தொடர் – 1
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“எல்லாம் அவனே” என்று முதலில் சொன்னவனும் அல்லாஹ்தான்!
இதே தத்துவத்தை மனிதர்களில் முதலில் சொன்னவர்கள் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே!
இதையடுத்து அவர்களுக்குப் பின் வந்த நபீமார், றசூல்மார் அனைவரும், மற்றும் இறுதி நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுமாவார்கள்.
இதன் பிறகு இன்று வரை தோன்றிக் கொண்டிருக்கின்ற “குத்பு”மார், வலீமார், மற்றும் இறைஞான மகான்கள், ஸூபிகளுமாவார்கள்!
“லா இலாஹ இல்லல்லாஹ்” لا إله إلا الله என்ற திரு வசனத்தை முதலில் கூறிய அல்லாஹ் என்ன கருத்தை – என்ன தத்துவத்தைக் கருவாகக் கொண்டு சொன்னானோ அந்தக் கருவை அறிந்தவர்கள் நபீமாரும், றசூல்மாரும் இறைஞான மகான்களும், ஸூபீகளுமேயாவர்.
குறித்த திரு வசனத்தை முதலில் அறிமுகம் செய்த அல்லாஹ் என்ன தத்துவத்தைக் கருவாகக் கொண்டு சொன்னான் என்பது தொடர்பாக முஸ்லிம் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் இருந்து வருகின்றன.
இன்று உலகில் வாழும் முஸ்லிம் அறிஞர்களிலும், பொது மக்களிலும் அதிகமானவர்கள் மேற்கண்ட திருவசனத்திற்கு “வணக்கத்திற்குரிய “இலாஹ்” நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று பொருள் கூறுகிறார்கள். நமது இலங்கைத் திரு நாட்டில் வாழும் மார்க்க அறிஞர்களில் 90 வீதமானவர்களும், பொது மக்களில் 90 வீதமானவர்களும் மேற்கண்டவாறே பொருள் கூறுகிறார்கள்.
முஸ்லிம் அறிஞர்களில் இன்னொரு சாரார் “அல்லாஹ் அல்லாத “இலாஹ்” நாயன் யாருமில்லை” என்றும், “அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு “இலாஹ்” நாயனுமில்லை” என்றும் பொருள் கூறுகிறார்கள்.
முஸ்லிம் அறிஞர்களில் ஸூபீகள் என்போர் “அல்லாஹ் அல்லாத ஒன்றுமே இல்லை – அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றுமே இல்லை” என்று பொருள் கூறுகிறார்கள்.
மேற்கண்டவாறெல்லாம் திரு வசனத்திற்குப் பொருள் கூறுபவர்கள் முயலுக்கு மூன்று கால்தான் என்று நம்பிக் கொண்டு தாம் கூறுவதுதான் சரி என்றும், மற்றவர்கள் சொல்வது பிழை என்றும் சொல்லிக் கொண்டு முஸ்லிம்களுக்கிடையில் பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துகிறார்களேயன்றி கருத்து வேறுபாடுள்ளவர்களில் ஒரு குழு முன் வந்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து இது தொடர்பாக தீர்க்கமான ஒரு முடிவு காண துணிவில்லாதவர்களாகவே உள்ளனர். இவர்களையும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், மற்றும் முப்திகளையும் நான் அழைத்தும் கூட அவர்கள் எந்தவொரு பதிலும் தரவுமில்லை, அவர்களில் எவரும் என்னிடம் வரவுமில்லை.
ஆகையால் குறித்த திரு வசனத்திற்கு ஸூபீகள் கூறும் “அல்லாஹ் அல்லாத – அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றுமே இல்லை” என்ற கருத்தை சரிகண்ட நான் இதை என்னால் முடிந்தவரை சரியென்று நிறுவுவதற்குத் துணிந்து இது தொடர்பாக எழுதியும், பேசியும் வருகிறேன்.
“போனால் போகட்டும் போடா” என்று ஒரு கவிஞன் சொன்னது போல நானும் சொல்லிக் கொண்டு எனது பணியைத் தொடர்ந்து வருகிறேன்.
நான் அறிந்த வகையிலும், நான் ஆய்வு செய்த வகையிலும், எனது ஞான குருமார் சொன்ன வகையிலும் நான் சரி கண்ட கருத்து “எல்லாம் அவனே” என்பதும், “அவனுக்கு வேறான, அவனல்லாத ஒன்றுமில்லை” என்பதும், அனைத்துப் படைப்புக்களும் அவனின் பரிசுத்த “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமையின் வேறாகாத வெளிப்பாடுகள் என்பதுமேயாகும்.
எல்லாம் அவனே என்றும், எல்லாச் செயலும் அவன் செயலே என்றும் நம்புதல் “ஷரீஆ”வுக்கு முரணானதாகாதா? என்று சாதாரண புத்தியும், அறிவுமுள்ள ஒருவர் கேட்கலாம். அவருக்கு நான் கூறும் சுருக்கமாக பதில் “எல்லாம் அவனே” என்ற தத்துவம் எந்த வகையிலும் “ஷரீஆ”வுக்கு முரணாகாது” என்பதேயாகும். ஏனெனில் எல்லாம் அவனே என்று சொல்லும் ஸூபீ மகான்கள்
كُلُّ حَقِيْقَةٍ خَالَفَتِ الشَّرِيْعَةَ مَرْدُوْدَةٌ
“ஷரீஆ”வுக்கு முரணான எந்த ஞானமாயினும் அது மறுக்கப்பட்டதாகும்” என்று அவர்களே கூறியுள்ளார்கள் என்பதையும்,
مَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ – وَمَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ
“எவன் இறைஞானம் கற்று “ஷரீஆ”வைக் கற்றுக் கொள்ளவில்லையோ அவன் “சிந்தீக்” – காபிர் ஆகிவிட்டான் என்றும், எவன் “ஷரீஆ”வை கற்று இறைஞானம் கற்கவில்லையோ அவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான்” என்றும் அவர்களே சொல்லியுள்ளார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை வலியுறுத்தும் ஸூபீ மகான்களே மேற்கண்டவாறு சொல்லியிருக்கும் நிலையில் “எல்லாம் அவனே” என்ற தத்துவம் எக்காரணம் கொண்டும் “ஷரீஆ”வுக்கு முரணானதல்ல என்பதை திட்டமாக நம்பிக் கொண்டு “எல்லாம் அவனே” எனும் வழியில் பயணிக்கலாம்.
இது தொடர்பாகச் சுருக்கமாகச் சொல்வதாயின் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தின் விளக்கவுரைதான் “ஷரீஅத்” என்று கூறலாம். அல்லது மூலமும், உரையும் என்று சொல்லலாம்.
“எல்லாம் அவனே” எனும் தத்துவத்தை நம்புவதுடன் “ஷரீஆ”வின் சட்டங்களையும் பேணியே வாழ வேண்டும்.
“எல்லாம் அவனே” என்று நம்புவதால் மல சலத்தைச் சாப்பிடலாம் என்பதோ, சகோதரியைத் திருமணம் செய்யலாம் என்பதோ, நாய் பன்றியின் மாமிசத்தைச் சாப்பிடலாம் என்பதோ கருத்தல்ல.
“எல்லாம் அவனே” என்று நம்பிய சிலர் “ஷரீஆ”வுக்கு முரணாக நடக்கிறார்கள் என்றால் அவர்கள் கொள்கையை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதே அதன் கருத்தாகும். அல்லது அவர்களின் ஆசான் அவர்களுக்கு சரியாக வழிகாட்டவில்லையென்பதே அதன் கருத்தாகும்.
“எல்லாம் அவனே” என்று தனது சிஷ்யனுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசான் அவனுக்கு “ஷரீஆ”வையும், பின்னால் நான் எழுதப் போகின்ற விடயத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
أَعْطِ كُلَّ ذِيْ حَقٍّ حَقَّهُ
என்ற தத்துவத்தையும்,
وَلِكُلِّ صُوْرَةٍ حُكْمٌ وَأَثَرٌ
என்ற தத்துவத்தையும் ஓர் ஆசான் தனது சிஷ்யனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
யாருக்கு எதை வழங்க வேண்டுமோ அதை வழங்க வேண்டும் என்பதும், ஒவ்வொரு “ஸூறத்” உருவத்திற்கும் அதற்குக் கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
“எல்லாம் அவனே” என்று ஒரு தத்துவம் இருப்பது போலும், அதை நாம் ஏற்றுச் செயல்படுவது போலும்,
أَعْطِ كُلَّ ذِيْ حَقٍّ حَقَّهُ
யாருக்கு அல்லது எதற்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தையும், وَلِكُلِّ صُوْرَةٍ حُكْمٌ وَأَثَرٌ ஒவ்வோர் உருவத்திற்கும் அதற்குரியதை கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தையும் நாம் ஏற்றுச் செயல்பட வேண்டும். நமது கொள்கை “எல்லாம் அவனே” என்று இருக்கவும் வேண்டும், அதேபோல் ஒவ்வோர் உருவத்திற்கும் – படைப்புக்கும் உரிய இடத்தை கொடுத்து நடக்கவும் வேண்டும். இதுவே “மகாமுல் இஸ்திகாமா” நேரான வழி என்று சொல்லப்படும்.
ஒருவன் ஒரு பொற்கொல்லனிடம் 50 பவுன் தங்கக் கட்டியொன்றைக் கொடுத்து இதிலிருந்து இரு காதுகளுக்கு இரு காதணிகளும் – மின்னிகளும், மூக்கிற்கு ஒரு மூக்குத்தியும், இரு கைகளுக்கு இரு வளையல்களும், கை விரல்களுக்கு மோதிரங்களும், கழுத்திற்கு ஒரு மாலையும் செய்து தருமாறு சொன்னான். பொற் கொல்லன் அவ்வாறே செய்து கொடுத்தான்.
அவன் செய்து கொடுத்த எல்லா அணிகலன்களும் தங்கமாக இருந்தாலும் கூட எல்லா அணிகலன்களும் தங்கத்தினால் செய்யப்பட்டவைதானே என்று அவ் அணிகலன்களின் உருவத்தைக் கவனித்து அதை எந்த இடத்தில் பாவிக்க வேண்டுமென்று தெரியாமல் மூக்கில் அணிய வேண்டிய மூக்குத்தியை காதில் அணிவதும், கையில் அணிய வேண்டிய வளையலைக் காலில் அணிவதும் பிழையாகும். எல்லாமே தங்கத்தினாலான அணிகலன்களாக இருந்தாலும் அவற்றில் எதை எந்த இடத்தில் அணிய வேண்டுமோ அந்த இடத்திலேயே அணிய வேண்டும். அதாவது அணிகலன் உடல் உறுப்புக்களில் எந்த உறுப்பில் பாவிப்பது பொருத்தமோ அவ்விடத்திலேயே அவ் அணிகலன்களை பாவிக்க வேண்டும். எல்லாம் தங்கம்தானே! எதை எங்கு பாவித்தால் என்ன? என்று வேதாந்தம் பேசுவது கூடாது.
கையுறை, காலுறை, தொப்பி என்பன பஞ்சால் – நூலால் செய்யப்பட்டவையாயினும் அவற்றில் ஒவ்வொன்றையும் அதற்குப் பொருத்தமான இடத்திற்கே பயன்படுத்த வேண்டும். மூன்றும் பஞ்சாலானவைதானே எதை எங்கு பாவித்தால் என்ன என்று வேதாந்தம் பேசிக் கொண்டு கையுறையை காலிலும், தொப்பியை கையிலும் அணிந்து கொள்வதும் கூடாது.
இவ்வாறுதான் அல்லாஹ்வும், அவன் படைப்புகளுமாகும். எல்லாப் படைப்புகளும் அவனின் “வுஜூத்” உள்ளமையின் வெளிப்பாடுகளாயிருந்தாலும் “ஷரீஆ”வின் வழிகாட்டலின் படி நாம் செயல்பட வேண்டும்.
தாயும் அவனின் வெளிப்பாடுதான் என்று தாயைத் திருமணம் செய்வது கூடாது. நாயும் அவனின் வெளிப்பாடுதான் என்று அதை அறுத்துச் சாப்பிடுவது கூடாது. நாம் எல்லாம் அவனே என்று ஏற்றுக் கொண்டாலும் “ஷரீஆ”வின் வழிகாட்டலைப் பேணியே செயல்பட வேண்டும். இவ் அடிப்படையில் “எல்லாம் அவனே” என்று நம்பினவனுக்கே “ஷரீஆ” அவசியம். அவ்வாறு நம்பாதவனுக்கு “ஷரீஆ”வும் தேவையில்லை, ஷரீஆ சட்டமும் தேவையில்லை.
படைப்புகள் யாவையும் அவனாகப் பார்ப்பவனுக்கே “ஷரீஆ”வும் தேவை. வழிகாட்டலும் தேவை.
அல்லாஹ் திருக் குர்ஆன் பற்றிக் கூறும் போது هُدًى لِلْمُتَّقِيْنَ “தக்வா” இறையச்சம் உள்ளவர்களுக்கே திருக்குர்ஆன் வழி காட்டும் என்று கூறியுள்ளான். அல்லாஹ்வின் இக் கூற்றை நாம் ஆய்வு செய்தால் “தக்வா” உள்ளவர்களுக்கு வழிகாட்டல் தேவையில்லை. அவர்கள் சரியான வழியில் இருப்பதால்தான் “தக்வா” அச்சமுள்ளவர்களானார்கள். இறையச்சமுள்ளவர்களுக்கு வழி காட்டல் அவசியமில்லை. அவர்கள் சரியான வழியை கண்டவர்கள்தான்.
அதாவது “தக்வா” உள்ளவர்கள் அனைவரும் “எல்லாம் அவனே” என்று நம்பினவர்களேயாவர். இத்தகையோருக்கே வழிகாட்டல் அவசியம். ஏனெனில் எல்லாம் அவனே என்று நம்பினவர்களில் விளக்கமின்றி அரைகுறையாக நம்பிய குறை குடங்கள் சில வேளை தமது தாயையும் திருமணம் செய்யலாம், தமது தங்கையையும் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்துவிடுவார்களாகையால்தான் இத்தகையோருக்கு “அல்குர்ஆன்” என்ற ஷரீஆ வழிகாட்டுமென்று இறைவன் கூறியுள்ளான்.
“எல்லாம் அவனே” என்ற தத்துவம் “ஷரீஆ”வுக்கு முரணானதல்ல என்பதே முடிவாகும்.
தொடரும்….