தொடர்-03
அதிசய நூல்
கௌது நாயகம் அவர்களால் மனத் தெளிவு பெற்று நாத்தீகக் கொள்கையிலிருந்து விடுபட்ட ஷெய்கு முஜப்பர் பின் மன்ஸுர் சொல்கிறார்கள் நான் எனது வாலிப வயதில் நாத்திகம் நிறைந்தவனாக இருந்தேன். எனது சட்டையின் உள்ளே நாத்திகம் போதிக்கும் நூல் ஒன்றை மறைத்து வைத்தவனாக கௌதுல் அஃளம் அவர்களின் சபையில் அமர்ந்தேன். திடீரென என்னை விளித்த அவர்கள் உனது உட்சட்டையில் மறைத்து வைத்துள்ள நூல் உனக்கு உகந்ததல்ல. அதைத் தண்ணீரில் எறிந்துவிடு என்றார்கள்.
மறைவான விடயத்தை எப்படி அறிந்தார்கள் என்று வியந்தேன். ஆனால் அந்நூலை நான் தண்ணீரில் எறிவதற்கு விரும்பவில்லை. அதை ஓரிடத்தில் ஒழித்துவைத்து விடலாம் என்று எழுந்தேன். என்னால் எழ முடியவில்லை. தரை என்னைப் பிடித்துக் கொண்டது.
அந்நூலை என்னிடம் கொடு என்றார்கள் அதை நான் கொடுக்கும் போது விரித்துப் பார்த்தேன். அதில் எவ்வெழுத்துகளும் இன்றி வெறுந் தாள்களே காணப்பட்டன. இது எனக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது. அதிலிருந்த எழுத்துக்கள் எங்கே என்று சிந்தித்தவனாக அந்நூலை அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதைக் கையில் பெற்று அதைப் புரட்டி “ இது திருமறை ஞானத்தைப் பற்றி இப்னு ஷரீஸ் முஹம்மது ” எழுதிய பழாயிலுள் குர்ஆன்தான் என்று சொல்லி என்னிடம் தந்தார்கள். அதை நான் திறந்து பார்த்த போது கௌதுல் அஃளம் கூறிய நூலாகவே அது இருந்தது. என்னே ஆச்சரியம் ! அது மட்டுமன்றி அந்நாத்தீக நூலில் நான் மனனம் செய்திருந்த பகுதிகளும் என் நினைவிலிருந்து மறைந்து விட்டது. என்று கௌது நாயகத்தின் மாண்பை எடுத்தோதினார்கள்.
கௌதுல் அஃளமுக்கு நூலையே மாற்ற முடியுமாயின் கறடுமுறடான இருள் படிந்த எமது இதயக் கறையை மாற்றவும் தமது இறை நெருக்கத்தால் எமது கழாகத்றின் வேகத்தைக் குறைத்து தீமைகளை அழித்துவிடவும் சக்தியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
பொரித்த கோழியும் குத்பு நாயகமும்
முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களிடம் ஒரு மாது தன் மைந்தனை அழைத்து வந்து ஞானப் பயிற்சி அளிக்குமாறு விட்டுச் சென்றாள். பின் பல நாட்களின் பின்தன் மைந்தனைப் பார்க்க வந்தாள். தன் மைந்தன் காய்ந்த ரொட்டித் துண்டுகளை உண்டு கொண்டிருப்பதைக் கண்டாள்.
கௌதுல் அஃளம் அவர்களின் சமூகம் சென்ற போது பொரித்த கோழியை உண்டுகொண்டிருப்பதைக் கண்டாள். அவளின் பேதை மனம் ஏங்கியது. அவளது ஏக்கம் வெளியில் கொப்பளித்தது. நாயகமே ! நீங்கள் ருசி மிக்க பொரித்த கோழியை உண்கிறீர்கள். என் மைந்தன் காய்ந்த ரொட்டியை உண்டு கொண்டிருக்கிறான். அவன் மெலிந்துவிட்டான் என்று கண்ணீர் மல்கக் கேட்டாள். அப்போது கௌது நாயகம் அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக அங்கு கிடந்த தான் உண்ட கோழியின் முட்களைப் பார்த்து இறைவனின் உத்தரவு கொண்டு இந்த முட்களும் உயிர்பெறும் உயிர்பெறு என்றார்கள். உடனே கோழி எழுந்து கொக்கரித்தது. இதைக் கண்ட அம்மாது முஹ்யித்தீனே என்னை மன்னித்து விடுங்கள், பிள்ளைப் பாசத்தால் கேட்டு விட்டேன் என்றாள். அதைக் கேட்ட நாயகம் “ உன் பிள்ளையும் ஞானப்பயிற்சியடைந்துவிடின் இந்நிலை அடைவான் என்றார்கள்.” என்னே அவர்களின் அற்புதம் !
பாதணிகளின் அற்புதம்
ஹிஜ்ரீ 555 ஸபர் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை மத்ரஸஹ்வில் இருந்த கௌது நாயகம் திடீரென்று வுழூ செய்து இரு ரக்கஅதுகள் “ நப்ல் ” தொழுதபின் தங்களது மரத்திலான இரு பாதணிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக எறிந்தார்கள் அவை பெரும் சத்தத்துடன் சென்று மறைந்தன. இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை அவர்களிடம் கேட்பதற்கும் தைரியம் ஏற்படவில்லை.
மூன்று நாள்களின்பின் “அஜம் ” நாட்டிலிருந்து ஒரு ஒட்டகக் கூட்டத் தலைவர் காணிக்கைகளுடன் அங்கு வந்தார். கௌது நாயகத்தின் உத்தரவுடன் அதைப் பெற்றபோது அதனுடன் கௌது நாயகத்தின் இரு பாதணிகளும் காணப்பட்டன. கௌது நாயகம் எறிந்த பாதணிகள் உங்களிடம் எப்படி வந்தடைந்தன ? என்று இருந்தவர்களால் வினவப்பட்டது.
அதற்கு அவர், நான் ஸபர் மூன்றாம் தேதி வியாபாரச் சரக்குடன் பாலைவன வழியாக வந்தபோது கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டோம். எங்களைச் சிறைப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கொள்ளைப் பொருட்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாங்கள் கெளது நாயகம் அவர்களை அழைத்தோம். சிறுது நேரத்தில் இவ்விரு பாதணிகளும் பெரும் இரைச்சலுடன் பறந்து வந்து அவர்களின் இரு தலைவர்களை அடித்து கீழே வீழ்த்தியது.
உடனே எம்மிடம் அந்தக் கொள்ளையர்கள் சிலர் வந்து எங்களை மன்னியுங்கள். உங்கள் பொருள்களை எடுத்துச் செல்லுங்கள் என்றனர். நாம் அருகில் சென்று பார்த்தபோது இரு தலைவர்களும் இறந்து கிடந்தனர். அவர்களின் அருகே இரு பாதணிகளும் காணப்பட்டன. உடன் நாங்கள் கௌது நாயகத்தின் மகத்துவத்தைப் புரிந்தோம். இதோ காணிக்கைகளுடன் வந்துள்ளோம் என்றனர். அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு கெளது நாயகம் பாதணிகளை எறிந்த மர்மம் புரிந்தது. இதை ஷெய்கு உமர் உத்மான் (றழி), ஷெய்கு அப்துல் ஹக் (றழி) ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
விஞ்ஞானப் புதுமை மிகுந்த இந்த நவீன யுகத்தில் யுத்த விமானங்களை நோக்கி எஸ்கட் ஏவுகணைகள் எறியப்படுகின்றன. அவை குறி தவறாமல் விமானங்களை அழிக்கின்றன. இதே போன்றவர்கள்தான் வலீமார்களும், நினைத்த விடயத்தை இருந்த இடத்தில் இருந்தே செய்வார்கள். அவர்கள் பார்வைக்குத் திரை கிடையாது. ஏவுகணைகள் போன்றுதான் தம் பாதணிகளை எறிந்து கொள்ளையரை அடக்கித் தம்மை அழைத்தவர்களுக்கு உதவினார்கள்.
குத்பின் கட்டளையும் மீறிய ஹம்மாமியும்
அபுல் ஹஸன் அலி சொல்கிறார் குத்பு நாயகத்தின் காலத்தில் அபூபக்கர் அல்ஹம்மாமீ என்றொருவர் இருந்தார். அவர் நன்நெறி நடப்பவராகவும் நன்நிலை உடையவராகவும் காணப்பட்டார்.
ஒரு நாள் குத்பு நாயகம் அவர்கள் அவரை விளித்து நீர் ஷரீஅத்தை மீறியதாக அது என்னிடம் முறையிடுகிறது. அவற்றை நீ தவிர்ந்து கொள் என்று நவின்றார்கள். ஆனால் அவர் தவிர்ந்து நடக்கவில்லை.
அப்போது குத்பு நாயகம் தனது கையை அவரது நெஞ்சில் வைத்து “ நீ பக்தாதை விட்டும் வெளியேறிவிடு என்று கட்டளை இட்டார்கள். அக்கட்டளையின் பின் அவரது நிலை மோசமாகியது. பக்தாதை விட்டும் அவர் வெளியேறினார். பின்னர் அவர் பக்தாதில் நுழைவதற்கு முற்பட்டார். அவரால் நுழைய முடியவில்லை. முகம் குப்புற விழுந்தார். பின் பிறரைத் தூக்கச் செய்து பக்தாதில் நுழைய முயன்றார். அப்போது அவரும், அவரை தூக்கியோரும் முகம் குப்புற வீழ்ந்தனர்.
இதையறிந்த வயது முதிர்ந்த தாய் குத்பு நாயகத்திடம் வந்து நாயகமே ! நான் அவரின் தாய் வயது முதிர்ந்தவள் என்னால் வெளியிற் சென்று அவரைப் பார்க்க முடியவில்லை. தயவு செய்து அவர் வந்து என்னைப் பார்ப்பதற்கு அனுமதியுங்கள் என்று பணிந்து நின்றாள்.
அம்மாதின் மீது இரங்கிய குத்பு நாயகம், மாதே நீ செல்ல வேண்டாம் நீ உமது வீட்டில் இருந்து கொள். நான் பூமிக்கு கட்டளை இடுகிறேன். உனது மைந்தனை பூமி தன்னுள்ளால் கொணர்ந்து உனது வீட்டில் சேர்க்கும். நீ பார்த்து உரையாடியபின் அது அவரை உள்ளால் அழைத்துச் சென்று வெளியேற்றிவிடும் என்றார்கள்.
அதேபோல் வாரத்தில் ஒரு தரம் பூமி அபூபக்கரை வீட்டு கிணற்றடிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்துச் சென்று கொண்டிருந்தது.
அபூபக்கர் அல்ஹம்மாமீ என்பவர் அக்காலத்தில் வாழ்ந்த இறைநேசர் ஷெய்கு முழப்பர் என்பவரின் நேசராக இருந்தார். தனது நேசர் ஹம்மாமியின் பரிதாப நிலை அவருக்கு வேதனையாக இருந்தது.
ஒரு நாள் ஜத்புடைய நிலையில் நேசர் முழப்பரிடம் நீ விரும்பியதைக் கேள் ! என்று இறைவன் சொன்னான். அச்சந்தர்ப்பத்தில் குத்பு நாயகத்தின் கட்டளைக்கு மாறு செய்த தனது அன்பரை பற்றி இறைவனிடம் கேட்டார். அதற்கு இறைவன் அது பற்றி எனது ஈருலக நேசர் அப்துல் காதிரிடமே கேட்டுக்கொள் என்று சொன்னான்.
மீண்டும் அவர் மன்றாடியபோது சரி நான் மன்னிக்கிறேன். அப்துல் காதிரிடம் சென்று அபூபக்கரை பொருந்தி அவரது குற்றத்தை மன்னிக்கும்படி நான் சொன்னதாகச் சொல் என்று சொன்னான். அதேபோல் நபீகள் (ஸல்) அவர்களும் தோன்றி முழப்பரே, எனக்குப் பகரமாக என் ஷரீஅத்தை நிலைநிறுத்தும் அப்துல் காதிர் அவர்களிடம் சென்று ‘ உங்கள் பாட்டன் சொல்கிறார். நீங்கள் அபூபக்கரை எனது ஷரீஅத் காரணமாகவே வெறுத்தீர்கள். நான் அவரை மன்னித்து விட்டேன். நீங்களும் மன்னித்துக் கொள்ளுங்கள். என்று சொல்லுமாறு பணித்தார்கள்.
பின்பு ஷெய்கு முழப்பர் அவர்கள் அபூபக்கர் ஹம்மாமியை சந்தித்து குத்பு நாயகத்திடம் அழைத்து வந்து முன்னே நின்றனர். ஷெய்கு முழப்பரை பார்த்த குத்பு நாயகம் வந்த செய்தியை சொல்லும்படி பணித்தார்கள். அவர் தனக்கு நினைவிருந்ததை சொல்லி முடித்தார்கள்.
பின் அபூபக்கரை, முழப்பர் அவர்கள் தவ்பஹ் செய்து மன்னிக்கும்படி வேண்டினார்கள். அவரை மன்னித்த குத்பு நாயகம் அவரை தனது நெஞ்சோடு அணைத்தார்கள். அப்போது தான் முன்பிருந்த நிலையை அடைந்து இழந்ததையெல்லாம் அந்த வேளையிலேயே பெற்றுக் கொண்டார்கள் என்ன குத்பு நாயகத்தின் மாண்பு ! என்னே அவர்களின் அற்புதம் !
சிந்திக்க !
அபூபக்கர் ஹம்மாமி என்பவர் உயர் நிலையைப் பெற்ற ஒரு ஷெய்காக இருந்தும் குத்பு நாயகத்தின் சொல்லை மீறியதற்காக அவரது நிலை பறிக்கப்பட்ட தென்றால் குத்பு நாயகத்திற்கு இறைவன் அளித்துள்ள மாண்மை எத்தகையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
அது மட்டுமன்றி குத்பு நாயகத்தின் ஆணைக்கு பூமி கட்டுப்பட்டு அபூபக்கரின் உடலில் எவ்வித மாற்றமும் இன்றி அவரது அன்னையின் வீட்டிற்கு பூமி உள்ளால் கொணர்ந்துள்ளது. இதுவும் மாபெரும் அற்புதமாகும்.
வலீமார்களின் வல்லமையை அறியாதவர்கள் இவ்வதிசய வரலாறைப் பொய் எனச் சொல்லலாம். அவர்கள் பொய் என்பதால் உண்மை பொய்யாவதில்லை.
இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் கூறும் சுலைமான் நபீயின் வரலாறு அவர்களது செயலாளர் ஆஸிப்பின் பர்கியா (றஹ்) கண்ணை மூடி விழிப்பதற்கு முன் ஆயிரக்கணக்கான கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்த பில்கீஸ் மகாராணியின் “ அர்ஷ் ” சிம்மாசனத்தை பூமியின் உள்ளால் எவ்வித சேதமுமின்றி சுலைமான் நபீயின் முன் கொணர்ந்து வைத்தும் மறுக்க முடியாததாகும்.
காய்ச்சலை விரட்டல்
குத்பு நாயகம் அவர்களிடம் அபுல் மஆலீ என்பவர் வந்து நாயகமே எனது மைந்தன் 15 மாதங்களாக தீராத காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளான் என்றார்கள். அதற்கு குத்பு நாயகம் அவரை விளித்து, உம்முமல்தமே, நீ எப்போது இவனை பீடித்தாய்? நீ ஹில்லா என்ற ஊருக்குச் சென்றுவிடு என்று குத்பு சொல்கிறார் என உமது மகனின் காதில் சொல் என்றார்கள். அதன்படி மகனின் காதில் சொன்னார்கள். அதன்பின் காய்ச்சல் முற்றாக அவனை விட்டும் அகன்று விட்டது. காய்ச்சல் சிறிதும் வரவே இல்லை.
அவர்கள் சொன்னது போல் ஹில்லா எனும் ஊரில் வாழ்ந்த றவாபிழ்களில் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக செய்தி கிடைத்தது.
இவ்வரலாறு நபீகள் (ஸல்) மதீனஹ்வில் இருந்த காய்ச்சலை ஜூஹ்பா என்ற இடத்திற்கு இடம் மாற்றியது போல் உள்ளது. இதுவும் குத்பு நாயகம் அவர்களின் மா பெரும் அற்புதமாகும்.