Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்

அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்

– மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ)-
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், ஏகன், எவ்விதத்தேவையும் அற்றவன், அவன் எவரையும் பெறாதவன், எவராலும்பெறப்படாதவன், அவனுக்கு நிகர் எவரும் இல்லாதவன், அவனே அல்லாஹ்.

அவன் எதையும் செய்யும் சக்தியுள்ளவன், என்றும் நிலைத்திருக்கும் ஹய்யானவன் (உயிருள்ளவன்). அவனுக்கு சிறு தூக்கமோ அல்லது உறக்கமோ எப்பொழுதும் ஏற்படாதவன். அவனுக்கே நான்கு வகைப்புகழும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாக்கத்தை படிக்கும் “ஷம்ஸ்” இணையத்தள வாசகர்களே! 
என்னையும், உங்களையும் மேலானவர்களான “தாகிரீன்கள்” எனப்படும் இறை நினைப்பில் வாழும் மகான்களின் கூட்டத்தில் ஆக்குவதுடன் நாளை மறுமையில்அவர்களுடன் “ஜன்னத்”(சுவனம்)தில் வாழும் பாக்கியத்தையும் தந்தருள அல்லாஹ்வை பிரார்த்தித்தவானாக! ஆரம்பம்செய்கின்றேன்.
அல்லாஹ் தன்னைத்தான் அறிவிக்க விரும்பி தனக்கு பல திரு நாமங்களை வைத்துள்ளான். அவற்றிலே தனது வுஜூத் என்னும் “உள்ளமைக்கு அல்லாஹ் என்ற “இஸ்மை” (பெயரை) வைத்துள்ளான்.
இந்தத்திரு நாமத்திற்கு “தாதிய்யத்தான உள்ளமைசார்ந்த பெயர் என்று சொல்லப்படும். மேலும் தன்னுடைய ஹபீபான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு “வஹீ” மூலம் 99திருநாமங்களையும் கற்றுக்கொடுத்துள்ளான். 
இவற்றுக்கு “ஸிபாதிய்யத்தான பண்புத் திரு நாமங்கள் என்றும்சொல்லப்படும். இத்திருநாமங்களைக்கொண்டே மனிதன் முதல் எல்லா ஜீவராசிகளினதும் தேவைகளையும் பூர்த்தி செய்துகொடுப்பதுடன், அநீதி செய்பவர்களுக்குத் தண்டணையும் வழங்குகின்றான்.
இத் திருநாமங்கள் பற்றி அல்குர்ஆனிலே “அல்லாஹ்வுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன அவற்றைக்கொண்டு அவனை அழையுங்கள்”என்று அல்லாஹ்வும்,
“நிச்சயமாக அல்லாஹுத்தஆலாவுக்கு தொன்னூற்றி ஒன்பது திரு நாமங்கள் இருக்கின்றன. எவர் அவற்றை மனனம் செய்தாரோ அவர் சுவனம் நுழைந்து விட்டார். என நபி (ஸல்) அவர்களும் இதன் சிறப்பு பற்றிக் கூறியுள்ளார்கள். 
(ஸஹீஹுல் புகாரீ) 
அல்குர்ஆன் வசனம் அல்லாஹ்வின் திரு நாமங்களை கூறி மக்களாகிய நாம் அவனை அழைக்கவேண்டுமெனவும், நபீ மொழியானது அவற்றை மனனம் செய்யுமாறும் எடுத்தோதிக்கொண்டிருக்கின்றது.
தான் பெற்ற பிள்ளை தாயை நோக்கி உம்மா! என்றும் தந்தையைப்பார்த்து வாப்பா! என்றும் அழைப்பது அவர்களை சந்தோசத்தின் விளிம்புக்குக்கொண்டு செல்வதுபோல் 
மனிதனாக படைக்கப்பட்ட நாம் அவனை வணங்குவதும், அவனிடம் பிரார்த்திப்பதும், அவனை தஸபீஹ்செய்வதும், அவன் தன்உள்ளமைக்குவைத்த பெயர் கூறியோ அல்லது பண்புத்தொழிற் பெயர் கொண்டோ அழைப்பதும் அவனின் அளப்பெறும் சந்தோசத்திற்கு வழி கோளுகின்றன.
இதனைத்தான் அவன் அல்குர்ஆனில் “ அல்லாஹ் எனும் பெயரை கூறியோ அல்லது றஹ்மான் எனும் பெயர் கூறியோ அல்லாஹ்வாகிய (என்னை)அழையுங்கள்! என்று கூறியுள்ளான். 
அல்லாஹ்வை அழைப்பது அல்லாஹ்விற்கு சந்தோசம் அளிப்பதுபோல் அவனை “திக்ர்” நினைப்பதும் அவனுக்கு மகிழ்வளிக்கின்றது.
“அல்லாஹ்வை வானங்களிலுள்ளவையும், (பரந்த) பூமியில் உள்ளவையும் “துதி” செய்துகொண்டிருப்பதாகவும்,
அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்யும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பாவ மன்னிப்பையும், வலுப்பமிக்க கூலியையும் அல்லாஹ் இரட்டிப்பாக்கிவைத்துள்ளான். என்றும் அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகின்றான்.
அல்லாஹ்வைத் “துதி” செய்வதற்கு “தஸ்பீஹ்” என்றும், அவனை ஜெபிப்பதற்கு “திக்ர்” என்றும்சொல்லப்படும். தஸ்பீஹ் செய்வதென்பது உதாரணமாக சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், என்றுசொல்தையும், “திக்ர்” செய்வதென்பது அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹ், இல்லல்லாஹ் போன்ற இறைவனுடைய நாமங்களை உச்சரிப்பதற்கும் கூறப்படும்.
தஸ்பீஹும், திக்ரும் மொத்தத்தில் அல்லாஹ்வை நினைப்பதையே சுட்டிக்காட்டுவதால் இங்கே “திக்ர்” என்னும் தலைப்பில் அதனுடன் தொடர்புடைய சில கருத்துக்களை உங்களின் சிந்தைக்குத் தருகின்றேன்.
“காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்திலே இருக்கின்றான்” (அல்குர்ஆன்)
மனிதன் இவ்வுலகில் “நான்” என்னும் உணர்வற்றவனாகவே தாயின் கருவறையிலிருந்து, அவளின் மடியில் பிறக்கின்றான்.
கருவில் பத்து மாதம் இருக்கச்செய்து, பாதுகாத்து, அதனுள்ளேவைத்து ஆகாரங்களையுமூட்டி மனிதனாக வரச்செய்த பின் நான் எனும் உணர்வில்லாமல் இருவருடம் வாழ்ந்து அதற்குப்பிறகு “நான்” ஒருவன் இருக்கின்றேன் எனது பெயர் பஸ்மின், எனது பெயர் ஆஷிகீன் என்று அகப்பெருமை கொண்டு கருவில் படைத்துக்காப்பாற்றிய அல்லாஹ்வை மறந்து படைக்கப்பட்ட காரணமும் அறியாமல் நஷ்டத்தில் வாழ்வதையே மனிதன் நஷ்டத்தில் வாழ்கின்றான் என அல்லாஹ் கூறுகின்றான்.
மனிதன் படைக்கப்பட்ட காரணம் பற்றி அல்லாஹ் மேலும் கூறுகையில் “மனித இனத்தையும்,ஜின் இனத்தையும் என்னை வணங்குவற்காகவே அன்றி நான் படைக்கவில்லை.”
ஆகயால் படைக்கப்பட்ட இரு வர்க்கத்தினராகிய நீங்கள் யாவரும் என்னை வணங்கியாக வேண்டும். என்றும் இதன் மூலம் கட்டளைத் தொணியில் சொல்லுகின்றான்.
ஐங்காலம் தொழுவதும்,நோன்புநோற்பதும், சகாத்கொடுப்பதும், ஹஜ்ஜு என்னும் வணக்கம் செய்வதும் இஸ்லாத்தின் பிரதான கடமைகளாக காணப்படுகின்றன. 
தொழுகையைத் தவிர்த்துள்ள மற்ற கடமைகள் யாவிலும் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தொழுகை மட்டும் சலுகை வழங்கப்படாத எவ்வித சூழலிம் நிறைவேற்றியாக வேண்டும் என்று கூறப்படும் அளவிற்கு தவிர்க்க முடியாத வணக்கமாகவும் இருக்கின்றது. காரணம் தொழுகையென்ற வணக்கத்தில்தான் அல்லாஹ்வை அதிகம் நினைக்கின்றோம், அதிகம் “திக்ர்” செய்கின்றோம். சூரா தாஹாவில் “ என்னை திக்ர் செய்வதற்காகவே தொழுகையை நிறைவேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். 
தொழுகைவணக்கத்திலே “நின்றும், குனிந்தும், சிரம் பணிந்தும், ஏழு உறுப்புக்களை பூமியில் பதியச்செய்தும் தன்னை இறைவனுக்காக அர்ப்பணித்தும் அதிக நெருக்கத்துடன் அல்லாஹ்தஆலாவிடம் ஐக்கியப்பட்டும் அல்லாஹ்வை துதி செய்து திக்ர் செய்கின்றோம்”. 
இதனையே “ சிலர் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், தங்களின் விலாவுடன் சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ர் செய்வார்கள்,
நீங்கள்தொழுகையை நிறைவேற்றினால் நின்றும். அமர்ந்தும், சாய்ந்தும், (என்னை) திக்ர் செய்யுங்கள், எனவும் அல்லாஹ் கூறுகின்றான். 
எனவே நாம் தொழுகையிலும்,தொழுத பின்னால் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் எனவும், லாயிலாஹ இல்லல்லாஹ என பத்து முறையும் திக்ரும்செய்கின்றோம்.
(சிலர் தொழுகையின் பின் பத்து முறை திக்ர் செய்வதற்கு ஆதாரம் தேடுவதிலேயே காலத்தை கழித்து கழித்தல் அடையாளமாகவே அவர்கள் ஆகிவிட்டார்கள்.)
இன்னும் சிலர் தஸ்பீஹாத்துக்களுடன் மட்டுமே நின்றுகொண்டார்கள். அந்தோ பரிதாபம்!! இவர்கள் இரு சாராரும்தான் நாளை மறுமையில்
“வா ஹஸ்றதா அலா மாபர்றத்து பீஜம்பில்லாஹ்” அல்லாஹ்வின் விடயத்தில் திறக்குறைவாக இருந்து விட்டேனே எனப்புலம்பி (திக்ர்செய்யாத) தன் வாயில் விரலை வைத்துக்கடித்து இரத்தத்தை ஓட்டிக்கொள்வார்கள். )
நாம் திக்ரின் மகத்துவத்தை அறிந்து, விளங்கிச்செய்கின்றோம். இவர்கள் கண்தெரியாத குருடனாக வணக்கம் செய்து ஒரு சடங்காக தொழுகையை நிறைவேற்றி விட்டு சாப்பிட்ட பின்னர் தண்ணீர் அருந்தாதவர்கள்போன்றும் கை கழுகாதவர்கள் போன்றும் செல்கின்றார்கள்.
அல்லாஹ்வை தனிமையில்அமர்ந்து திக்ர் செய்யலாம். பலர் சேர்ந்து அதற்காக மஜ்லிஸ் ஒன்றை அமைத்தும் திக்ர் செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘திக்ர்” செய்வதன் சிறப்பு பற்றி அதிக இடங்களில் கூறி இருக்கின்றார்கள். அவற்றில் சிலதை மட்டும் இங்கே விளங்கிக்கொள்ளலாம்.
திக்ரின் சிறப்புக்கள்
முஹம்மத் நபீ (ஸல்) அவர்களிடத்தில் அமல்களில் சிறந்த அமல் எது? என்று சஹாபாக்கள்கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வை “திக்ர்” செய்வதுகொண்டுஉனது நாவு ஈரமாக நனைந்திருக்கும் நிலமையில் நீ மரணிப்பதாகும். என்று கூறினார்கள்.
உன் நாவு அல்லாஹ்வின் திக்ர் கொண்டு நனைந்ததாக இருக்கும் நிலைமையில் காலையாகு! மாலையாகு!
(அப்படி நீ தினமும் இருந்தால்) காலையிலும், மாலையிலும் உன் மீது எவ்வித குற்றமும் இல்லாதவனாக நீ ஆகிவிடுவாய். என்றும்,
எனது அடியான் தன்னிலே(அவன் மட்டுமிருந்து)என்னை திக்ர் செய்தால் அவனை நானும் திக்ர் செய்கின்றேன் (நினைக்கின்றேன்.)
ஒரு கூட்டத்துடன் இருந்து என்னை அவன் திக்ர் செய்தால் அவனுடைய கூட்டத்தைக்கான சிறந்த கூட்டத்திலே நான் அவனை திக்ர் நினைவு கூறுகின்றேன். என அல்லாஹ் கூறுவதாகவும்,
இன்னும்,
அல்லாஹ்வை திக்ர்செய்யும் எந்தக்கூட்டமும் எழுந்து செல்வதில்லை. மலகுகள் அவர்களை சூழ்ந்துகொண்டே தவிர, றஹ்மத் அவர்களை அடைய வளைத்தே தவிர. மேலும் அல்லாஹ் தன்னிடமுள்ள (விஷேட மான மலகுகளிடம்) அவர்களை நினைவு கூர்ந்தே தவிர. என்றும்,
சுவனத்துப் பூங்காவில் மேய்ந்துகொள்வதற்கு விருப்பமுடையவர் அல்லாஹ்வுடைய திக்ரை அதிகமாக்கிக்கொள்ளட்டும். என்றும், கூறினார்கள். ஆதாரம் இஹ்யா உலூமித்தீன்.
ஒரு முறை தாபிதுல் புனானி என்ற பெரியார் தன் சமூகம் நோக்கி “என்னுடைய றப்பு என்னை எப்போது நினைக்கின்றான் என்பதை நிச்சயம் நான் அறிவேன். என்று கூற அங்கிருந்தவர்கள் திடுக்குற்றவர்களாய் அதை எப்படி தாங்கள் அறிவீர்கள் என கேட்டார்கள்? அதற்கவர்கள் நான் எனது இறைவனை நினைவு கூர்ந்தால் அவன் என்னை நினைவு கூறுவான் என்று பதில் சொன்னார்கள்.
இதனையே அல்லாஹ் தன் வேதத்தில் “என்னை திக்ர் செய்யுங்கள் உங்களை நானும் திக்ர் செய்வேன்” என்று கூறியுமுள்ளான்.
மேலும்,
நானும் எனக்கு முன் வாழ்ந்த நபிமார்களும் சொல்லியவற்றில் மிகச் சிறந்த வார்த்தை “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்பதாகும்.,
எவர் “லாஇலாஹ இல்லல்லாஹ்” என மனத்தூய்மயுடன் (முக்லிசான நிலையில்)சொன்னாரோ அவர் சுவனம் நுழைந்து விட்டார். எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
நாம் இங்கு அறிந்த ஹதீத்கள் யாவும் திக்ருடைய சிறப்புக்களை உணர்த்துகின்றன. இந்தச்சிறப்புக்களை நாம் அடைந்துகொள்வதாயின் சில விதி முறைகளைக்கையாளவேண்டும்.
அவற்றில் மிகப்பிரதானமாகிறது ,
திக்ர் செய்யும்போது மன ஓர்மையுடன் அல்லாஹ்வின் சிந்தனையில் செய்யவேண்டும். இதுவே மிகவும் பயனளிக்கும் திக்ர் முறையாகும்.
நாவினால் திக்ர் செய்யும்போது ‘உள்ளம்” அல்லாஹ்வின் எண்ணத்தைவிட்டும் தூரப்பட்டு மறந்த நிலையிலிருந்தால் இந்த திக்ர் பயன் குறைந்த தாகவே கருதப்படும். 
எல்லா வணக்கங்களிலும் மன ஓர்மை அவசியம் என்ற கருத்தை இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் தனது கிரந்த மான ‘இஹ்யாவில்” கூறிக்காட்டுகின்றார்கள்.
‘மன ஓர்மை” வரவேண்டுமென்றால் கடும் கஷ்டதின் பின்னரே அது சாத்தியமாகும். அதற்கு “தனிமை” மிகப் பிரதானமான ஒன்றாக இருக்கின்றது. அதனால்தான் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனிமையைத்தேடி ‘ஹிறா” எனும் குகையை நாடினார்கள்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களும் காட்டில் தனிமையில் அமர்ந்து கடும் தவம் புரிந்தார்கள். 
நபிமார்கள் ,வலீமார்கள், ஞானிகள், ஞானமுதைத்தேடி தனிமையை கொண்டே மன ஓர்மையை ஏற்டுத்தி வெற்றியும் கண்டார்கள்.
அல்லாஹ்வை திக்ர் செய்யும்போது கூட்டமாக இருப்பதைவிட தனிமையில் அமர்ந்து செய்யும்போதே அதிக ‘பாஇதா” பிரயோசனம் கிடைக்கும். என்பது எனது கருத்தாகும்.
கிடைப்பதற்கரிதான பொக்கிசங்களின் “திறவுகோல்” இந்த மன ஓர்மையிலேயே மறைக்கப்பட்டும் வைக்கப்பட்டுள்ளன. 
“எவர் தன்னை அறிந்தாரோ அவர் இறைவனை அறிந்து விட்டார்” என்ற நாயக வாக்கை குறிக்கோளாகக் கையாண்டு மன ஓர்மையின் மூலம் இறைவனை அறிந்தபெரியார்களே அதிகம் எனலாம். திக்ர் என்பது அல்லாஹ்வுக்கு நாம்செய்யும் அமல்களில் மிக விருப்பமான ஒன்றாக இருக்கின்றது.
அதற்கு இந்தச் சம்வம் படிப்பினை தரக்கூடியதாகும்.
கியாமத் நாளில் அல்லாஹ்வுடைய சமூகத்தில் ஓர் அடியானைக்கொண்டு வந்து கேள்வி கணக்குக்கேட்கப்படும். அப்போது அவ்வடியானின் பாவங்கள் அதிகம் என்றும், நன்மைகள் குறைவு என்றும் அவருக்கு நரகமே என தீர்ப்புச்செய்யப்படும். அப்போது இவ்வடியான் சப்தமிட்டு அழுவான். 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து உடனே “ எனது மலக்குகளே! அவருடைய ஏட்டைப் புரட்டிப் பாருங்கள்! ஏதாவது நலவு அவருடைய ஏட்டில் இருக்கின்றதாவென? மலக்குகள் உடனே இறைவனின் உத்தரவுப்படி ஏடுகளைப்பார்ப்பார்கள். அதன்பின்பு “எங்களுடைய இறைவனே நாங்கள் எதையும் இவருக்காக பெற்றுக்கொள்ளவில்லை” என்று கூறுவார்கள்.
அச்சமயம் இறைவன் “என்னிடத்தில் அவருக்கான நன்மையொன்றிருக்கின்றது, அது அவன் ஒரு இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் எனது சிந்தனை ஏற்பட்டு என்னை திக்ர் ஞாபகப்படுத்த வேண்டுமென நினைத்து “தூக்கத்திலிருந்து விழிக்க நாடினான்” ஆனால் அவனால் அது முடியவில்லை. காரணம் அவனது தூக்கம் அவனை மிகைத்துவிட்டதால் தூங்கி விட்டான்.
(இதனை நான் அவனுக்குரிய நன்மையாக கணக்கிட்டேன்) நிச்சயமாக இதற்காக வேண்டி அவனுடைய பாவத்தை மன்னித்தேன். என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். 
ஆதாரம் தன்பீஹுல் ஙாபிலீன்.
நான் மிஃராஜுடைய இரவில் கடல் ஒன்றை கண்டேன். அதன் ஆழத்தை அல்லாஹ்வைத் தவிர வேரெவரும் அறியமாட்டார்.
அந்தக்கடலின் கரையில் பறவையின் உருவத்தில் அமரர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு எழுபதாயிரம் இறக்கைகள் இருந்தன.
‘சுப்ஹானல்லாஹ்”என்று ஒரு அடியான் சொல்லிவிட்டால் அவர் அவ்விடத்தில் நின்று அசைகின்றார். 
“அல்ஹம்துலில்லாஹ்” என்று அவ்வடியான்சொன்னால் தனது இறக்கைகளை விரிக்கின்றார்.
“லாஇலாஹ இல்லல்லாஹ்” என்றுசொன்னால் பறந்து விடுகின்றார்.
“அல்லாஹு அக்பர்” என்றுசொன்னால் தன்னை அந்தக்கடலில் மூழ்கச்செய்கின்றார். “லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்” என்றுசொன்னால் கடலிலிருந்து தன் எழுபதாயிரம் இறக்கைகளையும் உதறிவிடுகின்றார்.
ஒவ்வொரு இறக்கையிலிருந்தும் எழுபதாயிரம் சொட்டுக்கள் சொட்டுகின்றன. ஒவ்வொரு சொட்டுக்களில் நின்றும் தஸ்பீஹ், தஹ்லீல் (சுப்ஹானல்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ்)சொல்லக்கூடிய ஒவ்வொரு மலக்கை அல்லாஹ் படைக்கின்றான். அவர்கள் யாவரும் கியாமம் ஏற்படும் வரை (‘சுப்ஹானல்லாஹ்”, “அல்ஹம்துலில்லாஹ்”,“லாஇலாஹ இல்லல்லாஹ்” “அல்லாஹு அக்பர்”“லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்” )என்றுசொன்னவருக்காக அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். என்றும் நபியுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம். சுப்ததுல் வாஇழீன்.
எனவே உலகில் வாழும் நாம் அல்லாஹ்வை வணங்கவே படைக்கப்பட்டுள்ளோம். (அவனுக்காகவே நாம், நமக்காகவே அவன்.)
‘திக்ர்” என்பது ஞாபகப்படுத்தல், நினைத்தல் என்றபொருள் தருவதனால் எமது வணக்கங்களிலும், எமது எல்லா நிலைகளிலும் மறக்காமல் அல்லாஹ்வை ‘திக்ர்” “தியானம்” செய்து அதிகம் திக்ர்செய்த கூட்டத்தில்சேர்ந்துகொள்வோமாக! 
யா அல்லாஹ்! பாவிகளான எங்களின் உள்ளத்தில் மன ஓர்மையை வழங்கிஉன்னை தியானித்த கூட்டத்தில் ஆக்குவாயாக! தாதிய்யத்தான, ஸிபாதிய்யத்தான உன் திரு நாமங்களை உச்சரித்ததாக எங்களின் நாவு இருக்கும் போது மரணத்தை தந்தருள் புரிவாயாக! 
ஆமீன் யாறப்பல் ஆலமீன்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments