தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொடர் – 1
ஸூபீ மகான்களும் அவ்லியாஉகளே. ஆயினும் இவர்களை விட ஸூபீகள் இறையியலில் சற்று ஆழமாகப் பயணிப்பவர்களாவர். சுருங்கச் சொல்வதாயின் வலீமார் வெளி நீச்சல் நிபுணர்களும், ஸூபீகள் உள் நீச்சல் நிபுணர்களுமாவர்.
உலகப் பிரசித்தி பெற்ற ஸூபீ மகான்களில் اِبْنُ عَطَاءِ اللهِ السِّكَّنْدَرِيْ இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் ஒருவராவர்.
இவர்கள் ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் குத்புஸ்ஸமான், அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் முதலாவது கலீபா அல்குத்பு அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ அவர்களின் முதலாவது கலீபா ஆவார்கள்.
இவர்களின் வரலாறை மிகச் சுருக்கமாக எழுதிய பின் ஸூபிஸம் தொடர்பான சில தகவல்களைப் பதிவு செய்கிறேன்.
இவர்கள் ஹிஜ்ரீ 658ல் “மிஸ்ர்” நாட்டிலுள்ள “இஸ்கந்தரிய்யா” எனும் இடத்தில் பிறந்தார்கள். (கி.பி 1260) ஹிஜ்ரீ 709ல் “மிஸ்ர்” நாட்டின் தலை நகரான “காஹிறா” கெய்ரோவில் “வபாத்” ஆனார்கள். (கி.பி 1309)
“மாலிக் மத்ஹப்” வழி வாழ்ந்த இவர்கள் “ஸுன்னீ அஷ்அரிய்யா” கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள். அறிவுக் கலைகளில் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸக் கலையோடு தொடர்புள்ளவர்களாவர்.
“அகீதா” கொள்கையில் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ, அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ “றஹிமஹுமல்லாஹ்” ஆகியோர் வழி வாழ்ந்தவர்களாவர். இவர்களிடம் கல்வி கற்றவர்களில் இப்னுல் முபல்லக் சிக்கந்தரீ, தகிய்யுத்தீன் சுப்கீ, அஹ்மத் சர்றூக் ஆகியோர் மிகப் பிரசித்தி பெற்றவர்களாவர்.
ابن عطاء الله السكندري فقيه مالكي وصوفي شاذلي الطريقة، بل أحد أركان الطريقة الشاذليّة الصوفيّة،
இமாம் இப்னு அதாயில்லாஹ் சிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “மாலிக் மத்ஹப்” “பிக்ஹ்” சட்டமேதையாவார்கள். “ஷாதுலிய்யா தரீகா”வின் வழி வாழ்ந்தவர்களுமாவர்.
இவர்கள் “குத்புல் ஆரிபீன்”, “துர்ஜுமானுல் வாஸிலீன்”, “முர்ஷிதுஸ்ஸாலிகீன்” என்று அறிஞர்களால் பட்டம் சூட்டப்பட்டவர்கள்.
كان رجلا صالحا عالما يتكلّم على كرسي ويحضـر مجلسَه خلقٌ كثير، وكان لوعظه تأثيرٌ فى القلوب، وكان له معرفة تامّة بكلام أهلِ الحقائق وأرباب الطريق، وله ذوقٌ ومعرفة بكلام الصوفيّة وآثارِ السّلف، وكان ينتفع النّاس بإشاراته،
இமாம் இப்னு அதாயில்லாஹ் அவர்கள் நல்ல மனிதராக இருந்தார்கள். கதிரையில் அமர்ந்தவர்களாகப் பேசுவார்கள். அவர்களின் அவைக்கு அதிக மக்கள் வருவார்கள். அவர்களின் பேச்சுக்கு உள்ளங்கள் உருகிவிடும். அவற்றில் ஒரு வகை காந்த சக்தி செயல்படத் தொடங்கிவிடும். “அஹ்லுல் ஹகாயிக்” தத்துவ வாதிகளினதும், “தரீகா”வாதிகளினதும் பேச்சு பற்றிய ஞானம் அவர்களுக்கு நிறைவாக இருந்தது. ஸூபீ மகான்களினதும், மற்றும் முன்னோர்களான மகான்களின் பேச்சில் அவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கப் பெற்றிருந்தார்கள்.
كان الشّيخ ابن عطاء الله فى أوّل حاله منكِرا على أهل التصوّف، حتّى أنّه كان يقول ‘ من قال أنّ هنالك علما غيرَ الّذي بأيدينا فقد افترى على الله عزّ وجلّ ‘
இமாம் இப்னு அதாயில்லாஹ் அவர்கள் தங்களின் ஆரம்ப காலத்தில் – அதாவது “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையில் காற் பதிக்குமுன் அதை எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். எந்த அளவு எதிரியாக இருந்தார்கள் என்றால் “தாங்கள் அறிந்திருந்த வெளிரங்கமான அறிவு தவிர வேறோர் அறிவு உள்ளதென்று யாராவது சொல்வானாயின் அவன் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டி விட்டான்” என்று கூறியுள்ளார்கள்.
ترك ابنُ عطاء الله الكثيرَ مِن المصنّفات والكتب، منها المفقود، ومنها الموجود،
1. لَطائف المِنَن فى مناقب الشّيخ أبى العبّاس وشيخه أبى الحسن،
2. القصدُ المجرّدُ فى معرفة الاسم المفرد،
3. التنوير فى إسقاط التدبير،
4. أصول مقدّمات الوصول،
5. الطريق الجادة فى نيل السعادة،
6. عُنوان التوفيق فى آداب الطريق،
7. تاج العروس الحاوي لِتَهذيب النفوس،
8. مفتاح الفلاح ومصباح الأرواح،
9. الحكَمُ العطائيّة،
இவர்கள் எழுதிய மேற்கண்ட நூல்களில் மிகப் பிரசித்தி பெற்ற நூல் “அல்ஹிகமுல் அதாஇய்யா” எனும் நூலாகும். ஆரிபீன்கள், ஸூபீகள் மத்தியில் இந்நூல் மிகப் பிரசித்தி பெற்றதாகும். قال العارفون كاد الحكم أن يكون قرآنا இறைஞானிகள் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகையில் “ஹிகம்” எனும் நூல் திருக்குர்ஆனுக்கு நெருங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்கள்.
இந்நூலுக்கு இறைஞானிகளிற் பலர் விரிவுரை எழுதியுள்ளார்கள். அந்த விரிவுரை நூல்களில் ஒன்றுதான் இறைஞானி அஸ்ஸூபிய்யுல் ஜலீல் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு அஜீபதல் ஹஸனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய إيقاظ الهمم فى شرح الحكم “ஈகாழுல் ஹிமம் பீ ஷர்ஹில் ஹிகம்” என்ற விரிவுரை நூலாகும்.
இவ்விரிவுரை நூல் 8ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள சில குறிப்புக்களை இங்கு பதிவு செய்கிறேன். இக்குறிப்புக்கள் ஸூபிஸ ஞானத்தின் சிறப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் என்று நம்புகிறேன். ஸூபிஸ ஞானம் தேவையில்லை என்றோ, அது “ஷரீஆ”வுக்கு முரணான அல்லது அதற்கு அப்பாற்பட்ட, “ஷரீஆ”வுக்கு அவசியமில்லாத ஒரு அறிவு என்றோ விளங்கியுள்ளவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் என்றும் நம்புகிறேன்.
قال الجنيد رضي الله عنه، هو سيّد الطائفة الصوفيّة، (لَوْ نَعْلَمُ أَنَّ تَحْتَ أَدِيْمِ السَّمَاءِ أَشْرَفَ مِنْ هَذَا الْعِلْمِ الَّذِيْ نَتَكَلَّمُ فِيْهِ مَعَ أَصْحَابِنَا لَسَعَيْتُ إِلَيْهِ)
ஸூபிஸ “உம்மத்” சமூகத்தின் தலைவரான ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு ஸூபிஸ ஞானத்தின் சிறப்பை சுட்டிக் காட்டுகிறார்கள்.
(நாங்கள் எங்களின் தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்ற அறிவை விடச் சிறந்த அறிவு வானத்தின் கீழ் உள்ளவற்றில் இருக்கிறதென்று நாங்கள் அறிந்தால் அதைப் பெறுவதற்காக முயற்சிப்போம்) என்று கூறியுள்ளார்கள்.
இதன் சுருக்கமும், சாரமும் என்னவெனில், நாங்கள் எங்களின் ஞானத் தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்ற ஸூபிஸ – வஹ்ததுல் வுஜூத் தத்துவத்தை விடச் சிறந்த தத்துவம் உலகில் கிடையவே கிடையாது என்பதாகும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளதால் “ஷரீஆ” அறிவை அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று எவரும் தவறாக விளங்கிக் கொள்தல் கூடாது. அவர்களின் உட்கருத்து என்னவெனில் “ஷரீஆ”வைப் புறக்கணித்து ஸூபிஸம் மட்டும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. இரண்டும் அவசியமாயினும் இவ்விரு அறிவுகளிலும் சிறப்பால் உயர்ந்தது ஸூபிஸம் என்றே சொல்கிறார்கள்.
அல்லாஹ்வை அறிவதற்கும், அவனை அடைவதற்கும், அவனில் “பனா” ஆகி அவன் தவிர – “அவனல்லாத வேறொன்றுமில்லை” எனும் எதார்த்த தத்துவத்தை “தவ்க்” ருசிப்பதற்கும் ஸூபிஸம் அறிந்திருப்பது அவசியமாகும்.
“ஷரீஆ” என்பது நாம் செய்கின்ற வணக்க வழிபாடுகள் பிழையாகிவிடாமல் பாதுகாக்குமேயன்றி நம்மை “பனா” நிலைக்கு அழைத்துச் செல்லாது.
இதனால்தான் ஸூபீ மகான்களின் 99 வீதமானோர் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ – وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
(எவன் “ஷரீஆ”வின் அறிவைக் கற்று ஸூபிஸத்தைக் கற்றுக் கொள்ளவில்லையோ அவன் “பாஸிக்” கெட்டவனாகி விட்டான். எவன் “ஹகீகா”வின் அறிவைக் கற்று “ஷரீஆ”வின் அறிவைக் கற்றுக் கொள்ளவில்லையோ அவன் “சிந்தீக்” ஆகிவிட்டான்)
ஸூபீ மகான்களின் இத் தத்துவம் 100 வீதம் சரியானதே. அவர்களின் இத்தத்துவம் ஒரு மனிதன் – “எண்சாண்” உள்ள “இன்ஸான்” இறைவனை அறிவதற்கும், அவனை அடைவதற்கும் இவ்விரண்டும் நிபந்தனைகளாகும்.
“இன்ஸான்” என்ற வண்டி இறைவனை அறிந்து அவனை அடைவதாயின் அவ் வண்டியின் இரு சக்கரங்களும் ஒன்றுடன் மற்றதும் இணைந்து சுற்ற வேண்டும். சுழல வேண்டும். ஒரேயொரு சக்கரத்துடன் குறிக்கோளை அடைய முடியாது. ஒரு மனிதன் நடக்கும் போது இரு கைகளையும் ஆட்டி அசைக்க வேண்டும். இரண்டும் அசைந்தால்தான் எளிதாக நடக்க முடியும். இது இயற்கை அறிவு. பிறந்த குழந்தைக்கு யாரும் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அது நடக்கும் வயதை அடைந்தால் அக்குழந்தை கையசைத்து நடப்பது அதன் இயற்கை அறிவாகும்.
“ஷரீஆ”வை மட்டும் கற்று அறவே ஸூபிஸம் கற்றுக் கொள்ளாமல் இராப் பகலாக நின்று வணங்கிய ஒருவன் அல்லாஹ்வின் அருளால் சுவர்க்கம் சென்றாலும் கூட அவன் அல்லாஹ்வைக் காணவோ, அவனின் காட்சியில் மயங்கிப் பேரின்பம் பெறவோ மாட்டான். அவனுக்கு ஒரு சுவர்க்கம் தான் கிடைக்கும். இரு சுவர்க்கம் கிடைக்காது. அல்லாஹ் திருக்குர்ஆனில் وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ – அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயந்தவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் உள்ளன என்று கூறியுள்ளான். (55-46)
மேற்கண்ட திரு வசனத்தில் مَقَامَ رَبِّهِ “அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயந்தவனுக்கு” என்று கூறியுள்ளானேயன்றி وَلِمَنْ خَافَ رَبَّهُ தனது இறைவனைப் பயந்தவனுக்கு என்று கூறவில்லை. இவ்வாறு சொல்லியிருப்பதன் மூலம் அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயப்படுவது வேறு, அல்லாஹ்வைப் பயப்படுவது வேறு என்ற கருத்தை விளங்க முடிகிறது. அதாவது இரண்டும் ஒன்றல்ல என்ற கருத்து விளங்கப்படுகிறது.
எல்லா மனிதர்களாலும் அல்லாஹ்வை பயப்பட முடியும். ஆயினும் எல்லா மனிதர்களாலும் அவனின் சந்நிதானத்தைப் பயப்பட முடியாது. இதிலுள்ள வேறுபாட்டை இவ்விடத்தில் விளக்கி வைக்க நான் விரும்பவில்லை.
“ஸூபிஸம்” இன்றேல் இஸ்லாம் இல்லை. ஸூபிஸம் இன்றேல் دِيْنْ – “தீன்” மார்க்கம் இல்லை. ஏனெனில் “தீன்” என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பொதுவாகப் பொருள் சொல்லப்பட்டாலும் “தீன்” என்ற சொல் ஈமான், இஸ்லாம், இக்லாஸ் (இஹ்ஸான்) இம் மூன்றையும் உள்வாங்கிய சொல்லாகும். “ஈமான்” மட்டும் “தீன்” அல்ல. இதேபோல் இஸ்லாம் மட்டும் “தீன்” அல்ல. இதேபோல் “இக்லாஸ்” மட்டும் “தீன்” அல்ல. இம்மூன்று அம்சங்களையும் உள்வாங்கிய சொல்தான் “தீன்” என்ற சொல்லாகும்.
இதற்கு ஆதாரம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீ பெருமானாரிடம் மனித உருவில் வந்து குறித்த மூன்று அம்சங்கள் பற்றியும் கேட்டு விடைகளைப் பெற்றுக் கொண்டு போனபின், هَذَا جِبْرِيْلْ أَتَاكُمْ لِيُعَلِّمَكُمْ دِيْنَكُمْ இவர்தான் ஜிப்ரீல், இவர் உங்களுக்கு உங்களின் “தீன்” மார்க்கத்தை கற்றுத்தர வந்தார் என்று மூன்று அம்சங்களையும் உள்வாங்கி மூன்றுக்கும் “தீன்” என்று பெருமானார் அவர்களே பெயர் வைத்தார்கள்.
“இக்லாஸ்” என்பது ஸூபிஸமேயாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களிற் பலர் ஸூபிஸம் என்றால் என்னவென்று அறியாமலேயே தீனில் இருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். இது தவறு மட்டுமல்ல பொய்யுமாகும். எனவே ஓர் முஸ்லிம் ஸூபிஸ ஞானம் அறிந்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிம் ஆவான் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
தீன் தீன் முஹம்மது
தீனை அறியாமல்
தீனில் இருக்கிறேன்
என்கிறாய்!
தொடரும்… (2ம் பக்கம் பார்க்க)