தொடர்- 09
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
முடிவுரை
இங்கு ஈஸால் தவாப் என்ற தலைப்பில் என்னால் முடிந்த வரை ஆதாரங்கள் திரட்டி மரணித்தவர்களுக்காக உயிரோடு செய்கின்ற நல்லமல்களின் பலன் அவர்களைச் சென்றடையும் என்பதை நிறுவியிருக்கின்றேன். இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் தவிர இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு எழுதி இத்தொடரை பெரிதாக்கவிரும்பவில்லை.
ஈஸால் தவாப்பற்றித் தம்பிமார்களிடமும் தீர்க்கமான ஒரு முடிவுகிடையாது. இதேபோல் ஏனையமார்க்க அனுஷ்டானங்களிலும், கொள்கையிலும் அவர்களுக்கிடையில் ஒன்றுபட்ட கருத்தும் இல்லை. அவர்கள் காலத்துக்குகாலமும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்பவும் சட்டத்தையும் கொள்கையையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
தொழுகையில் “அத்திஹிய்யாத்” ஓதும்போது “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னதும் வலக்கரச் சுட்டுவிரலை உயர்த்தவேண்டுமென்பதை தம்பிமார்களும், சுன்னத்வல்ஜமாஅத் உலமாஉகளும் ஏற்றுக்கொண்டிருந்தனர். அந்த விரலை ஆட்டிக் கொண்டிருக்கவேண்டுமென்று யாரும் சொல்லவில்லை. ஆனால் தம்பிமார் அண்மைக்காலத்திலிருந்து விரலாட்டிகளாக மாறிவிட்டார்கள். அவர்களின் புதிய கண்டுபிடிப்பின்படி விரலை ஆட்டவேண்டுமாம்.
ஆயினும் கலாநிதி ஒருவரின் அண்மைக்கால கண்டுபிடிப்பு விரல் ஆட்டத்தேவையில்லை என்பதாகும்.
தொழுகையில் தம்பிமார் நெஞ்சின் மேல்கைகட்டி வந்தார்கள். அதுவே சரி என்றும் வாதிட்டுவந்தார்கள். ஆயினும் அவர்களிற் பலதம்பிமார் அண்மைக்காலமாக நெஞ்சின்மேல் கைகட்டுவது பிழை என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
தம்பிமார் நெடுங்காலமாக வஸீலஹ் தேடுவதை மறுத்து வந்துள்ளார்கள். எந்த ஒரு விபரமும் இல்லாமல் பொதுவாக வஸீலஹ்வை மறுத்து வந்துள்ளார்கள்.
ஆயினும் அவர்களின் அண்மைக்கால கண்டுபிடிப்பு என்னவெனில் ஸலாத் – தொழுகை, ஸப்ர் – பொறுமை போன்றந ல்லமல்கள் கொண்டு மட்டும் வஸீலஹ்தேடலாம். தவிர ஆட்களைக் கொண்டு வஸீலஹ் தேடுவது அவர்களிடம் நேரடியாக உதவி கேட்பதும் மார்க்க விரோதம் என்பதாகும்.
தம்பிமார் தமது பிடியைச் சற்றுத் தளர்த்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாயினும் அவர்கள் இன்னும் தெளிவு பெறுவதாயின் வெளிச்சத்திற்கு வரவேண்டும்.
உயிரோடுள்ளவன் மரணித்தவர்களுக்காக செய்கின்ற எந்த ஒரு நல்லமலாயினும் அதனால் அவர்கள் பலன்பெறமாட்டார்கள் என்றும் அவர்கள் செய்கின்ற நற்கிரியைகளின் நன்மை அவர்களைச் சென்றடையாது என்றுமே தம்பிமார் நெடுங்காலமாகச் சொல்லி வந்துள்ளார்கள்.
ஆனால் அவர்களின் அண்மைக்கால கண்டுபிடிப்பு என்னவெனில் உயிரோடுள்ளவன் மரணித்தவர்களுக்காகச் செய்கின்ற நற்கருமங்களில் தர்மம், நோன்பு, ஹஜ், துஆ சென்றடையுமே தவிர எல்லா நற்கருமங்களின் நன்மையும் சென்றடையாது என்பதும், கத்தம், பாதிஹஹ், திருக்குர்ஆன் ஓதுவது இதில் அடங்காது என்பதுமாகும்.
தம்பிமார் தமது ஆரம்பப்படியில் இருந்து சற்று இறங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாயினும் அவர்கள் இன்னும் தெளிவு பெற்று சத்தியத்தை சந்திக்கவிரும்பினால் இன்னும் சற்று இறங்கவேண்டும்.
நான்மேலே எழுதிக்காட்டிய விபரங்கள் மூலமாக வஹ்ஹாபிய வழிநடக்கும் தம்பிமார் நிலையான கொள்கையுடையவர்கள் அல்லர் என்பதும், காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்றவாறு கொள்கையை மாற்றுபவர்கள் என்பதும், தரமான சுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகளான உலமாஉகளின் கொள்கை விளக்கங்களைக் கேட்டதம்பிமார் கொஞ்சம் கொஞ்சமாக தமது இடத்தில் இருந்து இறங்கி வந்துள்ளார்கள். இறங்கிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது.
“ஈஸால் தவாப்” உயிரோடுள்ளவன் மரணித்தவனுக்காகச் செய்கின்ற நல்லமல்களின் நன்மை அவனைச் சென்றடைதல் தொடர்பாகதர்மம், நோன்பு, ஹஜ், துஆ, போன்றவற்றின் நன்மை அவனைச் சென்றடையும் என்பதை ஏற்றுக்கொள்ளும் தம்பிமார் மாத்திரம் திருக்குர்ஆன், கத்தம், பாதிஹஹ் போன்றவற்றின் நன்மை மாத்திரம் அவனைச் சென்றடையாதென்று கூறுவது விந்தையைானதாகும்.
தர்மம், நோன்பு, ஹஜ், துஆ என்பன இபாதத் என்றும் அஃமால் என்றும் சொல்லப்படும். இதேபோல் திருக்குர்ஆன், யாஸீன், கத்தம், பாதிஹஹ் என்பவையும் இபாதத் என்றும் அஃமால் என்றுமே சொல்லப்படும்.
தர்மம், நோன்பு, ஹஜ், துஆ என்ற அமல்களின் பலன் மரணித்தவனைச் சென்றடையுமென்றால்அமல் – இபாதத் என்றவகையில் திருக்குர்ஆன், கத்தம், பாதிஹஹ் ஆகியவற்றின் பலனும் அவர்களைச் சென்றடையவே செய்யும். இபாதத் – அஃமால் என்றவகையில் எல்லாமே ஒன்றுதான். அந்த வணக்கத்தின் நன்மை செல்லாது. இந்த வணக்கத்தின் நன்மை செல்லும் என்று வணக்கங்களுக்கிடையில் வேறுபாடு காட்டுதல்கூடாது.
உயிருள்ளவன் மரணித்தவனுக்காகச் செய்கின்ற தர்மம், நோன்பு, ஹஜ், துஆ போன்றவற்றின் நன்மை மட்டும்தான் அவனைச் சென்றடையுமேயன்றி திருக்குர்ஆனின் நன்மை அவனைச் சென்றடையாதென்று தம்பிமார் வாதிடுவதற்குக் காரணம் இது பற்றி ஹதீஸ்களில் தெளிவாக வரவில்லை என்பதேயாகும்.
இதை ஓர் உதாரணம் மூலம் அறிந்துகொள்வோம். முசம்மில் என்பவன் தனது பெற்றோரை பைத்தியகாரர்கள் என்று ஏசினான். முனாஸ் என்பவன் அவனிடம் பெற்றோரை இவ்வாறு ஏசாதே. இதை திருக்குர்ஆனில் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்றுசொன்னான். அதற்கு முஸம்மில் அல்லாஹ் திருக்குர்ஆனில் பெற்றோர்களுக்கு “உfப்fபின்” என்ற சொல்லவேண்டாமென்றுதான் சொல்லியுள்ளானேயன்றி பைத்தியக்காரர்கள் என்று ஏசவேண்டாமென்று சொல்லவில்லை என்று சொன்னான். அதற்கு முனாஸ் “உfப்fபின்” என்ற சொல்லை நீ சரியாக ஆய்வுசெய்தால் அது பைத்தியக்காரர்களையும் உள்ளடக்கிய ஒருசொல் என்பதும், அச்சொல்லுக்கு சாதாரணமாக “சீ” என்று பொருள் சொல்லப்பட்டாலும் அது பெற்றோர் மனதை புண்படுத்தும் எச்சொல்லையும் எடுத்துக்கொள்ளும் ஒரு பொதுச்சொல் என்பதும் உனக்குத்தெளிவாகும்.
இதேபோல் உயிருள்ளவன் மரணித்தவர்களுக்காகச் செய்கின்ற தர்மம், நோன்பு, ஹஜ், பிரார்த்தனை என்பன அவர்களைச் சென்றடைவது போல்திருக்குர்ஆன், யாஸீன், கத்தம், பாதிஹஹ் என்பவையும் அவர்களைச் சென்றடையும்.
ஏனெனில் “இபாதத்” வணக்கம் என்பதில் அல்லது நல்லமல் என்பதில் எல்லாமே ஒன்றுதான். “இபாதத்” என்ற சொல் அல்லது நல்லமல் என்பது அனைத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பொதுச்சொல்லேயாகும். ஆகையால் இதில் எவரும் தனது சுயவிருப்பத்தின்படி இது சேரும், அது சேராதென்று சொல்லமுடியாது.
தம்பிமார் நினைப்பதுபோல் தங்களின் விருப்பத்திற்கும், கொள்கைக்கும் ஏற்றவாறு திருமறை வசனங்களுக்கு விளக்கம் சொல்வதும், நபீ மொழிகளுக்கும் விளக்கம் சொல்வதும் பிழையானதாகும். ஒருவன் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் ஏற்றவாறுதான் தனது கொள்கையை மாற்றவேண்டுமேயன்றி தனது கொள்கைக்கேற்றவாறு அவ்விரண்டையும் மாற்றுவதற்கு வழிதேடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தம்பிமார் தமது பிறவிக் குணத்தை மாற்றவேண்டும்.
தம்பிமார்களுடன் ஒரு நிமிடம்…….
தம்பிமார்களே! நீங்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் கொப்புகளை ஸுன்னத்வல்ஜமாஅத் உலமாஉகள் தரமான, பலமான ஆதாரங்கள் கொண்டு ஒவ்வொன்றாக வெட்டிவருவதால் நீங்களும் இறங்கி வருவதை நாம் காண்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். மிக்க மகிழ்ச்சி. இன்னும் இறங்குங்கள். எந்த அளவு வழிகேட்டிலிருந்து இறங்குகிறீர்களோ அந்த அளவு நேர்வழியில் ஏறிவிடுவீர்கள். நீங்கள் இப்போது இருட்டறையில் வாழ்கின்றீர்கள். கதவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து வெளியே வாருங்கள். வெளிச்சத்திற்கு வந்தால் எல்லாம் தெரியும்.
– அல்ஹம்துலில்லாஹ்–
*********முற்றிற்று********
தொடர் – 08
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ்
அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-
துஆ அவசியமா ?
மரணித்தவர்களைக் கவனத்திற் கொண்டு திருக்குர்ஆன் முழுவதையும் அல்லது யாஸீன் பாத்திஹஹ் போன்ற ஸுறஹ்களை மட்டும் ஓதி முடித்த பின் துஆவின் மூலம் அதன் நன்மையை மரணிதவர்களுக்குச் சேர்த்து வைப்பது வழக்கத்தில் உண்டு.
“துஆ“ஓதுபவர் தனது துஆவில் தான் விரும்பிய எந்த அம்சத்தைச் சேர்த்துக் கொண்டாலும் “அல்லாஹும்ம அவ்ஸில் தவாப மா கறஃனா“ என்ற வசனத்தையும் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
“அல்லாஹும்ம அவ்ஸில் தவாப மா கறஃனா“ என்று ஓதுவதா? அல்லது “மித்ல“ என்ற ஒரு சொல்லையும் சேர்த்து“அல்லாஹும்ம அவ்ஸில்மித்ல தவாபி மா கறஃனா“என்று ஓதுவதா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு.
நான் ஆய்வு செய்து அறிந்த வகையிலும், அறிஞர்களிடம் கேட்டறிந்த வகையிலும் “மித்ல“ என்ற சொல்லை விட்டு “அல்லாஹும்ம அவ்ஸில் தவாப மா கறஃனா“ என்றுஓதுவதே சிறந்ததாகும்.
மரணித்த ஒருவனுக்காக திருக்குர்ஆன் ஓதும் ஒருவன்தான் ஓதும் ஓதலின் நன்மை இன்னாருக்குச் சேர வேண்டும் என்ற “நிய்யத்“ மனதில் நினைத்துக் கொண்டால் போதும்.“துஆ“தேவையில்லை என்று சிலர் சொல்கின்றார்கள். இவர்களின் கூற்று ஹனபி மத்ஹப் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயினும் ஷாபிஈ மத்ஹபின் படி ஏற்றுக் கொள்ள முடியாதஒன்றாகும்.
ஏனெனில் இந்த மத்ஹபில் ஒருவன் தொழுகைக்கென்று “நிய்யத்“ வைத்துக் கொண்டு தனது வீட்டிலிருந்து பள்ளிவாயலுக்கு வந்து தொழுதாலும் தொழ ஆரம்பிக்கும் வேளை “உஸல்லி பர்ளல் மக்ரிப்“என்று நிய்யத் வைப்பது அவசியமாகும். வீட்டில் வைத்துக் கொண்ட நிய்யத் செல்லுபடியாகாது. ஆகையால் திருக்குர்ஆன் ஓத ஆரம்பம் செய்யும் போது நிய்யத் வைத்துக் கொண்டாலும் இறுதியில் “அவ்ஸில்“ என்ற துஆ ஓதுவதே சிறந்தது. ஆரம்பத்தில் வைத்துக் கொண்ட நிய்யத் செல்லுபடியாகாது.
கொடை வள்ளல்
திருக்குர்ஆன், கத்தம், பாத்திஹஹ்ஓதி விட்டு “அவ்ஸில் துஆ“ ஓதுபவர் பல நபிமார்களின் பெயர்களையும், பல வலீமார்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்மையைச் சேர்த்து வைப்பதுடன் பெயர்கள் குறிப்பிடாமல் பொதுவாக நபிமார், வலீமார், ஷெய்குமார், நல்லடியார், ஸாலிஹீன், ஸாலிஹாத் அனைவருக்கும் மற்றும் ஆதம் (அலை) அவர்கள் முதல் இற்றைவரை மரணித்தவர்கள் அனைவருக்கும் சேர்த்து வைக்கின்றார்.
திருக்குர்ஆனில் உள்ள ஒரு “ஹர்பு“ எழுத்துக்குப் பத்து நன்மைகள் கிடைக்கின்றன என்ற நபி ஸல் அவர்களின் ஹதீஸின் படி அலிப் லாம் மீம் என்று சொன்னவனுக்கும் முப்பது நன்மைகள் கிடைக்கின்றன.
ஒருவன் இவ்வாறு ஓதி விட்டு மேற்கண்டவாறு “அவ்ஸில்“துஆ ஓதினால் முப்பது நன்மைகளையும் மேலே சொன்ன அனைவருக்கும் பங்கு வைப்பது எவ்வாறு? ஒருவருக்கு ஒரு நன்மை வீதம் பங்கு வைத்தாற் கூட முப்பது பேர்களுக்கு மட்டுமே கொடுக்க முடியும். அல்லது ஒருவருக்குப் பாதி நன்மை வீதம் கொடுத்தாலும் அறுபது பேர்களுக்குமட்டுமே கொடுக்க முடியும்.
ஆதம் அலைஅவர்கள் முதல் இற்றைவரை தோன்றி மறைந்த அனைவருக்கும் முப்பது நன்மைகளை எவ்வாறு பங்கு வைக்க முடியும் என்ற கேள்வி எழும். இங்குதான் அல்லாஹ் விசாலமான கொடைவள்ளல் என்பதைக் காண முடியும்.
இது தொடர்பாக அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்களில் நான் சரி கண்ட கருத்தை மட்டும் இங்க்கு எழுதுகின்றேன்.
அல்லாஹ் மாபெரும் கொடை வள்ளல். தான் நாடியதைச் செய்வான். தான் நாடாததை செய்யான்.
துஆ ஓதுகின்றவன் யாருக்கெல்லாம் நன்மை சேர வேண்டுமென்றுகேட்கின்றானோ அவர்களில் ஒவ்வருவருக்கும் முப்பது நன்மைகள் வழங்குகின்றான். இது அல்லாஹ்வின் விசாலமான கொடையில் நின்றுமுள்ளதாகும். தவிர முப்பது நன்மைகளைஅவர்கள் அனைவருக்கும் பங்கீடு செய்கின்றான் என்பது கருத்தல்ல.
கூலிக்கு குர்ஆன் ஓதலாமா?
மரணித்தவர்களுக்காக திருக்குர்ஆன், கத்தம், பாத்திஹஹ் ஓதியதற்காக கூலி வாங்கலாமா? இதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்கும் தம்பிமார்களுக்காக ஒரு சில வரிகள்.
தம்பிமார் தலையெடுக்குமுன் இப்படியொரு கேள்விக்கு இடமில்லாதிருந்தது. உலமாஉகள் அனைவரும் கருத்து வேறுபாடின்றி கத்தம் ஓதி கூலி பெற்றே வந்துள்ளார்கள்.
இன்று செத்தவனுக்கு கத்தம்“ எதற்கு? என்றும், கத்தம் ஓதிவிட்டு கூலி பெறலாமா? என்றும் கேட்டுக் கொண்டிருக்கும்தம்பிமாரை எண்ணி வியப்படைய வேண்டிதாயுள்ளது. ஏனெனில் இவர்கள் அனைவரும் கத்தம் ஓதியும், மௌலித் ஒதியும் பணம் பெற்று வளர்ந்தவர்க்ளும், வயிறு வளர்ந்தவர்களுமேயாவர்.
நான் அறிந்த வரை இன்று கலாநிதிகளாய், நளீமிகளாய், ரியாதிகளாய், மதனிகளாய் இருப்போரிற் பலர் தாம் மத்ரசாக்களில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் மௌலித் ஓதினவர்களும், குர்ஆன் ஓதிப் பணம் பெற்றவர்களு மேயாவர்.
இவர்களிற் சிலரின் தந்தைகள் மௌலித் ஓதுவதையும், கத்தம் ஓதுவதையும் தொழிலாகக் கொண்டு உழைத்தே தமது பிள்ளைகளை வளர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வளர்க்கப்பட்டவர்களின்உடலில் இதுவரைஓடிக்கொண்டிருப்பது மௌலித் கத்தம் போன்றவற்றால் ஊறிய இரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள்தான் செத்தவனுக்கு கத்தம் எதற்கு? என்று கூச்சலிடும் கோமாளிகளாவர். மௌலித் ஓதுவது“ஹறாம்“ என்று பத்வா வழங்கும் மூடர்களுமாவர்.
மரணித்தவர்களுக்காக திருக்குர்ஆன், கத்தம், பாத்திஹஹ் ஓதி கூலி பெறுவதற்கு தெளிவான சரியான ஆதாரம் உண்டு. இங்கு ஒரு ஹதீஸை மட்டும் கொண்டு வருகின்றேன்.
நபி ஸல் அவர்களின் தோழர்களிற் சிலர்ஒரு பயணம் செய்தார்கள். அறபிகளில் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்த இடத்தில் தங்கினார்கள். நபீ தோழர்கள் அங்கு வாழ்ந்த அறபிகளிடம் சாப்பிடுவதற்கு உணவு கேட்ட போது அவர்கள மறுத்து விட்டார்கள்.அந்நேரம் அவ்வறபிகளின் தலைவனுக்கு பாம்பு அல்லது தேள் கடித்து விட்டது. அவர்கள் அவருக்கு மருந்து செய்தும் பயன் கிடைக்கவில்லை. அப்போது அவர்களில் ஒருவர் தங்கியுள்ள கூட்டத்தினரிடம்இதற்கான பரிகாரம் இருக்கலாம் என்று சொன்னார். அவர்கள் அக்கூட்டத்தினரிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவனை பாம்பு தீண்டி விட்டது. எங்களால் முடிந்த பரிகாரம் செய்தும் பயனளிக்கவில்லை. உங்களிடம் ஏதேனும் பரிகாரம் உண்டா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் ஒருவர் அதற்கு நான் மந்திரிப்பேன். ஆயினும் நாங்கள் உங்களிடம் உணவு கேட்ட போது நீங்கள் உணவு தர மறுத்து விட்டீர்கள். ஆகையால் நீங்கள் ஏதேனும் தந்தால் மட்டுமே நான் மந்திரிப்பேன். (விஷம் இறக்குவேன்) என்று சொன்னார். இறுதியில் முப்பது ஆடுகள் கொண்ட ஓர் ஆட்டுப்படி கொடுப்பதென்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
அவர் தலைவனிடம் வந்து “ஸுறதுல் பாத்தஹஹ்“ அத்தியாயத்தை ஓதி பாம்பு கடித்த இடத்தில் துப்பினார். (உமிழ்தார்) அப்போது அவர் விலங்கிலிருந்து விடுபட்டவர் போல் உற்சாகத்துடன் எழுந்து நடந்து சென்றார். அப்போது செய்து கொண்ட ஒப்பந்தப்படி செயல்படுங்கள் என்று ஒருவர் சொன்னார்.இன்னுமொருவர் கிடைப்பதை பங்கு வைப்போம் என்றார். ஆயினும் நாம் ஒன்றுமே செய்வதில்லை. நபி ஸல் அவர்களிடம் விளக்கத்தைக் கூறி அவர்கள் சொல்வது போல் செயல்படுவோம் என்றார். அவ்வாறே நபி ஸல் அவர்களிடம் வந்து விபரத்தைச் சொன்னார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் “வமாயுத்ரீக அன்னஹா றுக்யதுன்“அது மந்திரமென்று உனக்கு எவ்வாறு தெரியும்? என்று கூறிவிட்டு நீங்கள் சரியாகவே செய்து விட்டீர்கள் என்று சொன்ன நபி ஸல் அவர்கள் அதைப் பங்கு வையுங்கள். எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் என்று சொல்லி விட்ட சிரித்தார்கள்.
(ஆதாரம் – புஹாரி,அறிவிப்பு – அபுஸயீத் றழி,
ஹதீஸ் இலக்கம் – 2276, 5007, 5736, 5749)
மேற்கண்ட இந்த ஹதீஸின் மூலம் பல அறிவுரைகள்கிடைக்கின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.
ஒன்று – “ஸுறதுல் பாத்திஹஹ்“ என்ற அத்தியாயத்தை ஓதி ஒருவனுக்கு வைத்தியம் செய்யும் போது அதற்கு “றுக்யதுன்“ மந்திரம் என்று சொல்லலாம். அவ்வாறு நபி ஸல் அவர்களே சொல்லியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்குர்ஆன் வசனத்துக்கு மந்திரம் என்று சொல்லக் கூடாதென்று கூறும் தம்பிமார் இந்த ஹதீஸை பக்க சார்பின்றி ஆய்வு செய்தால் உண்மை பளிச்சிடும்.
இரண்டு– திருக்குர்ஆன் ஓதி மந்திரிப்பதற்காக முன்கூட்டியே கூலி பேசலாம். அந்தக் கூலி பணமாகவும், பொருளாகவும், உணவாகவும் இருக்கலாம்.
மூன்று– திருக்குர்ஆனின் வசனங்கள் கொண்டு பாம்பு , தேள் கடி போன்றவற்றுக்கும், காய்ச்சல், தலையிடி, சோர்வு, கண்ணூறு போன்ற வியாதிகளுக்கும் மந்திரிக்கலாம்.
ஊதிப்பார்த்தல், திருக்குர்ஆன் வசனங்களை நீரில் ஓதியும், பீங்கான் போன்ற பாத்திரங்களில் எழுதி குடிக்கக் கொடுத்தும் வைத்தியம் செய்தல் “ஷிர்க்“ ஆன பாவமான காரியம் என்று சொல்லும் தம்பிமார் ஒரு முறை பரீட்ச்சித்துப் பார்த்தாவது சத்திய வழிக்கு வர வேண்டும்.
மேற்கண்ட ஹதீஸில் மந்திரித்த நபித் தோழர் பாத்திஹஹ் அத்தியாயம் கொண்டு மந்திரித்ததாக வந்திருத்தாலும் அது திருக்குர்ஆனின் வசனம் என்ற அடிப்படையில் ஆய்வு செய்தால் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் பாத்திஹஹ்அத்தியாயம் போன்ற தென்பது தெளிவாகும்.
பாத்திஹஹ்அத்தியாயம் கொண்டு மந்திரித்து வைத்தியம் செய்வதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாயிருப்பது போல் திருக்குர்ஆன் எந்த வசனம் கொண்டும் மந்திரித்து வைத்தியம் செய்யலாம் என்பதற்கு பின்வரும் திருவசனம் ஆதாரமாகஉள்ளது.
வநுநஸ்ஸிலு மினல் குர்ஆனி மாஹுவ ஷிபாஉன் வறஹ்மதுன் லில் முஃமினீன் (17 – 82)
“திருக்குர்ஆனில் இருந்து நோய்க்கு மருந்தையும்அருளையும் விசுவாசிகளுக்காக நாம் இறக்கியுள்ளோம்”.
இத்திருவசத்தில் வந்துள்ள“மின்“ என்ற சொல்லை மொழி இலக்கணப்படி ஆய்வு செய்தால் மேற்சொன்ன உண்மை தெளிவாகும்.
மேற்கண்ட “மின்“ என்ற சொல்லை “தப்யீழ்“ சில என்ற அர்த்தம் கொண்டும் “ஜின்ஸ்“ எல்லாம் என்ற அர்த்தம் கொண்டும் நோக்குவதற்கு சாத்தியம் உண்டு.
சில என்ற அர்த்தம் கொண்டு நோக்கினால் திருக்குர்ஆனின் சில வசனங்கள் மருந்தாகும் என்றும் எல்லாம் என்ற அர்த்தம் கொண்டு நோக்கினால் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் மருந்தாகும் என்று கருத்து வரும்.
எனவே திருக்குஆனின் ஒவ்வொரு வசனமும் பலநோய்களுக்கு மருந்தாகும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
“தல்ஸமாத்“ கலையில் மிகப் பிரசித்தி பெற்ற இமாம் பூனீ றஹ் அவர்கள் எழுதிய “ஷம்ஸுல் மஆரிபில் குப்றா“ என்ற நூலில் இது தொடர்பான விபரங்களைக் கண்டு கொள்ளலாம்.
சுருக்கம்
திருக்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு வசனத்தையும் மருந்தாகக் கொண்டு செயல்படலாம் என்பதும், திருக்குர்ஆன் கொண்டு மந்திரிப்பதற்காக முன் கூட்டியே கூலி பேசலாம் என்பதும், அந்தக் கூலி பணமகவும், பொருளாகவும், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளாகவும் இருக்கலாம் என்பதும் தெளிவாகி விட்டது.
பெரிய கத்தம்
“பெரிய கத்தம்“ என்று சில ஊர்களில்ஒரு வழக்கம் இருந்து வருகின்றது. ஆதாவது திருக்குர்ஆன் முப்பது பாகங்களையும் நாற்பது தரம் ஓதுதல் பெரிய கத்தம் ஓதுதல் என்று சொல்லப்படும். மொத்தம் 1200பாகங்கள் ஓத வேண்டும். இவ்வாறு ஓதி மரணித்தவர்களுக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கும் வழக்கம் பல ஊர்களில் இருந்து வருகின்றது.
மரணித்தவர்களுக்காக ஓதப்படும் கத்தம், பாத்திஹஹ் என்பவற்றின் நன்மை அவர்களுக்குச் சென்றடையும் என்ற தீர்க்கமான முடிவின் படி பெரிய கத்தம் ஓதினால் அதன் நன்மையும் அவர்களைச் சென்றடையவே செய்யும்.
மரணித்தவர்களுக்காக பெரிய கத்தம் ஓதப்படுவது போல் உயிரோடுள்ள வர்களுக்கும் ஓதப்படுகின்றது. ஓர் ஆலிமிடம் அல்லது ஒரு ஹாபிளிடம் பெரிய கத்தம் ஓதவேன்டுமென்று சொன்னால்அவர் கூலி பேசுவார். அவர் அவ்வாறு பேசினால் சொன்னவன் அவரைத் தவறாக்ப் புரிந்து கொண்டு நாளை வந்து முடிவு சொல்கின்றேன் என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்து இந்த ஆலிம்களினதும் ஹாபிள்களினதும் “நப்ஸ்“ இன்னும் அடங்கவில்லை.குர்ஆன் ஓவதற்குக்கூலி பேசுகின்றார்கள். இவர்களெல்லாம் ஆலிம்களா? ஹாபிள்களா? என்று ஆலிம்களையும் ஹாபிள்களையும் மிகக் கீழ்த்தரமாகப் பேசுவார். இது தவறு குர்ஆன் ஓதுவதற்கு முன்கூட்டியே கூலி சேலாம் என்பதற்கு ஹதீஸ்கள் ஆதாரங்களாக இருக்க ஆலிம்களையும் ஹாபிள்களையும் கீழ்த்தரமாகப் பேசுவது பெரும் குற்றமாகும்.
பெரிய கத்தம் ஓதி“தமாம்“ “கத்முல் குர்ஆன்“ நிறைவு செய்யும் நாளில் நாற்பது கொத்து அரிசியும் நாற்பது தேங்காயும் வழங்க வேண்டும். இன்றேல் குர்ஆனின் நன்மை மரணித்தவர்களைச் சென்றடையா தென்பது அர்த்தமற்றகூற்றாகும். ஆயினும் இது நற்செயலேயாகும். செய்தவனுக்கு நன்மை உண்டு.
(தொடரும்……)
***==***==***==***==***==***
தொடர் – 07
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ்
அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-
40ம் நாள் கத்தம்
மேற்கண்ட ஹதீஸ் போன்றே மரணித்தவர்கள 40 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அதனால் அந்த நாட்களில் அவர்களுக்காக உணவு கொடுக்கப்படுவதை அவர்கள விரும்புவதாவும் இதனால் ஸஹாபாக்கள் காலத்திலும் இந்த முறை இருந்து வந்ததாகவும் “பிக்கஸ்ஸுன்னஹ்“ 369ம் பக்கதில் வந்துள்ளது. எனவேதான் அந்த 40 நாட்களுக்கும் உணவு கொடுப்பது சிரமமாகும் என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் சில குறிப்பிட்ட நாட்கள் தெரிவு செய்யப்பட்டு நடைபெறுகிறது.
வருட கத்தம்
மரணித்தவர்களின் ஆன்மா வருடா வருடம் தனது வீட்டுக்கு வருகை தருகின்றது என்று “தகாயிகுல் அக்பார்“ போன்ற கிரந்தங்களில் வந்துள்ளாலும்,நபி ஸல் அவர்கள் வருடந்தோரும்ஷுஹதாஉகளின் கப்றுகளுக்குச் சென்று துஆ செய்து விட்டு வருவதாக இமாம் தபறானி அவர்கள் தங்களின் “அவ்ஸத்“ என்ற ஹதீஸ் கிதாபில் குறிப்பிட்டுருப்பதாலும் வருட கத்தம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அவ்ஸத்,பாகம் – 03,பக்கம் – 241
கேள்வி
மையித் வீட்டினர் தங்களின் குடுப்பத்தில் மரணித்தவரை நினைத்து கவலைப்பட்டவர்களாக இருப்பார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்காக பகத்து வீட்டவர்கள்உணவு சமைத்துக் கொடுப்பது “ஸுன்னத்“ என்று அனைத்து மத்ஹபு கிதாபுகளிலும் வந்திருக்கும் போது மையித் வீட்டினரே மற்றவர்களை அழைத்து கத்தம் ஓதுகின்றோம் என்ற பெயரில் உணவு கொடுப்பது சரியா?
பதில்
மையித் வீட்டினருக்கு பக்கத்து வீட்டினர் உணவு தயாரித்துக் கொடுப்பது “ஸுன்னத்“ என்று மத்ஹபுடைய கிதாபுகளில் சொல்லப்பட்டிருப்பதற்குக் காரணம் என்னவெனில் வீட்டினர் தனது குடும்பத்திலுள்ள ஒருவர் தங்களை விட்டுப் பிரிந்து விட்டாரே என்ற கவலையில் இருந்து கொண்டு உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள் என்ற காரணத்தினாலாகும். இக்கருத்திலேயே ஜஃபர் (றழி) அவர்கள் மூத்தா யுத்தத்தில்ஷஹீத் ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி நபி ஸல் அவர்களிடம் வந்து சேர்ந்த போது ஜஃபர் (றழி) அவர்களின் குடும்பத்தாருக்கு உணவு தயாரித்துக் கொடுங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவர்களுக்கு கவலை தரக்கூடியது வந்து விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் மிஷ்காத்,திர்மீதி இரு நூல்களிலும் வந்துள்ளது.
மிஷ்காத்,ஹதீஸ் இலக்கம் – 1739,
திர்மீதி,ஹதீஸ் இலக்கம் – 998
ஆனால் தம்பிமார் சொல்வது போல் மையித் வீட்டில் அறவே உணவு தயாரிக்கலாகாது என்பது கருத்தல்ல. அவர்கள் கூறுவது போல் முற்றிலும் தடையாக இருந்திருக்குமானால் மேற்கண்ட ஹதீஸ்களில் வந்திருப்பது போல் ஆயிஷா நாயகி றழி அவர்கள் மையித் வீட்டில் “தல்பீனிய்யஹ்“ உணவு சமைத்திருக்கமாட்டார்கள். மேலும் மையித்தை அடக்கியவுடன் நபி ஸல் அவர்களும், ஸஹாபாக்களும்அந்த மையித் வீட்டுக்கு உணவருந்தச் சென்றிருக்க மாட்டார்கள். மேலும் இம்றான் இப்னு ஹுஸைன் றழி அவர்கள் தங்களை நல்லடக்கம் செய்து விட்டுத் திரும்பி வருபவர்களுக்கு ஒட்டகம் அறுத்து உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தனது குடும்பத்தாரிடம் “வஸிய்யத்“ செய்திருக்கமாட்டார்கள். மேலும் தங்களை அடக்கம் செய்து விட்டுவருவோருக்கு ஆடு அறுத்து உணவு கொடுக்கவேண்டுமென்று அபுதர் (றழி) அவர்கள் “வஸிய்யத்“ செய்திருக்கமாட்டார்கள்.
ஆனால் ஜாஹிலிய்யஹ் காலத்து மக்களிடம் இருந்து வந்தது போன்று மரணித்தவரை நினைத்து ஒப்பாரி வைப்பதும், அதற்காக கூலிக்கு மாரடிப்போரை கூலிக்குபிடிப்பதும் அவர்களுக்காக மையித் வீட்டில் உணவு தயார் செய்வதும்முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். இதையே மரணித்தவனின் வீட்டில் பலர் ஒன்று கூடுவதையும் அவர்களுக்காக மையித் வீட்டார் உணவு சமைப்பதையும் ஒப்பாரியில் உள்ளதென்று நாங்கள் கருதுகின்றோம் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இப்னுமாஜஹ்,ஹதீஸ் இலக்கம் – 1612
இது குறித்து “பிக்ஹ்“ கிதாபுகளில்“ஹறாம்“ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த ஜாஹிலிய்யஹ் காலத்து மக்களிடம் இருந்த பழக்கம் இன்றும் முஸ்லிமல்லாத ஏனைய மதத்தவர்களிடம் இருந்து வருவதைக் காணமுடியும்.இது போன்ற அமைப்புஇல்லாதிருக்கும் பட்சத்தில் மரணித்தவரின் வீட்டில் உணவு சமைப்பதில் எவ்வித தடையுமில்லை.
பிக்ஹுஸ்ஸுன்னஹ்,பக்கம் – 370
மிஷ்காத்,பாகம் – 11,பக்கம் – 223
மேலும் ஸஹாபாக்கள் காலத்திலும் மரணித்தவர்களின் வீட்டில் மக்கள் ஒன்று கூடி உணவருந்தும் அமைப்பு இருந்து வந்ததென்றுஅபுபக்கர் றழி அவர்களின் அருமை மகன் அப்துல்லாஹ் றழி அவர்களும் உமர் றழி அவர்களும் குறிப்பிடும் செய்தி இப்னுகுதாமா றழி அவர்கள் எழுதிய “முக்னீ“ என்ற கிரந்தத்தில்பாகம் –02, பக்கம் – 215ல் வந்துள்ளது.
எச்சரிக்கை
நபி ஸல் அவர்களின் தீர்க்க தரிசனத்தால் பிற்காலத்தில் நடக்கவுள்ள விபரீதங்கள் பற்றி விளக்கமாக முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.அவற்றில் சிலதை இங்கு எழுதுகின்றேன்.
முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்திலுள்ள நல்லவர்களும்மரணித்து விடுவார்கள். இப்படியே படிப்படியாக “ஸாலிஹீன்“ நல்லவர்கள் சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகள் போன்ற அல்லது பேரீத்தம் பழச் சக்கைகள் போன்றகுப்பைகள்தான் எஞ்சியிருப்பர். (அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே எல்லாம் அறிந்த மேதைகள் என்று சொல்லிக் கொள்வர்.) ஆனால் அல்லாஹ்“ அவர்களை கணக்கெடுக்கவே மாட்டான். என்று நபி ஸல் அவர்கள அருளினார்கள்.
புஹாரி,பாகம் – 02,ஹதீஸ் இலக்கம் – 952
பாடம் – கிதாபுர்ரிகாக்
கடைசி காலத்தில அறிவும், தெளிவும், அனுபவமுதிர்ச்சியும் இல்லாத ஒரு கூட்டம் வருவார்கள். அவர்கள் நபி ஸல் அவர்களின்ஹதீஸில் இருந்தே ஆதாரம் எடுத்துப் பேசுவார்கள். ஆனால் அவர்களின் ஈமான் (உதட்டளவில்தான் இருக்குமேயன்றி) உள்ளத்தில் நுழைந்திருக்காது. மேலும் அவர்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள்.
புஹாரி,ஹதீஸ் இலக்கம் – 3611,பாடம் – கிதாபுல்மனாகிப்
முஸ்லிம், பாகம் – 01,பக்கம் – 342
இந்த உம்மத்தில் பிற்காலத்தில் வாழும் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை நிந்திக்க – சபிக்க ஆரம்பித்தார்களானால் (கலியுகம் வந்துவிட்டதாக பொருள். ஆகவே) கியாமத் நாளை எதிர்பாருங்கள் என்று நபி ஸல் அவர்கள் அருளினார்கள்.
மிஷ்காத்,பக்கம் – 470,ஹதீஸ் இலக்கம் – 5450
திர்மிதீ,ஹதீஸ் இலக்கம் – 2211
மேலே எழுதிக்காட்டிய மூன்று ஹதீஸ்களையும்,இதே கருத்தில் வந்துள்ள இன்னும் அநேகமானஹதீஸ்களையும் ஆய்வு செய்து பார்த்தால் நபி ஸல் அவர்கள் சுட்டிக்காட்டிய பிற்காலம் (கலியுகம்) என்பது வேறு எந்த காலமும் அல்ல நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக்காலத்தையே குறிப்பிட்டுள்ளார்கள் என்று திட்டவட்டமாகக் கூறலாம். ஏனெனில் நபி ஸல் அவர்கள் கோடிட்டுக் காட்டிய பெரும்பான்மையா விஷயங்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதை நிதர்சனமாக காணமுடிகின்றது.
உதாரணமாக “சியாறதுல்குபூர்“சமாதிகளைத் தரிசித்தல். விசுவாசிகளின் அடக்கவிடங்களுக்குச் சென்று அவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும் யாதாறகவ்மின்முஃமினீன் வஇன்னா இன்ஷாஅல்லாஹுபிகும் லாஹிகூன்“என்று ஸலாம் கூறுவது நபி ஸல் அவர்களின் “ஸுன்னத்“ நல்ல வழக்கமாகும்.
இவ்வழக்கம் ஸஹாபாக்கள், நல்லடியார்கள், வலீமார்கள், இமாம்கள் அனைவரிடமும் இருந்து வந்துள்ளது. குறிப்பாக அவ்லியாஉகள் பிரசித்தி பெற்ற மகான்கள் சமாதிகள் ஸியாறத் செய்யப்பட்டு வந்தன.
ஆனால் சிறப்பான இவ்வழக்கம் தற்போது “ஷிர்க்“ இனைவைத்தல் என்று விஷமப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. சியாறத் செய்வது ஒரு புறம் இருந்தாலும் வலீமார்களின் சமாதிகள் உள்ள பாதையால் செல்வதும் சியாறங்கள் உள்ள பள்ளிகளில் தொழுவதும் சியாறங்கள் உள்ள ஊர்களுக்குச் செல்வதும் கூட “ஷிர்க்“ என்றும் பாவமான காரியம் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.
நபிமார், வலீமார்களைக் கண்ணியப்படுத்துமாறு அல்லாஹ்வும் நபி ஸல் அவர்களும் கூறிய படி ஸஹாபாக்கள், நல்லடியார்கள், வலீமார்கள், இமாம்கள் ஆகியோர் நபிமார்களினதும் வலீமார்களினதும் சியாறங்களை பரிபாலிப்பதன் மூலமும் தரிசிப்பதற்காக செல்லும் பக்தர்களுக்கு தங்குமிடம் கொடுத்து உதவுவதன் மூலமும் கப்ரின் மீதி சந்தணம் புசுதல் போர்வை போற்றுதல் மலர் தூவுதல் அத்தர் புசுதல் மூலமும் அவர்களின் நினைவு தினங்களில் கொடியேற்றி கந்தூரி கொடுப்பதன் மூலமும் நபிமார் வலீமார்களைக் கண்ணியப்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் இன்று இவையாவும் “ஷிர்க்“ என்றும் பாவமான காரியம் என்றும் எச்சரிக் கப்படுகின்றது.
நபீமார் ,வலீமார் ஆகியோரின் வரலாறுகளைத் திருக்குர்ஆனில் கூறிக் காட்டிய அல்லாஹ்வும், அவர்களின் வரலாறுகளைச் சொல்லிக் காட்டிய நபி ஸல் அவர்களும் மக்களுக்கு முன்னோர்களின் வரலாறுகளைச் சொல்லிக் காட்டுவதால் அவர்களுக்கு பல பாடங்களும் படிப்பினைகளும் உண்டு என்று சொன்னதற் கிணங்க “மௌலித்“ என்ற பெயரில் நபிமார்,வலீமார்களின் வரலாறுகளை முன்னோர் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் இன்று மௌலித் ஓதுதல் “ஷிர்க்“ என்றும் பாவமான காரியம் என்றும் விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
இப்போது சொல்லிக் காட்டிய நற்கருமங்களைத் தடை செய்தும்அவை பாவமான காரியங்கள் என்று பிரச்சாரம் செய்தும் வருகின்றவர்களே மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் சுட்டிக்காட்டப்பட்ட ஷெய்தான்கள் ஆவர்.அவர்கள்தான் இப்னுதைமிய்யஹ்வின் கொள்கை வழியிலும், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கொள்கை வழியிலும் செல்லும் கொள்கைக் குருடர்களாவர். அவர்கள் தற்காலத்தில் வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். சுருக்கச் சொல்வதாயின் இவர்கள்தான் “தீன்“ மார்க்கத்தை அரிக்கும் கறையான்களும், சுண்டெலிகளும் என்று சொல்ல வேண்டும். இவர்களையே நான் தம்பிமார்கள் என்று இந்நூலில் சுடிக் காட்டுகின்றேன்.
இந்த தம்பிமார்களில் கூலிக்கு மாரடிப்பவர்களும் உள்ளனர். கொள்ளை விளக்கம் இன்றிக் கூச்சலிடுபவர்களும் உள்ளனர்.கூலிக்கு மாரடிப்போரைத் திருத்துவது மிகக் கடினமாகும்.அது அசாத்தியமென்று சொன்னால் கூட மிகையாகாது. ஆனால் இவர்கள் பணத்துக்காக மார்க்கத்தை விற்கும் வியாபாரிகள் வியாபாரத்தில் நட்டம் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள்.
ஆனால் கொள்கை விளக்கமின்றிக் கூச்சலிடுவோர் சத்தியத்தைக் கண்டறியும் தூய நோக்கோடு ஆய்வு செய்வார்களாயின் அல்லாஹ் அவர்களுக்கு சத்திய வழியைக் காட்டிக் கொடுப்பான்.
எனவே நபி ஸல் அவர்கள் சுட்டிக் காட்டிய வழிகேடர் வழிசெல்லமல் அவ்லியாஉகள்,நல்லடியார்கள் வழிசென்று நற்பாக்கியம் பெறுவோம் அல்ஹம்துலில்லாஹ்!
(தொடரும்…………….)
***==***==***==***==***==***
தொடர் – 06…
-சங்கைக்குரிய ஷெய்குனாமௌலவி அல்ஹாஜ்
அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-
மரணித்தவனின் பெயரால் உணவு வழங்குவதற்கு ஆதாரம் உண்டா?
நபி ஸல் தங்களின் மனைவி கதீஜஹ் நாயகீ அவர்கள் மரணித்த பின் அதிகம் அவர்களை நினைவு படுத்துபவர்களாயிருந்தார்கள். சில சமயங்களில் ஆட்டை அறுத்து அதைத் தனித்தனி உறுப்புகளாக வெட்டி கதீஜஹ் நாயகியின் தோழிகளுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்பார்கள் என்று ஆயிஷஹ் நாயகி றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புஹாரீ, பாகம் – 01,பக்கம் – 539,ஹதீஸ் இலக்கம் –3818
முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம் –2435.
பிக்ஹுஸ்ஸுன்னஹ்,பக்கம் –368
மிஷ்காத்,பக்கம் –573,ஹதீஸ் இலக்கம் –6186
திர்முதி,ஹதீஸ் இலக்கம் –3875)
ஆயிஷா றழி அவர்களின் குடும்பத்தவர்களில் எவரேனும் மரணித்து விட்டால் அதற்காக பெண்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு அந்த மையித்தின் வீட்டவர்கள், அவர்களின் உறவினர் தவிர மற்றவர்கள் போய்விடுவார்கள். அப்போது ஒரு சட்டியில் பாயாசம் தயார் செய்யுமாறு கூறுவார்கள். பின்னர் ரொட்டி சமைக்கப்பட்டு அதன் மீது அந்தப் பாயாசம் ஊற்றி அந்தப் பெண்களைப் பார்த்து சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள். இந்த உணவுக்கு “தல்பீனிய்யஹ்” என்று பெயர். ஏனெனில் இந்த உணவு நோயாளிகளின் இதயத்திற்கு வலுவூட்டும் என்றும், கவலையைப் போக்கும் என்றும் நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்றும் கூறுவார்கள்.
(புஹாரி,ஹதீஸ்இலக்கம்–5417,பாடம்–கிதாபுல்அதஇமஹ்)
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்கள் மூலம் மரணித்தவனின் பெயரால் உணவு வழங்கலாம் என்பது தெளிவாகி விட்டது.
கேள்வி
மையித்தை அடக்கிய அன்று ஓதப்படும் முதலாம் கத்தம், மற்றும் அடுத்தடுத்துச் செய்யப்படுகின்ற 3, 7, 15, 30, 40 ஆகிய தினங்களில் ஓதப்படுகின்ற கத்தங்கள், மற்றும் வருடக்கத்தம் ஓதுவதற்கும் ஆதாரம் உண்டா?
பதில்
ஒரு ஜனாசஹ்வில் கலந்து கொள்வதற்காக நபி ஸல் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நபி ஸல் அவர்கள் கப்றின் மேல் நின்று கொண்டு தோண்டுபவனைப் பார்த்து மைய்யித்தின் கால் பக்கமும், தலைப்பக்கமும் குழியை விசாலப்படுத்துமாறு யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து திருப்பிய போது மரணித்தவரின் மனைவி அனுப்பி வைத்த அழைப்பாளர் நபி ஸல் அவர்களை (உணவு உண்பதற்காக) அழைத்தார்கள். உடனேநபி ஸல் அவர்கள் சென்றார்கள்.நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. நபி ஸல் அவர்கள் உணவில் கை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கை வைத்தனர். பிறகு அனைவரும் சாப்பிட்டார்கள் என்று ஆஸிம் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்,ஹதீஸ்இலக்கம்–3332,
மிஷ்காத்,பக்கம் –544,ஹதீஸ்இலக்கம்–5942)
இம்றான் இப்னு ஹுஸைன் றழி என்ற ஸஹாபி அவர்கள் தங்களின் மரணத் தறுவாயில் பின்வருமாறு “வஸிய்யத்” செய்தார்கள். நான் மரணித்து என்னைக் கப்றில் அடக்கம் செய்து பிறகு மக்கள் திரும்பி வந்தால் நீங்கள் ஒட்டகம் அறுத்து, அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும். என்று கூறினார்கள்.
(தபகாத் இப்னுஸஃது,பாகம் –07,பக்கம் –12)
ஸஹாபாக்களில் மிகப் பிரசித்தி பெற்ற அபூதர் றழி அவர்கள் தங்களின் மரணத்தருவாயில் தங்களின் பெண் மகளை அழைத்து, நான் மரணித்தால் என் தொழுகையில் கலந்து கொள்வதற்கு மக்கள் வருவார்கள். அதன் பின் என்னை நல்லடக்கம் செய்து விட்டு திரும்பி நமது வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து உணவு கொடுங்கள் என்று “வஸிய்யத்” செய்தார்கள். இதுப்பற்றி கில்காலீ என்ற நபி தோழர் கூறுகையில் நாங்கள் பதினான்கு பேர் அபூதர் றழி அவர்களின் ஜனாசஹ் தொழுகையிலும், நல்லடக்கத்திலும் பங்கு பெற்றினோம். பிறகு அபூதர் றழி அவர்களின் மகன் அழைத்தற்கிணங்க உணவு உண்ணவும் சென்றோம் என்று கூறினார்கள். இந்த நிகழ்வை இப்னு ஜரீர் அத்தபரீ றழி அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தாரிகுல் உமம் வல்முலூக்,பாகம் –02,பக்கம் –679)
இப்போது கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களும் மரணித்தவனை நல்லடக்கம் செய்த அன்று ஓதப்படும் முதலாம் கத்தத்தை தெளிவு படுத்துகின்றது.
மேற்கண்ட மூன்றுஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டே மையித்தைஅடக்கிய அன்றிரவு இருட்டுக்கத்தம் அல்லது முதலாம் கத்தம் என்ற பெயரில் மரணித்தவனின் வீட்டில் உறவினர், நண்பர்களுக்கு உணவு வழங்கப் படுகிறது. அதோடு உலமாஉகளையும் அழைத்து குர்ஆன் முழுவதும், அல்லது யாஸீன் மட்டும் ஓதப்படுகின்றது.
மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் ஒருவன் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட அன்று மரணித்தவனின் வீட்டில் ஜனாசஹ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்ததற்கு மட்டும்தான் ஆதாரம் உண்டேயன்றி கத்தம் ஓதியதற்கு ஆமதாரமில்லை என்று தம்பிமார் கூறலாம்.
அந்த தம்பிமாருக்கு நாம் பின்வருமாறு பதில் சொல்வோம்.
தம்பிமார்களே!மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் கத்தம் ஓதியதற்கு ஆதாரம் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதேபோல் ஒன்ரும் ஓதவில்லை என்பதற்கோ, ஒன்றும் ஓதக் கூடாதென்பதற்கோ மேற்க்கண்ட ஹதீஸ்களில் ஓர் ஆதாரம் கூட இல்லை என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
சாப்பிடுவதற்காக ஒன்று கூடிய ஸஹாபாக்கள் திருக்குர்ஆன்,அல்லது யாஸீன் ஓதி துஆ ஓதியிருப்பதற்கும் சாத்தியமுண்டு. அல்லது ஒன்றுமே ஓதாமல் துஆ மட்டும் ஓதியிருப்பதற்கும் சாத்தியமுண்டு. அல்லது ஒன்றுமே ஓதாமல்சாப்பிட்டுச் சென்றிருப்பதற்கும் சாத்தியமுண்டு. இம்மூன்றுக்கும் சாத்தியமிருக்கும் போது ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு நிற்பது நியாயமாகாது.
மேற்கண்ட மூன்று ஹதீங்களும் அவர்கள் குர்ஆன் அல்லது யாஸீன் ஓதினார்கள் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை என்பதால் அவர்கள ஒன்றும் ஓதாமல் சாப்பிட்டுக் கலைந்தார்கள். என்று கொள்ள முடியாது.
ஏனெனில் மனப்பக்குவத்துடன் ஹதீஸ் கலை பற்றி ஆய்வு செய்தால் ஹதீஸ் என்பது இரண்டு விதமாக வரும். ஒன்று ஒரு நிகழ்வு பற்றிக் கூறும் ஹதீஸ் அந்த நிகழ்வின் போது இடம் பெற்ற எல்லாஅம்சங்களையும் சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்கும். அல்லது சில அம்சங்கள் விடப்பட்டதாயிருக்கும்.
உதாரணமாக மேற்கண்ட முன்று ஹதீஸ்களை மட்டும் ஆய்வு செய்தாற் கூட இவ்வுண்மை தெளிவாகிவிடும்.
ஒருவர் சாப்பிடுமுன் கை கழுவுதல், பிஸ்மிச்சொல்லிச் சாப்பிடுதல் சாப்பிட்டபின் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லுதல் என்பன மார்க்கமாக்கப்பட்ட விடயங்களாகும். ஸஹாபாக்கள் மார்க்கப்பற்றும் பேணுதலும் உள்ளவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆயினும் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் அவர்கள் கை கழுவியதாகவோ பிஸ்மிச் சொன்னதாகவோ அல்ஹம்துலில்லாஹ் சொன்னதாவோ கூறப்படவில்லை.
இதனால் அவர்கள் கை கழுவவில்லை என்றோ பிஸ்மிச் சொல்லவில்லை என்றோஅல்ஹம்துலில்லாஹ் சொல்லவில்லைஎன்றோ கெள்ள முடியாது.
இதே போல் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் திருக்குர்ஆன் அல்லது யாஸீன் ஓதியதாக கூறப்படாவிட்டாலும் மார்க்கப்பற்றும், பேணுதலும் உள்ள ஸஹாபாக்கள் மரணித்தவருக்காக ஏதாவது ஓதியிருப்பார்கள். இவருக்காக துஆ செய்தும் இருப்பார்கள் என்று கொள்வதே சிறந்தது.
மையித்தை அடக்கிய அன்று ஓதப்படும் முதலாம் கத்தம் அல்லது இருட்டுக கத்தம் என்பதற்கும் அன்று மரணித்தவனின் வீட்டில் சோறு , கறி சமைத்து உறவினர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களும் ஆதாரங்களாக உள்ளன.
3ம் நாள் கத்தம்
நபி ஸல் அவர்களின் அருமை மகன் இப்றாஹீம் றழி அவர்கள மரணித்து மூன்றாம் நாள் அபுதர் றழி அவர்கள் உலர்ந்த பேரீத்தம் பழம், பால், தொலிக்கோதுமை ரொட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து நபி ஸல் அவர்களின் சமூகத்தில் வைத்தார்கள். உடனே நபி ஸல் அவர்கள் அல்ஹம்து ஸுறஹ்வை ஒருதரமும், குல்ஹுவல்லாஹ் ஸுறஹ்வை மூன்று தரமும் ஓதி கையை உயர்த்தி பிரத்தித்து விட்டு கையை முகத்தில் தடவினார்கள். பிறகு அபுதர் அவர்களிடம் இதை மக்களுக்கு பகிர்ந்து விடுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
(பதாவா அர்வஹன்தி தஸ்ஹீஹுல்அகாயித்,பக்கம் – 128)
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே முன்னோர் மூன்றாம் கத்தம் நடத்தி வந்துள்ளார்கள்.இந்த ஹதீஸ் “ழயீப்“என்று தம்பிமார் சொன்னாலும் “ழயீப்“ ஆன ஹதீஸ் கொண்டு“பழாயிலும் அஃமால்“மேலதிக வணக்கங்கள் செய்யலாம் என்பதை ஸுன்னத்வல் ஜமாஅத் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளர்.
7ம் நாள் கத்தம்
மரணித்தவர்கள் நிச்சயமாக தங்களின் கப்றுகளில் 7 நாட்கள் குழப்பத்திலாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அந்த ஏழு நாட்களில் தங்கள் பெயரால் உணவு கொடுக்கப்படுவதை விரும்புவர்களாக இருக்கின்றார்கள் என்று தாஊஸ் அவர்களைத் தொட்டும் இமாம் அஹ்மத் றழி அவர்கள் தங்களின் “சுஹ்து“ என்ற நூலில் அபு நயீப் அவர்கள் தங்களின் “ஹில்யஹ்“ என்ற நூலில் கூறியுள்ளார்கள் என்று “ஷர்ஹுஸ்ஸுதூர்“என்ற நூலின் 139ம் பக்கத்திலும் “பிக்கஸ்ஸுன்னஹ்“ என்ற நூல் 369ம் பக்கத்திலும் “ஹாவீ“ பாகம் – 02 பக்கம் 178இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹதீஸை இமாம் இப்னு ஹஜர் றழி அவர்களும் “ஸஹீஹ்“ ஆனதென்று சொல்லியுள்ளார்கள்.
மேலும் நிச்சயமாக கப்றாளிகளைத் தொட்டும் செய்யப்படும் தானதருமங்கள் அவர்களின் கப்றுகளில் உள்ள சூட்டை (உஷ்ணத்தை) அமர்த்து விடும் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக “உக்பஹ்“ றழி அவர்களால் அறிவிக்கப்பட்டு தப்றானியில் பதிவாகியுள்ள ஹதீஸ் (பிக்கஸ்ஸுன்னஹ் பக்கம் 368) இங்கு சிந்தனைக்கு எடுக்கப்படவேண்டியதாகும்.
மேலும் 7 நாட்கள் எணவு கொடுக்கும் வழக்கம் ஸஹாபாக்கள் காலம் தொட்டு இது கால வரை மக்கஹ் மதீனஹ்வில் நடந்து வருகின்றது என்று “ஹாவி“ என்ற நூல் பாகம் – 02 பக்கம் 194ல் இமாம் ஸுயுதீ றழி அவர்க்ள குறிப்பிட்டுள்ளார்கள்.
தொடரும்………..
***==***==***==***==***==***
தொடர் – 05
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி
அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
யாரை நம்புவது
யார் வழி நடப்பது?
அல்லாஹ்வும், அவனின் திருத்தூதரும், மேற்கண்ட பிரசித்தி பெற்ற இமாம்களும் மரணித்தவர்களுக்காக குர்ஆன்,கத்தம், பாத்திஹஹ் என்பன ஓதி அதன் நன்மையை சேர்த்து வைக்ககலாம் என்று தெளிவாகச் சொல்லி யிருப்பதை நம்புவதா? அவர்களின் வழியிற் செல்வதா? அல்லது வஹ்ஹாபித் தம்பிமார் சொல்வதை நம்புவதா? அவர்களின் வழியிற் செல்வதா? இதற்கு நான் விடை எழுதத் தேவையில்லை. ஆழமான அறிவும், ஆய்வுத்திறனும் உள்ளவர்களுக்கு இதற்கு விடை தெரியும். கருங்கல்லுக்கும், இரத்தினக்கல்லுக்குமுள்ள வித்தியாசம் எவருக்கும் தெரிந்ததே. இமாம்களில் எவரும் பணத்துக்காகவோ,பட்டம் பதவிக்காகவோ எந்த ஒரு சட்டமும் கூறவில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி
திருக்குர்ஆன் ஓதி தமாம் செய்யும் போது அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் ஓதுவதும், வஇலாஹுகும் இலாஹுன்வாஹித் என்று தொடரும் வசனங்கள் ஓதுவதும், அதன் பின் “அல்லாஹும்ம ஸல்லி அப்ழல ஸலாதின் அலா அஸ்அதி மக்லூகாதிக” என்று ஆரம்பமாகும் ஸலவாத் ஓதுவதும், “பிஅவ்திவ்வ மிஸ்மின் இக்ற அன்பிபிதாயதி”என்றுஆரம்பமாகும்பாடல்ஓதுவதும், இறுதியில் துஆ ஓதுவதும் வழக்கத்தில் உண்டு. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கற்றறிந்த மேதைகள் இவ்வழக்கத்தைச் செய்து வருகின்றார்கள்.
மேற்கண்ட இவ்வழக்கம் நாடுகளைப் பொறுத்தும், ஊர்களைப் பொறுத்தும் வித்தியாசப்படுவதும் உண்டு. இவ்வாறு செய்வதற்கு ஆதாரம் உண்டா?
பதில்
ஒரு விடயம் பற்றி திருக்குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ, விலக்கல் வரவில்லையானால் அது ஆகும் என்பதே சட்டக்கலை மேதைகளின் தீர்க்கமான முடிவாகும். இந்த முடிவின்படி திருக்குர்ஆன் ஓதி தமாம் செய்யும் போது மேற்கண்டவை ஓதக்கூடாதென்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ, ஓர் ஆதாரம் கூட இல்லை. இவை கூடாதென்று எந்த ஒரு விலக்கலும் வரவில்லை. ஆகையால் மேற்கண்டவை ஓதுவதற்கு ஆதாரம் தேவையில்லை.
ஊர்வழக்கம், ஊர் சம்பிரதாயம் என்பது மார்க்கத்துக்கு முரணில்லாத்தாயின்அதை செய்வதற்கு தெளிவான ஆதாரம் தேட வேண்டிய அவசியமில்லை.
வஹ்ஹாபித்தம்பிமார் கண்டதெற்கெல்லாம் திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் ஆதாரம் கேட்பது, ஒருவன் தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? இரண்டாவதுஎன்ன செய்ய வேண்டும்? மூன்றாவது என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு திருக்குர்ஆனில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் ஆதாரம் கேட்பது போன்றாகும்.
ஆயினும் குர்ஆன் தமாம் செய்யும் போது மேற்கண்ட ஓதற்களிற் சில ஓதல்கள் ஓதுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலதை இங்கு எழுதுகின்றேன்.
நபி ஸல் அவர்கள் பள்ளிவாயலில் இருந்த சமயம் ஒருவர் அங்கு வந்து தொழுதார். தொழுது முடிந்தவுடன் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக! எனக்கு கிருபை செய்வாயாக! என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் தொழுபவரே அவசரப்பட்டுவிட்டீர். தொழுது முடித்து (துஆவுக்காக) அமர்ந்தால் அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான வார்த்தைகளால் புகழ்வீராக! இன்னும் என்மீது ஸலவாத் சொல்லி அதன் பிறகு அவனிடம் பிராத்திப்பீராக! என்று கூறினார்கள். இந்நிகழ்வு நடந்த சிறிது நேரத்தில் இன்னோருவர் வந்து தொழுதார். அதன் பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி ஸல் அவர்கள் மீது ஸலவாத் சொன்னார். அப் போது நபி ஸல் அவர்கள் அவரிடம் தொழுதவரே! நீ பிராத்தனை செய்தால் உமது துஆ ஏற்றுக் கொள்ளப்படும்என்று கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்,பாகம் –06,பக்கம் –18,ஹதீஸ் இலக்கம் –3476
நஸயீ,பாகம் – 03,பக்கம் – 44,ஹதீஸ் இலக்கம் –1284,
பாடம் – பாபுத் தம்ஜீத்
மிஷ்காத்,பக்கம் – 80,ஹதீஸ் இலக்கம் –930)
நிச்சயமாக பிராத்தனைகள் யாவும் வானம் பூமிக்கிடையே தடுத்து வைக்கப்படுகின்றன. உமது நபியின் மீது ஸலாவத் சொல்லும் வரை அது வானத்தின் பால் உயராது என்று உமர்(றழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(திர்மிதி,பாகம் –02,பக்கம் –356,ஹதீஸ் இலக்கம் –486
நஸயீ,ஹதீஸ் இலக்கம் –1309,
மிஷ்காத்,பக்கம் – 87,ஹதீஸ் இலக்கம் –938)
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸ் துஆ பிராத்தனையைத்துவங்கும் போது ஸலவாத் ஓதுவது அவசியம் என்பதையும், இரண்டாவது ஹதீஸ் துஆ ஓதி முடித்த பின் ஸலவாத் சொல்வது அவசியம் என்பதையும் காட்டுவதுடன் ஸலவாத் சொல்லப்படாத துஆ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இவ்விரு ஹதீஸ்களின் அடிப்படையிலேயே துஆ ஓதுமுன்னும், அதன் பின்னும் ஸலவாத் சொலவது ஸுன்னத் என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.
தொழுகைக்கு பின்னால் துஆ ஓதினாலும், அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்தில் துஆ ஓதினாலும் பொதுவாக துஆ ஓதும் போதெல்லாம் அதற்கு முன்னும், பின்னும் ஸலவாத் ஓதுவது துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான பிரதான நிபந்தனையாகும்.
இதைக் கருத்திற் கொண்டே குர்ஆன் ஓதி மதாம் செய்யும் போது ஸலவாத் சொல்வதை முன்னோர் வழக்கமாக்கி வந்துள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அவனை அழையுங்கள் அவற்றை(வஸீலஹ்வாக) வைத்து அவனிடம் பிராத்தியுங்கள்.
(அத்தியாயம் –07,வசனம் – 180)
இத்திருவசனத்தைஆதாரமாகக் கொண்டே குர்ஆன் ஓதி தாமாம் செய்து துஆ ஓதுமிடங்களில் “அஸ்மாஉல் ஹுஸ்னா” ஓதுவதை முன்னோர் வழக்கமாக்கி வந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் “இஸ்முல் அஃளம்” என்பது பின்வரும் இரு வசங்களிலும் இருக்கின்றது. ஒன்று“வஇலாஹுகும் இலாஹுன் வாஹிதுன் லாஇலாஹ இல்லாஹூவர்றஹமானுர் றஹீம்”என்ற பகறஹ் ஸூறஹ்வின் 163வது வசனமாகும். இரண்டு ஆலஇம்றான் அத்தியாயத்தின் ஆரம்பமான “அலிப்லாம்மீம் அல்லாஹு லாயிலாஹ இல்லாஹூவல் ஹையுல்கையூம்” என்ற வசனமாகும்.
என்று நபி ஸல் அவர்கள் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஷ்காத்,பக்கம் –200,ஹதீஸ் இலக்கம் –2291
அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம் –1496
மேற்கண்ட இரண்டு வசங்களிலும் “இஸ்முல் அஃளம்” உள்ளடங்கிஇருப்பதாக நபீ ஸல் அவர்கள் கூறியுள்ளதால் ஸுன்னத்வல் ஜமாஅத் அறிஞர்கள் கத்தம், பாத்திஹஹ் திருக்குர்ஆன் தமாம் நிகழ்வுகளின் போது மேற்கண்ட இரு வசங்களையும் ஓதிவந்துள்ளார்கள்.
குறிப்பு
“இஸ்முல் அஃளம்” எள்றால் வலுப்பமிகு திருநாமம் என்று பொருள் வரும். இத்திருநாமம் கொண்டு கேட்கப்படும் பிராத்தனை சந்தேகமின்றி ஏற்றுக் கொள்ளப்படும். இத்திருநாமம் எது என்பதில் ளாஹிர்– வெளிரங்க உலமாஉகளுக்கும், பாதின்– உள்ளரங்க உறபாஉகளுக்கு மிடையில் கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும் அவர்களில் எவரும் இன்னதுதான் என்று குறிப்பிட்டுக் கூறவில்லை. இன்னும் சில ஞானிகள் இது மறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள். எவர் எவ்வாறு சொன்னாலும் “இல்ஹாம்” என்ற ஞானோதயம் வழக்கப்பட்ட வலிமார் இதை அறிவார்கள் என்பது எனது நம்பிக்கை.
தொடரும்………..
***==***==***==***==***==
தொடர் – 04
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
தலைப்பு?
மரணித்தவர்களுக்காக ஸதகஹ் – தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், துஆ கேட்டல் என்பவற்றால் அவர்கள் பயன் பெறுவார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவர்களுக்காக திருக்குர்ஆன், கத்தம், பாதிஹா ஓதுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தம்பிமார் சொல்வார்களாயின் அவர்களுக்காக இங்கு சில வரிகள் எழுதுகின்றேன். சில ஆதாரங்களும் தருகின்றேன்.
1. எவனொருவன் கப்றுகளுக்கு – சமாதிகளுக்குச் சென்று “ஸூறதுல் இக்லாஸ்” குல்ஹுவல்லாஹ் அத்தியாயத்தை 11தரம் ஓதி அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்தானோ அவனுக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கையின் அளவு நன்மை கிடைக்குமென்று அலி (றழி) அவர்கள்அறிவித்துள்ளார்கள் .
(உம்ததுல்காரீ,பாகம் – 03,பக்கம் –118)
2. யார் மையவாடிக்குச் சென்று “யாஸீன் ஸூறா” ஓதுவாரோஅந்நாளில் அங்கு அடக்கப்பட்டவர்களின் வேதனைகளை அல்லாஹ் இலேசாக்குவான் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் (றழி) அவர்கள் அறிவித்துள்ளாரகள்.
(உம்ததுல்காரீ,பாகம் – 03,பக்கம் –118)
குறிப்பு :
உம்ததுல் காரீ என்பது – ஸஹீஹுல் புஹாரி உடைய விரிவுரை நூலாகும்.
03. யாராவது தனது பெற்றோர் இருவரையும், அல்லது அவர்களில் ஒருவரை சியாறத் செய்து அவ்விடத்துல் யாஸீன் ஓதினால் அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூபக்கர் றழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
உம்ததுல் காரீ,பாகம் – 03,பக்கம் –118
04. உங்களில் ஒருவன் மரணித்துவிட்டால் அவனைத் தடுத்துவைத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நல்லடக்கம் செய்து விடுங்கள். மேலும் அவனின் தலைப்பக்கம் “ஸூறதுல் பகறஹ்” வின் ஆரம்பப் பகுதியையும, கால்பக்கம் அதே ஸூறஹ்வின் கடைசிப்பகுதியையும் ஓதுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். என்று அப்துல்லாஹ் இப்னு உமர் றழி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மிஷ்காத்,ஹதீஸ் இலக்கம் –1717,பக்கம் – 149
பைஹகீ,பாகம் –7,பக்கம் –16,ஹதீஸ் இலக்கம் –9294
05. உங்களில் மரணித்தவர்கள் மீது யாஸீன் ஓதுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக மஃகல் இப்னு யஸார் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இப்னு மாஜஹ்,பாகம் – 01,பக்கம் –466,ஹதீஸ் இலக்கம் –1448
அபூதாவூத்,பாகம் –03,பக்கம் – 191,ஹதீஸ் இலக்கம் – 3121
அஹ்மத்,பாகம் –05,பக்கம் – 26
மிஷ்காத்,பக்கம் –141,ஹதீஸ் இலக்கம் -1622
06. யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடி யாஸீன் ஓதுகின்றாரோ அவரின் முன்சென்று பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. ஆகவே, அதை உங்கள் மரணித்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக மஃகல் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மிஷ்காத்,பக்கம் –189,ஹதீஸ் இலக்கம் -2178
முன்னத் அஹ்மத்,பாகம் –05,பக்கம் –26
பைஹகீ,பாகம் –02,பக்கம் –479,ஹதீஸ் இலக்கம் -2458
07. அன்ஸாரீ ஸஹாபிகளில் ஒருவர் மரணித்தால் அவரின் கபறுக்கு அவர்கள் பலவாறாக பிரிந்து சென்று அவ்விடத்தில் குர்ஆன் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
கிதாபுர்றூஹ் பக்கம் – 14
அகீததுல் ஸுன்னஹ் பக்கம் – 304
08. அன்ஸாரிகள் மரணித்தவர்களுக்காக பகறஹ் ஸூறஹ்வை ஓதுபவர்களாக இருந்தார்கள்.
முஸன்னப் இப்னுஷைபா,பாகம் –03,பக்கம்- 121
09. நபி ஸல் அவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து அகிலத்துக்கு வழங்கிய ஹதீஸ் கலை மேதை றயீஸுல் முஹத்திதீன் இமாம் புஹாரி றஹ் அவர்களின் ஷெய்கு ஞான குரு மஹம்மத் இப்னு இஸ்ஹாக் றஹ் அவர்கள் பத்தாயிரத்துக்கம் அதிகமாக திருக்குர்ஆன் ஓதி நபி ஸல் அவர்களுக்கு சேர்த்து வைத்தாக – கத்தம் ஓதியதாக கூறப்பட்டுள்ளது.
துஹ்பஹ்,பாகம் –09,பக்கம் –368
10. ஒரு சமயம் நபி ஸல் அவர்கள் இரு கப்றுகளுக்கருகே நடந்து செல்லும் போது தமது தோழர்களிடம் இவ்விருகப்றுகளில் உள்ளவர்களில் ஒருவர் சலம் கழித்து சுத்தம் செய்வதில் அசட்டையாக இருந்த தற்காகவும், மற்றவர் புறம் பேசித்திரிந்ததற்காகவும் வேதனை செய்யப்படுகின்றனரே தவிர பெருங்குற்றம்செய்த காரணத்தினால் அல்ல எனக் கூறிவிட்டு அருகில் இருந்த பேரீத்த மரத்தின் குச்சி ஒன்றை எடுத்து அதை இரண்டாக கிழித்து இரு கப்றுகள் மீதும் நட்டினார்கள். இதற்காக காரணம் கேட்க்கப்பட்டபோது அதற்கு நபி ஸல் அவர்கள் இக்குச்சிகள் காயும் வரை அவர்களின் வேதனை குறைக்கப்படும் என்று கூறினார்கள்.
புஹாரி,ஹதீஸ் இலக்கம் – 216,பாடம் – கிதாபுல் வுழூ
முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம் – 292,பாடம் – கிதாபுத்தஹாறஹ்
திர்மிதி,ஹதீஸ் இலக்கம் – 70,பாடம் – அப்வாப்த்தஹாறஹ்
மிஷ்காத்,பக்கம் –42,ஹதீஸ் இலக்கம் – 338
அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம் – 20,பாடம் – கிதாபுத்தஹாறஹ்
இப்னு மாஜஹ்,ஹதீஸ் இலக்கம் – 347,
பாடம்-கிதாபுத்தஹாறஹ்
குறிப்பு
மேலே எழுதிக்காட்டிய 10 ஹதீஸ்களில் முந்தின மூன்று ஹதீஸ்கள் புஹாரிஷரீபுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கவுரைகளில் மிகவும் பிரசித்திபெற்ற உத்ததுல்காரீ (ஐனி) கிரந்தத்தில் இடம்பெற்றவையாகும். ஆகவே இதுவரை கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் மரணித்தவர்களுக்கு குர்ஆன்,கத்தம், பாத்திஹஹ் ஓதுவது ஆகுமான காரியம் என்பதும், நபிஸல் அவர்களும் ஸஹாபாக்களும் செய்துவந்த “ஸுன்னத்” ஆனகாரியம் என்பதும் தெளிவாகிவிட்டன.
கேள்வி
மரணித்தவர்களுக்கு குர்ஆன்ஓதி அதன்நன்மையைச் சேர்த்துவைக்க முடியாது அது அவர்களைச் சென்றடையாது என்று நாம் பின்பற்றுகின்ற ஷாபிஈ மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் ஷாபிஈ றஹ் அவர்கள் சொன்னதாக சொல்லப்படுகின்றதே இதன் விளக்கம் என்ன?
பதில்
வஹ்ஹாபித் தம்பிமார் இமாம்ஷாபிஈ றஹ் அவர்கள் இவ்வாறு சொன்னதாகச் சொல்லிக்கொண்டு மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதக்கூடாதென்று கூச்சலிடுகின்றார்கள்.
இமாம்களைத் தூக்கிஎறியும் இந்தத்தம்பிமார் இவ்விடயத்தில் மட்டும் இமாம் ஷாபிஈ றஹ் அவர்களை ஆதாரமாகத் தூக்கிப்பிடிப்பது மிகப்பெரும் விந்தையாகவுள்ளது. கலாநிதி ஸாஹிப் அவர்கள்கூட இதை இரும்புத் துரும்பென்றெண்ணிக் கொண்டு கத்தம், பாத்திஹஹ் ஓதுவதை நல்ல கலாச்சாரமெனக் கருத்திச்செயல்பட்டுவருகின்ற ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்களிடம் உங்கள் இமாமே இவ்வாறு சொல்லியிருக்க நீங்கள் கத்தம் ஓதுவது எந்த வகையில் நியாயமாகும்?என்று கேள்வி எழுப்பி பிரசுரமும் வெளியிட்டுள்ளார். ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்தோரை கிண்டலும் செய்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.
ஐயோ பாவம்! கலாநிதியை நினைக்கும் போது சிரிப்பும் வருகின்றது. வியப்பும் வருகின்றது. இத்துப்போன தேங்காய்த் துரும்பை இரும்புத் துரும்பென்றெண்ணி ஏமார்ந்து போனார். ஸுப்ஹானல்லாஹ்.
மதிப்புக்குரிய நமது இமாம் ஷாபிஈ றஹ் அவர்கள் மேற்கண்டவாறு சொன்னது உண்மைதான். ஆயினும் அவர்களின் பேச்சின் எதார்த்தமான பொருளை பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களில் கலாநிதி ஸாஹிப் அவர்களும் ஒருவர்.
இமாம் ஷாபி ஈறஹ் அவர்கள் சொன்னதற்கான எதார்த்தமான விளக்கம் என்னவெனில் மையித்தின் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படாத நிலையிலும், அல்லது ஓதிய ஒருவன்தான் ஓதிய குர்ஆனி ன்நன்மையை மையித்துக்கு சேர்த்துவைக்கின்றேன்.என்று”நிய்யத்” வைத்து துஆ ஓதாமல் இருக்கும் கட்டத்திலுமாகும். பொதுவாக அல்ல. என்று இமாம் இப்னுஹஜர் ஹைதமீ றஹ் அவர்கள் குறிப்பிட்டள்ளார்கள்.
ஆதாரம்–துஹ்பஹ்,பாகம்– 07,பக்கம்–74
(இதன் விபரமென்னவெனில் ஒருவன் ஓதிய ஓதலின் நன்மைக்கு அவனே சொந்தக்காரனாயிருப்பதால் நான் இன்னமையித்துக்கு இதை ஹத்யா செய்கின்றேன் என்று அவன் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் சேராது.) என்பதாகும்.
மேலும் மரணித்தவர்களுக்கு குர்ஆன் ஓதிதுஆ செய்வது முஸ்தஹப்பு–நல்லகாரியம் என்று இமாம் ஷாபிஈறஹ் அவர்களே தாங்கள் எழுதிய “அல்உம்மு” என்றநூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்உம்மு, பாகம்–01,பக்கம்–322
மரணித்தவர்களுக்கு குர்ஆன் ஓதி நன்மையைச் சேர்த்து வைப்பதை ஷாபிஈமத்ஹபைச் சேர்த்த பிரசித்தி பெற்ற இமாம்களான இமாம் நவவீ றஹ், இமாம் இப்னுஹஜர் ஹைதமீ றஹ், இமாம் றமலீறஹ், ஆகியோர் ஆகுமென்று கூறியுள்ளார்கள்.
இமாம் நவவீ றஹ் அவர்களின்மின் ஹாஜ், பாகம் – 03,பக்கம்–202
இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ (றஹ்) அவர்களின் துஹ்பஹ், பாகம்-03
பக்கம்– 202
இமாம் றமலீ றஹ் அவர்களின் பதாவாறமலீ, பாகம் – 01,பக்கம் – 430
இமாம் றமலீ றஹ் அவர்களின் அல்ஹாவீலில் பதாவா, பாகம் -02 பக்கம் -194
எனவே, மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதிஹத்யா செய்வது மற்ற மத்ஹபுகளில் “ஸுன்னத்” என்று இருப்பது போல் ஷாபிஈமத் ஹபின் “ஸுன்னத்” ஆனகாரியம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
தொடரும்………..
***==***==***==***==***==
தொடர் – 03
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
சிறு குறிப்பு
நல்லடியார்களை சியாரத் – தரிசிப்பதற்காக அவர்கள் சமாதி கொண்டுள்ள இடங்களுக்கும், தர்ஹாக்களுக்கும் செல்வோர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எது ஓத வேண்டும் என்ற விபரங்கள் நிறைய உள்ளன. ஸுன்னத வல் ஜமாஅத் கொள்கை வழி சென்ற மார்க்க மேதைகள் எழுதிய நூல்களில் அவற்றைக் காணலாம்.
சுருங்கச் சொன்னால் ஒருவன் ஒரு பெரியாரின் சமாதிக்குச் சென்றால் அந்தப் பெரியார் உலகில் உயிருடன் இருந்த போது எவ்வாறு அவருடன் அவன் நடந்து கொண்டானோ அவ்வாறே அவன் நடந்து கொள்ள வேண்டும். அவர் உயிருடன் இருந்த வேளை அவருக்கு முன் எழுந்து கைகட்டி நிற்கும் வழக்கம் உள்ளவனாயின் அவ்வாறே அவன் நடந்து கொள்ள வேண்டும். அவரின் கை, கால்களை முத்தமிடும் வழக்கமுள்ளவனாயின் அவரின் கப்றை முத்தமிட வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் ஒரு வலி வெளிப் பார்வையில் மரணித்தவராயினும் எதார்த்தத்தில் அவர் உயிரோடுதான் உள்ளார். அவற்றை இங்கு கூறுவது எனது நோக்கமல்ல. இவ்வாறு செய்தால் கண்ணியம் செய்தலாகுமே தவிர கப்று வணக்கமாகாது.
ஒரு சிஷ்யன் தனது குருவுக்கு எழுந்து கண்ணியம் செய்தல் குரு வணக்கம் ஆகாது. பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எழுந்து நின்று மரியாதை செய்தல் பெற்றோர் வணக்கமாகாது. ஒரு ஜனாசஹ்வை சுமந்து வருகின்ற போது வீதியில் அமர்ந்திருப்போர் எழுந்து நிற்பதும், வாகனத்தில் வருவோர் இறங்குவதும் ஜனாசஹ் வணக்கமாகாது. இவையாவும் “தஃளீம்” கண்ணியம் செய்யவதாகவே ஆகும். அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துமாறு அல்லாஹ்தான் அல்குர்ஆனில் கூறியுள்ளான்.
வஹ்ஹாபித் தம்பிகளுக்கு “இபாதத்” வணக்கம் என்பதற்கு “தஃளீம்”கண்ணியம் செய்தல் என்பதற்கும் வேறுபாடு புரியவில்லை. சிருஷ்டியை வணங்குவதுதான் பிழையான காரியமேயன்றி அதை கண்ணியம் செய்தல் ஒரு போதும் பிழையாகிவிடாது இவ்வுண்மையை தம்பிமார் சரியாக புரிந்து “ஷிர்க்” என்ற நரகில் இருந்து “ஈமான்” என்ற சுவனம் வர வேண்டும்.
அதோடு பெரியார்களின் சமாதிக்குச் செல்வோர் பொதுவாக “சியாறதுல் குபூர்” சமாதிகளை தரிசிப்போர் முதலில் “அஸ்ஸலாமு அலைக்கும் யாதாறகவ்மின்முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிகும்லாஹிகூன்” என்று ஸலாம் கூறிய பின் தமக்குப் பாடமான திருக்குர்ஆன் வசனங்கள், ஸலவாத் திக்ருகள் ஓதி துஆ கேட்க வேண்டும். குல்குவல்லாஹு என்ற அத்தியாயத்தை 11 தரம் ஓதுவது நபீ வழியாகும்.
மரணித்த ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக மற்றோரு சகோதரன் (அவ்விருவருக்குமிடையே எவ்வித உறவும், நட்பும் இன்றி) செய்யும் நற்காரியங்கள் அவனைச் சென்றடையும் என்பதற்கான ஆதாரங்களைக் கவனிப்போம்.
1. இறைவா! எங்களுக்கும் , எங்களுக்கும்முன் மரணித்துச் சென்று விட்ட எங்களின் விசுவாசிகளான சகோதரர்களுக்கும் (பாவங்கள் மன்னித்து அருள் புரிவாயாக!) என்று பின்னால் வந்தவர்கள் பிராத்திப்பார்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
(அல்ஹஷ்ர்,வசனம் – 10)
2. அர்ஷைசுமக்கின்ற மலக்குகல் விசுவாசிகளுக்காக பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
(அல்முஃமின்,வசனம் – 07)
3. இறைவா! எனக்கும், எனது பெற்றோருக்கும், ஏனைய விசுவாசிகளுக்கும் பாவம் மன்னித்து அருள்வாயாக என்று நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் பிராத்தித்தார்கள்.
(இப்ராஹீம், வசனம் – 41)
4. மையித்துக்காக நீங்கள் தொழுது முடித்து விட்டால் அதற்காக தூய்மையான எண்ணத்துடன் துஆ செய்யுங்கள் என்று நபி ஸல் அவர்கள் அருளினார்கள்.
இப்னு மாஜஹ், ஹதீஸ் இலக்கம் -1497,
பாடம் – கிதாபுல் ஜனாயிஸ்,
அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம்– 3199
பாடம் –கிதாபுல் ஜனாயிஸ்,
மிஷ்காத்,ஹதீஸ் இலக்கம் -1674
பாடம் – கிதாபுல் ஜனாயிஸ்
5. இறைவா! எங்களில் உயிரோடு உள்ளவர்களுக்கும், எங்களில் மரணித்தவர்களுக்கும் பாவம் மன்னிப்பாயாக! என்று நபீ ஸல் அவர்கள் துஆ செய்பவர்களாக இருந்தார்கள் என்று அபூஹுறைறா றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இப்னுமாஜஹ்,ஹதீஸ் இலக்கம் – 1498
பாடம்– கிதாபுல் ஜனாயிஸ்
மிஷ்காத்,ஹதீஸ் இலக்கம்– 1675,பக்கம் – 146
பாடம்– கிதாபுல் ஜனாயிஸ்
6. நபீ(ஸல்) அவர்கள் மையித்தை அடக்கம் செய்து முடிந்து விட்டால் அங்கு தரித்து நிற்பார்கள். மேலும் உங்களின் சகோதரனுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள். இன்னும் அவருக்காக தரிபாட்டையும் கேளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர் இப்போது கேள்வி கேட்கப்படுவார் என்று கூறுவார்கள் என உத்மான் (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மிஷ்காத்,பக்கம் – 26,ஹதீஸ் இலக்கம்– 133
அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம்– 3223
பாடம்– கிதாபுல் ஜனாயிஸ்
7. நபீ ஸல் அவர்கள் ஓர் ஆட்டை அறுத்து குர்பான் செய்த பின், இறைவா! இதை எனக்காகவும், எனது குடும்பத்தினருக்காகவும், எனது உம்மத்துக்காகவும் ஏற்றுக் கோள்வாயாக என்று பிராத்தனை செய்தார்கள்.
அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம் –2792
பாடம் கிதாபுழ்ழஹாயா
மிஷ்காத்,பக்கம் – 127,ஹதீஸ் இலக்கம்– 1454
முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம்– 1967
பாடம் – கிதாபுல் அழாஹீ
8. அலீ (றழி) அவர்கள் ஒரு சமயம் இரு ஆடுகளை “குர்பான்”செய்து கொண்டிருந்ததைக் கண்ட அனஸ் (றழி) அவர்கள் எதற்கு இரண்டு குர்பான்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நபீ (ஸல்) அவர்கள் என்னிடம் தங்களுக்காக ஒரு குர்பான் கொடுக்குமாறு சொல்லியிருந்தார்கள். ஆதலால் இதில் ஒன்று அவர்களுக்கும், மற்றொன்று எனக்கும் என்று கூறினார்கள்.
மிஷ்காத்,ஹதீஸ் இலக்கம்– 1462
அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம்– 2790
பாடம் – கிதாபுழ்ழஹாயா
திர்மிதி,ஹதீஸ் இலக்கம்– 1495
பாடம் – கிதாபுல் அழாஹீ
இதுவரை எழுதிக்காட்டிய திருவசனங்களும், நபீ மொழிகளும் ஒருவன் செய்த “இஸ்திஃபார்” பாவமன்னிப்புக் கோரல், துஆ, மற்றும் நல்லமல்களின் பலன்கள் அனைத்தும் மரணித்தவர்களுக்கு அவர்களின் முயற்சி எதுவுமின்றியே சென்றடைகின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றன.
தெளிவானதும், சரியானதும், பலமானதுமான ஆதாரங்கள் கொண்டு மேற்கண்ட விடயத்தை (உயிரோடுள்ளவன் செய்கின்ற நல்லமல்களால் மரணித்தவர்கள் பலன் பெறுவார்கள்.) நிறுவிய பின்னும் ஒரு மனிதனுக்கு அவன் செய்த முயற்சியின்றி வேறில்லை. என்ற மேற்கண்ட திருவசனத்தின் வெளிக்கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு உயிரோடுள்ளவர்கள் செய்கின்ற நற்கருமங்களின் பலன் மரணித்தவர்களைச் சென்றடையாதென்று அன்புக்குரிய தம்பிமார் பிடிவாதம் செய்வார்களாயின் அது அவர்களின் தலைவிதி என்றே கூற வேண்டும். வாதத்துக்கு மருந்தும் உண்டு. மாத்திரையும் உண்டு. மருத்துவ மனைகளும் உண்டு. ஆனால் பிடிவாதத்துக்கு ஒன்றுமே இல்லை. மனக்கண் குருடானால் என்னதான் செய்யலாம்?.
நான் மேலே எழுதிக்காட்டிய எட்டு ஆதாரங்களும் மரணித்த ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக மற்றோரு சகோதரன் (அவ்விருவருக்குமிடையே எவ்வித உறவும், நற்புமின்றி) செய்யும் நற்காரியங்கள் அவனைச் சென்றடையும் என்பதற்கான ஆதாரங்களாகும்.
அவற்றில் 1ம்,2ம், 3ம், ஆதாரங்கள் திருக்குர்ஆன் வசனங்களாகும். மற்றவை ஹதீஸ்களாகும்.
முதலாவது அல்ஹஷ்ர் அத்தியாயத்தின் பத்தாம் வசனமாகும்.
அத்திருவசனம் ஒரு “துஆ” பிராத்தனையாகும். இவ்வசனத்தை ஓதுகின்ற ஒருவர் தனக்கு முன் மரணித்த விசுவாசிகள் அனைவருக்காகவும் “துஆ” பிராத்தனை செய்தவன் ஆகின்றான். அவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாயினும். எந்த மொழி பேசுபவர்களாயினும் சரியே. தனக்கும், அவர்களுக்குமிடையில் எவ்வித உறவும், நட்பும் இல்லாமற் போனாலும் சரியே.
உயிரோடுள்ளவன் மரணித்தவனுக்காகச் செய்யும் பிராத்தனை மூலம் அவன் பலன் பெறமாட்டான் என்றிருந்தால் இத்திருவசனத்தை ஓதுவது அர்த்தமற்றதாயும், வீணானதாயும் ஆகிவிடும்.
இரண்டாவது அல்முஃமின் அத்தியாயத்தின் 7ம் வசனமாகும்.
இத்திருவசனம் மூலம் அர்ஷை சுமந்து கொண்டிருக்கின்ற மலக்குகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழ்ந்து மறைந்து போன சகல விசுவாசிகளுக்காகவும் துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள். பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
உயிரோடுள்ளவர்களின் துஆவின் மூலம் உயிரோடுள்ள மற்றவர்களும், மரணித்தவர்களும் பலன் பெறமாட்டார்கள். என்றிருந்தால் மலக்குகளின் பிராத்தனை அர்த்தமற்றதாயும், வீணானதாயும் ஆகிவிடும்.
மூன்றாவது இப்றாஹீம் அத்தியாயத்தில் 41வது வசனமாகும்.
இத்திருவசனம் மூலம் நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் தங்களுக்காகவும், தங்களின் பெற்றோருக்காகவும், உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழ்ந்து போன சகல விசுவாசிகளுக்காகவும் துஆ செய்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
உயிரோடுள்ள ஒருவரின் துஆவின் மூலம் உயிரோடுள்ளமற்றவர்களும், மரணித்தவர்களும் பலன் பெற மாட்டார்கள் என்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலை அவர்களின் பிராத்தனை அர்த்தமற்றதாயும், வீணானதாயும் ஆகிவிடும்.
நாலாவது ஆதாரம் இப்னுமாஜஹ், அபூதாஊத் ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸாகும்.
இந்த ஹதீஸ் மூலம் மையித்துக்காக ஜனாசஹ் தொழுகை முடிந்த பின் அதற்காக தூய்மையான எண்ணத்துடன் துஆ செய்ய வேண்டும் என்பது விளங்குகின்றது.
உயிரோடுள்ளவனின் பிராத்தனை மூலம் மரணித்தவர்கள் பலன்பெற மாட்டார்கள் என்றிருந்தால் நபி ஸல் அவர்களின் இக்கட்டளை அர்த்தமற்றதாயும், வீணானதாயும் ஆகிவிடும்.
இந்த ஹதீஸ் மூலம் இன்னுமோர் உண்மை தெளிவாகின்றது. இவ்வுண்மையை ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகளை விட வஹாபித்தம்பிமாரே தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதாவது மையித்துக்கான ஜனாசஹ் தொழுகை முடிந்த பின் அந்த மையித்திற்காக துஆ செய்ய வேண்டும்.
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கையுடையோர் பள்ளிவாயலில் ஜனாசஹ் தொழுகை முடிந்தவுடன் தொழுகை நடாத்தியவர் “அல்பாதிஹஹ்” என்று கூற தொழுதவர்கள் அனைவரும் ஸூறதுல் பாதிஹஹ்,ஸூறதுல் இக்லாஸ், ஸூறதுல் முஅவ்விததைன் என்பவற்றை ஓதி மையித்திற்காக துஆ செய்கின்றார்கள்.
இந்த நடைமுறை தொன்று தொட்டு எல்லாப் பள்ளிவாயல்களிலும் இருந்து வந்த ஒன்றாகும். இன்றுவரை ஸுன்னத்வல்ஜமாஅத்கொள்கைவாதிகளின் நிர்வாகத்தில் உள்ள எல்லாப் பள்ளிவாயல்களிலும் இருந்து வருகின்றது.
ஆயினும் எல்லாம் தெரிந்த தம்பிமார் வந்த பிறகு ஜனாசஹ் தொழுகை முடிந்தவிட்டால் அதை உடனே மையவாடிக்கு எடுத்துச் சென்று நாய் நரிகளைக் குழியிலிட்டுப் புதைத்து விடுவது போல் தல்கீன், கலிமஹ் எதுவுமின்றிப் புதைத்து விடுகின்றார்கள். இத்தகைய இஸ்லாமியத்துக்கு முரணான சீர்திருத்தம் தம்பிமார் ஊடுருவிய பின் உண்டான தேயாகும். தங்கத்தம்பிமார் தங்கள் கவனத்தை மேற்கண்ட ஹதீஸின் பக்கம் திருப்புவார்களா?
ஐந்தாவது ஆதாரம் இப்னுமாஜஹ் அறிவித்துள்ள ஹதீஸாகும்.
நபி ஸல் அவர்கள் உயிரோடுள்ளவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் பாவமன்னிப்புத்தேடி துஆ செய்துள்ளார்கள் என்ற உண்மையை இந்த ஹதீஸ் மூலம் அறிந்து கொள்கின்றோம். மரணித்தவர்களுக்காக, உயிரோடுள்ளவர்கள் செய்யும் பிராத்தனை அவர்களுக்குப் பயனளிக்காது என்றிருந்தால் நபி ஸல் அவர்களின் பிராத்தனை அர்த்தமற்றதாயும், வீணானதாயும் ஆகிவிடும்.
நபி ஸல் அவர்கள் அர்த்தமற்ற, வீணான எந்த ஒரு வேலையும் செய்ததில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. ஆனால் நபி ஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதன் என்று கூறும் தம்பிமார்களோ இதற்கு மாறாகக் கூறுவார்கள். அல்லாஹ் குப்ரில் இருந்து நம்மை காப்பானாக!
ஆறாவது ஆதாரம் அபூதாஊத் அறிவித்துள்ள ஹதீஸாகும்.
இந்த ஹதீஸ் பல அறிவுரைகளை தருகின்றது.அவை நபி ஸல் அவர்கள் மையித்தை அடக்கம் செய்து முடிந்த பின் அங்கு – கபுறடியில் தரித்து நிற்றல், அங்குள்ளவர்களிடம் உங்கள் சகோதரனுக்காகப் பாவமன்னிப்புக் கேளுங்கள் என்று சொல்லுதல் அவருக்குத் தரிபாட்டை கேளுங்கள் என்று கூறுதல்.
இம் மூன்று அம்சங்களும் உயிரோடுள்ளவனுக்கு மரணித்தவன் எந்த வகையிலும் உறவினராகவோ, நண்பனாகவோ இல்லாது போனாலும் அவனுக்காக இவன் கேட்கும் துஆவின் மூலம் அவன் பயனடைகின்றான் என்ற உண்மையைக் காட்டுகின்றன.
மரணித்தவனுக்காகத் தரிபாட்டைக் கேளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியது “அல்லாஹும்ம தப்பித்ஹு பில் கவ்லித்தாபித்”என்று துஆ கேட்பதைக் குறிக்கின்றது. இதன் பொருள் தரிபாடான சொல் கொண்டு இவரை நீ தரிபடுத்தி வைப்பாயாக என்பதாகும். தரிபாடான சொல் என்பது “லாயிலாஹஇல்லல்லாஹ்” என்ற திருக்கலிமஹ்வைக் குறிக்கும்.
இந்த ஆதாரத்தைக் கொண்டே ஸுன்னதவல்ஜமாஅத் கொள்கையுடையோர் மையித்தை அடக்கம் செய்த உடன் திரும்பி விடாமல் சற்று நேரம் அங்கு தரித்து நின்று தல்கீன் ஓதியும், அதிலோரிடத்தில் “தப்பதகல்லாஹு பில் கவ்லித்தாபித்” என்று துஆ கேட்டும் வருகின்றார்கள்.
வஹ்ஹாபித்தம்பிமாரோ இந்த ஹதீஸுக்கு முழுக்க முழுக்க மாற்றமாகச் செயல்பட்டு வருகின்றார்கள். நாய் நரிகளைகப் புதைப்பது போல் ஒரு விசுவாசியைப் புதைத்து விட்டு மறுகணமே திரும்பி விடுகின்றார்கள். அவர்களிடம் தல்கீனும் இல்லை. தத்பீத்துமில்லை. ஏனென்று கேட்டால் பித்அத்தாம். அனாச்சாரமாம். ஐயோ பாவம். இறைவா! இவர்களின் கண்ணை எப்போது திறப்பாய்?
தொடரும்……
==***==***==***==***==***==
தொடர் – 02
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
ஆதாரங்கள்
தம்பிமார் தமது வாதத்தை நிறுவுவதற்கு ஸூறதுல் அன்ஆம் 164ம் வசனத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கூறுவதாக அறிந்தேன். இந்த வசனத்தின் பொருள் ஓர் ஆத்மாவின் பாவச்சுமையை இன்னோர் ஆத்மா சுமக்காது என்பதாகும். அதாவது ஒருவன் பாவம் செய்வானாயின் அதற்காக அவன்தான் தண்டனைக்குரியவனேயன்றி இன்னொருவனல்ல. அதாவது பாவம் செய்பவன் ஒருவன் அதற்காக தண்டிக்கப்படுபவன் இன்னொருவன் என்பது கருத்தல்ல. மேற்கண்ட திருவசனம் இப்போது கூறிய கருத்தைத் தருகின்றதேயன்றி உயிரோடுள்ளவன் மரணித்தவனுக்காகச் செய்யும் நல்லமலின் பலன் அவனைச்சென்றடையாதென்பது கருத்தல்ல. இந்தக் கருத்துக்கு இவ்வசனத்தில் மண்ணளவும் இடமில்லை. தம்பிமார் துறை தெரியாமல் தோணி தொடுப்பதை விட வேண்டும். இன்றேல் வீடென்றெண்ணிக் காட்டுக்குள் போய் விடுவார்கள்.
மரணித்தவர்களுக்காக மற்றவர் செய்யும் நல்லமல்களின் பயன் அவர்களைச் சென்றடையும் என்பதற்கான ஆதாரங்களை எழுதுகிறேன்.
01. ஒருவன் மரணித்து விட்டால் அத்துடன் அவரின் அமல்கள் நின்று விடும். ஆயினும் நிரந்தரமானதானம், அவர் கற்பித்த கல்வி, அவருக்காக பிராத்திக்கும் அவரின் நல்ல பிள்ளைகள் ஆகிய மூன்றும் அவரின் மரணத்தின் பின்னும் பயன் தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுறைறா (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(மிஷ்காத் பக்கம் – 32,ஹதீஸ் இலக்கம் – 203,கிதாபுல்இல்ம்
அபூதாஊத்,ஹதீஸ் இலக்கம் – 2880,கிதாபுல் வஸாயா
திர்மீதி,ஹதீஸ் இலக்கம் – 1376,கிதால் அஹ்காம்
முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம் -1631,கிதாபுல் வஸிய்யத்)
02. ஒரு விசுவாசி கற்பித்த கல்வியும், (எழுத்து மூலம் மேலும் நூல் வடிவில் உலகெங்கும்) அவன் பரப்பிய கல்வியும், அவன் விட்டுச் சென்ற ஸாலிஹான பிள்ளையும் (பள்ளிவயல்கள், மத்ரசாக்களுக்கு) வழங்கிய குர்ஆன் பிரதியும், அவன் கட்டிய பள்ளிவாயலும், பயணிகளுக்காக அமைத்துக் கொடுத்த தங்கும் இடமும், அவன் ஓடச் செய்த ஆறும், அவன் உயிருடன் இருந்த போது கொடுத்துதவிய தானங்களும் அவனின் மரணத்தின் பிறகு அவனைச் சென்றடையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுறைறா (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(இப்னுமாஜஹ்,ஹதீஸ் இலக்கம் – 242
மிஷ்காத் பக்கம் – 36,கிதாபுல் இல்ம்,ஹதீஸ் இலக்கம் – 254)
03. நிச்சயமாக அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவன் பிள்ளை செய்யும் “இஸதிஃபார்” பாவமன்னிப்புக் கோருதல் மூலம் அவரின் அந்தஸ்தை சுவனத்தில் உயர்த்துகின்றான். என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
(மிஷ்காத்,ஹதீஸ் இலக்கம் – 2354,பாபுல் இஸ்திஃபார்
இப்னுமாஜஹ்,ஹதீஸ் இலக்கம் – 3660,கிதாபுல் அதப் )
04. இரட்சகனே! நான் குழந்தையாக இருந்த போது எனது பெற்றோர் (என்மீது அருள் கூர்ந்து) என்னை வளர்த்தது போன்று அவ்விருவருக்கும் உனது அருளைச் சொரிவாயாக! என்று நபியே நீங்கள் கூறுங்கள்.
(அல்இஸ்றா அத்தியாயம் ,வசனம் – 24)
05. நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து நாயகமே! எனது தாயார் (எது குறித்தும்) வஸிய்யத் செய்யாமல் திடீரென மரணித்து விட்டார்கள். அவர்கள் பேசி இருந்தால் ஏதேனும் தானதர்மங்கள் செய்திருப்பார்கள். ஆகையால் அவர்களுக்காக நான் ஸதகஹ் – தர்மம் செய்தால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம் போய்ச்சேரும் என்று கூறியதாக ஆயிஷா (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புஹாரீ,ஹதீஸ் இலக்கம் – 1388,பாடம் – கிதாபுல் ஜனாயிஸ்
முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம் – 1004,கிதாபுஸ்ஸகாத்
அபூதாவூத்,ஹதீஸ் இலக்கம் – 2881,நஸயீ,பாகம் – 06 பக்கம் – 250)
06. ஸெய்யிதுனா ஸஃது இப்னு உப்பாதா (றழி) அவர்களின் தாய் வபாத்தான நேரத்தில் ஸஃது (றழி) அவர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! நான் வெளியூர் சென்றிருந்த நேரம் எனது தாய் மரணித்துவிட்டார்கள். அவர்களைத் தொட்டும் அவர்களுக்காக நான் “ஸதகஹ்” தர்மம் செய்தால் அது அவர்களுக்கு பயனளிக்குமா? என்று கேட்டார்கள். ஆம். பயனளிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நிச்சயமாக எனது தோட்டம் அவர்களுக்காக ஸதகஹ்வாக இருக்கும் என்று தங்களை சாட்சியாக்குகின்றேன் என்று ஸஃது (றழி) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புஹாரீ,ஹதீஸ் இலக்கம்– 2580,பாடம் – கிதாபுல் வஸாயா)
07. ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார்கள். அவர்களைத் தொட்டும் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். ஆம் செய்யலாம். அவர்களுக்காக நீ ஹஜ் செய் என்று குறியதாக புறைதா (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம்– 1149,பாடம் – கிதாபுஸ்ஸியாம்
திர்மிதி,ஹதீஸ் இலக்கம்– 667,பாடம் – கிதாபுஸ்ஸகாத்)
08. ஒரு மனிதன் றபி (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாய் மரணித்துவிட்டார். அவர்கள் மீது ஒரு மாத நோன்பு (நிறை வேற்றப்பட வேண்டியது) இருக்கின்றது. அவர்களைத் தொட்டும் அதை நான் நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதனைப் பார்த்து உனது தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை அவர்களைத் தொட்டும் நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று பதில் கூறினார்கள். அவ்வாறாயின் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு மிக ஏற்றமானது என்று கூறியதாக இப்னு அப்பாஸ் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம்– 1148,பாடம் – கிதாபுஸ்ஸியாம்)
09. ஒருவர் மீது கடமையான நோன்பு இருக்கும் நிலையில் அவர் மரணித்துவிடுவாராயின் அவரைத் தொட்டும் அவரின் பொறுப்பாளர் நோன்பு வைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷஹ் (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம்– 1147,பாடம் – கிதாபுஸ்ஸியாம்)
10. யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா? என்ற என்னத்தில் நிரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல் கப்ரில் மையித் தனது தந்தை, அல்லதுதாய், அல்லது சகோதரன், அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை – பிராத்தனையை எதிர்பார்க்கின்றது. அப்படி ஏதேனும் ஒரு துஆ அந்த மையித்தைச் சென்றடைந்தால் அதை துன்யா மற்றும் அதிலுள்ளவற்றை விட மிகப் பிரியமாக கருதுகிறது. நிச்சயமாக அல்லாஹ் உலக மக்களின் பிராத்தனை மூலம் கப்று வாசிகளுக்கு மலைகள் போன்று அருள்களை நுழைவிக்கின்றான். இறந்தவர்களுக்காக பிழை பொறுக்கத்தேடுவது உயிரோடிருப்போர் மரணித்தவர்களுக்கு வழங்குகின்ற சன்மானமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(பைஹகீ,ஹதீஸ் இலக்கம்– 7904,
மிஸ்காத்,ஹதீஸ் இலக்கம்– 2355,பக்கம் – 206,பாடம் – பாபுல் இஸ்திஃபார்)
11. யாராவது ஒருவன் மையவாடிக்கு பக்கத்தால் சென்று 11 தரம் ஸூறதுல் இக்லாஸ் – குல்ஹவல்லாஹு அஹத் என்ற அத்தியாயத்தை ஓதி அதன் நன்மையை மரணித்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவானாயின் அவனுக்கு மரணித்தோரின் எண்ணிக்கப்படி நற்கூலி வழங்கப்படும் என்று றபி ஸல் அவர்கள் சொன்னதாக ஸெய்யிதுனா அலீ (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(கன்சுல்உம்மால்,பக்கம்2059,ஹதீஸ் இலக்கம்-42596)
ஹதீஸ் இலக்கம் 01
மேற்கண்ட இந்த ஹதீஸ் தருகின்ற சாரம் என்ன வெனில், ஒருவன் மரணித்த பின்னும் அவனுக்கு பயன் கொடுக்கும் விடயங்கள் மூன்று உள்ளன. 1. நிரந்தரதானம் 2. மரணித்தவன் கற்பித்த கல்வி 3. அவன் விட்டுச் சென்ற அவனுக்காகப் பிராத்திக்கும் பிள்ளை.
இம்மூன்று அம்சங்களும் மூன்றாம் அம்சம் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்று. இந்த மூன்றாம் அம்சம் பற்றி குறிப்பாக வஹ்ஹாபிகள் சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம். உயிருள்ள ஒருவன் செய்கின்ற நல்லமலால் மரணித்தவன் பயன் பெறுவான் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா? “துஆ” பிராத்தனை என்பது வணக்கத்தின் மூளை என்று நபீ (ஸல்) அவர்களின் ஹதீஸ் இங்கு நினைவு கூறப்பட வேண்டியதாகும். உயிருள்ளவனின் பிராத்தனை மரணித்தவனுக்குச் சென்றடையும் என்று நபீ (ஸல்) அவர்களே சொல்லியிருக்க நாம் சந்தேகம் கொள்ளவோ, விவாதிக்கவோ இடமே இல்லை. வஹ்ஹாபித்தம்பிகள் இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்.
ஹதீஸ் இலக்கம்02
மேற்கண்ட இந்த ஹதீஸ் தருகின்ற சாரம் என்னவெனில் இந்த ஹதீஸில் கூறப்பட்ட 7 விடயங்களும் ஒருவன் மரணித்த பின் அவனுக்கு நன்மை சேர்க்கும் விடயங்களாகும். குறிப்பாக அவன் விட்டுச் சென்ற நல்ல பிள்ளை அவனுக்காக துஆ கேட்பதால் மரணித்தவன் பலன் பெறுகின்றான். இதிலிருந்து பிள்ளை செய்கின்ற வணக்கம் மூலம் மரணித்த பெற்றோர் பலன் பெறுகின்றனர் என்பது தெளிவாகின்றது. உயிரோடுள்ளவனின் நல்லமல்களால் மரணித்தவன் பலன் பெறுகிறான் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா? வஹ்ஹாபித்தம்பிமார் இதை ஆழமாக சிந்தனை செய்து பார்த்து ஒளியுலகுக்கு வரவேண்டும்.
ஹதீஸ் இலக்கம்03
இந்த ஹதீஸும் மேற்கண்ட இரண்டு ஹதீஸ்கள் போல் பெற்றோருக்காக பிள்ளைகள் செய்கின்ற பாவமன்னிப்புக் கோரலால் அவர்கள் பலன் பெறுகின்றார்கள் என்ற உண்மையையே உணர்த்துகின்றது. வஹ்ஹாபிச் சிறுவர்கள் இதையும் தூய மனதோடு ஆய்வு செய்து அசூசியில் நின்றும் சுத்தம் பெறவேண்டும்.
திருக்குர்ஆன் வசனம் – 4
இத்திருவசனத்தின் மூலம் நபீ (ஸல்) அவர்களின் பெற்றோருக்கு துஆ செய்யுமாறு அவர்களை அல்லாஹ் பணித்துள்ளான் என்பது தெளிவாகின்றது. உயிருள்ள ஒருவன் செய்கின்ற நல்லமல் கொண்டு மரணித்தவர்கள் பயன்பெற மாட்டார்கள், என்றிருந்தால் அவ்வாறு செய்தல் மார்க்கத்துக்கு முரணான தாயுமிருந்தால் நபி (ஸல்) அவர்களை தமது பெற்றோருக்கு துஆ செய்யுமாறு அல்லாஹ் பணித்திருக்க மாட்டான்.
வஹ்ஹாபித்தம்பிமார் இத்திருவசனத்தைக் கருத்துக்கெடுத்து தூய மனதோடு ஆய்வு செய்து வழிகேடென்ற சிறையிலிருந்து விடுபட வேண்டும். தமது பெற்றோருக்காக துஆ கேட்கவும் வேண்டும்.
குறிப்பு
நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் விசுவாசிகள் என்றும், சுவனவாதிகள் என்றும் அறிஞர்களிற்பலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் அவ்வாறில்லை என்று சொல்கின்றனர். மேற்கண்ட திரு வசனத்தின்படி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அருள் துஆவுக்கு உரித்தானவர்களாயிருப்பதால் அவர்கள் விசுவாசிகள், சுவனவாதிகள் என்பதே சரியான முடிவாகும்.
ஹதீஸ் இலக்கம் – 5
இந்த ஹதீஸ் தருகின்ற சாரம் என்னவெனில் மரணித்தவர்களுக்காக உயிரோடுள்ளவர்கள் “ஸதகஹ்”தர்மம் செய்தால் அதன் பலன் அவர்களைச் சென்றடையும் என்பதேயாகும். இந்த ஹதீஸில் தர்மம் குறிப்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும் தர்மம் போன்றதே ஏனைய நல்லமல்களும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நல்லமல்களுள் ஒன்றே தர்மம். வஹ்ஹாபி நண்பர்கள் இந்த ஹதீஸையும் கவனத்திற் கொண்டு ஆய்வு செய்து திரையகன்றவர்களாக வேண்டும்.
ஹதீஸ் இலக்கம் –6
இந்த ஹதீஸும் ஐந்தாவது ஹதீஸ் போல் மரணித்தவர்களுக்காக உயிருள்ளவன் கொடுக்கும் ஸதகஹ் – தர்மத்தால் மரணித்தவர்கள் பலன் அடைகின்றார்கள் என்ற கருத்தையே வலியுறுத்துகின்றது. தர்மத்தின் பலன் அவர்களைச் சென்றடைகின்ற தென்றால் ஏனைய வணக்கங்களின் பலனும் சென்றடையவே செய்யும். வணக்கம் என்ற வகையில் தர்மம் அல்லாத ஏனையவையும்தர்மம் போன்றதே. இந்த உண்மையையும் குறித்த தம்பிமார் விளங்கி அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ள வழி செய்து கொள்ள வேண்டும்.
ஹதீஸ் இலக்கம் –7
இந்த ஹதீஸ் தருகின்ற சாரம் என்னவெனில் ஒருவன் ஹஜ் செய்யாமல் மரணித்துவிட்டால் அவனுக்காக அவனின் குடுப்பத்தவர் அல்லது அன்புக்குரியவர் அல்லது நண்பர்கள் ஹஜ் செய்வதால் அதன் பலன் மரணித்தவனைச் சென்றடையும் என்பதேயாகும்.
மேலே சொன்ன ஹதீஸ்களில் துஆவின் பலன் சென்றடைவது போன்றும், தர்மத்தின் பலன் போய்ச் சேர்வது போன்றும், ஹஜ்ஜுடைய பலன் நிச்சயமாக போய்ச் சேருமென்பதில் ஐயமில்லை. நபி (ஸல்) அவர்கள் போய்ச் சேருமென்று சொல்லியிருக்க தம்பிமார் மட்டும் சேராதென்று சொன்னால் யாரை நம்புவது? நபீயையா? தம்பிமார்களையா? தம்பிமார்களிடமுள்ள பிறவிக் குணம் என்னவெனில் தமது கொள்கைக்கு முரணான ஹதீஸ்கள் இருந்தால் அது “ழயீப்”என்று சொல்வதேயாகும். லாயிலாக இல்லல்லாஹ் என்ற திருக்கலிமஹ் ழயீப் என்று சொல்லிவிடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஹதீஸ் இலக்கம் –8
இந்த ஹதீஸ் தரும் சுருக்கம் என்ன வெனில் மரணித்தவர்களுக்கு நோன்பு தவறியிருந்தால் அவர்களின் உறவினர்கள், வாரிசுகள் அவர்களுக்காக தவறிப்போன நோன்பை நோற்பதால் மரணித்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதாகும். உயிரோடுள்ள ஒருவன்மரணித்தவர்களுக்குத் தவறிப்போன நோன்பை நோற்பதால் மரணித்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதாகும். உயிரோடுள்ள ஒருவன் மரணித்தவர்களுக்குத்தவறிய நோன்பை நோற்பதாலும், அல்லது அவர்களுக்காக அவன் விரும்பி நோற்பதாலும் அதன் பலன் நிச்சயமாக அவர்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தம்பிமார் இந்த ஹதீஸையும் கவனத்திற் கொண்டு ஆழமாக ஆய்வு சேய்து அறியாமைச் சிறையிலிருந்து வெளியேற வேண்டும்.
ஹதீஸ் இலக்கம்– 9
இந்த ஹதீஸும் மேற்கண்ட 8வது ஹதீஸ் போல் மரணித்த ஒருவருக்காக உயிரோடுள்ளவர் நோன்பு நேற்றால் அதன் நன்மை அவரைச் சென்றடையும் என்பதையே உணர்த்துகின்றது. இதையும் தம்பிமார் ஆய்வு செய்து அறியாமை மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
ஹதீஸ் இலக்கம்– 10
இந்த ஹதீஸ் மேலே சொன்ன ஹதீஸ்களை விட மிக முக்கியமானதாகும். மரணித்து அடக்கம் செய்யப்பட்ட ஒரு மையித் தனது தந்தை, தாய், சகோதரன், நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை எதிர்பார்ப்பதாகவும் மரணித்தவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவது உயிரோடிருப்போர் மரணித்தவர்களுக்கு வழங்குகின்ற அன்பளிப்பாகுமென்றும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கமாவும் கூறியிருக்க செத்தவனுக்கு கத்தம் எதற்கு என்று மந்திரம் சொல்லும் தம்பிமார் சற்று அறிவுலகில் பிரவேசிக்கவேண்டும்.
ஹதீஸ் இலக்கம் -11
இந்த ஹதீஸ் மேலே சொன்ன ஹதீஸ்கள் போல் உயிரோடுள்ளவன் மரணித்தவர்களுக்காகச் செய்யும் நல்லமலின் பலன் அவர்களைச் சென்றடையும் என்பதையே வலியுறுத்துகின்றது. மேலும் மரணித்தவர்களை சியாறத் சந்திக்கச் செல்வோர் குல்ஹவல்லாஹ் அத்தியாயத்தை 11தரம் ஓதி அதன் நன்மையை அவர்களுக்குச் சேர்த்துவைக்க வேண்டும் என்பதையும்வலியுறுத்துகின்றது.
இதுவரை எழுதிக் காட்டிய ஆதாரங்கள் மூலம் மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்கின்ற நற்காரியங்களும், மரணித்த பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்கின்ற நல்லமல்களும் மரணித்த சகோதரனுக்காக அவனின் சகோதரன் செய்யும் நற்கருமங்களும், மரணித்த ஒரு நண்பனுக்காக அவன் நண்பன் செய்கின்ற நல்லமல்களும், மரணித்த மார்க்க அறிஞனுக்காக அவர் கற்பித்த கல்வியின் பயனும் அவர்களைப் போய்ச் சேரும் என்தை தெளிவாக விளங்கிக் கொண்டோம்.
(தொடரும்……….)
==***==***==***==***==
சங்கைக்குரிய ஷெய்குனாமௌலவி அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
முன்னுரை
உயிரோடுள்ளவர்கள் மரணித்தவர்களுக்காகச் செய்கின்ற தருமம், துஆ, நோன்பு, ஹஜ் நற்கருமங்களினால் மரணித்தவர்கள் பலன் பெறுவார்களா? அவற்றின் நன்மை அவர்களைச் சென்றடையுமா? மரணித்தவர்களுக்காக திருக்குர்ஆன், கத்தம், பாதிஹஹ் ஓதினால் அவற்றின் நன்மை அவர்களுக்குக் கிடைக்குமா? என்ற விடயங்கள் தொடர்பாக இந்நூலில் எழுதியுள்ளேன்.
நான் இத்தலைப்பில் எழுதுவதற்கான பிரதானகாரணம் மேற்கண்டவை இஸ்லாம் மார்க்கத்துக்கு முரணானவை என்று ஒருசில குறை மதியாளர்களும், அரை அறிவாளிகளும் விஷமப் பிரச்சாரம் செய்துவருவதேயாகும்.
மார்க்க அறிஞர்கள் என்று அழைக்கப்படுகின்ற “உலமாஉ”கள் மேற்கண்ட விடயம் தொடர்பாக ஆளுக்கொரு கருத்துக் கூறி மார்க்க அறிவில்லா பொதுமக்களை குழப்பத்தில் தள்ளிவிடுகின்றார்கள். அவர்களோ செய்வதறியாது தடுமாருகின்றனர்.
மேற்கண்ட விடயம் தொடர்பாக மார்க்க அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது. அவர்களில் அநேகர் இது இஸ்லாம் அனுமதித்ததென்றும், இதற்கு ஆதாரங்கள் உண்டு என்றும் சொல்கின்றார்கள். அவர்களில் இன்னும் சிலர் இது இஸ்லாம் மர்க்கத்துக்கு முரணான தென்றும் இதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறுகின்றார்கள்.
முந்தின கூட்டதினர் “ஸுன்னத்வல் ஜமாஅத்” கொள்கையுடையோர் என்றும், பிந்தின கூட்டத்தினர் வஹ்ஹாபியக் கொள்கையுடையோர் என்றும் பொதுமக்களால் அழைக்கப்படுகின்றனர், அடையாளப் படுத்தப்படுகின்றனர்.
மார்க்க அறிஞர்களிற் பலர் ஒரு கருத்தும், வேறு சிலர் இன்னொரு கருத்தும் கூறிக்கொண்டிருப்பதால் மார்க்க அறிவில்லாத பொதுமக்கள் இவர்களில் எவரின் கருத்தை ஏற்பது? எவரின் கருத்தை விடுவது? என்று தெரியாமல் நிலை குலைந்து நிற்கின்றார்கள்.இது ஆகும் என்று சொல்வோரின் கூற்றை பலரும்ஆகாது என்று சொல்வோரின் கூற்றை சிலரும் சரி கண்டு செயற்பட்டு வருகின்றார்கள்.
இதனால் ஒரே விடயத்தில் முரண்பட்ட கருத்துள்ள இரு கூட்டங்கள் முஸ்லிம்களில் உருவாகிவிட்டன. அதோடு இவ்விடயத்தைக் கருவாகக் கொண்டு இரண்டு கூட்டங்களுக்கிடையிலும் கருத்து மோதல்கள் நிகழ்கின்றன. சில ஊர்களைப் பொறுத்த வரையில் இரு கூட்டங்களுக்கும் இடையில் கைகலப்புகளும், மனக்கசப்புகளும் ஏற்படுகின்றன.
உயிரோடுள்ளவர்கள் மரணித்தவர்களுக்காகச் செய்யும் தருமம், தொழுகை, நோன்பு, ஹஜ், திருக்குர்ஆன் ஓதுதல் போன்ற நற்கருமங்களால் மரணித்தவர்கள் பயன் பெறுவர் என்பதைக்கருத்திற் கொண்டு இந்த நடைமுறை காத்தான்குடியிலும், இலங்கையிலுள்ள ஏனைய ஊர்களிலும் இருந்து வந்துள்ளது. முதியோர் தரும் தகவலின் படி இவ்வழக்கம் இலங்கையில் முஸ்லிம்கள் தோன்றிய காலத்தில் இருந்தே வந்துள்ளதென்று தெரியவருகின்றது.
இதே போல் இவ்வழக்கம் உலக முஸ்லிம் நாடுகளில் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுள்ளோரிடமும் இருந்து வருகின்றது.
ஆயினும் எல்லாம் தெரிந்த தம்பிமார் தலையெடுத்த பிறகே இவ்வழக்கம் குறைந்து வருகின்றது.
ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட அன்றிரவு திருக்குர்ஆன் முழுவதையும் அல்லது யாஸீன் அத்தியாயத்தை மட்டும் ஓதி அதன் நன்மையை அவருக்குச் சேர்த்து வைப்பது வழக்கம்.
இந்நிகழ்வு காத்தான்குடியில் இருட்டுக் கத்தம் என்ற பெயரால் அழைக்கப்படும். இந்நிகழ்வில் “உலமாஉ” மர்க்க அறிஞர்கள், மரணித்தவனின் உறவினர்கள், அயலவர்கள், அறிமுகமானோர் கலந்து கொள்வார்கள். அனைவருக்கும் இராச்சாப்பாடு வழங்கப்படும்.
இதே போல் மூன்றாம், ஏழாம், பதினைந்தாம், முப்பதாம், நாற்பதாம் நாட்களிலும் நடைபெறும்.
இவை முறையே மூன்றாம் கத்தம், ஏழாம் கத்தம், பதினைந்தாம் கத்தம், முப்பதாம் கத்தம், நாற்பதாம் கத்தம் என்ற பெயரால் அழைக்கப்படும்.
இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் “உலமாஉ”களுக்கு பணம் நன்கொடையாக வழங்குவதும் வழக்கத்தில் உண்டு.
இவையாவும் மரணித்தவனின் அல்லது அவனின் உறவினர்களின் பொருளாதார வசதிக்கேற்றவாறு சிறிதாகவும், பெரிதாகவும் நடைபெறும்.
ஒருவன் மரணித்து சரியாக ஒருவருடம் பூர்த்தியானால் ஆண்டுக்கத்தம் என்ற பெயரில் இந்நிகழ்வு நடைபெறும். பின்னர் வருடத்துக்கொரு தரம் ஓராண்டு நினைவு, இரண்டாண்டு நினைவு என்ற பெயரில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.
குறிப்பாக நாற்பதாம் நாள் நினைவு தினம் அதி விஷேடமாக அனுஷ்டிக்கப்படும். அன்று மரணித்தவன் பெயரால் யாஸீன் கிதாபுகள், திருக்குர்ஆன் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக விநியோகிப்பதும் உண்டு.
மரணித்தவன் செல்வந்தனாயின் பள்ளிவாயலில் ஜனாசஹ் தொழுகை நடாத்தப்பட்ட பின் அங்கேயே உலமாஉகளும், ஓதத்தெரிந்தவர்களும் அமர்ந்து திருக்குர்ஆன் முப்பது பாகங்களும் ஓதி அதன் நன்மையை மரணித்தவனுக்குச் சேர வேண்டுமென்று பிராத்தனை செய்வதும்,அங்கு கூடுவோருக்கு பணம் அன்பளிப்புச் செய்வதும், பின்பு ஜனாசஹ்வை மையவாடிக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யும் வழக்கமும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் இருந்து வந்தது. காலப்போக்கில் இவ்வழக்கம் கைவிடப்பட்டு விட்டது.
வஹ்ஹாபிஸ வழிகேடு இலங்கை நாட்டில் பரவத்தொடங்கிய பின் மரணித்தவர்களுக்காக திருக்குர்ஆனை ஓதி அதன் நன்மையை அவர்களுக்குச் சேர்த்து வைக்கும் மேற்கண்ட வழக்கமும், ஸலவாத் திக்ர் போன்றவை ஓதி அதன் நன்மையை அவர்களுக்குச் சேர்த்து வைக்கும் வழக்கமும் குறைந்து விட்டன.
இதற்குக் காரணம் வஹ்ஹாபிஸ வழிகேடர்களின் விஷமப் பிரச்சாமேயாகும். இந்தக்குறை மதியாளர்கள் செத்தவனுக்கு கத்தம் எதற்கு? என்ற தாரகை மந்திரத்தை ஜெபித்து ஜெபித்து ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களைக் கவர்ந்து விட்டார்கள். அதோடு தமது வழிகேட்டை அவர்களின் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களுக்கு வீடு, மலசலகூடம்,கிணறு போன்றவை கட்டிக் கொடுத்தும். பணம் கொடுத்தும் அவர்களைத்தம்பக்கம் சாய்த்துக் கொண்டார்கள்.
எனவே, செத்தவனுக்கு கத்தம் எதற்கு என்று கேட்க்கும் வழிகேடர்கள் நல்வழி பெறவேண்டும் என்பதையும் அறியாமல் அவர்களின் வலையில் சிக்குண்டு தடுமாறி நிற்கின்றவர்களின் நல்வழியையும் கருத்திற் கொண்டு மரணித்தவர்களுக்கு கத்தம், பாத்திஹஹ், திருக்குர்ஆன், ஸலவாத் போன்றவை ஓதி அவற்றின் நன்மையை அவர்களுக்குச் சேர்த்து வைத்தல் தொடர்பாக வந்துள்ள ஆதாரங்களை இச்சிறுநூலில் எழுதுகின்றேன்.
இந்நூலை வாசிக்கும் உலமாஉகள், அறிஞர்கள் இதில் பிழை இருக்கக்கண்டால் பெருமனதுடன் எனக்கு அறிவிக்கு மாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். அவர்களின் கூற்று சரியான தென்று அறியப்பட்டால் அதை மறுபதிப்பில் திருத்திக் கொள்வேன். இன்ஷா அல்லாஹ்!
கத்தம் ஒரு கண்ணோட்டம்
“கத்தம்”என்ற சொல் “கத்ம்”அல்லது “கத்முன்” என்ற சொல்லின் மருவிய சொல்லாகும். இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்”என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும். “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களயும் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்” நிகழ்வு என்றும், திருக்குர்ஆன் “தமாம்” நிகழ்வு என்றும் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் சொல்வார்கள்.
ஒருவர் செய்த நல்லமலின் மற்றவருக்குப் போய்ச் சேராது என்பதற்கும், ஒருவர் திருக்குர்ஆனை அல்லது யாஸீன் அத்தியாயத்தை ஓதி அதன் பலனை மற்றவருக்குச் சேர்த்து வைக்க முடியாதென்பதற்கும் வஹ்ஹாபிகள் கூறும் ஆதாரத்தையும், அதற்கான விளக்கத்தையும் முதலில் எழுதி பின்னர் அது கூடுமென்பதற்கான ஆதாரங்களையும், விபரங்களையும் எழுதுகின்றேன்.
வஹ்ஹாபிகளே!
பிடிவாதம் ஒரு பயங்கர நோய். இந்நோயால் பாதிக்கப்பட்ட எவரும் வெற்றி பெறவில்லை. ஆகையால் பிடிவாதம் விட்டு சற்று நிதானமாகச் செல்லுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் கொள்கை வழிசெல்லும் அறிஞர்களிடம் மட்டும் விளக்கம் பெறாமல் உங்கள் கொள்கையை எதிர்த்து விளக்கம் கூறும் அறிஞர்களிடமும் விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். கண்டதெற்கெல்லாம் “ஷிர்க்” என்றும் “பித்அத்” என்றும் செல்லி விடாதீர்கள். எதையும் ஆழமாக ஆய்வு செய்யுங்கள்.
இந்நூல் சிறியதாயினும் “ஈஸால்தவாப்” இஸ்லாம் அனுமதித்த ஒன்றென்பதை மறுக்க முடியாத நபி மொழிகள் கொண்டும், தரமான இமாம்களின் திருவாக்குகள் கொண்டும் நிருவி இருக்கிறேன்.
وعين الرضا عن كل عيب كليلة
ولكنَ عين السخط تبدي المساويا
இந் நூலை “ரிழா”பொருத்தம் என்ற கண் கொண்டு பார்த்தால் குறையும் நிறைவாகவே தெரியும். மாறாக கோபம் என்ற கண் கொண்டு பார்த்தால் நிறைவும் குறைவாகவே தெரியும்.
ஆகையால் நிறைவு என்ற கண் கொண்டு பார்த்து நீங்களும் நல்வழி பெற்று பிறரும் நல்வழி பெற வழியாக இருந்து கொள்ளுங்கள். சர்ச்சைக்குரிய பிரசினைகளுக்கு, தீர்வு காண திருக்குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் என்ற நான்கு மூலாதாரங்களையும் ஆதாரமாக கொள்ளுங்கள். சிந்தியுங்கள். செயல்படுங்கள்.
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே!
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணான கொள்கையுடையோர் கூறும் கருத்துக்களை மறுத்துரைத்து ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது உங்களின் தலையாய கடமையாகும். மயில் வேஷம் போட்டால் ஆடவேண்டும். குயில் வேஷம் போட்டால் கூவ வேண்டும். நீங்கள் “உலமாஉ” அறிஞர்கள் என்ற சீருடை அணிந்தவர்கள், மக்களை இயக்கும் “றிமோட் கொன்றோல்” உங்கள் கையிலேயே தரப்பட்டுள்ளது நீங்களும் சரியாக இயங்குவதுடன் மக்களை சரியாக இயக்குங்கள்.நாங்கள் ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் எங்களை எவராலும் அசைக்க முடியாது என்று நாலுபேர்களுக்கு முன்னால் மார்தட்டும் நீங்கள் மக்கள் மன்றத்துக்கு வாருங்கள். மெளலித் ஓதலாம் என்று அறைக்குள் குசுகுசுக்கும் நீங்கள் அம்பலத்துக்கு வந்து ஓதிக்காட்டுங்கள். அவ்லியாஉகளின் சியாறத் சமாதிகளுக்குச் சென்று சியாறத் செய்யலாம் என்று இரகசியமாகக்கூறும் நீங்கள் சமாதிகளுக்குச் சென்று பகிரங்கமாக சியாறத் செய்து காட்டுங்கள்.உங்களின் மெளனமும், ஸுன்னத்வல்ஜமாஅத் நடவடிக்கைகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி வாழ்வதும் வஹாபியத்துக்கு உரம் போடுவதாகவே அமையும் என்பதைக் கருத்திற் கொண்டு செயல்படுங்கள்.
வஹ்ஹாபிகளின் ஆதாரம்
وان ليس للإنسان إلا ماسعي
ஒரு மனிதனுக்கு முயற்சித்தது அன்றி வேறில்லை.
திருக்குர்ஆன்
இத்திருவசனத்தை மேலெழுந்தவாரியாக பார்த்து விட்டு ஒருவர் செய்த நல்லமலின் பயன் மற்றவருக்குப் போய்ச் சேராது என்று வஹ்ஹாபிகள் கூறுகின்றார்கள். இவர்கள் நினைப்பது போல் திருவசனத்தில் ஒன்றுமில்லை. தவறான விளக்கம் தடுமாறச் செய்து விட்டது.
இதே சரியான விளக்கம் சற்று நிதானமாகப் படியுங்கள்.
மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள “லில்” இன்ஸான் என்ற சொல்லில் “லாம்” என்ற எழுத்து அறபு மொழி இலக்கணப்படி சொந்தம், உரிமை என்ற பொருள்களைத்தரும். இதன் படி பார்த்தால் (ஒரு மனிதனுக்கு முயற்சித்து அன்றி உரிமையானதாக இல்லை – ஒரு மனிதனுக்கு உரிமையானதாகஅவன் முயற்சித்தது அன்றி இல்லை) என்று பொருள்வரும்.
இதே கருத்தை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் இன்னும் தெளிவு ஏற்படும்.
(ஒரு மனிதனுக்கு அவன் உழைத்தது அன்றி உரிமையானதாக இல்லை – ஒரு மனிதனுக்கு உரிமையானதாக அவன்உழைத்தது அன்றி இல்லை)
இதன் படி உழைத்துக் கிடைத்த கூலி அவனுக்குச் சொந்தமானதாகும். அவன் விரும்பினால் அவனே அதை வைத்துக் கொள்ளலாம் அல்லது பிறருக்கு அன்பளிப்பாகவும் கொடுக்கலாம்.
இதேபோல் ஒருவன் செய்த நல்லமலின் நன்மைக்குக் – கூலிக்கு அவனே முழு உரிமை பெற்றவனாகின்றான். அவன் விரும்பினால் அதை தானே வைத்துக் கொள்ளலாம். அல்லது மற்றவருக்கு அன்பளிப்புச் செய்யலாம். ஆனால் ஒருவன் தான் செய்தநல்லமலின் கூலியை மற்றவருக்குச் சேர்த்து வைத்தால் அது அவருக்கு சேராதென்றா அல்லது அதன் மூலம் அவர் பயன்பெறமாட்ரென்றோ பொருள் கொள்ள மேற்கண்ட வசனத்தில் மண்ணளவும் இடமில்லை.
கிதாபுர்றூஹ் மஸாயில்
பக்கம் – 04
வஹ்ஹாபிகள் சொல்வது போல் ஒருவனுக்கு அவன் செய்தது மட்டுமே கிடைக்கும். மற்றவர்கள் செய்த நல்லமலின் பலன் கிடைக்காதென்று வைத்துக் கொண்டால் ஒருவனுக்காக மற்றவர் செய்யும் தொழுகை, தானதருமங்கள், ஹஜ், பாவமன்னிப்புக் கேட்டல் போன்ற நல்லமல்கள் அவனைச் சென்றடையும் என்று கூறுகின்ற அநேக திருக்குர்ஆன் வசனங்களுக்கும், அதேபோல் அநேக ஹதீஸ்களுக்கும் முரணாகிவிடும். குறிப்பாக பெற்றோர் செய்த நற்செயலால் பிள்ளைகளுக்கு (அவர்களின் எவ்வித முயற்சியுமின்றி ) புதையல் கிடைத்தது என்று கூறுகின்ற ஸூறதுல் கஹ்பு 82 வசனத்திற்கும், இன்னும் இதே கருத்தை உள்ளடக்கிய ஏனை வசனங்களுக்கும் முரணாகிவிடும்.
இதனால் தானோ என்னவோ திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூறிய “றயீஸுல் முபஸ்ஸிரீன்” திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் செய்யிதுனா இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் மேற்கண்ட வசனம் “மன்ஸூஹ்” சட்டம் மாற்றப்பட்ட வசனம் என்று கூறியுள்ளார்கள்.
உத்ததுல்காரீ
பாகம் – 03,பக்கம் -119
மேலும் இச்சட்டம் இப்றாஹீம் (அலை) மூஸா (அலை) ஆகியோரின் சமூகத்தாருக்கு சொந்தமானதேயன்றி நபி ஸல் அவர்களின் சமூகத்தாருக்கு அல்ல; நபி ஸல் அவர்களின் சமூகத்தாரைப் பொருத்தவரை அவர்கள் செய்ததும் அவர்களுக்குக் கிடைக்கும்; மற்றவர்கள் செய்வதும் அவர்களைச் சென்றடையும் என்று இக்ரிமா (றழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
உத்ததுல்காரீ
பாகம் – 03,பக்கம் -119
மேற்கண்ட வசனத்தில் வந்துள்ள “இன்ஸான்” மனிதன் என்ற சொல் காபிரைக் குறிக்குமேயன்றி விசுவாசியைக்குறிக்காதென்றும், ஒரு மனிதனுக்கு அவன் செய்தது மட்டுமே அவனுக்கு கிடைக்குமென்பது காபிரானவனுக்கேயாகும். என்றும் றபீஉ இப்னு அனஸ் (றழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
உத்ததுல்காரீ
பாகம் – 03,பக்கம் -119
எனவே وان ليس للإنسان إلا ماسعيஒருமனிதனுக்கு அவன் முயற்சி செய்ததே அன்றி இல்லை என்ற திருவசனத்தின் வெளிப்படையான விளக்கத்தைமட்டும் வைத்துக் கொண்டு செத்தவனுக்கு கத்தம் எதற்கு? என்று கூச்சலிடும் வஹ்ஹாபிகள் கண்களை அகல விரித்து அல்குர்னை ஆய்வு செய்யவேண்டும்.
இவர்களின் கருத்துக்கு மாறாக கருத்துக் கூறியுள்ள ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் (றழி), ஸெய்யிதுனா இக்ரிமா (றழி), ஸெய்யிதுனா றபீஉ இப்னு அனஸ் (றழி) ஆகியோர் இந்த வஹ்ஹாபித் தம்பிகளை விட அறிவிலும், ஆய்விலும், அநதஸ்த்திலும் அதி உயர்ந்தவர்கள் என்பதையும் தம்பிமார் தெரிந்து கொள்ளவேண்டும்.
உண்மையைக் கண்டறிய ஆய்வு ஒன்றே சரியான வழியாகும். இவ்வழியிற் செல்லாமல் தமது கருத்தை மற்றவர்கள் ஏற்றாக வேண்டுமென்று பிடிவாதம் பண்ணுவதும், செத்தவனுக்கு கத்தம் எதற்கு? என்று தெருவெங்கும் ஊழையிடுவதும் மாபெரும் பரிசுத்திட்டம் ஐந்து மில்லியன் என்று பிரசுரங்கள் வெளிவிடுவதும் உண்மையைக் கண்டறிவதற்கான சரியான வழி அல்ல. பெட்டி பீற்றலாயினும் வாய்க்கட்டுப்பலமாக இருக்கவேண்டுமென்பதை இந்த வஹ்ஹாபித்தம்பிகளே சரியாக விளங்கி வைத்துள்ளார்கள்.
தொடரும்……..