Saturday, May 18, 2024

அத்துவைதம்

(தொடர்-06)

ஒரு முஸ்லிமை காபிர், முஷ்ரிக், முர்தத் என்று சொல்வதன் விபரீதம்

முஸ்லிமான ஒரு மனிதனை அவன் பேசுகின்ற பேச்சின் விபரத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவனுடைய பேச்சின் சில கருத்துக்கள் குப்ருடைய வார்த்தையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் அவனுடைய பேச்சின் விளக்கத்தை அறிந்து கொள்ளாமல் அந்த மனிதனை காபிர் என்றோ முர்தத் என்றோ முஷ்ரிக் என்றோ சொல்வது அல்லது தீர்ப்புச் செய்வது அல்குர்ஆனுக்கும் அல்ஹதீதுக்கும் இஜ்மாஃ கியாஸுக்கும் மாற்றமான நடைமுறையாகும்.

இவ்வாறு சொல்பவன் அல்லது தீர்ப்புச் செய்பவர் மிக மோசமான நிலைக்கு ஆளாக வேண்டி ஏற்படும்.

ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون (مائدة 44)
ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون (مائدة 45)
ومن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون (مائدة 46)


அல்லாஹ் இறக்கி வைத்ததற்கு மாற்றமாகத் தீர்ப்புச் செய்தல் என்பது அல்குர்ஆனுக்கும் அல் ஹதீதுக்கும் இமாம்கள் கூறியுள்ள ஷரீஅத் சட்டங்களுக்கும் மாற்றமாக தீர்ப்புச் செய்தல் ஆகும். இவ்வாறான தீர்ப்பு நிராகரிக்கப்பட்ட தீர்ப்பாகும். இவ்வாறு தீர்ப்புச் செய்பவன் كافر ، ظالم ، فاسق ஆவான்.

قال النبي صلى الله عليه وسلم إذا قال الرجل لأخيه ياكافر فقد باء به احدهما
(رواه البخاري –6103)

عن بن عمر ان رسول الله صلى الله عليه وسلم قال اذا قال الاخر كافر فقد كفر احدهما. ان كان الذي قال له كافرا فقد صدق. وان لم يكن كما قال فقد باء الذي قال له بالكفر
(ادب المفرد – 440)

ومن رمى مؤمنا بكفر فهو قتله
(رواه البخاري – 6105)

ஒரு முஸ்லிமைக் காபிர் என்று சொன்னவன் அவனைக் கொலை செய்துவிட்டான் அல்லது அந்த முஸ்லிமைக் கொலை செய்வதை ஆகுமாக்கிவிட்டான் என்பதும் இவ்வாறு சொன்ன காரணத்தினால் சொன்னவன் காபிர் ஆகிவிட்டான் என்பதும் மேலே நான் சொல்லிக் காட்டிய ஹதீஸ்களின் கருத்தாகும். உண்மையிலேயே அவனைக் கொலை செய்யாவிட்டாலும் கொலை செய்த குற்றம் இவனுக்கு ஏற்படுகின்றது.

இதேபோல்தான் முஸ்லிம்களில் ஒரு பெரும் கூட்டத்தை அவர்கள் காபிர்கள் என்று ஒருவர் சொன்னால் அல்லது தீர்ப்புச் செய்தால் அவர்கள் அனைவரையும் கொலை செய்த குற்றம் கிடைக்கும் என்பதை மேலே நான் சொல்லிக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

இதே கருத்தை அதிகமான இமாம்கள் தமது நூல்களில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அத்துடன் ஒரு முஸ்லிமைக் ‘காபிர்’ என்று சொல்லும் விடயத்தில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கின்றார்கள். ஒரு மனிதனுடைய பேச்சை அல்லது எழுத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு அவரிடத்தில் அதற்கான விளக்கங்களை கேட்டறிந்து கொண்டு அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் அடிப்படையில் தீர்ப்புச் செய்ய வேண்டும் என கூறியிருக்கின்றார்கள்.

இன்று சிலர் ஒரு மனிதனுடைய பேச்சை அறைகுறையாகக் கேட்டுவிட்டு, முழுமையாகக் கேட்காமல் அவசரப்பட்டு அந்த மனிதனை காபிர் என்று அல்லது முஷ்ரிக் என்று அல்லது முர்தத் என்று கூறுகின்றார்கள். இது தவறான நடைமுறை. பெரிய பாவத்தை நமக்கு ஏற்படுத்தக் கூடியது. இதிலிருந்து நாம் யாராக இருந்தாலும் சரி உலமாக்களாக இருந்தாலும் சரி பொதுமக்களாக இருந்தாலும் சரி தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஷம்சுல் உலமா, நஜ்முல் உறபா, கமருல் புகஹா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ (அதாலல்லாஹு பகாஅஹு) அவர்களும் அவர்களுடைய முரீதீன்களான நாங்களும் பேசிவருகின்ற ‘வஹ்ததுல் வுஜூத்’ உள்ளமை ஒன்று என்ற இஸ்லாமிய ஸூபிஸ தத்துவத்தை, அல்குர்ஆன் கூறுகின்ற தத்துவத்தை, நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய தத்துவத்தை, இமாம்கள், ஸூபியாக்கள், தரீக்காக்களின் ஷெய்குமார்கள் கூறிய தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் அல்லது இந்த தத்துவமே அறவே தெரியாத சிலர் எங்களைக் காபிர்கள், முஷ்ரிக்குகள் என்று சொல்லித் திரிகின்றனர். இவர்கள் சொல்லக் கூடிய சொல் இவர்களையே சென்று சேருகின்றது. வானத்தைப் பார்த்துத் துப்புவதுபோல இவர்களின் சொல் இவர்களின் முகத்திலேயே போய் விழுகின்றது.

சங்கைக்குரிய உலமாக்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களே! அன்புச் சகோதரர்களே! அல்லாஹ்மீது சத்தியமாகச் சொல்கின்றோம் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும், வலீமார்களையும், ஷெய்குமார்களையும் முன்னிருத்திச் சொல்கிறோம்.

·அல்லாஹ் ஒருவன். அவன் தனித்தவன். இணை துணை இல்லாத தூயவன். தன்னைக் கொண்டே நிலை பெற்றவன். அவனை யாரும் படைக்கவில்லை. எல்லாவற்றையும் அவனே படைத்தான். எல்லாம் அவனளவிலேயே தேவையாகின்றன. சகல சிருஷ்டிகளும் அவனைக் கொண்டே ஆகி இருக்கின்றன. அவன் தன்னைக் கொண்டு நிலை பெற்றுள்ளான். ஆரம்பம் முடிவு அவனுக்கில்லை. சிருஷ்டிகளுக்கு மாற்றமானவன். அவனைப் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அவன் جوهر உம் அல்ல عرض உம் அல்ல. ஆதாரமும் அல்ல ஆதேயமும் அல்ல. இடம், சடம், காலம், திசை என்பனவைகளை விட்டும் பரிசுத்தமானவன் தூயவன்.

அவன் எப்படி இருந்தானோ அப்படியே இருக்கின்றான். அவனின்றி ஒரு அணுவும் அசையாது. எல்லாம் அவனது நாட்டப்படியே நடக்கின்றது. அவனே முந்தியவன், அவனே பிந்தியவன், அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், உள்ளத்தில் ஏற்படும் எண்ணங்கள் அனைத்திற்கும் அவன் மாற்றமானவன் என நாம் ஈமான் கொண்டுள்ளோம்.

நாங்கள் பரிசுத்த முஃமின்கள். லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என ஈமான் கொண்டுள்ளோம். அல்லாஹ் தஆலாவின் ஏவல்களை எடுத்து அவனது விலக்கல்களைத் தவிர்ந்து நடக்கின்றோம். தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், ஸகாத் கொடுக்கின்றோம், ஹஜ் செய்கின்றோம். அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனையும் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஸுன்னத்தையும் ஏற்று நடக்கின்றோம்.

خلفاء الراشدين களை கண்ணியப்படுத்தி அவர்களின் சொற்படி நடக்கின்றோம். ஏனைய ஸஹாபாக்கள் அனைவரையும் கண்ணியப்படுத்துகின்றோம். ஷாபிஈ மத்ஹபையும், இமாம் ஷாபிஈ (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களையும் பின்பற்றுகின்றோம். காதிரிய்யஹ் தரீக்காவையும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹிமஹுல்லாஹ்) அவர்களையும் பின்பற்றுகின்றோம். ஏனைய தரீக்காக்களையும் மஷாயிஹ்மார்களையும் மதிக்கின்றோம். இஸ்லாமிய அகீதாவில் இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களைப் பின்பற்றுகின்றோம்.

ஸூபிஸ நடைமுறைகளில் இறைஞானிகளான ஸூபியாக்களைப் பின்பற்றுகின்றோம். அஷ்ஷெய்குல் அக்பர் வல்மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் போதித்த அடிப்படையில் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று, உள்ளமை என்பது அல்லாஹ். அல்லாஹ் ஒருவன். அவனது உள்ளமை மாத்திரமே இருக்கின்றது. படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவை. அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டே அவை இருக்கின்றன. உண்மையில் படைப்புகள் என்பது இல்லை அல்லாஹ் மாத்திரமே இருக்கின்றான். படைப்புகளாகத் தோன்றுவது படைப்புகள் அல்ல அல்லாஹ்வின் உள்ளமைதான் படைப்புகளாக நமக்குத் தோன்றுகின்றது.

அல்லாஹ் யதார்த்தமான உள்ளமையானவன் என்பதுபோல் படைப்புகளும் யதார்த்தமான உள்ளமையானவை என நம்புதல் இணையாகும் என்றும் எல்லாம் அவனே அவன் மாத்திரமே இருக்கின்றான். அவனைத் தவிர ஒன்றுமில்லை. எல்லாம் என நமக்குத் தோற்றுவது மாயை. உள்ளமையில் அவன் மட்டும் இருக்கின்றான். இதனால் அவனுக்கு இணையில்லை என்று போதிக்கின்றோம்.

இந்த கருத்துக்களை நாம் எமது சொந்த இஷ்டப்படி சொல்லவில்லை. அல்குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரமாகக் கொண்டு ஸூபியாக்களும் ஷெய்குமார்களும் தமது நூல்களில் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலேயே நாம் வஹ்ததுல் வுஜூத் போதிக்கின்றோம்.

படைப்புகளில் அல்லாஹ் தஆலா இறங்கியிருக்கின்றான் என்பதை வலியுறுத்தும் ‘ஹுலூல்’ கொள்கையையும், படைப்புகளுடன் அல்லாஹ் இரண்டறக் கலந்துவிட்டான் என்பதை வலியுறுத்தும் ‘இத்திஹாத்’ கொள்கையையும் நாம் தெளிவாக மறுக்கின்றோம்.

அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் கருத்துகளுக்கும் ஸூபியாக்களினதும் தரீக்காக்களை ஆரம்பித்த ஷெய்குமார்களினதும் கருத்துக்களுக்கும் மாற்றமான சகல கொள்கைகளையும் நாம் மறுக்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களின் நிலைகளையும் எங்களின் உள்ளத்திலுள்ளவைகளையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

நமது நிலைப்பாட்டை நாம் பல தடவைகள் வெளியிட்டுள்ளோம். இவ்வளவு தெளிவாக பகிரங்கமாக எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்திய பின்னரும் யாராவது எங்களைக் காபிர் என்றோ முஷ்ரிக் என்றோ முர்தத் என்றோ ஷிர்க் எனும் சகதியை முகத்தில் பூசிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றோ கூறினால் அவர்களின் முடிவை அல்லாஹ்விடம் நாம் பாரம் கொடுக்கின்றோம்.

சங்கைக்குரிய உலமாஉகளே!

இன்று ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களில் சிலர் வஹ்ததுல் வுஜூத் என்று ஒரு விடயம் இஸ்லாத்தில் உண்டு. அதை பலர் பேசி வருகின்றார்கள். எங்களால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றார்கள்.

அந்த நிலையில் நீங்கள் இருந்தால் வஹ்ததுல் வுஜூதை சரியான முறையில் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் ஈமானின் அடிப்படை. உங்களது’இல்மை’ பெரிதாகக் கருதி இந்த மஃரிபாவைத் தவறவிட்டு விடாதீர்கள்.

இன்னும் சில ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தாம் வஹ்ததுல் வுஜூத் கொள்கையை நம்பியிருப்பதாகவும் ஷெய்குனா அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் கூறிவரும் வஹ்ததுல் வுஜூத் கொள்கையைத் தாம் மறுப்பதாகவும் அது குப்ர் என்பதாகவும் தங்களின் துன்யாவுடைய நன்மைகள் இல்லாமல் ஆகிவிடும் என்பதற்காகவும் தங்களையும் முர்தத்துகள் என்று சொல்லிவிடுவார்கள் என்பதற்காகவும் கூறிவருகின்றனர்.

அப்படியானவர்களாக நீங்கள் இருந்தால் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் நம்பியிருக்கும் வஹ்ததுல் வுஜூத் கொள்கை என்ன என்பதையும் ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களும் நாங்களும் கூறிவரும் வஹ்ததுல் வுஜூத் கொள்கை எந்த அடிப்படையில் அல்குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் இமாம்கள் அவ்லியாக்கள் ஸூபியாக்களின் கருத்துக்களுக்கும் மாற்றமாக அமைந்துள்ளது என்பதை ஒரு பத்வாவின் மூலம் தெளிவுபடுத்தி தீர்ப்புச் செய்யுங்கள். 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய உதவாத பத்வாவைத் தலையில் சுமந்து திரிவதை நிறுத்திவிட்டு ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் ஒன்று சேர்ந்து அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல்இஜ்மாஃ, அல்கியாஸ், اقوال الصوفية என்பவற்றைக் ஆதாரமாகக் கொண்டு தெளிவான தீர்ப்பை முன்வையுங்கள். சமூக வலையத்தளங்களில் தெளிவற்ற முறையில் வாயால் தீர்ப்புச் சொல்வதும் எழுத்துகளால் தீர்ப்புச் சொல்வதும் கற்றறிந்த உலமாக்களுக்கு அழகல்ல. அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்.

அல்ஹம்துலில்லாஹ்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments