தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
திருக்குர்ஆன் வசனங்களில் எந்த ஒரு வசனமாயினும் திரு நபீ ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் திரு மொழிகளில் ஒன்றுக்கேனும் முரண்பட்டால் – முரணானது போல் எமக்குத் தென்பட்டால் – தஃவீல் என்ற வலிந்துரை கொண்டு இரண்டையும் சரி காணுதல் வேண்டும். அவசியம். இவ்வாறுதான் நபீ மொழிகளில் ஒன்றேனும் திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றுக்கேனும் முரணானது போல் எமக்குத் தென்பட்டாலுமாகும்.
இவ்வாறே வலீமார், ஸூபீகள் ஆகியோரின் எந்த ஒரு பேச்சாயினும் திருக்குர்ஆனுக்கோ, திரு நபீயின் அருள் மொழிக்கோ முரணானது போல் எமக்குத் தென்பட்டாலுமாகும். மகான்களின் பேச்சுகளுக்கு வலிந்துரை கொண்டு அவர்களின் பேச்சுகளையும் சரிகாண வேண்டும். அவசியம்.
ஏனெனில் திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றேனும் நபீ மொழிக்கும், நபீ மொழிகளில் ஒன்றேனும் திருக்குர்ஆன் வசனங்களுக்கும் எந்த வகையிலும் முரணாக இருக்கமாட்டாது. இது அசாத்தியம்.
இவ்வாறுதான் வலீமார், ஸூபீகளின் பேச்சுகளுமாகும். எந்த ஒரு வலீயின் அல்லது ஸூபீயின் பேச்சும் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிக்கும் முரணாக இருக்கமாட்டாது. இதுவும் அசாத்தியமேதான்.
இவ்வாறுதான் இஸ்லாமிய ‘அகீதஹ்’ கொள்கைக்கு முரணானது போல் எமக்குத் தென்படுகின்ற வலீமார்களினதும், ஸூபீகளினதும் பேச்சுகளுமாகும்.
உதாரணமாக ஸூபீ மகான்களின் நூல்களில் إِذَا تَمَّ الْفَقْرُ فَهُوَ الله ‘பக்ர்’ பூரணமானால் அல்லாஹ் ஆவான் என்று ஒரு வசனம் வருகின்றது. இந்த வசனத்தின் (வலிந்துரையில்லாத) நேரடிப் பொருள் ‘வறுமை பூரணமானவன் அல்லாஹ்’ என்பதாகும். இந்தப் பொருள் இஸ்லாமிய ‘அகீதஹ்’ கொள்கைக்கு முரணானதென்பதில் சந்தேகமில்லை.
எனவே, இவ்வாறான வசனங்களுக்கு வலிந்துரை கொண்டு கருத்தெடுப்பது மிகவும் அவசியமானதாகும்.
‘பக்ர்’ என்ற அறபுச் சொல்லுக்கு வறுமை என்ற பொருள் பரவலாக அறியப்பட்ட பொருளாக இருந்தாலும் கூட ஸூபீ மகான்கள் இச் சொல்லுக்கு குறித்த பொருளைப் பாவிப்பதில்லை. இதற்கு ஸூபீ மகான்களின் பரிபாஷையில் – அவர்களுக்கிடையிலான உபயோகத்தில் – الفقر هو الفناء فى الله (‘பக்ர்’ என்பது அல்லாஹ்வில் ‘பனா’ அழிந்து போவதாகும்) என்று பொருள் கொள்ளப்படும். இவ்வாறு பொருள் கொண்டால் மேற்கண்ட இவ்வசனம் இஸ்லாமிய கொள்கைக்கு முரணாகாது. ஏனெனில் அல்லாஹ்வில் அழிந்தவன் இல்லாதவன்தான். அவன் இல்லையென்றால் வேறு எவருமில்லை. ஸூபீ மகான்களின் ஸூபிஸக் கலைச் சொற்கள் தெரியாதவர்களே குளம்பிக் கொள்கின்றார்கள்.
உதாரணமாக இன்னும் ஒரு வசனத்தைக் கவனிக்கலாம்.
அபூ யஸீத் பிஸ்தாமீ மிகப் பிரசித்தி பெற்ற ஒரு ஸூபீ மகான். இவர்கள் ஏழு தரம் ‘பிஸ்தாம்’ நகரில் இருந்து போலிமார்க்க வாதிகளால் நாடு கடத்தப்பட்டவர்கள் என்பது உலகநாடுகள் அனைத்தும் அறிந்த உண்மையாகும். இவர்கள் ஒரு சமயம் خُضْتُ بَحْرًا وَقَفَ الْأَنْبِيَاءُ بِسَاحِلِهِ ‘நான் கடலில் மூழ்கிவிட்டேன். நபீமார் அனைவரும் அதன் கரையில் நிற்கின்றார்கள் ‘ என்று கூறினார்கள்.
இவ்வசனத்தின் வெளிப்படையான பொருள் (நான் ஞானக்கடலில் மூழ்கிவிட்டேன். நபீமார் மூழ்க முடியாத நிலையில் கரையில் நிற்கின்றார்கள்) என்பதாகும்.
இவ்வாறு பொருள் கொள்ளுதல் இஸ்லாமிய ‘அகீதஹ்’ கொள்கைக்கு முரணானதாகும்.
ஏனெனில் அபூ யஸீத் என்பவரைவிட நபீமார்தான் பதவியில் சிறந்தவர்கள். அவர்கள் ஞானக்கடலில் மூழ்கச் சக்தியற்ற நிலையில் கரையில் நிற்கின்றார்கள் என்பது தவறான கொள்கையாகும்.
எனவே, இவ்வசனத்திற்கு அவ்வாறு சொன்னவரைப் பாதிக்காமலும், கொள்கைக்கு முரணில்லாமலும் வலிந்துரை கொள்வது அவசியமாகிறது.
இதற்கான வலிந்துரை எவ்வாறெனில் நபீமார், அபூ யஸீத் அனைவரும் கூட்டாகவே ஞானக்கடலில் இறங்கினார்கள். எனினும் நபீமார் தமது வல்லமையினால் மீண்டும் கரை சேர்ந்து விட்டார்கள். அபூ யஸீத் அவர்களோ கரையேற சக்தியற்ற நிலையில் அக்கடலில் மூழ்கிவிட்டார் என்பதாகும்.
இவ்வாறு வலிந்துரை கொள்வதால் இஸ்லாமிய கொள்கைக்கு எந்த வகையிலும் முரண்பாடு ஏற்படமாட்டாது.
இவ்வாறுதான் ஸூபீ மகான்களின் பேச்சுகள் திருக்குர்ஆனுக்கோ, திரு நபீயின் அருள் மொழிகளுக்கோ, இஸ்லாமிய ‘அகீதஹ்’ கொள்கைக்கோ முரணானது போல் தென்பட்டால் அதற்கு வலிந்துரை கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். மாறாக அவ்வாறு சொன்னவர் மதம் மாறிவிட்டார் என்றோ, அவரைக் கொலை செய்ய வேண்டும் என்றோ, அவரை நாடு கடத்த வேண்டும் என்றோ முடிவு செய்தல் வடி கட்டிய அறியாமையும், மனமுரண்டுமேயாகும். ஆழமாக ஆய்வு செய்யாமல் முன்னர் வாழ்ந்த ஸூபீ மகான்களை கொன்றவர்களும், நாடு கடத்தியவர்களும் போலி அறிஞர்கள் என்பதை அறிவுலக நீதிமன்று நன்கறியும்.