தொடர் – 02
மூதேவி – நீ சொல்லும் விளக்கத்தைக் கேட்கும்போது “மௌலித்“ ஓதலாம் போல் தெரிகிறதே!
சீதேவி – ஒரு மனிதன் தனது வாழ்வில் பின்பற்றுவற்கு திருக்குர்ஆனை விட வேறு எது இருக்கிறது? திருக்குர்ஆன் ஓதுவதை யாராவது தடைசெய்வார்களா? செய்யத்தான் முடியுமா? “மௌலித்“ ஓதக்கூடாதென்று கூறுவோர் திருக்குர்ஆன் ஓதுவதையும் தடை செய்ய வேண்டுமே? செய்கிறார்களா? இப்போது செய்யா விட்டாலும் பின்னொரு காலத்தில் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன். பணமும் பதவியும் பலதும் செய்யும்.
நபீமார் வலீமார் நல்லடியார்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் புகழ்ந்துள்ளான் என்பதற்கான ஆதாரங்களை இப்போது தருகிறேன்.
01. அல்லாஹ்வும் அவனின் மலக்குகளும் நபீ (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்“ சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் இவர்கள் மீது ஸலவாத்தும் சலாமும் சொல்லுங்கள்.
(அல்குர்ஆன்,அத்தியாயம்- அஹ்சாப்,வசனம் – 56)
அல்லாஹ்வும் மலக்குகளும் “ஸலவாத்“ சொல்கிறார்கள் என்றால் அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் என்று சொல்கிறார்கள் என்பது கருத்தல்ல.
இமாம் பைழாவீ (றஹ்) அவர்கள் இதற்கு விளக்கம் எழுதுகையில் நபீ ஸல் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்துவதிலும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதிலும் கவனம் எடுக்கின்றார்கள் என்று கூறுயுள்ளார்கள்.
(ஆதாரம் – பைழாவீ, பக்கம் 562, தப்ஸீர் றாஸி)
இத்திருவசனத்தின் விரிவுரையில் இமாம் புஹாரி றஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். அபுல் ஆலியஹ் சொன்னார்கள். அல்லாஹ் நபி மீது ஸலவாத் சொல்வதென்றால் அவன் மலக்குகளிடம் அவர்களைப்புகழ்ந்து கூறுவதாகும். மலக்குகள் ஸலவாத் சொல்வதென்றால் நபி ஸல் அவர்களுக்காக துஆ- பிரார்த்தனை செய்வதாகும் என்று இப்னு அப்பாஸ் றழி அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்– புஹாரீ
பாகம் – 02 பக்கம் 707
02. உங்களுக்காக உங்களை நினைப்பதை உயர்த்தினோம்.
அல் குர்ஆன்
அத்தியாயம் – அஷ்ஷர்ஹ்,வசனம் – 04
இவ்வசனத்திற்கு விளக்கம் எழுதிய இமாம் குர்துபீ றஹ் அவர்கள் வானத்தில் மலக்குகளிடம் உங்களை நினைப்பதை உயர்த்தினோம். பூமியில் விசுவாசிகளிடம் உயர்த்தினோம். என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம் – குர்துபி,பக்கம் – 107,பாகம் – 20
இதுதொடர்பாக ஷெய்குல் இஸ்லாம் இமாம் றாஸீ றஹ் அவர்கள் கூறுகையில் உங்களைத் தொடர்பவர்களைக் கொண்டு நான் உலகை நிரப்புவேன். அவர்கள் அனைவரும் உங்களைப் புகழ்வார்கள். வாயலுக்கு அப்பால் நின்று உங்களுக்கு ஸலாம் சொல்வார்கள். உங்களின் றவ்ழஹ் சமாதியின் மண்கொண்டு அவர்களின் முகத்தை தடவிக் கொள்வார்கள். உங்களின் ஷபாஅத் பரிந்துரைப்பை ஆதரவு வைப்பார்கள். மறுமைநாள்வரை உங்களின் சிறப்பு நிலையானதாகும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆதாரம் – றாஸீ,பக்கம் – 05,பாகம் – 32
03. நிச்சயமாக நாங்கள் உங்களை சாட்சி சொல்பவராகவும் சுபச் செய்தி சொல்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம்.
நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டும் அவனின் தூதரைக் கொண்டும் விசுவாசம் கொள்வதற்காகவும் அவனின் தூதரை கண்ணியப்படுத்துவதற்காகவும் அவர்களை மரியாதை செய்வதற்காகவும் காலையும் மாலையும் அவர்களைத் துதிப்பதற்காகவும்.
அல்குர்ஆன் – அல்பத்ஹ்,வசனம் – 09
இத்திருவசனத்தில் காலையும் மாலையும் நபி ஸல் அவர்களைப் புகழ வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறியுள்ளான். இதன்படி வருடத்தில் ஒருதரம் அல்லது மாதத்தில் ஒருதரம் மௌலித் ஓதாமல் தினமும் காலையிலும் மாலையிலும் ஓதவேண்டுமென்பது தெளிவாகிறது. நபீ (ஸல்) அவர்களைப் புகழவேண்டுமென்பது விளங்குகின்றது.
நபீ ஸல் அவர்கள் ஸஹாபி ஹஸ்ஸான் அவர்களுக்கு பள்ளிவாயலில் ஒரு மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். அதில் அவர் தினமும் அமர்ந்து நபீ ஸல் அவர்கள் பரிசுத்த றூஹ்கொண்டு அல்லாஹ் ஹஸ்ஸானைப் பலப்படுத்துவானாக என்று பிரார்த்தனை செய்வார்கள்.
ஆதாரம் – புஹாரீ,மிஷ்காத் – பக்கம் – 410
நபீ ஸல் அவர்கள் தங்களைப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காக கவிஞர் ஹஸ்ஸான் றழி அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்ததிலிருந்து சில உண்மைகள் தெளிவாகின்றன.
ஒன்று – நபீ ஸல் அவர்கள் மீது மஹப்பத் – அன்பு கொண்டவர்கள் அவர்களைப் புகழ வேண்டும். அது அவர்களுக்கு விருப்பமானது.
இரண்டு – அவர்களின் புகழைப் பலர் கேட்க வேண்டும். தரையில் இருந்து அவர்களின் புகழைப்பாடுவதைவிட உயரமான ஓர் இடத்தில் இருந்து பாட வேண்டும்.அதுவே சிறந்தது. தரையில் இருந்து அவர்களின் புகழ் பாடினால் அதை ஒருசிலரால் மட்டுமே கேட்கமுடியும். ஆனால் மேடை போன்ற உயரமான இடத்தில் இருந்து பாடினால் அதை பலர் கேட்கலாம். இந்த அடிப்படையில் இக்காலத்தைப் பொருத்தவரை ஒலி பெருக்கியில் இவர்களின் புகழ்பாடுவது மேடை அமைத்துப் பாடுவதைவிடச்சிறந்ததென்பது தெளிவாகிறது.
நபீ தோழர்களிற் சிலர் ஓர் இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கு நபீ ஸல் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார்கள். அவர்களில் ஒருவர் அல்லாஹ் இப்றாஹீம் நபீ அலை அவர்களை கலீல் ஆக ஆக்கிக் கொண்டான் என்று சொன்னார். இன்னொருவர் அல்லாஹ் மூஸா அலை அவர்களுடன் பேசினான் என்றார். இன்னொருவர் அல்லாஹ் ஆதம் நபீ அவர்களைத் தேர்தெடுத்துள்ளான் என்றார். அப்போது நபீ ஸல் அவர்கள் நீங்கள் வியந்து பேசியதை நான் கேட்டேன். நீங்கள் பேசியது உண்மைதான். ஆனால் நானோ ஹபீபுல்லாஹ் இதில் எனக்கு பெருமை ஒன்றுமில்லை. மறுமை நாளில் “லிவாஉல் ஹம்த்“ என்ற கொடியை நானே சுமப்பேன். இதிலும் எனக்கு பெருமை ஒன்றுமில்லை. சுவர்க்கத்தின் வளையத்தை நானே முதலில் அசைப்பேன். இதிலும் எனக்கு பெருமைஒன்றுமில்லை. நான் முன்னோர்களிலும் பின்னோர்களிலும் மிகச் சங்கையுள்ளவன். இதிலும் எனக்குப் பெருமையில்லை என்று கூறினார்கள்.
ஆதாரம் – துர்முதீ, தாரமீ, மிஷ்காத்
பக்கம் – 513 பாகம் – 02
நபீ தோழர்கள் நபீ ஸல் அவர்களைப் புகழாமல் நபீ இப்றாஹீம் அலை, நபி மூஸா அலை, நபீ ஈஸா அலை, நபீ ஆதம் அலை ஆகியோரைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததை செவியுற்றபோது தாங்களே தங்களின் புகழையும் மகிமையையும் தோழர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இதிலிருந்து மற்றநபிமார்கள் புகழப்படுவது போல் தாங்களும் புகழப்பட வேண்டுமென்று நபீ ஸல் அவர்கள் விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது. ஒரு நபீயின் விருப்பத்தை நிறைவேற்றுவது அவர்களின் உம்மத்துகளின் கடமையாகும்.
ஈமான் – விசுவாசம் என்பது நபீ ஸல் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவது கொண்டும் பெற்றோர் பிள்ளைகள் அனைவரைவிடவும் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவது கொண்டுமேயன்றிச் சரிவர மாட்டாது. எவன் இதை நம்பவில்லையோ அல்லது இதற்கு மாறாக நம்பினானோ அவன் விசுவாசியல்லன்.
ஆதாரம் – ஷர்ஹ் முஸ்லிம்
பாகம் – 01 பக்கம் – 16
முஅவ்வித் உடைய மகள் றுபையிஉ என்பவர் பின்வருமாறு கூறுகிறார்.
ஒரு நாள் நபீ ஸல் அவர்கள் என்னிடம் வந்து விரிப்பில் அமர்ந்தார்கள். அந்நேரம் சில பெண்கள் “துப்“ தஹறா அடித்துக் கொண்டு “பத்ர்“ யுத்த நேரம் மரணித்த அவர்களின் தந்தைகளின் நற் பண்புகளைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் يعلم ما في غد وفينا نبي எங்களிடம் ஒரு நபீ இருக்கின்றார்கள். அவர்கள் நாளைய விடயத்தை இன்றே அறிவார்கள் என்றுபாடினார். இது கேட்ட நபீ ஸல் அவர்கள் இவ்வாறு சொல்லாமல் நீ்ங்கள் ஏற்கனவே சொன்னதைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
ஆதாரம் – புஹாரீ
பக்கம் – 570 வால்யூம் – 02
இந்த நபீ மொழி வந்துள்ள அந்நத்பு الندبஎன்ற சொல் மரணித்தவர்களின் நற்பண்புகளை எடுத்துக்கூறுவதைக் குறிக்கும்.
ஆதாரம் பத்ஹல் பாரீ
பக்கம் – 316 வால்யூம் – 07
அந்தப்பெண்க يعلم ما في غد وفينا نبي எங்களிடம் ஒரு நபீ இருக்கிறார்கள். அவர்கள் நாளையவிடயத்தை இன்றே அறிவார்கள் என்று சொன்ன போது நபீ ஸல் அவர்கள் இவ்வாறு சொல்லாமல் நீங்கள் ஏற்கனவே சொன்னதையே சொல்லுங்கள் என்று கூறியதிலிருந்து அந்தக் கருத்தை அவர்கள் மறுத்து விட்டார்கள் என்று புரிந்து கொண்டு நபீ ஸல் அவர்களுக்கு நாளைய விடயம் இன்று தெரியாதென்று கருத்துக் கொள்வது பிழையானதாகும். நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவும் அந்தப் பெண்கள் சொன்னதைத் தொடராகச் சொல்ல வேண்டுமென்பதற்காகவுமே அவ்வாறு சொன்னார்களென்று விளங்கிக் கொள்ளவேண்டும். ஏனெனில் நபீ ஸல் அவர்களுக்கு நாளைய விடயமும் தெரியும் இறுதி நாள் வரையுள்ள விடயமும் தெரியுமென்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவை ”மௌலித்“ என்று நாம் பேசி வருகின்ற இத்தலைப்புக்கு அப்பாற்பட்டதாகையால் விட்டு விட்டேன்.
மரணித்தவர்களின் நற்பண்புகளை “தகறா“ அடித்துக்கொண்டு எடுத்துக் கூறுவதற்கும் கவிகள் மூலம் பாடுவதற்கும் நபீ ஸல் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதை மேலே சொன்ன நபீ மொழி தெளிவாகக் கூறுகின்றது.
“பத்ர்“ யுத்தம் நேரம் மரணித்தவர்களின் நற்பண்புகளை “தகறா“ அடித்துக் கொண்டு கவிகள் மூலம் பாடுவதற்கு நபீ ஸல் அவர்கள் அனுமதி வழங்கியிருப்பது நபீமார்களினதும் அவ்லியாஉகளினதும் நற்பண்புகளையும் அவர்களின் வரலாறுகளையும் ஆகுமாக்கப்பட்ட இசையுடன் பாடலாம் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.
மௌலித் உடைய ஐந்து அம்சங்களில் மூன்றாவது அம்சம் பற்றி உனக்கு இதுவரை சொன்னேன். நான் சொன்ன விபரத்தின் மூலம் நபீமார் வலீமார் நல்லடியார்கள் உயிரோடிருக்கும் போது அவர்களைப் புகழலாம் அவர்கள் மரணித்த பிறகும் அவர்களைப் புகழலாம் என்பதையும் இது ஷரீஅத்துக்கு எந்த வகையிலும் முரணானதில்லை என்பதையும் நீ அறிந்து கொண்டாய்.
وكلا نقص عليك من انباء الرسل ما نثبت به فؤادك وجائك في هذه الحق وموعظة وذكرى للمومنين
“உங்கள் இருதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவையாவும் நாம் உங்களுக்கு கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும் நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன.”
திருக்குர்ஆன் – ஸூறது ஹுத்
வசனம் – 120
நபீ ஸல் அவர்களுக்கு முன் வாழ்ந்த தூதர்களின் வரலாறுகளை அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லிக் காட்டுவதன் மூலம் அவர்களின் மனம் திருப்திப்பட்டு சாந்தி பெறுவதுடன் விசுவாசிகளுடன் நினைவூட்டலும் படிப்பினைகளும் இருக்கின்றன. எனவே முன்னர் வாழ்ந்த தூதர்கள் வலீமார்கள் நல்லடியார்கள் ஆகியோர்களின் வரலாறுகளை மக்களுக்குச் சொல்லிக் காட்டுவதால் அவர்களுக்கு மனச்சாந்தியும் பல பாடங்களும் ஏற்படும். மௌலித் ஓதும் நிகழ்வின் போது மேற்கண்ட நன்மைகள் ஏற்படுவதை அறிவுள்ள எவரும் மறுக்கமாட்டார்.
மௌலித் நிகழ்வின் போது எந்தப் பெரியார் பெயரால் மௌலித் ஓதப்படுகின்றதோ அவரின் வாழ்க்கை வரலாறுகள் அவர் செய்த தீனுடைய சேவைகள் தியாகங்கள் என்பவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். இதனால் பொது மக்கள் பெரிதும் பயன் பெறுகிறார்கள் என்பதையும் எவராலும் மறுக்க முடியாது.
அமைதி கொண்டு ஈமான் அதிகமாவது போல் நபீமார்களினதும் முன்னோர்களினதும் வரலாறுகளைக் கேட்பது கொண்டும் ஈமான் – நம்பிக்கை அதிகமாகுமென்று இமாம் இஸ்மாயீல் புறூஸவீ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் – றூஹூல் பயான்
பக்கம் – 204 பாகம் – 04
اولئك الذين هدى الله فبهداهم اقتده
அவர்கள் அல்லாஹ் வழிகாட்டியவர்களாவர் அவர்களின் நல்வழியை நீங்கள் பின்பற்றுவீர்களாக!
ஆதாரம் – அல்குர்ஆன்
ஸுறத்துல் அன்ஆம்
வசனம் – 90
இத்திருவசனம் மூலம் அல்லாஹ் நல்வழிகாட்டிய நல்லடியார்களைப் பின்பற்றி வாழுமாறு நபீ ஸல் அவர்களைப் பணித்துள்ளான். அவர்கள் நபீமார் வலீமார் நல்லடியார்களாவர் இத்திருவசனத்தின் மூலம் அல்லாஹ் நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்ந்துள்ளான் என்பது தெளிவாகின்றது.
ஒருவன் பின்பற்ற விரும்பினால் மரணித்தவர்களை பின்பற்றட்டும். ஏனெனில் உயிருள்ளவன் பித்னஹ் குழப்பத்துக்குரியவனாயிருப்பான். மரணித்தவர்கள் என்பது நபீ தோழர்களைக் குறிக்கும். அவர்கள் இச் சமூகத்தின் மிகச்சிறந்தவர்களாவர். அவர்கள் உள்ளத்தால் நல்லவர்கள். அறிவால் ஆழமானவர்கள். கஷ்டத்தால் குறைந்தவர்கள். அல்லாஹ் அவர்களைத் தனது நபீயின் நண்பர்களாகவும் தனது மார்க்கத்தை நிலை பெறச்செய்வதற்காகவும் தெரிவு செய்தான். அவர்களின் சிறப்புக்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். ஏனெனில் அவர்கள் நல்வழியில் உள்ளார்கள்.
ஆதாரம் – றஸீன் மிஷ்காத்
பக்கம் – 32 – பாகம் – 01