Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்புனித றமழானும் அதன் அகமியங்களும்.

புனித றமழானும் அதன் அகமியங்களும்.

தொகுப்பு: மௌலவி அல்ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ.‎

رمضان – றமழான் என்ற அறபுச் சொல் ஐந்து எழுத்துக்களை கொண்டது. இச்சொல்லுக்கு எரித்தல், கரித்தல், சூடு, உஷ்ணம் போன்ற அர்த்தங்கள் உண்டு.

இச் சொல் الشُّهُوْرُ القَمَرِيّة சந்திரமாதங்களின் ஒன்பதாம் மாதத்துக்குரிய பெயராகும். شهر رمضان – ஷஹ்று றமழான் (றமழான் மாதம் ) என்று இம்மாதம் அழைக்கப்படும்.


சந்திர மாதங்கள் என்பது பின்வரும் மாதங்களை குறிக்கும்.

முஹர்றம், ஷபர், றபீஉனில் அவ்வல், றபீஉனில் ஆகிர், ஜுமாதுல் ஊலா, ஜுமாதுல் உக்றா, றஜப், ஷஃபான், றமழான், ஷவ்வால், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா.

ஐந்தாம், ஆறாம் மாதங்கள் இரண்டும் ( ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர் ) என்று சிலரால் அழைக்கப்படுவது தவறு. இவற்றில் ஒன்பதாம் மாதமே “ஷஹ்று றமழான்” என்று அழைக்கப்படுகிறது.

உலக நாடுகளின் காலநிலையை கவனித்தால் ஒன்பதாம் மாதம் கடும் உஷ்ணம், சூடு, வெப்பம் முதலானவை அதிகமான கால நிலை உள்ளதாக இருக்கும். இது குறித்தே இதற்கு “றமழான்” என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

நோன்பு என்பது உடலை வருத்தியும், உள்ளத்தை வருத்தியும், அதாவது “நப்ஸ்” என்ற மனவாசைகளையும் அடக்கியும் செய்கின்ற ஓர் “இபாதத்” வணக்கமாகும்.

“ஸுப்ஹ்” நேரத்திலிருந்து “மக்ரிப்” நேரம் வரை சுமார் 12 மணிநேரம் உண்ணாமலும், பருகாமலும் இருப்பது உடலை வருத்தும் செயலாகும்.

ஒரு நோன்பாளி மேலே குறிப்பிட்ட நேரம் உண்ணல், பருகல் இரண்டையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இதே போல் “ஸுப்ஹ்” நேரம், முதல் மக்ரிப் நேரம் வரை சுமார் 12 மணிநேரம் மனவாசைகளைத் துறந்து, தவிர்ந்து இருப்பது மனதை வருத்தும் செயலாகும்.

ஒரு நோன்பாளி தனது மனைவியைக் கூட முத்தமிடுதல் கூடாது. அவளுடன் உடலுறவு கொள்வதும் கூடாது. வேறு வகையில் இந்திரியத்தை வெளியாக்குவதும் கூடாது. இவற்றை நோன்பாளி கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை மனதை வருத்தும் செயலாகும்.

நோன்பு என்பது உடலை வருத்தியும், “நப்ஸ்” என்ற மனவாசையை அடக்கியும் செய்கின்ற ஒருவணக்கமாயிருப்பதினால்தான் இதற்கு விஷேட நற்கூலி வழங்கப்படுவதாக ஹதீதுகளில் கூறுகின்றது.

قال الله تعالى في الحديث القدسي : الصّومُ لِيْ وَأَنَا أجزى به.
நோன்பு என்பது எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். என்று அல்லாஹ் “ ஹதீதுக் குத்ஸீ” மூலம் கூறியுள்ளான்.

மேற்கண்ட இந்த நபீ மொழியில் (أجزى) நான் எழுத்துக்களை கொண்ட ஒருசொல் வந்துள்ளது. இச்சொல்லை மொழியிலக்கணப்படி இரண்டு விதமாக வாசிக்க முடியும்.

ஒன்று – இச்சொல்லில் உள்ள முதல் எழுத்தான “ஹம்சு” என்பதற்கு “ழம்மு” குறியீடும் மூன்றாம் எழத்தான “சே” என்பதற்கு “பத்ஹ்” குறியீடும் أُجْزَى – உஜ்சா என்றும் வாசிக்க முடியும். இவ்வாறு வாசிப்பதும் இலக்கணத்திற்கு பிழையாகாது. இவ்வாறு வாசித்தால் இதன் பொருள் “ நானே அதற்கு கூலியாவேன்” என்று வரும்.

இவ்விரண்டும் சரியாக இருந்தாலும் எது சிறந்தது என்று பார்ப்போம்.

أجزى – هذه اللّفظة يجوز فيها الوجهان، فَتْحُ الهمزة وكسرُ الزاي، كما يقول اَجْزِيْ، ويجوز فيها أيضا ضَمُّ الهمزة مع فتح الزاي، كما يقول أُجْزَى،
ولكلّ معنى صحيح، ولكنّ الأفضل ما هو؟
أجزى இச் சொல்லை மேலே சொன்னது போல் اجزىْ – அஜ்சீ என்று வாசிப்பதற்கும், – اُجْزَى – உஜ்சா என்று வாசிப்பதற்கும் இலக்கணச்சட்டத்தில் இடமிருந்தாலும் கூட “உஜ்சா” என்று வாசிப்பதே மிக்க சிறந்தது.

ஏனெனில் “அஜ்சீ” என்ற சொல்லுக்கு நான் கூலி கொடுப்பேன் என்ற பொருள் வரும். இப் பொருள் நோன்புக்கு அல்லாஹ் கூலி கொடுப்பான் என்ற கருத்தை தருமேயன்றி வேறு ஆழமான எந்த ஒரு தத்துவத்தையும் தராது. அத்துடன் இது சொல்ல வேண்டிய ஒன்றுமல்ல. ஏனெனில் எந்த வணக்கமாயினும் அதற்கு கூலி வழங்குவது அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை. ஆகையால் இது சொல்ல வேண்டிய ஒன்றல்ல. இவ் உண்மை யாவரும் அறிந்த ஒன்றேதான்.

எனவே மேற்கண்ட சொல்லை اُجْزَى – உஜ்சா என்று வாசித்தால் மட்டும்தான் அது ஆழமான ஒரு தத்துவத்தைக் குறிக்கும்.
சுருங்கச் சொன்னால் நோன்புக்கு அல்லாஹ் சுவர்க்கத்தையோ, சுவர்க்க இன்ப சுகங்களையோ வழங்காமல் அதற்கு கூலியாக தன்னையே வழங்குகிறான் என்பதாகும்.

இதை ஓர் உதாரணம் மூலம் ஆய்வு செய்து பார்ப்போம்.
முசம்மில் என்பவன் முனாஸ் என்பவனிடம் உனது மகளை எனக்குத் திருமணம் செய்து தந்தால் நான் உனக்கு பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பாகத் தருவேன் என்று சொல்வதற்கும், என்னையே உனக்கு அர்ப்பணம் செய்வேன் என்பதற்கும் வித்தியாசமுண்டு. இவ்விரண்டிலும் இரண்டாவதாகச் சொன்னது முந்தினதை விட பலம் கூடினதாகும்.

இவ் உதாரணத்தை முன்னோடியாகக் கொண்டு اَجْزِىْ – அஜ்சீ நான் கூலி தருவேன் என்ற சொல்லுக்கும், اُجْزَى- என்னையே கூலியாகத் தருவேன் என்ற சொல்லுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம்.

செய்வது மிகவும் சிரமமான ஒரு வேலையை ஒருவரிடம் சொல்லும் போது அதற்கு பெறுமதியான பரிசு தருவதாகச் சொல்வதும், செய்வது மிக இலகுவான, சாதாரண ஒரு வேலையை ஒருவரிடம் சொல்லும் போது அதற்கு உரிய பரிசு தருவதாக சொல்வதும் வழக்த்தில் உள்ள ஒன்றுதான்.

உதாரணமாக ஒருவன் தனக்குப் பக்கத்தில் இருப்பவனிடம் கையிலுள்ள பேனாவைத்தா. எழுதிவிட்டுத் தருகிறேன் என்று சொல்லும் போது அதற்கு கூலியாக என்னையே தருகின்றேன் என்று சொல்லத் தேவையில்லை. ஏனெனில் கையிலுள்ள பேனாவை இன்னொருவனுக்கு கொடுத்து உதவுவது மிகவும் சிரமமான காரியமல்ல. அதற்கு அவ்வாறு சொல்லத் தேவையில்லை.

எனினும் ஒருவன் இன்னொருவனிடம் எனது மகன் நன்றாகப் படித்துள்ளான். அவனுக்கு அரசாங்க வேலையொன்று எடுத்துக் கொடு. அதற்கு கூலியாக என்னையே தருகிறேன் என்று கட்டாயம் சொல்ல வேண்டும். ஏனெனில் இது மிகவும் சிரமத்துடன் செய்ய வேண்டிய ஒன்றாகும். இதற்கு இவ்வாறுதான் சொல்ல வேண்டும்.

இது போன்றுதான் நோன்பு நோற்பவனுக்கு என்னையே கூலியாக அர்ப்பணிப்பேன் என்று அல்லாஹ் சொல்வதுமாகும். ஏனெனில் நோன்பு என்பது சாதாரண வேலையல்ல, மாறாக மிகவும் சிரமத்தை அனுபவித்து செய்ய வேண்டிய ஒன்றாகும்.

இதற்கு இவ்வாறுதான் சொல்ல வேண்டும். நோன்பாளிக்கு கூலியாக என்னையே நான் அர்ப்பணிப்பேன் என்று அல்லாஹ் சொன்னது மிகவம் பொருத்தமானதேயாகும்.

இதற்கு இவ்வாறுதான் சொல்ல வேண்டும். நோன்பாளிக்கு கூலியாக என்னையே நான் அர்ப்பணிப்பேன் என்று அல்லாஹ் சொன்னது மிகவும் பொருத்தமானதேயாகும்.

“றமழான்” என்ற சொல்லில் ஐந்து எழுத்துக்கள் இருப்பதாக மேலே குறிப்பிட்டேன். அவற்றில் முந்தின எழுத்து “றே” அருள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இரண்டாம் எழுத்து “மீம்” ஆகும். இது “மஃபிறத்” பாவமன்னிப்பை சுட்டிக்காட்டுகிறது. மூன்றாம் எழுத்து “ழாத்”ஆகும். இது “ழமான்” உத்தரவாதம்,பொறுப்பு என்பதைக் காட்டுகிறது. அதாவது நோன்பு நோற்பவனுக்கு சுவர்க்கம் கிடைக்குமென்று உத்தரவாதம் செய்கிறது. நாலாவது எழுத்து “அலிப்” ஆகும். இது “உஜ்றத்” என்ற நற்கூலியை காட்டுகிறது. ஐந்தாம் எழுத்து “நஜாத்”என்ற வெற்றியை காட்டுகிறது.

சுருக்கம் என்னவெனில் நோன்பு நோற்பவனுக்கு மேலே சொல்லப்பட்ட யாவும் கிடைக்கும்.

நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஐந்து கடமைகளில் ஒன்று. அதாவது வயதுவந்த ஒரு முஸ்லிம் றமழான் மாதம் நோன்பு நோற்பது அவன் மீது “பர்ழ்ஐன்” கட்டாயக்கடமையாகும். சிலருக்கு சலுகை உண்டு. இதன் விபரம் பின்னால் உரிய இடத்தில் இடம்பெறும்.

நோன்பு கடமை என்பது திருக்குர்ஆன் வசனம் கொண்டு நிறுவப்பட்டதாகும்.

قال الله تعالى يا أيّها الّذين آمنوا كُتِب عليكم الصِّيامُ كَمَا كُتِب على الّذين من قبلكم لعلّكم تتّقون.
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் “தக்வா” இறையச்சம் உள்ளவர்களாக ஆவதற்காக!
திருக்குர்ஆன் – 02:183

இவ்வசனத்தின் மூலம் விசுவாசிகள் மீது நோன்பு கடமை என்பது நிரூபணமாகின்றது.

இத்திருவசனத்தில் كَمَا كُتِب على الّذين من قبلكم “உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல்” என்ற வசனத்தில் அருளும், அன்பும் மறைமுகமாக – ஜாடையாக சொல்லப்பட்டிருப்பது தெளிவான ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல.

இதை இங்கு சற்று தெளிவாக எழுதுகின்றேன். அதெவ்வாறெனில் அல்லாஹ் விசுவாசிகளுக்கு “உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது” என்று சொல்லியிருந்தால் போதும் , كَمَا كُتِب على الّذين من قبلكم – “உங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல்” என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.

ஏனெனில் எஜமான் என்பவன் காரணம் காட்டி மக்களுக்கு தனது கட்டளையை பிரப்பிக்கத் தேவையில்லை. அவன் அடியார்களுக்கு செய்யுங்கள் என்றால் போதும் அவர்கள் செய்யத்தான் வேண்டும். ஏன்? எதற்கு? என்று கேட்பது இறைவனின் சந்நிதானத்தை மதித்ததாகாது.

இந்த நியாயம் அல்லாஹ்வுக்கு தெரிந்த விடயமாயினும் அடியார்கள் தன் மீது கெட்ட எண்ணம் வைத்து பாவியாக்கி விடாமல் அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவ்வாறு அல்லாஹ் சொல்லியுள்ளான்.

ஓர் அடியான் தன்மீது அல்லாஹ்வால் சுமத்தப்படுகின்ற சுமைகள் நீதியானவை என்றும், அவை தனது நலனுக்காகவே தன்மீது சுமத்தப்பட்டவை என்றும் விளங்கி அவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஒரு கடைக்காரன் தனது கடைக்கு வேலைக்காரன் ஒருவனை எடுத்தான். அவனுகுச் சில பொறுப்புக்களையும் கொடுத்தான். அவற்றில் சில உடலை வருத்திச் செய்யக்கூடிய சிரமமான வேலையாகவும் இருந்தன. அந்த வேலைக்காரன் தன்மீது முதலாளியால் சுமத்தப்பட்ட கடமைகள், சுமைகள் என்பன தனக்கு மட்டுமே சுமத்தப்படுகின்றன என எண்ணி முதலாளியின் மீது தப்பெண்ணம் கொள்ளமல் இருப்பதற்காக முதலாளி தொழிளாலியிடம் “நீ சுமக்கப்போகின்ற சுமைகள் உனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் இங்கு உன்னுடைய இடத்தில் இருந்து வேலை செய்தவர்களுக்கும் சுமத்தப்பட்டே இருந்தன”. என்று சொல்வதால் தொழிலாளிக்கு முதலாளியின் மீது கோபமோ, தப்பான எண்ணமோ ஏற்பட வழியில்லாமற் போய்விடும். இந்த நன்மை கருதி முதலாளி தொழிலாளியிடம் சொல்வது போன்றதே كَمَا كُتِب على الّذين من قبلكم உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போன்று என்று அல்லாஹ் அடியார்களுக்குச் சொல்வதுமாகும்.

قال النَّبِيُّ صلى الله عليه وسلّم مَنْ قَامَ رَمَضَانَ اِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
றமழான் மாதம் நன்மையை நாடியும், நம்பிக்கையோடும் யாராவது வணக்கம் செய்தால் அவனின் முந்தின பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

றமழான் மாதம் ஏனைய மாதங்களை விட விஷேடமான மாதமாகும். “தறாவீஹ்” வணக்கம் இம் மாதத்தில் மட்டுமே மார்க்கமாக்கப்பட்டுள்ளது. “ஸுன்னத்” ஆக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நபீ மொழியில் “மன் காம றமழான” என்ற வசனம் வந்துள்ளது. இவ்வசனத்தை தமிழில் மொழியாக்கம் செய்து மார்க்க உபன்னியாசம் செய்யும் மௌலவீமார்கள், “றமழான்” மாதம் யாராவது நின்று வணங்கினால் அவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த மொழியாக்கத்தை செவிமடுப்போரில் நின்று வணங்க முடியாத வயோதிபர்களும், நோயாளிகளும் நின்று வணங்கியவர்களுக்கு மட்டுமே பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றும், இருந்து வணங்கியவர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை என்றும் விளங்கி கவலைப்படுகிறார்கள். எமக்கு இந்தப் பாக்கியம் இல்லாமற் போய்விட்டதே என்று ஏங்குகிறார்கள்.

உண்மையில் அவர்களைக் கவலைப்பட வைத்தவர்களும், இவர்களை ஏங்கவைத்தவர்களும் மொழியாக்கம் செய்த மௌலவீமார்களேயன்றி “றஹ்மதுன் லில் ஆலமீன்” உலக மக்களுக்கு அருளாக வந்த, அனுப்பி வைக்கப்பட்ட அருள் நபீ அல்ல.
றமழான் மாதம் நின்று வணங்குபவர்களுக்கும், இருந்து வணங்குபவர்களுக்கும் பாவம் மன்னிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மௌலவீமார்களிற் சிலர் مَنْ قَامَ رَمَضَانَ என்ற வசனத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் “நின்று வணங்கினால்” என்று மொழியாக்கம் செய்ததே இதற்கு காரணமாகும்.

இவ்வாறு மொழியாக்கம் செய்யும் மௌலவீமார் இதன்பிறகு இவ்வாறு கூறுவதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

مَنْ قَامَ رَمَضَانَ என்ற வசனத்தின் சரியான பொருள் مَنْ قَامَ رَمَضَانَ بِا لْعِبَادَةِ என்பதாகும். இதன் பொருள் “ஒருவன் விடாமல் வணக்கம் செய்தால்” என்பதேயாகும். قَامَ مُزَمِّلٌ بِا لْخِدْمَةِ முசம்மில் என்பவன் விடாமல் பணி செய்தான் என்றே பொருள் கொள்ளவேண்டும். மாறாக “முசம்மில்” பணி செய்வது கொண்டு நின்றான்”என்று பொருள் கொள்ளக் கூடாது.

ஏனெனில் அவன் இருந்து கொண்டு பணி செய்தாலும் قَامَ مُزَمِّلٌ بِا لْخِدْمَةِ என்று சொல்ல முடியும். நோக்கம் என்னவெனில் முசம்மில் இருந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ தொடர்ந்து பணி செய்தான் என்பதேயாகும்.

மேற்;கண்ட நபீ மொழிக்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் நின்ற நிலையில் வணங்கியவர்களின் பாவம் மன்னிக்கப்படும் என்று பொருள் கொண்டால் நோயினாலோ, வயோதிபத்தினாலோ நிற்க முடியாமல் கதிரையிலோ, தரையிலோ இருந்து வணக்கம் செய்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் இல்லாமற் போய்விடும், அருட்கொடையான அண்ணல் இவ்வாறான கருத்தைக் கூறுவார்களா?

مَنْ قَامَ رَمَضَانَ என்ற நபீ மொழியின் சுருக்கம் என்னவெனில் ஒருவன் நின்ற நிலையிலோ, இருந்த நிலையிலோ எந்த நிலையிலேனும் வணங்க வேண்டும் என்பதேயாகும். றமழான் மாதம் வணக்கம் செய்யாமல் அதை வீணாக்கக் கூடாதென்பதே நோக்கமாகும்.

قال الله تعالى الّذِيْنَ يَذْكُرُوْنَ اللهَ قِيَامًا وَقُعُوْدًا وَعَلَى جُنُوْبِهِمْ.
நின்ற நிலையிலும், இருந்த நிலையும், சாய்ந்த நிலையிலும் – படுத்த நிலையிலும் அல்லாஹ்வை “திக்ர்” செய்வோரை – அவனை நினைப் போரை அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான். நின்ற நிலையில் “திக்ர்” செய்பவர்களை மட்டும் புகழவில்லை.

இத் திருவசனத்தின் மூலம் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், சாய்ந்த அல்லது படுத்த நிலையிலும் அல்லாஹ்வை “திக்ர்” நினைவு படுத்தவும், அவனை வணங்கவும் முடியும் என்பது தெளிவாகிறது. எந்த நிலையில் வணங்கினாலும் வணங்குகிறவனுக்கு நற்கூலி நிச்சயமாக கிடைக்கும்.

مَنْ قَامَ رَمَضَانَ اِيْمَانًا ஒருவன் றமழான் மாதம் வணங்கிய கூட்டத்தில் சேர்வதாயின் அவன் செய்ய வேண்டிய வணக்கங்கள் எவை என்பது பற்றி ஆய்வு செய்வோம்.

ஒருவன் றமழான் மாதத்தை வணக்கத்தின் மூலம் “ஹயாத்” ஆக்கிய, உயிர்ப்பித்த கூட்டத்துடன் சேர்வதாயின் அவன் றமழான் முதலாம் இரவிலிருந்து “மக்ரிப்” தொழுகையை உரிய நேரத்தில் “ஜமாஅத்” கூட்டாகத் தொழவேண்டும். அதே போல் “தறாவீஹ்” தொழுகை, “வித்று” தொழுகைகளையும் தொழவேண்டும்.

இவ்வாறு செயல்பட்டவன் மாத்திரமே “றமழான்” மாதத்தை ஹயாத்தாக்கிய கூட்டத்துடன் சேருவான். எனினும் சிலருக்கு இதில் சலுகையுண்டு.

ஒருவன் தான் செய்யும் தொழிலைப் பொறுத்து அவனுக்கு சலுகை வழங்கப்படும். உதாரணமாக ஒருவன் தான் அன்றாடம் செய்யும் தொழிலை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது “மக்ரிப்” தொழுகையையோ, “இஷாஉ” தொழுகையையோ “ஜமாஅத்”கூட்டாகத் தொழும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லையானால், அல்லது “தறாவீஹ்”, “வித்ர்” இரண்டையும் கூட்டாகத் தொழும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்காமற்போனால் அவன் சலுகை வழங்கப்படட்வனாகவும், மன்னிப்பு வழங்கப்பட்டவனாகவும் ஆகிவிடுவான். அவன் குறிப்பிட்ட தொழுகைகளை கூட்டாகத் தொழத்தவறினாலும் தனியாகவேனும் தொழவேண்டும்.

இவ்வாறு அவன் செய்தால் றமழான் மாதத்தை ஹயாத்தாக்கியவர்களுடன் அவனும் சேர்ந்து கொள்வான். எனினும் ஏற்றுக் கொள்ளத்தக்க காரணமின்றி றமழான் மாத இரவுகளில் ஜமாஅத்துடன் தொழாதவர்கள் றமழானை ஹயாத்தாக்கியவர்கள் பட்டியலில் சேர்வார்களா என்பது சந்தேகமே!

சுருக்கம் என்னவெனில் ஒருவன் றமழான் மாதம் பகல், இரவுகளில் ஐந்து நேர “பர்ழ்” கடமையான தொழுகைகளை “ஜமாஅத்” துடன் தொழவேண்டும். அதோடு “தறாவீஹ்”, “வித்ர்” இரண்டு தொழுகைகளையும் “ஜமாஅத்” துடன் தொழ வேண்டும். முடியாத போது தனியாக வேனும் தொழவேண்டும். இவ்வாறு ஒருவன் செய்தால் அவன் “றமழான்” மாதத்தை ஹயாத்தாக்கியவனாகிவிடுவான்.

தறாவீஹ், வித்ர் இரு தொழுகைகளையும் ஜமாஅத்துடன் தொழவேண்டும் என்ற உறுதியான “நியயத்” எண்ணம் இருந்தும் முதுமை, நோய் இவ்விரு காரணங்களுக்காக தறாவீஹ், வித்ர் தொழுகைகளை விட்டவன் அல்லாஹ்வின் பேரருளாலும், பெருமானாரின் றஹ்மத்தாலும் றமழான் மாதத்தை ஹயாத்தாக்கிய கூட்டத்தில் சேர்ந்து விடுவான். இன்ஷா அலலாஹ்!

قال النَّبِيُّ صلى الله عليه وسلّم مَنْ صَامَ رَمَضَانَ اِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
யாராவது றமழான் மாதம் நம்பிக்கையுடனும், நன்மை கருதியும் நோன்பு நோற்பானாயின் அவனின் முந்திய பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.


ஸுபீ மகான்களால் நோன்பு மூன்று படித்தரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.


ஒன்று – صَوْمُ الشَّرِيْعَةِ – ஸவ்முஷ்ஷரீஆ.
இரண்டு – صَوْمُ الطَّرِيْقَةِ – ஸவ்முத்தரீகா.
மூன்று – صَوْمُ الْحَقِيْقَةِِ – ஸவ்முல்ஹகீகா.


முதலாவது “ஸவ்முஷ்ஷரீஆ” ஷரீஅத்தின் நோன்பு. இது “ஸவ்முல் அவாம்” சாதாரண மக்களின் நோன்பு என்றும் அழைக்கப்படும்.


எவை நோன்பை முறிக்கும் என்று “ஷரீஆ”வில் மார்க்க சட்டக்கலையில் சொல்லப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் தவிர்ந்து கொள்ளல் “ஷரீஆ” வின் நோன்பு எனப்படும். தவிர்க்காவிட்டால் நோன்பு முறிந்து விடும்.


இக்கால கட்டத்தில் பொது மக்கள் மார்க்க அறிவு இல்லாதவர்கள், சாமானியர்கள் நோற்கும் நோன்பு இவ்வகை நோன்பேயாகும்.


அதாவது இரவில் நோன்புக்கான “நிய்யத்” வைத்து, நோன்பு திறக்கும் நேரம் வரை – “மக்ரிப்” நேரம் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை செய்யாதிருத்தல்.


இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் அநேகர் – சாதாரண மனிதர்கள் இவ்வாறுதான் நோன்பு நோற்கிறார்கள்.


இவர்களுக்கு நோன்பின் அகமியமும் தெரியாது. அதன் ரகசியமும் தெரியாது. அது மட்டுமல்ல, நோன்பை முறிக்கும் காரியங்கள் கூட சரியாகத் தெரியாது. “அவாம்”களில் – பொதுமக்களில் நோன்பு நோற்றுக் கொண்டு மனைவியுடன் உடலுறவு கொள்பவர்களும், முத்தமிடுபவர்களும் இருக்கின்றார்கள். சுமார் நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தது எனக்குத் தெரியும்.


இரண்டாவது “ஸவ்முத்தரீகா” தரீக்காவின் நோன்பு. இது صَوْمُ الْخَوَاصِّ – விஷேடமானவர்களின் நோன்பு என்றும் அழைக்கப்படும்.


எவையெல்லாம் நோன்பை முறிக்குமென்று “ஷரீஆ” வில் சொல்லப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் தவிர்த்துக் கொள்வதுடன் புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பொய் சொல்லுதல், பொய் சாட்சி சொல்லுதல், பொய் சத்தியம் செய்தல் முதலானவற்றையும், மற்றும் பாவங்களையும் தவிர்த்துக் கொள்ளுதல் “தரீகா”வின் நோன்பு எனப்படும். இவற்றைத் தவிர்க்காவிட்டால் நோன்பு முறிந்து விடும்.


قال النّبيُّ صلى الله عليه وسلّم خَمْسٌ يُفَطِّرْنَ الصَّائِمَ. الغِيْبَةُ ، والنَّمِيْمَةُ ، وَالْكَذِبُ ، وَشَهَادَةُ الزُّوْرِ، وَالْيَمِيْنُ الْغَمُوْسُ.
ஐந்து விடயங்கள் நோன்பாளியின் நோன்பை திறக்கச் செய்து விடும். (நோன்பை முறித்து விடும்) புறம் கூறல், கோள் செல்லுதல், பொய் சொல்லுதல், பொய் சாட்சி சொல்லுதல், பொய் சத்தியம் செய்தல் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்.


இந்த “ஹதீது” “தரீகா” அடிப்படையில் கூறப்பட்டதேயன்றி “ஷரீஆ” அடிப்படையில் கூறப்பட்டதல்ல.


ஏனெனில் மேற்சொன்ன ஐந்து காரியங்களில் எது கொண்டும் “ஷரீஆ”வின் நோன்பு முறிந்து விடாது. எனினும் பாவத்துக்குரிய தண்டனை செய்தவனுக்கு கிடைக்கும். அதோடு நோன்பு முறிந்து போகாது போனாலும் அதன் மூலம் “கல்பு” உள்ளத்திற்கு கிடைக்க வேண்டிய “நூர்” பிரகாசம் இல்லாமற் போய்விடும்.


“ஸவ்முத்தரீகா” என்ற இந்த வகை நோன்பு நோற்பவன் “ஷரீஆ”வில் நோன்பை முறிக்கும் காரியங்களை கட்டாயம் தவிர்ந்து கொள்வதுடன் மேற்கண்ட ஐந்து பாவங்களை குறிப்பாகவும், ஏனைய பாவங்களை பொதுவாகவும் தவிர்ந்து கொள்ளுதல் அவசியம். மீறினால் நோன்பு முறிந்து விடும்.


இந்த வகை நோன்பு நோற்பவர்கள் இக்காலத்தை பொறுத்தவரை இருப்பார்களாயின் அவர்கள் ஸுபீ மகான்களாகவே இருப்பார்கள்.
மூன்றாவது “ஸவ்முல் ஹகீகா” ஹகீகாவின் நோன்பு. இது صَوْمُ خَوَاصِّ الْخَوَاصِّ – “ஸவ்மு கவாஸ்ஸில் கவாஸ்” என்றும் சொல்லப்படும்.


நோன்பின் மூன்று வகைகளில் இந்த வகைதான் சிறந்ததும், நோற்பதற்கு மிகவும் கஷ்டமானதுமாகும். இந்த வகை நோன்பு நபீமார் நோற்றிருக்கிறார்கள். வலீமார்களிலும் உயரிய பதவிகளுடையோர் நோற்றுள்ளார்கள். குத்புஸ்ஸமானாக வந்தவர்கள் அனைவரும் நோற்றுள்ளார்கள்.


இவ்வகை நோன்பிற்குரிய நிபந்தனை ஆன்மீக வளர்ச்சி அடையாதவர்களால் சுமந்து கொள்ள முடியாததாகும் இங்கு நிபந்தனைகளை எழுதுகிறேன்.


இவ்வகை நோன்பு நோற்றவன் “ஷரீஆ”வில் நோன்பை முறிக்கும் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் தவிர்ந்து கொள்வதுடன், “தரீகா”வில் நோன்பை முறிக்கும் என்று சொல்லப்பட்டவற்றையும் தவிர்ந்து கொள்வதுடன் ஒரு வினாடியேனும் அவனின் உள்ளத்தில் சிருட்டியின் நினைவு வராமலும் இருக்க வேண்டும். (அதாவது ஒரு நொடி நேரம் கூட அல்லாஹ்வை மறக்காமல் இருக்க வேண்டும்) இதுவே பிரதான அம்சம்.


இது அசாத்தியமானதல்ல. அசாத்தியமானதென்றால் உலகில் எவரும் இவ்வாறு இருந்திருக்கமாட்டார்கள். நபீமார், வலீமாரின் வரலாறுகளில் எண்ணற்றோர் மேற்கண்டவாறு இருந்ததற்கு ஆதாரங்கள் அதிகமுள்ளன.


இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்ற ஞான மகான் ஆன்மீகக் கவிஞர் இப்னுல் பாரிழ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.


لَوْ خَطَرَتْ لِيْ فِى سِوَاكَ إِرَادَةٌ – عَلَى خَاطِرِيْ سَهْوًا قَضَيْتُ بِرِدَّتِيْ
இறைவா! என்னுள்ளத்தில் உன் நினைவு அல்லாத வேறு நினைவு (மறதியாகவேனும்) வருமானால் என்னை “முர்தத்” மதம் மாறியவன் என்று நானே தீர்ப்பு கொடுப்பேன்.


இவர் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் உள்ளவர். இவருக்கு “அத்தாஇய்யா”என்ற பெயரில் ஆழமான இறையியல் பாடல் ஒன்று உள்ளது.


عُشَّاقُ الرَّسُوْلِ- உஷ்ஷாகுர் றஸுல் – றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது காதல் கொண்ட காதலர்கள் பலர் அவர்களை ஒரு வினாடி நேரம் கூட காணாமல் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்கள்.


ஷாதுலிய்யா தரீக்காவின் மூலவர் ஸெய்யிதுனா அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ்ஷாதுலி கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.


لَوْ حُجِبَ عَنِّيْ رَسُوْلُ اللهِ طَرْفَةَ عَيْنْ – مَا كُنْتُ مِنْ جُمْلَةِ الْإِسْلَامِ زُمْرَةَ زَيْنْ
எனக்கும், றஸுலுல்லாஹ் அவர்களுக்கும் இடையில் கண் இமைக்கும் நேரமேனும் திரை போடப்பட்டால் (அவர்களை நான் காணவில்லையானால்) நான் அழகிய முஸ்லிம்களின் கூட்டத்தில் ஆகிவிடமாட்டேன். (நான் முஸ்லிம் அல்ல) என்று கூறியுள்ளார்.


சுருக்கம் என்னவெனில், ஒரு நொடி நேரமேனும் நான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை என் தலைக்கண்ணால் – வெளிக் கண்ணால் காணவில்லையானால் நான் “காபிர்” ஆகிவிடுவேன் என்பதாகும்.


உலகில் தோன்றி மறைந்த நபீமார்களும், வலீமார்களில் பலரும் அல்லாஹ்வில் “பனா” ஆனவர்களாகவே இருந்துள்ளார்கள். அதே போல் இன்னும் பலர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் “பனா” ஆனவர்களாகவே இருந்துள்ளார்கள்.


அல்லாஹ்வில் – அவனின் “தாத்”தில் “பனா” ஆகுதல் என்றும், அவனின் “அஸ்மாஉ” திரு நாமங்களில் “பனா” ஆகுதல் என்றும் அவனின் ஸிபாத் – அல்லது “அப்ஆல்”களில் “பனா” ஆகுதல் என்றும் மூன்று வகை “பனா” உன்டு. இந்த மூன்று “பனா” க்களின் பின் “பகாஉ” என்று ஒரு நிலை உண்டு. இது குறித்து ஒரு ஞானி பின்வருமாறு பாடியுள்ளார்.


فَنَاءٌ فِى فَنَاءٍ فِى فَنَاءٍ – فَكَانَ فَنَائُهُ عَيْنَ الْبَقَاءِ
முப்பனாவின் பின் “பகா” என்று கூறியுள்ளான். மூன்று வகை “பனா” க்களிலும் தெளிவு கிடைக்காது. அதற்கப்பால் “பகா” என்ற ஒரு நிலை உண்டு. அதில்தான் தெளிவு கிடைக்கும்.


மூன்று “பனா” க்களின் போதும் அல்லாஹ்வின் காட்சி மட்டுமே அவர்களுக்குத் தெரியும். சிருஷ்டி அவர்களுக்குத் தெரியாது. மூன்று வகை “பனா”வையும் கடந்து “பகா” என்ற நிலைக்கு வந்தார்களாயின் சிருஷ்டி தெரியும்.

நோன்புக்கு அறபு மொழியில் “ஸவ்ம்” என்றும் “ஸியாம்” என்றும் சொல்லப்படும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ
விசுவாசிகளே! உங்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது என்ற வசனத்தில் நோன்புக்கு “ஸியாம்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.

மர்யம் அலைஹஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் வரலாறில் إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا “நான் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்பதை நேர்ச்சை செய்து கொண்டேன்” என்று மர்யம் அலைஹஸ்ஸலாம் சொன்னதாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நோன்புக்கு “ஸவ்ம்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.

மேற்கண்ட இரண்டு திருவசனங்கள் மூலமும் நோன்புக்கு “ஸவ்ம்” “ஸியாம்” என்ற இரு சொற்களையும் பயன்படுத்தலாம் என்பது விளங்குகின்றது.

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அதிகமான மொழிகளில் – ஹதீதுகளில் அவர்கள் “ஸவ்ம்” என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்கள் என்பதும் விளங்குகிறது.

“ஸவ்ம்” என்ற சொல் “ஸாம” என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு மொழியடிப்படையில் ஓர் அர்த்தமும், “ஷரீஆ” அடிப்படையில் வேறோர் அர்த்தமும் உண்டு.

இதற்கு மொழியடிப்படையில் தடுத்தான், தடுத்தல் என்ற அர்த்தங்கள் வரும். இதை “الإمساكُ” என்று சொல்லப்படும்.

மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாக மேலே எழுதிக்காட்டிய اِنِّيْ نَذَرْتُ لِلرَّحْمَانِ صَوْمًا என்ற வசனத்தில் வந்துள்ள “ஸவ்மன்” என்ற சொல்லுக்கு நோன்பு என்று பொருள் சொன்னாலும் அச் சொல் நாம் கருதுகின்ற நோன்பைக் குறிக்காது. மாறாக “ஸவ்ம்” என்ற சொல்லுக்குரிய மொழியடிப்படையிலான “தடுத்தல்” என்ற பொருளையே குறிக்கும்.

இதன் விபரமென்னவெனில் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தகப்பன் இல்லை. தகப்பன் இல்லாமல் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் வயிற்றில் தரித்தார்கள். அவர்கள் பிறந்தவுடன் பலர் மர்யமிடம் வந்து தகப்பன் இல்லாமல் பிள்ளை எவ்வாறு வந்ததென்று கேட்கத் தொடங்கினார்கள். அந்நேரம் தான் மர்யம் அலைஹஸ் ஸலாம் மேற்கண்ட اِنِّيْ نَذَرْتُ لِلرَّحْمَانِ صَوْمًا நான் அல்லாஹ்வுக்காக “ஸவ்மை” நேர்ச்சை செய்து விட்டேன் என்று சொன்னார்கள்.

அவர்கள் “ஸவ்ம்” என்று சொன்னது நாம் கருதக்கூடிய நோன்பையல்ல. நான் பேசுவதை தடுத்துக் கொண்டேன் என்றே பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வசனத்தையடுத்து தொடராக வருகின்ற வசனம் فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيَّا என்பதாகும். இதன் பொருள் “இன்று நான் யாருடனும் பேசமாட்டேன்” என்பதாகும். அதாவது “ஸவ்ம்” என்ற சொல் கொண்டு நான் பேச்சை தடுத்துள்ளேன் என்றுதான் மர்யம் அலைஹஸ் ஸலாம் சொன்னார்களேயன்றி நாம் நோன்பு நோற்பது போல் நோன்பு நோற்றுள்ளேன் என்ற கருத்தில் அவர்கள் சொல்லவில்லை.

இங்கு இன்னுமொரு கருத்தையும் விளங்கலாம். அதாவது நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “ஷரீஅத்” மார்க்கத்தில்தான் “ஸவ்ம்” நோன்பு என்பது நாம் பின்பற்றிச் செயல்படுகின்ற நோன்பாகும். ஆனால் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தில் “மௌனம்” நோன்பாக கருதப்பட்டுள்ளது. இதனால்தான் மேற்கண்ட வசனத்தில் அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்று வாழும் சிலர் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் “ஷரீஆ” வைப் பின்பற்றி எவருடனும் பேசாமல் இருக்கின்றார்கள். ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால் “நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்” என்று எழுதிக்காட்டுகிறார்கள். இது அறியாமையாகும்.

ஏனெனில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “ஷரீஆ” வில் “மௌனவிரதம்” என்பதில்லை. அதாவது மௌனமாக இருப்பது நோன்பாகாது. இது அறியாமையின் வெளிப்பாடாகும்.

ஒருவன் வீண்பேச்சுக்கள் பேசாமல் இருக்கலாம். அது நல்ல காரியம்தான். ஆனால் அதை நோன்பாக ஆக்கிக்கொள்வது பிழையாகும். நோன்பாக ஆக்கிக் கொள்ளாது போனாலும் பொதுவாக எவருடன் பேசாமலிருப்பது – மௌனமாயிருப்பது இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும்.

நான் சிலரைக் கண்டிருக்கிறேன். அவர்கள் வருடக்கணக்கில் பேசாமல் இருப்பார்கள். ஏன் என்று கேட்டால் மௌனமாயிருப்பது வணக்கம் என்று எழுதிக்காட்டுவார்கள். வீணான, பாவமான, தேவையற்ற பேச்சுக்கள் பேசாமல் இருப்பது நல்ல விடயம் தான். எனினும் பேசவேண்டிய இடத்தில் பேசுவது பாவமாகாது. சிலரிடம் பெயர் என்ன என்று கேட்டால் கூட சொல்ல மாட்டார்கள். எழுதியே காட்டுவார்கள். இவ்வாறு மௌனம் சாதிப்பது மார்க்கம் அனுமதிக்காத ஒன்றாகும். இது தொடர்பாக நபீ மொழிகள் உள்ளன.

كَانَ اَهْلُ الْجَاهِلِيَّةِ مِنْ نُسُكِهِمُ الصُّمَاتُ، وَكَانَ اَحَدُهُمْ يَعْتَكِفُ الْيَوْمَ وَاللَّيْلَةَ فَيَصْمُتُ وَلَا يَنْطِقُ، فَنُهُوْا – يعني فى الإسلام، عن ذلك، وَاُمِرُوا بِالذِّكْرِ وَالْحَدِيْثِ بِالْخَيْرِ،
(معالم السنن. 3ஃ294 للإمام أبي سليمان الخطّابي)
ஜாஹிலிய்யா காலத்தவர்களிடம் மௌனமாயிருப்பது வணக்கமாக இருந்தது. அவர்களில் ஒரு பகலும், ஓர் இரவும் “இஃதிகாப்” இருப்பார். எவருடனும் பேசாமல் மௌனியாக இருப்பார். அவர்கள் அவ்வாறு இருக்க வேண்டாம் என்று தடுக்கப்பட்டு நல்ல விடயங்களை பேசுமாறும், “திக்ர்” செய்யுமாறும் ஏவப்பட்டார்கள்.
மஆமுஸ்ஸுனன் – 3 – 294
ஆசிரியர் – அபூஸுலைமான் அல்கத்தாபீ.
عن قَيْسِ بن أبي حازم قال : ( دَخَلَ اَبُوبكرٍ الصِّدِّيْقُ رضي الله عنه عَلَى امْرَأَةٍ مِنْ اَحْمَسَ، يُقَالُ لها زَيْنَبُ، فَرَآهَا لَاتَتَكَلّمُ، فقال مَا لَهَا لَا تَتَكَلَّمُ؟ فَقَالُوا حَجَّتْ مُصْمِتَةً، فَقَالَ لَهَا تَكَلَّمِيْ، فَإِنَّ هَذَا لَا يَحِلُّ، هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ، فَتَكَلَّمَتْ.
(بخارى : 3834)
கைஸ் இப்னு அபீஹாசிம் பின்வருமாறு சொல்கிறார்கள். அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அஹ்மஸ் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றார்கள். அவரின் பெயர் சைனப். அவர் பேசாமல் மௌனியாக இருந்ததைக் கண்ட அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏன் இவர் பேசாமல் இருக்கிறார் என்று கேட்டார்கள். அவர் மௌனியாக “ஹஜ்” செய்துவிட்டு வந்துள்ளார் என்று சொல்லப்பட்டது. அப்போது அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தப் பெண்ணிடம், இது “ஹலால்” அல்ல. இது ஜாஹிலிய்யாக்களின் வேலை. நீ பேசு என்றார்கள். அவர் பேசினார்.
(புஹாரீ – 3834)

இன்றும் சில பாவாக்கள், மஸ்தான்கள் இவ்வாறு இருக்கிறார்கள். இவர்கள் நடிக்கிறார்களா? விடயம் பிழை என்று தெரியாமல் செய்கிறார்களா? (அல்லாஹ் மிக அறிந்தவன்.)

عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الهِلاَلَ قَالَ: اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. (دارمي – 1730 ، ترمذي – 3451 )
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறையை கண்டால், “அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் யும்னி வல் ஈமான் வஸ்ஸலாமதி வல் இஸ்லாம், றப்பீ வறப்புகல்லாஹ்” என்று சொல்வார்கள்.
(ஆதாரம்: தாரமீ 1730, துர்முதீ 3451)

பொருள்: யா அல்லாஹ்! அருள் கொண்டும், ஈமான் – நம்பிக்கை கொண்டும், ஈடேற்றம் கொண்டும், இஸ்லாம் கொண்டும் இந்தப் பிறையை எமக்குச் சாதகமாக்குவாயாக! பிறையே! எனது இரட்சகனும், உனது இரட்சகனும் அல்லாஹ்தான்.

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறையை கண்டால் (அல்லாஹு அக்பர், அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமதி வல் இஸ்லாம், வத் தவ்பீகி லிமா யுஹிப்பு றப்புனா வயர்ழா, றப்புனா வறப்புகல்லாஹ்) என்று சொல்வார்கள்.
ஆதாரம்: தாரமீ 1729

பொருள்: “அல்லாஹ் பெரியவன், யா அல்லாஹ்! ஈமானைக் கொண்டும், ஈடேற்றம் – பயமற்ற நிலை கொண்டும், ஸலாமத், இஸ்லாம் கொண்டும், நீ விரும்பியும், பொருந்தியும் கொள்ளக் கூடியதற்கு நல்லணுகூலம் செய்வது கொண்டும் இந்தப் பிறையை எங்களுக்குச் சாதகமனதாக்கியருள்வாயாக! பிறையே! எங்களின் இரட்சகனும், உனது இரட்சகனும் அல்லாஹ்தான்”
حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، آمَنْتُ بِالَّذِي خَلَقَكَ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ يَقُولُ:الْحَمْدُ لِلَّهِ الَّذِي ذَهَبَ بِشَهْرِ كَذَا، وَجَاءَ بِشَهْرِ كَذَا
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறையைக் கண்டால், (ஹிலாலு கைறின், ஹிலாலு கைறின், ஹிலாலு கைறின், ஆமன்து பில்லதீ கலகக) மூன்று முறை சொல்வார்கள். பின்பு, (அல்ஹம்து லில்லாஹில்லதீ தஹப பிஷஹ்ரி கதா வஜாஅ பிஷஹ்ரி கதா) என்று சொல்வார்கள்.
ஆதாரம்: அபூ தாவூத் 5092

பொருள்: “நன்மையுடையவும், நேர்வழியுடையவும் பிறையாகும், நன்மையுடையவும், நேர்வழியுடையவும் பிறையாகும், நன்மையுடையவும், நேர்வழியுடையவும் பிறையாகும், உன்னைப் படைத்தவனைக் கொண்டு நான் ஈமான் – விசுவாசம் கொண்டேன். (மூன்று தரம்) பின்பு இன்ன மாதத்தை அனுப்பிவிட்டு இன்ன மாதத்தை தந்தவனுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்.

قَالَ ابن علان رحمه الله تعالى فى ‘ الفتوحات ‘ (4ஃ 328 ) (قال الجوهري وصاحب ‘ المطلع ‘ اَلْهِلَالُ أَوَّلُ لَيْلَةٍ وَالثَّانِيَةِ وَالثَّالِثَةِ، ثُمَّ هُوَ قَمَرٌ،
புதூஹாத் என்ற நூல் 4 – 328ல் இப்னு அலான் றஹிமஹுல்லாஹ் சொன்னதாக ஜவ்ஹரீ என்பவரும், “அல்மத்லஉ” நூலாசிரியரும் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (ஹிலால் என்று முதலாம், இரண்டாம், மூன்றாம் இரவுகளுக்கு மட்டுமே சொல்ல வேண்டும். அதன் பிறகு “கமர்” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சுருக்கம் என்னவெனில், ஹிலால், கமர் இரண்டிற்கும் தமிழில் பிறை என்று சொன்னாலும் அறபு மொழி உபயோகத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இரவுகளில் மட்டும் “ஹிலால்” என்ற சொல்லையும், அதன் பிறகு “கமர்” என்ற சொல்லையும் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

மேற்கண்ட நபீ மொழிகள் மூலம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறையைக் கண்டு மூன்று விதமான ஓதல்கள் ஓதியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. மூன்றில் எதை நாம் பின்பற்றினாலும் அது சரியானதேயாகும். விரும்பியதை நாம் ஓதலாம்.

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு ஓதியது அவர்களின் சுயவிருப்பத்தின்படியல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى،إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى،
அவர்கள் தங்களின் சுய விருப்பத்தின்படி ஒன்றுமே பேசமாட்டார்கள். பேசினால் அது “வஹீ” இறையறிவிப்பாகவே இருக்கும்.

அவர்கள் பிறையை கண்டு மூன்று வகையாக ஓதியது ஒரே நேரத்திலன்றி பல சந்தர்ப்பங்களில் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை, இந்தியாவில் தமிழ் நாடு கேரளா – மலையாளம் போன்ற இடங்களில் வாழும் முஸ்லிம்கள் தலைப் பிறை கண்டால் மேற்கண்ட ஓதல்களை ஓதினாலும் ஓதாவிட்டாலும் நல்ல மனிதர் ஒருவரின் முகத்தை முதலில் பார்த்து அவருடன் “முஸாபஹா” கை கொடுத்து ஸலாம், ஸலவாத் சொல்லிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் அந்த மாதம் முழுவதும் சிறப்பாக இருக்குமென்று கருதுகிறார்கள்.

இலங்கை நாட்டின் கிழக்கு பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தவறாமல் இவ்வாறு செய்வார்கள். இவ்வாறு நபீ பெருமானோ, நபீ தோழர்களோ செய்ததற்கு ஆதாரமில்லாது போனாலும் இவ்வழக்கம் நல்ல வழக்கம் என்பதை முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

وَمَا رَآهُ الْمُسْلِمُوْنَ حَسَنًا فَهُوَ عِنْدَ اللهِ حَسَنٌ ، وَاِنْ لَمْ يَكُنْ لَهُ دَلِيْلٌ مِنَ الْكِتَابِ وَالسُّنَّةِ.
முஸ்லிம்கள் எதை நல்ல காரியமென்று கருதுகிறார்களோ அதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீதிலும் ஆதாரமில்லாது போனாலும் அது அல்லாஹ்விடம் நல்ல காரியமே என்பது அறிஞர்கள் ஒரே குரலில் சொன்ன ஒரு தத்துவமாகும்.

இத் தத்துவத்தின் படி பிறையை கண்டு ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுடன் ஸலாம் சொல்லி “முஸாபஹா” செய்து கொள்வதும், அந்நேரம் பெருமானார் மீது ஸலவாத் சொல்வதும் எந்த வகையிலும் பிழையாகாது.

ஆனால் இந்த விடயத்தை நல்லதென்று நாம் செய்வது வழிகேடர்களுக்கு உச்சந்தலையில் நெருப்புத் தணலை கொட்டினாற் போன்றிருக்கும். (அல்ஹம்துலில்லாஹ்)

நோன்பின் பர்ழ் இரண்டு

ஒன்று: இரவில் ‘நிய்யத்’ வைத்தல். இதன் விபரம் பரிசாகத் தந்துவிட்டோம்.

இரண்டு: பகல் முழுவதும் அதாவது ‘ஸுப்ஹ்’ தொழுகைக்கான நேரம் முதல் ‘மக்ரிப்’ தொழுகைக்கான நேரம் வரை நோன்பை முறிப்பவை என்று ‘ஷரீஅஹ்’ வில் கூறப்பட்ட காரியங்களைச் செய்யாதிருத்தல். இதன் விபரம் பின்னால் வரும்.

நோன்பை முறிக்கும் காரியங்கள் பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தோம். அதற்கிடையில் புனித றமழான் முதற்பரிசாகத் தர வேண்டியதை மறந்து விட்டோம். அதை இப்போது தருகிறோம். பரிசை எப்போது தந்தாலும் ஏற்றுக் கொள்ளலாமல்லவா? இதன் பிறகு சொன்னபடி நோன்பை முறிப்பவை பற்றி எழுதுவோம்.

றமழான் நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ‘ஷஃபான்’ மாதம் கடமையாக்கப்பட்டது. ஆரம்பத்திலா? நடுப்பகுதியிலா? இறுதியிலா? என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்பது வருடங்கள் றமழான் நோன்பு நோற்றுள்ளார்கள்.

றமழான் நோன்பு என்பது நபீ பெருமானின் உம்மத்தவர்களுக்கு மட்டும் விஷேடமானதாகும். வேறு நபீமாரின் உம்மத்தவர்களுக்கு ஒரு வகை நோன்பு விதியாக்கப்பட்டிருந்தாலும் பெருமானாரின் உம்மத்தவர்களுக்கு விதியாக்கப்பட்ட அமைப்பில் விதியாக்கப்பட்டிருக்கவில்லை.
ஏனைய நபீமாரின் உம்மத்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தற்கு ஆதாரம் كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ ‘உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று’ என்ற வசனமாகும்.

இமாம் ஹஸனுல் பஸரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

( كَانَ صَوْمُ رَمَضَانَ وَاجِبًا عَلَى الْيَهُوْدِ ، وَلَكِنَّهُمْ تَرَكُوْهُ وَصَامُوْا بَدْلَهُ يَوْمًا مِنَ السَّنَةِ، وَهُوَ يَوْمُ عَاشُوْرَاءَ، زَعَمُوْا أَنَّهُ يَوْمٌ أَغْرَقَ الله تَعَالَى فِيْهِ فِرْعَوْنَ، وَوَاجِبًا عَلَى النَّصَارَى أَيْضًا، لَكِنَّهُمْ بَعْدَ أَنْ صَامُوْهُ زَمَنًا طَوِيْلًا صَادَفُوْا فِيْهِ الْحَرَّ الشَّدِيْدَ، وَكَانَ يَشُقُّ عَلَيْهِمْ فِيْ أَسْفَارِهِمْ وَمَعَائِشِهِمْ، فَاجْتَمَعَ رَأْيُ عُلَمَائِهِمْ وَرُؤَسَائِهِمْ أَنْ يَجْعَلُوْهُ فِيْ فَصْلِ الرَّبِيْعِ لِعَدَمِ تَغَيُّرِهِ، وَزَادُوْا فِيْهِ عَشَرَةَ أَيَّامٍ كَفَّارَةً لِمَا صَنَعُوْا، فَصَارَ اَرْبَعِيْنَ، ثُمَّ إِنَّ مَلِكًا مَرِضَ فَجَعَلَ للهِ تَعَالَى إِنْ هُوَ بَرِئَ أَنْ يَصُوْمَ أُسْبُوْعًا ، فَبَرِئَ، فَزَادَهُ أُسْبُوْعًا، ثُمَّ جَاءَ بَعْدَ ذَلِكَ مَلِكٌ، فَقَالَ مَا هَذِهِ الثَّلَاثَةُ؟ فَأَتَمَّ خَمْسِيْنَ، أَيْ أَنَّهُ زَادَ الثَّلَاثَةَ بِاجْتِهَادٍ مِنْهُ،
பொருள் – யஹுதிகள் – யூதர்களுக்கு றமழான் நோன்பு கடமையாக இருந்தது. ஆயினும் அவர்கள் தமக்கு விதியாக்கப்பட்டிருந்த நோன்பை நோற்காமல் அதற்குப் பதிலாக வருடத்தில் முஹர்றம் மாதம் பத்தாம் நாள் மட்டும் நோன்பு நோற்று வந்தார்கள். அன்று அல்லாஹ் நபீ மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களைக் காப்பாற்றி அவர்களின் எதிரியாயிருந்த ‘பிர்அவ்ன்’ என்பவனைக் கடலில் மூழ்கச் செய்த நாளென்பதற்காக அவ்வாறு செய்தார்கள். அதே போல் ‘நஸாறா’ கிறுஸ்துவர்கள் மீதும் றமழான் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது. அவர்கள் நீண்ட காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் நோன்பு நேற்று வந்தார்கள். சில காலம் கடந்த பின் றமழான் மாதம் கடும் உஷ்ண காலமாக கால நிலை மாறியது. உஷ்ணகாலம் நோன்புடன் பிரயாணம் செய்வதும்இ வாழ்க்கை நடத்துவதும் கஷ்டமாகிவிட்டது. கிறுஸ்துவ மதத்தவர்கள் ஒன்று கூடி அந்த நோன்பை வசந்த காலத்தில் மாற்றினார்கள். அதோடு தாம் செய்த மாற்றத்திற்கு பரிகாரமாக மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்கள் நோன்பு நோற்று வந்தார்கள். அதன் பின் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன் நேயுற்றான். அவன் தனது நோய் சுகமானால் நாற்பது நாற்களுடன் மேலதிகமாக ஒரு வாரம் நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து கொண்டான். நேர்ச்சை நிறைவேறியது. மொத்தம் நாற்பத்தேழு நாட்கள் அவனும்இ அவனது நாட்டு மக்களும் நோன்பு நேற்று வந்தார்கள். அதன் பிறகும் ஓர் அரசன் வந்தான். அவன் இதுவென்ன மூன்று நாட்கள்? அனைவரையும் ஐம்பது நாட்கள் நோன்பு நோற்க வேண்டுமென்று சட்டமாக்கிவிட்டான்.
வஹ்ஹாபீ மகான்கள் இந்த வரலாறை ஆதாரமற்றதென்று – ‘ழயீப்’ ஆனதென்று ஒதுக்கிவிடுவார்கள். இதற்கு ‘ஸனது’ உண்டா என்று கேட்பார்கள். இவர்கள் எப்போதும் தமது கொள்கைக்கு முரணான ஹதீது வந்தாலும்இ வரலாறு வந்தாலும் அது ‘ழயீப்’ பலவீனமானதுஇ ‘ஸனது’ இல்லாத தென்று மறுத்துவிடுவார்கள். இவர்களிடம் இவர்களின் தந்தை இன்னான்தான் என்பதற்கு ‘ஸனது’ உண்டா? நாம் கேட்போம்.

நான் புகையிரதத்தில் கொழும்புக்குப் பயணித்துக் கொண்டிருக்கையில் எனக்குப் பக்கத்தில் இருந்த ‘தப்லீக் ஜமாஅத்’ தைச் சேர்ந்த ஒரு சகோதரர் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். கொழும்புக்கு என்று சொன்னேன். ஏன்? என்று கேட்டார். கொழும்பு தெவடகஹ உத்மான் வலியுல்லாஹ் அவர்களின் தர்ஹா ஷரீபில் நடை பெறுகின்ற கந்தூரி நிகழ்வுக்காக என்று சொன்னேன்.

அவ்வளவுதான் ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்த குரலில் கூறிய அவர் இரு கைகளையும் தலையில் வைத்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். ஏன் அழுகின்றீர்? என்ன நடந்தது? என்று கேட்டேன். நீங்கள் ஒரு மௌலவியாயிருந்தும் ‘ஷிர்க்’ ஆன காரியத்திற்குப் போவதை எண்ணியே அழுகின்றேன் என்றார்.

அல்ஹம்துலில்லாஹ் என்று கூறிய நான் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டேன். கொழும்பில் நாளை ‘தப்லீக் இஜ்திமா’ நடை பெறுகிறது அதற்குச் செல்கிறேன் என்றார். மீண்டும் ஒரு முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொன்ன நான்இ ‘தப்லீக்’ செய்யுமாறு அல்லாஹ்வின் கட்டளை ஏதாவது உண்டா? என்று கேட்டேன்;.

ஆம் என்று சொன்ன அவர்
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
‘நன்மையின் பால் அழைத்து நல்லதை ஏவி தீயதை தடுக்கின்ற ஒரு சமூகம் உங்களில் இருந்து கொள்ளட்டும்’ என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்.

மீண்டும் ஒரு முறை அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்ன நான்இ நீங்கள் ஓதிக் காட்டிய திரு வசனத்தில் மூன்று விடயம் கூறப்பட்டுள்ளன. அவை பற்றி விளக்கமாக சொல்வீர்களா? என்று கேட்டேன்.

ஒன்று – يَدْعُونَ إِلَى الْخَيْرِ நன்மையின் பால் அழைத்தல்.

இரண்டு – يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ நன்மை கொண்டு ஏவுதல்.

மூன்று – يَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ தீமையில் இருந்து தடுத்தல்.

இவற்றில் முந்தினதும்இ இரண்டாவதும் ஒன்று தானா? வேறு வேறா? இதையே நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினேன்.

அதற்கவர் இரண்டும் ஒன்றுதான் என்றார். இரண்டும் ஒன்றுதான் என்றால் இரண்டு அம்சங்களாக ஏன் சொல்ல வேண்டும்? என்று கேட்டேன். அதற்கவர் விளக்கத்திற்காக அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்றார்.

மீண்டும் ஒரு முறை அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்ன நான்இ ‘தப்லீக்’ ஜமாஅத்தில் மிகத் திறமையுள்ள ஒரு மௌலவியிடம் இதற்கான விளக்கத்தை கேட்டறிந்து என்னிடம் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்இ ஆம் மூன்று நாட்களில் சொல்வேன் என்றார். கொழும்பு வந்தது. இருவரும் பிரிந்து விட்டோம்.

இது நடந்து சுமார் 13 வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். இதுவரை அவர் என்னை சந்திக்கவுமில்லை. விளக்கம் சொல்லவுமில்லை. இதன் பிறகும் சொல்ல மாட்டார் என்றே நினைக்கிறேன்.

தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த எனது அன்புக்குரிய சகோதரர்களாவது இதற்கு விளக்கம் தர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

நோன்பை முறிக்கும் காரியங்கள் பல அவற்றில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.

நோன்பை முறிக்கும் காரியங்களில் எது கொண்டு நோன்பு முறிவதாயினும் அதைச் செய்கின்றவனில் மூன்று அம்சங்கள் இருக்க வேண்டும். அவை اَلْعَمْدُ , اَلْعِلْمُ , اَلْإِخْتِيَارُ என்பவையாகும். இம் மூன்றையும் குறித்து சட்ட மேதைகள் தமது சட்ட நூல்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.


وَيُفْطِرُ عُامِدٌ عَالِمٌ مُخْتَارٌ
ஒரு நோன்பாளியின் நோன்பு முறிவதற்கு – அதாவது “பாதில்” இல்லாமற் போவதற்கு மேற்கண்ட மூன்று நிபந்தனைகளும் அவசியம்.


ஒன்று: அவன் “ஆமித்” ஆக இருக்க வேண்டும். அதாவது மனமுரண்டாக அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். “ஆமித்” என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் نَاسٍ என்பதாகும். அதாவது தான் நோன்பாளி என்பதை மறந்து செய்தவன். இவனின் நோன்பு முறிந்து விடாது. وَإِنْ كَثُرَ مِنْهُ نَحْوُ جِمَاعٍ وَأَكْلٍ وَشُرْبٍ அவன் மறந்த நிலையில் பலதரம் உடலுறவு கொண்டாலும், பல தரம் சாப்பிட்டாலும், பல தரம் குடித்தாலும் சரியே. நோன்பு முறியாது. இதற்கு ஒரு ஹதீது ஆதாரமாக உள்ளது.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ، فَأَكَلَ أَوْ شَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ
ஒரு நோன்பாளி தான் நோன்பாளி என்பதை மறந்து சாப்பிட்டால் அல்லது குடித்தால் – பருகினால் அவன் தனது நோன்பை பூர்த்தியாக்கட்டும். ஏனெனில் அவனுக்கு அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் கொடுத்தான் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.


இரண்டு: அவன் எதைச் செய்கின்றானோ அது நோன்பை முறிக்கும் என்பதை அறிந்தவனாக – தெரிந்தவனாக இருக்க வேண்டும். இவ்விடயத்தில் عالم ஆலிமுன் என்ற சொல்லுக்கு அவன் செய்த செயல் நோன்பை முறிக்கும் என்பதை அறிந்தவனாயிருத்தல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயன்றி அறபுக் கல்லூரிகளில் படித்து மௌலவீ பட்டம் பெற்றவனாக இருக்க வேண்டுமென்று பொருள் கொள்ளுதல் கூடாது. இவ்விடத்தில் “ஆலிம்” என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் “ஜாஹில்” என்ற சொல்லாகும். அதாவது தான் செய்த செயல் நோன்பை முறிக்கும் என்பதைத் தெரியாதவன் என்பதாகும்.


தான் செய்த செயல் நோன்பை முறிக்கும் என்பதை தெரியாதவனுக்கு ஒரு வரையறை உண்டு. அதாவது அவன் அச்சட்டத்தை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத சூழ் நிலையில் உள்ளவனாக இருத்தல் வேண்டும்.


உதாரணமாக புதிதாக இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தவன் போன்று. ஒருவன் ஜனவரி மாதம் முதலாம் திகதி இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தானாயின் இணைந்த நேரத்திலிருந்து இஸ்லாமின் கடமைகள் அவன் மீது விதியாகிவிடும்.


உதாரணமாக ஜனவரி மாதம் முதலாம் திகதி மதிய நேரம் சுமார் 12 மணிக்கு ஒருவன் இஸ்லாமானால் அவனுக்கு “ழுஹ்ர்” தொழுகை கடமையாகி விடும். இவன் குறுகிய நேரத்தில் தொழுகையின் நடைமுறைகளை தெரிந்து கொள்ள முடியாது. இவனும் முடிந்தவரை தொழத்தான் வேண்டும். எனினும் இவன் சலுகை வழங்கப்பட்டவன். தொழுகையில் இவனால் ஏற்படும் தவறு மன்னிக்கப்படும். இவ்வாறுதான் நோன்பு விடயத்திலும் புதிதாக இஸ்லாமில் இணைந்தவனின் நிலையுமாகும்.


இத்தகைய ஒருவன் குறுகிய நேரத்திற்குள் நோன்பை முறிக்கும் காரியங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு கால அவகாசம் போதாது. இந் நிலையில் உள்ள ஒருவன் நோன்பை முறிக்கும் காரியம் ஒன்றைச் செய்தானால் அவனின் நோன்பு முறியாது. அவன் மன்னிக்கப்படுவான். அவன் “ஷரீஆ”வில் சலுகை வழங்கப்பட்டவன்.
இதற்கு – அறியாமைக்கு இன்னும் ஓர் உதாரணம் கூறலாம். அதாவது ஒருவன் காட்டில் பிறந்து காட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு நோன்பு பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்கும், அதை முறிப்பவை பற்றிச் சால்லிக் கொடுப்பதற்கும் அங்கு யாருமில்லை. மக்கள் வாழும் இடத்திலிருந்து மிகவும் தூரத்தில் தனிக் காட்டில் வாழ்கின்றான். இவனும் மன்னிக்கப்பட்டவன். இவனும் “ஷரீஆ”வில் சலுகை வழங்கப்பட்டவன்.


எனினும் ஒருவன் முஸ்லிம்களும், மார்க்க சட்டங்கள் அறிந்தவர்களும் வாழக் கூடிய ஊரில் வாழ்கின்றான். இவன் நோன்பு பற்றியும், அதை முறிப்பவை பற்றியும் அறிந்து கொள்வதற்கு நூறு வீதம் வாய்ப்பு உண்டு. எனினும் இவனின் கவனயீனம் காரணமாக இவன் நோன்பு பற்றித் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து விட்டானாயின் இவன் மன்னிக்கப்படவுமாட்டான். இவனுக்கு சலுகையும் இல்லை. இவன் நோன்பாளியாக இருக்கும் நிலையில் அதை முறிக்கும் காரியம் ஒன்றைச் செய்து விட்டு தெரியாமல் செய்து விட்டேன் என்று கூற முடியாது. கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.


மூன்று: அவன் “முக்தார்” தனது சுயவிருப்பத்தின் படி அந்தக் காரியத்தை செய்ய வேண்டும். இதற்கு எதிர்ச் சொல் “முக்றஹ்” என்பதாகும். அதாவது வற்புறுத்தப்பட்டவனாக – பலாத்காரப் படுத்தப்பட்டவனாக அந்தக் காரியத்தைச் செய்திருக்க கூடாது. அவ்வாறு செய்திருந்தால் அவன் பாவியாகவும் மாட்டான். அவனின் நோன்புக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.


ஏனெனில் இது தொடர்பாக ஒரு ஹதீது உள்ளது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
நிச்சயமாக அல்லாஹ் எனது சமூகத்தை விட்டும் தவறு, மறதி, வற்புறுத்தப்பட்டது என்பவற்றை மன்னித்துவிட்டான் என்று நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.


وَالسُّنَّةُ اِذَا شَتَمَهُ غَيْرُهُ اَوْ تَسَافَهَ عَلَيْهِ فِي حَالِ صَوْمِهِ اَنْ يَقُوْلَ (اِنَّيْ صَائِمٌ اِنِّيْ صَائِمٌ) مَرَّتّيْنِ اَوْ اَكْثَرَ ، اَيْ بِقَدْرِ مَا يَحْصُلُ بِهِ زَجْرُ صَاحِبِهِ. (الفتو حات): (335/4)
‘ஸுன்னத்’ ஆன நடைமுறையாகிறது நோன்பு நோற்றுள்ள ஒருவனை இன்னொருவன் ஏசினால், அல்லது மடையன் போல் நடந்து கொண்டால் நான் நோன்பாளி என்று இருதரம் அல்லது பல தரம் அவன் (நோன்பாளி ஏசியவனுக்கு) சொல்ல வேண்டும். அதாவது ஏசியவன் நிறுத்தும் வரை – அந்த அளவு சொல்ல வேண்டும்.
(அல்புதூஹாத்: (4/335) அல் அத்கார் (320)


تَسَافَـهَ – تَجَاهَلَ عَلَيْنَا
سَـفَهَ – الرَّجُلُ غَلَبَهُ فِى الْمُسَا فَهَةِ – حَمَلَهُ عَلَى السَّفَهِ، أَوْنَسَبَهُ اِلَيْهِ، وَنَفْسَهُ اَذَلَّهَا وَاسْتَخَفَّ بِهَا.
ஒருவன் நோன்பாளியை மடையன் என்றோ, அல்லது கீழ் தரமான சொற்கள் கொண்டோ ஏசுதல், அல்லது அவனை பேயன், பைத்தியகாரன் போன்ற சொற்களை பிரயோகித்து மட்டம் தட்டுதல்.
ஒருவன் நோன்பு நோற்றிருக்கின்ற ஒருவனை மேற்கண்டவாறு ஏசினால், அல்லது வேறு சொல்லால் வேதனைப் படுத்தினால் நோன்பாளி அவனை ஏசாமல் நான் நோன்பாளி என்று சொல்ல வேண்டும். இதுவே இஸ்லாம் வழிகாட்டும் முறையாகும்.


ஏசியவனை ஏசலாம், அடித்தவனை அடிக்கலாம், காதை அறுத்தவனின் காதை அறுக்கலாம் என்பது ‘கிஸாஸ்’ பழிவாங்கலாக இருந்தாலும் கூட நோன்பை கண்ணியப் படுத்தும் வகையில் அவன் பாணியில் இவனும் போகாமல் நான் நோன்பாளி என்று திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். அவன் பேச்சை – ஏச்சை நிறுத்தும் வரை சொல்ல வேண்டும்.


عن أبي هريرة رضي الله عنه أنّ رسولَ الله صلّى الله عليه وسلّم قال الصِّيَامُ جُنَّةٌ ، فَلَا يَرْفُثْ وَلَا يَجْهُلْ ، وَاِنِ امْرُأٌ قَاتَلَهُ أَوْشَاتَمَهُ فَلْيَقُلْ اِنِّيْ صَائِمٌ اِنِّيْ صَائِمٌ مَرَّتَيْنِ
(صحح البخارى ، صحح مسلم)
(163-1151-1894 )

நோன்பானது ஒரு கேடயமாகும் நோன்பாளி கூடாத – கீழ்த்தரமான வார்த்தை பேசக் கூடாது. அறிவில்லாமல் நடந்து கொள்ளவும் கூடாது. யாராவது ஒருவன் அவனுடன் சண்டைக்குப்போனால் – அடிதடிக்குப் போனால், அல்லது அவனை ஏசினால் நான் நோன்பாளி என்று இரு தரம் அவன் சொல்லட்டும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்.
ஆதாரம் – புஹாரீ – 1894
முஸ்லிம் – 1151 -163


جُنَّةٌ – أَيْ ستر ومانع من الرّفث والآ ثام والنّار ، والرّفث – السَّخَف وفاحش الكلام.
قلتُ – قِيلَ! اِنَّهُ يَقُوْلُ بِلِسَا نِهِ وَيُسْمِعُ الَّذِيْ شَاتَمَهُ لَعَلّهُ يَنْزَجِرُ ، وَقِيْلَ يَقُوْلُهُ بِقَلْبِهِ لِيَنْكَفَّ عَنِ الْمُسَافَهَةِ ، وَيُحَافِظَ عَلَى صِيَانَةِ صَوْمِهِ، وَالْاَوَّلُ أَظْهَرُ، وَمَعْنَى (شَاتَمَهُ) شَتَمَهُ مُتَعَرِّضًا لِمُشَاتَمَتِهِ.
ஒருவன் நோன்பாளியை ஏசினால் நோன்பாளி ஏசியவனுக்கு கேட்கும் வகையில் நான் நோன்பாளி என்று வாயால் சொல்ல வேண்டுமா? அல்லது நோன்பாளி தனக்குத் தானே மனதால் சொல்லிக் கொள்ள வேண்டுமா? என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹதீதின் வெளிரங்கம், நோன்பாளி ஏசினவனுக்கு – அவன் கேட்கும் வகையில் – கேட்டுத் திருந்தும் வகையில் வாயால் சொல்ல வேண்டும்.


ஸுபிஸ ஞானிகள் இதற்கு மாறான விளக்கம் சொல்லி இருப்பதாக சில ஸுபிகள் சொல்ல நான் என் காதால் கேட்டிருக்கிறேன். அதாவது நோன்பாளி தன்னை ஏசினவனுக்கு கேட்கும் வகையில் ‘நான் நோன்பாளி’ என்று சொல்வதால் அவன் ரகசியமாக செய்த ஓர் அமலை – வணக்கத்தை பிறருக்குச் சொல்லிக் காட்ட வேண்டியேற்படுவதால் நோன்பாளி தனக்குத் தானே சொல்லிப் பொறுமை செய்ய வேண்டும். இவ்வாறு ஸுபிகள் கூறுகின்றனர்.


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالإِمَامُ العَادِلُ، وَدَعْوَةُ المَظْلُومِ، (قال الترمذي
(حديث حسن) 3598
மூன்று பேர்களின் பிரார்த்தனை மறுக்கப்பட மாட்டாது. நோன்பாளி நோன்பு திறக்கும் வரை, நீதியான தலைவன், அநீதி செய்யப்பட்டவனின் பிரார்த்தனை என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
இமாம் துர்முதீ இதை சரி கண்டுள்ளார்கள்
(3598)

நோன்பாளி நோன்பு திறக்கும் வரை அல்லாஹ்வை மிக நெருங்கி அவனுக்கு விருப்பமுள்ளவனாக இருக்கிறான். அந் நேரம் அவனின் வாயால் எவரும் சாபத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவன் அல்லாஹ்வின் பக்கம் தனது கையை உயரத்தினால் போதும். அல்லாஹ் அவனின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான். எனவே நோன்பாளியை வேதனைப் படுத்தும் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுதல் அவசியம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments