காத்தான்குடி ஸுன்னீ உலமாஉகளே!

May 22, 2019

வஹ்ஹாபிஸம் வழிகேடு வழிகேடென்று பல வருடங்களாக கூறி வந்துள்ளேன். இன்றுவரை கூறிக் கொண்டே இருக்கின்றேன்.

இது மட்டுமல்ல வஹ்ஹாபிஸம் வழிகேடுதான் என்று பல இலட்சம் ரூபாய் செலவில் பல நூறு இறு வெட்டுக்கள் பேசியும், பல நூல்கள் எழுதியும் வெளியிட்டு இலவசமாக விநியோகித்தும் வந்துள்ளேன். அவற்றில் “வஹ்ஹாபிஸ முகவர்கள் வழிகேட்டின் தரகர்கள்” என்ற நூலும், “வஹ்ஹாபிஸ வழிகேடு நம் நாட்டுக்கு சாபக்கேடு” என்ற நூலும் அடங்கும்.

இவ்விரண்டும் சிறிய நூல்களாகும். இவை தவிர வேறு பெயர்களில் நான் எழுதி வெளியிட்டு இலவசமாக விநியோகித்த பல நூல்களிலும் வஹ்ஹாபிஸம் வழிகேடென்று ஆதாரங்களுடன் நிறுவி உள்ளேன்.

இவை போதாதென்று “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற பெயரில் 1700 பக்கங்கள் கொண்ட விரிவான ஒரு நூல் எழுதி அச்சகத்தில் ஒப்படைத்தும் உள்ளேன். இது 65 இலட்சம் ரூபாய் செலவில் அச்சிடப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் இந் நூல் எதிர்வரும் புனித நோன்புப் பெருநாளை அடுத்து வெளிவர உள்ளது.

பல சிரமங்களுக்கு மத்தியில், பல இலட்சம் ரூபாய்கள் செலவிட்டு இப்பணிகளை நான் செய்து வருவது நன்மை கருதி மட்டுமேயன்றி பொருளீட்டும் நோக்கத்திலோ, புகழ் தேடும் நோக்கத்திலோ அல்ல. இவ்வுண்மை காத்தான்குடியிலுள்ள மக்களில் என்னை ஆதரிப்பவர்களுக்கும் தெரியும். எதிர்ப்பவர்களுக்கும் தெரியும்.

நான் இது காலவரை வெளியிட்டுள்ள நூல்களில் “வஹ்ஹாபிஸம் வழிகேடு” என்பதை நிறுவக் கூறியுள்ள ஆதாரங்கள் புனித “நிய்யத்” எண்ணத்தோடு நல்வழி பெற நாடியவர்களுக்கு போதுமான ஆதாரங்களாகும். வஹ்ஹாபிஸத்தின் மூலவர் இப்னு அப்தில் வஹ்ஹாப் இன்று உயிருடன் இருந்தால் அவரும் நல்வழி பெற்று ஒரு “ஸுன்னீ”யாக மாறியிருப்பார் என்பதில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. “அல்ஹம்து லில்லாஹ்”.

காத்தான்குடியில் வாழும் அன்பிற்குரிய “ஸுன்னத் வல்ஜமாஅத்” உலமாஉகளே!

நான் எழுதி வெளியிட்ட நூல்களில் எத்தனை நூல்களை நீங்கள் வாசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் அவற்றில் ஒன்றைக் கூட வாசித்திருப்பீர்களா அல்லது புத்தகத்தையேனும் கண்டிருப்பீர்களா என்பது எனக்குச் சந்தேகமே!

வஹ்ஹாபிஸத்தின் பின்னணி பயங்கரவாதம் என்பதை மட்டும் நீங்கள் நிச்சயமாக நம்புங்கள். இதற்கு ஆதாரம் கொலைகாரன் ஸக்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இவன் காத்தான்குடியில் தலை நீட்டிய போது ஒரு வஹ்ஹாபியாக மட்டுமே இருந்தான். பயங்கரவாதியாகவோ, கொலை காரனாகவோ இருக்கவில்லை. ஆனால் ஒரு “பித்னா” குழப்பவாதியாகவும், பித்தலாட்டக்காரனாகவும், அடங்காப் பிடாரியாகவும் மட்டுமே இருந்தான். இவன் தனது தாடிக்குள் பயங்கரவாதத்தை மறைத்து வைத்திருந்ததை நீங்களும் அறிந்திருக்கவில்லை. நானும் அறிந்திருக்கவில்லை.

வஹ்ஹாபிஸம் என்பது பயங்கரவாதத்திற்கு வழி காட்டும். கொலைக்கு வித்திடும். ஏனெனில் வஹ்ஹாபிஸத்தின் மூலவரின் வரலாறை வாசித்தவர்களுக்கு இவ்வுண்மை விளங்கும். விபரமாக எழுதத்தேவையில்லை.

எனினும் சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகிறேன். வஹ்ஹாபிஸத்தின் மூலவர் ஆயிரக்கணக்கான “ஸுன்னீ” உலமாஉகளை கொன்றவர். அவர்களை மட்டுமன்று தனது கொள்கைக்கு எதிரான இமாம்கள் போன்ற பெரும் அறிவுக்கடல்களையும், ஸூபிஸ ஞான மகான்களையும் கொன்றொழித்தவர்.

ஓர் அமைப்பின் மூலவரின் கொள்கை அவ்வமைப்பின் உயிர் “றூஹ்” போன்றதாகும். நிச்சயமாக அவரின் கொள்கை அவ் அமைப்பில் வெளியாகாமல் இருக்காது. இதை நிறுவ கொலைகாரன் ஸக்றானின் ஈனச் செயல் ஒன்று மட்டுமே போதும்.

அன்பிற்குரிய ஸுன்னீ உலமாஉளே!

இன்று வஹ்ஹாபிஸ அமைப்புக்கள் பல பல பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் வஹ்ஹாபிஸக் கொள்கையில் ஒன்றுபட்டவர்களேயாவர்.

இவர்களின் கொள்கைகளில் அவ்லியாஉகளின் சமாதிகளை – தர்ஹாக்களை உடைத்து தரை மட்டமாக்குவதும், மௌலித் ஓதுதல், கந்தூரி கொடுத்தல், அவ்லியாஉகளிடம் “வஸீலா” உதவி தேடுதல் முதலானவற்றை “ஷிர்க்” இணைவைத்தல் என்று சொல்வதும் மிகப் பிரதான அம்சங்களாகும். இவ்வாறு செய்வோரை முஷ்ரிக்குகள் என்பது இவர்களின் “பத்வா”வும், கொள்கையுமாகும்.

தற்போது தடை செய்யப்பட்ட வஹ்ஹாபிஸ அமைப்புகள் போக தடைசெய்யப்படாமல் இயங்கிவருகின்ற, பல பெயர்களில் செயல்பட்டு வருகின்ற வஹ்ஹாபிஸ அமைப்புக்கள் சமாதிகளை உடைக்கமாட்டார்கள் என்பதற்கும், அவ்லியாஉகளின் பக்தர்களை “முஷ்ரிக்” இணைவைப்பவர்கள் என்று சொல்லமாட்டார்கள் என்பதற்கும் எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.

இவ் அமைப்புக்கள் மேற்கண்டவாறு கொலைகாரன் ஸக்றானின் பாணியில் செயல்படுவார்களாயின் நாட்டில் முஸ்லிம்களுக்கிடையிலேயே குழப்பங்களும், கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும், மற்றும் யுத்தங்கள் கூட ஏற்படச் சாத்தியம் உண்டு. இதற்கு ஆவணரீதியான ஆதாரம் என்னிடமில்லாதுபோனாலும் கொலைகாரன் ஸக்றான் மறுக்க முடியாத ஓர் ஆதாரம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

அன்பிற்குரிய ஸுன்னீ உலமாஉகளே!

வஹ்ஹாபிஸ வழிகேட்டை எதிர்த்து “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையை நமதூர் மட்டத்தில் மட்டுமாவது நிலை நாட்ட வேண்டுமென்ற “நிய்யத்” எண்ணம் உங்களிடம் உண்டு. இதை நான் அறிவேன். இதற்காக வெளியூரிலுள்ள பள்ளிவாயல் ஒன்றில் நள்ளிரவில் நடுநிசியில் இரகசிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியுள்ளீர்கள். இதையும் நான் அறிவேன். نِيَّةُ الْمُؤْمِنِ خَيْرٌ مِنْ عَمَلِهِ “விசுவாசியின் எண்ணம் அவனின் செயலைவிடச் சிறந்தது” என்ற வகையில் அதற்கான நன்மை உங்களுக்கு உண்டு. எனினும் நீங்கள் திட்டமிடும் சொல் வீரர்களேயன்றி செயலாற்றும் செயல் வீரர்கள் அல்ல. ஆயிரம் திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆனால் ஒரு திட்டத்தைக் கூட செயற்படுத்தமாட்டீர்கள்.

நீங்கள் உலமாஉகள், மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும், கடமையும் உங்களுக்கே உண்டு. ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيْمِ அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அறிவு என்ற அருள் பற்றி நிச்சயமாக உங்களிடம் கேட்பான். பதில் கூற தயாராக இருந்து கொள்ளுங்கள். வஹ்ஹாபிகளின் அட்டூழியத்தையும், அட்டகாசத்தையும் நீங்கள் கண்டும் காணாதவர்கள் போல், அறிந்தும் அறியாதவர்கள் போல் இருந்ததினால்தான் ஸக்றான் தலை தூக்கினான். கதாநாயகன் ஆனான். உங்களின் மௌனமே அவனை வளர்த்ததும், அவனைக் கொலைகாரனாக ஆக்கியதுமாகும். இந்த வகையில் அவனுடைய பாவத்தில் உங்களுக்கும் பங்குண்டு.

எனவே, வஹ்ஹாபிஸம் என்ற பயங்கரவாதியின் அட்டூழியத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காகவும், நாட்டில் வாழும் பல்லின மக்களிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தி கொலை அச்சுறுத்தலின்றி மக்கள் நடமாடுவதற்காகவும், வணக்க வழிபாடு செய்வதற்காகவும், வஹ்ஹாபிஸ வழிகேட்டை சாத்வீக, ஆன்மீக அடிப்படையிலும், அழகான அறிவுரைகள், ஆன்மீகப் பயிற்சிகள் மூலமும் இல்லாதொழிக்க ஸுன்னீ உலமாஉகளான நீங்கள் கலப்பற்ற எண்ணத்தோடும், கருத்து வேறுபாடின்றியும் கை கோர்த்து செயல்படுமாறு உங்கள் அனைவரையும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் என்னைப் புறம் தள்ளாமல் எந்தவொரு நிபந்தனையுமின்றி என்னுடன் இணைந்து இப்பணியை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால் உங்களுக்காக என் கதவு இராப்பகலாய் திறந்திருக்கும்.

இலங்கையில் ஸுன்னீகளுக்கென்று தனியான உலமா சபை இல்லாதவரை நாட்டில் மார்க்க ரீதியான ஒற்றுமை நிலவ வழியே இல்லை. கலப்பு ஜம்இய்யதுல் உலமாவினால் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் எட்ட முடியாது.

இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கலப்பு சபையாக இருப்பதினால்தான் இஸ்லாம் உலமாஉகளின் காற்பந்தாகி அடிவாங்குகிறது.

மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ
தலைவர் – அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
(Incorporated by Act of parliament No 46 of 2009)
BJM வீதி, காத்தான்குடி 06.
22.05.2019

You may also like

Leave a Comment