Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தொழுகையும், பலர் அறியாத அதன் சட்டங்களும்.

தொழுகையும், பலர் அறியாத அதன் சட்டங்களும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஒன்று: “நிய்யத்” வைத்தான் தொழவில்லை. தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை.
ஒருவன் வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு சற்றுத் தாமதமாகி வந்தான். ஜும்ஆ தொழுகை நடத்திய இமாம் இரண்டாம் “றக்அத்”தின் “றுகூஉ” நிலையில் இருந்தார். வந்தவன் “ஜும்ஆ” தொழுகைக்கான “நிய்யத்” வைத்து “இமாம்” உடன் ஒரு “றக்அத்” மட்டும் தொழுதான். இமாம் “ஸலாம்” சொல்லி தொழுகையை முடித்தபின் இவன் எழுந்து தனியாக ஒரு “றக்அத்” தொழுது தொழுகையை முடிக்க வேண்டும்.
 
ஒருவன் “ஜும்ஆ”த் தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வந்தான். இமாம் இரண்டாம் “றக்அத்”தில் “அத்தஹிய்யாத்” இருப்பில் இருந்தார். வந்தவன் “ஜும்ஆ”த் தொழுகைக்கான “நிய்யத்” வைத்து அவன் “அத்தஹிய்யாத்” இருப்பில் இருந்து “அத்தஹிய்யாத்” ஓதினான். தொழுகை நடத்திய இமாம் “ஸலாம்” சொல்லி தொழுகையை முடித்த பின் இவன் எழுந்து “ளுஹ்ர்” தொழுகை தொழ வேண்டும். “ஜும்ஆ” தொழுகைக்காக “நிய்யத்” வைத்ததால் ஒரு “றக்அத்” மட்டும் தொழுது தொழுகையை முடிக்கலாகாது.

இதனால்தான் “நிய்யத்” வைத்தான் தொழவில்லை என்றும், தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை என்றும் நொடி போல் சொல்லப்பட்டுள்ளது.
இவன் “ஜும்ஆ” தொழுகைக்காக “நிய்யத்” வைத்தான். ஆயினும் “ஜும்ஆ” தொழவில்லை. “ளுஹ்ர்” தொழுதான். ஆயினும் அதற்கு “நிய்யத்” வைக்கவில்லை.
இரண்டு: “நான்கு அத்தஹிய்யாத்” ஓத வேண்டிய தொழுகை உண்டா? அது எது?
ஒருவன் “மக்ரிப்” தொழுவதற்காக பள்ளிவாயலுக்கு வந்தான். அவ்வேளை “இமாம்” – தொழுகை நடத்துபவர் “மக்ரிப்” தொழுகையின் இரண்டாம் “றக்அத்”தில் “அத்தஹிய்யாத்” இருப்பில் இருந்து கொண்டிருந்தார். இவனும் மக்ரிப் தொழுகைக்கான “நிய்யத்” வைத்து “இமாம்” அவர்களைத் தொடர்ந்து “அத்தஹிய்யாத்” இருப்பில் இருந்து “அத்தஹிய்யாத்” ஓதினான். இது நான்கு “அத்தஹிய்யாத்”தில் ஒன்று. இவனுக்கு முதலாவது “அத்தஹிய்யாத்” ஆகும்.
இமாம் மூன்றாம் “றக்அத்” தொழுவதற்காக எழுந்த போது இவனும் அவரைத் தொடர்ந்து எழுந்து தொழுதான். இமாம் தனது மூன்றாம் “றக்அத்”தில் “அத்தஹிய்யாத்” ஓதுவதற்காக இருந்தார். இவனும் அவரைத் தொடர்ந்து இருந்தான். “அத்தஹிய்யாத்” ஓதினான். இது இவனுக்கு மக்ரிப் தொழுகையின் முதலாம் “றக்அத்” ஆகும். இவனுக்கு இது இரண்டாவது “அத்தஹிய்யாத்” ஆகும்.
இமாம் தனது மூன்றாம் “றக்அத்”தை முடித்து “ஸலாம்” சொன்னபின் இவன் தனது இரண்டாம் “றக்அத்”திற்காக எழுந்து தொழுவான். இதே “றக்அத்”தில் இவன் “அத்தஹிய்யாத்” ஓத வேண்டும். இது இவனுக்கு மூன்றாவது “அத்தஹிய்யாத்” ஆகும்.
இதன் பிறகு இவன் மூன்றாம் “றக்அத்” தொழ வேண்டும். இதிலும் இவன் “அத்தஹிய்யாத்” ஓத வேண்டும். இதோடு இவன் நான்கு “அத்தஹிய்யாத்” ஓதுகிறான்.
இந்த விபரப்படி மக்ரிப் தொழுகின்றவன் நான்கு அத்தஹிய்யாத் ஓதுகின்றான்.
மூன்று: தொழுகின்ற ஒருவன் தொழுகையை நிறைவு செய்யாமல் இடையில் விடுவதாயின் என்ன தேவைக்காக விடலாம்?
ஒருவன் தொழுது கொண்டிருக்கிறான். அவனின் மனைவி டீவீ பார்த்துக் கொண்டிருக்கிறாள். இவர்களின் இரண்டு வயதுப் பிள்ளை படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
குழந்தை படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருப்பதை மறந்த கணவன் அறையின் கதவை தாழிட்டு அதன் திறப்பை தனது இடுப்பில் வைத்துக் கொண்டு தொழத் தொடங்கினான்.
எதிர்பாராமல் குழந்தை பயங்கர சத்தமிட்டு அழும் குரல் தாய்க்கு கேட்டது. அவள் அவசரமாக ஓடி வந்தாள். கதவு தாழிடப்பட்டிருந்தது. தொழுது கொண்டிருந்த கணவனின் அருகில் சென்று விடயத்தைக் கூறி திறப்பைத் தருமாறு கேட்டாள். அவனோ தன் பாட்டில் தொழுது கொண்டே இருந்தான். இவள் கதவை உடைத்து உள்ளே சென்றாள். குழந்தை மின்சாரம் தாக்கியதால் மரணித்துக் கிடந்தது. இதைக் கண்ட தாய் மூச்சுத் திணறி அவ்விடத்திலேயே உயிர் துறந்தாள்.
தொழுகையை முடித்து விட்டு வந்த கணவனும் இக்கோரக் காட்சியைக் கண்டு மூச்சுத் திணறி மாரடைப்பால் அவனும் அக்கணமே மரணித்தான்.
இவ்விபரீதத்துக்கான காரணம் கணவனுக்கு மார்க்க அறிவு இல்லாமற் போனதேயாகும். தொழுகையின் சட்டங்களையும், சலுகைகளையும் அவன் அறியாமற் போனதேயாகும்.
அவன் தொழுது கொண்டிருந்த நேரம் பிள்ளையின் அழுகைக் குரல் கேட்டும், மனைவி அழைத்திருந்தும் அவன் தொழுகையை விடாமலிருந்தது அவன் செய்த பிழையாகும். இந்தப் பிழையினாலேயே மூன்று மரணங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறான ஆபத்தான கட்டங்களில் தொழுகையை விடுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை முஸ்லிம்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெருமானார் அழைத்தால் மட்டும் தொழுகையை நிறுத்துவது “வாஜிப்” கடமை.
ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவரை அழைத்தால் மட்டுமே தொழுகையை நிறுத்திவிட்டு அவர்களின் அழைப்புக்கு அவர் பதில் கூறுவது கடமையாகும். அவர்கள் என்ன தேவைக்காக அழைத்தாலும் அதைக் கவனியாமல் உடனே தொழுகையை நிறுத்திவிட்டு அவர்களுக்கு பதில் கூற வேண்டும். அவர்கள் தவிர வேறு எவர் அழைத்தாலும் தொழுகையை நிறுத்துவதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை. பெருமானார் அவர்களின் விடயத்தில் மட்டும் இப்படியொரு சலுகை உண்டு. இச்சலுகை பெற்றோருக்கும் கிடையாது.
பொதுவாக ஆபத்தான எந்த ஒரு கட்டமாயினும் அதிலிருந்து ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்காக தொழுகையை விடலாம். ஆயினும் அதை மீண்டும் தொழுவது கடமையாகும்.
உதாரணமாக ஒரே வீட்டில் வாழும் பலரில் ஒருவன் வீட்டைப் பூட்டி திறப்பை தன்னிடம் வைத்துக் கொண்டு தொழுகிறான் என்று வைத்துக் கொள்வோம். மற்றவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட அவசரத் தேவைக்காக அவ் வீட்டைத் திறக்க வேண்டியேற்பட்டால் தொழுது கொண்டிருப்பவருக்கு விளங்கும் வகையில் அவசரத் தேவைக்காக கதவு திறக்க வேண்டியுள்ளதால் அவசரமாக தொழுகையை முடித்துவிட்டு வாருங்கள் என்று சொல்ல முடியும். இது ஆகும்.
அவர் தொழுகையின் “பர்ழ்” கடமையான காரியங்களை மட்டும் பேணி சுருக்கித் தொழுது விட்டு வர வேண்டும். அல்லது தன்னிடமுள்ள வீட்டின் திறப்பை சொன்னவர் அறியும் வகையில் தனக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். இதுவும் ஆகும்.
வீட்டுக் காரன் தொழுது கொண்டிருக்கிறான். வீடு தீப்பிடித்து எரிகிறது. இக்கட்டத்தில் அதை அணைப்பதற்காக அவன் தொழுகையை விடலாம். இதுவும் ஆகும். ஆயினும் அவன் அதை மீண்டும் தொழ வேண்டும்.
ஒருவன் தனது தோட்டத்தில் தொழுது கொண்டிருக்கிறான். அங்கு குருடன் ஒருவன் வருகிறான். தொழுகின்றவனுக்கு அங்குள்ள ஆழமான குழியில் அவன் விழுந்து விடுவான் என்று விளங்கினால் அவன் தொழுகையை நிறுத்திவிட்டு அவனைக் காப்பாற்ற வேண்டும். இது அவனின் கடமை. இடை நிறுத்திய தொழுகையை அவன் திரும்பத் தொழ வேண்டும்.
ஒருவன் பலரிடம் கடன் வாங்கி கடன் காரனாகிவிட்டான். கடன் கொடுத்தவர்கள் அவனைத் தேடுகிறார்கள். அவன் ஒரு நாள் தனது வீட்டில் அல்லது எங்காவது ஓர் இடத்தில் தொழுது கொண்டிருக்கிறான். அவனுக்கு கடன் கொடுத்தவன் ஒருவன் அவனைக் கொலை செய்வதற்காக வாளுடன் வந்து கொண்டிருக்கிறான். இதைக் கண்ட இன்னொருவன் தொழுகின்றவனுக்கு அருகில் வந்து உன்னைக் கொலை செய்வதற்காக வாளுடன் ஒருவன் வருகிறான் என்று சொல்லி அவனைக் காப்பாற்ற முடியும். அவ்வாறு யாராவது ஒருவன் சொன்னால் அவன் தொழுகையை நிறுத்திவிட்டு கொலையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும்.
மேற்கண்டவாறு ஆபத்தான கட்டங்களில் மட்டும் தொழுது கொண்டிருப்பவன் தொழுகையை துண்டித்து விட்டு தன்னைப் பாதுகாக்க முடியும். இது குற்றமாகாது.
தொழுது கொண்டிருக்கும் ஒருவனுக்கு தொழுகையிலுள்ள ஏதாவது ஒரு “பர்ழ்” கடமையான ஓதலிலோ, கடமையான செயலிலோ அது செய்யப்பட்டதா? அல்லது விடப்பட்டதா? என்று சந்தேகம் ஏற்பட்டால் ஓதவில்லை அல்லது செய்யவில்லை என்று முடிவு செய்து கொண்டு அதைச் செய்ய வேண்டும். செய்யப்பட்டதென்று முடிவு செய்தல் கூடாது. உதாரணமாக ஒருவன் தொழுகையில் “றுகூஉ” செய்து கொண்டிருக்கும் வேளையில் “கியாம்” நிலையில் “பாதிஹா” ஓதியதா? இல்லையா? என்று சந்தேகம் வந்தால் ஓதவில்லை என்று முடிவுவெடுத்துச் செயல்படுவதே சிறந்ததாகும். சந்தேகத்துடன் தொழுதல் கூடாது.
(கஸ்ர், ஜம்உ பற்றிய சுருக்கமான விளக்கம்)
தொழுகின்ற ஒருவன் தூரப் பிரயாணம் செய்ய நாடினால் தொழுகையை “கஸ்ர்” அல்லது “ஜம்உ” செய்து கொள்ளுதல் வேண்டும். “கழா”வாக்குதல் பாவமாகும்.
“கஸ்ர்” என்றால் சுருக்கித் தொழுதல். இது நான்கு “றக்அத்”துக்களைக் கொண்ட தொழுகையில் மட்டுமே செய்ய முடியும். ளுஹ்ர், அஸ்ர், இஷா என்பன போன்று. இவை தவிர மக்ரிப், ஸுப்ஹ் போன்ற தொழுகைகளில் “கஸ்ர்” செய்ய முடியாது.
“கஸ்ர்” செய்தல் என்றால் நான்கு “றக்அத்” தொழுகையை இரண்டு “றக்அத்”தாக சுருக்குதலாகும். “ஜம்உ” என்றால் ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையுடன் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ தொழுவதாகும்.
உதாரணமாக இஷா தொழுகையை மக்ரிபுடன் முற்படுத்தி தொழுதல். இது “ஜம்உ தக்தீம்” என்று சொல்லப்படும். இதன் பொருள் “முற்படுத்திச் சேர்த்தல்” என்பதாகும். அல்லது மக்ரிப் தொழுகையை இஷா தொழுகையுடன் பிற்படுத்தி தொழுதல். இது “ஜம்உ தஃகீர்” என்று சொல்லப்படும். இதன் பொருள் பிற்படுத்திச் சேர்த்தல் என்பதாகும்.
இவ்வாறு செய்தல் “ஸுப்ஹ்” தொழுகை தவிர ஏனைய நான்கு தொழுகையிலும் செய்ய முடியும். “ஸுப்ஹ்” தொழுகையில் மட்டும் “கஸ்ர்” செய்தல், “ஜம்உ” செய்தல் என்பதற்கு இடமில்லை. இத் தொழுகை குறிப்பிட்ட நேரம் மட்டும் தொழுதல் அவசியமாகும்.
“ஜம்உ தக்தீம்” முற்படுத்திச் சேர்த்தல் என்பதும், “ஜம்உ தஃகீர்” பிற்படுத்திச் சேர்த்தல் என்பதும் ளுஹ்ர், அஸ்ர் இரண்டு தொழுகைகளிலும், மக்ரிப், இஷா இரண்டு தொழுகைகளிலுமே செய்யலாம். “ஸுப்ஹ்” தொழுகைக்கு எந்த ஒரு சலுகையுமில்லை. அது உரிய நேரத்தில் மட்டும் வழமை போன்றே தொழப்பட வேண்டும்.
கஸ்ர், ஜம்உ செய்வதாயின் சுமார் 56.5 மைல் தூரம் அல்லது 89 கிலோமீற்றர் தூரம் இருக்க வேண்டும். (இந்திய உலமாஉகளின் கருத்தின் படி சுமார் 130 கிலோ மீற்றர்)
(பொய் சொல்லுதல்)
இதேபோல் ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொய் சொல்லவும் முடியும்.
உதாரணமாக ஒருவன் துப்பாக்கியுடன் இன்னொருவனைத் துரத்தி வருகிறான். அவனோ ஒரு வழியால் ஓடி ஒழித்துவிட்டான். இதை நேரில் கண்டவன் துப்பாக்கியுடன் வந்தவனிடம் அவன் போன வழியைக் காட்டிக் கொடுக்காமல் பொய் சொல்லி அவனைப் பாதுகாக்க முடியும். குற்றமில்லை.
ஒருவனின் தாய் கெட்ட குணுமுள்ளவள். தனது மகன் அவனின் மனைவிக்கு – அவளின் மருமகளுக்கு உடையோ, உணவோ வாங்கிக் கொடுப்பதை விரும்பாதவள். வாங்கிக் கொடுத்தால் கூட மகனையும், மருமகளையும் சபிப்பாள். இவளிடம் பொய்ய சொல்ல முடியும். குற்றமாகாது.
ஒருவனின் தாய் தனது மகனிடம், நீ உனது மனைவிக்கு என்ன கறி வாங்கிக் கொடுப்பதாயினும், அல்லது உடுப்பு வாங்கிக் கொடுப்பதாயினும் என்னிடம் காட்டி நான் கொடுக்கச் சொன்னால் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டாளாயின் அவளின் கட்டளைக்கு மாறு செய்யலாம். குற்றமில்லை.
ஒரு தாய் திருமணம் செய்த தனது மகனிடம், நீ தினமும் சந்தைக்குச் சென்று கறி வாங்கினால் முதலில் என்னிடம் கொண்டு வர வேண்டும். எனக்கு விருப்பமானதை நான் எடுத்துக் கொண்டு தரும் மீதியைத்தான் உன் மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டாளாயின் அதற்கு அவன் சம்மதிக்கலாகாது. அவன் தனது தாய்க்கு கொடுக்க வேண்டியதை அவளுக்கு கொடுக்க வேண்டும். மனைவிக்கு கொடுக்க வேண்டியதை அவளுக்கு கொடுக்க வேண்டும். இது அவனின் விருப்பமாகும். இவ்விடயத்தில் தாய்க்கு மாறு செய்தல் குற்றமாகாது. இவ்விடயத்தில் தாய் தலையிடவே கூடாது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ»
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எந்த ஒரு படைப்புக்கும் வழிப்படுதல் கூடாது என்ற நபீ அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
இதன் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எவர் எது சொன்னாலும் அவருக்கு கட்டுப்படுதல் கூடாது என்பதாகும்.
பேற்றோருக்குப் பிள்ளைகள் கட்டுப்பட்டு நடப்பது மார்க்கத்தில் உள்ளதாயினும் பாவமான காரியம் செய்யுமாறு அவர்கள் சொன்னால் அவ்விடயத்தில் அவர்களுக்கு கட்டுப்படுதல் கூடாது. அது பாவமாகும்.
உதாரமணாக பெற்றோர் தமது மகனை அவனின் மனைவியை “தலாக்” விவாகரத்துச் செய் என்று சொல்வது போன்று. அல்லது மகளை அவளின் கணவனை “பஸ்க்” செய் என்று சொல்வது போன்று.
 
பெற்றோரைத் தமது மகனின் மாமா, மாமி – அவர்களின் சம்மந்தனும், சம்மந்தியும் கௌரவிக்கவில்லை என்பதற்காக தமது மகனுக்கு அவனின் மனைவியை “தலாக்” விவாகரத்துச் செய்துவிடு என்று பணிப்பது போன்று. இவ்வாறான விடயத்தில் பெற்றோருக்கு அவர்களின் மகனோ, மகளோ கட்டுப்படுவது கூடாது. இவ்விடயத்தில் அவர்களுக்கு மாறு செய்ய முடியும். குற்றமில்லை.
 
பல ரசம் கலந்த இக்கட்டுரையில் அதிகமாக “பிக்ஹ்” ஷரீஆவின் சட்டங்களே எழுதப்பட்டுள்ளன. வயது வந்த ஒரு முஸ்லிம் இவற்றை அறிந்து செயல்பட்டால் பாவத்திலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்பதற்காக எழுதினேன்.
நான் எழுதியுள்ளவற்றில் யாராவது பிழை இருப்பதாக அறிந்தால் அல்லது மேலதிக விபரம் தேவையானோர் என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா போல் விசாரணையின்றி “பத்வா” வழங்கி படு குழியில் விழுந்ததுபோல் எவரும் விழுந்து விட வேண்டாம்.
 
இன்னும் எழுதுவேன்.
இன்ஷா அல்லாஹ்!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments