Saturday, April 27, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சாது மிரண்டால் காடும் இடம் கொடாது ஆனால் இறைவன் மிரண்டால் இகமே இருக்காது.

சாது மிரண்டால் காடும் இடம் கொடாது ஆனால் இறைவன் மிரண்டால் இகமே இருக்காது.

தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

இறைவன் சீறினால் இகமே அழிந்துவிடும். அவனின் சீற்றத்தில் ஒரு தூசிதான் இன்று உலகையே நடுங்கச் செய்துள்ள கொரோனா வைரஸாகும்.

உலகில் தோன்றிய நபீமார் சிலரின் கூட்டத்தார் மீது சீறியெழுந்த, ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம் என்ற பெயர்களுக்குரிய இறைவன் அவர்களை பல்வேறு தண்டனைகள் மூலம் அழித்தொழித்தான்.

திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் தருகின்ற சில வரலாறுகளை இங்கு எழுதிக் காட்டுகிறேன்.

اَلْبَلِيْدُ لاَ يُفِيْدُهُ التَّطْوِيْلُ. وَلَوْ تُلِيَتْ عَلَيْهِ التَّوْرَاةُ وَالْإِنْجِيْلُ
மண்டையில் சரக்கில்லாத மட்டிக்கு தவ்றாத், இன்ஜீல் வேதங்களை ஓதிக்காட்டினாலும், அதிக விளக்கம் சொன்னாலும் கூட அவனுக்கு ஏறாது.

நபீ லூத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தவர்கள் வாழ்ந்த ஊர் பெரும் பட்டணம். அது “ஸுதூம்” என்று அழைக்கப்படும். அங்கு வாழ்ந்த அவர்களின் கூட்டத்தவர்கள் தன்னினச் சேர்க்கையில் மிகவும் வேகமானவர்களாக இருந்தார்கள். நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அக்கூட்டத்தினரை நல்வழிப்படுத்த அயராது உழைத்தும் அவர்களைத் திருத்த அவர்களால் முடியாமற் போயிற்று. இதனால் அப்பட்டணத்தை ஜிப்ரீல் மூலம் தலைகீழாய்ப் புரட்ட திட்டமிட்ட அல்லாஹ் அங்கு மலக்குகளை மனித உருவத்தில் அனுப்பி வைத்தான். ஊரைப் புரட்டு முன் நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்தான். அவர்கள் வேளியேறியவுடன் அதை தலைகீழாய்ப் புரட்டி ஊரையும், ஊர் வாசிகளையும் அழித்தொழித்தான். அது அன்று முதல் இன்று வரை உயிரினமில்லாத வெறுங்கடலாக காட்சியளிக்கிறது. மக்கள் அதை “டெட்ஸீ” செத்த கடல் என்று அழைக்கிறார்கள். இது ஜோர்தானில் உள்ளது. இங்கு நான் சென்றுள்ளேன்.

நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சகோதரனின் மகன் ஆவார்.

ஓதுகின்ற மாணவர்களின் நன்மை கருதி அந்தக் குறிப்பை இங்கு அறபியில் தருகிறேன்.
لُوط عليه السلام . ابنُ أخي ابراهيم عليه السلام ، آمن لوط بإبراهيم عليه السلام واهتَدى بهَديِه ، أرسلَه الله إلى سُدُوم، وكانوا قومَ سوءٍ، وأرسل الله إليه الَملائكةَ في صورةِ بشرٍ، وأمرَه بالخُروج منها، لوقُوع العذاب على أهل سُدُوم،
سدوم – مدينةٌ كَنْعَانِيَّةٌ قديمة، حلَّت بها كَارِثَةٌ اَرضِيَّةٌ في القرن ١٩. فخربت مع عامورةٍ وَعِدَّةِ مُدنٍ أُخرى، واقعةٌ جنوب البحر الميّت، ذَكرتِ التّوراةُ أنّها اُحرِقتْ وعامورةٌ بالنّار والكِبْرِيت.
(المنجد في الاعلام)

நபீ “லூத்” அவர்களின் கூட்டத்தார் தண்டிக்கப்பட்டது போல் இன்னுமொரு கூட்டத்தார் பெரும் பெரும் கல்மழையால் தண்டிக்கப்பட்டு அவர்களும் அழிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த ஊரும் அழிக்கப்பட்டது. இது ஜோர்தானிலிருந்து இறாக் செல்லும் வழியில் உள்ளது. இங்கும் நான் சென்றுள்ளேன். மழைபோல் பொழியப்பட்ட கற்கள் அங்கு இப்போதும் உள்ளன.


நபீ ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தாரான “தமூத்” கூட்டத்தைப் பரந்து விரிந்து காணப்படுகின்ற இப்பூமியே நடுங்கும் அளவிலான பயங்கர சத்தத்தைக் கொண்டு அல்லாஹ் அழித்தொழித்தான்.


நபீ ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தாரான “ஆத்” கூட்டத்தை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் கடும் குளிர் கலந்த கொடூரமான காற்றின் மூலம் அழித்தொழித்தான். அவர்கள் அடிவேருடன் பிடுங்கி எறியப்பட்ட ஈச்ச மரங்கள் போல் செத்து மடிந்து காணப்பட்டார்கள்.

இன்னும் சில நபீமாரின் கூட்டத்தை மழையுடன் கூடிய புயல் காற்று, “தூபான்” பெருவெள்ளம், வெட்டுக்கிளி, பேன் மழை, தவளை மழை, இரத்த மழை மூலம் அழித்தொழித்தான்.

திருக்குர்ஆன் – 11 – 82, 83. 07 – 133 வசனங்களை பார்க்கலாம்.

இவை யாவும் முன்வாழ்ந்த கூட்டத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையாகும்.

மேற்கண்ட கூட்டங்கள் இவ்வாறான தண்டனைகள் மூலம் அழிக்கப்பட்டதற்கான காரணம் அவர்களின் அளவு கடந்த அட்டூழியங்களும், பாவங்களுமேயாகும்.

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய தண்டனைகளுடன் அவை முடிந்து விடவில்லை. இன்னும் தண்டனைகள் வழங்கப்பட உள்ளன. அத் தண்டனைகளை “றிமோட்” மூலம் இறக்கி எடுப்பவர்கள் யார்? நாம் தான். அல்லாஹ் எவருக்கும் அநீதி செய்யவுமில்லை. செய்யப் போவதுமில்லை.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“எனது “உம்மத்” சமூகம் 15 விடயங்கள் செய்வார்களாயின் – 15 பாவங்கள் செய்வார்களாயின் அவர்கள் ஐந்து வகையான தண்டனைகளை எதிர்பார்க்கட்டும்.

சிவப்புக் காற்று – நெருப்புக் காற்று, நில நடுக்கம், பூகம்பம், உருமாற்றம், கல் மழை, இன்னும் பல.
அறிவிப்பு – அபூ ஹுறைறா ஆதாரம் – துர்முதீ.

இதன் விரிவான விளக்கம் நான் எழுதி வெளியிட்டுள்ள “சோதனைகளும், தண்டனைகளும் எம்மீது இறங்கு முன் நாமே நம்மை சீர் செய்து கொள்ள வேண்டும்” என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.

அன்புக்குரிய முஸ்லிம் சகோதரர்களே!
பௌத்த மதச் சகோதரர்களே!
இந்து மதச் சகோதரர்களே!
கிறித்துவமதச் சகோதரர்களே!

திருக்குர்ஆன் ஆதாரப்படி இறைவன் எவருக்கும் அநீதி செய்வதில்லை. இவ்வுண்மையை அனைத்து மதங்களும் கூறுகின்றன. ஏற்றுக் கொள்கின்றன. எந்த ஒரு மதமும் தீமைக்கு வழிகாட்டவில்லை. எல்லா மதங்களும் பாவச் செயல்களை எச்சரிக்கத்தான் செய்கின்றன. எந்த ஒரு மதமும் மது அருந்துதல், விபச்சாரம், போதைப் பொருள் பாவனை, கொலை, கொள்ளை, பொய், சூது, களவு போன்ற பாவச் செயல்களை சரிகாணவில்லை. மாறாக இவற்றையெல்லாம் தடைசெய்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. மதங்களைப் பின்பற்றி வாழும் மக்கள்தான் அட்டூழியங்களிலும், பஞ்சமாபாதகங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால்தான் தண்டனைகள் இறங்குகின்றன. மதங்களைப் பின் பற்றி வாழும் ஒவ்வொருவரும் தனது மதம் கூறும் வழியில் செவ்வனே நடந்தால் துன்பமே இல்லை. எல்லாம் இன்ப மயமாகவே இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments