Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 04

பித்அத் எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களில் அநேகர், அல்லது அனைவரும் ”பித்அத்” செய்கின்ற வழிகேடர்களென்று கொள்ளவேண்டும். ஏனெனில் நபீஸல் அவர்களின் காலத்தில் ஒட்டகம், கழுதை, குதிரை போன்றவற்றிலேயே பயணம் செய்யப்பட்டது. விமானம், புகையிரதம்,கார், பஸ், மிதிவண்டி, மோட்டார்சைக்கிள் போன்றவை அவர்களின்பின் ஏற்படுத்தப்பட்டவையாகும். ஆகையால் இவற்றில் பயணம் செய்வது ”பித்அத்” என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீ சொல்வதுபோல் பித்அத் வழிகேடென்றால் மேற்கண்டவற்றில் பயணம்செய்யும் அனைவரும் வழிகேடர்களாகிவிடுவார்களல்லவா? ஒருவரா? இருவரா? உலகில் வாழும் முஸ்லிம்கள் யாவரும் வழிகேடர்களாகி விடுவார்களே! ஸுப்ஹானல்லாஹ்! இக்காலத்தை பொறுத்தவரை இவற்றில் பயணம் செய்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். நீ இவ்வாறு பயணம் செய்கிறாய்? உனது வழிகாட்டி இந்திய முஜத்தித் எவ்வாறு பயணம் செய்கிறார்? சிந்தி. நீ ”சிந்தீகா” ய் விடாதே. 
 

நபீ ஸல் அவர்களின் காலத்தில் குர்ஆன் பாடசாலை, அறபுக்கல்லூரி, பல்கலைக்கழகம் என்பன இருக்கவில்லை. இவை அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவையாகும். இவையாவும் “பித்அத்” என்பதில் சந்தேகமில்லை. இவற்றை ஏற்படுத்தினவர்கள் மார்க்க அறிஞர்களேயாவார். இவற்றில் கல்வி கற்றுக் கொடுப்பவர்களும் மார்க்க அறிஞர்களே! நீ சொல்வது போல் பித்அத் எல்லாம் வழிகேடென்றால் இவையெல்லாம் வழிகேடல்லவா? இவற்றை செய்பவர்களும் வழிகேடர்களல்லவா? இவ்வாறான “பித்அத்” செய்யாமல் இக்காலத்தை பொறுத்தவரையில் மக்களுக்கு எவ்வாறு கல்வி ஞானம் கொடுக்க முடியும்? 

 
நபீ ஸல் அவர்களின் காலத்தில் இக்கால வீடுகள் போன்ற வீடுகள் இருக்கவில்லை. பெட்றூம், பாத்றூம், கிச்சன், டைனிங் ஹோல், பெல்கனி, விஸிடர்ஸ் றூம் என்ற பெயர்களிலும் அமைப்புக்களிலும் வீடுகள் இருக்கவில்லை. இக்கால வீடுகள் அழகுப் பொருட்களால் அலங்கரிக்கப்படுவது போல் அக்கால வீடுகள் அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை. நீ சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் இவ்வாறு வீடுகட்டுபவர்களும், அலங்கரிப்பவர்களும் வழிகேடர்களாகிவிடுவார்களல்லவா? 
 
உன் கூற்றின் படி “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு வீதமான முஸ்லிம்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். இவ்வாறு முடிவு செய்து உலக முஸ்லிம்களை வழிகேடர்களாக்குவது பெருங்குற்றம் ஆகையால்.. كل بدعةضلالة பித்அத் எல்லாம் வழிகேடு என்ற நபீஸல் அவர்களின் அந்தவசனத்துக்கு வலிந்துரை கொண்டு பொருள் கொள்ளவேண்டும். அந்த வலிந்துரை திருக்குர்ஆனுக்கோ, நபீமொழிக்கோ, இஸ்லாமிய அகீதஹ் கொள்கைக்கோ முரணானதாக இருக்கக்கூடாது. எவ்வாறு வலிந்துரை கொள்ளவேண்டுமென்பதையும், பித்அத்தின் வகைகளையும் பின்னர் சொல்கிறேன். 
 
எல்லா பித்அத்தும் வழிகேடென்றால் நூல்கள் – கிதாபுகள் எழுதி புத்தகவடிவில் அமைப்பதும் வழிகேடேயாகும். ஏனெனில் நபீஸல் அவர்களின் காலத்தில் இந்த அமைப்பு இருக்கவில்லை. நீ சொல்வதுபோல் ”பித்அத்” எல்லாம் வழிகேடென்றால் உலகில் தோன்றிய அறிஞர்களில் அநேகர் ”பித்அத்’’ செய்த வழிகேடர்களென்று முடிவு செய்யவேண்டும்.இதேபோல் ”பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக்கொண்டால் புனிதப் போர் ”ஜிஹாத்” செய்வதாயினும் அம்பு, வில், வாள்போன்றவை கொண்டே யுத்தம் செய்யவேண்டும். நவீன ஆயுதங்கள் கொண்டு யுத்தம் செய்யக்கூடாது.அது வழிகேடாகிவிடும். நபீஸல் அவர்களின் காலத்தில் நவீன ஆயுதம் எதுவும் இருக்கவில்லை. இக்காலத்தில் யஹூதிகள் நவீன ஆயுதங்களால் முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும் தாக்கும்போது அவர்கள் அம்பையும், வில்லையும், வாளையும் வைத்திருந்து என்ன பயன்? 
 
மூதேவி: நபீஸல் அவர்களின் காலத்தின் பிறகு நபீ தோழர்கள் செய்த ”பித்அத்” துகளில் சிலதைக் கூறு பாரக்கலாம். 
 
சீதேவி: பல விடயங்கள் இருக்கின்றன. நீ விளங்கிக் கொள்ளவேண்டுமென்பதற்காக அவற்றில் சிலதை மட்டும் கூறுகிறேன். 
 
நபீயவர்களின் காலத்தில் ”தறாவீஹ்” தொழுகை ஜமாஅத்தாக- கூட்டமாகத் தொழப்படவில்லை. தோழர்கள் தனித்தனியாகவே தொழுது வந்தார்கள். நபீயவர்களின்மறைவுக்குப் பின் ஓர் இரவு உமர்றழி அவர்கள் மதீனஹ் பள்ளிவாயலில் பிரவேசித்தபோது தோழர்கள் தனித்தனியாக தொழுது கொண்டிருந்ததை கண்ட உமர்றழி அவர்கள் இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின்கீழ் ஒன்று சேர்த்தால்சிறந்தது என்று கூறிவிட்டு நபீதோழர் உபய்யிப்னு கஃப்ற ழி அவர்களை ”இமாம்” ஆக நியமித்து தறாவீஹ் தொழுகையை கூட்டமாக நடாத்த ஏற்பாடு செய்தார்கள். மறுநாளிரவு உமர்றழி அவர்கள் பள்ளிவாயலுக்குள் பிரவேசித்தபோது அனைவரும் ஓர் இமாமின் பின்னால் கூட்டமாக தொழுது கொண்டிருந்ததைக் கண்டு “نعمت البدعة هذه இது நல்லபித்அத்” என்று கூறிபுகழ்ந்தார்கள். 
அறிவிப்பு அப்துர்றஹ்மான் இப்னு அப்துல்காரீ 
ஆதாரம்- புஹாரிபக்கம் -252 பாகம் -08 
 
இது இரண்டாவது கலீபஹ் உமர் றழி அவர்கள் செய்த பித்அத் 
ஆகும்.அவர்கள் ”நிஃமதில் பித்அது” நல்லபித்அத் என்ற சொல்லை பயன்படுத்தியதிலிருந்து பித்அத் என்பதில் நல்லது முண்டு என்ற உண்மை தெளிவாகிறது. 
 
நபீயவர்களின் காலத்தில் திருக்குர்ஆன் அதை மனனம் செய்தவர்களின் மனதில் மட்டுமே இருந்தது. நபீயவர்களின் மறைவுக்குப்பின் அதை ஒன்று சேர்க்கவேண்டிய அவசியமும் ஏடுகளில் எழுதிவைக்கவேண்டிய அவசியமும்ஏற்பட்டது. இப்பணியை முதலாம் இரண்டாம் கலீபஹ்களும் நபீ தோழர் செய்த் றழி அவர்களும் செய்துமுடித்தார்கள். இது நபீ தோழர்கள் செய்தபித்அத் ஆகும். 
 
மூதேவி: நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நபீயவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகைஜமாஅத்தாக தொழப்பட்டதாகச் சொல்கிறார்களே! இதன் விபரம் என்ன? 
 
சீதேவி: தறாவீஹ் தொழுகை அவ்வாறு தொழப்படவில்லை. அவ்வாறு யாராவது சொன்னால் அதுசரியானதகவல் அல்ல.ஆயிஷாநாயகி றழி அவர்கள் அறிவித்ததாக புஹாரீ 8ம் பாகம் 252ம் பக்கத்தில் ஒரு ஹதீத் வந்துள்ளது. இதற்குரிய விளக்கம் வேறு விரிவையஞ்சி சொல்லவில்லை. ஆயினும் உமர்றழி அவர்கள்தான் ”தறாவீஹ்” தொழுகையை கூட்டமாகத் தொழுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். என்பதே சரியான முடிவு. ஏனெனில் நபீயவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகை கூட்டாகத் தொழப்பட்டிருந்தால் அது அவர்களின் கட்டளைப்படியே நடந்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் அது தொடராக நடந்துவந்தே இருக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருக்காது. அதோடு ”பித்அத்” என்ற சொல்லையும் அவர்கள் பயன்படுத்திருக்கத் தேவையில்லை. உமர்றழி அவர்கள் புதிதாகத் தொடங்கியதினால்தான் ”பித்அத்” என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள். 
 
மூதேவி: உமர்றழி அவர்கள் இது நல்ல ”பித்அத்” என்று கூறியதிலிருந்து ”பித்அத்” தில் நல்லதும் இருப்பது போல் விளங்குகிறதே! இதன் விபரம் என்ன? 
 
சீதேவி: ஆம் ”பித்அத்” என்பதில் நல்லது முண்டு. கெட்டது முண்டு. ”புகஹாஉ” எனும் சட்டமேதைகள் ”பித்அத்” என்பதை ஐந்து வகைகளாகப் பிரித்துக் கூறியுள்ளார்கள். அவர்கள் தமது கண்களை மூடிக்கொண்டும், மூளைக்கு மூடிபோட்டுக் கொண்டும் அவ்வாறு பிரிக்கவில்லை. மிக நுட்பமாகவும், ஆழமாகவும் ஆராய்ந்த பின்னரே அவ்வாறு செய்துள்ளார்கள். 
 
மூதேவி: அவை எவை? ஒவ்வொன்றையும் உதாரணத்துடன் கூறுவாயா? 
 
சீதேவி: அவை ஐந்து வகைப்படும் 
 
ஒன்று – “பித்அத்துன் முஹர்றமதுன்” ஹறாமாக்கப்பட்ட ‘பித்அத்”. இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். செய்வது குற்றம். கதரிய்யஹ்களின் மத்ஹப் போன்றும், எந்த ஒரு மார்க்க ரீதியான நன்மையிம் தராத ஷரீஅத்துக்கு விரோதமான புதிதாக உண்டாக்கப்பட்டது போன்றும். 
 
இரண்டு – “பித்அத்துன் வாஜிபதுன்” கட்டாயம் செய்ய வேண்டிய “பித்அத்” செய்யாவிட்டால் குற்றம் கிடைக்கும், திருக்குர்ஆனையும், நபீ மொழியையும் ஆராயும் ஒருவன் சொல்லிலக்கணம், மொழியிலக்கணம் கற்றுக் கொள்ளுதல் போன்று. 
 
மூன்று – “பித்அத்துன் மன்தூபதுன்” ஸுன்னத் ஆன பித்அத் செய்தால் நன்மையுண்டு. செய்யாவிட்டால் தண்டனை இல்லை. பாடசாலைகள், கல்லூரிகள் கட்டுதல் போன்று. 
 
நான்கு –“பித்அத்துன் மக்றூஹதுன்” வெறுக்கப்பட்ட பித்அத். பள்ளிவாயல்களை அலங்கரிப்பது போன்று செய்தால் தண்டனையில்லாவிட்டாலும் செய்யாமல் விடுதல் சிறந்தது. 
 
ஐந்து – “பித்அத்துன் முபாஹதுன்” ஆகுமாக்கப்பட்ட பித்அத். செய்வதும், செய்யாமல் விடுவதும் சமம். 
 
இந்த விபரத்தை சட்ட மேதைகளில் அநேகர் சொல்லியுள்ளார்கள். குறிப்பாக அல் இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம் றஹ், இமாம் நவவீ றஹ், இமாம் இப்னுல் அதீர் றஹ் ஆகியோர்கூறியுள்ளார்கள். 
 
மூதேவி: இவ்வாறு பிரித்தல் அவசியம்தானா? பிரிக்காமல் விட்டால் என்ன? 
 
சீதேவி: இதற்கான பதிலை ஏற்கனவே சொல்லிவிட்டேன். நீ கேட்பது போல் பிரிக்காமல் மொத்தமாக எல்லா பித்அத்துகளும் வழிகேடு என்று கொண்டால் நல்வழி பெற்ற நபீதோழர்களும், நானும், நீயும், உலகிலுள்ள முஸ்லிம்களில் அநேகரும் வழிகேடர்கள் என்று கொள்ளவேண்டிவரும். ஆகையால் பித்அத் என்பதை ஐந்தாகப்பிரிக்கவும் வேண்டும். ”குல்லுபித்அத்தின்” என்ற நபீஸல் அவர்களின் வசனத்துக்கு ”முஹர்றமதின்” என்ற ஒரு சொல்லை வலிந்துரையாகக் கொண்டு ”குல்லு பித்அதின் முஹர்றமதின்” ஹறாமாக்கப்பட்ட பித்அத் எல்லாம் வழிகேடு என்று பொருள் கொள்ளவும் வேண்டும். இப்போது நான் சொன்ன விளக்கத்தின்படி மௌலித் ஓதுதல் பித்அத் என்றுவைத்துக் கொண்டாலும் கூட அது ஹறாமாக்கப்பட்ட பித்அத்தில் சேரவுமாட்டாது. வழிகேடாகவுமாட்டாது. 
 
மூதேவி: நீ பித்அத் தொடர்பாக சொன்ன விளக்கத்திலிருந்தும், பித்அத் எல்லாம்வழிகேடு என்று நபீமொழிக்குக்கூறிக்காட்டிய விளக்கத்திலிருந்தும் மௌலித் ஓதுதல் கெட்ட பித்அத்தில் சேராது என்பதை விளங்கிக் கொண்டேன். இ்ன்னும் ஒரு கேள்விகேட்கிறேன். பதில் தருவாயா? மௌலித் ஓதுவதன் இலட்சியம், குறிக்கோள் என்ன? 
 
சீதேவி: யாரை நினைவுபடுத்தி மௌலித் ஓதப்படுகிறதோ அவரைக் கௌரவிப்பதும், கண்ணியப்படுத்துவதுமே மௌலித் ஓதுவதன் குறிக்கோளாகும். 
 
மூதேவி: ஒருவரை கௌரவிப்பதற்கும், கண்ணியப்படுத்துவதற்கும் திருக்குர்ஆனில் ஆதாரம்உண்டா? 
 
சீதேவி: ஆம் உண்டு. 
ومن يعظم شعائر الله فانها من تقوى القلوب 
 
எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுடைய இருதய பரிசுத்தத்தன்மையை அறிவிக்கும். உள்ளத்திலுள்ள இறையச்சத்தைக் காட்டும். 
ஸுறதுல் ஹஜ், வசனம் 32 
 
இத்திருவசனத்தின் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தல் இறையச்சத்தைச் சேர்ந்ததாகும் என்பதாகும். அல்லாஹ்வின் சின்னங்கள் எவை என்பதை முதலில் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்கள்என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது கருத்திற்கொள்ளப்படவேண்டும். 
 
இன்னொரு வசனத்தில் ஒட்டகங்களைக் குறிப்பிட்டு அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 
والبد ن جعلناها لكم من شعائرالله 
 
ஒட்டகங்கள் உங்களுக்காக உண்டாக்கப்பட்ட அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும். 
ஸுரதுல் ஹஜ்,வசனம்-36 
 
இன்னுமொரு வசனத்தில் ”ஸபா” என்ற இடத்தையும், ”மர்வஹ்” என்ற இடத்தையும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 
 
إن الصفا والمروة من شعائرالله 
 
நிச்சயமாக ஸபாவும், மர்வஹ்வும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும். 
ஸுரதுல் பகறஹ், வசனம் -158 
 
அல்லாஹ்வின் சின்னங்கள் என்பன மேற்கண்ட இரண்டுவசனங்களிலும் கூறப்பட்டவைமட்டு மல்ல.ஒட்டகம்,ஸபா,மர்வஹ், என்பன தெளிவாகக் கூறப்பட்டிருந்தாலும் ஸுரதுல் ஹஜ்-ஹஜ் அத்தியாயத்தில் பொதுவாகச் சொல்லப்பட்டிருப்பது போல்எதெல்லாம் அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அதெல்லாம் அல்லாஹ்வின் சின்னங்களாகும். 
 
உதாரணமாக: பள்ளிவாயல், மத்ரஸஹ், அவ்லியாஉகளின் சமாதி, கஃபதுல்லாஹ், இஸ்லாமிய மதப்பெரியார் ,திருக்குர்ஆன், மார்க்க நூல் என்பன போன்று. மேற்கண்ட இவற்றைக்காணும் போது அல்லாஹ்வின் நினைவு நிச்சயமாக வருமென்பதில் ஐயமில்லை. ஆகையால் அல்லாஹ்வின் நினைவைத் தருகின்ற அவனின் சின்னங்களான இவற்றைக் கண்ணியப்படுத்துதல் வேண்டும். பள்ளிவாயலைக் கண்ணியப்படுத்துதல் என்பது அங்குதொழுதல், அதைச்சுத்தமாக வைத்திருத்தல், அங்கு வீண்பேச்சுக்கள் பேசாதிருத்தல்,சண்டை அடிதடி போன்றவற்றில் ஈடுபடாதிருத்தல், அங்கு மலசலம் கழிக்காதிருத்தல் போன்றவற்றைக் குறிக்கும். 
 
மத்ரஸஹ்வை கண்ணியப்படுத்துதல் என்பது அங்கு கல்வி கற்றுக்கொடுத்தல், கற்றுக்கொள்ளுதல், அதைச் சுத்தமாகவைத்திருத்தல், மார்க்கத்துக்கு முரணான செயல்களை அங்கு செய்யாதிருத்தல் போன்றவற்றைக் குறிக்கும். அவ்லியாஉகளின் சமாதியைக் கண்ணியப்படுத்துதல் என்பது அங்கு சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லுதல், திருக்குர்ஆன், ஸலவாத் போன்றவற்றை ஓதி அதன்நன்மையை அவர்களுக்கு ஈஸால்-சேர்த்துவைத்தல், அவ்விடத்தை மலசலம்கழித்து அசுத்தமாக்காதிருத்தல், அவ்விடம் இருளடையாம ல்விளக்கேற்றிவைத்தல், அவர்களின் சமாதிக்குப் போர்வை போர்த்துதல், அவர்களின் சமாதிக்கு சுஜுத் செய்யாமல் அதை முத்தமிடுதல் போன்றவற்றைக் குறிக்கும். கஃபதுல்லாஹ்வை கண்ணியப்படுத்துதல் என்பது அதைத் தவாப்செய்தல், அதைச்சுத்தமாக வைத்திருத்தல், அதைமுன்னோக்கித் தொழுதல், அதில்ப திக்கப்பட்டுள்ள ஹஜருல்அஸ்வத் என்ற கல்லைமுத்தமிடுதல் போன்றவற்றைக்குறிக்கும். இஸ்லாமிய மதப்பெரியார்களைக் கண்ணியப்படுத்துதல் என்பது அவர்களின் சொற்கேட்டு நடத்தல், அவர்களிடமிருந்து அறிவுஞானங்களைக் கற்றுக்கொள்ளுதல், அவர்களைக் காணும் போது எழுந்துநிற்றல், அவர்களின் கையை முத்தமிடுதல் போன்றவற்றைக் குறிக்கும். திருக்குர்ஆனைக் கண்ணியப்படுத்துதல் என்பது அதை ஓதுதல், அதில் கூறப்பட்டவாறு வாழ்தல், அதை முத்தமிடுதல், அதைத்தரையில் வைக்காமல் உயரமான இடத்தில்வைத்தல் போன்றவற்றைக் குறிக்கும். மார்க்க நுால்களைக் கண்ணியப்படுத்துதல் என்பதும் இவ்வாறுதான். 
 
மேலே சொல்லப்பட்டயாவும் ”ஷஆயிருல்லாஹ்” அல்லாஹ்வின் சின்னங்கள் எனப்படும். இவற்றை ஒருவன் காணும்போது அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு நிச்சயமாக வருமாதலால் திருவசனத்தில் கூறப்பட்டபடி அவன் இவற்றைக் கண்ணியப்படுத்துதல் வேண்டும். 
 
மேலே குறிப்பிட்ட ஒட்டகங்கள் உங்களுக்காக உண்டாக்கப்பட்ட அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை என்ற வசனத்தில் அவற்றைக் கண்ணியப்படுத்துதல் என்பது எல்லா ஒட்டகங்களுக்கும் பொருத்தமானதல்ல. 
 
மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட ஒட்டகங்கள் ஹஜ்ஜின் போது குர்பான் செய்வதற்கென் றுவிடப்பட்ட ஒட்டகங்களை மட்டுமே குறிக்கும்.இவ்ஒட்டகங்கள் மட்டுமே அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களாகும். அவை அல்லாஹ்வின் சின்னங்கள் என்ற வகையில் அவற்றை கண்ணியப்படுத்துதல் வேண்டும்.அவற்றைக் கண்ணியப்படுத்துதல் என்பது அவற்றுக்கு அடிக்காதிருத்தல், அவற்றை பட்டினி பசியில் போடாதிருத்தல், அவற்றை ஏனைய சாதாரண ஒட்டகங்களுடன் மேயவிடாமல் அவற்றைத் தனியாக மேயவிடுதல், அவற்றின் மீது சுமைகளை ஏற்றாதிருத்தல் போன்றவற்றைக் குறிக்கும். 
 
மக்கஹ்வில் உள்ள ஸபா, மர்வஹ் என்ற இரண்டு மலைகளும் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களாகயிருப்பதால் அவையும் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவையேயாகும். 
 
இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் அவ்லியாஉகளையும், அன்பியாஉகளையும் கண்ணியப்படுத்துவேதேயாகும். 
 
தொடரும்)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments