தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
வளர் பிறையும் அவனே! தேய் பிறையும் அவனே!
அவன் வளர்வதுமில்லை! அவன் தேய்வதுமில்லை!
எல்லாம் அவனின் வெளிப்பாடுகளே!
هو الآن كما كان
இன்றிரவு ஸஊதியிலும், இன்னும் பல நாடுகளிலும் நோன்பு நோற்கிறார்கள். நமது இலங்கைத் திரு நாட்டில் எந்த ஊரிலாவது பிறை தென்பட்டால் இந்நாட்டு முஸ்லிம்கள் மீது நோன்பு கடமையாகும்.
வெளிநாடுகளில் கண்ட பிறையை ஆதாரமாகக் கொண்டு நமது நாட்டு முஸ்லிம்கள் மீது நோன்பு கடமையாகாது. இவ்விடயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் “ஷாபிஈ” வழிச் சட்டத்தின் சரியான சொற்படி நோன்பு கடமையாகாது.
இன்றிரவு يَوْمُ الشَّكِّ “ஷக்கு” உடைய நாள் என்று சொல்லப்படும். சந்தேகத்திற்குரிய நாள் என்று சொல்லப்படும். பிறை கண்டால் மட்டுமே நோன்பு நோற்க முடியும். இன்றிரவு பிறை தென்படாவிட்டால் நாளை இரவு நோன்பு நோற்பதற்கு பிறை தென்பட வேண்டுமென்பது அவசியமில்லை. பிறை தென்பட்டாலும், தென்படாவிட்டாலும் நோன்பு நோற்பது கடமையே.
எந்த ஊரிலாவது யாராவது ஒருவர் பிறை கண்டால் அவர் தன்னுடன் இன்னொருவரையும் இணைத்து இருவரும் அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் கண்டதைக் கொண்டு மட்டும் ஆதாரமாக எடுக்க முடியாது. ஒருவர் தனிமையாகக் கண்டு அதை மற்றவர்களுக்குச் சொல்லாமல் அவர் மட்டும் நோன்பு நோற்றால் அவரைப் பொறுத்த மட்டில் அவரின் நோன்பு செல்லுபடியாகும். ஆயினும் அவர் தான் பிறை கண்டதாக மற்றவர்களுக்கு அறிவித்து அதைப் பகிரங்கப்படுத்துவது அவர் மீது கடமையாகும். செய்யவில்லையானால் அவர் குற்றவாளியாவார்.
هِلَالْ
என்றாலும், قَمَرْ என்றாலும் பொதுவாகப் பிறைதான். எனினும் இதில் சிறிய கருத்து வேறுபாடு உண்டு.
قال ابن علان رحمه الله تعالى فى ‘ الفتوحات ‘ (4-328) قال الجوهري وصاحب ‘المطلع ‘ الهلال أوّل ليلة والثانية والثالثة، ثمّ هو قمر،
இமாம்களிற் பலர், முதற் பிறையும், இரண்டாம் பிறையும், மூன்றாம் பிறையும் மட்டுமே “ஹிலால்” என்று சொல்லப்படும் என்றும், ஏனைய பிறைகள் “கமர்” என்று சொல்லப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்புதூஹாத், பாகம்: 04, பக்கம் 328,
ஆசிரியர்: இப்னு அலான்.
பிறை தென்பட்டால் ஓத வேண்டியது:
عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الهِلَالَ قَالَ: «اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ»
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பிறையைக் கண்டார்களாயின் மேற்கண்டவாறு சொல்வார்கள்.
இதன் பொருள்: “யா அல்லாஹ்! இந்தப் பிறையை எங்களுக்கு அருள் உள்ள பிறையாகவும், ஈமான் உள்ள பிறையாகவும் ஆக்கி வைப்பாயாக! இன்னும் ஈடேற்றம், இஸ்லாம் உள்ள பிறையாகவும் ஆக்கி வைப்பாயாக! பிறையே! உனது இறைவனும், எனது இறைவனும் அல்லாஹ்தான்.
ஆதாரம்: தாரமீ, ஹதீது எண்: 1730, துர்முதீ: 3451
குறிப்பு: அறபு வசனம் சொல்லத் தெரியாதவர்கள் அதன் தமிழாக்கத்தைச் சொல்லலாம். அல்லது அவர்களுக்கு ஒருவர் அறபு மொழியில் சொல்லிக் கொடுக்க அவர்கள் சொல்லலாம். இது “ஸுன்னத்” ஆன வணக்கமாகும். பிறையை எப்போது கண்டாலும் சொல்ல முடியும். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் எல்லோரும் ஓதலாம். முழுக்காளியும் ஓதலாம். தீட்டுள்ள பெண்ணும் ஓதலாம். ஏனெனில் இது திருக்குர்ஆன் வசனமல்ல.
பிறை கண்டால் மேற்கண்டவாறு ஓதுவதுதான் “ஸுன்னத்” நற்செயலேயன்றி ஒருவர் மற்றவருடன் கை கொடுத்து “முஸாபஹா” செய்வது இவ்விடத்தில் “ஸுன்னத்” அல்ல. எனினும் செய்வது தவறுமல்ல.
நமது நாட்டு வழக்கத்தில் பிறை கண்டு ஓத வேண்டியது ஓதாவிட்டாலும் ஒருவர் மற்றவருடன் கை கொடுத்து “முஸாபஹா” செய்வார்கள். அப்போது இருவரும் “ஸலவாத்” சொல்லிக் கொள்வார்கள். இது “ஸுன்னத்” இல்லாது போனாலும் ஒன்றும் ஓதத் தெரியாதவர்கள் இவ்வாறு செய்வதைத் தடுப்பது நல்லதல்ல.
பிறையை பார்த்துவிட்டு நல்ல மனிதர்கள் ஒருவரின் முகத்தைப் பார்ப்பது “பறகத்” அருள் கிடைப்பதற்கு வழி செய்யும் என்று பலர் நினைப்பதுண்டு. அருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பொதுவாக நல்லடியார்களின் முகம் பார்ப்பது நல்லதேயாகும்.
முற்றும்.