அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

May 4, 2015
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்

சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 06
இற்றை வரை பாதுகாக்கப்படும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள்

கெய்ரோவிலுள்ள அல்மஸ்ஜிதுல் ஹுஸைனீயிலுள்ள திருமுடிகள்

“குப்பதுல் கவ்ரீ”
என்ற இடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் சுவடுகளுடன் காணப்பட்ட இரண்டு திருமுடிகள்
அண்ணலாரின் சுவடுகள் இப் பள்ளிவாயலுக்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில் அவையும் கொண்டு
வரப்பட்டன.
இவ்விரண்டு
திருமுடிகளும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடியில் வெள்ளியினாலான சிறிய பெட்டியில்
வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டி அலங்கரிக்கப்பட்ட பச்சை நிறப்பட்டினால்
சுற்றப்பட்டுள்ளது.
பின்னர் இவ்விரு திருமுடிகளுடனும்
அல் அல்லாமஹ் அஹ்மத் தல்அத் பாஷா அவர்களிடமிருந்த திருமுடியும் சேர்க்கப்பட்டது.
இவர்கள் எகிப்தைச்
சேர்ந்த பிரசித்தி பெற்ற ஓர் அறிஞர். சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்களிடம்
காணப்பட்ட திருமுடி குஸ்துந்தீனிய்யாவுக்கு இவர்கள் பயணம் செய்த நேரத்தில் அரசனால்
இவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்ட்டது என்பது பிரசித்தி பெற்ற ஓர் விடயமாகும்
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் அருள் நிறைந்த இந்த முடியை ஹிஜாஸ் வாசிகளில்
ஒருவர் இவர்களுக்கு வழங்கினார்கள் என்பதும் அதற்காக அவருக்கு இவர்கள் அதிக
அன்பளிப்புக்களை வழங்கினார்கள் என்பதும் அவர்களின் குடும்பத்தினரின் கருத்தாகும்.
இவர்கள் மரணித்த போது
மஸ்ஜிதுல் ஹுஸைனீயில் பாதுகாக்கப்படுகின்ற நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் சுவடுகளுடன் இந்தத் திருமுடியும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக
இப்பள்ளிவாயலுக்கு இந்தத் திருமுடியினை அவர்களின் புதல்வர்கள் அன்பளிப்புச் செய்ய முடிவு
செய்தனர். அவர்களிடம் அது ஒரு போத்தலில் பாதுகாக்கப்பட்டதாக
இருந்தது. அவருடைய மூத்த மகள் அஸ்ஸெய்யிதஹ் ஹதீஜஹ் என்பவர் இந்தத்
திருமுடி பாதுகாக்கப்படுவதற்காக வெள்ளியினாலான பெட்டி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.
அதில் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது. பின்னர் பச்சை
நிறப்பட்டினால் ஏழு சுற்றுக்கள் சுற்றப்பட்டது. பின்னர் மிகவும்
கண்ணியத்துடனும், மரியாதையுடனும் மேற்கூறப்பட்ட பள்ளிவாயிலுக்கு
சுமந்து செல்லப்பட்டு, அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் ஏனைய சுவடுகளுடன் இந்தத் திருமுடியும் பாதுகாக்கப்பட்டது.
ஹிஜ்ரீ
1340 அல்லது 1341ல் இந்தத் திருமுடியுடன்
“தக்கிய்யதுல் குல்ஷனீ” என்ற இடத்தில் இருந்த நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சில திருமுடிகளும்
சேர்க்கப்பட்டன. அவை சிவப்பு மெழுகினால் முத்திரையிடப்பட்ட ஓர்
போத்தலில் இருந்தன. இன்னும் அந்தத் திருமுடிகள் மரத்தினாலும்,
கண்ணாடியினாலும் செய்யப்பட்ட ஓர் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் பெட்டி அபூர்வமான அராபியக் கலாச்சாரம் கொண்டு வடிவமைக்கப்பட்ட
ஓர் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்தது.
ஹிஜ்ரீ
1342 ஷவ்வால் மாதம் கெய்ரோவிலுள்ள அல்முப்ததயான் வீதியில் குடியிருந்த
அல்ஹாஜ்ஜஹ் மலிகஹ் ஹாழினஹ் என்பவர் அந்நேரம் எகிப்தின் அரசராகவிருந்த கமாலுத்தீன் இப்னுஸ்
ஸுல்தான் ஹுஸைன் அவர்களை வரவழைத்து அவர் மூலம் அல்மஸ்ஜிதுல் ஹுஸைனீக்கு சிறிய போத்தல்
ஒன்றை அன்பளிப்புச் செய்தார். அதில் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சிறப்பு மிக்க சில
தாடி முடிகள் இருப்பதாகவும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் ஏனைய அருள் நிறைந்த சுவடுகளுடன் இவையும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக
இவற்றைத் தான் அன்பளிப்புச் செய்வதாகவும் கூறினார்.
அந்த போத்தல் பச்சை நிறமுடைய
பட்டுத் துணி கொண்டு சுற்றப்பட்டிருந்தது. சிவப்பு நிற பட்டுத்
துணி கொண்டு சுற்றப்பட்ட சிறிய பெட்டியில் அது வைக்கப்பட்டிருந்தது. பச்சை நிறப் பட்டினால் மூன்று சுற்றுக்கள் கொண்டு அது சுற்றப்பட்டிருந்தது.
பின்னர் அதிக வாசம் நிறைந்த “பனப்ஸஜ்” என்ற மலர் கொண்டு ஓரங்கள் அலங்கரிக்கப்பட்ட பட்டுத் துணியினால் அது சுற்றப்பட்டிருந்தது.
கெய்ரோவிலுள்ள அந்நக்ஷபந்திய்யஹ் தக்கிய்யஹ்வில் காணப்படும் திருமுடி

“அந்நக்ஷபந்திய்யஹ்
தக்கிய்யஹ்” என்று பிரசித்தி பெற்ற இந்த தக்கிய்யஹ் எகிப்தை ஆட்சி
செய்த அப்பாஸ் பாஷா அல்கபீர் என்பவரால் அமைக்கப்பட்டதாகும். இதை
அப்பாஸ் பாஷா அமைத்ததற்குக் காரணம் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக் அந்நக்ஸபந்தி அவர்களிடத்தில்
அவர் கடும் நம்பிக்கை கொண்டிருந்தார். தானும், தன்னுடனிருக்கின்ற ஏனைய ஸுபிகளும் தங்குவதற்கும், வணக்கத்தில்
ஈடுபடுவதற்கும் ஓர் இடத்தை அமைத்து 
தரும்படி அவரிடம் அவர்கள் கோரினார்கள். 
அப்பாஸ் பாஷா ஹிஜ்ரீ
1268ல் இந்தத் தக்கிய்யஹ்வை அமைத்தார். ஸுபிகள்
வணக்கத்தில் ஈடுபடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார். அவர்களின்
ஷெய்ஹ் – குருவுக்கு ஓர் வீட்டையும் அமைத்துக் கொடுத்தார்.
அந்த இடத்தில் ஓர் பூங்காவையும் அமைத்தார். அதற்கு
அதிகமான சொத்துக்களை “வக்ப்” செய்தார்.
அஷ் ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரீ 1300ல் மரணித்த
போது அங்குள்ள ஓர் வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு
ஆண் மக்கள் வாரிசாக அமையவில்லை. அதனால் அதன் அதிகாரம் அவர்களின்
பேரன் அஸ்ஸெய்யித் உத்மான் ஹாலித் அவர்கள் வசம் கிடைத்தது.
அப்பாஸ் பாஷாவின் தாய் ஹஜ்ஜுக்கு
சென்ற போது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடி ஒன்று அவருக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதை அவர் தனது தாயகம் கொண்டு வந்தார்.
அவருக்கு மரணம் நெருங்கிய
போது அஷ் ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் அந்தத் திருமுடியை
அவர் ஒப்படைத்து மக்கள் இதனைக் கொண்டு பறகத் – அருள் பெற வேண்டுமென்பதற்காக
அந்நக்ஸபந்திய்யஹ் தக்கிய்யஹ்வில் அதனைப் பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டார்.
அதனுடன் மெழுகு ஒரு துண்டு
சேர்க்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைந்த மூன்று சிறிய பெட்டிகளில் அது பாதுகாக்கப்படுகிறது.
அஷ் ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்கள் பிறந்த இரவிலும், இஸ்றாவுடைய இறவிலும் மக்களின் பார்வைக்காக அதை
வைத்து அதை ஒரு விழாவாக கொண்டாடுவார்கள். இந்த விழாவுக்கு மார்க்க அறிஞர்கள், அரச
உயர் அதிகாரிகள், தலைவர்களை அவர்கள் அழைப்பார்கள். அவர்களுக்கு விருந்து வழங்கி
அவர்களைக் கௌரவிப்பார்கள்.
பின்னர் அந்தப்
பெட்டிகளிலிருந்து நபீ ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடியை வெளியிலெடுத்து அவர்களின் கண்களில் அதைக் கொண்டு அவர்கள் தடவுவார்கள்.
அவர்களின் மரணத்தின் பின் இந்த விழா நின்று விட்டது.
அவர்களின் பேரன் அந்தத்
திருமுடி காணப்பட்ட பெட்டிகளை எடுத்து பாரிய ஓர் பெட்டியினுள் அதனை வைத்து அவரின்
பாட்டனின் கப்று இருக்கின்ற அறையில் அதனைத் தொங்கவிட்டார். இன்று வரை அது அவ்வாறே
காணப்படுகின்றது.
குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள திருமுடிகள்

குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த
முடிகள் பற்றிக் கூறியவர்களில் மிக முக்கியமானவர் “ஹைபா” என்ற இடத்தைச் சேர்ந்த
அல் அல்லாமஹ் அஸ்ஸெய்யித் அப்துல்லாஹ் முஹ்லிஸ்” என்பவர்கள்.
அவர்கள் பின்வருமாறு
கூறுகின்றார்கள்.
ஐந்தாவது முஹம்மத் என்று
பிரசித்தி பெற்றிருந்த மன்னர் முஹம்மத் றஷாத் இப்னு அப்தில் மஜீத் என்பவர் ஆட்சியை
கைப்பற்றிய நேரத்தில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் 43 திருமுடிகள் அருள் நிறைந்த நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுவடுகளுடன் பாதுகாக்கப்பட்டிருந்தன. அவற்றில் 24 முடிகளை உத்மானிய ஆட்சியிலிருந்த ஓர் நகருக்கு
அவர் அன்பளிப்பாக வழங்கினார். 19 முடிகள் இன்று வரையும் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.
இவரின் பின்னர் பல மன்னர்களின்
ஆட்சி இடம் பெற்றது.
மன்னர் றஷாத் அவற்றில் ஒரு
திருமுடியை போபாலின் அரசிக்கு அன்பளிப்பு செய்ததாகவும், இன்று வரை 18 திருமுடிகள் மாத்திரம் பாதுகாக்கப்படுவதாகவும்
கூறப்படுகறது.
குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள வேறு சில திருமுடிகள்

இங்குள்ள ஓர் பள்ளிவாயலில்
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சில திருமுடிகள்
காணப்படுகின்றன என்பது அறியப்பட்ட ஓர் விடயமாகும். அவை பலஸ்தீனிலுள்ள மூன்று
நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
எகிப்தின் முப்தீயாக விழங்கிய
அல் அல்லாமஹ் அஷ் ஷெய்ஹ் அப்துர் றஹ்மான் குறாஆ அவர்கள் உத்மானிய்ய ஆட்சியில் இறுதி
காழியாக விழங்கிய நூரீ அபந்தீ அவர்களைப் பற்றிக் கூறும் போது அவர்களிடம் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் இருந்தன என்று கூறுகின்றார்கள்.
அவை அவர்களின் தாயின் குடும்பத்தில்
பாதுகாக்கப்பட்டு பரம்பரையாக வந்த மூன்று திருமுடிகள். அவர்களின் சாச்சி அவற்றைப் பாதுகாத்தவர்களில்
இறுதியானவர்.
தன்னை விட அவர்கள் அந்தத்
திருமுடிகளை பாதுகாப்பதற்குத் தகுதியானவர்கள் என்பதைக் கண்ட அவர் அவற்றை பாதுகாக்கும்
பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார் அவை அவர்களின் குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டன. இந்தத் திருமுடிகள் இப்பொழுது எங்குள்ளன என்பதை அறிய முடியவில்லை.

டமஸ்கஸிலுள்ள அல் மஷ்ஹதுல் ஹுஸைனீயிலுள்ள திருமுடி

மன்னர் அப்துல் அஸீஸ் என்பவர்
இந்த இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக நபித்துவத்தின் சுவடுகளில் ஒரு முடியை
இந்த இடத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த இடத்தில்
அது மிகவும் கண்ணியமாகப் பாதுகாக்கப்பட்டது. இன்று வரை மக்கள்
அதை ஓர் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
தொடரும்…

You may also like

Leave a Comment