ளைப் பாக்கியம் இல்லாதிருந்த நேரம் தந்தை அலீ அவர்கள் தனது வீட்டின் முற்றத்தில் சோகமே உருவான நிலையில் இருந்தார்கள். அவ்வழியால் சென்ற ஒரு “மஜ்தூப்” அவரிடம் என்ன கவலையோ என்று வினவினார். எனக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை என்றார் அவர்.
அதற்கு வந்த “மஜ்தூப்” பக்தாத் செல்லுங்கள். அங்கு “குத்புஸ்ஸமான்” அப்துல் காதிர் கைலானீ இருக்கிறார்கள். அவரிடம் முறையிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
மறுநாளே அலீ அவர்கள் பக்தாத் நோக்கி விரைந்தார். குத்பு நாயகம் அவர்களிடம் சென்று தனது வரலாறை விபரித்தார். குத்பு நாயகம் சிறிது நேரம் அமைதியாய் இருந்த பின் உங்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை என்றார்கள்.
அலீயின் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் குத்பு நாயகத்தின் கல்பை நனைத்து விட்டது போலும். அலீ அவர்களிடம், எனக்கு 49 குழந்தைகள் பிறந்துள்ளன. இன்னும் ஒரேயொரு ஆண் குழந்தை மட்டும் எனது முதுகில் இருக்கிறது. நீங்கள் விரும்பினால் உங்களின் முதுகுக்கு அதை மாற்றித் தரலாம் என்றார்கள். இந்த சுபச் செய்தி கேட்ட அலீ துள்ளிக் குதித்தவராக குத்பு நாயகம் அவர்களின் பாதத்தால் தனது முகம் துடைத்து இது பெரும் பாக்கியம் என்றார்.
குத்பு நாயகம் அலீயை தனது முதுகுப் பக்கம் வந்து அவரின் முதுகை தனது முதுகோடு நெருக்கி வைத்துக் கொள்ளுமாறு சொல்ல அவரும் அவ்வாறே செய்தார். குத்பு அவர்கள் பிரார்த்தனை செய்து விட்டு உங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு எனது பெயரை சூட்டுங்கள் என்றார்கள்.
அலீ அவர்கள் சிரியாவை நோக்கி அன்றே பயணித்து தனது இல்லம் வந்து சேர்ந்தார்கள். மருந்து மாத்திரை எதுவுமின்றி மனைவியின் வயிற்றில் முஹ்யித்தீன் உருவானார். ஒரு வருடம் முடிவதற்குள் குழந்தை பிறந்தது. முஹம்மத் முஹ்யித்தீன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்)
முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் அருளால் முஹ்யித்தீள் இப்னு அறபீ அவர்களின் புகழ் உலகெல்லாம் பரவியது.
(தொடரும்…….)