தொடர் – 1
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அடக்கம் பெற்றுள்ள அதி சங்கைக்குரிய அல்வலிய்யுல் காமில், வல் ஆரிபுல் வாஸில், அஸ்ஸெய்யித் பஹாஉத்தீன் பாகூஸ் கரவான் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சந்நிதானத்தில் நடைபெற்ற புனித றாதிப் மஜ்லிஸ் நிகழ்வை முகநூலில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!
கலீபாவாக இருந்து சபையை நடத்திய சகோதரர் அவர்கள் அழகாகவும், அமைதியாகவும், பக்தி ஜொலிக்கும் வகையிலும் நடத்தியது அனைவரின் உள்ளங்களிலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க ஓர் அம்சம்தான்.
மஜ்லிஸில் கலந்து கொண்டவர்களில் மார்க்க அறிஞர் – உலமாஉகளிற் பலர் கலந்து கொண்டதும் ஒரு விஷேட அம்சமாகும்.
“றாதிப்” சபைகள், “ஹழ்றா” சபைகள், “மௌலித்” சபைகள், மற்றும் “ஸலவாத்” சபைகள் போன்றவையும் நிறுத்தப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை “ஹயாத்” உயிராக்கி வருகின்ற ஸுன்னீ உலமாஉகளையும், ஸுன்னீகளான பொது மக்களையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் செய்வானாக!
“றாதிப்” நடத்துவதும், “ஹழ்றா” நடத்துவதும் “பித்அத்” என்றும், அதில் கூறப்பட்டுள்ள சில “திக்ர்”கள் “ஷரீஆ”வுக்கு முரணானதென்றும், சில பாடல்கள் “குப்ர்” மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றும் உலமாஉகளிற் பலர் கூறுகிறார்கள். இவர்களைச் சரி காணும் பொது மக்களும் கூட அவ்வாறுதான் கூறுகிறார்கள். இவ்வாறு கூறுபவர்களை “ஸுன்னத் வல் ஜமாஅத்” மக்கள் வஹ்ஹாபீகள் என்று சொல்வார்கள்.
திருக்குர்ஆனையும், திரு நபீ அவர்களின் அருள் மொழிகளையும், அவ்லியாஉகளினதும், “ஆரிபீன்”களான இறைஞான மேதைகளினதும் “அக்வால்” சொற்களையும் நான் ஆராய்ந்தறிந்த வகையில் வஹ்ஹாபீகளின் கூற்று உண்மைக்குப் புறம்பானதாகும். இஸ்லாமிய மூலாதாரங்களான குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் ஆகியவற்றுக்கு முரணானதுமாகும்.
வஹ்ஹாபீகள் பிழை என்றும், “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும், “பித்அத்” என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் மறுத்து ஆதாரங்களுடன் நிறுவுவதாயின் சுமார் 40 மீற்றர் தூரம் தொடராக அடுக்குமளவு நூல்கள் எழுத வேண்டி ஏற்படும்.
அவ்வாறு எழுதினாற் கூட அச்சிடுவதற்கு பல கோடி ரூபாய்கள் தேவைப்படும். செலவினங்களைப் பொறுப்பேற்க யாராவது முன்வருவார்களாயின் இலங்கையிலும், இந்தியா தமிழ் நாட்டிலும் உள்ள ஸூபிஸ, ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் ஒத்துழைப்புடன் என்னால் எழுதித் தர முடியும். இதற்குத் தகுதியுடையவர்கள் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
ஒவ்வொரு “தரீகா”விற்கும் “றாதிப்” உண்டு. “ஷாதுலிய்யா தரீகா”வைச் சேர்ந்த சகோதரர்கள் “றாதிப்” என்ற சொல்லுக்குப் பதிலாக “ஹழ்றா” என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். இரு பெயர்களும் ஒரே கருத்தில் உள்ளவைதான்.
“தரீகா”க்களில் அதிகமானவை அவ்லியாஉகளால், “மஷாயிகு”மார்களால் தாபிக்கப்பட்டவையே ஆகும். தரீகாக்களின் தாபகர்கள் எவரை எடுத்துக் கொண்டாலும் அவர் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதியாகவே இருப்பார்.
இக்காலத்தில் நாம் அறிந்த “தரீகா”க்கள் அனைத்தும் “ஷரீஆ”வின் “மத்ஹப்” அடிப்படையில் கருத்து வேறுபாடுள்ளதாக இருந்தாலும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் ஒன்றுபட்டதாகவே இருக்கும். எந்தவொரு “தரீகா”வும் வஹ்ஹாபிஸ கொள்கை உடையதாக இருக்காது.
“தரீகா”க்களை தாபித்த மகான்கள் அனைவரும் தமது “தரீகா” வழி நடக்கும் “முரீது”கள் தினமும் ஓதி வருவதற்காக “அவ்றாத்” குறிப்பிட்ட ஓதல்களைக் கொடுப்பார்கள். வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் “முரீது”கள் ஒன்று சேர்ந்து “திக்ர்” செய்வதற்கு “றாதிப்” என்ற பெயரில் சில “திக்ர்”களையும் கொடுப்பார்கள்.
ஒரு “தரீகா”வை தாபிக்கும் “ஷெய்கு” ஒருவர் தனது ஞான அறிவிற்கும், அனுபவத்திற்கும் அமைவாக சில “திக்ர்”களை தெரிவு செய்து அவற்றை “றாதிப்” என்று அமைத்து விடுவார்கள்.
எந்தவொரு “தரீகா”வாயினும் அதில் لا إله إلا الله என்ற “திக்ர்” நிச்சயமாக இருக்கும். இதில் “தரீகா”வின் தாபகர்களிடையே கருத்து வேறுபாடு இருக்காது. இதேபோல் اللهْ என்ற “திக்ர்” இடம் பெற்றிருக்கும்.
கொழும்பில் நடைபெற்ற கோட்டார் மஷாயிகுமார்களின் “தரீகா”வில் لَا فَاعِلَ إِلَّا اللهُ என்ற “திக்ர்”, لَا مَوْجُوْدَ إِلَّا اللهُ என்ற “திக்ர்” இவ்விரண்டும் இருப்பதை அறிய முடிகிறது. “றாதிப்” நடத்திய “கலீபா” அவர்களும் அழகாக மொழிந்து “திக்ர்” செய்தார்கள். கலந்து கொண்ட உலமாஉகளும் ஆடி அசைந்து “திக்ர்” செய்வதையும் நாம் கண்டோம்.
எனினும் உலமாஉகளிற் சிலர் மேற்கண்டவாறு “திக்ர்” செய்வது பிழை என்றும், “ஷிர்க்” என்றும் சொல்வதை நாம் அறிந்தோம். அவர்கள் அவ்வாறு சொல்வது அவர்களின் அறியாமையா? அல்லது மன முரண்டா என்பது எமக்குத் தெரியவில்லை.
இது அவர்களின் அறியாமையாயின் அதற்கு எந்த ஒரு மருத்துவ மனையில் மருந்து இல்லாது போனாலும் எமது ஸூபிஸ களஞ்சியத்தில் அதற்குத் தரமான மருந்து மாத்திரைகளும், டானிக் வகைகளும் உண்டு. பெற விரும்புவோர் நேர காலத்தோடு பெயர்களைப் பதிவு செய்வது அவசியம். மருந்து, மாத்திரைகள் முழுவதும் இலவசம்.
لَا فَاعِلَ إِلَّا اللهُ
என்றால் “செய்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று பொருள் வரும். அதாவது அல்லாஹ்வின் படைப்புகளில் எவரால் அல்லது எதனால் எச் செயல் நடந்தாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ்தான் என்று கருத்து வரும். இவ்வாறுதான் நம்ப வேண்டும். இதற்கு மாறாக படைப்புக்கு செயல் உண்டு என்று நம்புதல் “குப்ர்” நிராகரிப்பாகிவிடும். கத்தியின் வெட்டுதல் என்ற செயலாயினும், நெருப்பின் சுடுதல் என்ற செயலாயினும் அச் செயல் அல்லாஹ்வின் செயலேயன்றி கத்தியினதும், நெருப்பினதும் செயலென்று நம்புதல் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்திவிடும்.
பொதுவாக எதையும் சுயமாகச் செய்யும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டும் உள்ளதேயாகும். கத்தி வெட்டியது, நெருப்பு சுட்டது, அவர் செய்தார், நான் செய்தேன் என்றெல்லாம் சொல்வது “மஜாஸீ” அடிப்படையிலாகும் என்று புரிந்து நம்ப வேண்டும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் وَاللهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ அல்லாஹ் உங்களையும் படைத்து, உங்களின் செயல்களையும் படைத்தான் என்று கூறியுள்ளான். அதாவது உங்களாகவும், உங்களின் செயல்களாகவும் அவனே வெளியாகியுள்ளான் என்பதாகும்.
படைப்புக்கள் எவையாயினும் அவை அல்லாஹ்வின் செயல்கள் வெளியாகும் “மளாஹிர்” பாத்திரங்களேயன்றி அவை எதையும் சுயமாகச் செய்வதில்லை. இதுவே எதார்த்தமும், உண்மையுமாகும்.
கத்தி சுமயாக வெட்டும் தன்மையுள்ளதென்றும், நெருப்பு சுயமாக சுடும் தன்மையுள்ளதென்றும் இருந்தால் – வைத்துக் கொண்டால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை “நும்றூத்” என்ற அரசன் நெருப்புக் குழியில் எறிந்த நேரம் அது அவர்களைச் சுட்டுக்கரித்திருக்க வேண்டும். அல்லாஹ் நெருப்புக்கு يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيْمَ நெருப்பே! இப்றாஹீம் மீது நீ குளிராகவும், ஈடேற்றமாகவும் இருந்து கொள் என்று கட்டளை பிறப்பித்திருக்கவும் தேவையில்லை. இதன் மூலம் நெருப்புக்கு சுயமாக சுடும் தன்மை இல்லை என்பது தெளிவாகிறது. நெருப்பு அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒரு படைப்புத்தான். அதற்கு சுயமான சக்தி எதுவுமில்லை. அல்லாஹ் அதற்கு சுடு என்றால் மட்டும்தான் சுடும். இன்றேல் சுடாது.
இவ்வாறுதான் கத்தி வெட்டுதல் என்பதுமாகும். கத்திக்கு சுயமாக வெட்டும் சக்தி உண்டு என்றால் அது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் அன்பு மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கழுத்தை அறுத்த நேரம் அது அறுத்திருக்க வேண்டும்.
இதன் மூலம் கத்திக்கு சுயமாக வெட்டும் தன்மை இல்லை என்பதும், இது போன்றுதான் ஏனைய எந்தவொரு படைப்பாயினும் அதற்கு சுயமாக எதையும் செய்யும் சக்தி இல்லை என்றும் நம்ப வேண்டும். அறிந்து கொள்ளவும் வேண்டும்.
இவ் அடிப்படையை கருத்திற் கொண்டே لَا فَاعِلَ إِلَّا اللهُ செய்பவன் அல்லாஹ் தவிர வேறு எவராலும், எதையும் செய்ய முடியாது என்பதை உணர்த்தக் கூடிய வகையில் “திக்ர்” ஐ மஷாயிகுமார் அமைத்தார்கள்.
اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ
செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியன என்ற தத்துவம் தெரியாததினால்தான் இவ்வாறு “திக்ர்” செய்தல் பிழை என்றும், “ஷிர்க்” என்றும் அடிப்படையே தெரியாத சில உலமாஉகள் கூறுகின்றனர். இவர்களில் எமக்கு – ஸூபிஸ சமூகத்திற்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கி, எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்று பொது மக்களைத் தூண்டிய போலி உலமாஉகளும் அடங்குவர்.
لَا مَوْجُوْدَإِلَّا اللهُ
என்ற வசனத்தை “தரீகா”க்களைத் தாபித்த பெரும் “மஷாயிகு”மார்களிற் பலர் தமது “தரீகா”வின் “திக்ர்” ஆக அமைத்துள்ளார்கள். கோட்டார் மஷாயிகுமார்கள் தெரிவு செய்த “திக்ர்”களில் لَا مَوْجُوْدَ إِلَّا اللهُ என்பதும் ஒன்றாகும். இதன் பொருள் அல்லாஹ் தவிர படைப்பு இல்லை – சிருட்டி இல்லை என்பதாகும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு வஸ்த்துவும் இல்லை என்று பொருள் வரும். இதை இன்னுமொரு வகையில் சொல்வதாயின் “எல்லாம் அவனே” என்று சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.
“லா மவ்ஜூத இல்லல்லாஹ்” “அல்லாஹ் அல்லாத – அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு படைப்பும் இல்லை” என்று சொல்வதோ, நம்புவதோ எந்த வகையிலும் “ஷிர்க்” இணை வைத்தலாகவோ, “குப்ர்” இறை நிராகரிப்பாகவோ மாட்டாது. மாறாக இதுவே சரியான கொள்கையும், திருக்கலிமா தருகின்ற இறையியல் தத்துவமுமாகும்.
“வஹ்ததுல் வுஜூத்” எனும் இந்த ஞானம்தான் திருக்கலிமா தருகின்ற ஞானமும், திருக்குர்ஆன் வசனங்கள் தருகின்ற ஞானமும், திரு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகள் தருகின்ற ஞானமும், உலகில் தோன்றிய நபீமார், வலீமார், குத்புமார் அனைவரும் கூறிய ஞானமுமாகும். எந்த ஒரு “தரீகா”வாயினும் அது கூறுகின்ற ஞானமும் இதே ஞானமேதான்.
இந்த ஞானம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்களுக்கோ, “பத்வா” வழங்கிய முல்லாக்களுக்கோ தெரியாது. இதனால்தான் علم التصوف، علم وحدة الوجود “இல்முத் தஸவ்வுப்”, “இல்மு வஹ்ததில் வுஜூத்” தத்துவங்கள் பேசிய எனக்கும், நான் கூறிய தத்துவங்களை ஏற்றுக் கொண்ட இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பல இலட்சம் முஸ்லிம்களுக்கும் இந்த முல்லாக்கள் “முர்தத்” மதம் மாற்றி “பத்வா” கொடுத்தார்கள். இது போதாதென்று எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் பகிரங்கமாக எழுத்து மூலம் அறிவித்தார்கள். இவ் அறிவிலிகளின் அறிவிப்பினால்தான் இந்த ஞானம் பேசிய காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.
இதன் பிறகு ஸூபிஸ சமூகத்தைச் சேரந்த எந்த ஒரு நபர் எந்த ஊரில் இனந் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டாலும் அவரின் கொலைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய தீர்ப்பே காரணமாகும்.
குறிப்பு: “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” இன் தத்துவம் புரியாத, “வஹ்ததுல் வுஜூத்” வாடையைக் கூட நுகராத ஒரு உஸ்தாது – ஹஸ்றத் அவர்கள் மேற்குறித்த “திக்ர்”ஐ நையாண்டி பண்ணும் வகையில் கூறிய விளக்கம் ஒன்று உள்ளது. அதை அடுத்த தொடரில் எழுதுவேன்.
கோட்டார் “மஷாயிகு”மார்களின் “றாதிப்” சபையில் ஒரு மௌலவீ கலந்து கொண்டார் என்றும், அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்”, “லா மவ்ஜூத இல்லல்லாஹ்” என்றும் “திக்ர்” செய்வது “ஷிர்க்” என்று சொன்னவர் என்றும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இது தொடர்பான ஆதார பூர்வமான தகவல் கிடைத்தால் அவர் பற்றிய விபரங்களையும் எழுதுவோம்.