கொள்கைக்காக உயிர் வாழ்வோம்

March 2, 2018

கவிதை – மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ

அருளே அல்லாஹ் அருவுருவானோன்
இதய இருளை நீக்கும் ஒளிமயமானோன்
கருவாய் அகிலம் அனைத்தும் ஆனோன்
உருவாய் உள்ளவை எல்லாம் ஆனோன்

கருவின் உருவாய் கல்கின் முதலாய்
திருவாய் மலர்ந்த முஹம்மது நபியை
மரகத கவி மணி மாலை சூடி
முறையுடன் புகழ்ந்தேன் பாக்கள் பாடி

அப்தால் பிரிவில் தோன்றிய நாதர்
அப்துல் ஜவாத் எனும் அருந்தவ சீலர்
ஒப்பார் இல்ல இன்ஷான் காமில்
உஸ்தாத் நாமம் ஓதினேன் பணிந்து

அஜ்மீர் பதியின் அருள்மிகு ரோஜா
ஆன்மீக வானில் இலங்கிடும் சிதாரா
அண்ணலே ஹாஜா அவர் திரு மைந்தர்
அற்புத ஸர்வார் ஆண்டிடும் ராஜா
ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் பாடி
ஆயிரம் ஆயிரம் கவி மலர் சூடினேன்.

அன்பே! அல்லாஹ்வின் அருட்கொடையே!
அப்துல் ஜவாத் அருந்தவத்தால் வந்த முத்தே!
அப்துர் றஊப் எனும் ஞான வித்தே!
வம்பர்க்கு நெருப்பே! நல்லன்பர்க்குத் தண்ணீரே!
வல்லோன் ஞானத்தின் ஊற்றே!
கொள்கைக்காய் உயிர் வாழும் கோனே!
கொள்கை என்றால் என்னவென்றும்
கொள்கைவாதி யார் என்றும்
காட்டி வைத்த சற்குருவே!
வாழ்த்தினோம் உம்மை
நீண்ட நாள் வாழ்கவென்று
போற்றினோம் உங்களை
பகைவர் செத்து மடிகவென்று

நான் கஃபுமல்ல ஹஸ்ஸானும் அல்ல
சுஹைருமல்ல சாதாரணமான பாவலன்
நபிகளை புகழ்ந்தார்கள் கவிஞர்கள் அவையிலிருந்து
நாங்கள் கவிதையில் ஏழைகள்
முடிந்தவரை உங்களைப் புகழ்கிறோம்
எங்கள் புகழ் போதாது!

காரணம், கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்
கவி அரங்கின் கரு நீங்கள்தான்
நீங்களின்றேல் இவ்வரங்கில்லை
நாமில்லை, நம் கூட்டமில்லை
இறை வேறு நாம் வேறு என்று
ஷிர்க்கில் மூழ்கி இருந்திருப்போம்!
ஸிறாதுல் முஸ்தகீமை வி்ட்டும்
சறுக்கி விழுந்திருப்போம்!

இறைவன் உங்கள் மூலமாக எங்கள் நெஞ்சில்
“எல்லாம் அவன்” எனும்
ஞானதீபத்தை ஏற்றி வைத்தான்!
அன்று நீங்கள் நட்டிய தௌஹீத் விருட்சம் தான்
இன்று கனி கொடுக்கிறது.
அந்த தௌஹீத் விருட்சத்தை
அடியோடு பிடுங்கி எரிய வந்த
பேய் பஷாசுகள் ஷெய்த்தான்களை
தௌஹீத் சாட்டையினால் விரட்டி அடித்தீர்கள்
அன்றும் இன்றும்

நீரூற்றி உரம் இட்டீர்!
கண் விழித்து பாதுகாத்தீர்!
இன்று விழுதுகள் விட்டு பூத்து காய்க்கிறது
கனி கொடுக்கிறது தௌஹீத் மரம்
நாம் கனி பெறுகிறோம்! சுவைக்கிறோம்!
அது நிழல் தருகிறது அதன் நிழலில் ஒதுங்குகிறோம்.

இவ்வாறே மறுமையிலும்
அதன் நிழலில் ஒதுங்குவோம்.
அதன் கனிகளை சுவைப்போம் – காரணம்
அவ்விருட்சம் அழிந்து விடுவதில்லை
இது எம் நம்பிக்கை. அதுவே இறை நம்பி்க்கை

கொள்கைக்காக உயிர் வாழும்
கவி அரங்கம் மலர்கிறது

சொல்லும் கவிதை சுவைப்பதற்கு
சூழ்தன இங்கே தேனீக்கள்
வள்ளல் ஹாஜாவின் விழாவில்
அள்ளிக் கவிதை சொரிதற்கு
கொள்கை கவிஞர் கூடியுளார்
கேட்போம் நெஞ்சம் பூரிப்போம்.

நபி அவை கவிஞர் ஹஸ்ஸான் கஃபை
கருத்தில் கொண்ட எம் கவிக்கனிகாள்
கொள்கை கவிஞர் கவிஞர் றபாய்தீன்
தென்கிழக்கின் தௌஹீத் வளாகம் கவிஞர் றிழ்வான்
வலீமார் புகழ் கவி கவிஞர் ஜப்பார்
தேன் தமிழில் கவி வழங்கும்
ஏகத்துவக் கவி கவிஞர் றஹீம்

அவையை அலங்கரிக்கும்
ஹம்ஸா, அலீ போன்ற வீரர்காள்
உமர், ஜஃபர் போன்ற தீரர்காள்
முஆத், முஅத்தின் போன்ற சிறுவர்காள்
சுமையா,பாதிமா போன்ற நங்கையர்காள்
உஸ்மான், தல்ஹா போன்ற வள்ளல்காள்
அபூஹுரைறா போன்ற திண்ணைத் தோழர்காள்
அபூபக்கர் போன்ற இனிய நண்பர்காள்
நீங்கள் அண்ணல் நபீயின் தோழர்களை
நினைவில் கொணரும் சின்னங்கள்
ஆட்கள் தான் மாறுகிறார்கள்
கொள்கை மாறுவதில்லை
அதனால் நீங்கள் வாழி! நீங்கள் வாழி!
உங்கள் தொழில் வாழி!
உங்கள் சொத்துக்கள் வாழி!
உங்கள் உறவினர்கள் வாழி!
அவர்கள் தௌஹீத் வாதிகளாக இருந்தால்

கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்
கவியரங்கில் நாம் நுழைவோம்

அரசியலுக்காய், புகழுக்காய்
அவனியில் பட்டம் பதவிக்காய்
உயிர் வாழ்கின்ற உலகமதில்
கொள்கைக்காய் உயிர் வாழும்
ஒரே ஒரு கூட்டம் நாமேதான்!
வாழ்க்கைக்காக கொள்கையினை
வகுத்துக் கொண்டோர் நாமல்லர்
கொள்கைக்காக வாழ்க்கையினை
வரித்துக் கொண்டோரே நாங்கள்!

உலமா சபையின் ஊடுறுவல்
உதவா தீர்ப்பால் ஒன்றிணைந்தோம்
ஒருமை தௌஹீத் ஏகமதில்
இரு தசாப்தங்களை கழித்திட்டோம்
இணையிலா துன்பம் தனைச் சுமந்தோம்
ஏகனின் தௌஹீத் தனில் நின்றோம்.
இத்துனை துன்பம் எதற்காக?
ஏகனின் தௌஹீ்த் கொள்கைக்காக – எனவே
கொள்கைக்காக உயிர் வாழ்வோம்
என்றும் கொள்கைக்காக உயிர் வாழ்வோம்.

எம்மவர்க்கு நெற்றியடி அடிக்க வந்தவர்க்கு
நாமும் இடித்தோம், அடித்தோம்.
கத்தியால் அல்ல கல்லால் அல்ல புத்தியால்
அதனால் அவர்கள் சித்த சுவாதீனம் அற்று
இன்றும் கிடக்கிறார்கள்.

ஊடுறுவல் விலங்கை உடைத்தெறிவதற்கும்
ஞான ஏடுகளில் உள்ளவற்றை எடுத்தோதுதற்கும்
கேடுடைய வஹ்ஹாபிஸத்தை கிள்ளி எறிதற்கும்
உயிர் வாழ்வோம்! நாம் கொள்கைக்காய் உயிர்வாழ்வோம்!

முர்தத் பத்வாவின் முகத்திரை கிழிப்பதற்கும்
அர்த்தமுள்ள இஸ்லாத்தை அர்த்தமுடன் பரப்புதற்கும்
குர்ஆனில் அத்துவித தத்துவத்தை விளங்குதற்கும்
கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்!
கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்!

என் இதய அத்வைத தோழர்காள்,தோழிகாள்!
எம்மூரில் எத்தனை பேர் கொள்கைக்காய் வாழ்கின்றார்
நம் கூட்டம் ஒன்றுதான் அன்று முதல் இன்று வரை
கொள்கைக்காய் வாழ்கிறது.
அரசியலில் உறவியலில் அணி திரண்டோர் பிரிந்திடுவர்
ஆனால், நம் ஆன்மீகம் ஒன்றுதான்
அன்று முதல் இன்று வரை நிலைத்திருக்கும்

பணம் அழியும்!
பந்தம் அழியும்!
பாசம் அழியும்!
பார் அழியும்!
ஆனால் உயர் தௌஹீத் அழியாது!
அது கொண்ட உடல் கூட அழியாது அழியாது!
அதனால் நாம் கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்

ஊரெங்கும் மஸ்ஜிதுகள் நிறைந்திருக்க – இந்த
இறையில்லம் பத்ரிய்யஹ் ஏன் ஓடி வருகின்றோம்
தெருவெங்கும் உலமாக்கள் திரண்டிருக்க – இந்த
திருப்பள்ளி ஆலிம்களை ஏன் தொடர்கின்றோம்
சிந்தித்தோமா! கொள்கைக்காக!
அதனால் கொள்கைக்காக உயிர் வாழ்வோம்
உயிருள்ள வரை கொள்கைக்காக உயிர் வாழ்வோம்

கந்தூரி வேலைகளை காசுக்கா செய்கின்றோம்
சந்திகளில் விழித்திருந்து காவல் புரிவதும்
ஹாஜாஜீ தொண்டுகளை காசு கட்டி செய்வதும்
கொள்கைக்காய் அன்றி எதற்காக?
எனவே, கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்
உயிர் அடங்கும் நேரம் வரை.

கால் கடுக்க கை கடுக்க கடும் பணிகள் செய்தீர்கள்
தோல் வலிக்க சுமை தாங்கி தொண்டாற்றி மகிழ்ந்தீர்கள்
வாழ்க்கைக்காய் உழைத்தாலும்
வள்ளலுக்கு உழைத்தது போல்
கூலிக்கும் உழைக்கமாட்டீர்!
ஆனால் கொள்கைக்காய் உழைத்தீர்கள்.
அதனால் கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்
கப்றுள்ளே நுழையும் வரை

கோழி பதுர் என்ன! கேணல் றபீக் என்ன!
மைமூன் காசிமும் பார்வையில் ஏழைகள்
ஆனால் பேரிறையின் சமூகத்தில்
அவர்களும் செல்வந்தர்தான்!
காரணம், ஆலிம்களிடம் இருக்க வேண்டிய
நபீமார் விட்டுச் சென்ற விலைமதிப்பற்ற
தௌஹீத் சொத்து அவர்களிடமும் இருக்கிறது.

ஏட்டைப் படித்தென்ன! எதிலும் சிறந்தென்ன
நாட்டை ஆண்டென்ன! நல்லவனாய் வாழ்ந்தென்ன!
நோட்டை நிறைத்தென்ன! நன்மைகள் புரிந்தென்ன!
கோட்டையில் வாழ்ந்தென்ன! கோடீஸ்வரராய் திகழ்ந்தென்ன!
ஏகத்துவம் இல்லையெனில் இருந்தென்ன! இறந்தென்ன!
காட்டில் வாழ் பாமரனும் கலிமாவின் பொருளறிந்தால்
ஏட்டறிவு இன்றேனும் அவன்தானே உயர்ந்தவன்
அதனால் நாம் கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்
கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்.

மின்சாரம் தடை பட்டால் பழீல் என்று அழைக்கின்றோம்
டெக்ரேஷன் என்றதுமே காசிம் என்று சொல்கின்றோம்
காசிமுக்கும் பழீலுக்கும் சம்பளமா கொடுக்கின்றோம்?
இல்லை – அழைத்தவுடன் விரைவார்கள்
அதனால் எம் அடிமைகளா அவர்கள் – இல்லை
அவர்கள் தௌஹீதின் அடிமைகள்
பழீல், காசிம் போன்ற இறை தௌஹீதின் தொண்டர்கள்
பலருள்ளார் இங்கு
பத்ரிய்யஹ் அவர் சரிதை சொல்லும்
அதனால் கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்
என்றும் கொள்கைக்காய் உயிர் வாழ்வோம்

கண் விழித்து பணி புரியும் ஆண்களைப் போல்
பெண் பக்தைகளும் நம்மிலுள்ளார்
பத்ரிய்யஹ் பெருந்தளத்தை கூட்டி சுத்தி செய்திடுவார்
பள்ளிக்கு நிதி கேட்டால் பணம் தந்து உதவிடுவார்
கொள்கையை விளங்கியுள்ள
ஞானபிதா பக்தையரும் ஞானவழித் தோழியரும்
நம்மிலுளார் – எதற்காக கொள்கைக்காக
எனவே கொள்கைக்காய் உயிர் வாழ்ந்து
கொள்கைக்காக உயிர் துறப்போம்.

கண்ணைக் கவரும் மின் அலங்காரம்
மின் வள்ளுனரா இதை யாத்தார்கள் – இல்லை
எங்கள் சி்ன்னஞ் சிறிய மின் மினிப் பூச்சுகள்தான்
மயக்கும் இந்த மின் விளக்குகளை அலங்கரித்தார்கள்.
உண்மையில் அவர்கள் மின்மினிகளாயினும்
மின் வள்ளுனர்தான்!

காண்போர் வியக்கும் வண்ணப்பந்தல்
அன்னாந்து பார்த்தால் அதிசயம் புரியும்
இப்படியொரு பந்தல் எம்மூரில் உண்டா?
உள்ளதற்கு வரலாறு உண்டா?
இலங்கையிலாவது நாம் கண்டதுண்டா? – இல்லை
அஜ்மீர் நகரிலும் இப்படி இல்லை – அதனால்
பந்தலிட்டவர்கள் பக்தாது என்ன அஜ்மீரு என்ன
மன்னர் நபியின் மகாமுல் மஹ்மூதிலும்
பந்தலிடுவதற்கு தகுதி பெற்று வி்ட்டார்கள்.

எதிரிகள் கூட இன்று சொல்கிறார்கள்
எத்தனை பள்ளிகளில் கந்தூரி கொடுத்தாலும்
பத்ரிய்யஹ் கந்தூரி போலாவதில்லை!
கறியும், சோறும் கம கம வாசம்
நெய்யும், தயிரும் நாவில் சுரக்கும்
உண்டார் மறவார்! உண்ணார் உணரார்!

இலட்சியம் வேண்டும் தம்பி!
இல்லேயேல் நாங்கள் கொள்கைவாதிகளல்லர்.
பல வருடங்கள் கொள்கையில் வாழ்ந்து
சில நிமிடங்களில் நாம் மாறும் போது
அந்த சில நிமி்டங்கள் நம் அமல்கள் அனைத்தும்
அழிந்து விடுகின்றன.
நம் நெஞ்சில் ஒளிர்ந்த தௌஹீத் விளக்கு
அணைந்து விடுகின்றது.

வானத்தை பார்த்து உமிந்தவன் எச்சில் – அவன்
வதனத்தில் வந்து வீழ்வது போன்று
உலமா சபையின் உதவா தீர்ப்பு
உண்மையில் அவர் பால் மீண்டதுவன்றோ!
உண்மை முஃமீன்களை முர்தத் என்றால்
உலமாக்களே முர்தத் ஆனார் அன்றோ!
பத்வாவை அவர் வாபஸ் பெறும் வரை
பெரும் பாவத்தில் தான் அவர் வாழ்கின்றார்.
பாமரர் இதனை இன்னும் அறியார் – அவர்
பாதகர் என்பதை இன்னும் புரியார்!

அதனால்தான் சொல்கின்றோம்
நமக்கென்று பள்ளி வேண்டும் கட்டி எழுப்புவோம்!
நமக்கென்று உலமா வேண்டும் பின்பற்றுவோம்!
நமக்கென்று கொள்கை அணி திரள்வோம்!
நமக்கென்று அரசியல் ஒன்றுபடுவோம்!

உத்தம நபியின் உண்மைத் தோழர்
உமர், உத்மான், அலீ கொலைசெய்யப்பட்டனர்
எதற்காக கொள்கைக்காக
அம்மார், சுமையா தியாகிகளானார்
எதற்காக கொள்கைக்காக
ஹுபைபும், பிலாலும் தோலுரிக்கப்பட்டனர்
எதற்காக கொள்கைக்காக
அவ்லியாக்களில் எத்தனை மகான்கள்
அத்வைதம் சொன்னதால் இம்சிக்கப்பட்டனர்
அன்றும் இன்றும் – இன்று
எங்கள் வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்
எத்தனை துன்பம் எத்தனை இன்னல்
எத்தனை பின்னல் எம் தலைவர் வாழ்வில்

தௌஹீத் களத்தின் கொள்கைச் சிங்கம்
பாறூக் காதிரீ உயிரை இழந்ததும்
உங்கள் நத்வீயும் மௌலவீ மஜீதும் கூட
பொலீஸில் ஒருநாள் அடைபட்டதும்
பாவம் மண் றபீக் சிறையில் கிடந்ததும்
எதற்காக கொள்கைக்காக!
அதனால் கொள்கைக்காக உயிர் வாழ்வோம்.

நவயுக தௌஹீத் நண்பர்காள்! நண்பிகாள்!
தௌஹீத் ஏட்டின் ஒரு பக்கத்தையே இதுவரை ஓதினேன்.
இன்னொரு பக்கம் உண்டு
அது யுத்தங்களும், உயிர் தியாகங்களும் நிறைந்த பக்கம்
அப்பக்கம் நாம் பார்ப்பதற்கு இப்போது காலமில்லை

நபிகளின் வாழ்வில் நடந்த சில யுத்தங்கள்
நவீன வடிவில் எங்கள் வாழ்க்கையில் நடந்துள்ளன
பத்வா தீக்கிரை அது ஒரு யுத்தம்
கல்முனை நகரில் தொப்பி, செருப்பின்றி
உலமாக்கள் ஓடியது வேறொரு யுத்தம்
மீராபள்ளியில் நோன்பு மாதத்தில்
நாம் சென்று தொழுதது பிரிதொரு யுத்தம்
நினைவிருக்கிறதா?

எனவே, அத்தகு காலம் எம்மிடை தோன்றில்
காற்றும் புயலாய் வீசுவது போன்று – என்
கவிதைகளும் புயலாய் சீறும் கொள்கைக்காக!
உதிரமும் கொதிக்கும் செங்கடல் போல
உணர்வும் மாறும் வேங்கை போல
சொல்லும் வெடிக்கும் புல்லட்ஸ் போல
உறவும் வெறுக்கும் இறப்பும் இனிக்கும்
அத்தகு காலம் இன்னும் வரவில்லை.

புலிகள் தமது கொள்கைகளை கைவிட்டு விடலாம்
அது இலௌகீகம்
ஆனால் தௌஹீத்வாதிகள் தம் கொள்கையினையும்
பத்வா வாபஸ் பெற வேண்டும் என்ற திட முடிவினையும்
விட முடியாது இது ஆன்மீகம்.

எனவே, முன்கர் நகீரின் வினாக்களுக்கு
மகமகிழ்ந்து விடையளிப்பதற்கும்
மன்னோன் இறையின் திரு முகத்தை
மகிழ்ந்தே கண்டு கழிப்பதற்கும்
இன்ப துன்பங்கள் அனைத்தையுமே
இறையின் செயல் என்று உணர்வதற்கும்
நானும் நீங்களும் இவ்வுலகில் கொள்கைக்காக உயிர் வாழ்வோம்

உயிரினும் கொள்கை மேலென்போம்
கண்கள் குருடாய் வாழ்ந்திடலாம்
கை கால் இழந்தும் வாழ்ந்திடலாம்
முண்டகம் இழந்தோர் வாழ்வாரோ?
முண்டம் இருந்தும் என்ன பயன்?
முண்டகம் என்றால் தலையாகும்
முண்டம் தலையிலா உடலாகும்
முண்டகம் கொள்கை இல்லையெனில்
முண்டமாம் செயலால் என்ன பயன்?

எண்ணம் தூய்மை இல்லையெனில்
எதை செய்தாலும் பயனில்லை
உண்ணும் உணவில் உப்பின்றேல்
உருசியை நாவும் உணர்வதி்ல்லை
இன்றேல் கொள்கை எம் வாழ்வில்
இகத்தில் வாழ்ந்தும் இகத்தில் பிறந்தும் சிறப்பில்லை
உண்மைக்காக மரித்தோரை உலகம் என்றும் மறப்பதில்லை

ஞானபிதாவின் தலைமையிலே
நாளும் வாழ்வு சிறக்கட்டும்
தௌஹீத் எங்கும் பரவட்டும்
தத்துவம் நெஞ்சில் பூக்கட்டும்
உண்மைக்காக உயிர் வாழ்வோம்
உலகம் எதையும் சொல்லட்டும்
உண்மை உணரார் பகைகட்டும்
ஊரை விட்டே துரத்தட்டும்
உன்னவர் உயிரை எடுக்கட்டும்
உடைமை எல்லாம் பறிக்கட்டும்
உறவினர் பகைத்தால் பகைக்கட்டும்
குண்டுகள் நெஞ்சை துளைக்கட்டும்
கொள்கைக்காக உயிர் வாழ்வோம்!

நீண்டது கவிதை நிறுத்துகின்றேன்
கவிஞர் குளாத்தை அழைக்கின்றேன்.

வஸ்ஸலாம்

You may also like

Leave a Comment