தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“நாபலஸீ” என்ற பெயரில் இருவர் உள்ளனர். ஒருவர் அப்துல் ஙனீ நாபலஸீ, மற்றவர் அபூ பக்ர் நாபலஸீ றஹிமஹுமல்லாஹ் ஆவார்கள்.
அப்துல் ஙனீ அந்நாபலஸீ அவர்கள் “திமஷ்க்” டமஸ்கஸ் – சிரியாவின் தலைநகரில் பிறந்து அங்கேயே அதிக காலம் வாழ்ந்து அங்கேயே “வபாத்” மரணித்தார்கள். ஹனபீ மத்ஹப், காதிரிய்யா, நக்ஷபந்திய்யா தரீகாவைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். ஹிஜ்ரீ 1050ல் பிறந்து 1143ல் மரணித்தார்கள்.
இவர்கள் சிரியா நாட்டின் பிரசித்தி பெற்ற அறிஞரும், இறைஞானியும், மார்க்க மேதையும் ஆவார்கள். அதிகம் பயணம் செய்பவர்களாகவும், அதிகம் நூல் எழுதுபவர்களாகவும் இருந்தார்கள். டமஸ்கஸ் நகரிலேயே வாழ்ந்து அங்கேயே ஸூபிஸ ஞானம் கற்று ஞான மேதையானார்கள். சுமார் ஏழாண்டுகள் ஸூபீகளின் اَلتَّجَارُبُ الرُّوْحِيَّةْ எனும் நூலைக் கற்பதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தினார்கள். இவர்கள் தங்களின் வாழ்நாளில் துருக்கி, லெபனான், பைதுல் மக்திஸ், பலஸ்தீன், மிஸ்ர், தறாப்லஸ் முதலான நாடுகளுக்குப் பயணித்துள்ளார்கள். இறுதியில் டமஸ்கஸில் வாழ்ந்து அங்கேயே “வபாத்” ஆனார்கள். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞான வழியில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் அடக்கவிடம் டமஸ்கஸ் நகரிலுள்ள ஒரு ஜும்ஆப் பள்ளிவாயலின் உள்ளே கண்ணாடிப் பெட்டிக்குள் அமைந்துள்ளது. நானும், ஹுஸைன் ஹாஜியார் அவர்களும், பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொருவரும் டமஸ்கஸ் சென்று மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த நேரம் இவர்களைத் தரிசித்தோம். அல்ஹம்துலில்லாஹ்!
இன்னுமொரு மகான் உள்ளார்கள். அவர்கள் அபூ பக்ர் நாபலஸீ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்களேயாவர். இவர்கள் பெரும் சட்ட மேதையாகவும், மார்க்க அறிஞராகவும், துறவியாகவும் வாழ்ந்தார்கள். “ஹதீது”க்கலையிலும், “பிக்ஹ்” எனும் சட்டக்கலையிலும் ஓர் இமாமாகத் திகழ்ந்தார்கள். மக்களிடம் கௌரவம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவற்றுடன் ஹதீதுக் கலை மேதையாகவும் இருந்தார்கள்.
அக்காலத்தில் வாழ்ந்த மார்க்கத்திற்கு எதிரான தலைவர்களை எதிர்த்தார்கள். இதேபோல் மார்க்கத்திற்கு முரணான ஆட்சியாளர்களையும் எச்சரித்தார்கள். இதனால் ஆட்சியாளர்களின் எதிர்ப்புக்கு ஆளானார்கள். இறைஞானத் துறையில் மிக ஆழமாகச் சென்று அற்புதமான இறைஞானக் கருத்துக்களை வெளிப்படுத்தியதால் போலி உலமாஉகளின் எதிர்ப்பிற்கும் ஆளாகி இறுதியில் தோல் உரித்துக் கொல்லப்பட்டு “ஷஹீத்” ஆனார்கள்.
நான் இக்கட்டுரையில் இமாம் நாபலஸீ என்று குறிப்பிடுவது இவர்களைக் குறிக்குமேயன்றி இமாம் அப்துல் ஙனீ அந்நாபலஸீ அவர்களைக் குறிக்காது.
இவர்கள் கூறிய தத்துவங்களில் கடந்த தொடரில், பின்வரும் தத்துவத்தை எழுதியிருந்தேன். அதை மீண்டும் நினைவூட்டி ஏனைய தத்துவங்களில் சிலதையும் குறிப்பிடுகிறேன்.
يقول النابلسي: رُجُوْعُ الْأَعْيَانِ الْكَثِيْرَةِ إِلَى الْعَيْنِ الْوَاحِدَةِ هُوَ التَّوْحِيْدُ الْحَقِيْقِيُّ، وَالْإِيْمَانُ الْكَامِلُ، (حكم شطح الوليّ، ص 196)
“பல வஸ்துக்கள் ஒரே வஸ்தளவில் மீளுதல்தான் எதார்த்தமான “தவ்ஹீத்” உம், பூரண ஈமானுமாகும்”
அதாவது “தவ்ஹீத்” ஒன்றாக்குதல் எனும் அடிப்படைத் தத்துவத்தை இவர்கள் இந்தப் பாணியில் கூறியுள்ளார்கள். எமது கண்களுக்குப் பல வஸ்துக்களாக தெரிகின்ற அனைத்தையும் ஒன்றெனக் கூறுவதும், நம்புவதுமாகும்.
இதை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின் அனைத்துப் படைப்புக்களும் அல்லாஹ்வின் வேறுபடாத வெளிப்பாடுகள், அவனின் “தஜல்லீ” என்றுமே சொல்ல வேண்டும். நம்பவும் வேண்டும். இதுவே “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் ஆணி வேராகும்.
يقول الصوفيّة: إِنَّ ذَوْقَ وَحْدَةِ الْوُجُوْدِ هُوَ الْإِحْسَانُ، الَّذِيْ هُوَ أَعْلَى مَرَاتِبِ الدِّيْنِ،
“வஹ்ததுல் வுஜூத்” இன்பத்தை அனுபவிப்பதுவே “இஹ்ஸான்” – “இக்லாஸ்” என்று சொல்கிறார்கள். இந்த “இஹ்ஸான்” என்பது “தீன்” மார்க்கத்தின் படித்தரங்களில் மிகவும் உயர்ந்ததாகும்.
ஸூபீ மகான்கள் மிக ஆழமான “இஹ்ஸான்” பற்றி சிறிய வசனத்தில் கூறியுள்ளார்கள். இது தொடர்பாக நீண்ட ஹதீது உள்ளது.
அந்த ஹதீது – நபீ மொழியில் தலைப்புக்கு ஏற்ற குறிப்பை மட்டும் எடுத்து விபரம் எழுதுகிறேன்.
“இஹ்ஸான்” என்ற சொல்தான் ஹதீதில் வந்த சொல்லாகும். இச் சொல்லும், “இக்லாஸ்” என்ற சொல்லும் ஒரே பொருளுக்குரியவைதான். முஸ்லிம்களில் பலர் “இக்லாஸ்” என்ற சொல்லை அறிந்திருந்தாலும் “இஹ்ஸான்” என்ற சொல் அவர்களுக்குப் புதியதேயாகும். அவர்கள் “இக்லாஸ்” என்ற சொல்லை அறிந்திருந்தாலும் சொல்லை மட்டுமே அறிந்து வைத்துள்ளார்கள். அதன் சரியான பொருள் கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கள்ளம், கபடம் உள்ளவனை “இக்லாஸ்” இல்லாதவன் என்ற பொருளுக்குப் பயன்படுத்துவார்கள்.
ஆயினும் இச் சொல்லின் வரைவிலக்கணம் தெரிந்தவர்கள் ஒரு சிலரேயாவர். இச் சொல் இலங்கை – கிழக்கு மாகாண மக்களும், குறிப்பாக எனதூரான காத்தான்குடி மக்களும் மேற்கண்ட பொருளுக்குப் பயன்படுத்துவார்கள்.
இச் சொல்லுக்கு யார் எவ்வாறு பொருள் கூறினாலும் அப் பொருள் பெருமானார் அவர்கள் கூறிய பொருளுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நபீ பெருமானார் அவர்கள் கூறிய வரைவிலக்கணத்தை இங்கு எழுதிக் காட்டுகிறேன்.
الإحسان: هو أن تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீ அல்லாஹ்வை பார்ப்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீ அவனைப் பார்ப்பவனாக இல்லாது போனால் அவன் உன்னைப் பார்க்கிறான்”. இதுவே வசனத்தின் சுருக்கமான பொருள்.
இப் பொருளின் படி அல்லாஹ்வை வணங்குகின்ற ஒருவன் அவனைப் பார்ப்பவன் போல் வணங்க வேண்டுமென்பது எவ்வாறு என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக நேற்று 09.10.2023 நான் இந்த வசனத்திற்கு எழுதிய விளக்கத்தில் ஓரளவு விபரம் எழுதியுள்ளேன். முழுக் கவனத்தோடு வாசித்தவர்கள் நரிக் கொம்பைப் பெற்றிருப்பார்கள். புரியாத ஒன்றையும், புரிய வேண்டிய ஒன்றையும் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
உலமாஉகளும், அறபுக் கல்லூரி மாணவர்களும் விளங்குவதற்காக “ஷர்த் – ஜவாப்” எனும் மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள ஒரு சட்டத்தைக் கூறி, فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ என்ற “ஷர்த்”துடைய வசனத்திற்கு فَإِنَّهُ يَرَاكَ என்ற வசனத்தை “ஜவாப்” உடைய வசனமாகக் கொடுத்தால் பொருள் பொருந்தாதாகையால், فَإِنْ لَمْ تَكُنْ என்ற வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல்லை “நாகிஸ்” ஆன “பிஅல்” ஆக கருதாமல் அதை “தாம்மான பிஅல்” ஆக கருதி அதன் பின்னால் வந்த تَرَهُ என்ற சொல்லை முன்னால் வந்துள்ள “ஷர்த்”திற்கு “ஜவாப்” ஆக கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால்தான் பொருள் பொருத்தமாகும் என்றும் ஒரு விளக்கம் எழுதியிருந்தேன்.
அதோடு நபீ மொழியில் வந்த كَأَنَّكَ تَرَاهُ நீ அவனைக் காண்பவன் போல் வணங்க வேண்டும் என்ற பெருமானாரின் பேச்சு எவ்வாறு சாத்தியமாகும்? முசம்மில் என்பவனை வாழக்கையில் ஒரு தரமேனும் காணாத ஒருவனிடம் நீ முசம்மிலைப் பார்ப்பவன் போல் – காண்பவன் போல் இவ்விடத்தில் நின்று கொள் என்று அவனிடம் சொன்னால் அவன் முசம்மிலைக் காண்பவன் போல் எவ்வாறு நிற்பான்? எவ்வாறு அது அவனுக்கு சாத்தியமாகும்? என்ற வினாவையும் எழுப்பிவிட்டு விடை செர்லலாமலேயே முடித்திருந்தேன்.
فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
என்ற வசனத்திற்கு நான் எழுதிய விளக்கம் நுணுக்கமாகச் சிந்திப்பவர்களுக்கு ஓரளவு விளங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஆயினும் كَأَنَّكَ تَرَاهُ நீ அவைனக் காண்பவன் போல் வணங்குவது எவ்வாறு என்பதற்கு தெளிவான விளக்கம் நான் எழுதவில்லை. அல்லாஹ்வின் அருளால் அதற்கான விளக்கத்தை நான் அறிந்திருந்தாலும் கூட அது இவ்வாறுதான் என்று படம் பிடித்துக் காட்டுவதற்கு அஞ்சுகிறேன். சத்தியத்தைச் சொல்வதற்கு அஞ்சத் தேவையில்லை. நான் அஞ்சுபவனுமல்ல. “எல்லாம் அவனே” எனும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைக் கூட நமது நாட்டில் இக்காலத்தைப் பொறுத்த வரை எவரும் பகிரங்கமாகச் சொல்லாத நிலையில் நானே 1979ம் ஆண்டு முதலில் பகிரங்கமாகச் சொன்னேன். நான் முதலில் இத் தத்துவத்தை காத்தான்குடி 05 மார்க்கட் சதுக்கத்தில் 1979ம் ஆண்டு நடைபெற்ற மீலாத் விழாவிலேயே பகிரங்கமாகச் சொன்னேன். எனது கருத்தைப் பலர் ஏற்றுக் கொண்டனர். இன்னும் பலர் எதிர்த்தனர். மார்க்க அறிஞர்கள் என்று மக்களால் கருதப்படுகின்ற ரிஸ்வீ முப்தீ அவர்களின் தலைமையில் இயங்கும் உலமா சபை என்னையும், எனது கருத்தைச் சரி கண்ட மக்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுத்து அதை நாடு முழுவதும் பகிரங்கப்படுத்தியதோடு மட்டும் நின்று விடாமல் எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் பிரகடனப் படுத்தினார்கள். விஷயம் விளங்காமலும், என்னை ஒரு தரமேனும் விசாரிக்காமலும் வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு சிலர் தவிர மற்றெல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டு “பத்வா”வை அமுல் படுத்தி வரும் இக்கால கட்டத்தில் இந்த நபீ மொழிக்குரிய விளக்கத்தையும் நான் வெளிப்படுத்தினால் எவர் என்னைக் கொலை செய்யாது போனாலும் இது காலவரை என்னைக் கொலை செய்ய வேண்டுமென்று எழுத்து மூலம் அறிவித்த உலமா சபையே வாளுடன் படையெடுத்து என்னைக் கொலை செய்ய வந்து விடுவார்கள்.
அவர்கள் அவ்வாறு செய்யும் போது அதைத் தொடர்ந்து பின்னால் ஏற்படுகின்ற பிரச்சினைகளைப் பயந்து, அவற்றைத் தடுக்க வேண்டுமென்பதற்காகவே நபீ மொழியில் வந்துள்ள كأنك تراه என்ற வசனத்திலுள்ள “தஷ்பீஹ்” என்பதைக் குறிக்கும் “தஷ்பீஹ்” உடைய “காப்” பற்றி விளக்கம் கூறாமல் உள்ளேன்.
اَلْفِتْنَةُ نَائِمَةٌ لَعَنَ اللهُ مَنْ أَيْقَظَهَا،
குழப்பம் உறங்குகிறது. அதை எழுப்பியவனை அல்லாஹ் சபிப்பானாக! என்ற நபீ மொழியைக் கருத்திற் கொண்டு மௌனியாக உள்ளேன்.