காலத்தை ஏசாதீா்கள்

April 3, 2015
காலத்தை ஏச வேண்டாம்
என்றதால் காலம் நீயே
கோலங்கள் கொண்டதெல்லாம்
“குதா” அன்றி வேறு உண்டோ
ஆலத்தில் நீயேயல்லால்
அறவேவேறில்லை எந்தன்
சீலத்தை நல்லதாக்கிச்
சிறப்பருள் யாகாலிகே
 (தைக்கா ஸாஹிபு வலீ றஹ்)
لا تسبوا الدهر فإن الله هو الدهر
காலத்தை ஏசாதீா்கள். ஏனெனில் காலம் என்பதும் அல்லாஹ்தான்.
 (நபீ மொழி)

மேற்கண்ட இந்த நபீ மொழிக்கு “ளாஹிர்”உடைய உலமாக்கள் ஒரு கருத்ததும் “பாதின்” உடைய உலமாக்கள் அதற்கு மாறான இன்னொரு கருத்தும் சொல்கிறார்கள்.
“ளாஹிர்” உடைய அறிஞா்கள் என்று குர்ஆனையும், நபீ மொழிகளையும், ஞான மகான்களின் கருத்துக்களையும் மேலோட்டமாக “ஆய்வு” செய்பவா்களும், “பாதின்” உடைய அறிஞா்கள் என்று அவற்றை உள்ளோட்டமாக ஆய்வு செய்பவா்களும் கருதப்படுபவா்கள்.
வெளி நீச்சலடிக்கும் அறிஞா்கள் மேற்கண்ட நபீ மொழிக்கு “காலிக்” என்ற ஒரு சொல்லை வலிந்துறையாக கொண்டு  خالق الدهرகாலத்தை படைத்தவன் என்று பொருள் கூறி காலத்தை ஏசுவது அதைப் படைத்தவனை ஏசுவதாகும் என்று விளக்கம் சொல்கின்றார்கள்.
இவா்களின் இவ் விளக்கம் உப்பும், உறைப்பும் இல்லாத பண்டம் போன்றதாகும். “உப்பில்லாப் பண்டம் குப்பையில்” என்று முதியோர் சொல்வார்கள்.
உள் நீச்சலடிக்கும் இறைஞான மகான்கள் குறித்த நபீ மொழிக்கு அதன் நேரடி பொருள் கொண்டு காலமாயிருப்பவனும் அல்லாஹ்தான். ஆகையால் காலத்தை ஏசுவது அவனை ஏசுவதாகவே ஆகுமென்று விளக்கம் கூறுகின்றார்கள்.
இவ்விரு சாராரின் கருத்துக்களிலும் உள் நீச்சல் செய்பவா்களின் கருத்து என்னை பொருத்தவரை மிகப் பொருத்தமானதாகும்.
ஏனெனில் திருக்குர்ஆன் வசனங்களுக்கோ, திரு நபீகளின் நிறை மொழிகளுக்கோ நேரடிப் பொருள் கொள்வது மார்க்கத்திற்கு முரணான கருத்தை தந்தால் மட்டுமே அவற்றுக்கு வலிந்துறை கொண்டு விளக்கம் எடுக்க வேண்டும்.
மேற்கண்ட لا تسبوا الدهر فإن الله هو الدهر
“காலத்தை ஏச வேண்டாம் காலமும் அவனே” என்ற நபீ மொழிக்கு இவ்வாறு பொருள் கொள்வது  எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முறணானதாக இல்லை.
எனினும் இக்கருத்து
“வஹ்ததுல் வுஜுத்” ஞானத்தை வலியிறுத்தும் கருத்தாக இருப்பதால் இதை எதிர்ப்பவா்கள் மேற்கண்ட இக்கருத்தை முற்றாக மறுத்து விடுவார்கள். தெளிவான ஞானமற்றோர் எதையும் கூறலாம். அவா்களின் வழி செல்லாமல் இறைஞானிகள் வழி சென்று வாழ்வோம்.

 (ஷாஹே ஸறன்தீப்) 

You may also like

Leave a Comment