Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறுதி நாள் அடையாளங்களில் முஸ்லிம்கள் இறை மறுப்பாளர்களின் நாகரீகத்தைப் பின்பற்றுதலும் அடங்கும்.

இறுதி நாள் அடையாளங்களில் முஸ்லிம்கள் இறை மறுப்பாளர்களின் நாகரீகத்தைப் பின்பற்றுதலும் அடங்கும்.

தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

உலக முடிவுக்கு பல அடையாளங்கள் உள்ளன என்று கடந்த பதிவுகளில் எழுதியிருந்தோம். அவற்றில் சில அடையாளங்களையும் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பதிவில் நாம் தரும் விருந்து பின்வருமாறு.

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَتَتَّبِعُنَّ سُنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ»، قِيْلَ يَا رَسُولَ اللَّهِ، اليَهُودَ وَالنَّصَارَى؟ قَالَ: «فَمَنْ؟
(متّفق عليه) (باب تغيّر الناس)

உங்களுக்கு முன்னுள்ளவர்களின் நடைமுறைகளை முளத்துக்கு முளம், அங்குலத்திற்கு அங்குலம் நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நபீ அலைஹிஸ்ஸலாம் தோழர்களிடம் சொன்ன போது, அல்லாஹ்வின் திருத்தூதே! யஹூதி, நஸாறாக்களையா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நபீ தோழர்கள் கேட்ட வேளை வேறு யாரை? என்று பெருமானார் கேட்டார்கள். (அவர்களைத்தான் குறிப்பிடுகிறேன் என்று சொன்னார்கள்)
ஆதாரம் – புஹாரீ, முஸ்லிம்
(பாடம் – மனிதர்களின் நிலைமைகள் மாறுபடுதல்.)

இந்த நபீ மொழியின் சுருக்கம். யஹூதி, நஸாறாக்களின் நடைமுறைகளை நீங்கள் முழுமையாக – நூறு வீதம் பின்பற்றுவீர்கள். எந்த அளவு பின்பற்றுவீர்களென்றால் அவர்கள் உடும்பு நுழையும் துவாரத்தில் (பொந்து) நுழைவது நாகரீகமென்று கருதி அதில் அவர்கள் நுழைந்தார்களாயின் அந்த விடயத்தில் கூட நீங்கள் அவர்களைத் தொடர்வீர்கள் என்று நபீ அலைஹிஸ்ஸலாம் அருளினார்கள்.

மேற்கண்ட இந்த ஹதீதில் ஒரு கேள்விக்கு இடமுண்டு அதாவது உடும்பின் துவாரம் (பொந்து) சிறியது. அதன் மூலம் ஓர் உடும்புதான் நுழையலாமே தவிர மனிதன் நுழைய வாய்ப்பே இல்லை. இந்த விடயம் எமக்குத் தெரிந்ததை விட பன்மடங்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அறிந்திருந்தும் ஏன் அவ்வாறு சொன்னார்கள்? இதுவே கேள்வி. இக்கேள்விக்கு நான் அறிந்த விளக்கம் இங்கு எழுதியுள்ளேன். எனது எல்லா விடயங்களிலும் பிழை காணும் அ – இ – ஜ –உலமாஉவின் (ACJU) “பத்வா” குழுவினர் எனது விளக்கத்தில் பிழை இருக்கக் கண்டால் மீண்டும் ஒரு “பத்வா” வழங்கி ஊரைக் குழப்பி விடாமல் எனக்கு அறிவிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்தப் பேச்சு மனிதனின் புத்திக்குப் பொருத்தமற்றது போல் தெரிகிறது. ஏனெனில் உடும்பின் ஓட்டையில் – பொந்தில் – ஒரு மனிதன் நுழையுமளவு அது பெரிதாக இருக்காது. அதில் மனிதன் நுழைவது அசாத்தியமானதாகும். நுழைவதாயின் ஓர் உடும்பு அல்லது பாம்புதான் நுழையலாம். எனவே ஒரு விடயத்துக்கு இன்னொன்றை ஒப்பிட்டு அல்லது உதாரணமாகக் கூறுவதாயின் சாத்தியமான ஒன்றையே கூற வேண்டும். அசாத்தியமான ஒன்றைக் கூறுவது பொருத்தமற்றதாகும். இந்த விடயம் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆயினும் அவர்கள் அவ்வாறு சொல்லியுள்ளதால் வஹ்ஹாபிகள் போல் நாமும் அது பிழையென்று கூறி பெருமானாரை – பெருமகனாரை மட்டம் தட்டி விடாமல் பின்வரும் விளக்கத்தை விபரமாக அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களின் மன நிலைகளையும், அவர்களின் பேச்சு வழக்குகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மனநிலை அவர்களின் கோபம், இரக்கம், கவலை என்பவற்றைப் பொறுத்ததாயிருக்கும். அந்த மனநிலைகளுக் கேற்றவாறுதான் அவர்களின் பேச்சுகளும் இருக்கும்.

நான் காத்தான்குடியில் ஒரு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு வயோதிபருக்கும், வாலிபனுக்கும் ஏதோ ஒரு விடயத்தில் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது. வயோதிபர் சுமார் 75வயது மதிக்கத்தக்க ஒருவர். வாலிபனோ 35 வயது மதிக்கத்தக்க ஒருவன். இருவருக்குமிடையில் ஏச்சும். பேச்சும் உச்சக் கட்டத்தை அடைந்த போது வயோதிபன் தனது கோபத்தை சமாளிக்க முடியாமல் உடற் பலவீனத்தால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவ்வேளை அவன் வாலிபனிடம் “நான் உனக்கு ஒரு குத்துக் குத்தினால் நீ பூமிக்குள் எழுபது முளம் போவாய்” என்று சொன்னான்.
இச்சம்பவம் நடந்து சுமார் 65 வருடங்களைத் தாண்டி விட்டாலும் கூட மேற்கண்ட ஹதீதுக்கு விளக்கம் எழுதும் போது அந்தச் சம்பவம் என்னினைவுக்கு வந்ததால் அதை இங்கு எழுதினேன்.

குறித்த வயோதிபன் அந்த வாலிபனுக்கு ஆயிரம் குத்துக் குத்தினாற் கூட அவன் அசையக்கூட மாட்டான். இது வயோதிபனுக்கும் தெரியாத ஒன்றல்ல. எனினும் அவன் கோபமாயிருக்கும் நிலையில் அவ்வாறு சொன்னதால் அதை சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக ஆக்கிவிடாமல் அதை விட்டு விட வேண்டும். கோபம் கொந்தளித்த வேளை இவ்வாறு சொல்வது வழக்கமே!

இன்னுமொரு சம்பவம் கூறுகிறேன். நான் ஒரு வீட்டுக்குச் சென்றேன். வீட்டின் முற்றத்தில் கணவன், மனைவி இருவரும் அவர்களின் இரண்டு வயதுள்ள முதற்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தந்தை குழந்தையிடம் இரக்கம் மேலிட்ட காரணத்தால் “நான் உன் கண்ணுக்குள் நுழைவேன்” என்று கூறினான். இது அசாத்தியமான ஒன்றாயினும் அன்பு மேலிட்டதால் அவன் அவ்வாறு சொல்ல வேண்டியதாயிற்று.

இன்னுமொரு சம்பவத்தைக் கூறுகிறேன். எனக்கு மிக நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். அவன் என்னை விட மார்க்கப்பற்று அதிகமானவன். அளவின்றி ஏழைகளுக்கு தான தர்மமும் செய்பவன். எக்கட்டத்திலும் நான் கீறும் கோட்டை தாண்டாத ஒரு பக்தன்.

ஒரு நாள் அவனுக்கும், அவனின் மனைவிக்குமிடையிலேற்பட்ட பிரச்சினை காரணமாக அவனை அவள் வீட்டை விட்டும் துரத்தி விட்டாள். கவலையால் மனமொடிந்த அவன் மதுப் பழக்கிமில்லாதவனாகயிருந்தாலும் அவன் அன்று மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று மது வெறியால் மனைவி மக்களை அடித்து துன்புறுத்தியுள்ளான். வீட்டவர்களாலும், அயலவர்களாலும் அவனை சமாளிக்க முடியாமற் போனதால் நான் சொன்னால் எனக்கு கட்டுப்படுவான் என்று நினைத்த வீட்டவர்கள் எனக்கு அறிவித்தார்கள். நான் அங்கு சென்றேன். என்னைக் கண்டதும் “உன்னாலும் என்னை அசைக்க முடியாது. அல்லாஹ்வாலும் என்னை அசைக்க முடியாது” என்று அவன் கூறினான்.

மேற்கண்ட மூன்று சம்பவங்களிலும் முந்தினது கோபத்தினிமித்தம் அசாத்தியமான ஒன்று சாத்தியமானது போலாயிற்று. இரண்டாவது சம்பவத்தில் சாத்தியமாகாத ஒன்று இரக்கத்தினால் சாத்தியமானது போலாயிற்று. மூன்றாவது சம்பவத்தில் மது வெறி பேசியதேயன்றி அவன் பேசவில்லை.

மேற்கண்ட ஹதீதில் “அவர்கள் உடும்பின் பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள்” என்று சென்னது நபீ பெருமானின் கோபத்தினிமித்தம் அசாத்தியமானது சாத்தியமானது போலாயிற்று. இது மனித சுபாவமாகும்.

இதன் சுருக்கம் என்னவெனில் முஸ்லீம்கள் யஹூதிகளையும், நஸாறாக்களையும் முழுக்க முழுக்க பின்பற்றி வந்து இறுதியில் அவர்கள் எதைச் செய்தாலும் முஸ்லிம்களும் அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை நினைத்த பெருமானாரின் மனநிலையில் மாற்றமேற்பட்டதினாலேயே அவ்வாறு அவர்கள் சொன்னார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பெருமானாருக்கு மடமை இருந்ததென்று கூறுவது “குப்ர்” ஆகிவிடும். இன்று முஸ்லிம்களிற் பலர் குறிப்பாக இளைஞர்கள் அதிலும் குறிப்பாக நாகரீக மோகம் உள்ளவர்கள். தலை முடி அலங்காரம் முதல் தாடி அலங்காரம் வரையும், கால் சட்டை அலங்காரம் முதல் மேல் சட்டை அலங்காரம் வரையும் நாகரீக மோகத்தால் மதியிழந்து தாம் செய்வது சமூகத்தின் பார்வையில் பொருத்தமற்றதென்பதைக் கூட புரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.

யஹூதி, நஸாறாக்களின் “ஸ்டைல்” ஒரு புறம். வஹ்ஹாபிகளின் “ஸ்டைல்” மறு புறம். தலை மறைக்காமலிருப்பது வஹ்ஹாபிகளுக்கு ஸ்டைலாம். எந்த அளவு அவர்களின் நாகரீகம் தலைக்கடித்துள்ளதென்றால் வெள்ளிக் கிழமை பள்ளிவாயலில் மின்பரில் நின்று பிரசங்கம் நிகழ்த்தும் போது கூட தலை மறைக்க மாட்டார்கள். இவர்கள் பரம்பரை வஹ்ஹாபிகளை விட மிகக் கீழ்த்தரமான வஹ்ஹாபிகளாவர். சஊதி நாட்டிலுள்ள பரம்பரை வஹ்ஹாபிகள் கூட தலைக்கு தொப்பியணிந்து அதற்மேல் சால்வையும் போடுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் வஹ்ஹாபிகள் தாய் பெற்ற மேனியுடன் மின்பர்களில் நிற்பார்கள் போலும். இந்நிலை ஏற்பட்டால் கொரோனா வைரஸ் அல்ல. நெருப்புக் காற்றே வீசும். அல்லாஹு அக்பர்.

இறுதியாக இன்னுமொரு விளக்கம். எழுதுகிறேன். அதாவது اَلْمُعَلَّقُ بِالْمُحَالِ مُحَالٌ “அசாத்தியமான ஒன்றைக் கொண்டு நிபந்தனையிடப்பட்டதும் – கொழுகி வைக்கப்பட்டதும் அசாத்தியமே” இந்த அடிப்படையில் இந்த ஹதீதை நாம் நோக்கினாலும் தெளிவு கிடைக்கும். உதாரணமாக பிலேன்டீ குடிப்பதற்கு வசதியற்ற ஓர் ஏழை – கோடீஸ்வரனல்ல – இன்னொருவனிடம் “நீ இந்த யானையின் கண்ணுள் நுழைந்தால் உனக்கு ஆயிரம் கோடி டொலர் தருவேன்” என்று சொல்வது போன்று. இரண்டும் “முஹால்” அசாத்தியமானவையாகும். இவ்வுதாரணத்தை மையமாகக் கொண்டு இந்த ஹதீதை ஆய்வு செய்யலாம்.

முடிவு என்னவெனில் யஹூதி, நஸாறாக்கள் உடும்பின் துவாரத்தில் நுழையப் போவதுமில்லை. அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்கள் அதில் நுழையப் போவதுமில்லை. நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்வேளை ஒரு வகை “ஜத்பு” பரவச நிலையில் இருந்தார்கள் போலும். கடலை அளக்க முடியுமா? பூமியின் மண்ணை எண்ணத்தான் முடியுமா?

اُقِيْمَ لَهُ فِي الْكَوْنِ مَدْحٌ مُسَلْسَلٌ – مُمَدٌّ بِلَا حَدٍّ وَاِنْ عُدَّ طَيْسَلٌ
فَلَمَّا خَلَا بِالرَّبِّ وَالسِّتْرُ مُرْسَلٌ – اُقِيْمَ مُقَامًا لَمْ يَقُمْ فِيْهِ مُرْسَلٌ
وَاَمْسَتْ لَهُ حُجُبُ الْجَلَالِ تُوَطّأٌ

இவ்வாறு பெருமானாரை ஸதகதுல்லாஹ் அப்பா புகழ்ந்து பாடியது தப்பா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments