ஸூபிஸ வழி வாழும் சகோதரனே! சகோதரியே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இறைஞானிகளினதும், ஸூபீகளினதும் ஆய்வின் கணிப்பின்படி சாதாரண ஒரு மனிதன் ஒரு நாளில் 21,600 – இருப்தோராயிரத்து அறுநூறு தரம் சுவாசிக்கிறான்.
மனிதனின் ஒவ்வொரு மூச்சும் எவராலும் விலை கணிக்க முடியாத ஒவ்வோர் உயிராகும். அது அவனின் இதயத்தின் கல்பின் – “திக்ர்” ஆகும்.
ஒருவன் தனது சுவாசங்கள் அனைத்தையும் இறைவனுக்கு விருப்பமான விடயத்தில் செலவிட்டானாயின் அவன் அன்று நாள் முழுவதும் இறை வணக்கத்தில் இருந்தவனாவான். அல்லாஹ்வின் அருட்பார்வைக்கு தகுதியுள்ளவனுமாவான்.
இதற்கு மாறாக ஒருவன் தனது மூச்சுகள் அனைத்தையும் வீணாக, அல்லாஹ்வுக்கு விருப்பமற்ற விடயத்தில் செலவிட்டானாயின் அவன் உயிருக்கு நிகரான 21600 சுவாசங்களையும் – உயிர்களையும் கொலை செய்த கொலைகாரனாவான். ஒவ்வோர் சுவாசமும் ஒவ்வொரு உயிர் என்று விளங்கிச் செயல்பபட வேண்டும். இதே கருத்தை குணங்குடி அப்துல் காதிர் ஆலிம் புலவர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.
நெறியற்ற வம்பனல் லறிவற்றவம்பனெதிர்
நிகரற்ற கொடிய வம்பன்
நிறையற்ற வம்பன்வான் முறையற்ற வம்பன்பன்
னெஞ்சனஞ்சாத வம்பன்
குறியற்ற வம்பனொரு சரியற்ற வம்பன்
குணக் கேடனான வம்பன்
கொடியரிற் சகசண்டியான வம்பன் கெட்ட
கொலை பாவியான வம்பன்
உறவற்ற வம்பன் மிகு வெறி பெற்ற வம்பனோ
ரூர்க்குமாகாத வம்பன்
உமது பதமறியவடியேனு முமை நம்பினே
னுளமகிழ்ந்தாளுதற்கே
மறுகவலையுறினுமுறவுள்ள நீர் பின்றொடர
வள்ளலிறஸூல் வருகவே!
வளருமருணிறை குணங்குடி வாழுமென்னிரு கண்
மணியே முஹ்யித்தீனே!
—————
தையலர்களாசையெனு மையலில் விடாய் கொண்டு
தாகித் தலைந்த வம்பன்
சாகா வரம் பெற்ற தேகத்தனானென்று
தலை கெட்டு நின்ற வம்பன்
மெய்யாக வையகத்தாரெனக்கீடென்று
வீண் மதம் பேசும் வம்பன்
வெறி கொண்ட நாய் போலும் வள்ளுவள்ளென்றுயார்
மேலும் விழுகின்ற வம்பன்
செய்யாத செய்கையே செய்தவம்பன் பொய்த்த
சிற்றின்ப முற்றவம்பன்
தீயும் பயந்த வடியேனுமுமை நம்பினேன்
சித்தம் வைத்தாளுதற்கே
வைய முழுதுக்குமணைவுள்ளநீர் பின்றொடர
வள்ளலிறஸூல் வருகவே
வளருமருள் நிறை குடிவாழுமென்னிரு கண்
மணியே முஹ்யித்தீனே!
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஒரு நாளில் நீங்கள் சுவாசிக்கின்ற 21,600 சுவாசங்களையும் “திக்ர்” இறை நினைவாக மாற்றிக் கொண்டீர்களாயின் நீங்கள் முழு நாளும் ஒரு நொடி நேரம் கூட வீணாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இறைவனை நினைக்காமல் முழு நாளும் இறைவனின் நினைவில் இருந்தவர்களாக கணிக்கப்படுவீர்கள்.
இதற்கு பயிற்சி முக்கியம். இதற்கான பயிற்சிக் கல்லூரிதான் “தரீகா” எனும் ஞான வழியாகும். “ஷரீஆ”வில் இவ்விபரம் போதிக்கப்பட மாட்டாது. “தரீகா”வில் மாத்திரமே இதற்கானபயிற்சி வழங்கப்படும்.
“தரீகா”வில் இணைந்து “திக்ர்” மஜ்லிஸில் கலந்து சில மாதங்கள் மட்டும் பயிற்சி எடுத்தால் மட்டும் போதும். பயிற்சி பெற்றால் நீங்கள் உங்களின் வேலைகளைச் செய்து கொண்டிருக்க சாதாரணமாக நீங்கள் சுவாசிப்பது போல் சுவாசிக்கலாம். சுவாசத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படமாட்டது.
நீங்கள் தொழில் செய்யவும் வேண்டும், “துன்யா” இவ்வுலகின் நடைமுறைகளைப் பேணவும் வேண்டும், அதே நேரம் இறை நினைவோடு சுவாசிக்கவும் வேண்டுமென்றால் இதற்கான பயிற்சி உங்களுக்கு அவசியமேயாகும்.
இது தொடர்பான அறிவு ஞானமும், அனுபவமுமுள்ள, உங்கள் மனதுக்குத் திருப்தியான ஓர் ஆசானைச் சந்தித்து அவரின் ஆலோசனைப்படி செயற்படுங்கள். இந்தப் பயிற்சியை ஒழுங்காக, முறைப்படி கற்று சுமார் ஆறு மாதங்கள் செயல்படுவீர்களாயின் நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யலாம். சுவாசம் தானாக “திக்ர்” உடன் நடைபெறும்.
நீங்கள் தற்போது சுவாசிக்கிறீர்களல்லவா? நீங்கள் சுவாசிக்க வேண்டுமென்று நினைத்தா சுவாசிக்கறீர்கள்? இல்லையே! இவ்வாறுதான் பயிற்சியின் பின் உங்கள் சுவாசம் மாறும்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُوْنِ
மனிதர்களையும், ஜின்களையும் என்னை (அறிந்து) வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை என்ற இறை வசனத்தின்படி நாம் முழு நாளும் வணக்கத்திலேயே இருக்க வேண்டும். ஒரு நொடி தவறினாலும் அதற்கு கேள்வியுமுண்டு. தண்டனையுமுண்டு.
நாம் பயிற்சி எடுத்து தொடர்ந்து செயற்படும் போது நமது நா மட்டும் “திக்ர்” செய்யாமல் நமது உடலிலுள்ள முடிகள், உரோமங்கள் உள்ளிட்ட அனைத்துமே “திக்ர்” செய்யத் தொடங்கிவிடும். சுருக்கமாகவும், ஜாடையாகவும் சொல்வதாயின் நாம் ذَاكِرْ “திக்ர்” செய்பவன் என்ற நிலையைக்கடந்து நாமே مَذْكُوْرْ “திக்ர்” செய்யப்பட்டவனாக ஆகிவிடுவோம். நினைத்தவனும், நினைக்கப்பட்டவனும் நாமாக ஆகிவிடுவோம். இறுதியில் மற்றவர்கள் நமது பெயரைச் சொல்வதே அவர்களுக்கு “திக்ர்” ஆகிவிடும்.
قال الله تعالى وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَ
நீ மறந்தால் உனது “றப்பு” இரட்சகனை – அல்லாஹ்வை நினைத்துக் கொள். (திருக்குர்ஆன் 18-24)
واذكر ربك
உனது இறைவனை நீ நினை. إذا نسيت நீ மறந்தால் என்ற இத்திரு வசனம் ஸூபிஸ தத்துவமொன்றை தன்னுள் மறைத்துக் கொண்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு.
إِذَا نَسِيْتَ
என்ற வசனத்திற்கு நீ மறந்தால் என்று மட்டுமே பொருள் வரும். இங்கு ஒரு கேள்விக்கு இடமுண்டு. அதாவது எதை மறந்தால்? என்பதே அந்தக் கேள்வி. இதற்கு உலமாஉகள் ஒரு கருத்தும், இறைஞானிகளான ஆரிபீன்கள் இன்னொரு கருத்தும் கூறுகின்றார்கள்.
உனது இறைவனை நீ மறந்தால் அவனை நினைத்துக் கொள் என்று உலமாஉகள் கூறுகிறார்கள். அவர்கள் إِذَا نَسِيْتَ என்ற சொல்லின் பின்னால் رَبَّكَ என்ற ஒரு சொல்லை தமது கற்பனைப்படி அமைத்து إذا نسيت ربَّكَ உனது இறைவனை நீ மறந்தால் உனது இறைவனை நீ நினைத்துக் கொள் என்று விளக்கம் கூறுகிறார்கள்.
إذا نسيتَ
என்ற சொல்லுக்கு மொழியிலக்கண விதிப்படி ஒரு مَفْعُولْ வேண்டும். அது رَبَّكَ என்ற சொல்லாயிருக்குமென்று தமது கற்பனையின்படி கூறுகிறார்கள். இவர்கள் சொல்கின்ற விளக்கத்தின்படி உனது இறைவனை நீ மறந்தால் உனது இறைவனை நினைத்துக் கொள் என்று கருத்து வரும்.
உலமாஉகள் என்று நான் இங்கு குறிப்பிடுவது அறிவெனும் கடலில் வெளி நீச்சல் செய்பவர்களை மட்டுமே குறிக்கும். இறைஞானிகள் என்று நான் கூறுவது அறிவெனும் கடலில் உள் நீச்சல் செய்பவர்களை மட்டும் குறிக்கும்.
வெளி நீச்சல் செய்பவர்கள் கூறும் கருத்து புத்திக்குப் பொருந்தாத ஒன்றாக உள்ளது. ஒருவன் ஒன்றை மறந்தானாயின் அது மறந்ததுதான். மறந்ததை நினைக்க முடியாது. மறக்காமல் இருப்பதையே நினைக்க முடியும். இக்காரணத்தால் வெளி நீச்சல் காரர்களின் கருத்து மறுக்கப்படுகிறது. பிழையாகிறது.
உள் நீச்சல் செய்பவர்கள் إِذَا نَسِيْتَ என்ற சொல்லின் பின்னால் نَفْسَكَ என்ற சொல்லை அமைத்து إَذَا نَسِيْتَ نَفْسَكَ உன்னை நீ மறந்தால் இறைவனை நினைத்துக் கொள்! என்று விளக்கம் சொல்கிறார்கள்.
எனவே, உள் நீச்சல் செய்பவர்களின் கருத்து மட்டுமே பொருத்தமானதாக உள்ளதால் இறைவனை நினைக்க முற்படும் நாம் முதலில் நம்மை மறந்த பிறகுதான் இறைவனை நினைக்க வேண்டும் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.