தொடர் – 01
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள்
சீதேவி –நண்பா! நீ எங்கே செல்கிறாய்?
மூதேவி – இந்திய நாட்டிலிருந்து முஜத்தித் ஒருவர் இலங்கை வந்துள்ளார். கொழும்பில் இன்றிரவு உரை நிகழ்த்தவுள்ளார். அவரின் உரை கேட்கச்செல்கிறேன். நீ எங்கே செல்கிறாய்?
சீதேவி – கொழும்பிலுள்ள எனது நண்பன் வீட்டிற்கு சிரியாவிலுள்ள ஒரு ஷெய்கு – ஞான குரு வந்துள்ளார். அவரைக்கண்டு அருள் பெறச்செல்கிறேன்.
மூதேவி – உன் கையில் இருப்பதென்ன?
சீதேவி – ஒன்று மௌலித் கிதாபு. மற்றது றாதிப் கிதாபு
மூதேவி – மிகப் பெரிதாக இருக்கின்றதே! எல்லாமே மௌலித் கிதாபுதானா?
சீதேவி – ஆம். எல்லாமே மௌலித் கிதாபுதான்.
மூதேவி – யார் எழுதியது? யார் பெயரால் எழுதப்பட்டது.
சீதேவி – தமிழகத்தின் தலைசிறந்த மார்க்கமேதை அல்லாமஹ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹ் அவர்கள் 500 அவ்லியாஉகள் பெயரால் எழுதியது.
மூதேவி – நீயும் கப்று வணங்கிகளுடன் பித்அத்காரர்களுடனும் சேர்ந்து கொண்டாயா?
சீதேவி – வார்த்தைகளை அளந்து பேசு. நிதானமாகவும் பேசு. குனிந்துபார். அதுவே உனக்கு பதில் சொல்லும். மண்டையில் சரக்கில்லாதவனே! நீ சாப்பிடுவது சோறா? வைக்கோலா?
மௌலித் ஓதுவது கப்று வணக்கமென்றும் பித்அத் என்றும் சொல்கின்றாயே! முதலில் மௌலித் என்றால் என்ன? பித்அத் என்றால் என்ன? என்பதை விளக்கமாகத் தெரிந்து கொள். அதன்பிறகு அது கப்று வணக்கமா? பித்அத்தா? என்பதை தெளிவாக அறிந்து கொள்வாய் விளக்கமின்மையே குழப்பத்திற்குக் காரணம்.
மூதேவி – நண்பா! நீ என்ன சொல்கிறாய்? மௌலித் பற்றி சற்றுவிளக்கமாகச் சொல்.
சீதேவி – மௌலித் என்பது அறபுச்சொல். இதற்கு மொழிஅடிப்படையில் ஓர் அர்த்தமும் “இஸ்திலாஹுல் முஸ்லிமீன்” முஸ்லிம்களின் பரிபாஷையில் இன்னோர் அர்த்தமும் உண்டு. இச்சொல்லுக்கு மொழிஅடிப்படையில் பிறந்த இடம் பிறந்த நேரம் என்று பொருள்வரும். உதாரணமாக “மௌலிது முஸம்மில்” என்பது போன்று இதற்கும் முஸம்மில் பிறந்த இடம் அல்லது முஸம்மில் பிறந்த நேரம் என்று கொள்ளலாம். “மௌலூத்” என்ற சொல்லுக்கு பிறந்த சிறுபிள்ளை என்று பொருள் வரும் உதாரணமாக “மௌலூது முஸம்மில்” என்பது போன்று. இதற்கு முஸம்மிலின் பிள்ளை என்று பொருள்வரும். “விலாதத்“ என்ற சொல்லுக்கு பிறப்பு என்று பொருள்வரும். உதாரணமாக “விலாததுமுஸம்மி்ல்“ முஸம்மிலின் பிறப்பு என்பது போன்று அநேகர் விபரம் தெரியாமல் மௌலித் என்று எழுதவேண்டிய இடத்தில் “மெளலூத்“ என்று எழுதுகிறார்கள். இது தவறு இச் சொல்லை பொது மக்கள் “மஹ்லத்து” என்று சொல்வர். இதுவும் தவறுதான்.
மூதேவி – “மௌலித்“ என்ற சொல்லுக்கு மொழி அடிப்படையில் விளக்கம் சொன்னாய். மிகப் பிரமாதம். ஆனால் “இஸ்திலாஹுல் முஸ்லிமீன்“ முஸ்லிம்கள் வழக்கத்தில் அதற்கு இன்னோர் அர்த்தம் இருப்பதாக சொன்னாய் அல்லவா? அதைச் சற்று சிளக்கமாகச் சொல்.
சீதேவி –முஸ்லிம்களிடம் மௌலித் என்பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் சொல்லப்படும்.
“பள்ளிவாயல் மத்ரஸ்ஹ் – பாடசாலை வீடு கடை போன்ற இடங்களில் மனிதர்கள் ஒன்று கூடி திருக்குர்ஆன் வசனங்களிற் சிலதை ஓதி ஒரு நபி அல்லது ஒரு வலீ அல்லது ஒரு நல்ல மனிதரைப் புகழ்ந்து அவரின் பிறப்பு இறப்பு பற்றிக் கூறி அவரின் வாழ்விலும் அவர்மறைந்த பின்னும் அவரால் வெளியான அற்புதங்களைக் கூறி, அவரின் உயர்குணங்களையும் விஷேட தன்மைகளையும் எடுத்தோதி, அவர் சொன்ன பேச்சுக்கள் தத்துவங்களை பேசி, அல்லது பாடி அங்கு கூடும் மக்களுக்கு சாப்பாடு பழவகை வினியோகம் செய்து மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி அவர்களைக் கௌரவித்தல்”.
இவ்வாறு செய்தலே முஸ்லிம்களிடம் மௌலித் ஓதுதல் என்று சொல்லப்படும்.இதுவே மௌலித் ஓதுதல் என்பதன் வரைவிலக்கணமாகும்.
மூதேவி – மேற்கண்ட அம்சங்கள் கொண்ட ஒன்றுக்கே மௌலித் ஓதுதல் என்று நீ சொல்கிறாய். இதற்கு திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் ஆதாரம்முண்டா?
சீதேவி – நான் முன்பு சொன்ன வரைவிலக்கணத்தை நீ சரியாக புரிந்து கொண்டால் என்னிடம் இப்படியொரு கேள்வி கேட்கமாட்டாய். அந்த வரைவிலக்கணத்தில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவற்றை ஜந்து அம்சங்களாகச் சுருக்கி ஆராய்ந்து பார்க்கலாம்.
01. மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதல்.
02. திருக்குர்ஆன் ஓதுதல்.
03. நபீமார் வலீமார் நல்லடியார்களைப்புகழ்தல். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறுதல். அவர்களின் அற்புதங்கள் விஷேட தன்மைகள் உயர் குணங்கள் அவர்கள் செய்த சேவைகள். அவர்கள் பேசிய தத்துவங்கள் எனபவற்றை கூறுதல்.
04. மனிதர்களுக்கு சாப்பாடு இனிப்புப் பண்டங்கள் வழங்குதல்.
05. மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்பு வழங்குதல்.
மேற்கண்ட ஐந்து அம்சங்களும் அடங்கிய ஒன்றே மௌலித் ஓதுதல் என்றழைக்கப்படுகிறது.
முதலாவது அம்சம்
மௌலித் ஓதுவதிலுள்ள ஐந்து அம்சங்களில் முதலாவது அம்சம் மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதல். இது பற்றிச் சற்று ஆராய்வோமா? நிதானமாகக் கேள். பக்க சார்பற்ற மன நிலையுடன் செவிமடு.
பள்ளிவாயல், பாடசாலை, வீடு, கடை போன்ற இடங்களில் மௌலித் ஓதுவதற்காக மனிதர்கள் ஒன்று கூடுதல் இஸ்லாம் அனுமதித்த ஒன்றேயாகும். மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதலை ஷரீஅத் – புனித மார்க்கம் வரவேற்கிறதேயன்றி அதை வெறுக்கவில்லை. இதனால்தான் ஐங்காலத் தொழுகையில் மனிதர்கள் ஜமாஅத் கூட்டமாக சேர்ந்து தொழுவது நற்செயலாக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஜும்அஹ் தொழுகையை மனிதர்கள் கூட்டமாக சேர்ந்து தொழுதல் கடமையாக்கப்பட்டதும் இதனால்தான். மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்ளுதல் ஒன்று. ஸலாம் சொல்லிக் கொள்வது பற்றி அநேக நபி மொழிகள் வந்துள்ளன. விரிவையஞ்சி அவற்றை சொல்லவில்லை. ஸலாம் சொல்லிக் கொள்வது ஷரீஅத்தில் ஸுன்னத் ஆக்கப்பட்ட விடயமாகும்.
ஒருவர் இன்னொருவருக்கு முதலில் “அஸ்ஸலாமு அலைக்கும்“ என்று சொல்வது ஸுன்னத் என்றும் மற்றவர் அதற்கு “வஅலைக்கு முஸ்ஸலாம்“ என்று பதில் சொல்வது “வாஜிபு“ கடமை என்றும் மார்க்கம் சொல்கிறது. மனிதர்கள் ஓர் இடத்தி்ல் ஒன்று கூடுவதால் ஸலாம் சொல்லும் வணக்கத்துக்கு வழி ஏற்படுகிறது. அதோடு ஒருவர் இன்னொருவரிடம் குசலம் விசாரித்தல் – சுக செய்தி கேட்டறிந்து கொள்ளுதல். என்ற வணக்கமும் மனிதர்கள் ஒன்று கூடுவதால் உண்டாகிறது.
ஒருவர் இன்னொருவரி்ம் “கைபஹாலுக“ உன் நிலமை எப்படி? என்று சுகம் விசாரிப்பது மார்க்கம் வேண்டிக் கொண்ட விடயமாகும். இவை மட்டுமன்றி மனிதர்கள் ஒன்று கூடுவதால் ஒருவர் மற்றவருடன் “முஸாபஹஹ்“ கை கொடுத்தல் என்ற வணக்கத்திற்கும் வழி ஏற்படுகிறது. கை கொடுத்தல் கை குலுக்குதல் என்பது சாதாரணவிடயமல்ல. மனிதர்களிடையே இது சாதாரண காரியமாகக்கருதப்பட்டாலும் இதில் ஆழமான தத்துவம் இருப்பதாக தத்துவ ஞானிகள் கூறுகின்றனர். இதன் விபரத்தை இங்கு சொல்லவில்லை. தெரிந்துகொள்ள விரும்புவோர். தொடர்பு கொள்ளலாமல்லவா?
மேற்கண்ட நன்மைகள் யாவும் மனிதர்கள் ஒன்று கூடுவதாலேயே ஏற்படுகின்றன. எனவே மௌலித் ஓதுவதற்காக மனிதர்கள் ஒன்று கூடுதல் நல்லகாரியமேயன்றி அது ஷரீஅத்திற்கு எந்த வகையிலும் முரணானதல்ல.
மூதேவி – நீ இப்போது கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ சொன்ன நன்மைகள் எல்லாம் மனிதர்கள் ஒன்று கூடும் போது மட்டுமே ஏற்படும். ஆனால் ஒருவர் தனிமையாக மௌலித் ஓதும் போது மேற்கண்ட நன்மைகளுக்கு வழியில்லையே. இதற்கு நீ என்ன சொல்வாய்?
சீதேவி – உனது கேள்வி சரியானதே. மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடி மௌலித் ஓதுவதே வழக்கம். தனிமையாக ஓதுவது மிகக்குறைவு. ஒருவர் தனிமையாக ஓதினால் மேற்கண்ட நன்மைகள் உண்டாக வழியில்லை. இதனால் தான் மௌலித் ஓதவிரும்பும் ஒருவர் தன்னுடன் இன்னும் சிலரை சேர்த்துக் கொள்கிறார். அதே போல் மௌலித் ஓத விரும்பும் வீட்டவர்கள் ஓதத் தெரிந்த ஒருவரை மட்டும் அழைக்காமல் பலரை அழைக்கின்றார்கள்.
மூதேவி – “அல்ஹம்துலில்லாஹ்“ உனது விளக்கத்தின் மூலம் எனது அறியாமை கொஞ்சம் கொஞ்சமாக அகன்று செல்வதை நான் உணர்கிறேன். இரண்டாவது அம்சம் பற்றிச் சொல் பார்க்கலாம்.
இரண்டாவது அம்சம்
சீதேவி – திருக்குர்ஆன் ஓதுதல். இது இரண்டாவது அம்சம். மௌலித் ஓதுவதற்கு ஒரு முறையுண்டு. ஓர் அமைப்பும் இருக்கின்றது. நமக்கு முன் வாழ்ந்த நல்லடியார்கள் மௌலித் எவ்வாறு ஆரம்பிக்கவேண்டும் எவ்வாறு முடிக்கவேண்டும்.
என்பதைக் காட்டித் தந்துள்ளார்கள். முதலில் யார் பெயரால் ஒதவேண்டுமோ அவரின் பெயர் குறித்து “அல்பாதிஹஹ்“ என்று கூறி ஸுறத்துல் பாத்திஹஹ், ஸுறத்துல் இக்லாஸ், முஅவ்விததைன் – குல்அஊது பிறப்பில் பலக் குல்அஊது பிரப்பின்னாஸ் போன்ற திருவசனங்களையும் இன்னா பதஹ்னா லக பத்ஹன் முபீனன் என்று ஆரம்பமாகும் திருவசனத்தையும் ஓதியபின் மௌலித் ஆரம்பிக்கப்படும். திருக்குர்ஆன் ஓதுவது ஷரீஅத்துக்கு முரணாணதென்று எந்த ஒரு பைத்தியக்காரன் கூடச் சொல்லமாட்டான். ஆகையால் ஆதாரங்கள் கூறி இதை நிறுவத் தேவையில்லை.
இனி மௌலிதின் மூன்றாவது அம்சம் பற்றிச் சொல்லிக் காட்டுகிறேன்.
மூன்றாவது அம்சம்
நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்தல் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறுதல். அவர்களின் அற்புதங்கள் விஷேட தன்மைகள் உயர் குணங்கள் அவர்கள் செய்த சேவைகள் அவர்கள் பேசிய தத்துவங்கள் என்பதைக் கூறுதல்.
மூன்றாவது அம்சத்தில் கூறப்பட்ட விடயங்கள் யாவும் இஸ்லாமிய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட விடயங்களே. இவற்றிற்கு ஆதாரங்கள் கூறி விரிவாக விளக்கம் கூறத் தேவையி்ல்லை. அல்லாஹ் திருக்குர்ஆனில் நபீமார் வலீமார்களைப் புகழவில்லையா? இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறவில்லையா? அவர்களின் அற்புதங்கள் விஷேட தன்மைகள் உயர்குணங்கள் சேவைகள் அவர்கள் பேசிய தத்துவங்கள் என்பவற்றைச் சொல்லவில்லையா? இவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் சொல்வதாயின் நாமிருவரும் ஸுர் ஊதும் வரை – உலக முடிவுவரை பேசிக் கொண்டிருக்கவேண்டும். இது முடிந்த காரியமா? இல்லையே? ஆகையால் மறு சந்திப்பின் போது முடிந்தவரை ஆதாரம் கூறி விளக்கிவைக்கிறேன். இப்போது மிகச் சுருக்கமாக நபீமார் வலீமார் நல்லடியார்களைப்புகழ்தல் தொடர்பாக சிறு விளக்கம் தருகிறேன்.
நபீமார்,வலீமார்,நல்லடியார்கள் உயிரோடிருக்கும்போது அவர்களைப் புகழ்வதும் அவர்கள் மரணித்தபின் புகழ்வதும் இஸ்லாம் அனுமதித்த விடயமேயன்றி அது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணாணதல்ல.
அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்ந்துள்ளான். நபீ (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்திலேயே நபீ தோழர்கள் அவர்களைப் புகழ்ந்துள்ளார்கள். இதற்கு ஆதாரம் அதிகம் உண்டு. அவற்றில் சிலதை மட்டும் சொல்கிறேன். அதற்கு முன் இவ்விடயம் மிக ஆழமாக ஆய்வு செய்து ஆதாரங்கள் தேடிக் கெள்ளக் கூடிய விடயமில்லை என்பதை நீ புரிந்து கொள்வதற்காக நடைமுறையிலுள்ளசில உதாரணங்கள் தருகிறேன். அதன் பின் நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்தல் தொடர்பாக திருக்குர்ஆனில் இருந்தும் நபீ மொழிகளில் இருந்தும் ஆதாரம் தருகிறேன். சிந்தனையுடன் கேள். நிதான நிலையில் இருந்து கேள். ஒரு பக்க சார்புடைய மன நிலையில் இருந்து கேட்காமல் சத்தியத்தை அறிந்துகொள்ளும் நோக்குடன் மட்டும் கேள். அல்லாஹ் உனது மனக்கண்ணையும் அறிவுக்கண்ணையும் திறந்து விடுவானாக.
நமது நாட்டில் பாராட்டு விழாக்கள், வரவேற்பு விழாக்கள் என்று பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு அரசியல் வாதியை, படித்துப் பட்டம் பெற்ற ஒரு அறிஞனை, விளையாட்டில் வெற்றிபெற்ற ஒரு வீரனை மௌலவிப்பட்டம் பெற்ற ஒரு மார்க்க அறிஞனை கௌரவிப்பதற்காக மேடை அமைப்பதும் அதை மின் விளக்குகளாலும் அலங்காரப் பொருட்களாலும் அலங்கலிப்பதும் ஊரெல்லாம் அறிவித்து அதற்கு பேச்சாளர்கள் கவிஞர்களை அழைப்பதும் விழாவின் கதாநாயகன் அங்கு வரும்போது அவருக்கு மாலை சூடி, மலர் தூவி, பன்னீர் தெளித்து, அத்தர் பூசி கஸீதஹ் முழக்கத்துடன் “தகறா” ஒலிக்க அவரை மேடைக்கு அவரை அழைத்து வருவதும் தலைவர் அவரை புகழ்ந்து தலைமையுரை நிகழ்த்தி பேச்சாளர்கள் அவரைப் புகழ்ந்து பேசி கவிஞர்கள் அவரைப் புகழ்ந்து கவிகள் பாடி நன்றியுரை ஸலவாத்துடன் விழா நிறைவு பெறுவதும் வழக்கத்தில் உண்டு.
மௌலித் ஓதக்கூடாதென்று கூறுவோர் கூட இவ்வாறான விழாக்கள் நடத்துவதும் அதில் கதாநாயகர்களாகக் கலந்து கொள்வதும் விழாக்களுக்கு நிதியுதவி வழங்குவதும் வழக்கத்தில் உண்டு.
மௌலித் என்பதற்கு நான் மேலே சொன்ன விளக்கத்தின் படியும் வரைவிலக்கணத்தின்படியும் இது தமிழில் விழா என்று சொல்லப்பட்டாலும் கூடஇது மௌலித் என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.
தமிழ் மொழியில் மௌலித் ஓதலாமென்றால் – ஒருவரைப் புகழலாமென்றால் அறபு மொழியிலும் ஓதலாமல்லவா புகழலாமல்லவா?
தொன்று தொட்டு மேற்கண்ட விழாக்கள் நடைபெற்றேவருகின்றன. இவை கூடாதென்றோ பித்அத் என்றோ எவரும் குரல் கொடுப்பதுமில்லை. கொடி தூக்குவதுமில்லை. குண்டுகள் குண்டாந்தடிகளுடன் சென்று மேடையை உடைப்பதுமில்லை. கூட்டத்தைக் கலைப்பதுமில்லை. பொதுவாக இது சர்ச்சைக்குரிய விடயமாக கருதப்படுவதே இல்லை. ஆனால் இந்த அம்சங்கள் கொண்ட ஒருவிழா மௌலித் என்ற பெயரில் அறபு மொழியில் நடைபெறும்போது அது “ஷிர்க்“ என்றும் “பித்அத்“ என்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்என்றும் குரல் கொடுக்கப்படுகிறது. கொடியும் தூக்கப்படுகிறது. பலாத்காரமாக நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் பள்ளிவாயல்கள், தர்ஹாக்கள், சியாறங்கள், மத்ரசஹ்கள் உடைக்கப்படுகின்றன. இத்தகைய வன்செயல் காத்தான்குடியில் மட்டும் நடைபெறுவது விந்தைக்கும் வேதனைக்குமுரியதாகும். காத்தநகர் வாசிகள் மிக நல்லவர்கள்.
ஓர் அரசியல்வாதிக்கும் ஓர் அறிஞனுக்கும் ஒரு வீரனுக்கும் ஒரு மார்க்க அறிஞனுக்கும் மேற்கண்ட அமைப்பில் விழா எடுப்பது ஆகுமென்றால் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகிய நான்கு துறைகளிலும் ஆழ்ந்த ஞானம் பெற்று நப்ஸ் என்ற மனவெழுச்சியுடன போராடி,அதன் கொட்டத்தை அடக்கி,இராப்பகலாய் கண்விழித்து இறைதியானம் செய்து “விலாயத்“ என்ற ஒலித்தனம் அல்லது “நுபுவ்வத்” என்ற நபித்துவம் பெற்ற மகான்களுக்கு விழா எடுப்பது எங்கனம் தவறாகும்? எந்த வகையில் ஷரீஅத்துக்கு முரணாகும். சிந்தனை செய்துபார்.
இப்பொழுது ஓரளவு விளங்கியிருப்பாயென்று நம்புகிறேன். இனி நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்தல் தொடர்பாக திருக்குர்ஆனில் இருந்தும் நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரம் தருகிறேன்.
திருக்குர்ஆனில் பல இடங்களில் 25 நபீமாரின் வாழ்கை வரலாறுகளை அல்லாஹ் கூறியுள்ளான். அவர்களைப் புகழ்ந்துள்ளான். அவர்கள் செய்த சேவைகளை எடுத்தியம்பியுள்ளான். அவர்களின் நற் குணங்களை விபரித்துள்ளான்.
எனவே ஒருவரைப்புகழலாம். அவரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துரைக்கலாம். அவரின் சேவையை பாராட்டலாம். என்பதற்கு திருக்குர்ஆன் தரும்ஆதாரத்தை விட வேறு ஆதாரம் தேவைதானா?
“மௌலித்“ என்பதற்கு நான் கூறிய வரைவிலக்கணப்படி திருக்குர்ஆன் கூட ஒரு மௌலித் என்று சொல்ல முடியுமல்லவா? திருக்குர்ஆன் உரைநடையிலுள்ளது. அவ்வளவுதான். ஒரு விடயத்தை உரைநடையில் கூறுவது ஆகுமென்றால் அதைப்பாடலில் கூறுவதும் ஆகுமானதே.
(தொடரும்……)