சற்குருமார்களும், கடலாமைகளும்

January 27, 2015
கடலாமை முட்டை கரை தனிலிட்டபின்
கடலில்  இறங்கி  தியானம்  செய்து
உடனே  தன்  முட்டை பொரிக்கும் உவமை போல்
உள்ளமையாகுமாம்  என் பிறவி

கடலில் வாழும் கடலாமை என்ற பெரிய ஆமை முட்டையிடுவதற்கு கரைக்கு வந்து மண்ணைக் கிளறிக் குழி தோண்டி அதில் முட்டையிட்ட பின் கடலுக்கு சென்று விடும். நீருள் இருந்து கொண்டே கரையிலிட்ட முட்டையை கண் இமைக்காமல் தொடர்ந்து பல மணி நேரம் உற்று நோக்கி குஞ்சுகள் பொரித்து அவற்றை வெளிப்படுத்தும்.

இவ்வாறுதான் ஆன்மீகக் கண் திறந்த இறை ஞானிகளாவா்.
ஷெய்குமார்களாவர்.
மண், நீா் போன்றவை கடல் ஆமையின் பார்வைக்கு தொலைதூரம் திரைகள் ஆகமாட்டா.
கடலாமையின் கண்ணுக்கு இவ்வாறான ஓா் அபார சக்தி இருக்குமாயின்  அதை விடவும், ஏனைய சிருட்டிகளை விடவும்  சிறந்த மனிதனின் கண்ணுக்கு குறிப்பாக “விலாயத்”
ஒலித்தனம் பெற்ற மகான்களின் கண்ணுக்கு அவ்வாறான சக்தி இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
மனக்கண் திறந்த ஆன்மீகக் குருமார் தமது “முரீது”-ஆன்மீக மாணவன்-எங்கிருந்தாலும் அவனின் உள்ளத்தை ஞானப் பார்வை மூலம் – ஞானக்கண் கொண்டு – நோக்கி அதை பராமரிப்பார்கள். பக்குவப்படுத்துவார்கள்.
குருவுக்கும், மாணவனுக்கும் தொலை தூரமோ, வேறு பொருட்களோ தடைகளாகவோ,
திரைகளாகவோ ஆகமாட்டா. எத்திரைகளையும், தடைகளையும் கீறிக்கிழித்து கொண்டு செல்லும் சக்தி அவர்களின் கண்களில் உண்டு.
அல்லாஹ்வில் ”பனா” லயித்துப்போன இரண்டறக் கலந்த மகான்களின் கண் பார்வை ”எக்ஸ்றே” கருவி ஸ்கேன் கருவிகளின் ஒளியை விட அதி சக்தி வாய்ந்ததாகும். இத் தன்மை “ஷெய்கு“மார்களில்
–ஆன்மீக குரு மார்களில்  பூரணத் தன்மை உள்ளவர்களுக்கு மட்டுமே உண்டு.
ஷெய்குமார்
மக்களுக்கு ”பைஅத்”ஞான தீட்சை வழங்கும் குருமார்களில் இரு பிரிவினா் உள்ளனா். அவர்களில் ஒருவர் “ஷெய்ஹுத் தர்பியஹ்” என்றும், இன்னொருவா் “ஷெய்ஹுல் பறகத்” என்றும் அழைக்கப்படுவார்கள். 
“ஷெய்குத் தா்பியா”என்பவா் தன்னிடம்
“பைஅத்” பெற்ற ஆன்மீக மாணவா்கள் எங்கு இருந்தாலும் அவா்களை ஆன்மீகப் பார்வையால் பக்குவப்படுத்தி பராமரிக்கும் ஆற்றல் உள்ளவராக இருப்பார். இவர்தான்
“காமில்” பூரணம் பெற்றவா் என்று அழைக்கப்படுவார்.
“ஷெய்குல் பறகஹ்” என்பவா் இத்தன்மை உள்ளவராக இருக்கமாட்டார். ஆயினும் இத்தன்மை உள்ள ஒருவரிடம் “பைஅத்” பெற்றவராக மட்டும் இருப்பார். இவரிடம் “பைஅத்” செய்து கொள்வதை விட முந்தினவரிடம் செய்து கொள்வது சிறந்தது. அத்தன்மை உள்ளவா் இல்லாமற் போனால் மட்டுமே மற்றவரிடம் “பைஅத்” செய்ய வேண்டும்.
இக்காலத்தில் “பைஅத்” வழங்கும் ஷெய்கு மார்களில் அநேகர் இந்தியா,
அந்தரத்தீவு, மற்றும் அறபு நாடுகளில் இருந்தே வருகின்றார்கள். இவா்கள் அனைவரையும்
“காமில்” ஆனவா்கள் என்று கொள்ள முடியாது. இவர்களில் இரு பிரிவினரும் உள்ளார்கள்.
இன்னும் சில ஷெய்குமார் உள்ளனர். இவா்கள் ஷெய்குமார் பரம்பரையில் வருபவா்களேயன்றி இவா்களிடம் ஒரு குருவுக்குள்ள எந்த ஒரு தராதரமும் கிடையாது.
குறைந்த பட்சம் “பிக்ஹ்” சட்டக்கலை ஞானம் கூட இல்லை. இவா்களின் கை
பிடிப்போர் வெளிப்படையான வணக்கங்களைச் செய்வதற்கு கூட வழி தெரியாமல் தவிப்பார்கள்.

இன்னும் சில குருமார் உள்ளனா். அவா்களுக்கு ளெிப்படையான மார்க்க அறிவு இருந்தாலும் கூட அவா்கள் மனப்பக்குவம் இல்லாதவா்கள், பணத்திற்கும் பதவிக்கும், அடிமையானவா்கள். தமது மாணவா்களுக்கிடையில் குழப்பத்தையும் கருத்து முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பவா்கள். இவா்களை கைப் பிடித்தவன் கரை சேர்வது கடினம்.   

You may also like

Leave a Comment