Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 05 

நபிய்யுல்லாஹ் அல்லது வலிய்யுல்லாஹ் என்பவர்கள் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களேயாவர். இவர்களை நினைக்கும்போது அல்லாஹ்வின் நினைவுவருமேயன்றி ஷெய்தான், இப்லீஸ், பிர்அவ்ன், தஜ்ஜால், அபூஜஹ்ல், போன்றோரின் நினைவு ஒருபோதும் ஒருவருக்கும் வரமாட்டாது. நபீமார், வலீமார் ஆகியோரைப் புகழ்வதும் அவர்களின் வாழ்கை வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதும், அவர்கள் பெயரால் அன்னதானம் வழங்குவதும், பொதுவாக மௌலித் ஓதுவதும் அவர்களை கண்ணியப்படுத்துவதாகவே அமையும்.

அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துவது அவற்றை வணங்குவதாக ஆகமாட்டாது. ஏனெனில் இபாதத்- வணக்கம் என்பது வேறு. தஃளீம் – கண்ணியப்படுத்துதல் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. மேற்கண்ட திருவசனங்களில் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துமாறுதான் அல்லாஹ் கூறியுள்ளானே தவிர அவற்றை வணங்குமாறு கூறவில்லை. 

ஒரு வலிய்யுல்லாஹ்வின் பெயரால் அல்லது ஒரு நபிய்யுல்லாஹ்வின் பெயரால் மௌலித் ஓதுவது அவர்களைக் கண்ணியப்படுத்துவதாகுமேயன்றி அவர்களை வணங்குவதாக ஆகாது. ஒரு வலிய்யுல்லாஹ்வின் அல்லது ஒருநபிய்யுல்லாஹ்வின் சமாதிக்கு முன்னால் கைகட்டிநிற்பதும் அதை முத்தமிடுவதும் அதன்மேல் போர்வை போர்த்துவதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அவர்களை வணங்குவதாக ஆகாது. திருக்குர்ஆனை முத்தமிடுவது அதைக் கண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அதை வணங்குவதாக ஆகாது. 

ஓர் அசிரியருக்கு எழுந்து கைகட்டிநிற்பது அவரைக் கண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அவரை வணங்குவதாக ஆகாது. ஒருஷெய்கு-ஞானகுருவின் கைகால்களை முத்தமிடுவது அவரைகண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அவரை வணங்குவதாகஆகாது, எனவே இபாதத் – வணக்கம் என்பதற்கும், தஃளீம் – கண்ணியப்படுத்துதல் என்பதற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். தெரிந்துகொண்டால் ஒரு சிருட்டியை வணங்குவதுதான் தவறேயன்றி அதைக் கண்ணியப்படுத்துதல் எந்தவகையிலும் தவறாகாதென்ற உண்மை தெளிவாகும்.

ஒருவன் ஒருசிருட்டியை அல்லாஹ் என்றுநம்பிக்கொண்டு அதற்கு ஸுஜுத்செய்தால் அல்லது அதற்கு முன்னால் றுகூஉசெய்தால், அல்லது அதற்கு முன்னால் கைகட்டிநின்றால், அல்லது அதனிடம் ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறுகேட்டால் அவன் “முஷ்ரிக்” – என்ற இணைவைத்தவனாகிவிடுவான் இவ்வாறு செய்தால் மட்டுமே “ஷிர்க்” என்ற இணைவைத்தல் உண்டாகும். இதுவே இபாதத் – வணக்கம் என்றும் சொல்லப்படும். இதற்குமாறாக ஒருவன் சிருஷ்டியை சிருட்டி என்று நம்பிக்கொண்டு அதற்கு முன்னால் கைகட்டி நின்றால், அல்லது அதனிடம் ஒரு தேவையை நிறைவேற்றித்தருமாறு கேட்டால் அவன் முஷ்ரிக் இணைவைத்தவனாக ஆகமாட்டான். இவ்வாறு செய்தல் ஷிர்க் என்ற .இணையை ஏற்படுத்தமாட்டாது. இதுவே தஃளீம் – கண்ணியப்படுத்துதல் என்று சொல்லப்படும். 

ஆனால் ஒரு சிருஷ்யை அல்லாஹ் என்று நம்பாமல் அதை சிருட்டி என்றுநம்பிக்கொண்டு அதற்கு சுஜுத் செய்தல், ருகூஉசெய்தல் இரண்டும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அறிஞர்களுக்கு கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட இவ்விரண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு வலியின் அல்லது ஒரு நபியின் சமாதிக்கு முன்னால் கைகட்டிநிற்கும் ஒரு முஸ்லிம் அவரை அல்லாஹ்வின் சிருட்டி என்றுநம்பிக் கொண்டுதான் நிற்கின்றானேயன்றி அவரை அல்லாஹ் என்று நம்பிக்கொண்டு நிற்பதில்லை. இதற்கு ஆதாரம் அவன் முஸ்லிமாய் இருப்பதும், அவன் அவரை அழைக்கும்போது யாவலிய்யல்லாஹ், யாநபிய்யல்லாஹ் என்று அழைப்பதுமேயாகும். 

ஒரு வலியின் அல்லது ஒரு நபியின் சமாதியை முத்தமிடும் ஒரு முஸ்லிமி்ன் நம்பிக்கையும், அதன் மேல் மலர்தூவும் முஸ்லிமின் நம்பிக்கையும் இவ்வாறுதான் இருக்கிறது. நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீத்பாதுஷா றஹ் அவர்களின் சமாதிக்கு முன்னால் நிற்கும் ஒரு முஸ்லிம் யாஷாஹல் ஹமீத் என்று அழைக்கின்றானேயன்றி யாஅல்லாஹ் என்று அவர்களை அழைப்பதில்லை. இவ்வாறுதான் ஏனைய வலீமார்களின் சமாதிக்கு முன்னால் நின்று அவர்களை அழைக்கும் முஸ்லிமின் நிலையுமாகும். 

எனவே நபீமார், வலீமார்களின் சமாதிகளைத் தரிசிக்கும் முஸ்லிம்கள், யாவரும் அவர்களை அல்லாஹ் என்று நம்பாமல் அல்லாஹ்வின் அருள்பெற்ற அவனின் சிருட்டிகள் என்ற நம்பிக்கையுடையவர்களாயிருப்பதால் அவர்களிடம் தேவைகளைக் கேட்பது கொண்டோ, மலர்தூவுவது கொண்டோ போர்வை போர்த்துவது கொண்டோ அவர்கள் முஷ்ரிக் – இணை வைத்தவர்களாகவோ, பாவிகளாகவோ ஆகிவிடமாட்டார்கள்.

ஒருவன் நபீமார், வலீமார்களிடம் தனது தேவையை நிறைவேற்றித்தருமாறு நேரடியாகக் கேட்பது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது ஆகுமென்பதே சரியான ஆய்வின் தீர்க்கமான முடிவாகும்.

அல்லாஹ்வின் சி்ன்னங்களைக் கண்ணியப்படுத்துதல் தொடர்பாக வந்துள்ள திருக்குர்ஆன் வசனங்களின்படி நபீமார்களும், வலீமார்களும் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களாயிருப்பதால் அவர்களின் வரலாறுகளைக் கூறும் மௌலித் ஓதுவதும், அன்னதானம்வழங்குவதும், மௌலித் ஓதப்படும் சபையை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அழகுபடுத்துவதும் அவர்களைக் கண்ணியப்படுத்தும் செயல்களேயன்றி ஷரீஅத்துக்கும் முரணானவையல்ல.

மூதேவி- ஒருவரை கௌரவிப்பதற்கும், கண்ணியப்படுத்துவதற்கும் திருக்குர்ஆனில் ஆதாரமுண்டா? என்ற என்னுடைய கேள்விக்கு விளக்கம் கூறிவிட்டாய். அல்ஹம்துலில்லாஹ். என்னுடைய கேள்விக்குஆ தாரமான நபீ மொழி உண்டா? 

சீதேவி- ஆம் “ மன்லம் யர்ஹம் ஸகீறனா வலம் யுவக்கிர் கபீறனா பலைஸ மின்னா ”சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர்களும், பெரியவர்களைக் கண்ணியப்படுத்தாதவர்களும் எங்களில் உள்ளவர்களல்லர் என்று நபீ ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த பொன்மொழி பெரியவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதிலிருந்து பெரியவர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்பதும், அவ்வாறு கண்ணியப்படுத்துவது “இபாதத்” வணக்கமாகாது என்பதும் தெளிவாகிறதல்லவா? திருவசனத்தில் “தஃளீம்” என்றசொல்லும், நபீமொழியில் “தவ்கீர்” என்ற சொல்லும் வந்துள்ளது. இவ்விரண்டுக்கும் கண்ணியம் செய்தல் என்ற ஒரேபொருள் என்பதையும் விளங்கிக்கொள். வயதில் முதிர்ந்த பெரியவர்களுக்குச் செய்யப்படும் கண்ணியம் இபாதத் வணக்கமாகாது.

மூதேவி- அல்லாஹ்வின் சின்னங்களையும், பெரியவர்களையும் கண்ணியப்படுத்தாவிட்டால் குற்றமா? என்ன தண்டனை? 

சீதேவி- ஆதம் அலை அவர்களுக்கு “ஸுஜுத்” செய்யுமாறு இப்லீஸ் என்பவனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டகதை உனக்குத் தெரியுமா? இது திருக்குர்ஆன் கூரும்ச ரிதம். ஸுஜுத் என்றால் பணிதல் . இப்லீஸ் ஆதமுக்குப் பணியவில்லை. அவருக்கு நான் பணிவதா? என்று பெருமை பேசினான். இதனால் அவன் காபிர்ஆனான். ஏன் காபிர்ஆனான் தெரியுமா? அவன் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியை கண்ணியம் செய்யவில்லை. இதுவே காரணம். நபிமார்களைத் ”தஃளீம்” கண்ணியம் செய்வது ”ஈமான்” நம்பிக்கையைச் சேர்ந்தது. அவர்களைத் ”தஹ்கீர்” தரைக்குறைவாக மதிப்பீடு செய்வது ”குப்ர்” நிராகரிப்பைச் சேர்ந்தது. அதனால்தான் அவன் காபிர் ஆகிவிட்டான் என்று அல்லாஹ் கூறினான். நபிமார் பட்டியலில் வலீமார்களையும் சேர்த்துப்பார். அவர்களை கண்ணியம் செய்வது விசுவாசமும், அவர்களைத் தரக்குறைவாக எடைபோடுவது நிராகரிப்புமாகும். குப்ர் வந்துவிடும் எச்சரிக்கையாக இருந்துகொள்.

மூதேவி- நீ இது வரைசொன்னதிலிருந்து மறைந்த நபிமார், வலீமார் பெயரில் மௌலித் ஓதுவது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துதல் என்ற நல்லகாரியம் என்பது தெளிவாகிவிட்டது. இன்னும் ஒரு கேள்வி ஒருநபியை அல்லது ஒரு வலீயை எந்தளவு கண்ணியம் செய்யவேண்டும்?

சீதேவி- சுருக்கச் சொன்னால் அவர்களை அல்லாஹ் என்று நம்பக்கூடாது. அவர்களை ”இபாதத்” வணங்கவும் கூடாது. இது தவிர அவர்களை எவ்வாறும் புகழலாம். எவ்வாறும் கண்ணியம் செய்யலாம்.

மூதேவி- அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது தொடர்பாக நீ விளக்கம் சொல்லும்போது அல்லாஹ்வின் சின்னங்களாக பள்ளிவாயல்கள், மையவாடிகள், மத்ரஸாக்கள், திக்ர்மண்டபங்கள், நல்லடியார்கள், ஸாலிஹான உலமாஉகள், அவர்களின் சமாதிகள் ஆகியவற்றுக்கு கண்ணியம் செய்வது ஒருபோதும் இபாதத் – வணக்கமாகாது என்றுசொன்னாய். ஏன் வணக்கமாகாது? பெரியோர்களின் கை, கால்களை முத்தமிடுவதும், சமாதிக்கு முன்னால் கைகட்டி நிற்பதும், சமாதியை முத்தமிடுவதும் வணக்கமாகாதா?

சீதேவி- கேள்வி என்றால் நல்ல கேள்விதான். ஆனால் நாமிருவரும் இப்போது கலந்துரையாடுவது மௌலித் ஓதலாமா? இல்லையா? என்பது பற்றிய விடயமாகும். இதற்கு விளக்கம் சொல்லத்தொடங்கினால் நேரம் நீண்டுவிடும் இருந்தாலும் நீ கேட்டதற்காக மிகச்சுருக்கமான ஒரு பதில் தருகிறேன். நீசிந்திக்கும் ஆற்றலுள்ளவனாயிந்தால் சற்று விரிவுபடுத்திச் சிந்தனை செய்துபார்.

”இபாதத்” வணக்கம் என்பதற்கும் “தஃளீம்” கண்ணியம் செய்தல் என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளாதவர்கள்தான் சமாதிகளுக்குச் செல்வோரை கப்றுவணங்கிகள் என்று சொல்கிறார்கள். ”இபாததுல்குபூர்” கப்றுகளைவணங்குதல்என்பதும் ”இபாததுல் அவ்லியாஇ” அவ்லியாஉகளை வணங்குதல் என்பதும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்ற விடயமாகும் ”தஃளீமுல் குபூர்” கப்றுகளை கண்ணியப்படுத்தல் என்பதும் ”தஃளீமுல் அவ்லியாஇ” அவ்லியாஉகளைக் கண்ணியப்படுத்துதல் என்பது இஸ்லாம் அனுமதித்தவிடயமாகும்.

சமாதியாயிருந்தாலும் அவ்லியாஉகளாயிருந்தாலும், வேறு எந்தப்பொருளாயிருந்தாலும் அது அல்லாஹ் போல் தனக்குத்தானே உண்டான சுயமானதென்று நம்பிககொண்டு அதற்கு முன்னால் கைகட்டிநின்றாலும் அது வணக்கம்தான். குனிந்து நின்றாலும் அது வணக்கம்தான். இந்த நம்பிக்கையுடன் அதனிடம் எதைக்கேட்டாலும் அதுதவறுதான். ஆனால் சமாதியாயினும் அவ்லியாஉகளாகினும் அல்லது வேறு எந்தப்பொருளாயினும் அது அல்லாஹ்வின் படைப்பு தனக்குத்தானே உண்டான சுயமானதல்ல என்ற நம்பிக்கையுடன் அதற்கு முன்னால் கைகட்டிநிற்பதும், குனிந்துநிற்பதும், வணக்கமாகமாட்டாது. இந்த நம்பிக்கையுடன் அதனிடம் எதைக்கேட்டாலும் தவறில்லை. சுருங்கச் சொன்னால் எந்தவொருவஸ்துவாகினும் அதை அல்லாஹ்வுக்கு நிகராக்கி அதற்கு கண்ணியம் செய்தல்வ ணக்கமாகிவிடும். அதனிடம் கேட்பதும் தவறாகிவிடும். அந்தவஸ்துவை அல்லாஹ்வுக்கு நிகராக்காமல் அதை அல்லாஹ்வின் படைப்பு என்று நம்பிக்கொண்டு அதற்கு கண்ணியம் செய்தல் ஒருபோதும் இபாதத்ஆகாது.

இதுவே வணக்கத்துக்கும், கண்ணியத்துக்கு முள்ளவேறுபாடாகும்.

அல்லாஹ் தன்னைக்காட்டும் சின்னங்களைக் கண்ணியப்படுத்துமாறு சொல்லியுள்ளானேயன்றி அவற்றை வணங்குமாறு சொல்லவில்லை. மேற்கண்ட வித்தியாசம் தெரியாதவர்களே சமாதிக்குச் செல்வோரை கப்றுவணங்கிகள் என்று இழிந்துரைக்கின்றார்கள்.

(உரையாடல் தொடரும்……)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments