Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முல்லாக்களின் “முர்தத் பத்வா” விளக்கமின்மையின் உருவமாகும்!

முல்லாக்களின் “முர்தத் பத்வா” விளக்கமின்மையின் உருவமாகும்!

“பத்வா” வழங்கிய முல்லாக்கள் துறை தெரியாமல் தோணி தொடுத்துவிட்டார்கள்!
ஆழமறியாமல் பாதம் பதித்து அல்லல் படுகிறார்கள்!
 
புலி வாலைப் பிடித்தவன் போல் செய்வதறியாது தடுமாறுகிறார்கள்!
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 

1979ம் ஆண்டு காத்தான்குடியில் நடைபெற்ற மீலாத் விழா ஒன்றில் உரை நிகழ்த்திய நான், எனக்கு முன் உரை நிகழ்த்திய, பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சிறப்பம்சங்களை மறுத்துப் பேசிய ஒருவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும் போது ஸூபிஸ தத்துவம் பற்றியும், “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறையியல் அகமியம் பற்றியும் பேசினேன்.
 
எனது பேச்சை ஜீரணிக்க முடியாமற் போன காத்தான்குடி உலமாஉகளிற் சிலர் வேறு சில சுயநலவாதிகளால் தூண்டப்பட்டு எனது பேச்சு பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களை எடுத்துக் கொண்டு கொழும்பு சென்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களிடம் ஒலி நாடாக்களைக் கொடுத்து இவற்றிலுள்ள கருத்துக்களைச் செவியேற்று ஒரு “பத்வா” மார்க்கத் தீர்ப்பு தாருங்கள் என்று கேட்டார்கள். இது 1979ம் ஆண்டு நடந்த நிகழ்வு.
 
அவ்வேளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகிகளிற் சிலர் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ளவர்களாயிருந்தனர். எனது இந்த விவகாரம் பல நாட்கள் பட்டினியிருந்த நரிக்கு கோழி பிரியாணி கிடைத்தாற் பேலாகிவிட்டது. என்னை அடக்கி ஒடுக்குவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என நினைத்து மின்னல் வேகத்தில் செயல்பட்டார்கள்.
 
அவ்வேளை “பத்வா” குழுவினராயிருந்தவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்ன சாமான் என்று கூடத் தெரியாமலேயே இருந்தது. ஆயினும் அவர்களுக்கு “ஹுலூல் – இத்திஹாத்” என்ற கொள்கை பிழையான கொள்கை என்று மட்டும் தெரிந்திருந்தது.
 
இதனால் எனது பேச்சை “ஹுலூல் – இத்திஹாத்” என்று விளங்கி அது பிழையென்று “பத்வா” கொடுத்தார்கள். அவ்வாறு “பத்வா” கொடுத்தவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரை அதில் குறிப்பிட்டு பொது மக்களுக்கு என்னையும், எனது கருத்தைச் சரிகண்டவர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று படம் பிடித்துக் காட்டிவிட்டார்கள். இதுவே நடந்த உண்மையாகும்.
 
நான் இவ்வாறு கூறுவதற்கு அவர்களின் “பத்வா”தான் ஆதாரமாகும். ஏனெனில் அவர்களின் “பத்வா”வின் எந்த ஓர் இடத்திலும் “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்கு எந்த ஓர் ஆதாரமும் அவர்கள் கூறவில்லை. அது மட்டுமல்ல. “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லைக் கூட அவர்கள் தமது “பத்வா”வின் எந்த ஓர் இடத்திலும் கூறவில்லை. ஆயினும் அதில் பல இடங்களில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற சொல்லைப் பாவித்துள்ளார்கள்.
 
இவ் ஆதாரம் ஒன்றே அவர்கள் தலைப்புத் தெரியாமல் தடுமாறியுள்ளார்கள் என்பதற்குப் போதும். போதும். போதும்.
 
ஏனெனில் ஒருவன் ஏதோ ஒரு விடயம் தொடர்பாக அது பிழையென்று “பத்வா” வழங்குவதாயின் அவ்விடயத்தின் பெயரை அந்த “பத்வா”வில் பல இடங்களில் குறிப்பிடுவான். இதுவே சரியானதும், வழக்கத்தில் உள்ளதுமாகும்.
 
உதாரணமாக “வஹ்ஹாபிஸம்” பிழையென்று “பத்வா” வழங்குபவன் “வஹ்ஹாபிஸம்” என்ற இச் சொல்லை தனது “பத்வா”வின் பல இடங்களில் குறிப்பிடுவான். இதேபோல் “காதியானிஸம்” பிழையென்று “பத்வா” வழங்குபவன் இச் சொல்லை தனது “பத்வா”வின் பல இடங்களில் குறிப்பிடுவான்.
 
ஆயினும் முல்லாக்கள் வழங்கிய “பத்வா” அறபுப் பகுதி 32 பக்கங்களில் எந்த ஓர் இடத்திலும், அதேபோல் தமிழாக்கப் பகுதி 28 பக்கங்களில் எந்த ஓர் இடத்திலும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் கூறப்படவில்லை.
 
ஆயினும் இதற்கு மாறாக “ஹுலூல் – இத்திஹாத்” என்ற சொல் ஓர் இடத்தில் மட்டுமன்றி பல இடங்களில் கூறப்பட்டிருப்பது இங்கு விஷேடமாக குறிப்பிட வேண்டியதாகும்.
 
இது மட்டுமல்ல. உலமாஉகள் தமது “பத்வா”வில் கூறியுள்ள ஆதாரங்கள் அனைத்தும் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்பதற்கான ஆதாரங்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்கான ஆதாரங்கள் அல்ல. “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்கான ஆதாரம் ஒன்று கூட இல்லை.
 
நான் மேலே கூறிய இக்காரணத்தை நன்றாகப் படித்த, ஒரு பக்கச் சார்பற்ற ஓர் அறிஞன் உலமாஉகள் வழங்கியுள்ள “பத்வா”வை வாசித்தாராயின் இந்த “பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்பதற்கான “பத்வா”வேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்கான “பத்வா” அல்ல என்று நிச்சயம் கூறுவார்.
 
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
நீங்கள் “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று “பத்வா” வழங்கினீர்களா? “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” வழங்கினீர்களா?
 
“ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்றுதான் நாங்கள் “பத்வா” வழங்கினோம் என்று நீங்கள் சொல்வீர்களாயின் நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசவில்லை என்பதும், அதற்கு நான் எதிரானவன் என்பதும், கடந்த காலங்களில் பல மேடைகளில் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று நான் பேசியதும் உங்களுக்குத் தெரியாதா? நான் கடந்த காலங்களில் கல்முனை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடைபெற்ற பெரும் விழாக்களில் அவை பிழையென்று பேசியதற்கான ஆதாரங்களை நான் தரவா? தந்தால் உங்கள் “பத்வா”வை நீங்கள் வாபஸ் பெறுவீர்களா?
 
நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசாதவனாயும், அதைப் பல்லாண்டுகளாக எதிர்த்துப் பேசுபவனாயும் இருக்கும் நிலையில் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று நீங்கள் வழங்கிய “பத்வா”வில் எனது பெயரை ஏன் குறிப்பிட்டீர்கள்? உங்களின் ஊடுருவல் எனும் “பத்வா” நூல் முன் பக்கம் கட்டம் போட்டு எனது பெயரைக் குறிப்பிட்டுள்ளீர்களே இது உங்களின் தவறா? சதியா? இருட்டடிப்பா?
 
நீங்கள் இதுகால வரை செய்த இருட்டடிப்புக்களையும், சதிகளையும், தந்திர மந்திரங்களையும், பார பட்ச நடவடிக்கைகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்! தொடர்ந்தும் உங்களின் நடவடிக்கை நியாயமற்றதாயிருக்குமாயின் உங்களுக்கு “முர்தத்” பட்டம் வழங்கி நான் ஒரு “பத்வா” வெளியிடுவேன். நீங்கள் எங்களை மதம் மாற்றி “பத்வா” வெளியடலாம் என்றால் உங்களை நாங்கள் மதம் மாற்றி “பத்வா” வெளியிட ஏன் முடியாது? இந்நாட்டில் உங்களுக்கு ஒரு சட்டமும், எங்களுக்கு இன்னொரு சட்டமுமா? கேட்க வேண்டிய இடத்தில் கேட்போம். பதில் சொல்ல வேண்டியவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
 
நான் இன்றும் மரணிக்கலாம். நாளையும் மரணிக்கலாம். அல்லது 105 வயது வரையும் கூட வாழலாம். இது அல்லாஹ்வின் நாட்டமாகும். ஆயினும் நீங்கள் நீதியின் வாயலில் நின்று சமாதானக் கொடி காட்டும் வரை உங்களுக்கு எதிராக இறைவனிடமும், இறை நேசர்களிடமும் கையேந்திக் கொண்டே இருப்பேன். உங்கள் போல் வெள்ளை “வான்” அனுப்பி என்னைக் கடத்த முயன்றது போல் நான் செய்ய மாட்டேன். பயம் காட்ட மாட்டேன். என் நீதிவான் என்னைப் படைத்த இறைவன்தான். எனது வழக்கறிஞர்கள் அவ்லியாஉகளேதான்.
 
நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை எதிர்த்து அது பிழையென்று “பத்வா” வழங்கினீர்களா? அல்லது “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று “பத்வா” வழங்கினீர்களா? என்ற எனது கேள்விக்கு நீங்கள் மேலே சொன்னதற்கு மாறாக, “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை எதிர்த்து அது பிழையென்றுதான் “பத்வா” வழங்கினோம் என்று நீங்கள் விடை சொல்வீர்களாயின் உங்கள் “பத்வா”வில் ஓர் இடத்திலாவது “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லை நீங்கள் கூறாமல் விட்டதேன்? இதுவும் உங்களின் இருட்டடிப்புத்தானா? அல்லது மறதியா? அல்லது அறிவின்மையா? என்று நாங்கள் கேட்போம். நியாயமான பதில் கூறுங்கள். ஏற்றுக் கொள்கிறோம்.
 
உங்களின் “பத்வா” 05ம், 22ம் பக்கங்களில் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அஷ்ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ, அஷ்ஷெய்குல் இமாம் ஙஸ்ஸாலீ ஆகியோரை பெரும் இமாம்கள் என்றும், மகான்கள் என்றும் எழுதியுள்ளீர்கள்.
 
நீங்கள் பெயர் குறித்த மூன்று மகான்களும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியுள்ளார்கள் என்று அவர்களின் நூல்களின் பெயர்கள், பக்கங்களுடன் ஆதாரங்களை நான் முன் வைத்தால் உங்கள் “பத்வா”வை நீங்கள் வாபஸ் பெறுவீர்களா? பகிரங்க பதில் தாருங்கள்.
 
இம் மூவரில் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்கள் தங்களின் இன்னின்ன நூல்களில், இன்னின்ன பக்கங்களில் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்ற விபரம் கடந்த தொடர்களில் விளக்கமாக எழுதியுள்ளோம். வாசித்திருப்பீர்கள். இன்னும் தருவோம். வாசியுங்கள். இதேபோல் நீங்கள் ஏற்றுக் கொண்ட ஏனைய இருவர்கள் தமது நூல்களில் எழுதியிருக்கும் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களையும் தருவோம். எதிர்பாருங்கள். விளக்கமும் தாருங்கள்.
 
தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்களே!
“யாரோ “பத்வா” வழங்கியிருக்க எங்களிடம் கேள்வி கேட்கிறார் மௌலவீ றஊப்” என்று நீங்கள் வேதனைப்பட்டுக் கூறியதாக அறிய முடிந்தது. நீங்கள் சொல்வது உண்மைதான். நான் மறுக்கவில்லை. எனினும் தற்போது நீங்கள்தான் அந்த “பத்வா”வை அமுல் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதனால்தான் உங்களின் பெயரும் பேசும் பொருளாகியுள்ளது. நீங்களும் பொது மக்களின் – குறிப்பாக ஸூபிஸ சமூகத்தின் ஏச்சுப் பேச்சுக்கும் ஆளாகிவிட்டீர்கள்.
 
ரிஸ்வீ ஹஸ்றத் அவர்களே!
எனது கட்டுரைகளிலும், பேச்சுக்களிலும் உங்களை நான் சாடுவது உண்மைதான். எனக்கும் வேதனைதான். ஆயினும் நீங்கள் என்னையும், நான் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களையும் “முர்தத்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட இழிவான சொல் எது இருக்கின்றது? கீழ்த்தரமான பட்டம் எது இருக்கிறது? இதற்குக் காரண கர்த்தாவாயிருக்கும் உங்களை எவ்வாறு கௌரவமாக அழைப்பது? பேசுவது? ஸூபிஸ சமூகமே என்னை எதிர்க்க முற்படுவார்கள்.
 
உங்களுக்கு ஒரு உலமா சபை “முர்தத்” என்று பட்டம் வழங்கி உங்களை முஸ்லிம் சமூகத்தலிருந்து ஒதுக்கி வைத்தால், முஸ்லிம்களின் பள்ளிவாயல்களில் தொழச் செல்லும் போது உங்களை “முர்தத்” என்று கூறி உங்களை அடித்தனுப்பினால், உங்களை நேசிக்கின்ற ஒருவன் உங்களை கொளரவிக்கும் போது உங்களின் எதிரி அவனைத் துன்புறுத்தினால், உங்களின் நண்பன் ஒருவன் உங்களுக்கு விருந்து வழங்கி “துஆ” ஓதுமாறு உங்களிடம் சொல்ல சபையிலிருந்த, உங்களை “முர்தத்” என்று சொல்கின்ற ஓர் எதிரி இவன் “துஆ” ஓதினால் நான் “ஆமீன்” சொல்லமாட்டேன் என்று சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தால், நீங்கள் நடத்தி வைத்த திருமணத்தை “முர்தத்” நடத்திய திருமணம் செல்லுபடியாகாதென்று உங்களுக்கு எதிரான ஒருவன் சபையில் பிரச்சினையை உருவாக்கினால் உங்களின் நிலை என்ன? உங்களின் மன நிலை எவ்வாறிருக்கும்? சிந்தனை செய்து பாருங்கள்.
 
உங்களின் “பத்வா”வினால் எனக்கு வெளியூர்களிலோ, வெளிநாடுகளிலோ எந்த ஒரு பிரச்சினையுமில்லை, சிக்கலுமில்லை. எனது ஊரிலேயே மேலே நான் சொன்னது போன்ற சிக்கல்கள் உள்ளன.
 
பெருமானார் அவர்களுக்கும் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலேயே எதிர்ப்புத் தொடங்கியது. காத்தான்குடி எனது ஊராயிருப்பதினாலும், நான் இங்கு வாழ்வதினாலுமே இவ்வூரில் சிக்கல்கள் உள்ளன.
 
நான் கொழும்புக்கு வந்தால் தரீகாவுக்கும், ஸூபிஸத்துக்கும், ஸுன்னத் வல் ஜமாஅத்துக்கும் ஆதரவான ஒரு செல்வந்தன் தனது வீட்டில் மௌலித், சாப்பாடு ஒழுங்கு செய்து என்னையும் அழைத்தால் நான் அங்கு செல்கிறேன். ஏனைய மௌலவீமாருடன் இருந்து மௌலித் ஓதுகிறேன். சாப்பிடுகிறேன். எவராலும் எந்தப் பிரச்சினையுமில்லை.
 
எனதூரிலோ, வேறு ஊர்களிலோ எனக்கு ஏதாவது சிக்கல், அல்லது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு உங்களின் “பத்வா” ஒன்றுதான் பிரதான காரணமாயுள்ளது.
 
நீங்கள் “பத்வா” வழங்கிவிட்டு கொழும்பில் வாழ்கிறீர்கள். இங்கு நடைபெறுகின்ற அநீதி, அட்டூழியங்கள் ஒன்றும் உங்களுக்குத் தெரியாது. எல்லாப் பாவமும், பழியும் உங்களையே சேரும். இதை நீங்கள் மனதில் பதிய வைத்து சுயமாக சிந்தித்து செயலாற்றுங்கள்.
 
நான் உங்களுடனாயினும், வேறு யாருடனாயினும் அறிவு ரீதியாக மோதுவதற்கே விருப்பமுள்ளவனாகவும், ஆயித்தமானவனாகவும் உள்ளேனே அன்றி கை காலால் மோதுவதற்கு நான் ஆயித்தமானவனில்லை.
 
அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹு அக்பர்!
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ
இறுதியில் சீதேவி உலமாஉகளுக்கு சீக்கு வந்துவிடாமலும், சோதனை இறங்கி விடாமலும் இருக்க இறைவனிடம் கையேந்துகிறேன்.
 
وَاللهُ هُوَ الشَّافِيْ، اَللهم اشْفِ أَمْرَاضَ الْعُلَمَاءِ الَّذِيْنَ أَفْتَوْنَا بِالرِّدَّةِ، وَأَبَاحُوْا دِمَائَنَا وَأَمْوَالَنَا، وَفَضَحُوْنَا بَيْنَ الْأُمَّةِ الْإِسْلَامِيَّةِ، اَللهم يَا شَافِيْ أَنْتَ الشَّافِيْ، لَا شِفَاءَ إِلَّا شِفَائُكَ لَا يُغَادِرُ سَقَمًا، اَللهم أَرِهِمِ الْحَقَّ حَقًّا وَارْزُقْهُمُ اتِّبَاعَهْ، وَأَرِهِمِ الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْهُمُ اجْتِنَابَهْ، وَأَخْرِجْهُمْ مِنْ ظُلُمَاتِ الْوَهْمِ وَالشَّكِّ وَالظَّنِّ، وَأَلْهِمْهُمْ مَا لَمْ يَعْلَمُوْا، وَأَلْهِمْهُمْ مَا لَمْ يَفْهَمُوْا، وَأَصْلِحْ رُؤُوْسَهُمْ وَأَحِدَّ عُقُوْلَهُمْ، وَأَخْرِجْهُمْ مِنْ سِجْنِ الْغَيْرِيَّةِ، وَأَدْخِلْهُمْ جَنَّةَ الْعَيْنِيَّةِ، وَأَمْطِرْ عَلَيْهِمْ مَطَرَ وَحْدَةِ الْوُجُوْدِ، وَطَهِّرْهُمْ مِنْ جَنَابَةِ الْغَفْلَةِ، وَمِنْ نَجَاسَاتِ الْغَيْرِيَّةِ وَالْأَنِّيَّةِ وَالْأَنَانِيَّةِ، وَاكْشِفْ لَهُمْ عَنْ كُلِّ سَرٍّ مَكْتُوْمٍ،
RELATED ARTICLES

Most Popular

Recent Comments