“அத்துஹ்பதுல் முர்ஸலா” தரும் “வஹ்தத்துல் வுஜூத்” தத்துவம்)

July 9, 2015
إعلمو إخواني أسعدكم الله وإيّانا أنّ الحقّ سبحانه وتعالى هو الوجود،
وأنّ ذلك الوجود ليس له شكل ولا حصر، ومع هذا ظهر وتجلّى بالشّكل والحدّ، ولم
يتغيّر عمّا كان من عدم الشّكل وعدم الحدّ، بل هو الآن كما كان عليه.

என்தருமைச் சோதரீர் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களையும், எம்மையும் நற்பாக்கியம் உள்ளவர்களாக ஆக்குவானாக!
அல்லாஹ்தான் “வுஜூத்” ஆவான். உள்ளமை ஆவான். “வுஜூத்” என்றால் “உள்ளமை” என்று பொருள் கொள்ள வேண்டும். உள்ளமை என்பது வேறு. உண்மை என்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
உண்மை என்ற பொருளுக்கு “ஸித்குன்” அல்லது “ஹக்குன்” என்ற சொல்தான் பாவிக்கப்படும். “வுஜூத்” என்ற சொல் பாவிக்கப்படுவதில்லை. உள்ளமை என்ற பொருளுக்கு “வுஜூத்” என்ற சொல்தான் பாவிக்கப்படும்.
“வுஜூத்” என்ற சொல்லின் எதிர்ச் சொல் இல்லாமை என்ற பொருள் தருகின்ற “அதம்” என்ற சொல்லாகும். உண்மை என்ற பொருள் தருகின்ற “ஸித்க்” என்ற சொல் அல்ல.

“வுஜூத்” என்ற உள்ளமைக்கு உருவமோ – கட்டுப்பாடோ – எதுவுமில்லை. இதுவே “தன்ஸீஹ்” என்று சொல்லப்படுகின்றது. இதை “தன்ஸீஹ்” உடைய நிலை என்றும், “மகாம்” என்றும் “ஸூபி” மகான்கள் கூறுவார்கள்.
எனினும் குறித்த “வுஜூத்” உள்ளமை எப்பொருளாக, எந்த உருவத்தில், எந்தக் கட்டுப்பாட்டில் வெளியானாலும் வெளியாவதற்கு முன்னிருந்த நிலையில் இருந்து அது மாறுபடவில்லை. வெளியான பின்னும், வெளியாகு முன்னும், எப்போதும் அது இருந்தவாறே இருக்கிறது.
அல்லாஹ்வின் “வுஜூத்” உன்ற உள்ளமைக்கு “தன்ஸீஹ்” அரூப, கட்டுப்பாடற்ற நிலை என்றும், “தஷ்பீஹ்” ரூப, கட்டுப்பாடுள்ள நிலை என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒருவன் உண்மை விசுவாசியாவதற்கு இவ்விரு நிலைகளையும் நம்ப வேண்டும். இன்று உலகில் வாழும் அனேக முஸ்லிம்கள் போல் “தன்ஸீஹ்” நிலையை மட்டும் நம்பினால் “ஈமான்” சரி வராது. இந்த விபரம் உலமாஉகளில் அதிகமானவர்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். குறிப்பாக “தரீகா”வின் ஷெய்காக – குருவாக இருப்பவருக்கும், “கலீபா“உகளாயிருக்கின்ற மௌலவீ மார்களும், “முகத்தம்” ஆக இருப்பவர்களுக்கும் தெரியாமல் இருப்பது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய ஒன்றாகும்.
அது தொடர்பாக ஞானத்தாரகை அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
وإن قلت بالتّنزيه كنت
مقيّدا – وإن قلت با لتّشبيه كنت محدّدا
“தன்ஸீஹ்” என்பதை மட்டும் நீ சொன்னால் – நம்பினால் – அதில் மட்டுமே அந்த “வுஜூதை” கட்டுப்படுத்தினவனாவாய். அதே போல் “தஸ்பீஹ்” என்பதை மட்டும் நீ சொன்னால் – நம்பினால் – அதில் மட்டுமே அந்த “வுஜூதை” கட்டுப்படுத்தினவனாவாய்.
فإن قلت بالامرين كنت مسدّدا – وكنت إماما فى المعارف سيّدا
நீ இரண்டு நிலைகளையும் சொன்னால் – இரண்டு நிலைகளையும் நம்பினால் – நீ நேர்மையானவனாகி விட்டாய். அதோடு இறையியலில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்.
அல்லாஹ்வின் “தன்ஸீஹ்” “தஸ்பீஹ்” என்ற இரு நிலைகளையும் நம்பினவன்தான் உண்மையான “தவ்ஹீத்” வாதியாவான். அதே நேரம் அல்லாஹ்வின் வுஜூத் என்ற உள்ளமையை “தன்ஸீஹ்” அரூப நிலையிலோ, “தஷ்பீஹ்” என்ற ரூப நிலையிலோ கட்டுப்படுத்துவதும் கூடாது. இரண்டையும் ஏற்றுக் கொள்வதுடன் இரண்டுக்கும் அப்பால் உள்ள “தன்ஸீஹ் மஹ்ழ்” தெளிவான – சுத்தமான தன்ஸீஹ் என்பதையும் நம்ப வேண்டும்.
மேற்கண்ட இந்த விபரம் முஹம்மத் இப்னு பள்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்களின் “அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாகும்.
“துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்கள் இன்னும் சொல்கிறார்கள்.
إنّ جميع الموجودات
من حيث الوجود عين الحقّ سبحانه وتعالى. ومن حيث التّعيّن غير الحقّ سبحانه
وتعالى. والغيرية إعتباريّة، وأمّا من حيث الحقيقة فالكل هو الحقّ سبحانه وتعالى،
ومثاله الحباب والموج والثلج، فانّ كلّهنّ من حيث الحقيقة عين الماء، ومن حيث
التّعيّن غير الماء، وكذا السّراب من حيث الحقيقة عين الهواء ومن حيث التّعيّن غير
الهواء.
“மவ்ஜூதாத்” என்ற சொல் சிருட்டிகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். இவையாவும் “வுஜூத்” உள்ளமையின் புறத்தால் அல்லாஹ் தானானவைகளேயாகும். (அவனுக்கு வேறானவை அல்ல) எனினும் தனித்தனியாகக் குறிப்பிடும் போது அல்லாஹ் அல்லாதது சிருட்டி எனப்படும். அவைகள் கூட அவனின் வெளிப்படையாகும். “ஙெய்ரிய்யத்” வேறு என்பது கூட வெளிப்படையான கவனிப்பைக் கொண்டதேயாகும். எனினும் எதார்த்தத்தில் சிருட்டிகள் யாவும் அல்லாஹ்தானானவையாகும்.
குமிழி, அலை,
பனிக்கட்டி (ஐஸ்), என்பன போன்று. இவை மூன்றும் எதார்த்தத்தில் நீரையன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் தனித்தனி குறிப்பை கவனித்து நீருக்கு வேறானவைதான். “ஸறாப்” கானல் நீர் போன்றுமாகும். கானல் நீர் எதார்த்தத்தில் ஆகாயம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் வெளிப்படைக்குறிப்பு என்ற வகையில் அது ஆகாயத்திற்கு வேறானதே. கானல் நீர் என்பது எதார்த்தத்தில் ஆகாயத்தின் வெளிப்பாடுதான்.
இதன் சுருக்கம் என்னவெனில் படைப்புகளும் – பிரபஞ்சம் யாவும் – “வுஜூத்” உடைய புறத்தால் அதாவது உள்ளமை என்ற அடிப்படையில் “அல்லாஹ்”தான். ஆயினும் “தஅய்யுன்” குறிப்பு என்ற வகையில் அது வேறானதேயாகும். வேறு என்பது கூட கணிப்பின் படியேதான். எதார்த்தம் என்னவெனில் பிரபஞ்சம் எல்லாம் அல்லாஹ்தான். குமுழி, அலை, ஐஸ் என்பன போன்று. இவையாவும் நீரேயன்றி வேறல்ல. இவ்வாறுதான் கானல் என்பதுமாகும்.
மேற்கண்ட கருத்தின்படி சிருட்டி என்று சொல்லப்படுகின்ற எதுவாயினும் அது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைக்கு வேறானதே இல்லை. அலை என்பது நீர்தானேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. ஐஸ்கட்டி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. “ஸறாப்” எனும் கானல் நீரும் இவ்வாறுதான். அது ஆகாயத்திற்கு வேறானதல்ல.
சகல படைப்புகளுக்கும் மூலம் – கரு – என்பது அல்லாஹ்வின் “வுஜூத்” என்ற உள்ளமைதான். வேறொன்றல்ல.
மோதிரதுக்கு தங்கம் மூலம் என்றால் மோதிரம் என்பது தங்கம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. அலைக்கு நீர் மூலம் என்றால் அலை என்பது நீர் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. நூலுக்கு பஞ்சு மூலம் என்றால் நூல் என்பது பஞ்சு தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல.
இந்த “வஹ்தத்துல்
வுஜூத்” ஞானம் பற்றிக் கூறிய தற்கலைவாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.  
மண்ணால
ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது
மண்ணையன்றி
வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பொன்னால
ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது
பொன்னையன்றி
வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பஞ்சால
ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது
பஞ்சையன்றி
வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
65 ஆயிரம் ஞானப் பாடல்களை மனு குலத்தின் நன்மை கருதிப் பாடிவிட்டுச் சென்ற ஞானக்கடல் பீரப்பா அவர்கள் “வஹ்தத்துல் வுஜூத்” பேசியதால் மதம் மாறி விட்டார்களா? “துஹ்பதுல் முர்ஸலா” என்ற “வஹ்தத்துல் வுஜூத்” ஞான நூலை எழுதிய முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைச் சரி கண்டு எழுதியதால் மதம் மாறி விட்டார்களா? இவர்கள் போல் குறித்த ஞானத்தை – இறையியலை – உலகுக்கு அள்ளிக் கொட்டிய மகான்கள் அனைவரும் மதம் மாறி விட்டார்களா? “முர்தத்” ஆகி விட்டார்களா? என்னே உங்களின் மார்க்க ஞானமும் பத்வாவும்?!
பைத்தியம் பலவிதம்
1979ம் ஆண்டு காத்தான்குடியில் “வஹ்தத்துல் வுஜூத்” ஞானம் பேசிய எனக்கும், எனது கருத்தை சரிகண்ட இலங்கையின், உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற 
முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று கண்ணை மூடிக் கொண்ட “பத்வா” மார்க்கத் தீர்ப்பு வழங்கிய மகான்கள் தமது “பத்வாவுக்கு” ஆதாரமாக எடுத்த நூல்களில் “அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலும் ஒன்று. “வஹ்தத்துல் வுஜூத்” “மெய்ப்பொருள் ஒன்றே” என்ற ஞானத்தை பட்டவர்தனமாகவும், வெளிப்படையாகவும் கூறப்பட்டுள்ள ஆதார நூலாக எழுதி இருப்பது அவர்களின் மூளையில் கோளாறுண்டு என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.
أصلح الله
أمورهم وعقولهم وزين بالعرفان قلوبهم
وأكرم مأواهم
ومثواهم بعد انتقالهم إلى ربّهم
وفرّج همومهم
وغمومهم. وعلّمهم مالم يعلموا
وأسعدهم بصحبة
رجال الغيب.

You may also like

Leave a Comment