Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள்

விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள்

ஆக்கம் : MIM. அன்ஸார் ஆசிரியர்
அவ்லியாக்களின் அகமியம்
மக்களை நன்மையின் பக்கம் அழைத்து நன்மையை ஏவி தீயதை தவிர்த்து நடக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம் அவர்கள் தான் வெற்றி அடைந்தவர்கள். (அல்-குர்ஆன்)
அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு பயமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன்)
மேற்படி இரண்டு இறை வசனங்களும், இவ்வுலகத்தில் ஒரு கூட்டத்தினர் இருப்பதாகவும், அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் எனவும், அவர்களுக்கு பயமோ, கவலையோ ஏற்படுவதில்லை. ஆனால் மேற்கூறிய இரண்டாவது திருமறை வசனத்தில் அவ்லியாக்களுக்கும் பயமும், கவலையும் இல்லை என இறைவனே கூறுகின்றான். எனவே அவ்லியாக்கள் எனப்படும் கூட்டத்தினர் அல்லாஹ்வை அறிந்து அவனில் அழிந்தவர்கள் என்பது ​​​தெளிவாகின்றது.

இந்த அவ்லியாக்கள் பற்றி மேலும் கூறினால் “நான்” என்ற நஜீஸை நீக்கி, ஷரீஅத், தரீக்கத், ஹகீக்கத், மஃரிபத் என்ற ஆத்மீகப்படிகளைக் கடந்து ஏகனின் எதார்த்தக் கொள்கையில் வாழ்ந்து அல்லாஹ்வை அடைந்த ஆத்மார்த்த ஞானிகளே அவ்லியாக்கள் எனப்படுகிறார்கள்.
இவ்வாறு உலகில் தோன்றிய அவ்லியாக்கள் அனைவருக்கும் அரசராகத்திகழ்பவர்கள், அல்-குத்புர் றப்பானீ, கௌதுஸ்ஸமதானீ, மஹ்பூபுஸ் சுப்ஹானீ, மஃஷுக்குர் றஹ்மானீ, ஸிராஜுல் அஹ்பாப், தாஜுல் அக்தாப், பாஸுல் அஷ்ஹப், சுல்தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்களாகும்.
பிறப்பும், அற்புதங்களும்.
சங்கைக்குரிய ஸெய்யித் அபூ ஸாலிஹ் இப்னு மூஸா என்ற தந்தைக்கும், மாண்புமிகு உம்முல் கைர் பாத்திமா பாரிஹா என்ற தாய்க்கும் ஆத்மீகப் புதல்வராக ஹிஜ்ரி470 ஆம் ஆண்டு புனித ரமழான் முதல் பிறையன்று ஈரானின் ஜீலான் நகரில் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பிறந்தார்கள். “குத்பு நாயகம்” என உலக மக்களால் மரியாதையாக அழைக்கப்படுகின்ற முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள் இவ்வையகத்தில் பிறந்த இரவு நிகழ்ந்த அற்புதங்களை அவர்களது அருமைத்தாயார் பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
1) ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப்போகின்ற குழந்தை எனது காதலரும், அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுப சோபனம் கூறினார்கள்.
2) “வலிமார்கள்” அனைவரும் உங்கள் மகனுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள். எனவும், அவரது கால் பாதங்களை தங்களது புயங்களின் மேல் சுமந்தோராகவும், இருப்பர் என பெருமானாரைத் தொடர்ந்து ஸஹாபாக்கள் வாழ்த்துக் கூறினர்.
3) அன்று இரவு பிறந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் குத்பு நாயகத்தின் பொருட்டால் விலாயத்தைப் பெற்றன.
4) மாண்புமிகு நோன்பு தலைப்பிறையன்று குத்பு நாயகம் பிறந்த காரணத்தால் அன்றைய தினம் பால் அருந்த மறுத்து விட்டார்கள்.
5) குத்பு நாயகத்தின் தோள் புயத்தின் மீது பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பாதங்களைச் சுமந்த அடையாளம் காணப்பட்டது.
இளமைப் பருவம்
சிறு பராயத்தில் தந்தை காலமாகி விட்டதால் அன்னையின் அன்பு பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள். அன்னை பாத்திமா இறை நெறியில் சிறந்தவராக இருந்தபடியால் தன் குழந்தையின் உள்ளத்தில் ஈமானின் விதையை நன்றாக விதைத்தார்கள். இதனால் சிறுவர் அப்துல் காதிர் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கினார். எளிய வாழ்க்கையில் பிரியமுள்ளவராக இருந்த அப்துல் காதிர் இழிவான வாத்தைகளைப் பேசமாட்டார்கள். மற்றைய சிறுவர்களுடன் சண்டையிட மாட்டார்கள். தாயாருடன் சேர்ந்து உரிய நேரத்திற்கு தொழுவார்கள். பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். பெரியார்களை அன்புடன் ஸலாம் கூறி வரவேற்பார்கள்.
கல்வி, ஞானம் பெறல்.
ஐந்தாம் வயதில் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்கள். ஏழாம் வயதில் குர்ஆனை மனனம் செய்தார். பத்தாம் வயதில் “வலித்தனம்” வழங்கப்பட்டதை வானவர் மூலம் அறிந்து குத்பு நாயகத்தின் கல்வித் தாகம் மேலும் அதிகரித்தது. இதனால் ஞான த்தைத் தேடி பக்தாத் நகர் சென்றார்கள். செல்லும் வழியில் திருடர் கூட்டத்தை திருக்கலிமஹ் மொழியச் செய்து புனித இஸ்லாத்தில் இணைத்தார்கள். பக்தாதில் பல துறைகளிலும் கல்வி பயின்று ஆத்மீக உயர்வு பெற்றார்கள். என்றாலும் ஆத்மீகத் துறையில் இன்னும் முன்னேறிச் சென்று “பாதின்” என்னும் அக நிலையை அறியும் பாதையில் ஒரு ஞான குருவை தேடியலைந்து இறுதியில் அஷ்-ஷெய்கு ஹம்மாது (றழி) அவர்களின் சீரடானார்கள்.
இறை வணக்கம் புரிதல்.
“வலித்தனம்” சிறு பராயத்தில் கிடைத்த போதிலும் வல்ல நாயனை தியானம் செய்வதை விட்டுவிடவில்லை. சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் காட்டில் தனிமையாக தவம் இருந்து இறை தியானத்தில் மூழ்கி வல்ல நாயனைத் தூய்மைப்படுத்தினார்கள் . கல்வி ஞானத்திலும், உயர் பண்புகளிலும், மக்களுடன் பழகுவதிலும், வானத்தில் மின்னும் ஒளி மிகுந்த நட்சத்திரமாக சுடர் விட்டுப் பிரகாசித்தார்கள். தூக்கத்தை கலைப்பதற்காக இரவில் ஒற்றைக் காலில் நிற்பார்கள். விடியும் வரை ஒரே இரவில் குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பார்கள்.
இஸ்லாத்தின் பால் அழைப்பு.
இவர்களின் சொற் பொழிவுகள் சொல் நயமும், பொருள் நயமும் மிக்கவை. ஐம்பது அல்லது அறுபதாயிரம் மக்கள் கொண்ட பெருங்கூட்டத்தில் இவர்களின் சொற்கள் ஒலி பெருக்கியின்றி கணீர், கணீரென்று தெளிவாகக் கேட்கும். இதனைக் கேட்கும் ஒவ்வொரு உள்ளமும், கவரப்படும். எங்கும் ஒரே அமைதி நிலவும். இவ்வாறு நாற்பதாண்டுகள் வரை நடைபெற்ற சொற் பொழிவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றனர்.
தத்துவ நூல்கள்.
பேச்சு மூலம் மக்களை புனித இஸ்லாத்தின் பால் அழைத்த குத்பு நாயகம் அவர்கள் பல தத்துவ நூல்களை எழுதியும் அறிவுலகிற்கு அளித்தார்கள். அவற்றுள் சில மிகவும் பிரத்தி பெற்றவைகளாகும்.
1) புதூஹூல் கைப் – இது “தஸவ்வுப்” ஞானத் துறையை விளக்கும் நூல்.
2) குன்யதுத் தாலிபீன் – இது சரீஅத், தரீக்கத், சம்பந்தமான விளக்க நூல்.
3) பத்ஹூர் றப்பானீ – இதில் குத்பு நாயகத்தின் 68 சொற் பொழிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
இவற்றில் ஒரு உபதேசத்தை மட்டும் இங்கு எழுதிக்காட்டுவது பொருத்தமானதாகும். தோழர்களே, எமக்கிருக்கும் சொற்ப வாழ்க்கை இம்மை, மறுமை பற்றிய நல்ல விடயங்களை பேசவே நேரம் போதாது. அவ்வாறு இருக்க வீண் பேச்சுக்களிலும், வீண் தர்க்கங்களிலும் ஏன் உங்களது பெறுமதியான மூச்சை வீணாக்குகின்றீர்கள். “நான்” என்ற மமதையை உள்ளத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிடுங்கள். அப்போது தான் தீனின் ஒளி மிக்க வாசல் திறக்கப்படும்.
இவ்வாறு குத்பு நாயகத்தின் ஒவ்வொரு உபதேசங்களும் அமைந்திருந்தன.
இன்றுள்ள அழைப்பாளிகள் போல் வெறுமனே பேச்சு மூலமும், எழுத்து மூலமும் தமது மார்க்கப் பிரச்சாரத்தை நிறுத்தி விடாமல் மனிதனை அல்லாஹ்வின் பக்கம் கொண்டு சேர்க்கக் கூடிய வழி வகைகளை உருவாக்கினார்கள். இதற்காக “காதிரிய்யஹ்” என்னும் தரீக்கஹ்வை நிறுவி அதன் மூலம் “நப்ஸ் அம்மாரா” என்னும் கொடிய எதிரியுடன் ஒரு மனிதன் போராடி அதிலிருந்து தம்மை விடுவித்து இறைவனை அடைவதற்கான பயிற்சியை அளித்தார்கள்.
கறாமத் – அற்புதங்கள்.
நபிமார்களுக்கு “முஃஜிஸத்” என்னும் தன்மை வழங்கப்பட்டிருப்பது போல் வலீமார்களுக்கு “கறாமத்” என்னும் தன்மை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சொற்களும் “அற்புதம்” என்ற ஒரே கருத்தையே தருகின்றன. இந்த வகையில் அல்லாஹ்வின் அதிகாரிகளான அவ்லியாக்கள் தம் வாழ் நாள் முழுவதும் கோடிக்கணக்கான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள். அதே போன்று குத்பு நாயகம் அவர்களும் தமது வாழ்க்கையில் பல எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார்கள். தற்போதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றை மாத்திரம் இங்கு எழுதுவது பொருத்தமானதாகும்.
பிரபல செல்வந்தராக விளங்கிய ஸ்பெயின் வாசி ஒருவருக்கு எல்லாவிதமான செல்வங்கள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லாதது பெருங் குறையாக இருந்தது. தமது இக்குறையை நீக்கும் பொருட்டு தனக்குத் தெரிந்த பெரியார்கள் யாவரிடத்திலும் சென்று தனது குறையை முறையிட்டார். ஆனால் அவர் சென்ற அனைவரும் அவருக்கு வழியிலேயே பிள்ளை பாக்கியம் கிடையாது என்ற பதிலையே கூறினர். கடைசியாக “குத்பு நாயகம்” அவர்களிடம் வந்து தனது குறைப்பாட்டைக் கூறினார். உடனே குத்பு நாயகம் அவர்கள் “லவ்ஹை நோக்கிப்பார்த்தார்கள். அவருக்கு குழந்தைப் பாக்கியம் கிடையாது என்பது தெரிய வந்தது.இதனை குத்பு நாயகம் கூறிய போது, எனக்கு எவ்வாறாயினும் குழந்தைப் பாக்கியத்தைத் தந்தே ஆக வேண்டும். என்று மன்றாடி நின்றார்.
உடனே மனமிரங்கிய குத்பு நாயகம் அவர்கள் “அலியே, என்னில் நின்றும் உமக்​கொரு பிள்ளையைத் தருகிறேன். உமது முதுகை எனது முதுகுடன் சேரும். எனது முள்ளந்தண்டிலிருப்பது ஆண் குழந்தை அது உமது இல்லத்தில் பிறக்கும். எமது எல்லாவித இல்முகளுக்கும் அந்தப் பிள்ளையே வாரிசாவார். அவர் எமது நாவாகவே இருப்பார். எவரும் ​வெளிப்படுத்தாத அகமிய இரகசியங்களை எல்லாம் அவர் பகிரங்கப்படுத்துவார்.” என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள். இதைக் கேட்ட அவரும் சந்தோஷத்துடன் வீடு திரும்பினார். அன்றிரவே அவரது மனைவி கர்ப்பவதியாகி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்கள் தான் ஏகனின் எதார்த்தக் கொள்கையான ஏகத்துவ தத்துவத்தை பகிரங்கமாகப் பேசிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (றழி) அவர்களாகும்.
திருமணம்.
குத்பு நாயகம் அவர்கள் தமது 51 வது வயதில் திருமணம் செய்தார்கள். இஸ்லாம் அனுமதித்தபடி 4 பெண்களை திருமணம் செய்து மொத்தமாக 49 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். இவர்களில் 20 ஆண்களும், 29 பெண்களும் ஆவர்.
மறைவு
90 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த குத்பு நாயகம் அவர்கள் தனது 91 ஆம் வயதில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோயுற்றிருந்தார்கள். அவர்கள் மரணமான அன்றிரவு குளித்து மணம் பூசி இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டு மிக நீண்ட நேரம் ஸஜதாவில் இருந்தார்கள். உலக மக்களுக்காக பிராத்தனை புரிந்தார்கள். இருதியாக “லா இலாஹ இல்லல்லாஹூ” என்ற திருக்கலிமாவை மொழிந்தவராக ஹிஜ்ரீ 561 ரபீஉனில் ஆகிர் மாதம் பதினோராம் நாள் இம்மாய உலகை விட்டும் மறைந்து “தாறுல் பகாவை” அடைந்தார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.”
அன்னாரின் புனித ஸியாரம் ஈராக் நாட்டின் பக்தாத் மா நகரில் அமைந்துள்ளது. எனவே நாமும் அவர்களது புனித ஸியாரத்திற்க்குச் சென்று அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவோமாக!
ஆமீன்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments