தொடர் – 2
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، (رواه البخاري)
இதே தலைப்பில் கடந்த முதலாம் தொடரில் இந்த ஹதீதுக் குத்ஸியையும், இதன் மொழியாக்கத்தையும், இதற்கான சிறு விளக்கத்தையும் எழுதியிருந்தேன்.
இந்த ஹதீதுக் குத்ஸீ ஹதீதுக்கலை மேதைகளிடம் பிரசித்தி பெற்ற ஹதீதுக் குத்ஸீ ஆகும்.
இந்த ஹதீதுக் குத்ஸீ ஸூபீகளின் தத்துவத்துக்கும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்துக்கும், பொதுவாக “பனா” நிலைக்கும் அடிப்படையான ஹதீதுக்குத்ஸீகளில் ஒன்றாகும்.
ஸூபிஸத்தையும், வஹ்ததுல் வுஜூத் இறையியலையும் நிராகரிக்கின்ற போலிப் பட்டதாரிகளுக்கும், காலிக் கலாநிதிகளுக்கும் இந்த ஹதீதுக் குத்ஸீ பிடிக்காது. ஆயினும் இது “ழயீப்” பலம் குறைந்ததென்று சொல்வதற்கும் அவர்களுக்கு வழியில்லை. ஆயினுமிவர்கள் இந்த ஹதீதையும், இதுபோன்று ஸூபிஸத்தையும், வஹ்ததுல் வுஜூத் தத்துவத்தையும் கூறுகின்ற நபீ மொழிகளையும் எங்குமே பேசமாட்டார்கள். இந்த ஹதீதுக் குத்ஸியை ஏற்றுக் கொள்ள முடியாமலும், மறுத்துக் கூற முடியாமலும் தலை சொறிந்து நிற்கிறார்கள்.
மேற்கண்ட இந்த ஹதீதுக் குத்ஸியில் وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ என்று ஒரு வசனம் வந்துள்ளது. இதன் வெளிரங்கமான பொருள் என்னவெனில் (என்னுடைய அடியான் “நாபிலத்” மேலதிக வணக்கங்கள் மூலம் அதாவது ஸுன்னத் ஆன வணக்கங்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான்) என்பதாகும்.
இந்த விளக்கம் வெளி நீச்சல் காரர்களினது விளக்கமாகும். இதையும் நாம் ஏற்றுக் கொண்டு “ஸுன்னத்” ஆன நல்லமல்கள் செய்து அல்லாஹ் அளவில் நெருங்குவோம்.
மேற்கண்ட ஹதீதுக் குத்ஸீயில் வந்துள்ள يَتَقَرَّبُ என்ற சொல்லை ஆய்வு செய்த ஸூபீ மகான்கள் இதற்கு அற்புதமான ஒரு விளக்கம் எழுதியுள்ளார்கள். அதை இங்கு எழுதுகிறேன்.
இந்த விளக்கம் இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலில் எழுதியுள்ளார்கள்.
அதிசயமென்னவெனில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஸூபிஸம் பேசிய எனக்கும், எனது கருத்தைச் சரி கண்ட முஸ்லிம்களுக்கும் “முர்தத்” தீர்ப்பு வழங்குவதற்கும், என்னையும், எனது ஆதரவாளர்களையும் கொலை செய்வதற்கும் ஆதாரமாக இந்த நூலை எடுத்திருப்பதாகும். இந்நூல் எல்லாம் அவனே எனும் தத்துவத்தை பகிரங்கமாகக் கூறும் நூல் என்பது குறிப்பிடத்தக்கது. أصلح الله عقولهم وأدمغتهم
குறித்த நூலில் கூறப்பட்ட வசனங்களையும், அவற்றுக்கான விளக்கங்களையும் எழுதுகிறேன்.
واعلموا أن القرب قربان، قرب النوافل وقرب الفرائض، أما قرب النوافل فهو زوال صفات البشـريّة وظهور صفاته تعالى عليه، بأن يحيي ويميت بإذنه تعالى، ويسمع ويبصر من غير تخصيص بحاسة بصر أيضا، لا إن سماعه من الأذن، ولا بصره من العين، ويسمع المسموعات من بعيد، ويبصر المبصرات من بعيد، على هذا القياس،
وهذا معنى فناء الصفات البشريّة فى صفات الله تعالى، وهو ثمرةُ النّوافل، (التحفة المرسلة، ص 42)
அறிந்து கொள்ளுங்கள்! நெருங்குதல் என்பது இரு வகை. ஒன்று “குர்புன் நவாபில்” என்றும், மற்றது “குர்புல் பராயிழ்” என்றும் சொல்லப்படும்.
“குர்புன் நவாபில்” என்றால் “ஸுன்னத்”தான அமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல். இது “ஷரீஆ” அடிப்படையில் நெருங்குதலாகும். இது பற்றி மேலே நான் சுட்டிக் காட்டியுள்ளேன். இங்கு அது பற்றி ஆராய்வது எமது நோக்கமல்ல. இங்கு “தரீகா” அடிப்படையிலும், “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ அடிப்படையிலும் “குர்புன் நவாபில்” பற்றி ஆராய்வோம்.
ஸூபீ மகான்களிடம் “குர்புன் நவாபில்” என்றால் மனிதனில் இயற்கையாக இருக்கின்ற الصفات الـبشـريّة மனித சுவாபங்கள், குணங்கள், மற்றும் தன்மைகள் நீங்கி அவனில் الصفات الإلهيّة அல்லாஹ்வின் தன்மைகள் வெளியாவதாகும். செயல்படுவதாகும்.
இதன் விபரம் என்னவெனில் மனிதனின் அனைத்து தன்மைகளும், சுவாபங்களும் مُقَيَّدْ கட்டுப்பாடுள்ளவையாகும். அவனின் அனைத்து தன்மைகளுக்கும் கட்டுப்பாடும், வரையறையும் உண்டு.
உதாரணமாக மனிதனின் பார்வை போன்று. இந்தப் பார்வை கட்டுப்பாடுள்ளது. ஓர் எல்லைக்குட்பட்டதை மட்டுமே அது பார்க்கும். மிகத் தூரத்திலுள்ளதை பார்க்காது. இதேபோல் திரை மறைவிலுள்ளதையும் பார்க்காது. அவ்வாறான கட்டுப்பாடுகள் மனிதனின் பார்வைக்கு உண்டு.
அல்லாஹ்வின் பார்வை “முத்லக்” கட்டுப்பாடற்றது. எல்லையற்றது. எத்தொலைவிலுள்ளதையும், திரைக்கப்பாலுள்ளதையும் பார்க்கும். இருட்டிலுள்ளதையும் பார்க்கும். இது “அஸ்ஸிபாதுல் இலாஹிய்யா” எனும் தெய்வீகத் தன்மைகளாகும். இத்தன்மைக்கும், “அஸ்ஸிபாதுல் பஷரிய்யா” எனும் மனிதனின் தன்மைகளுக்கும் பெரும் வேறுபாடு உண்டு.
அல்லாஹ் அடியானை விரும்பி அவனுக்கு வழங்கும் எப்பரிசாயினும் அது மனிதன் என்ற “மள்ஹர்” பாத்திரத்தில் செயல்படும் போது தெய்வீகத் தன்மையுள்ளதாகவே செயல்படும். அவ்வாறு செயல்படும் போது அது எதார்த்தத்தில் இறைவனின் பார்வையேயன்றி மனிதனின் பார்வையாக இருக்காது. இறைவனின் பார்வைக்கு எதெல்லாம் உள்ளதோ அதெல்லாம் இதற்கும் உண்டு. முஸ்தபா என்பவனுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டால் அவன் எதையும் எந்தவொரு கட்டுப்பாடுமின்றிப் பார்ப்பான். அந்நேரம் அப்பார்வை அவனுடையதல்ல. அல்லாஹ்வின் பார்வைதான்.
அல்லாஹ் ஓர் அடியானை விரும்பினால் அவன் வழங்குகின்ற நாற்பெரும் பரிசில்களில் ஒவ்வொன்றின் நிலையும் இவ்வாறுதான். இந்நிலை பார்வைக்கு மட்டும் உள்ளதல்ல.
அல்லாஹ் அடியானின் கையானால் அடியான் தனது ஒரு கையாலேயே ஒரு நாட்டை அதன் அத்திவாரத்துடன் தூக்கி தலைகீழாய் கவிழ்த்துவிடுவான். அல்லாஹ் அடியானின் காலானால் அடியான் ஐந்து நிமிடத்தில் காத்தான்குடியிலிருந்து கனடா சென்றுவிடுவான்.
குத்புல் அக்தாப், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிகழ்த்திய “கறாமத்” அற்புதங்கள் பற்றி குணங்குடியார் கூறுகையில்,
அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்ளடக்கி விளையாட வல்லீர்
அகிலமீரேழினையும் ஆடுங்கறங்குபோல் ஆட்டி விளையாட வல்லீர்
மண்டலத் தண்டரையழைத்தருகிருத்தியே வைத்து விளையாட வல்லீர்
மண்ணகமும், விண்ணகமும் அணுவைத் துளைத்ததில் மாட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டிக் கலக்கி விளையாட வல்லீர்
கருதரிய சித்தெலாம் வல்ல நீரடிமையென் கண் முன் வருசித்தில்லையோ
நண்டழந்துடு நாளியாவனோ தேவரீர் நல்லடிக்களாக்கியும்
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு நாதன் முஹ்யித்தீனே!
என்று கூறியுள்ளார்.
அல்லாஹ் ஒருவனின் – அப்துல்லாஹ்வின் – கேள்வியானால் அன்றிலிருந்து அப்துல்லாஹ் கேட்கமாட்டான். அவன் மூலம் அல்லாஹ்தான் கேட்பான். அல்லாஹ் அப்துல்லாஹ்வின் பார்வையானால் அன்றிலிருந்து அப்துல்லாஹ் பார்க்க மாட்டான். அவன் மூலம் அல்லாஹ்தான் பார்ப்பான். அல்லாஹ் அலி சப்ரியின் கையானால் அன்றிலிருந்து அலீ சப்ரீ எதையும் பிடிக்கவோ, எடுக்கவோ மாட்டான். அவன் மூலம் அல்லாஹ்தான் பிடிப்பவனாகவும், எடுப்பவனாகவும் இருப்பான். அல்லாஹ் அல்தாபின் காலானால் அன்றிலிருந்து அல்தாப் நடக்கமாட்டான். அவன் மூலம் அல்லாஹ்தான் நடப்பான்!
இத்தகைய நிலையடைந்த அப்துல்லாஹ்வும், அப்துஸ்ஸலாமும், அலீ சப்ரியும், அல்தாபும் வெளிப்பார்வையில் மனிதர்களாக வெளியானது அல்லாஹ்தான். ஆயினும் அவர்களின் பெயர் சொல்லியே அழைக்க வேண்டும். அல்லாஹ் என்று அழைத்துவிடலாகாது.
هَذَا فَنَاءُ الصِّفَاتِ الْبَشَرِيَّةِ فِى الصِّفَاتِ الْإِلَهِيَّةِ
இதுவே மனிதனின் தன்மைகள் அல்லாஹ்வின் தன்மைகளில் “பனா” ஆதல் என்று சொல்லப்படும்.
இதோடு தொடர்புள்ள ஈரான் வரலாறு தொடரும்.
(ஆதாரம்: அத்துஹ்பதுல் முர்ஸலா, பக்கம் 42)