தொடர் — 02
ஞானகுரு (ஷெய்கை)வைத் தேடுதல்
நஹ்வு (மொழியிலக்கணம்) சர்பு (சொல்லிலக்கணம்) ஹதீஸ் (நபீமொழி) தப்ஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) பிக்ஹு (மார்க்க சட்டக்கலை) அல்லுகதுல் அறபிய்யஹ் (அறபுமொழி) அல்அதபுல் அறபிய்யி (அறபு இலக்கியம்) மற்றும் சர்வ கலையிலும் தன்னிகரற்றுத் திகழ்ந்த அவர்களை ஷெய்கு யூசுப் இப்னுஐயூம் அல்ஹமதானீ (றஹ்) போன்றோர் மக்களுக்கு உபதேசம் செய்து நேர்வழியில் அழைக்கும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால் இதை குத்புநாயகம் ஏற்கவில்லை.
தாம் கற்றது வெறும் ஏட்டுக் கல்வியே என்றும் ஏகாந்தமான இறை ஞானத்தை அனுபவ ரீதியாகப் பெற்றே மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று நினைத்து காமிலான சற்குருவைத் தேடியலைந்தார்கள். தனக்கு சற்குருவை காட்டித் தரும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
ஒரு நாள் பக்தாத் பெருந்தெருவில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஒருவர் ஒரு வீட்டினுள்ளிருந்து தோன்றி நீர் இறைவனிடம் எதைக் கேட்டீர்? என்று கேட்டார். அவர்கள் மௌனம் சாதிக்கவே கேட்டவர் கதவைப் பூட்டி மறைந்து விட்டார்.
சற்று தூரம் சென்ற போதுதான் தம்மிடம் கேட்டவர் சற்குருவோ? என்ற எண்ணம் தோன்றியது. ஓடோடி வந்தார். அந்த வீட்டை அடையாளம் காண அவர்களால் முடியவில்லை. எவ்வளவு தேடியும் பயனற்றுப் போகவே சோகத்துடன் திரும்பி விட்டார்கள்.
பல நாட்களின் பின் கடைத் தெருவில் ஒருவர் ஷர்பத் விற்றுக் கொண்டிருந்தார். அவரது ஷர்பத்தில் ஈக்கள் (கொசு) மொய்யாதிருப்பதைக் கண்டு அவரை உற்றுப்பார்த்தார்கள். அப்போது இவர்தான் தம்மிடம் கேட்ட மனிதர் என்பதை கண்டு அவரிடம் சேர்ந்தார்கள். அவரது பெயர் ஷெய்கு ஹம்மாத் என்றும் அறிந்தார்கள்.
ஷெய்கு ஹம்மாத் அவர்கள் ஷெய்கு அப்துல் காதிரை பலவகையில் சோதனை செய்தபின் இறைஞானங்களையும் கஷ்புடைய அறிவுகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இப்போது மறைவான பற்பல விடயங்கள் அவர்களுக்கு விளங்கலாயிற்று. மூன்று வருடங்கள் ஷெய்கு ஹம்மாதிடம் இருந்து தெளிவு பெற்றார்கள்.
குத்பு நாயகத்தின் மகோன்னத நிலையை மற்றோருக்கு எடுத்துக் காட்டிய ஷெய்கு ஹம்மாத் (றழி) அவர்கள், இவர் எதிர்காலத்தில் மாபெரும் ஆத்ம ஞானியாகத் திகழ்வார்கள் என்றும் அறபிகள் – அஜமிகள் அனைவருக்கும் இறைஞானத்தை வாரி வழங்குவார் என்றும் தன் பாதம் எல்லா வலீமார்களின் தோள் மீதும் இருப்பதாகச் சொல்லும்படி பணிக்கப் படுவார் என்றும் அருளினார்கள். அதன் படியே ஞானி அப்துல் காதிர் அவர்கள் எதிர்காலத்தில் திகழ்ந்தார்கள்.
வனத்தில் மாதவம்
ஷெய்கு ஹம்மாத் அவர்களிடம் விடை பெற்ற அவர்கள் புனித மக்கமா நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய போது அப்துல்காதிரே, தனித்திருப்பீராக, தவ்ஹீதின் தத்துவங்களை உணர்ந்து இறையின்பத்தில் மூழ்குவீராக. சதா இறைதியானத்தில் இருப்பீராக என்ற ஒலி அவர்களது இதயத்திலிருந்து ஒலிப்பதுபோல் கேட்டது.
இதனையுணர்ந்த கௌதுல் அஃளம் அவர்கள் பக்தாதைத்துறந்து இறாக் நாட்டு வனத்தை நாடினார்கள். அதில் “கர்க்” என்ற இடத்தைத் தேர்ந்து அங்கிருந்த பாழடைந்த கட்டிடத்தை தமது வதிவிடமாகக் கொண்டார்கள். அதிலிருந்தே இறை தியானத்தில் ஈடுபட்டார்கள். அப்பகுதிக்குச் செல்வோர் கௌதுல் அஃளம் அவர்களை பைத்தியம் என்றும் வேறுவிதமாகவும் கருதினர். அவர்கள் கடும் தவம் புரிந்ததால் உலக ஆசை அவர்களை விட்டும் அகன்றிருந்தது.
அவர்களின் தவநிலையைக் குழப்புவதற்காக ஷெய்த்தான் போட்ட கோலங்கள் வீணாய்ப்போயின. இறைவனின் முனாஜாத்தின் முன் கஷ்டங்கள் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
ஒரு வருடம் வனத்தில் காணப்பட்ட காய்கறிகளை மட்டுமே உண்டு தவம் செய்தார்கள். இண்டாம் வருடம் தண்ணீர் மட்டுமே அருந்தி தவம் செய்தார்கள். மூன்றாம் வருடம் எதையும் உண்ணாமலும், குடிக்காமலும் வெறும் வயிற்றுடனிருந்து தவம் செய்தார்கள்.
(இறைவனின் குணம் கொண்ட நேசர்கள் உண்பதெங்கே? குடிப்பதெங்கே அனைத்தை விட்டும் அவர்கள் தேவையற்றுவிடுவார்கள்).
ஒரு நாள் அந்த வனத்தில் “கழிர்” (அலை) அவர்கள் தோன்றிய போது தனக்கு உபதேசம் செய்யும்படி அப்துல் காதிர் வேண்டினார்கள். அதற்கு அவர் நான் திரும்பவரும் வரை இவ்விடத்தை விட்டும் நகரக் கூடாது என்று பணித்துச் சென்றார்கள். அதன்படி அவ்விடத்திலேயே “கழிர்” அவர்களை எதிர்பார்த்து ஒரு வருடமாக இருந்தார்கள். ஒரு வருடத்தின் பின் அங்கு வந்த கழிர் (அலை) சில உபதேசங்களைச் செய்து மீண்டும் நான் வரும் வரை இங்கேயே இருக்க வேண்டுமென்று ஏவிச் சென்றார்கள். அதன்படி அவர்கள் அங்கே ஒருவருடம் நகராமல் இருந்தார்கள். மொத்தம் கழிர் (அலை) அவர்களின் உபதேசத்திற்காக இரு வருடங்களை ஒரே இடத்தில் கழித்தார்கள். என்னே விந்தை ! என்னே அவர்களின் தவநிலை. அவர்கள் அந்தப் பாழடைந்த கோட்டையில் பதினொரு வருடங்களைக் கழித்தார்கள். அதனால் அக்கோட்டை “புறூஜூல் அஜமி” அறபியல்லாதவரின் கோட்டை என்று வழங்கலாயிற்று. இஷாவுக்குச் செய்யும் வுழூவுடன் சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.
பொதுவாக பல வருடங்கள் மறைந்து வாழ்ந்தார்கள். அதில் கர்க்கில் கழித்த காலத்தைவிட ஏனைய காலங்களை எங்கு கழித்தார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர்.
இலங்கைக்கும் ஆதம் நபீயின் புனித பாதத்தைத் தரிசிக்க வருகை தந்ததாகவும் அதில் ஜெய்லானீ என்ற இடத்துக்கு வந்து தவமிருந்ததாகவும் அதனாற்றான் அது ஜெய்லானீ என்று பெயர் பெற்றதாகவும் தொன்றுதொட்டு பேசப்படுகின்றன. எழுத்தில் ஆதாரபூர்வமாக எம்மால் அறிய முடியவில்லையாயினும் அதை நாம் மறுக்கவில்லை. காரணம் ஒரு கண்டத்திலிருந்து ஒரு கண்டத்தைக் கடப்பது அவ்லியாக்களால் முடியாத ஒன்றல்ல. இறை நேசர்களுக்கு இறைவன் பூமியை சுருக்கியும் விரித்தும் கொடுப்பான் என்பதும் ஒரு காலை ஒரு இடத்தில் வைத்து மறுகாலை நினைத்த இடத்தில் வைக்கும் வல்லமை அவ்லியாக்களுக்கு உண்டு என்பதும் வெளியிடைமலை.
முஹ்யித்தீன் பட்டம் கிடைத்தது
ஒரு நாள் குத்பு நாயகம் அவர்கள் பக்தாத் வீதியில் நடந்து சென்றபோது வீதியோரத்தில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பதைக்கண்டு அவருக்கு சலாம் சொன்னார்கள். பதில் சலாம் கூறிய அவர் தம்மை தூக்கி நிறுத்தும்படி வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் அம்மனிதரைத் தூக்கி நிறுத்தினார்கள். அவர் நிறுத்தப்பட்டதும் வாலிபராக மாற்றம் பெற்றார். அவரிலிருந்த முதுமை மறைந்து போய்விட்டதைக் கண்ட கௌதுல் அஃளம் அவர்கள் அதிசயித்து நிற்கையில் “அனத்தீன்” நான் தான் சன்மார்க்கம். நீங்கள் அம்மார்க்கத்துக்குப் புத்துயிரளித்தீர்கள். அன்த முஹ்யித்தீன் ( நீங்கள் மார்க்கத்தைப் புத்துயிர் பெறச் செய்தவர் ) என்று அந்த வாலிபர் கூறினார்.
அன்றிலிருந்து ஹழ்றத் அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் “முஹ்யித்தீன்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு பெற்றோர் சூட்டியபெயரைவிட படித்தவர்களிடமும் பாமரர்களிடமும் முஹ்யித்தீன் என்ற பெயரே பிரசித்தம் பெற்றுத் திகழ்கின்றது. “ கௌதுல் அஃளம் ” என்ற பட்டமும் இறைவனாலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டது.
எமக்கு ஒரு “ ஆபத் ” ஏற்படும் போது “ யா முஹ்யித்தீன் ” என்ற அவர்களின் திருநாமம் நாம் நினைக்காமலேயே நமது இதயத்திலிருந்து வெளிப்படுவது அப்பெயரின் மகத்துவத்தை உணர்த்துகிறது.
இரண்டாம் ஹஜ்ஜும் இறை நபீ தரிசனமும்
முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் தங்களது இருபத்தைந்து வருட மாதவத்தை முடித்தபின் இரண்டாம் முறையாகவும் மக்கா சென்று ஹஜ் செய்தார்கள். ஹஜ்ஜை முடித்தபின் தங்களது பாட்டனார் நபீ முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களது தரு றவ்ழஹ்வில் நாற்பது நாள்கள் தரித்து, தவநிலை கொண்டு தாஹாநபீயின் அருள்ஜோதியைப் பெற்றார்கள்.
ஞான உபதேசம்
அதன்பின் நபீகள் முஹம்மது (ஸல்) அவர்களினதும் அவர்களது அருமை மருகர் அலீ (றழி) அவர்களினதும் உத்தரவின் பேரில் மக்களுக்கு இறை போதனைகளைச் செய்யத் தொடங்கி மக்களை இறைவழியில் சேர்த்து வைத்தார்கள். அவர்களது நெஞ்சிலிருந்து ஊற்றெடுத்தோடும் இல்ஹாம் பொதிந்த ஞான உபதேசங்களைக் கேட்பதற்கு மக்கள் கூட்டம் அலையலையாகத் திரண்டனர். காலையும் மாலையும் ஞான இரத்தினங்களை அள்ளிச் சொரிந்தார்கள் அதைக் கேட்ட மக்கள் இறை இன்பத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.
பீரும் பாம்பும்
ஒருமுறை “ கழாகத்ர் ” விதிபற்றி உரை நிகழ்த்தினார்கள். அனைத்தும் இறைநாட்டப்படியே நடக்கும் என்றும் அல்லாஹ் நாடாமல் அணுகூட அசையாது என்றும் விசுவாசிகள் எத்தருணத்திலும் நம்பிக்கை இழக்கமாட்டார்கள் என்றும் உரையாற்றினார்கள்.
அப்போது பாம்பு ஒன்று முகட்டில் இருந்து அவர்களது தலைப்பாகையில் விழுந்து உடலைச் சுருட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்தவர்கள் அச்சம் கொண்டார்கள். ஆனால் கௌது நாயகம் அதைப் பொருட்படுத்தாமல் இறைநாடாமல் எதுவும் எதையும் செய்ய முடியாது என்றே போதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாம்பைக் கண்டு அஞ்சவில்லை. ஆனால் அவர்களைக் கண்டு பாம்பு அஞ்சி இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அது அவர்களது உடலை விட்டும் பிரிந்து சென்றது.
பாதர் பெற்ற பரிசு
எமன் தேசத்தில் வாழ்ந்து நன்கு வேதத்தை கற்றுணர்ந்த ஒரு கிறீஸ்துவப் பாதர் பக்தாத் வந்து கௌது நாயகம் முஹ்யித்தீன் அவர்களின் கரத்தில் புனித இஸ்லாத்தை ஏற்றார்கள். இஸ்லாத்தைத் தழுவியபின் சபையில் எழுந்த அவர் ‘ நான் எமன் நாட்டில் வாழும் இஸ்லாமிய மேதை ஒருவரிடமே இஸ்லாத்தைத் தழுவ விரும்பியிருந்தேன். ஆனால் எனது கனவில் ஈஸா நபீ தோன்றி “ நீ பக்தாத் சென்று அங்கு வாழும்
முஹ்யித்தீன் அப்துல் காதிர் (றழி) அவர்களிடமே இஸ்லாத்தைத் தழுவு என்றும், அவரே தற்கால குத்பாக இருக்கிறார், அவரை மிகைத்தவர் தற்போது எவருமில்லை.” என்றும் பணித்தார்கள் என்று கௌது நாயகத்தின் மாண்பை எடுத்தோதினார்கள் ! என்னே முஹ்யித்தீன் ஆண்டகையின் அற்புதம் !
விருந்தும் மருந்தும்
ஒரு நாள் கௌதுல் அஃளம் அவர்களை பழ்லுல்லாஹ்பின் இஸ்மாயீல் எனும் வணிகர் தமது வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்ற கௌதுல் அஃளம் அவரது வீட்டுக்குச் சென்றார்கள். விருந்துண்டு முடித்தபின் கௌது நாயகத்தின் முன் ஒரு கூடையைக் கொணர்ந்து வைக்கப்பட்டது. அதைத் திறக்குப்படி கௌதுல் அஃளம் உத்தரவிட்டார்கள். அது திறக்கப்பட்டபோது உள்ளே ஒரு சிறுவன் வைக்கப்பட்டிருந்தான். அச்சிறுவன் குருடனாகவும், குஷ்டம் பிடித்தவனாகவும், வாதம் வதைத்தவனாகவும் காணப்பட்டான். அவன் அந்த வணிகனின் புத்திரன் என்று சொல்லப்பட்டது. அச்சிறுவனை விளித்த குத்பு நாயகம் இறைவனின் அருள் கொண்டு சகலதும் சுகம் பெற்று எழுந்துவிடு என்றார்கள். உடன் அச்சிறுவன் தமக்கிருந்த நோய்கள் அகன்று எழுந்து நின்றான். இவ்வரலாறு எவ்வித மருந்துகளும் இன்றி கௌது நாயகத்தின் சொல் என்ற மருந்தைக் கொண்டு மட்டும் சுகம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது எடுத்தோ தப்படுகின்றது. இதுவும் மாபெரும் அற்புதமாகும்.