Saturday, May 18, 2024

அத்துவைதம்

(தொடர்-02)

அல்ஹுலூல் – இறங்குதல்

الحلول : أن يحل احد الشيئين فى الاخر

அல்ஹுலூல் என்பது ஒரு பொருள் இன்னொரு பொருளில் வந்து இறங்குதல் என்பதை குறிக்கின்றது.

உதாரணம் :- பூவில் வண்டு வந்து இறங்குதல், பாத்திரத்தில் நீர் இறங்கியிருத்தல், வயிற்றினுள் உணவு இறங்கியிருத்தல்

இவ்வாறு ஒரு பொருள் இன்னொரு பொருளில் இறங்கியிருப்பதற்கு இரண்டு பொருட்கள் – இரண்டு உள்ளமைகள் அவசியமாகின்றது. இதுபோல் அல்லாஹ் தஆலா படைப்புகள் அனைத்திலும் இறங்கியிருக்கின்றான் என்ற நம்பிக்கை அல்லது அல்லாஹ் தஆலா சில விஷேட படைப்புகளில் இறங்கியிருக்கின்றான் என்ற நம்பிக்கை ஷிர்க்கான நம்பிக்கை. காரணம் அல்லாஹ் என்று ஒரு சுயமான உள்ளமையும் படைப்பு என்று மற்றொரு சுயமான உள்ளமையும் இருப்பதாக இங்கு நம்பவேண்டியேற்படுகின்றது அத்துடன் அல்லாஹ்தஆலாவின் பரிசுத்த தன்மைகளுக்கு இது குறைபாட்டை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. இஸ்லாத்தின் பார்வையில் இரண்டு சுயமான உள்ளமைகள் இருப்பதாக நம்புதல் ஷிர்க் – இணையாகும்.

அல் இத்திஹாத் – இரண்டறக்கலத்தல்

الاتحاد : امتزاج الشيئيـن واختلاطهما حتى يصيرا شيأ واحدا

அல் இத்திஹாத் என்றால் இரண்டு பொருட்கள் ஒன்று மற்றொன்றுடன் கலந்து ஒரே பொருளாக மாறுதல் என்பதை குறிக்கின்றது.

உதாரணம் :- சீனி நீருடன் கலந்து சீனியும் நீரும் ஒரே பொருளாக மாறுதல், உணவு சமிபாடடைந்து சத்தாக மாறுதல்

இவ்வாறு ஒரு பொருள் இன்னொரு பொருளுடன் கலந்து ஒரே பொருளாக மாறுவதற்கு இரண்டு பொருட்கள் – இரண்டு உள்ளமைகள் அவசியமாகின்றது. இதுபோல் அல்லாஹ் தஆலா அனைத்து படைப்புகளுடனும் கலந்து ஒன்றாகிவிட்டான் என்ற நம்பிக்கை அல்லது அல்லாஹ் தஆலா சில விஷேட படைப்புகளுடன் கலந்து ஒன்றாகிவிட்டான் என்ற நம்பிக்கை ஷிர்க்கான நம்பிக்கை. காரணம் அல்லாஹ் என்று ஒரு சுயமான உள்ளமையும் படைப்பு என்று மற்றொரு சுயமான உள்ளமையும் இருப்பதாக இங்கு நம்பவேண்டியேற்படுகின்றது. அத்துடன் அல்லாஹ்தஆலாவின் பரிசுத்த தன்மைகளுக்கு இது குறைபாட்டை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. இவ்வாறு இரண்டு சுயமான உள்ளமைகள் இருப்பதாக நம்புதல் இஸ்லாத்தின் பார்வையில் ஷிர்க் – இணையாகும்.

இந்து மதத்தில் பேசப்படும் அத்துவைதம் இரண்டு உள்ளமைகள் இருப்பதாக வலியுறுத்தும் ஹுலூல், இத்திஹாத் கொள்கையை அடிப்படையாகக்கொண்டது அத்துடன் இறை பண்புகள் தொடர்பாக இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டது. ஆனால் இஸ்லாமிய அத்துவைதம் சுயமான உள்ளமையான அல்லாஹ் மட்டுமே இருப்பதாக வலியுறுத்தி ஈருள்ளமைக் கொள்கையான ஹுலூல், இத்திஹாத் கொள்கையை முற்றாக மறுக்கின்றது.

தௌஹீத் / வஹ்ததுல் வுஜூத் / இஸ்லாமிய அத்துவைதம்

தௌஹீத் என்பதும் வஹ்ததுல் வுஜூத் என்பதும் இஸ்லாமிய அத்துவைதம் என்பதும் வெவ்வேறு கோட்பாடுகள் அல்லது நம்பிக்கைகள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தௌஹீத் என்பது இஸ்லாம் என்றும், வஹ்ததுல் வுஜூத் என்பதும் இஸ்லாமிய அத்துவைதம் என்பதும் குப்ர் – இறை நிராகரிப்பு என்றும் கூறிவருகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாமிய கொள்கையை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்றுதான் நாம் சொல்ல முடியும்.

இஸ்லாமிய கொள்கை பற்றி பேசும் ஸூபிஞானிகளும் ஷெய்குமார்களும் தௌஹீத் என்பதும் வஹ்ததுல் வுஜூத் என்பதும் இஸ்லாமிய அத்துவைதம் என்பதும் பெயரில் வேறுபட்டாலும் கருத்திலும் சாராம்சத்திலும் இவை அனைத்தும் ஒன்றேயாகும் என்று கூறுகின்றனர்.

தௌஹீத்

தௌஹீத் என்பதன் பொருள் ஒன்றாக்குதல் /அத்துவைதமாக்குதல் / ஏகத்துவம் செய்தல் என்பதாகும்.

அல்லாஹ் தஆலா ஒருவன். ஒருவனாகிய அவனை ஒன்றாக்குதல் எப்படி? ஓன்றை ஒன்றாக்குதல் அசாத்தியம். பலதை ஒன்றாக்குவதே சாத்தியம். எனவே எண்ணத்தில் பலதாக எண்ணிக் கொண்டிருக்கும் வஸ்த்துக்கள் அனைத்தும் உள்ளமையில் ஒன்றேயாகும் என்பதை நம்புவதே توحيد தௌஹீத் – ஒன்றாக்குதல், அத்துவைதமாக்குதல் / ஏகத்துவம் செய்தல் ஆகும். தௌஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. ஏகம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ஒன்று என்பது பொருள். ஏகத்துவம் என்றால் ஒரே தத்துவம் என்பது பொருளாகும். பலதாய் தோன்றும் அனைத்தும் ஒரே தத்துவம்தான் என்பதை அது கருதுகின்றது.

தௌஹீதை ஸூபிகள் 03 வகையாக நோக்குகின்றனர்.

01.توحيد الأفعال (தௌஹீதுல் அப்ஆல்) – செயல்களை ஒன்றாக்குதல்/செயல்களை ஏகத்துவம் செய்தல்/செயல்களை அத்துவைதமாக்குதல்.

02. توحيد الصفات (தௌஹீதுஸ் ஸிபாத்) – பண்புகளை ஒன்றாக்குதல்/பண்புகளை ஏகத்துவம் செய்தல்/பண்புகளை அத்துவைதமாக்குதல்.

03. توحيد الذات (தௌஹீதுத் தாத்) – உள்ளமையை ஒன்றாக்குதல்/உள்ளமையை ஏகத்துவம் செய்தல்/உள்ளமையை அத்துவைதமாக்குதல்.

இம்மூன்று வகை தௌஹீதும் நம்பிக்கை அல்லது எண்ணத்தைப் பொறுத்ததாகும். செயல்களும், பண்புகளும் உள்ளமையும் பலதென்று நம்பிக் கொண்டிருக்கும் மனிதன் இவை அனைத்தும் ஒன்றேயாகும் என நம்புவதே தௌஹீதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments