தொடர் – 3
الصفات البشريّة
“அஸ்ஸிபாதுல் பஷரிய்யா” எனும் மனிதனின் தன்மைகள், சுவாபங்கள், குணங்கள் என்பன الصفات الإلهيّة எனும் தெய்வீகத் தன்மைகளில் “பனா” ஆதல் தொடர்பாக கடந்த பதிவில் எழுதியிருந்தேன். அதைப் பார்க்காதவர்கள் பார்ப்பது நல்லது.
“பனா” فناء என்ற சொல்லுக்கு “அழிதல்” என்று பொருள் வரும். “அழிதல்” என்றால் இருந்த ஒன்று இல்லாமற் போவதைக் குறிக்கும். இருக்கின்ற ஒன்றேயொன்று மட்டும் அழியாது. அதுவே அல்லாஹ் என்ற பெயருக்குரிய மெய்ப் பொருளான “வுஜூத்” உள்ளமையாகும். இது என்றும் உள்ளதும், நிலையானதுமாகும். சிருட்டி என்பது முக்காலத்திலும் இல்லாததாகும். இது தொடர்பான விளக்கம் கடந்த தொடர்களில் இடம் பெற்றுள்ளது.
“பனா” என்ற சொல்லுக்குப் பொதுவாக அழிதல் என்று பொருள் கூறப்பட்டாலும் “ஸூபீ” மகான்கள் இச்சொல்லை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இக்கட்டுரையை கவனத்தோடு வாசிப்பவர்கள் தெரிந்து கொள்வர்.
அப்துல்லாஹ் என்பவன் தனது “ஸிபாத்” தன்மைகளை அகற்றி அவற்றை அழித்து அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகளில் “பனா” ஆகிவிட்டால் அப்துல்லாஹ் அல்லாஹ்வில் “பனா” ஆகிவிட்டான் என்று சொல்லப்படும்.
ஸூபீகளிடம் “பனா” என்ற சொல் ஆள் அழிவதைக் குறிக்காது. அப்துல்லாஹ் அல்லாஹ்வில் “பனா” ஆகிவிட்டான் என்றால் அவன் அழிந்துவிட்டான் என்பது கருத்தல்ல. அவன் அழியமாட்டான். அவன் இருந்தவாறுதான் இருப்பான். ஆயினும் அவனின் தீக்குணங்கள் யாவும் அவனை விட்டும் வெளியேறி, மற்றும் அவனில் குடிகொண்டிருக்கும் أَنِّيَّة “அன்னிய்யத்” நான் எனும் உணர்வும், மற்றும் படைத்தவன் வேறு, படைப்பு வேறென்ற غَيْرِيَّة “ஙெய்ரிய்யத்” எனும் உணர்வும் அவனை விட்டும் வெளியேறினால் அவன் அல்லாஹ்வில் “பனா” ஆனவன் என்று ஸூபிஸக் கலையில் சொல்லப்படும். இதனால் அவனின் உடல் அழிந்து போயிற்று என்பது கருத்தல்ல. அவனின் உணர்வுதான் அழிந்ததேயன்றி அவனின் உடல் அழியவில்லை.
“பனா” என்ற சொல்லுக்கும், உடல் அழிவதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. உணர்வழிவதே ஸூபிஸத்தில் கூறப்படும் “பனா” ஆகும்.
ஒருவன் தன்னை அல்லாஹ்வுக்கு வேறான, அல்லாஹ் அல்லாத ஒரு படைப்பாக நினைத்தானாயின் அவன் ஒரு வகையில் பாவியாகவும், இன்னொரு வகையில் “காபிர்” இறை மறுப்பாளனுமாகிவிடுவான்.
“ஷரீஆ”வை முழுக்க முழுக்க, ஓர் அணுவளவும் மாற்றமின்றி பின்பற்றியும், தரீகா, ஸூபிஸம் போன்ற இறை ஞான வழி செல்லாமலும் வாழ்ந்த ஒரு நல்ல மனிதர் ஒரு நாள் நடு நிசியில் உறக்கத்திலிருந்து கண்விழித்து, “தஹஜ்ஜுத்” எனும் தொழுகையையும் தொழுதுவிட்டு தான் கடந்த காலங்களில் செய்த பாவங்களை நினைத்துப் பார்த்தார். தான் தனது வாழ்வில் எந்த ஒரு பாவமும் செய்யவில்லையென்று திட்டமான பின் இறைவனிடம் கையேந்தி பின்வருமாறு சொல்கிறார்.
فَقُلْتُ وَمَا ذَنْبِيْ؟ فَقَالَتْ مُجِيْبَةٌ – وُجُوْدُكَ ذَنْبٌ لَايُقَاسُ بِهِ ذَنْبٌ
இறைவா! நான் எனது வாழ்வில் பாவம் செய்யவில்லையே! உனது அறிவில் என்னைப் பற்றி எவ்வாறுள்ளதென்று கேட்டேன். அப்போது ஒரு பெண்ணின் குரல் “நீ ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயே அதுவே நிகரற்ற பாவமாயிருக்கிறது என்று சொல்லக் கேட்டேன் என்பதாக”
அறபுக் கல்விக்கூட மாணவனே உனக்காக இரு வரிகள் மட்டும்.
لفظة مجيبة من الشعر إمّا فاعل لِـ قَالَتْ، أو هي حال من ضمير قالت، هذا هو الإعراب لهذه اللّفظة، والقائل فى الحقيقة هو الله تعالى،
ومعنى ‘وجودك ذنب لا يقاس به ذنب ‘أنّ شعورك بوجودك دون وجود الله ذنب عظيم، وشرك كبير، وكفرٌ صريح، لأنّك أثبتَّ لك وجودا مستقلا غير وجوده تعالى، وجعلت نفسك قائما بنفسه لا قائما به تعالى، فظهر من هذا أنّ القائل بالغيريّة مُثبتٌ وجودا لغيره تعالى،
ஆகையால் ஒருவன் தன்னை, அல்லது படைப்பை அது அல்லாஹ்வுக்கு வேறானது, அல்லது அவன் அல்லாததென்று நம்பினால் அவன் பாவியென்று சொல்வதை விட “காபிர்” என்று சொல்வதே மேலானது.
யாராவது ஒருவன் அல்லாஹ்வுக்கு வேறான, அல்லது அல்லாஹ் அல்லாத ஏதாவதொன்று இருப்பதாக நம்பினால் அவன் பெரும் பொய்யனாகிவிடுகிறான் என்று பின்வரும் மகான் கூறியுள்ளார்கள்.
قال القطب الأكبر أبو الحسن علي الشاذلي رضي الله عنه مَنْ لَمْ يَتَغَلْغَلْ فِى عِلْمِنَا هَذَا مَاتَ مُصِرًّا عَلَى الْكَبَائِرِ مِنْ حَيْثُ لَايَشْعُرُ
(எங்களின் – ஸூபீகளின் – இந்த அறிவில் வயிறு நிரம்பக் குடிக்காதவன் தானறியாமலேயே பெரும் பாவத்தில் நிலை பெற்றவனாக மரணிப்பான்) என்று திருவாய் மலர்ந்தார்கள்.
يَتَغَلْغَلْ
என்ற சொல்லை மகான் அவர்கள் பாவித்திருப்பது கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.
இச் சொல்லுக்கு அகராதியில் أسرع فى سيره، وفى الشيئ دخل فيه على تعب وشدّة வேகமாக நடந்தான் என்றும், ஓர் விடயத்தை அடைந்து கொள்வதற்கு கடும் சிரமத்தையும், கஷ்டத்தையும் அனுபவித்தான் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இதன் சுருக்கம் என்னவெனில் ஒரு விடயத்தை அடைந்து கொள்வதற்கும், அதை அறிந்து கொள்வதற்கும் கடும் முயற்சி எடுத்தல் அவசியம் என்பதாகும்.
இந்த விளக்கத்தின்படி ஷாதுலீ நாயகம் எங்களுடைய இந்த அறிவில் என்று குறிப்பிட்டது தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான அறிவுகளை கஷ்டப்பட்டுப் பெற்றுக் கொள்ளாதவன் பெரும் பாவத்தில் நிரந்தரமாக இருந்த நிலையில் மரணிப்பான் என்ற உண்மை தெளிவாகிறது.
இது மிகவும் காரமான பேச்சு, இல்லை, இது காரமான சாபம். ஷாதுலீ நாயகம் இங்கு “ஷரீஆ”வின் அறிவை குறிப்பிடவில்லை. இறைஞானத்தையே குறிப்பிட்டார்கள். இதற்கு ஆதாரம் அவர்கள் فى علمنا هذا “எங்களின் இந்த அறிவில்” என்று தொட்டுச் சொன்னது இறைஞானத்தை மட்டும் குறிக்கும் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.
ஸூபிஸ ஞானம் ஒரு மனிதனின் ஆன்மிகத்திற்கு இன்றியமையாத ஒன்றென்பதினால்தான் அறிவுலக மேதைகள் அனைவரும் ஒரே குரலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ – وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
ஒருவர் “ஷரீஆ”வை மட்டும் கற்று “ஹகீகா” எனும் ஸூபிஸம் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான். ஒருவன் “ஹகீகா” எனும் ஸூபிஸம் மட்டும் கற்று “ஷரீஆ”வை கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “சிந்தீக்” ஆகிவிட்டான்.
எனவே, முஸ்லிம்கள் அனைவரும், குறிப்பாக நபீமாரின் வாரிஸ்களான மார்க்க அறிஞர்களும், மற்றும் வலீமார் மீது பற்றும், பாசமும் உள்ளவர்களும் “ஷரீஆ”வை அறிந்து அதைப் பேணுவதுடன் அல்லாஹ் தொடர்பான ஞானங்களைக் கற்று தரீகா வழியிலும், ஸூபிஸ வழியிலும் வாழ வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன் இறைஞான விளக்கமில்லாத உலமாஉகளும், பொது மக்களும் இறைஞானத்தை இழிவாகப் பேசாமலிருக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
كان الشيخ سراج الدين المخزُومي شيخ الإسلام بالشّام يقول : إيّاكم والإنكارَ على شيئ من كلام الشيخ محي الدين. فإنّ لُحوم الأولياء مَسمومةٌ، وهَلاكَ أديانِ مُبغِضِهم معلومةٌ، فمن أبغَضَهم تَنَصَّرَ ومات على ذلك، ومن أطْلَقَ لِسانَه فيهم بالسّبِّ ابتلاه الله بموت القلب،
(اليواقيت، ج 1،ص 7-8 )
ஷாம் நாட்டின் ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் அல்மக்ஸூமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
(ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சுக்களில் எதையும் மறுக்க வேண்டாமென்று அனைவரையும் எச்சரிக்கிறேன்.
ஏனெனில் அவ்லியாஉகளின் மாமிசம் – உடல் நஞ்சூட்டப்பட்டதாகும். அவர்களைக் கோபமாக்குவோரின் மார்க்கங்கள் நாசமாகிவிடும். அவர்களை கோபமாக்கியவன் “நஸாறா”வாகி மரணிப்பான். எவனாவது தனது நாவினால் அவர்களை வேதனைப்படுத்தினால் அவனின் “கல்பு” செத்துவிடும்) இவ்வாறு கூறியுள்ளார்கள்.
“குர்புல் பராயிழ்” விளக்கம் தொடரும்.