தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
إنّ عُصفورا من العصافير قال لزوجتِه حينَ رَاودَها عن نفسِها، لَقد بَلَغَ بِيْ مِن حُبِّيْ لكِ أن لو قُلتِ لِيْ اِهدم هذه القُبَّةَ على سليمانَ لهدمتُها لكِ، فأرسَلَ سليمانُ خلفَه وقال ما حملَكَ على هذا القول الّذي تعجِزُ عنه؟ فقال مَهْلًا يا نبيَّ الله، إنّ المحبّين إنّما يتكلّمون غالبا بِلِسانِ المحبّة والعِشقِ، لا بلسانِ العِلمِ والعقلِ، فضحِكَ سليمانُ من قول العصفور، ولم يُعاقبْه،
قال الشّيخ محي الدين ابن عربي قُدّس سرُّه وفى هذه عُذْرٌ عظيم لنحو سيّدي عُمر بنِ الفارض وأضرابِه فى تَغَزُّلَاتِهِمْ، فلا ينبغي إقامةُ مَوَازِيْن أهلِ العُقول الكونيّة عليهم، لأنّهم إنّما تكلّموا بلسانِ العِشقِ، فافْهَمْ وسلِّمْ تَسْلَمْ،
(الكبريت الأحمر فى بيان علوم الشّيخ الأكبر، ص 116، للشّيخ عبد الوهّاب الشعراني)
இறை காதலர்கள் அநேகமாக காதல் நாவால்தான் பேசுவார்களேயன்றி அறிவு நாவால் பேசமாட்டார்கள்.
ஓர் ஆண் சிட்டுக்குருவி ஒரு பெண் சிட்டுக் குருவியை உடலுறவுக்கு அழைத்தது. சிற்றின்பத்தைக் கழிப்பதற்கு அழைத்தது. பெண் சிட்டுக்குருவி அதற்கு இணங்க மறுத்தது. கெஞ்சிக் கெஞ்சிப் பல தரம் கேட்டுப் பார்த்தது. அழைத்துப் பார்த்தும் கூட அது இணங்கவில்லை. ஆண் சிட்டுக்குருவி ஆசை தாங்க முடியாமல் பெண் சிட்டுக்குருவியிடம் இதற்கு மேல் என்னால் பொறுமை செய்ய முடியாது. நீ இணங்கி வருவாயா? வரமாட்டாயா? நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? சொல் செய்கிறேன். இப் பெரும் மாளிகையின் “குப்பா” “டோம்” ஐ வல்லரசர் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது புரட்டிவிட வேண்டுமென்று நீ சொன்னால் உனக்காக அதைச் செய்வதற்கும் நான் தயங்கமாட்டேன் என்று கூறியது.
நபீ ஸுலைமான் அவர்களுக்கு அல்லாஹ் காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். ஆண் சிட்டுக்குருவி சொன்ன பயங்கரச் செய்தியைச் செவியேற்ற காற்று அரசர் நபீ ஸுலைமான் அவர்களிடம் விரைந்து சென்று செய்தியைக் கூறியது.
ஆத்திரமடைந்த நபீ ஸுலைமான் அவர்கள் படை பட்டாளத்தோடு ஆண் சிட்டுக்குருவியிடம் வந்து, என்னுடைய இந்தப் பெரிய மாளிகையின் “குப்பா”வை உன்னால் புரட்ட முடியுமா? உன்னால் முடியாத ஒன்றை நீ ஏன் சொன்னாய்? என்று கோபம் கொப்பளித்த நிலையில் கேட்டார்கள்.
அப்போது சிட்டுக்குருவி மன்னரே! என்னை மன்னியுங்கள். காதல் என் கண்ணை மறைந்து விட்டது. சிற்றின்ப ஆசை என் புத்தியைக் கெடுத்துவிட்டது. அவ்வாறு சொன்னால் பெண் சிட்டுக்குருவி இணங்கிவிடும் என்பதற்காக சொல்லிவிட்டேன் என்று பணிந்து நின்றது. சிட்டுக்குருவியின் பரிதாப முறையீடு நபீ ஸுலைமான் அவர்களின் கல்பை – உள்ளத்தைக் கரைத்தது. நபீ ஸுலைமான் சிரித்தார்களே தவிர அதை தண்டிக்கவில்லை.
இந்தச் சம்பவத்தைக் கருத்திற் கொண்ட ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு விளக்கம் கூறுகிறார்கள்.
சிட்டுக்குருவியின் இந்த நிகழ்வு கௌரவத்திற்குரிய இறை காதலர் இப்னுல் பாரிழ் அவர்களுக்கும், ஏனைய இறை காதலர்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
இறைஞானிகளும், இறை காதலர்களும் இறை காதல் அவர்களின் தலையைக் கலக்கும் போது சிட்டுக்குருவி சொன்னது போல் சொல்வார்கள். அதற்காக “ஷரீஆ”வின் சட்ட மேதைகள் அவர்களுக்கு எதிராக “ஷரீஆ” எனும் தராசை தூக்கிப் பிடிப்பது கூடாது.
ஆதாரம்: அல் கிப்ரீதுல் அஹ்மர் பீ பயானி உலூமிஷ் ஷெய்கில் அக்பர்,
பக்கம்: 116, ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ
إِنَّ اللهَ لَا يَأْخُذُ مَا صَدَرَ مِنَ الْعُشَّاقِ
இறை காதலர்களால் வெளியாகின்ற – ஷரீஆவிற்கு முரணான வசனங்கள், மற்றும் கருத்துக்கள் கொண்டு அல்லாஹ் அவர்களை குற்றம் காணமாட்டான். தண்டிக்கமாட்டான் என்று இறைஞானிகள் கூறியுள்ளார்கள்.
நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கடும் கோபமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு வழியால் நடந்து சென்றிருந்த போது மலையொன்றிலிருந்து ஒருவர் ஏதோ சொல்லும் சத்தம் அவர்களுக்கு கேட்டது. அவர்கள் மலை மீது ஏறினார்கள். அங்கு ஒரு ஞானி – இறை காதலர் ஒருவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நபீ மூஸா அவரை அணுகிய போது அவர் ஒரு காதலன் காதலியோடு பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தார்.
இறைவா! நான் உன்னை என் மடி மீது வைத்து முத்தங்கள் சொரிய வேண்டும், உன் கன்னத்தை முத்தி மகிழ்ச்சியடைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இது கேட்ட நபீ மூஸாவிற்கு கோபம் சீறி எழுந்தது. அவ்வாறு சொன்னவரின் கன்னத்தில் வசமாக ஓர் அடி கொடுத்து விட்டார்கள்.
மறுகணம் இறைவன் நபீ மூஸா அவர்களை அழைத்து அவர்களின் “அபறானீ” மொழியில் சொன்னதை இங்கு வரலாற்றை எழுதிய பாரசீக மொழியுடைய ஒருவர்,
தூபறாயே வஸ்லு கர்தன் ஆமதீ
நே பறாயே பஸ்லு கர்தன் ஆமதீ
என்று எழுதியுள்ளார்.
இதன் பொருள்: “மூஸாவே நான் உங்களை நபீயாக அனுப்பியது என்னுடன் சேர்ந்திருப்பவரை பிரிப்பதற்காக அல்ல. மாறாக என்னை விட்டும் பிரிந்து கிடப்பவரைச் சேர்த்து வைப்பதற்கேயாகும்” என்பதாகும்.
அல்லாஹ் நபீ மூஸா அவர்களைத் தண்டித்தானேயன்றி அவர்கள் செய்த வேலைக்காக அவர்களைப் பாராட்டவில்லை.
1965 – 66 களில் நான் தமிழ் நாடு நீடூர் “மிஸ்பாஹுல் ஹுதா” அறபுக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்களில் ஒருவரான மர்ஹூம் OM செய்னுத்தீன் ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு மாணவர்களிடம் கூறினார்கள்.
அவர்கள் நாஹூர் ஷரீப் நகரை அடுத்துள்ள ஓர் ஊருக்கு “பயான்” பேசுவதற்காக அழைக்கப்பட்டு அங்கு சென்றார்கள். இரவு 10 மணியளவில் பேச்சை முடித்து விட்டு உறங்குவதற்காகப் பள்ளிவாயலுக்குச் சென்றார்கள். பள்ளிவாயலில் ஒருவரின் குரல் கேட்டது. அக்குரல் வந்த பக்கம் நடந்து சென்று பார்த்த போது ஒருவர் இருந்து கொண்டு ஒரு காதலன் காதலியுடன் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார். பாவா பாவா என்று ஹழ்றத் அவர்கள் அவரைக் கையால் தொட்டார்கள். அவ்வளவுதான். அவர் எழுந்து நின்றார். ஸுப்ஹானல்லாஹ்! அவரின் தோற்றம் சுமார் ஆயிரம் கிலோ மதிக்கத்தக்க அளவு பெரிதாக இருந்தது. அவரின் கண்களிலிருந்து தீப் பொறிகள் பறந்து கொண்டிருந்தன. பயந்து நடுங்கிய ஹழ்றத் அவர்கள் மயங்கிவிழுந்தார்கள். “ஸுப்ஹ்” தொழுகைக்கான “பாங்கு” வரை ஹழ்றத் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. தொழுகை முடிந்த பிறகுதான் தெளிவு ஏற்பட்டது. பள்ளிவாயல் பேஷ் இமாம் அவர்களிடம் அன்றிரவு நடந்ததைக் கூறினார்கள். பேஷ் இமாம், அவர் ஒரு “மஜ்தூப்” நல்ல காலம் உங்களை அல்லாஹ் காப்பாற்றிவிட்டான். இன்றேல் நீங்கள் எரிந்து சாம்பலாகியிருப்பீர்கள் என்று கூறினார்.
இதுபோன்ற வரலாறுகள் நிறைய உள்ளன. அவை யாவையும் எழுத முடியவில்லை.
இறைவனில் “பனா” ஆகிய இறை காதலர்களான அவ்லியாஉகள், ஆரிபீன்கள், மஜ்தூப்கள் “பனா” நிலையில் அவர்களை நெருங்காமலிருப்பதுவே சிறந்தது. அந்நேரம் அவர்கள் நெருப்பாகவே இருப்பார்கள்.
குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகை அவர்கள் ஒரு நாளிரவு “கிதாப்” எழுதிக் கொண்டிருந்தார்கள். கூரையில் தங்கியிருந்த ஒரு சிட்டுக் குருவி மலம் கழித்து விட்டது. அதில் ஒரு துளி அவர்கள் எழுதிக் கொண்டிருந்த “கிதாப்” இல் விழுந்து விட்டது. தலை உயர்த்தி அக்குருவியைப் பார்த்தார்கள். அதோடு அது எரிந்து சாம்பலாயிற்று.
இறை காதலர்கள் காதல் மயக்கம் தலைக்கேறிய நேரங்களில் அல்லாஹ்வுடன் பேசுவார்கள். “முனாஜாத்” பண்ணுவார்கள். அவ்வேளை அவர்களால் வெளியாகும் வசனங்களை “பத்வா” வியாபாரிகள் கணக்கெடுக்காமல் இருப்பதே அவர்களின் கடமையாகும்.
குணங்குடி அப்துல் காதிர் ஆலிம் புலவர் அவர்கள் “பனா” உடைய நிலையில் பாடிய சில வரிகளை இங்கு எழுதுகிறேன்.
ஏட்டில் எழுதவொண்ணா இறையே
உன்தன்வடிவை
காட்டிக் கொடுத்தருளாய்
கண்ணே பராபரமே!
மைச் சினிச்சி போலும்
மனக் கோலப் பெண் போலும்
கைச் சரசம் செய்தருளாய்
கண்ணே பராபரமே!
அரும்பே மலரேயென்
னாசை தரும் வாசனையே
கரும்பே ரசமேயென்
கண்ணே றஹ்மானே!
உடலேயுயிரேயுளங் குளிர்ந்த
செந்தேனின்
கடலே நிறையமுதே
கண்ணே பராபரமே!
கொட்டி வைத்த முத்தே
குவிந்த நவ ரத்தினமே
கட்டிப் பசும் பொன்னே
யென் கண்ணே பராபரமே!
மூக்கு குத்திக் காது குத்தி
முழு வைரம் தூக்கி வைப்பேன்
கோக்கு முத்தும் தூக்கு முத்தும்
குவிப்பேன் மனோன்மணியே!
கூந்தலுக்கு நெய் தோய்த்து
குளிர் மஞ்சள் நீராட்டி
வார்ந்து சிங்காரித்து
வைப்பேன் மனோன்மணியே!
குணங்குடியார் மட்டுமன்றி இன்னும் பல வலீமார்கள், மஜ்தூப்கள், இறை காதலர்கள் இவ்வாறு பாடியுள்ளார்கள்.
இவர்களின் ஆன்மிக நிலைகளை அறியாதவர்கள் இவர்களைக் காபிர்கள் என்றும், முஷ்ரிக்குகள் என்றும் சொல்வார்கள். ஆன்மிகம் தெரிந்தவர்களோ இவர்களின் பாடல்களை முகத்தில் வைத்து முத்தமிட்டுக் கொள்வார்கள்.
கல்லாத கல்வியெலாம்
கற்றுமுயர் ஞான கலை
இல்லார்க்கு இன்ப நிலை
இல்லை மனோன்மணியே!
முற்றும்.
1961 – 62ம் ஆண்டு காலப்பகுதியில் நான் காலி – கோட்டை பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதி சங்கைக்குரிய மர்ஹூம் கலாநிதி அஷ் ஷெய்கு முஹம்மத் அல் பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் காலிக்கு வந்து மத்றஸாவில் தங்கியிருந்த காலத்தில் மாணவர்களுக்கு “பைஅத்” கொடுத்தார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
எனது ஞான குருமார் மூவர். முதல் குரு ஷெய்குனா பாஸீ நாயகம். இரண்டாம் குரு சங்கைக்குரிய மர்ஹூம் அஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபீ நாயகம். மூன்றாம் குரு சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா நாயகம். றஹிமஹுமுல்லாஹ்.
நான் 1958ம் ஆண்டு முதல் சுமார் 05 ஆண்டுகள் ஷாதுலிய்யா தரீகாவின் “ஹழ்றா”வில் கலந்து கொண்டவனும், வழீபா – யாகூதியா ஓதியும், “ஹழ்றா” நடைபெறும் போது இறை காதல் பாடல்கள் பாடியவனுமாவேன்.
இன்ஷா அல்லாஹ் எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் வழீபா யாகூதியாவிலும், பாடல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ஞ்ஞான தத்துவங்களான “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களை எழுதுவேன்.