பெயர் எதுவாயிருந்தால் என்ன?

September 19, 2015

ஆக்கம் – மௌலவீ பிலால் றப்பானீ

தூய மனதோடும் பரவலான, பாரபட்சமற்ற கண்ணோட்டத்தோடும் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனம் உணர்த்துகின்ற தத்துவமும், “தவ்ஹீத்” என்ற சொல் உணர்த்துகின்ற தத்துவமும் ஒன்றேதான்றி இரண்டும் வேறானதல்ல. என்ற உண்மை தெளிவாகும்.

வஹ்ததுல் என்ற வசனம் யாரால்? என்ன கருத்தைக் கருவாகக் கொண்டு? எப்போது சொல்லப்பட்டது? அறிமுகம் செய்யப்பட்டது என்ற விடயங்களில் வாதப் பிரதிவாதம் செய்பவர்கள்
அதிலேயே காலம் கழிக்காமல் அந்த வசனம் உணர்த்துகின்ற தத்துவம் சரியானதா? பிழையானதா? அத்தத்துவத்திற்கும், “தவ்ஹீத்” என்ற சொல் தருகின்ற தத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்? என்ற விபரங்களை தாமும் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை எட்டி வைக்க முன்வர வேண்டும்.

தீப்பெட்டி என்றால் என்ன? நெருப்புப் பெட்டி என்றால் என்ன? என்ற வாதத்தில் காலத்தைக் கழிக்காமல் இரண்டும் ஒன்றுதான் என்று முடிவு செய்வதே அறிவுடமையாகும்.
ஆகையால் “வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனமும், “தவ்ஹீத்” என்ற வசனமும் உணர்த்துகின்ற தத்துவம் எது என்று அறிவோம்.
எனினும் இப்பெயர் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதென்று பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். “அல்லாஹ் மிக அறிந்தவன்”.
“வுஜூத்” மெய்ப் பொருள் – உள்ளமை – உள்ளதாக இருத்தல் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற அல்லாஹ்வின் “தாத்” ஒன்றேயொன்றுதானேயன்றி அது பலதல்ல. இதையே “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் உணர்த்துகின்றது. “வஹ்தத்” என்றால் ஒன்று என்றும், “வுஜூத்” என்றால் உள்ளமை என்றும் பொருள் வரும். இத்தத்துவம் “ஷரீஆ”விற்கோ, திருக்குர்ஆனுக்கோ, திரு நபீயின் திருமொழிகளுக்கோ, மற்றும் அஷ்அரீ, அவ்லியாக்களின் கூற்றுக்களுக்கோ எந்த வகையிலும் முரணானதல்ல. கசடறக் கற்றோர் இதை மறுக்க மாட்டார்கள்.
ஏனெனில் அல்லாஹ்வின் “தாத்” ஒன்றே ஒன்றுதான் என்று நம்பாமல் அது இரண்டென்றோ, பலதென்றே நம்புதல் கலப்பற்ற “ஷிர்க்” என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இல்லவே இல்லை. யாராவது இருப்பதாகச் சொன்னால் அவர் இஸ்லாமிய “அகீதா”வை சரியாக விளங்காதவரன்ரே கருத வேண்டும். அல்லது தவறாகப் புரிந்தவர் என்றே கொள்ள வேண்டும்.
ஆகையால் “வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனம் உணர்த்துகின்ற இறையியல் தத்துவம் சரியானதென்று நம்புதல் அவசியமாகும்.
இதே தத்துவத்தையே “தவ்ஹீத்” என்ற சொல்லும் உணர்த்துகின்றது. ஏனெனில் “தவ்ஹீத்” என்ற சொல் “வஹ்தத்” என்ற அறபுச் சொல்லின் பிறப்பாகும். இதற்கு ஒன்றாக்கினான் – ஒன்றாக்கி வைத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும்.
توحيد الواحد
محال
ஒன்றாக இருப்பதை ஒன்றாக்கி வைத்தல் என்பது அசாத்தியம் என்று இறையியற் துறையின் ஆய்வாளர்கள் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் அவர்கள் توحيد الكثرة ممكن  பலதை
ஒன்றாக்குதல்தான்
சாத்தியம் என்றும் கூறி توحيد الذّوات  சிருட்டிகளாக
கண்ணுக்குத் தோன்றுகின்ற பல “தாத்”துக்களை ஒரு தாத் என்று ஒன்றாக்க வேண்டுமென்று சொல்லியுள்ளார்கள்.

இதுவரை சொன்னதிற் சுருக்கம் என்னவெனில் ஊனக் கண்ணுக்கு – முகக் கண்ணுக்கு பலதாய் தோற்றுபவை அனைத்தும் அல்லாஹ்வின் வேறுபடாத வெளிப்பாடுகள் என்று நம்புதலே சரியான “ஈமான்” நம்பிக்கை ஆகும். இவ்வாறு நம்பினவன்தான் “முவஹ்ஹித்” தவ்ஹீத்வாதி ஆவான்.

You may also like

Leave a Comment